• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -30

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
409
2
43
india
பகலிரவு பல கனவு - 30


“என்ன பிரபா? அப்பாயின்ட்மென்ட் கிடைக்கலையா?” சம்யுக்தா அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

பிரபாகரன் அவளை நேராகப் பார்க்க முடியாமல் சற்றே திரும்பி நின்றான்.
“சம்யூ….”

“என்ன சொல்றாங்க? அவங்க இல்லையா?”

“அவங்க…”

“என்ன?? நான்னு தெரிஞ்சு பார்க்க மாட்டேன்னு சொல்றாங்களா?” குரலில் பதட்டம்.

“ஹோய்! ஓவரா கற்பனை பண்ணாத. அப்பாயின்ட்மென்ட் செக்ஷன்ல தானே பேசினேன். அவங்களுக்கு நாம யாருன்னு ஃபோன்லயே தெரியுமா?” அவன் ஒரு வழியாக மனதுக்குள் வார்த்தைகளைக் கோர்த்தான்.

“அவங்களுக்கு இன்னைக்கு ஈவினிங் இரண்டு டெலிவரி கேஸ் இருக்காம். அதனால‌ அவங்க அப்பாயின்ட்மென்ட் எல்லாம் கேன்சல் பண்ணி இருக்காங்களாம். எதுக்கும் நேர்ல வாங்க, அவங்க ஃப்ரீ ஆகிட்டா பாத்துடலாம்னு சொல்றாங்க. இல்லேன்னா வேற எந்த டாக்டர் இருக்காங்களோ அவங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு ஒரு செகண்ட், ஒரேயொரு செகண்ட் தான் யோசிச்சேன். அதுக்குள்ள நீ உலகத்தையே சுத்தி வந்துட்ட.”

அந்த ஒரு நொடியில் சம்யுக்தாவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
தாய் முகம் நினைவில் தோன்றியது.
திருமண நாளன்று பார்த்தது. அன்று அவர்களின் வேறொரு முகத்தைக் கண்ட அதிர்ச்சி விலகவே அவளுக்குப் பல நாட்கள் ஆனது. அதன் பிறகு, திடீரென்று வீட்டு வாசலில் போய் நின்றால் என்ன செய்துவிடுவார்கள் என்று சில நேரம் நினைத்திருக்கிறாள். சரண்யா மூலம் அவர்களது மனநிலை பற்றி அறிந்து கொள்ள முயன்றாள்.

அவளோ, “அச்சோ.. ஸாரி சம்யூ! வெரி வெரி ஸாரி! உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். கோவிச்சுக்காத ப்ளீஸ். நான் ஒரு இன்டர்ஷிப்புக்காக பெங்களூரு வந்திருக்கேன். ஆறு மாச இன்டர்ஷிப். இடையில வந்தா சொல்றேன்” என்றாள். நினைவு தெரிந்த நாள் முதல் இருவரும் ஒட்டிப் பிறக்காத இரட்டை போலப் பழகியவர்கள். பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டவர்கள். மறந்து விட்டேன் என்று அவள் சொன்ன போது சம்யுக்தாவுக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது.

முதல் முறையாக, அவளுக்கும் இந்தக் கல்யாணம் அனைவரையும் தள்ளி நிறுத்திவிட்டது என்று தோன்றியது.
ஆனால், நடந்து முடிந்ததை ரப்பர் வைத்து அழிக்க முடியாதே. அதனால்,
ஏமாற்றத்தை ஜீரணித்து வாழப் பழகிக் கொள்ள ஆரம்பித்தாள். இப்போதும் தாயைப் பார்த்து விடலாம் என்ற ஆசைக்கு ஒரு தடங்கல்..

“பரவாயில்ல பிரபா. வேற டாக்டர் கிட்ட போகலாம்” சாதாரணமாகச் சொல்ல முயன்றாள். ஆனால் குரல் சற்றே உடைந்தது.

அவன் அருகே வந்து மெதுவாக அவளது தோளில் கை வைத்தான்.
“சம்யூ… நேர்ல போய் கேட்டுட்டு முடிவு பண்ணலாம். நீ இப்பவே டென்ஷன் ஆகாத. எல்லாம் ஒரே நாளில் சரியாகிடும்னு சொல்ல முடியாது. முயற்சி செஞ்சு பார்க்கலாம். இப்போ ஹாஸ்பிடல் போகலாம். வீட்டைப் பூட்டிட்டு வா, நான் போய் காரை எடுக்கிறேன்.”

