• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 4

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
422
5
43
india
அத்தியாயம் - 4





"வாங்க! வாங்க!"



"வெல்கம் சார்"



"வந்தாச்சு வந்தாச்சு. அதுக்குள்ள சூப்பரா செடியெல்லாம் வளர்த்து வச்சிருக்கீங்களே. உள்ள நுழையும் போதே பார்க்கிறதுக்கு நல்லா ப்ளஸென்ட்டா இருக்கு விஷ்ணு"



"இதெல்லாம் பழைய ஃப்ளாட்ல மொட்டை மாடியில வச்சிருந்த செடிகள் சார். தொட்டி எல்லாம் ரொம்ப வெயிட், தூக்க முடியல ன்னு இங்கேயே வச்சிட்டோம். இந்த வீட்டுல புதுசா மாடில க்ரீன் பேக்ஸ் வச்சுத் தான் தோட்டம் போடலாம்னு இருக்கோம். என் வைஃபோட இன்ட்ரெஸ்ட் இதெல்லாம், அவங்க தான் கொஞ்சம் கொஞ்சமா அந்த வொர்க் பண்ணிட்டு இருக்காங்க"



"கரெக்ட், கரெக்ட். இப்போ நிறைய பேர் பண்றாங்களே, மொட்டை மாடி தோட்டம்னு. பெரிய பெரிய மரமெல்லாம் கூட வளர்க்கிறாங்க. எப்படியோ பசுமையா இருந்தா சரி. கவர்மென்ட் கூட அதுக்கு ஹெல்ப் பண்றாங்கன்னு கேள்விப் பட்டேன்"



"ஆமா சார். வாழை மரம் கூட வளர்க்கலாம். ஏதோ, நேச்சருக்கு நம்மளால முடிஞ்ச சின்ன உதவி. எனக்குமே உருப்படியா டைம் போதும்னு ஒரு நம்பிக்கை"



"பொழுது போனது மாதிரியும் இருக்கும். யூஸ்ஃபுல்லாவும் இருக்கும். நைஸ். இதெல்லாம் சரி, கூடவே உங்க ஹெல்த்தையும் கொஞ்சம் பாத்துக்கோங்க, விஷ்ணு அடிக்கடி கவலைப் படுவார்"



"அதுக்கென்ன சார் பண்றது. வேலை செஞ்சிட்டு ரெஸ்ட் எடுத்துப்பேன்"



"கார் பார்க்கிங் தனியா இருக்கா, இல்லை இது தானா? ரொம்பச் சின்னதா இருக்கோ. சின்னக் காரா இருந்தால் தான் உள்ள வைக்க முடியும் போல இருக்கே"



"அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை சார். அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தா ஈஸி தான். உள்ள வாங்க சார், உட்காருங்க"



"வாவ்! இது என்ன பேக்ரவுண்ட்? நார்மல் வால் டைல்ஸ் மாதிரி இல்லையே?"



"இது பாலிஷ் பண்ணாத கிரானைட் பீஸஸ். டைல்ஸ் மாதிரி ஒட்டி இருக்காங்க"



"பார்க்க ரொம்பவே நல்லா இருக்கு. ஆனால் மெயின்டெய்ன் பண்ண கஷ்டமா இருக்குமோ?"



"யெஸ் சார். யூ ஆர் கரெக்ட். மெயின்டெய்ன் பண்றது கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம் தான் போல இருக்கு. வாரா வாரம் தேங்காய் எண்ணெய் அப்ளை பண்ணனும். ஆளுக்கொரு ப்ரஷ், தேங்காய் எண்ணெய் பாட்டில் எல்லாம் வாங்கி ஏரியா பிரிச்சு வேலை பார்க்கணும் போல இருக்கு. வாங்கும் போது யுனிக்கா இருக்கும்னு மட்டும் தான் யோசிச்சோம். பாக்கிற எல்லாரும் கேட்கும் போது தான் எப்படி மெயின்டெய்ன் பண்ணப் போறோமோன்னு யோசனையா இருக்கு, பார்ப்போம்"



புது வீட்டுக்கு வந்ததை உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரிடமும் டமாரம் அடிக்காத குறையாக அறிவித்ததில், அப்படி என்ன தான் வீடு வாங்கி இருக்கிறார்கள் என்று சிலர், உள் அலங்காரம் செய்து முடித்த வீட்டைப் பார்க்க என்று சில பேர், கிரகப்பிரவேசத்தை வார நாட்களில் வைத்து விட்டீர்கள், அதனால் வர முடியவில்லை என்று சில பேர் வந்த வண்ணம் இருக்க, சொந்த வீட்டின் கைடாக மாறிப் போனான் விஷ்ணு.



