அத்தியாயம் – 3
தன் உடன்பிறப்பு சுகந்தனின் பிறந்த நாளுக்கென ஜீன்ஸ்-சட்டை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அன்று வேலையை விரைவில் முடித்த எழில்மலர், ஓர் கடையின் முன் தன் வண்டியை நிறுத்தினாள்.‘இவன் பண்ணற அலப்பறைக்கு ஜீன்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். பழைய ஜீன்ஸைக் கிழிச்சு, இது தான் பேஷன் எனச் சொல்லிப் போடக் கொடுத்திடலாம்’ என்று முணுமுணுத்துக் கொண்டே கடையின் உள்ளே சென்றாலும், புது ஜீன்ஸ் வாங்க வேண்டாம் என்ற எண்ணம் சிறிதும் அவளுக்கு எழவில்லை.
தனக்கு வேண்டியதைத் துரிதமாகத் தேர்வு செய்து, அதற்குப் பணத்தைக் கட்டிவிட்டு துணிப்பைகளுடன் எழில்மலர் வெளியேற நினைக்கையில், “ஹே பெங்களூர் பார்ட்டி, வாட் எ சர்பரைஸ்?” என்ற குரல் பக்கவாட்டில் கேட்டது.
‘எவன்டா அது, கட்சி பார்ட்டி ஆரம்பிச்ச மாதிரி கூப்பிடறது?’ எனத் திரும்பிப் பார்த்த எழில்மலரின் பார்வையில் கதிர் பட, ‘அட நம்ம கூட்டணி ஆளு தான்’ எனத் தாமரையாய் அவள் முகம் மலர்ந்தது.
உதடுகள், “கதிர்!” எனச் சொல்லி தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தவும் மறக்கவில்லை.
“பரவாயில்லையே பெயரெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. எப்படி இருக்கீங்க? வாங்க காபி குடிச்சுட்டே பேசலாம்” எனக் கதிர் அழைக்க, “எனக்குக் காபி குடிச்சுப் பழக்கமில்லை” என்றாள்.
ஒரு முறை தான் இவனைப் பார்த்திருக்கிறாள். அதுவும் அனைவரும் வந்து போகும் இடத்தில், தோழியின் துணையுடன். அதனால் பிரச்சனையில்லை. ஆனால் இன்று தனியாக இருக்கிறாள்.
என்ன தான் பேசுவதில் கில்லாடியாக இருந்தாலும் யார் எவரென்று தெரியாத பட்சத்தில் காபி குடிக்கச் செல்வது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என யோசனையோட கதிரைப் பார்த்தாள் எழில்மலர்.
“என்னங்க நீங்க? சாப்பிடக் கூப்பிட்டா டயட்ங்கறீங்க. காபி குடிக்கக் கூப்பிட்டா பழக்கமில்லைங்கறீங்க. இப்படி நல்ல, நல்ல பழக்கமெல்லாம் இருந்தா அப்புறம் எப்படி உங்களை வெளில கூட்டிட்டுப் போய் பழகமுடியும்?” என்றான் கதிர்.
“அது” என எழில்மலர் ஏதோ சொல்ல வர, “ஓ.கே. உங்களுக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம்.. வாங்க பாயாசம் குடிக்கலாம். ஆனால் சர்க்கரை வியாதின்னு மட்டும் சொல்லி ஹார்ட்டுல ஓட்டைப் போட்டுடாதீங்க” என இடையிட்டான் கதிர்.
“பாயாசமா? எங்கே? எங்கே?” என எழில்மலர் துள்ளலுடன் கேட்க, “அவ்வளவு பிடிக்குமா?” எனக் கதிர் ஓர்வித முறுவலுடன் அவளைப் பார்த்தான்.
‘எழில். உனக்குப் பாயசம் பிடிக்கும் என இப்படியா அலைவ? கொஞ்சம் கெத்தை மெயின்டைன் பண்ணுடி.’ எனத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் எழில்மலர்.
“பாயாசத்துக்காக ‘ராக்கெட்’ விட்டு ஆகாசத்துக்கா போக முடியும்? எங்க வீட்டுக்குத் தான். என் அம்மா சூப்பரா பாயாசம் வைப்பாங்க” எனத் தொடர்ந்தான் கதிர்.