“பிரபா! இரண்டு கிலோமீட்டருக்கு கார் எதுக்கு? நாம புல்லட்லயே போகலாம். எதுவும் கன்ஃபர்ம் ஆன பிறகு காரா, புல்லட்டான்னு யோசிக்கலாம். இப்போ கண்டிப்பா கார் வேண்டாம்.” உறுதியாக மறுத்தவளுக்கு மறுபேச்சு பேசாமல் புல்லட் சாவியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

சம்யுக்தா மெதுவாக புல்லட்டில் ஏறி அமர்ந்தாள். மருத்துவமனைக்கு போகும் வழியில் புல்லட் மெதுவாகவே ஊர்ந்து சென்றது. “மகளா போக முடியலையா? பேஷண்ட்டா போகலாமேன்னு நினைச்சேன். நடக்குமான்னு தெரியலை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அந்த வார்த்தை பிரபாகரனின் உள்ளத்தை கிழித்தது. மருத்துவமனையில் சொன்ன செய்தியை நினைத்துக் கொண்டான். அதைத் தெரிந்து கொள்ளும் போது மனைவியின் மனநிலை மற்றும் அவளது எதிர்வினை எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே திக்கென்றது. பதிலேதும் பேசாமல் சாலையில் கவனமானான்.

மருத்துவமனை வாசலில் புல்லட் நின்றதும் சம்யுக்தா மெதுவாக இறங்கினாள். பிரபாகரன் அவளை ஒரு கணம் பார்த்தான் . அந்தப் பார்வையில் தயக்கம், பயம், சொல்ல முடியாத ஏதோ ஒரு சுமை.

“வா சம்யூ. அங்கே இடம் இருக்கு பாரு. நீ போய் உட்காரு. நான் ரிசப்ஷன்ல …”

“அம்மா ஃப்ரீயா இருக்காங்களான்னு கேட்கணும். நானும் வரேன்” என்று அவனுடன் நடந்தாள்.

மிகுந்த தயக்கத்துடன் ரிசெப்ஷன் அருகே சென்றான். சம்யுக்தா தனது பெயரைப் பதிவு செய்து விட்டு பாரதியைப் பற்றி விசாரிக்க, “நீங்க தான் ஃபோன் பண்ணினதா? அதான் ஃபோன்லயே சொல்லிட்டோமே சார். உங்க வைஃப் கிட்ட சொல்லலையா?” என்றனர்.

“என்ன சொல்லணும்?” என்று பிரபாகரனின் முகம் பார்க்க அவனோ வேறு திசையில் பார்த்தான்.

“மேம், பாரதி டாக்டர் இப்போ இங்க வொர்க் பண்ணல. ரிசைன் பண்ணிட்டாங்க.”

“ஓ…”

“அவங்க பையன் கூட போய் செட்டில் ஆகப் போறதா சொன்னாங்க. மூணு மாசம் ஆகுது. இப்போ வந்து அவங்களை கேட்குறீங்க? அவங்க ரெகுலர் பேஷன்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு மெசேஜ் வரலையா?”

“ஹான்.. இல்லை.. நான் கான்டாக்ட் பண்ணி ரொம்ப நாளாச்சு.’

தலைமேல் விழுந்த இடியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தள்ளாடினாள் நின்றாள் சம்யுக்தா. அருகில் நின்ற பிரபாகரன் அவளைத் தாங்கிப் பிடித்தான். ரிசப்ஷனிஸ்ட் இவளது ரியாக்ஷன் கண்டு அவளை வித்தியாசமாகப் பார்த்தாள். வெகுசில மருத்துவ நண்பர்கள் தவிர சம்யுக்தாவை அங்கே யாரும் அறியமாட்டார்கள். அதனால் வேறெந்த கேள்விகளுக்கும் அங்கே இடமில்லாமல் போனது.

“இட்ஸ் ஓகே மேடம். OBGல வேற டாக்டர் யார் இருக்காங்க. அவங்களைப் பார்க்கணும்.”