"இதென்ன இங்கே ஒரு வாஷிங் மெஷின், கீழே ஒன்னு பார்த்தேனே? அதுவும் வசதி தான், இங்கேயே துவைச்சு இப்படியே காய வச்சிடலாம். நைஸ் அண்ட் வைஸ் ஐடியா"



"எல்லாம் ஃப்யூச்சர் பிளான் தான் சார். மாடியேற முடியாத போது என்ன செய்ய, அதான் இப்படி"



"எல்லாமே பார்த்து பார்த்து நல்ல படியா செஞ்சிருக்கீங்க விஷ்ணு! மாடர்ன் லுக்கும் இருக்கு, அதே நேரத்தில‌ ட்டிரடிஷனலாவும் இருக்கு. இப்போ எல்லாம் நிறைய பேர் ஊஞ்சல் வேணும்னு ஆசைப் படறதே இல்லை. நீங்க அதையும் விட்டு வைக்கலை. அருமையா இருக்கு இந்த ஊஞ்சல்!" அன்று வீட்டைச் சுற்றி பார்க்க வந்த விஷ்ணுவின் மேலதிகாரி, தனது பாராட்டைத் தெரிவித்தபடி ஊஞ்சலில் அமர, அது வரை அவருடன் இணைந்து தனது வீட்டின் பெருமைகளை மைக் இல்லாமல் அள்ளி வீசிக் கொண்டிருந்த விஷ்ணு வாயைத் திறந்த போது வசுதாவின் பார்வையைச் சந்தித்தான். அதில் தெரிந்த உக்கிரத்தில் சட்டென்று வாய்க்கு ஃபெவிகால் போட்டுக் கொண்டான்.



கிடைத்தது வாய்ப்பு என்று, அவன் விட்ட பணியைச் செவ்வனே தொடர்ந்தாள் அவனது அருமை மனைவி. "இந்த ஊஞ்சல் செயின் ஊருல இருந்த எங்க தாத்தா வீட்டு ஊஞ்சலோடது சார். சின்ன வயசுல நான் ஆடினது. அந்த வீட்டை வித்து கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு. இந்த செயின மட்டும் எனக்கு வேணும்னு தாத்தா கிட்ட சண்டை போட்டு எடுத்து வச்சேன். இப்போ ஆசிட் வாஷ் எல்லாம் பண்ணி பாலிஷ் மட்டும் போட்டு இருக்கோம்.



பலகைய மெயின்டெய்ன் பண்ண முடியலை. அதனால அது மட்டும் புதுசா செஞ்சிருக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாவே செய்யலாம்னு தான் பார்த்தோம், பட் சீலிங் இதுக்கு மேல வெயிட் தாங்காதுன்னு சொல்லிட்டாங்க. இதுக்கே கிட்டத்தட்ட ஃபார்ட்டி தௌசன்ட் ஆயிடுச்சு" மூச்சு விடாமல் உரை ஆற்றியவளைக் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாகவே முறைக்க, அந்த உரையில் வெறுத்துப் போய் அமைதி காப்பார் என்று எதிர்பார்த்த விருந்தினரோ அவர் பங்குக்குப் பதில் உரை ஆற்றி விட்டார்



"அந்தக் காலத்துப் பொருட்களோட மதிப்பே தனி தான் மா. இப்போ வரதெல்லாம் ரொம்ப நாள் உழைக்கிறதில்லை. முன்னாடி எல்லாம் விலை கொடுத்து வாங்கிற பொருள் நல்லா உழைக்கணும்னு எதிர் பார்ப்போம். அப்படித்தான் வாங்கவும் செய்வோம். ஆனால், இப்போ ட்ரென்டே யூஸ் அண்ட் த்ரோ மாதிரி ஆகிடுச்சு. எதுவானாலும் அப்டேட் ஆகிட்டே இருக்கணும். இல்லேன்னா, வயசாயிடுச்சுன்னு சொல்லிடுவாங்க"



வசுதா கொடுத்த ஃபில்டர் காபியைக் குடித்துக் கொண்டே பேசியவர், "ஓகே விஷ்ணு. ரொம்ப நேரம் ஆகிடுச்சுனு நினைக்கிறேன். லெட் மீ டேக் லீவ். வரேன் மா. வரேன் பசங்களா, நல்லா படிங்க" என்று கிளம்பினார்.



"ஹப்பாடா!" என்று பெருமூச்சு விட்ட விஷ்ணுவின் புதல்வர்கள், இருவரும் தாய் தந்தையைக் கலாய்க்கத் தயாராக, வசுதாவோ விஷ்ணுவை முறைத்துக் கொண்டு நின்றாள்.



"அது எப்படி பா, இங்க இருக்கிற இன்ட்டீரியர் டீடெயில்ஸ் ஏதாவது உங்களுக்கு தெரியுமா? நீங்களே பக்கத்தில நின்னு செஞ்சது மாதிரி என்ன ஒரு பில்ட் அப்!"