‘என்னடா இவன் எடுத்தவுடனே தன் வீட்டுக்கு அழைக்கிறான்? அவ்வளவு நல்லவனா நீ?’ எனக் கதிரைப் பற்றி ஓர் மரியாதையுணர்வு எழில்மலருக்குத் தோன்றியது. பேசியவாறே கடையைவிட்டு வெளியில் வந்த எழில்மலரின் இதயத்தைத் தொலைதூரத்து மண்வாசனை சடாரென்று முட்டி நிரப்பியது.
ஆழ மூச்செடுத்து அதை அனுபவித்தவள், “இல்லை.. நேரமாகுது. இன்னொருதரம் பார்க்கலாம்” என்றாள் கதிரிடம்.
“இதையே ஒவ்வொரு தடவையும் சொன்னா, எப்போ தான் அறிமுகம் ஆகறது. பாயசத்துல பாய்சன் எல்லாம் வைக்கலை. நம்புங்க” எனக் கதிர் சொல்ல, எழில்மலர் புன்னகைத்தாள்.
“அட்லீஸ்ட் பேராவது சொல்லுங்க” எனக் கதிர் கேட்க, “எழில்மலர்” என்றாள்.
“வாவ். உங்க பெயர் ரொம்ப” எனக் கதிர் ஏதோ சொல்ல வந்த சமயத்தில் மேகத்தை விட்டுப் பிரிந்து வந்த மழையின் சாரல் எழில்மலரின் முகத்தை உரசிச் சென்றது. அதன் குளுமையில் சிலிர்த்தவள் கண்களை மூடி, வானம் நோக்கி முகத்தை உயர்த்தினாள்.
அப்பொழுது, சாரல் மழையாகி, சாலையில் நீர் அலையலையாகச் சுழித்து ஓட, இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவன், சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை எழில்மலரின் முகத்தில், பளாரென்று வாரியிறைத்துவிட்டுச் சென்றான்.
‘எவன்டா அது? இயற்கையை அனுபவிக்கறதுக்கு கூட இடைவேளை விடறான்.’ எனக் கண்களைப் பிரிக்க நினைக்கையில், அவள் முகத்தில் மேலும், மேலும், மேலும் தண்ணீர் பட்டு, அவள் எரிச்சலைக் கூட்டியது.
கூடவே, “பிளவர். பிளவர்” என்ற கர்ண கொடூரமான குரல் வேறு கேட்க, “ச்சே” எனக் கண் இமைகளைப் பிரித்தாள் எழில்மலர். அவள் படுக்கையின் அருகே அவளின் உடன்பிறப்பு சுகந்தன், கையில் சிறுவர்கள் வைத்து விளையாடும் தண்ணீர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் கடுப்புடன் எழுந்தவள், “எருமை.. எருமை. தண்ணி அடிக்கிற துப்பாக்கி வச்சு விளையாடுற வயசா உனக்கு? எதுக்குடா என் கனவுக்கு நடுவில் வில்லன் மாதிரி குதிச்ச? இப்போ நான் அவனை எங்கே எனத் தேடுறது?” என்றாள்.
“யாரை?” எனச் சுகந்தன் கேட்க, “ம்ம்ம். என் முகத்தில் தண்ணி அடிச்சவனை. என் பெயர் எப்படி இருக்குன்னு சொல்ல வந்தவனை. அதற்குள்ளே நந்தி மாதிரி வந்து கலைச்சுட்ட. சரி நீ எதுக்கு இப்போ எனக்கு ‘பெட் பாத்’ கொடுத்துட்டு இருக்க?” என்றாள் எழில்மலர்.
“அலாரம் அடிச்சு எவ்வளவு நேரமாச்சு. என்னமோ கேஸிருக்கு. சீக்கிரம் போய் பாயிண்ட்ஸ் நோட் பண்ணனும் என நேத்து நைட்டு இல்லாத ‘பில்ட்-அப்’ விட்ட” என்றதும் அரக்கப் பறக்க படுக்கையில் இருந்து குதித்தாள் எழில்மலர்.
வீடே நிசப்தத்தில் இருக்கவும், திரும்பி மணியைப் பார்த்தாள். அது ஐந்து என்று காட்டியது. எழில்மலருக்கு வந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. பின்னே ஒன்பது மணிக்குப் போக வேண்டிய வேலைக்கு ஐந்து மணிக்கே எழுப்பிவிட்டால்?