“டாக்டர்.மனோன்மணி இருக்காங்க. ஒரு எமர்ஜென்சி கேஸ் அட்டென்ட் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்சம் டைம் ஆகும். வெயிட்டிங் ஏரியால உட்காருங்க,” என்றாள்.

அவர்கள் ஓரமாய் அமர்ந்தார்கள்.
சுற்றிலும் கர்ப்பிணிப் பெண்கள்.
அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலி குளிராக இருந்தது. ஆனால் சம்யுக்தாவின் உள்ளம் தீயில் சுட்டது போல இருந்தது.

‘ரிசைன் பண்ணிட்டாங்களா? அதுவும் மகனோட போயாச்சு.. இதே ஊரில் இருந்தால் என்னைப் பார்க்க வேண்டியது வரலாம்னு தானே இப்படி செஞ்சிருக்காங்க. அவ்வளவு வெறுப்பா?’

பிறந்த வீட்டின் எல்லா வாசல்களும் மூடப்பட்டுவிட்டதை உணர்ந்த அந்த நொடியில் அவளது தேகம் நடுங்கியது.

அவளை கவனித்துக் கொண்டே இருந்தான் பிரபாகரன். பொது இடத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான். வீட்டிலேயே விஷயத்தைச் சொல்லி இருக்க வேண்டும், அவளது ஏமாற்றத்தைச் சற்று தள்ளிப் போட நினைத்தது தவறு என்று அவனது மனசாட்சி சுட்டியது.

“சம்யூ… நீ ப்ளீஸ்டா டென்ஷன் ஆகாத. அமைதியா இரு. நாம வேணும்னா இன்னொரு நாள் செக்கப்புக்கு வரலாம். இப்போ வீட்டுக்குப் போயிடலாம். சரியா?”

“இல்லை.. பரவாயில்லை.. இன்னைக்கே பாத்துடலாம். நான் நார்மலா தான் இருக்கேன்.”

“எதுன்னாலும் என் கிட்ட பேசு. மனசுக்குளள வச்சுக்காத, புரிஞ்சுதா?”

“ஹும்…”

அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அமைதியாகிவிட்டான். சுற்றிலும் இருந்த பெண்களை அவள் கவனித்தாள். ஒருத்தி கணவரின் தோளில் சாய்ந்து மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி வயிற்றை தடவி குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

‘நமக்கும் இப்படியா இருக்கும்?’ நினைக்கையில் கவனம் தாயிடம் இருந்து தனது குழந்தையிடம் திரும்பியது.

சற்று நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து,
“மிஸஸ் சம்யுக்தா” என்று அழைத்தாள்.
இருவரும் எழுந்தனர். டாக்டர் மனோன்மணியின் அறை.

“வாங்க சம்யுக்தா!” என்றவர் அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

“ஓ.. இப்போ தான் ஞாபகம் வருது. நீங்க டாக்டர்.பாரதியோட பொண்ணு தானே? உங்க கல்யாணத்துக்கு நான் வந்திருக்கேன்” என்றவர் அதற்கு மேல் பேச்சை மாற்றி விட்டார்.

“வீட்டுல டெஸ்ட் எதுவும் செஞ்சீங்களா?””

“இல்லை டாக்டர். காலேஜ்ல கொஞ்சம் மயக்கமா இருந்தது. பல்ஸ் மட்டும் தான் புரோஃபசர் செக் பண்ணினாங்க. அவங்க தான் OBG பார்க்கணும்னு சஜஸ்ட் பண்ணினாங்க.”

“நீங்களே ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட். வீட்டிலேயே டெஸ்ட் பண்ணி இருக்கலாமே? நோ ப்ராப்ளம் . இப்போ ப்ளட் டெஸ்ட் பண்ணிடலாம். லாஸ்ட் பீரியட்ஸ் எப்போ வந்தது?”

அவள் சொல்ல, டாக்டர் சில குறிப்புகள் எழுதினார்.

“இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க. பார்க்கலாம்” என்று அனுப்பி வைத்தார்.

பரிசோதனை அறைக்கு
எதிரே இருந்த சுவரில் ஒரு படம்.
‘Motherhood is a journey, not a race.’
அந்த வரிகள் அவளது பார்வையில் நின்றது.

மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்கள், அவளது இதயத் துடிப்பை மேலும் அதிகரித்தன. சில நிமிடங்களில் பரிசோதனை முடிந்தது.