"அந்த டிவி யூனிட் வால் டைல்ஸ் நானும் அம்மாவும் செலக்ட் பண்ணினோம். கிரெடிட் மொத்தம் உங்களுக்கா?"



"இதைக் கவனிச்சியா ஆதி?"



"???"



"ஊஞ்சல் ஹிஸ்டரிய?"



"ஹா ஹா ஹா! இந்த ஊஞ்சல் நாங்க செஞ்சது தான். ஆனா அதுல இருக்குற செயின் மட்டும் தாத்தாவோடது. அதானே...ஹா ஹா ஹா!"



விஷ்ணுவின் முகத்தில் கோப ரேகைகள் தெரிந்ததில் உஷாரான ஆதி தமையனையும் கண்ணால் எச்சரித்தவன், "அம்மா! எங்களுக்கு இன்னும் நீங்க காஃபியே தரலை" என்று பேச்சை மாற்றும் முயற்சியில் இறங்கினான்.



"டேய்! போதும் டா. ரொம்ப பேசறீங்க இரண்டு பேரும். நீங்க பேசறத ஜாலியா எடுத்துக்கிறோம்னு ஓவர் அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதீங்க. உங்களுக்கு நல்லது இல்லை" பிள்ளைகளுக்கு ஒரு கொட்டு வைத்தவள் அவர்களின் தேவையை நிறைவேற்றினாள்.



'அப்பப்பா! இந்தப் பசங்களுக்கு ரொம்பவே கொழுப்பு கூடிப் போச்சு. அம்மா அப்பா கிட்ட பேசறோமேன்ற நினைப்பே இல்லாமல் கலாய்க்கிறாங்க' மனதுக்குள் பிள்ளைகளை வாழ்த்திய வசுதா, 'நல்ல வேளை புக் ஷெல்ஃப் பத்தி நான் ஏதும் வாயைத் திறக்கலை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.



ஏதோ அவளது நல்ல நேரம், இல்லையென்றால் வந்தவர்கள் "இதென்ன லைப்ரரி மாதிரி இவ்வளவு பெரிய புக் ஷெல்ஃப்" என்று ஆச்சர்யமாக பார்த்ததற்கு பக்கம் பக்கமாக வாசித்திருப்பாள்



அடுத்த சில நாட்களில் விருந்தினரின் வருகை குறைந்து வீடும் பழைய வீடானது. நாட்கள் அதன் போக்கில் செல்ல, பிள்ளைகளும் விஷ்ணுவும் அவரவர் அன்றாட வேலைகளில் மூழ்கிப் போனார்கள்.



"மா! மெயின் ரோட்டில சைக்கிள் ஓட்டுறது கூட கஷ்டமா இல்ல மா. தனியா ஓட்டுறது தான் கஷ்டமா இருக்கு. காலெல்லாம் ரொம்பவே வலிக்குது மா" என்று முதல் நாள் அலுத்துக் கொண்ட ஆதித்யா கூட, அடுத்து வந்த நாட்களில் "மா என் க்ளாஸ் மேட்ஸ் இரண்டு பேர், அந்த சிக்னல் வரைக்கும் வராங்க. இப்போ ரொம்ப ஜாலியா இருக்கு இந்த சைக்கிள் ரைட். ஐயாம் என்ஜாயிங் இட் மா" என்று குதூகலித்தான்.



அர்ஜூனுக்கோ, அவனது தூக்கம் மீண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. முன்பெல்லாம், காலை ஆறு மணிக்கு வரும் கல்லூரிப் பேருந்தைப் பிடிக்க ஐந்து மணிக்கே எழுந்து அரக்கப்பரக்க கிளம்பி, காலை உணவு என்ற பெயரில் எதையோ உண்டு, இரண்டு மணி நேர பயணத்தில் தூங்கி எழுந்து கல்லூரி செல்வான். மாலையிலும் இதே போன்ற ஒரு தூக்கம், நான்கு மணிக்கு முடியும் கல்லூரியிலிருந்து கிளம்பி சென்னை டிராஃபிக்கில் நீந்தி அவனது கல்லூரிப் பேருந்து கடைசி நிறுத்தத்தில் அவனை இறக்கி விடும் போது, இரவு எட்டு மணியைத் தொட்டிருக்கும்.



அதற்கு மேலும் ப்ராஜெக்ட் வொர்க், டிசைனிங் வொர்க், மாடல் மேக்கிங் என்று இரவு முழுவதும் விழித்திருந்து இரண்டு மணிக்கு மேல் உறங்கச் செல்பவன், பல நாட்கள் அப்போதே குளித்து விட்டு கல்லூரி செல்வதற்கான ஃபார்மல் உடையை அணிந்து கொண்டே படுத்து விடுவதும் உண்டு. மறுபடியும் ஐந்து மணிக்கு எழுந்து முகம் கழுவி, ஆங்காங்கே பரப்பி வைத்திருக்கும் சார்ட் பேப்பர்கள், மாடல்கள் என்று தேவையான அனைத்தையும் அள்ளிக் கொண்டு ஒரு ஓட்டம்.



