• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -32

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
423
5
43
india
பகலிரவு பல கனவு – 32
அடுத்த நாள் காலையில் சம்யுக்தாவும் பிரபாகரனும் இறங்கி வரும் முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்று கீழ் வீட்டில் இருந்த மூத்த பெண்களுக்குத் தெரிந்துவிட்டது.
முதல் நாள் மாலையில் இருவரும் சீக்கிரமே வீடு வந்ததையும் அதன் பிறகு வெளியே சென்று வந்ததையும் அப்பத்தா கவனித்துக் கொண்டு தான் இருந்தார். சம்யுக்தாவின் சோர்ந்த முகம், அந்த சோர்வையும் தாண்டி அவள் முகத்தில் இருந்த ஜொலிப்பு எல்லாம் அவரது அனுபவம் வாய்ந்த கண்களில் இருந்து தப்பவில்லை. இரவு முழுவதும் அவ்வப்போது கேட்ட வாந்தி எடுக்கும் சத்தமும் விஷயத்தைத் தெளிவாக விளக்கி விட்டது.
ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் ஆடி மாதம் ஞாபகம் வந்து ஆட்டிப் படைத்தது. காமாட்சி தனது குமுறலை எல்லாம் வெளிப்படையாக கொட்டிக் கொண்டிருக்க அப்பத்தா அந்த சூழ்நிலையிலும் அமைதி காத்தார்.
“என் வயித்துல வந்து பொறந்த நேரம் தான் அவனுக்கு சரியில்லாமல் போச்சு. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாரம் சுமக்க வேண்டியதாச்சு. கட்டிக்கப் போறவ நேரம் நல்லா இருக்கும்னு நினைச்சேன். வரும் போதே சொந்தபந்தத்தை எல்லாம் தள்ளி வச்சாச்சு. இப்போ, வரப் போற புள்ளையால அவன் என்னவெல்லாம் அனுபவிக்கணுமோ? நேத்து வந்தவளுக்காக பெத்தவள வேதனைப் பட வச்சா எப்படி நல்லா இருக்க முடியும்?”
மருமகளது புலம்பல்களைக் கண்டு கொள்ளாமல் மாடியைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா, காமாட்சியின் கடைசி வரிகளில் பொங்கி விட்டார்.

“வாயை மூடு காமாட்சி. இத்தனை நாளா இல்லாமல் இன்னைக்கு என்ன ரொம்ப அக்கறை வழியுது? காலங்காத்தால நல்லதா நாலு வார்த்தை பேச முடியலேன்னா வாயை மூடிட்டு வேலையைப் பாரு, போ” என்று ஆரம்பித்து இத்தனை வருடங்களாக எடுக்காத மாமியார் அவதாரம் எடுத்து மருமகளை ஒரு வழி செய்துவிட்டார்.

மாமியாரின் புது அவதாரத்தில் அரண்டு போன காமாட்சி மகனை மறந்து வீட்டினுள் நுழைந்து கொண்டார். ஒரு பெருமூச்சுடன் அப்பத்தா மறுபடியும் தனது கவனத்தை மாடிக்குத் திருப்பினார்.

“நேத்தே சொன்னேல்ல, பிரபா. சீக்கிரம் எழுப்பி விடுங்கன்னு. ரொம்ப நேரம் தூங்கிட்டேன்..”

“ஹேய் சம்யூ! பார்த்து.. மெதுவா.. தடதடன்னு ஓடாத.. இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டா தான் என்ன? விடிய விடிய வாந்தி எடுத்துட்டு தூங்கவே இல்லை” என்று பிரபாகரனின் குரல் சத்தமாக ஒலித்தது.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை, முக்கியமான ப்ராக்டிகல் க்ளாஸ் இருக்கு, லீவு போட முடியாது.‌ அடுத்த இரண்டு நாளும் லீவு தானே, அப்போ ரெஸ்ட் எடுத்துக்கறேன். ம்ச்.. பஸ் போயிருக்கும், இப்போ நான் எப்படி காலேஜ் போறது? இந்த நேரத்தில ஆட்டோ கூட கிடைக்காது” அலுத்துக்கொண்டே சம்யுக்தா வேகமாக படிகளில் இறங்கினாள்.

“வெயிட் பண்ணு, வீட்டைப் பூட்டிட்டு வரேன். நானே காலேஜ்ல கொண்டு போய் விடறேன்.” மின்னல் வேகத்தில் வீட்டைப் பூட்டி, மறக்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

“ஹலோ டாக்டர் மேடம்! சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு இப்படித் தாவித் தாவி இறங்குற.‌ வயித்துல பிள்ளை இருக்கு டீ” என்று அவள் நெற்றியில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தவன் அங்கே நின்று இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தாவைக் கவனித்தான். சம்யுக்தாவும் அவரைக் கண்டு தயங்கி நின்றாள்.