“ஏண்டா உனக்கு இந்தக் கொலைவெறி? உனக்குப் பரீட்சைனா படிக்க வேண்டியது தானே? என்னை ஏன் எழுப்பிவிட்டு இம்சைச் செய்யற” என அவனைத் திட்ட,
“எனக்கு டீ போட்டுக் கொடு ‘பிளவர்’” என்றான் சுகந்தன்.
“அதை நீயே போட்டுக் குடிக்க வேண்டியது தானே?” என எழில்மலர் முறைக்க, “பிளவர், டீ பெண்பால் இல்லையா? அதான் உன்னைப் போடக் கூப்பிட்டேன்” என அதிகாலையில் வம்பை கடைவிரிக்க ஆரம்பித்தான் சுகந்தன்.
“நீ போர்ன்விட்.டா குடிச்சிருக்க வேண்டியது தானே? அது ஆண்பால் இல்லையா?” என அவனுக்குச் சளைக்காமல் பதில் கொடுத்த எழில்மலர், முகத்திலிருந்த ஈரத்தைத் துடைத்தாள்.
“போர்ன்விட்டா. உவ்வே.. அதெல்லாம் சின்னக் குழந்தையான நீ குடிக்கிறது” எனச் சுகந்தன் சொல்லிக் கொண்டிருக்க, அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவன் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவன் மேல் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாள் எழில்மலர்.
“ஆஹ், குளிருது விடு. ‘பிளவர்’ வேணா பனியில் நனையலாம்.. ஆனால் சுகந்தன் நனையலாமா?” எனத் தத்துவம் பேசினான் சுகந்தன்.
அப்போது சட்டைப் பையிலிருந்த சுகந்தனின் கைப்பேசி இசைக்க, ‘இந்நேரத்தில் யார்?’ எனப் பார்த்தான். அதில் அவன் அன்னை, மாணிக்கத்தின் பெயர் ஒளிர, உடனே அழைப்பை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
“முதல்ல பசும்பால் வீட்டில் இல்லை.. அது வந்ததும் பெண்பால், ஆண்பால் எனப் பாலை (ball) உருட்டி விளையாடுங்க. முதல்ல சிந்தின தண்ணியைத் துடைச்சிட்டு வேலையைப் பாருங்க.. இப்போ தூங்க விடுங்க” என அழைப்பை வைத்தார்.
“அட அம்மாவைப் பாரு.. பக்கத்து ரூம்ல இருந்துகிட்டு ஃபோன்ல கூப்பிட்டுத் திட்டுறாங்க. எல்லாம் கலிகாலம்.” எனச் சுகந்தன் சொல்ல, “எல்லாம் கேட்டுட்டு தான் இருக்கு.. ஒழுங்கா போய்ப் படிடா” என ஓர் அதட்டல் போட்டார் மாணிக்கம்.
“எல்லாம் உன்னால் தான்டா” எனச் சுகந்தனை எழில்மலர் துரத்த, அவனோ தன் அறைக்குள் சென்று முடங்கினான். படிப்பதற்கு!
இப்படித் தினமும் உடன்பிறப்புகளுக்குள் நடக்கும் சீண்டலில் தாயும், தந்தையும் அவ்வளவாகத் தலையிடமட்டார்கள். அப்படித் தலையிட்டால் இறுதியில் அவர்களுக்கே சேதாரம் அதிகம்.
ஆனாலும் இப்படிக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மொக்கைப் போட்டுத் தூக்கத்தைக் கெடுத்தால் மாணிக்கத்தால் மக்கைப் போல் படுத்திருக்க முடியுமா?
ரத்தினம்-மாணிக்கத்தின் செல்வ மகனும், மகளும் தான் சுகந்தனும், எழில்மலரும். பெற்றோர்கள் இருவரும் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
இதைத் தான் படிக்க வேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடியைத் தராததால் ஒருத்தி படித்து வக்கீலாகவும், இன்னொருத்தன் மருத்துவப் பொறியியலில் டாக்டரேட் படிப்பில் இரண்டாம் ஆண்டிலும் இருக்கிறார்கள்.