இப்படி ஒரு நாளின் பாதி நேரத்தை பயணத்திலேயே கழிக்க வேண்டிய நிலைமையில் இருந்தான் அவன். பல நேரங்களில், அவனுடன் சேர்ந்து வசுதாவின் வேலைகளும் தூக்கமும் சேர்ந்தே கெட்டது. நாள் முழுவதும் கொடுக்கப்படும் வேலைகளுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல், அந்தந்த வகுப்பு முடிந்தவுடன் வசுதாவை வந்து சேரும். கல்லூரியில் இருந்து கிளம்பும் வரை அந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படும். அர்ஜூன் வீட்டை அடையும் முன் அவையெல்லாம் தயாராக இருந்தாக வேண்டும்.



சில நேரங்களில் கல்லூரி விடுதியில் இருக்கும் அர்ஜூனின் நண்பர்களும் தங்கள் தேவைகளை பட்டியல் இடுவதும் உண்டு. இப்படி பொருட்களை வாங்கித் தருவது போதாதென்று, மகனது ப்ராஜெக்ட் வொர்க்கில் சில பல எடுபிடி வேலைகளையும் அவள் பார்த்தாக வேண்டும். சில நேரங்களில் தனது ஐடியாக்களை அள்ளி வீச வேண்டும்.



"டேய்! நீ படிக்கிறியா, நான் படிக்கிறேனாடா? ஏன் டா என் உயிர வாங்கிற?" ஆரம்பத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த வசுதாவிற்குப் பொருட்களை வாங்குவது எளிதாக இருந்தாலும் அவனுடன் சேர்ந்து வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. ஏற்கனவே பல உபாதைகளுடன் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தவள், மாத்திரைகளின் உதவியை நாடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இப்போது மகனுக்கு நள்ளிரவு வரை உதவி செய்வதில் சீக்கிரமே மருத்துவரின் ஆலோசனை தேவை என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.



இதற்கிடையே உலகமயமாக்கல் என்ற அவளது அலுவலகக் கொள்கை, அவளது வேலையை இல்லாமல் செய்தது. உடல் நிலையைக் கருதிப் பல முறை விட நினைத்த வேலை தான். ஆனால் எதிர்பாராத விதமாக, "நாளை முதல் நீ வேலைக்கு வரத் தேவையில்லை" என்று முகத்தில் அடித்ததைத் தான் அவளால் தாங்க முடியாமல் போனது.



நாலைந்து வருடங்களுக்கு முன் அவளது தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால், அடிக்கடி பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அப்போது தொடங்கி, அதன் பின்னர் விஷ்ணுவுக்கும் அவளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் எந்த முடிவையும் காணாமல் பெரிய வாக்குவாதத்தில் தான் முடிந்திருக்கிறது.



"வசு! உனக்கு வீடு, வேலை இரண்டையும் மேனேஜ் பண்ண முடியலை. கொஞ்சம் பிரேக் எடுத்துட்டு, அப்புறமா வேணும்னா போ"



"ஹான்… என்னால மேனேஜ் பண்ண முடியலையா? இத்தனை நாளா யார் சார் பண்ணது?"



"அதில்லம்மா. நீ சொல்றது எல்லாமே கரெக்ட் தான். நீ தான் எல்லாம் செஞ்ச, நான் ஏதோ அணில் மாதிரி கொஞ்சமே கொஞ்சம் செய்யறேன் தானே. பசங்க கூட இப்போ ஹெல்ப் பண்றாங்கல்ல. உனக்கு கன்ட்டிநியூஸா உடம்பில ஏதாவது பிரச்சினை வந்துட்டே இருக்கு. வேலை வேலைன்னு போய் உடம்பை கவனிக்காமல் விட்டுட்டா கஷ்டம் இல்லையா?" உலகத்தின் ஒன்பதாவது அதிசயமாக விஷ்ணு பொறுமையாக விளக்க, வசுதா பொங்கி விட்டாள்.