“லேட் ஆச்சுன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு வேடிக்கை பார்த்துட்டு நிக்குற? இந்தா இந்த பையைப் பிடி, காலேஜ் போனதும் மறக்காம கஞ்சிய குடி. வாந்தி வர மாதிரி இருந்தா பாட்டில்ல இருக்குற லெமன் ஜுஸைக் குடிச்சிக்கோ. மதியத்துக்கு என்ன வேணும்னு சொல்லு, செஞ்சு எடுத்துட்டு வரேன். இப்போ வந்து கார்ல ஏறு.”

அப்பத்தாவின் பார்வையைச் சந்திக்க மறுத்து காரில் ஏறியவன் சம்யுக்தா தயங்கி நிற்பதைக் கண்டு ஹாரனை ஒலிக்க விட்டான். வேறு வழியின்றி சம்யுக்தா காரில் ஏறிக் கொண்ட அடுத்த நொடியே கார் பறந்தது.

சற்று நேரம் கழித்து வேகத்தைக் குறைத்தாலும், நான் கோபமாக இருக்கிறேன் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு காரோட்டினான். சம்யுக்தா மெதுவாக அவனை அழைத்தாள்.

“பிரபா”

“ம்ம்.. “

“பிரபா!”

“என்னை ஏலம் விடாம சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு.”

“எதுக்கு இப்படி பண்ணீங்க? ஆச்சி பாவம், அவங்க கிட்ட நான் ப்ரெக்னன்ட்னு சொல்லி இருக்கலாம்ல. சந்தோஷப் பட்டிருப்பாங்க.”

“ஆமாமாம்.. ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க.. நீ கவலையே படாத. வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா சொல்லிடறேன்.” என்று சத்தமாகச் சொன்னவன், “அப்புறம் ஆடி, ஆவணின்னு ஆரம்பிச்சு நல்ல ஆசிர்வாதம் எல்லாம் கொடுப்பாங்க “ என்று முணுமுணுத்தான்.

“என்ன சொல்றீங்க, ஒன்னும் புரியல”

“ம்.. உங்க ஆச்சி கிட்ட மட்டுமில்ல உங்க மாமியார் கிட்டயும் சேர்த்தே சொல்லிடறேன்னு சொன்னேன். போதுமா?” அவன் பல்லைக் கடிக்க சம்யுக்தா அமைதியாகி விட்டாள்.

ஆடிமாதம் பற்றி அப்பத்தா கூறிய முழு விவரத்தை அவள் அறியமாட்டாள். சித்திரை வெயில் பற்றிய அக்கறை என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் நடந்தது என்ன என்பது தெரிந்தால் உடைந்து போவாள் என்பதை பிரபாகரன் அறிவான். மனைவியின் எண்ணத்தில் அப்பத்தா தாழ்ந்து போவதையும் அவன் விரும்பவில்லை.

முடிந்தவரை கோபம் போல் காட்டி அவரைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இன்று சற்று அதிகமாகவே கோபம் வந்தது. சம்யுக்தா கர்ப்பமாக இருக்கும் சூழலில் அப்பத்தா எதையாவது அவளிடம் பேசிவிடுவாரோ என்ற பயத்தில் இவன் முந்திக்கொண்டு கோபத்துடன் கிளம்பிவிட்டான்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமையோ?’ நினைத்து நினைத்து அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அவன் எதிர்பார்த்தது போலவே அப்பத்தா அவனுக்காகக் காத்திருந்தார்.

அவரைக் காணாதது போல காரை நிறுத்திவிட்டு மாடிப்படியில் கால் வைத்தவனை, “அப்பனாகப் போறோம்ன உடனே துரைக்கு அவ்வளவு ஏத்தமா போச்சோ?” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

“இங்க பாரு அப்பத்தா! உன் கூட வம்பு வளர்க்க எனக்கு நேரமில்ல. தலைக்கு மேலே வேலை கிடக்கு. இன்னொரு நாள் சாவகாசமா வரேன். பேச வேண்டியதெல்லாம் அப்போ பேசு. இப்போ ஆளை விடு.”

“வீட்டுக்கு மூத்தவன்னு ஒரு மரியாதை இல்லையா? டேய் பேராண்டி…” என்று அவர் சத்தம் போட்டதைக் கேட்க அவன் அங்கே இல்லை.

“இவங்க நல்லதுக்கு தான சொல்றோம். எதையும் தான்தோணித்தனமா செய்வேன்னா பெரியவங்க எதுக்கு இருக்கோம்? வரட்டும், என் கையில மாட்டாமலா போயிடுவான்?* என்று புலம்பியபடி உள்ளே சென்ற அப்பத்தாவை முருகானந்தத்தின் நக்கலான பார்வை வரவேற்றது.