அதிகாலையில் எழில்மலருக்கு ‘பெட் பாத்’ கொடுத்து எழுப்பிவிட்டது போதாது என அன்று காலை உணவின் பொழுது, “அம்மா, நம்ம ப்ளவரைக் கட்ட நூல் பார்க்கலாம்” என சுகந்தன் கொளுத்திப் போட, “என்னடா சொல்லற?” என மாணிக்கம் குழப்பத்துடன் பார்த்தார்.
“ப்ளவருக்கு ஏத்த நூல். அதான் மாப்பிள்ளைப் பார்க்கலாம் எனச் சொன்னேன்.” எனச் சுகந்தன் விளக்க, எழில்மலரின் ரத்தக்கொதிப்பு எகிறியது. பின்னே அவள் வாழ்க்கையின் அதிமுக்கியமான லட்சியம் என்னாவது?
“உனக்கு அவசரமாயிருந்தா நீ பண்ணிக்கோ.. என் லட்சியத்தில் நான் குறியாக இருப்பேன்” என எழில்மலர் சொன்னதும், “இதை.. இதைத் தான் எதிர்பார்த்தேன்.. இன்னொரு முறை சொல்லுங்க” என விளம்பர பாணியில் ராகம் பாடினான் சுகந்தன்.
“போடா..ங்க.. இன்னும் படிப்பையே முடிக்கக் காணோம். இதில் கல்யாணமா? முதல்ல உனக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க? உனக்குப் பின்னாடி பிறந்து வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்” என எழில்மலர் கிண்டல் செய்தாள்.
“என்னது எனக்குப் பின்னாடியா?” என நீட்டி முழக்கினான் சுகந்தன். சுகந்தனுக்கு ரொம்பவெல்லாம் பின்னால் பிறக்கவில்லை எழில்மலர்.. ஒரு பத்துநிமிடங்கள் கழித்துப் பிறந்த இரட்டைப் பிறவி.
அவர்கள் இரட்டைப் பிறவிகள் என்பதாலோ என்னவோ அவர்கள் குணங்களும் ஒரே மாதிரி இருந்தன. எதையும் இலகுவாக எடுத்துக் கொண்டும், எந்நேரமும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் இருப்பார்கள்.
“பிறந்ததில் இருந்து கூடவே இருக்கியா. எனக்கு செம போர்.. நீ கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டா சுகந்தம் மட்டும் இந்த வீட்டில் மிதக்கும் பாரு” என்றான் சுகந்தன்.
“மிதக்கும் மிதக்கும். வேணா ரெண்டு மிதி, மிதிக்கிறேன்.. மலரில்லாமல் எப்படி சுகந்தம் மிதக்கும்?” எனச் சுகந்தனை முறைத்துவிட்டு,
“அம்மா, நீங்க எனக்கு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டா அப்புறம் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற லட்சியம் தவிடு பொடியாகிவிடாது?” என்றாள் எழில்மலர்.
அவள் லட்சியங்களில் ஒன்று காதலித்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. (இப்படியெல்லாம் லட்சியம் கொள்வார்களா என்று கேட்கக்கூடாது. மீறிக் கேட்டு, எழில்மலரின் பதிலில் காதில் ரத்தம் கொட்டினால் நான் பொறுப்பல்ல)
“அவனவன், ராக்கெட் விடணும் எனக் கனவு காண்பான். நீ ராக்கெட் விடவேண்டாம். அட்லீஸ்ட் ஒரு பக்கெட்டாவது கண்டுபிடிக்கலாம். இல்ல, ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். அதைவிட்டுட்டு என்ன ஓர் உயர்ந்த லட்சியம்?” என்று அவளை வாரினான் சுகந்தன்.
“முதல்ல என்கிட்டே இருந்து உன் பாக்கெட்டுக்குப் பணத்தைத் தேத்த வழியைப் பாரு. அப்புறம் எதுகை, மோனையாகக் கிண்டலடிக்கலாம்” என்ற எழில்மலரின் வாக்கியம் சுகந்தனின் வாயை சற்றுநேரம் அடைத்தது.
ஆனால் அதற்கு பதிலாக, “என்னடி, இப்படிப் பேசற?” என அன்னை, மாணிக்கம் அலறினார். “அம்மா, செஞ்சுட்டு இருக்கிற வேலைப் பிடிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?” என அவரிடம் கேட்டாள்.