"என் உடம்பை பத்தி இப்போ தான் தெரியுதா? இத்தனை நாளும் சக்கையாப் பிழிஞ்சிட்டு, ரொம்பத் தான் அக்கறை. வேலைக்கும் போயிட்டு வந்து இந்த வீட்டுல பாத்ரூம் க்ளீன் பண்றதுல இருந்து எல்லா வேலையும் நான் தான் பாத்துட்டு இருக்கேன். காய்கறில இருந்து உங்க எல்லாருக்கும் அன்டர் கார்மென்ட்ஸ்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் நான் தான் வாங்கிட்டு வரேன். ஏதாவது வாங்கிட்டு வாங்கனு சொன்னா சிம்பிளா, எனக்குத் தெரியாது நீயே வாங்கிட்டு வந்துடு ப்ளீஸ்னு சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டியாச்சு. உங்களுக்கு என்ன சார், ஆஃபீஸ்ல மட்டும் சாதனை பண்ணினா போதும். எனக்கு மட்டும் தானே வீட்டுலயும் தனி டார்கெட் இருக்கு"



"ம்ச்.. நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசற? நமக்கு பணத் தேவை இருந்ததால நீ வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தது. உனக்கே தெரியும், இப்போ நிலைமை அப்படி இல்லை. ஸோ, நீ வேலையை விட்டுவிட்டு வீட்டுல இரு"



"ஓ உங்களுக்கு பணத் தேவை இருந்தால் நான் வேலைக்கு போகணும். வேண்டாம்னு நீங்க சொல்லிட்டா உடனே ஆஹா நம்ம மேல என்ன அக்கறைன்னு நின்னுடணும். இந்த கண்டிஷன நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலையே. வேலைக்கு போகணும்னு மட்டும் தானே சொன்னீங்க?"



"வசுதா! என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பேச்சை விடவே மாட்டியா உன் நல்லதுக்குன்னு ஒண்ணு பேசினா அதையும் குதர்க்கமாக யோசிப்பியா? நீ வேலையை விடற, அவ்வளவு தான்"



"அப்படியெல்லாம் சட்டுனு விட்டுட முடியாது. பசங்களுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் ஆஃப் லிவ்விங்க செட் பண்ணி வச்சிருக்கோம். இப்போ திடீர்னு அதையெல்லாம் மாத்திட முடியாது. உங்க ஒருத்தர் சம்பளத்தில எல்லாமே செஞ்சிட முடியாது"



"என்ன பெரிய ஸ்டாண்டர்ட் ஆஃப் லிவ்விங். இப்படியே சொகுசா இருந்து பழகிட்டா அவங்க எப்போ கஷ்ட நஷ்டங்களை எல்லாம் தெரிஞ்சிக்கறது? அப்புறம்…இந்த ஸ்டாண்டர்ட் ஆஃப் லிவ்விங் எல்லாம் பசங்களுக்குப் பண்ணி வச்சிருக்கோமா… இல்லை…. உனக்கா?"



கரெக்டாகப் பாயின்ட்டைப் பிடித்தவனுக்குப் பதில் சொல்லத் துளியும் இஷ்டமில்லை அவளுக்கு.

இத்தனை நாளும், யாரது கையையும் எதிர்பாராக்காமல் தன் போக்கில் செலவு செய்து பழகி விட்டவளுக்கு, சட்டென்று எப்படி மாற்றிக் கொள்ள முடியும். அவளது வாழ்க்கை தி.மு. தி.பி. (அதாங்க.. திருமணத்திற்கு முன் & திருமணத்திற்கு பின்) என்று இரண்டு முற்றிலும் மாறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டது.



திருமணத்திற்கு முன்பு தனக்குச் செருப்பு வாங்குவதற்கு கூட கடைப் பக்கம் செல்லாதவள் அவள். சைஸ் பிராண்ட் டிசைன் எல்லாம் சொல்லி போதாதென்று பேப்பரில் காலை வரைந்து அனுப்புவாள்.

வேலை பார்க்க ஆரம்பித்த பிறகும் அதே கதை தான், சம்பளப் பணம் மொத்தமும் தாயின் கையில் கொடுத்து விட்டுத் தேவையான பொருட்களின் பட்டியலைத் தந்தையிடம் கொடுத்து விடுவாள்.

அந்த பழக்கம் திருமணத்திற்குப் பின் தலைகீழாக மாறிவிட்டது.



ஆரம்பத்தில் இவள் தந்தையிடம் செய்ததை, விஷ்ணு இவளிடம் செய்ய ஆரம்பித்தான் (இதில் கொடுமை என்னவென்றால் அவளது மாமனார் தன்னைக் காப்பாற்ற வந்த ரட்சகியாக அவளைக் கொண்டாடியது தான்) பின்னர் எல்லாம் டிஜிட்டல் மயம் என்றான பிறகு அவரவர் வருமானம் அவரவர் செலவு என்று மாறிவிட்டது. இதில் வசுதாவின் செலவுகளில் பெரும்பாலான வீட்டுச் செலவுகளும் அடக்கம். பற்றாக்குறை வரும் போது தான் விஷ்ணுவின் ஞாபகமே வரும். விஷ்ணுவும் இவளது பணக்கணக்கில் குறுக்கிட்டதே இல்லை எனலாம்.