“காங்கிராஜுலேஷன்ஸ்”
என்று புன்னகையுடன் சொன்னார் டாக்டர்.

அதன் அர்த்தம் புரிந்த இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

“தாங்க் யூ டாக்டர்!” இருவரின் குரலும் ஒன்றாக ஒலித்தது.

அதன் பிறகு பிரபாகரன் தனது சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தான். வழக்கமான கேள்விகள். இது போன்ற எத்தனையோ கணவர்களை தினந்தோறும் பார்க்கும் மருத்துவரும் சளைக்காமல் தனது வழக்கமான பதில்களை வழங்கினார்.

அவளது இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்த போது அவரது முகம் மாறியது.

“ஸ்ட்ரெஸ் அதிகமா எடுத்துக்கிறீங்க போல இருக்கு. ப்ரக்னன்ஸில ரொம்ப ஸ்ட்ரெஸ் கூடாது. ரிலாக்ஸா இருங்க. நல்லா சாப்பிடுங்க. அடுத்த தடவை வரும் போது இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க. டேக் கேர்” என்று அனுப்பி வைத்தார்.

வெளியே வந்த இருவரும் சில நொடிகள் பேசாமல் நின்றனர்.

“பிரபா…” சம்யுக்தாவின் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் அதிர்ச்சி, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்திருந்தது.

“ஹும்…” அவன் இன்னும் அதிர்ச்சியிலேயே.

“நாம அப்பா அம்மா ஆகப்போறோமா?”
அவள் கண்களில் நீர் மிதந்தது.

“அப்படித்தான் டாக்டர் சொன்னாங்க…”அவன் சிரித்தான்.

“சம்யூ… Thank you.”

அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள்.

அந்த நொடியில் ஆடி மாதம், அப்பத்தாவின் பேச்சு, ஊர் வழக்கங்கள் எல்லாம் மறந்து மறைந்து போனது.

“தாங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும். இப்போ வீட்டுக்குப் போய் ஏதாவது சாப்பாடு பண்ணுங்க. எனக்குப் பசிக்குது.”

“ஆர்டர் பண்ணலாமா?”

“வேணாம். வீட்டிலேயே செஞ்சா தான் சாப்பிடணும்.”

“அப்படியா? சரி. இன்று முதல் ‘பிரபாகரன் ஸ்பெஷல்’ ஆரம்பம்.”

“என்ன ஸ்பெஷல்?”

“முதலாவது ரெசிபி குழந்தைக்கும் அம்மாவுக்கும் அப்பாவோட அன்பு.”

“ஐய.. போதும்.. போதும்.. எப்போ இருந்து இப்படி டயலாக் எல்லாம் பேச ஆரம்பிச்சீங்க? ” அவள் சிரித்தபடி அவன் தோளில் சாய்ந்தாள். புல்லட் சைக்கிள் வேகத்தில் ஊர்ந்து வீடு வந்து சேர்ந்தது.

“சம்யூ… உனக்கு சாப்பிடணும்னு என்ன தோணுது?”

“ஹ்ம்… தெரியல. எதையாவது சாப்பிடணும் போல இருக்கு. ஆனா வாசனை வந்தா வாமிட் வருது.”

“அடடா… இது பெரிய பிராஜெக்ட் போல இருக்கு.”

அவன் சாதாரண உப்புமா செய்ய முயன்றான். ஆனால் ஐந்து நிமிடத்தில்,

““ஏய்! ஸ்டாப்! ஸ்டாப்!” என்று சம்யுக்தா கிச்சனுக்குள் ஓடிவந்தாள்.

“என்னாச்சு?” பிரபாகரன் கலக்கிக் கொண்டிருந்த பாத்திரத்தை நிறுத்தினான்.

“அந்த வெங்காய வாசனை… ப்ளீஸ் ஸ்டவ் ஆஃப் பண்ணுங்க…” என்று வாயை மூடி கொண்டாள்.

“ஓஹ்! சரி சரி…” என்று அவன் அடுப்பை அணைத்தான்.

“இது தான் அந்த மோர்னிங் சிக்க்னஸ்ஸா?”

“இது ஈவினிங் சிக்னஸ் போல இருக்கு…” என்று அவள் சிரிக்க முயன்றாள். ஆனால் கண்களில் சற்று சோர்வு.