“ம்ம்ம். வேலையை மாத்திக்குவேன்” என சிறிது யோசனைக்குப் பின் பதில் வர, “அப்பா, கார் பிடிக்கலைன்னா.?” என தந்தை, ரத்தினத்திடம் கேட்டாள். “முதல்லேயே நிதானமா ஓட்டிப் பார்த்து வாங்குவேன்” என்றார் அவர்.
எழில்மலர் எங்கே வருகிறாள் என நன்றாகவே சுகந்தனுக்குப் புரிந்தது. எத்தனை முறை இதைச் சொல்லியே அவன் கழுத்தை அறுத்திருப்பாள்?
“கல்யாணத்துக்குப் பிறகு ஆளைப் பிடிக்கலேன்னா என்ன பண்ணறது?” என எழில்மலர் பொதுவாகக் கேள்வியைக் கேட்டு புருவத்தை உயர்த்தினாள்.
“நல்லதா நினைக்கமாட்டியா?” என அவள் அன்னை அதட்டவும், “இதுவும் நல்ல நினைப்பும்மா. விவேகம் அம்மா. விவேகம்” என மூளையிருக்கும் இடத்தைத் தட்டியவள்,
“அதனால் முதல்ல இதயத்தைத் தட்டி எழுப்பி வேலைச் செய்ய வைச்சுட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் என முடிவு பண்ணியிருக்கிறேன்.. நீங்க ஒத்துக்குவீங்க தானே?” என்றாள்.
“கார் வாங்கறதும், மாப்பிள்ளைப் பார்க்கிறதும் ஒண்ணா?” என அதுவரையில் மெளனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தை, இரத்தினம் கேட்க,
“அதான்ப்பா நானும் சொல்லறேன். தார்ரோட்ல போற காருக்கே இத்தனை ‘பில்ட் அப்ன்னா’ கரடுமுரடான வாழ்க்கையில் வண்டி ஓட்டும் மாப்பிள்ளை சாருக்கு எத்தனை ‘பில்ட் அப்’ கொடுக்கணும்?” என மடக்கினாள் எழில்மலர்.
“போன ஜென்மத்துல துணிக்கடையில் வேலை செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். இப்படிப் பேச்சிலேயே இந்த மடக்கு மடக்கற” எனச் சுகந்தன் பரிகாசம் செய்ய,
“முதல்ல அப்படி ஓர் நல்ல ஆளைக் கூட்டிட்டு வா. அப்புறம் பார்க்கலாம்” எனப் பெற்றோர்கள் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
தங்கள் மகளின் மேலுள்ள நம்பிக்கையில், படித்து வக்கீலாக இருப்பவளுக்கு நல்லது, கெட்டது ஆராயத் தெரியும் என்ற எண்ணத்தில் அப்படிச் சொன்னார்கள்.
இதுவரையில் அவள் நடந்து கொண்டதை வைத்து கண்டிப்பாகத் தான்தோன்றித்தனமாக மகள் செயல்படமாட்டாள். தேவை என்றால் அவர்களிடம் ஆலோசிப்பாள் என்ற தைரியத்தில அப்படிச் சொன்னது.
“உனக்கு இருக்கிற வாய்னால தான் உன்னை வக்கீலுக்குப் படிக்க வச்சிருக்காங்க” எனச் சுகந்தன் மீண்டும் அவளைக் கிண்டல் செய்ய, “வாய்னால தான் படிக்க முடியும். பின்னே மூக்கால் படிக்க முடியுமா?” என சுகந்தனுக்கு பதிலடி தந்தவள்,
“அம்மா, எனக்கு முதல்ல உங்களை மாதிரி பெயர் பொருந்தி வரணும். ரத்தினம்-மாணிக்கம் என்கிற பெயர் பொருத்தமே சும்மா அள்ளுது இல்லை. அது மாதிரி எனக்குக் கணவனா வரப் போகிறவருக்கும் பெயர் பொருத்தம் சூப்பரா அமையணும்” என்றாள் எழில்மலர்.