வேலை போன போது அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். 'நினைச்ச நேரத்தில ஷாப்பிங், மண்டை காய்ஞ்சு போச்சுன்னு ஷாப்பிங், அந்த கல்யாணத்தில தனியாத் தெரியணும்னு புதுசா புடவை, அதுக்கு மேட்சிங்கா ஜூவல்லரி (அஃப்கோர்ஸ் இமிடேஷன் தான்) யூனிக்கா இருக்கணும்னு சத்யபால் பர்ஸ், சேரின்னு அனுபவிச்சேல்ல. சும்மாவா ஆடின, அதுக்கு வச்சான் பாரு பெரிசா ஒரு ஆப்பு' மனச்சாட்சி பளாரென்று அறைந்தது.



'நான் எனக்கு மட்டுமா வாங்கினேன். என்னைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் சேர்த்து தானே வாங்கறேன்' மனச்சாட்சியை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.



'அவங்க கேட்டாங்களா? நீயா உன் திருப்திக்கு செலவழிச்சிட்டு, இப்போ சமாதானப் படுத்தறயா' வெளியே இருக்கிற யாரை வேண்டுமானாலும் சமாதானப் படுத்திடலாம் போல, ஆனால் கூடவே இருக்கிற இந்த மனச்சாட்சியை சமாதானப் படுத்தறது... அப்பப்பா.. மனதுக்குள் பேசிக் கொண்டு இருந்தவள்



"நீங்க சொல்றது மாதிரி எனக்காகவே இருக்கட்டும். நான் தான் கைவீசி செலவழிக்கப் பழகிட்டேன்னே வச்சுக்குவோம். எனக்கு இனிமேல் மாத்திக்கிறது ரொம்ப கஷ்டம். எங்க ஆஃபீஸ் என் கிட்ட ஃப்ளக்சிபிலாத் தானே இருக்காங்க. எனக்குத் தேவையான லீவ் எல்லாம் கரெக்டா கிடைக்குதே. இப்போதைக்கு எனக்கு வேலையை விடற ஐடியா இல்லை, நீங்களும் அதைப் பத்தி அடிக்கடி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்று முடித்து விட்டாள்.



இப்படியாக வேலையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தவளை அதுவாகவே கழட்டி விட்டதில், அவளது நிலை இடி தாக்கியது போல இருந்தது. 'வேலை இல்லை, அதுவும் நாளை முதலே வேலை இல்லை' என்ற நினைப்பிலேயே உழன்றாள். அதன் பயனாக அவளது மூளையில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதில், பல வருடங்களுக்குப் பின் நரம்பியல் நிபுணரைக் காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டாள்.



பல கட்டங்களில் நடந்த பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னர் டாக்டரின் அரைமணி நேர அறிவுரையோடும், மடி கொள்ளா மருந்துகளோடும் வீடு வந்து சேர்ந்தாள்.



"மிஸஸ் வசுதா! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீங்க நல்ல ப்ரேவ் லேடி. எதையுமே பாஸிடிவா அப்ரோச் பண்ணுவீங்க. இப்போ என்ன ஆச்சு? உங்க நிலைமை புரியுது, இருபத்து நாலு மணி நேரமும் பிஸியா இருந்துட்டீங்க. இப்போ கொஞ்சம் இல்லை நிறையவே ரெஸ்ட் தேவை உங்க மூளைக்கு. நீங்களா எடுத்துக்காத ரெஸ்ட், தானா அமைஞ்சிருக்கு. சோ, மனசப் போட்டு குழப்பிக்காம என்ஜாய் பண்ணுங்க, ஓகே. மெடிசின்ஸ மறக்காம சாப்பிடுங்க, ஒரு மாசம் கழிச்சு திரும்ப பார்க்கலாம்



ஆண்களுக்கு ரிடையர்மென்ட் சமயத்தில ஒரு இன்செக்யூர் ஃபீலிங் வரும். இனிமேல் என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லை, என்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க, அடுத்தவங்களை நம்பி இருக்கணும் இது மாதிரி சொல்லிட்டே போகலாம்.



விஷ்ணு, உங்க மனைவிக்கும் கொஞ்ச நாள் அது மாதிரி தான் இருக்கும். கொஞ்சம் கேர்ஃபுல்லா கிராஸ் பண்ண வேண்டிய பீரியட். மனச ரிலாக்ஸா வச்சிட்டா ஈஸியா க்ராஸ் பண்ணிடலாம்"



இப்படிப் பல அறிவுரைகளுடன் அவளை "ஹவுஸ் வைஃப்" என்ற பதவியில் அமர்த்துமாறு மருத்துவரிடம் இருந்து பலத்த சிபாரிசு வழங்கப்பட்டதில், இனிமேல் வீட்டில் இருந்தால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மாத்திரைகளின் உதவியுடன் அமைதியாக இருந்தவள், அவளுடன் வேலை போன‌ மற்றவர் எல்லாம் அடுத்த வேலையைத் தேடிக்கொண்ட போது, வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி நின்றது.