‘அச்சோ! இவன் வீட்டில இருக்கான்னு நினைவில்லாம போச்சே. வாயைத் திறந்தாலே அச்சானியமா பேசி வைப்பான். இப்போ மருமக விஷயம் தெரிஞ்சா வேற வினையே வேண்டாம்’ மனதுக்குள் புலம்பிய அப்பத்தாவைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

“என்னப்பெத்த ஆத்தா ஏதோ விசனத்துல இருக்கிற மாதிரி தெரியுது. என்ன விஷயம்? உம் பேரன் உன்னையும் கண்டுக்காம போறானா? நான் சொன்ன போது இந்த வீட்டுல யாரும் கேட்கல. இப்போ நல்லா அனுபவிங்க. நாலு காசு பார்க்க ஆரம்பிச்ச போதே தலைகால் புரியாம ஆடினான், இப்போ சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சிருக்கான். இனிமேல் கோடில புரளுவான், ஆத்தா அப்பத்தான்னு யாரும் கண்ணுக்குத் தெரியாது.”

தன் பங்குக்கு எரியும் கொள்ளியில் பெட்ரோல் ஊற்றி விட்டுச் சென்றார் முருகானந்தம். மகனது பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் பேரனின் இன்றைய நடத்தை மனதை வாட்ட அமைதியாக அமர்ந்து கொண்டார் அப்பத்தா.

அன்று முழுவதும் கீழ் வீட்டில் ஒரு வித்தியாசமான அமைதி நிலவியது.
அப்பத்தா வழக்கம்போல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் திரையில் அவரது கவனம் இல்லை. சமையலறையில் இருந்து பாத்திரங்கள் ஒலிக்கும் சத்தம் மட்டும் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தது. மாமியாரின் பேச்சுக்குப் பயந்து வாயைத் திறந்து எதையும் புலம்பாமல் தனது குமுறலை எல்லாம் பாத்திரத்தில் காட்டிக் கொண்டிருந்தார் காமாட்சி.

அன்று முழுவதும் மனைவியின் சேவகனாக மாறி லஞ்ச், ஜுஸ் என்று குக்கிங் & டெலிவரி சர்வீஸ் செய்த பிரபாகரன் மறந்தும் அப்பத்தாவின் கண்களில் படவில்லை.

கணவனின் கைவண்ணத்தில் சுடச்சுட இட்லியையும் காரச்சட்னியையும் ஒரு கை பார்த்த சம்யுக்தா அன்றிரவு நன்றாக உறங்கினாள். சனிக்கிழமை விடியும் முன்பே விழித்துக் கொண்ட பிரபாகரன் தோட்டத்திற்குக் கிளம்பினான். மனைவியின் தூக்கம் கெடாமல் சத்தம் போடாமல் கதவைத்திறந்து வெளியே வந்தவனின் பார்வையில் வாசலில் நின்ற அந்த கார் பட்டது. ரத்தச் சிவப்பு நிறத்தில் புத்தம் புதியது போலப் பளபளத்தது அந்தக் கார். பார்த்தாலே பல லட்சங்களை விழுங்கியிருக்கும் என்று தெரிந்தது.

‘யாரது இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு வர்றாங்க? அதுவும் இவ்வளவு காஸ்ட்லியான கார்ல?’ என்ற யோசனையில் மாடியிலேயே நின்றான்.

காரின் முன் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் மலர்விழி. தங்கையைக் கண்டதும் ஓரடி முன்னால் எடுத்து வைத்த பிரபாகரன் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கியவனைக் கண்டதும் சற்று நிதானித்தான். அவனது அனைத்து புலன்களும் கூர்மை பெற்றது.

ஆறடிக்கும் மேலான உயரத்தில் சின்ட்ரெல்லா கதைகளில் வரும் சிஈஓ மாதிரியான தோற்றத்தில் இருந்தான். இளம் புன்னகையுடன் மலர்விழியைப் பார்த்தவன் கார் டிக்கியைத் திறந்து அவளது பெட்டியை இறக்கி வைத்தான். மெதுவாக அவளது கையைப் பற்றித் தன்புறம் இழுத்து தோளோடு அணைத்து ஏதோ சொல்லிச் சிரித்தான். பின்னர் பிரிய மனமில்லாதவன் போல மெதுவாகச் சென்று காரில் ஏறிக் கொண்டான். மலர்விழி கையசைத்து விடை கொடுக்க கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு விஷயம் தெளிவாக விளங்கியது. ஏற்கனவே, “முன்னேறு செல்லும் வழியே பின்னேறு செல்லும்னு சொல்லுவாங்க. இவனைப் பார்த்து மலரும் யாரையாவது கூட்டிட்டு வரமாட்டான்னு என்ன நிச்சயம்?” என்று அவனைப் பெற்ற தந்தையில் ஆரம்பித்து அறிந்தவர் தெரிந்தவர் அனைவரும் பேசுகிறார்கள். இப்போது என்னென்ன பேசப்போகிறார்களோ என்று மலைப்பாக இருந்தது.