“பிளவர், அப்போ உனக்கு வரப்போறவனோட பெயர் காலிபிளவராத் தான் இருக்கும். இன்றிலிருந்து உன் பெயரின் மறுபாதி காலி” என நாடக பாணியில் சுகந்தன் வார,
“டேய். உனக்கு இருக்கிற கொழுப்புக்கு உனக்குக் கல்யாணம் ஆகக்கூடாது எனச் சாபம் விட்டுடுவேன்” என எழில்மலர் கண்களை உருட்டினாள்.
“ம்ம்ம். நீ மட்டும் குடியும் குடித்தனமுமா இருப்ப. நான் மட்டும் தனியா இருப்பேன்னு நினைச்சியா? நெவர். அப்படி மட்டும் நடந்தது, உன் வீட்லேயே வந்து காலம் முழுவதும் டேரா போட்டுடுவேன். பீ கேர்புல்” என்றான் சுகந்தன்.
அதைக் கண்டுகொள்ளாமல், “எனக்கு நேரமாகுது.. கிளம்பறேன். என்னை ஆசிர்வதிங்க” எனக் கையைக் கழுவிவிட்டு வந்து பெற்றோர்களின் காலைத் தொட்டு வணங்கினாள்.
நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டும் இப்படிப் பெற்றோர்களிடம் ஆசி வாங்குவது அவளது வழக்கங்களில் ஒன்று. இப்பொழுது என்றில்லை. சிறுவயதில் பரீட்சைக்குச் செல்லும் பொழுது ஆரம்பித்தது இப்பழக்கம்.
ஏனோ அவர்களை ஐஸ் பிடித்தால், நீதிமன்றத்தில் தன்னால் நன்றாக வாயா(தா)ட முடியும் என்ற எண்ணம் அவளுக்கு.
பெற்றோர்கள் அருகில் தானும் வந்து நின்ற சுகந்தன், “அப்பப்போ இவங்க கால்ல விழுந்து ஐஸ் பிடிச்சு சப்போர்ட்டுக்கு ஆளு சேர்த்துடு. போனாப் போகுது. நானும் வாழ்த்தி அருள் புரிகிறேன்” என இரு கைகளையும் ஆசி வழங்குவதைப் போல் காட்டினான்.
“போடா” என அவன் காலைக் கிள்ளிய எழில்மலர், என்றுமில்லா புத்துணர்ச்சியுடன் அலுவலகம் கிளம்பினாள். அதற்குக் காரணம் அன்று காலையில் வந்த கனவு என்று அவளுக்குத் தெரியவில்லை.
இத்தனை நாட்களாக, எழில்மலர் படிப்பிலும், வேலை லட்சியத்திலும் மும்முரமாக இருந்ததால் அவளுக்குக் காதலைப் பற்றி நினைப்பேயில்லாமல் போனது.
சரி, இப்பொழுது காதலிக்கலாம் என்றால் தன்னிடம் வருகிறவன் எல்லாம் குற்றம் புரிந்தவனும், டூபாக்கூருமாக இருக்கிறான். கண்டிப்பாகத் தன்னைப் போன்றே இன்னொரு வக்கீலைக் காதலிக்கக் கூடாது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தாள் எழில்மலர்.
அப்படி மட்டும் நடந்தால் வேலை முடித்து வீட்டுக்கு வந்தாலும் வழக்குகளைப் பற்றிப் பேசி கழுத்தை அறுத்துவிடுவார்கள். அதெல்லாம் அவள் குணத்துக்குச் சரிப்பட்டு வராது. அதனால் வேலையிடத்திலும் அவளால் தனக்கானவனைத் தேட முடியாது.
இப்படிப் பலமுறை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு, காதல் என்ன இப்படித் திட்டமிட்டு தான் வருமா? அது பார்த்தவுடன் மனதிலே அப்படியே பதிந்து போய்விட வேண்டாமா என்றும் தோன்றியது.
அதை நினைத்து அவள் மனம் குழம்பிக் கொண்டிருக்கையில், அன்று அதிகாலையில் கதிரை தன் கனவில் சந்திக்க நேர்ந்தது.