"என்னங்க! எனக்கு வீட்டிலயே இருந்து ரொம்ப போர் அடிக்குது.‌ எதையாவது யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது. வேலை தேடறேனே ப்ளீஸ், பார்ட் டைம் மாதிரி கூட போதும்"



"பொழுது போறதுக்கு எதுக்கு வெளியே வேலை தேடிப் போகணும். வீட்டுல வேலையா இல்லை"



"ம்ச்.. நான் என்ன கேட்கிறேன். நீங்க என்ன பேசறீங்க?"



"அப்போ, ஏதாவது படி. உனக்குத்தான் படிக்கறதுன்னா உலகமே மறந்து போகுமே. நாலஞ்சு வருஷம் முன்னாடி கூட இப்படி ஸ்ட்ரெஸ் ரிலீஃவ்னு ஐஐஎம்ல ஏதோ கோர்ஸ் பண்ணியே, அது மாதிரி இப்பவும் படி. ஃபுல் டைம் பொழுது போயிடும், அதுவும் உருப்படியா"



"ஓ படிக்கலாமே, ஆனால் கன்னாபின்னான்னு செலவாகுமே"



"அதான் உன்னோட செட்டில்மென்ட் பணம் இருக்கே" ஆம், அவளது அலுவலகம் நிறைய பணம் கொடுத்து டாட்டா காட்டி இருந்தது.



"நோ சான்ஸ். அப்படியெல்லாம் அந்த பணத்தை காலி பண்ணிட முடியாது. வேற ஏதாவது ஆப்ஷன் கொடுங்க"



"சரி, உன் பணத்தைத் தொட வேண்டாம். நான் வேணும்னா உனக்கு ஃபீஸ் கட்டிடறேன்"



"நான் ஃபீஸ் கட்ட ஆப்ஷன் கேட்கலை. பொழுது போறதுக்கு கேட்டேன்"



"ஓ.. அதைத் தெளிவாத் தான் சொல்லித் தொலையேன்"



"உர்ர் …."



"ரொம்ப முறைக்காத, கண்ணு தெறிச்சு விழுந்துடப்போகுது. வேணும்னா வீட்டில இருந்த படியே ஸ்டாக் மார்க்கெட் மாதிரி எதையாவது பண்ணு. பொழுதும் போகும், உன் மூளைக்கும் நல்லா வேலை கொடுத்த மாதிரி இருக்கும், பைசாவும் சம்பாதிக்க முடியும். ஒரே கல்லுல பல மாங்காய்"



"ஸ்டாக் மார்க்கெட்டா!! அதைப் பத்தி எனக்கு ஏபிசிடி கூடத் தெரியாதே. அதுல போய் நான் என்ன செய்ய?"



"அதெல்லாம் தெரிஞ்சிக்கலாம். என் ஃப்ரண்டு ஒருத்தன் இதை ஃபுல் டைம் வேலையா பார்க்கிறான். இன்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன், அவன் கிட்ட கேட்டு கத்துக்கோ. நீ மெம்பர் ஆகிற ப்ரோக்கிங் கம்பெனியே ரிலேஷன்ஷிப் மேனேஜர்னு தனியா ஆளை அசைன் பண்ணும். அவங்க உனக்கேத்த மாதிரி ஐடியாஸ் கொடுப்பாங்க. இனிஷியல் இன்வெஸ்ட்மென்ட்டுக்காவது உனக்கு வந்த செட்டில்மென்ட் பணத்தை ‌தொடுவியா … இல்லை வேற ஏதாவது அரேன்ஜ்மென்ட் பண்ணனுமா?"



"ம்ம்.. பாக்கிறேன்"



"எகனாமிக்ஸ் டைம்ஸ் போடச் சொல்றேன். அதை ரெகுலரா படிச்சாலே நிறைய தெரிஞ்சிக்கலாம்"



"ஓகே"



அடுத்த நாளில் இருந்தே எகனாமிக்ஸ் டைம்ஸ் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பங்குச் சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். முதலில் சிறியதாக முதலீடு செய்தவள், அதற்கான பயிற்சியை வீட்டில் இருந்த படியே பெற்றதும் அடுத்த நிலைக்குச் சென்றாள். எதிர்காலத்திற்கான முதலீடு என்பது மாறி, தினசரி பங்குகளை வாங்க விற்க என்று தொடங்கினாள். படிப்படியாக மாத வருமானம் இவ்வளவு வந்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கக் தொடங்கினாள்.