‘உன் தங்கை சிட்டில இருக்கா, அதுவும் இல்லாமல் ஐடில வேலை பார்க்கிறா. ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் ஃப்ரண்ட்ஸ் மாதிரி பழகறத வேற மாதிரி பார்க்கக் கூடாது’ என்று மனம் குரல் கொடுத்தது. அவன் அக்கம் பக்கத்தில் உள்ளவனாக இருக்கலாம், நண்பன் என்ற முறையில் தனது காரில் இவளுக்கு லிஃப்ட் கொடுத்திருக்கலாம். எதுவானாலும் தங்கையின் மூலம் விஷயம் வராமல் எதுவும் கேட்பதில்லை என்று முடிவு செய்து கீழே இறங்கினான்.

அவனைக் கண்டதும் மலர்விழி சற்றே பதட்டமானது போலத் தோன்றியது. அவனது பார்வை பொய்யோ எனும் படி
அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு அண்ணனை எதிர்கொண்டாள்.

“குட் மார்னிங்ணா! தோட்டத்துக்கு கிளம்பிட்டியா?”

“ஆமா, நீ என்ன திடீர்னு வந்திருக்க? எப்படி வந்த? சொல்லி இருந்தா பஸ் ஸ்டாண்ட் வந்திருப்பேன்ல?”

“ஹான்.. அது.. நான் வரணும்னு ப்ளான் பண்ணவே இல்லை. திடீர்னு தோணிச்சு, அதான் கிளம்பிட்டேன். பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு ஃப்ரெண்ட் கூட வந்தேன்.”

“திடீர்னு கிளம்பினியா? அம்மாக்காவது நீ வரேன்னு தெரியுமா?”

“சொல்லலையே.. ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு..”

“அப்படியே ஒன்னு போட்டேன்னா பாரு.. அறிவிருக்கா உனக்கு? சர்ப்ரைஸ் கொடுக்கிறாளாம். இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம.. இவ வேற.. இப்போ போய் அவங்க முன்னாடி நில்லு. ஷாக்காகி மயங்கி விழப் போறாங்க. நீ பாட்டுக்கு கிளம்பி வந்திருக்கியே, நடுவழியில ஏதாவது நடந்திருந்தால் கூட எங்களுக்கு தெரியாமல் போயிருக்கும். உன்னை யெல்லாம் என்ன செய்யுறது?”

இவனே இப்படிப் புலம்பினால் அம்மாவும் அப்பத்தாவும் என்ன செய்வார்கள் என்று தலை சுற்றிப் போனாள் மலர்விழி.

“ப்ளீஸ் அண்ணே! உன்னைக் கையெடுத்து கும்பிடுறேன். தயவு செஞ்சு ரம்பம் போடாத. இங்கே பாரு, இப்பவே என் கழுத்தில ரத்தம் வருது. மீ பாவம், விட்டுடு. ஏதோ தெரியாமல் செஞ்சிட்டேன்னு சொல்ல மாட்டேன். தெரிஞ்சே தான் செஞ்சேன்” என்றவள் சிட்டாகப் பறந்து விட்டாள். சில விநாடிகள் சென்றே அவள் சொன்னது புரிந்து தலையில் அடித்துக் கொண்டான் பிரபாகரன்.

“இது ஒரு அறுந்த வாலு. சீரியஸா லவ் பண்றதுக்கெல்லாம் சான்ஸே இல்லை” என்று சிரித்துக் கொண்டே தோட்டத்திற்குச் சென்றான்.

மேலும், தனது தங்கை காதல் விஷயத்தை தன்னிடம் சொல்லாமல் இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.

“அண்ணா! இதைப் பாரு! இதுக்காகத் தான் திடீர்னு கிளம்பி வந்தேன்” என்று ஃபைல் ஒன்றை அன்று மாலை அவனிடம் நீட்டினாள் மலர்விழி.

அதைப் பிரித்தவன் தங்கையைக் கேள்வியாகப் பார்த்தான். “முழுசா படிண்ணா!” என்றாள் அவள்.

அது.. அரசாங்கம் வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழ்.

மணமக்களின் புகைப்படங்கள், மலர்விழி.எம், கார்த்திக் சுபாஷ் என்றது.

கீழே திருமணம் குறித்த விரிவான தகவல்கள்
..
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -32
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Oct 3, 2024
84
15
18
சென்னை
வீராதி வீரர் திருவாளர் முருகானாந்தனின் செயல் என்ன? பையனுக்கு நக்கல் பார்வை.. பொண்னுக்கு...