அவன் உடனே ஜன்னல்களைத் திறந்து வைத்து, “சரி. உப்புமா கேன்சல். பிளான் B என்னன்னு யோசிக்கலாம்?”

“எனக்கு… லெமன் சாதம் மாதிரி ஏதாவது லைட்டா புளிப்பான இருந்தா நல்லா இருக்கும் போல…”

“அடடா! லெமன் சாதமா? அது எனக்கு நல்லா தெரியுமே.”

பத்து நிமிடத்தில் லெமன் சாதம் ரெடி.
அவன் தட்டில் பரிமாறி அவளிடம் கொடுத்தான்.

ஒரு ஸ்பூன் சாப்பிட்டாள். சில விநாடிகள். அவன் பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹும்… நல்லா இருக்கு.”

“நிஜமா??”

“ஹும்… கொஞ்சம் புளிப்பு அதிகம். ஆனா பரவாயில்லை. எனக்கு வாமிட் வரலை.”

“அது நம்ம குழந்தைக்குப் பிடிச்சிருக்கும். அதான் வெளியே தள்ளி விடல. யாரோட சமையல்” என்று காலரைத் தூக்கி விட்டான்.

“ஐயோ! உங்களோட.. முடியல..”

சாப்பிட்டு முடித்ததும் சோர்வுடன் சோபாவில் சாய்ந்தாள். பிரபாகரன் அவளது கால்களுக்கு கீழே தலையணை வைத்தான்.

“என்ன பண்ணறீங்க?”

“டாக்டர் சொன்னாங்களே… ஸ்ட்ரெஸ் வேண்டாம். ரெஸ்ட் அவசியம்.”

“நீங்க இப்படி கவனிச்சீங்கன்னா எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் வராது.”

அவன் மெதுவாக அவளது வயிற்றில் கையை வைத்தான். சில நொடிகள் அமைதி.

“ஹலோ! குட்டி! நான் அப்பாபேசுறேன்”

“பிரபா!” அவள் சிரித்தாள்.

“சீரியஸா தான். ஹலோ குட்டி! கேட்குறீங்களா? அம்மாவை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. வாசனை பிடிக்கலன்னா முன்னாடியே சொல்லணும்.”

அவள் மெதுவாக சிரித்தாள்.
அந்த இரவு
வீட்டில் வேற எந்த சத்தமும் இல்லை.
காற்று மட்டும் ஜன்னல் திரையை அசைத்தது. பிரபாகரன் அவளுக்காக பால் காய்ச்சிக் கொண்டு வந்தான்.

அந்த இரவில், சம்யுக்தா அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் பிரபாகரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் மெதுவாக மொபைலை எடுத்தான். கூகுளில் டைப் செய்தான்:

‘How to take care of pregnant wife first trimester’

திரையில் தகவல்கள் ஓடின.
அவன் மெதுவாக சிரித்தான்.

“பிரபா… நீ இப்போ ரொம்ப பொறுமையா இருக்கணும்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு
அவளருகே வந்து படுத்தான். சில நொடிகளில் அவன் உறங்கிவிட சம்யுக்தா விழித்துக் கொண்டாள்.

சத்தமில்லாமல் எழுந்து கைபேசியுடன் வெளியே வந்தாள். அம்மாவின் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்
கை நடுங்கியது. அழைப்பு சென்றது.
யாரும் எடுக்கவில்லை.

சம்யுக்தா ஒரு நிமிடம் காத்திருந்தாள்.
“Busyஆ இருப்பாங்க…” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். மீண்டும் அழைத்தாள்.

இந்த முறை, ரிங் கூட செல்லவில்லை.
அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவள் கையை மெதுவாகக் கீழிறக்கினாள்.

மீண்டும் அழைத்தாள். இந்த முறை

Switch off. வாட்ஸ்அப்பில் ஒரு முறை மெசேஜ் அனுப்பினாள்.

“அம்மா… நான் உங்களை மிஸ் பண்ணறேன்.”

Blue tick கூட வரவில்லை. கண்ணீருடன் மொபைலை மூடி வைத்தாள்.
இரவு முழுவதும் அழுகையில் கரைந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்குச் சென்றாள்
.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -30
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.