‘கதிரைப் பார்த்து ஒரு ஆறு மாதங்களாவது இருக்கும். ஆனாலும் அவன் முகம் எத்தனை தெளிவாகத் தெரிந்தது. அதிலும் அவன் குரல் கூட அச்சரம் பிசகாமல் கனவில் ஒலித்ததே.. இதற்கு என்ன அர்த்தம்? இவன் தான் தன் ராஜகுமாரனா?’ என்ற சிந்தனையின் முடிவில் பதிலென்று உருப்படியாக அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
தான் கண்ட கனவையும், சுகந்தன் கிளப்பிவிட்ட பேச்சையும் பற்றி அசைப்போட்டவாறே எழில்மலர் தன் அலுவலகக் கட்டடத்தினுள் நுழைந்தாள்.
வேலையிடத்துக்கு வந்துவிட்டால், இவளா உடன்பிறப்பிடம் அப்படி மல்லுக்கு நின்றாள் எனக் கேட்கத் தோன்றும் அளவுக்குப் பதவிசாகவும் நடந்து கொள்வாள். வேலையைப் பற்றிய சிந்தனையுடன் தன் அறைக்குச் செல்ல, எதிர் அறைக்குள் யாரோ ஒரு இளைஞன் சென்று கொண்டிருந்தான்.
அதெல்லாம் கண்ணில் பட்டாலும் எழில்மலரின் கருத்தில் பதியவில்லை. அதே சமயத்தில் அவள் கைப்பேசி ‘என்னைக் கவனி’ என்றது.
அதை எடுத்து, “இப்போத் தான்டா வந்தேன். என்ன விஷயம்?” என்றாள் எழில்மலர்.
“சொல்ல மறந்துட்டேன். இன்னைக்குப் பரீட்சை முடிஞ்சதும் பீச்சுக்குக் கூட்டிட்டு போறேன்ன்னு சொன்னியே. அதை மறந்துடாத” என்றான் சுகந்தன்.
“இன்னைக்குச் சாயந்திரம் தானே. வரேன்டா. பீச்ல ஆறு மணிக்குப் பார்க்கலாம். அவனவன் ஃபிரெண்ட்ஸோட போவாங்கன்னு பேரு. நீயும் இருக்க பாரு” என எழில்மலர் தலையில் அடித்துக் கொள்ள,
“இப்பவும் ஃபிரெண்ட்ஸ் வராங்க பிளவர்.. எங்களுக்கு எல்லாம் ஒரு ஸ்பான்சர் வேணுமே. நாங்க படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும் உங்க கல்யாணத்துக்கு மொத்தமா மொய் எழுதிடறோம்” என சுகந்தனின் நண்பன் மறுமுனையிலிருந்து கத்தினான்.
“சுகந்தனுக்கு மட்டும் ஏத்தம்ன்னு பார்த்தா அவனோட ஃபிரெண்ட்ஸ் அவனை விட இருக்கீங்க” என எழில்மலர் திட்ட, “ரொம்பப் பண்ணாத பிளவர். நாங்க என்ன பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கா கூட்டிட்டுப் போகச் சொன்னோம்” என்றான் சுகந்தன்.
“எனக்கு வர்றதே அஞ்சோ பத்தோ. அதையும் ஆட்டையைப் போடறீங்க. இப்போ எனக்கு வேலையிருக்கு.. சாயந்திரம் வந்து உங்களைக் கவனிச்சுக்கிறேன்.” என முணுமுணுத்தவாறே அழைப்பை வைத்தாள்.
என்ன தான் தனக்குப் பிடித்தமில்லை என்ற ரீதியில் பேசினாலும் அவர்கள் கேட்டதற்கு மறுப்புச் சொல்ல மாட்டாள் எழில்மலர். இன்றைய இளைஞர்கள் வீட்டுக்குத் தெரியாமல் எதையெதையோ செய்து கொண்டிருக்கையில் இவர்கள் பொறுப்பாக நடந்து கொள்கிறார்களே என அவர்களைப் பற்றிய பெருமிதம் எப்போதும் அவளுக்கு உண்டு.
தன் வேலையில் மூழ்க நினைத்த நேரத்தில், “யூ.. சீ. ஒன்ஸ் அப்பான் எ டைம். நான் காலேஜ் படிச்ச சமயத்தில் இப்படித் தான் ஒரு சம்பவம் நடந்தது” என யாரோ சொன்ன வாக்கியத்தில் விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தாள் எழில்மலர்.
Author: siteadmin
Article Title: அத்தியாயம் - 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.