இப்படி ஒரு நான்கு மாதங்கள் ஓடிப் போக, ஸ்டாக் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்கள் அவள் செய்த முதலீட்டைக் காலி செய்து கொண்டு இருந்தது. ஒரு நாள் மிகுந்த லாபகரமானதாக இருந்தால் அடுத்த நாளே முற்றிலும் வேறாக இருந்தது, சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைமை. 'அதானே! நமக்கெல்லாம் எதுவும் உட்கார்ந்த இடத்திலேயே அவ்வளவு ஈஸியா கிடைச்சிருமா என்ன?' தனக்குத் தானே ஒரு கொட்டு வைத்துக் கொண்டவளது சிந்தனை 'அடுத்தது என்ன?' என்று யோசிக்கத் தொடங்கி இருந்தது.



இந்நிலையில், அர்ஜூன் அடிக்கடி தலைவலி என்று துடிக்க, அவனது தூக்கம் கெடுவது நல்லதற்கல்ல என்று அறிவுரை வழங்கினார் மருத்துவர். என்ன தான் பேருந்தில் செல்லும் போது உறங்கினாலும் அவனது வயதிற்குக் குறைந்தது ஏழு மணி நேரமாவது இரவுத் தூக்கம் இருந்தாக வேண்டும் என்று வலியுறுத்தி, தலைவலி அடிக்கடி தொடர்ந்தால் அடுத்த கட்ட சோதனைகளைச் செய்ய வேண்டியது இருக்கும் என்றார்.



ஆனால் அவனது வேலைப் பளுவும் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இருந்த ஐம்பது கிலோமீட்டர் தொலைவும் அவனது தலைவலியை அதிகப்படுத்தியதே தவிர குறைப்பதற்கான வழிகள் ஏதும் தென்படவில்லை. மூளையில் செய்யப்பட்ட பல்வேறு பரிசோதனைகள் அவனது நரம்பு மண்டலம் சற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்பதை அப்பட்டமாக அறிவிக்க, அவனது பெற்றோர் நொந்து போனார்கள். மருந்துகளின் பிடியில் போன அர்ஜூன் வேலையும் செய்ய முடியாமல் தூக்கத்தைத் தவிர்க்கவும் முடியாமல் திணறிப் போனான்.



"மா! என் ஃப்ரண்ட்ஸ் சில பேர் காலேஜுக்கு பக்கத்திலேயே ஒரு பி.ஜில ஸ்டே பண்ணி இருக்காங்க. நம்மள மாதிரி சென்னைல தான் வீடு, பட் டிராவல் டைம் ஜாஸ்தியா இருக்கிறதால பி.ஜி. பாத்து இருக்காங்க. பேசாமல் நானும் அப்படி இருந்துக்கவா? வீக்கென்ட்ஸ்ல வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்" பெற்றோர் என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டு இருந்த வேளையில் அர்ஜூன் ஒரு வழி கண்டுபிடித்தான்.



"டேய்! சாப்பாட்டுக்கு என்ன செய்வ, மூணு வேளையும் வெளியே சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்? அப்புறம் இந்த ப்ராஜக்ட் வொர்க் அதுக்கு தேவையான திங்க்ஸ் இதுக்கெல்லாம் என்ன செய்வ? உங்க காலேஜ் பக்கத்தில கடையெல்லாம் கிடையாதுன்னு தானே ஹாஸ்டல் பசங்க எல்லாம் திங்க்ஸ உங்கள வாங்கிட்டு வரச் சொல்றாங்க. அதுவும் இல்லாம, உன்னோட ஹெல்த் கண்டிஷனுக்கு உன்னைத் தனியா எல்லாம் விட முடியாது" என்று வசுதாவும்,



"எதுக்கு, ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஊரச் சுத்தி உருப்படாமப் போறதுக்கா? அப்படி டிராவல் பண்றது கஷ்டமா இருந்தா, ஹாஸ்டல்ல சேர்த்து விடறேன். பி.ஜிக்கு போறேன்னு சொன்னதையே மறந்திடு" என்று விஷ்ணுவும் அவரவர் பாணியில் அதனை மறுத்துப் பேச இடையே,



"ஒரு பைக் வாங்கிக் கொடுத்திட்டா, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒன் ஷாட்ல தீர்வு கிடைச்சிடுமே, லைசென்ஸ் கூட வாங்கிட்டேன்" என்று அவன் முணுமுணுத்ததை இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு வாரம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைந்தான் அவன்.



அந்த ஒரு வாரமும் ஆழ்ந்த சிந்தனையிலயே இருந்த வசுதா, ஒரு தீர்வு கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சியில் தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள். ஆனால் அதை விஷ்ணுவிடம் சொன்ன போது, முதல் பாலிலேயே டக் அவுட் ஆன பேட்ஸ்மேனின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.