அத்தியாயம் – 6
அன்னையிடம் சொன்னதைப் போலவே அவருக்கு அழகான கைப்பை ஒன்றை தன் பிறந்த நாள் பரிசாக வாங்கிக் கொடுத்த கதிர், அவரை வேண்டிய இடத்தில இறக்கிவிட்டுவிட்டு, “முடிஞ்சதும் கூப்பிடுங்க. வரேன்” என பாலசரவணனுடன் கடற்கரைக்குச் சென்றான்.“பக்கத்துல இருக்கிற வீட்ல போய் யோசிக்கறதை விட்டுட்டு எதுக்குடா பீச்சுக்குப் போகணும்?” எனக் கேட்ட பாலசரவணனிடம், “குளிர்காத்துப் பட்டு சூடாயிருக்கிற மூளை ஒழுங்கா வேலை செய்யும்டா” என்றான் கதிர்.
“அது மூளை இருக்கறவங்களுக்குத் தானே?” என பாலசரவணன் நண்பனை வாரி, ‘எப்புடி?’ என ஓர் பார்வைப் பார்த்தான்.
‘நான் உன்னைப் பத்திப் பேசலைடா. என்னைப் பத்திச் சொன்னேன்” எனக் கதிர் சொல்ல, “எப்படி? எப்படி இப்படி வாய் பேசக் கத்து வச்சிருக்க?” என்றான் பாலசரவணன்.
“எல்லாம் ‘மேக்’ அப்படி. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். அந்தக் கீர்த்திகா எந்தக் காரணத்துக்காக உன்னை வேண்டாம்ன்னு சொன்னா.?” எனக் கதிர் கேட்க, “சொன்னா சிரிக்கக் கூடாது.” எனக் கதிரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு,
“என் கையெழுத்து அவ்வளவு கேவலமா இருந்ததாம்” என்றான் பாலசரவணன்.
“லெட்டர் எழுதிக் கொடுத்தியா?” என வியப்பாகக் கதிர் நண்பனைப் பார்க்க, “ம்ஹூம்” என இப்போது வானத்தைப் பார்த்தான் பாலசரவணன். மீண்டும் கடந்த காலத்தைச் சொல்கிறானாம்.
அதாவது பாலசரவணன் படிக்கும் காலத்தில் அவனுக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு புலமையில்லை. அதனால் படிப்பில் சற்று திணறினான். அதற்காக புத்திசாலி இல்லை என்று அர்த்தமில்லை.
கல்லூரியில் படித்த சமயத்தில், பரீட்சையின் போது நன்றாகப் படிக்கக் கூடிய அந்தக் கீர்த்திகாவைப் பார்த்து ‘பிட்’ அடித்திருக்கிறான். அந்தப் பெண்ணும் பாவமென விடைத்தாளைக் காட்டியிருக்கிறாள்.
ஆனால் ஆர்வக்கோளாறில் பாலசரவணன் தன் விடைத்தாளில் அந்தப் பெண்ணின் பெயரையும் சேர்த்து காப்பி அடித்திருக்கிறான். அதாவது ‘ஈ அடிச்சான் காப்பி.. அதனால் பேராசிரியரிடம் கீர்த்திகாவும் அகப்பட்டுக்கொண்டாள்.
அவர் சம்மந்தப்பட்ட இருவரையும் அழைத்து, “நீ காட்டின. இவன் காப்பி அடிச்சான். அதனால் மொத்த மார்க்கில் ஆளுக்குப் பாதி” என மதிப்பெண்களைப் பிரித்துக் கொடுத்து, விடைத்தாள்களை முகத்தில் விட்டெறிந்தார்.
நடந்ததைச் சொன்ன பாலசரவணன், “எப்படியோ நான் பாசாயிட்டேன். அவ பார்டர் மார்க் தான் வாங்கினா” என்றதும் கதிர் ‘கெக்கெக்கே பிக்கெக்கே’ எனச் சிரித்தான்.
“சிரிக்க மாட்டேன் என் உறுதிமொழி கொடுத்திருக்கிறே” என்றான் பாலசரவணன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.
“சோ. அப்போ பரிதாபத்தில் அவள் மேலே லவ் வந்துடுச்சா?” எனக் கேட்க, “எப்படிடா?” என்றான் பாலசரவணன்.
“தடுக்கி விழுந்து காப்பாத்தினாலே லவ் வர்றப்போ இப்படியெல்லாம் வராதா?” எனச் சொல்லி கதிர் மேலும் நகைத்தான்.
“ஆனால், ‘பிட்டைக் கூட ஒழுங்கா அடிக்கத் தெரியாத உனக்கெல்லாம் லவ்வா? முதல்ல ஒழுங்கா எழுத கத்துக்கோ. உன் கையெழுத்து சகிக்கலை. அடுத்து, இங்கிலீஷ் நல்லாக் கத்துக்கோ. இங்கிலீஷ் பேசத் தெரியாத நீயெல்லாம் எனக்கு செட் ஆக மாட்டே’ எனக் கேவலமா என்னைத் திட்டிட்டா” என்றான் பாலசரவணன்.
“இங்கிலீஷ் பேசினாத் தான் புத்திசாலியா? நீ எவ்வளவு நல்லா எல்லாப் பாடங்களையும் சொல்லித் தர” எனக் கதிர் கேட்க,
“அதான்டா. லவ் மேட்டரை விடு. நான் பிட் அடிச்ச விஷயத்தை எங்க குடியிருப்பில் சொன்னா என் இமேஜ் என்னவாகும்?” என்றான் பாலசரவணன்.
“உன் பெருமைக்கு எப்படியெல்லாம் கண்டம் வருது பாரு” எனக் கிண்டல் தொனியில் சொன்ன கதிர், “இப்போ அந்த கீர்த்திகா இருக்கிற வீடு யார்கிட்டே இருக்கு?” எனக் கேட்டான்.
“கீர்த்திகாவோட ஹஸ்பன்ட் பேர்ல.” என்ற பதிலில், “சுத்தம்” என முணுமுணுத்த கதிர், தன் தோள் பையிலிருந்து ஓர் கோக் பாட்டிலை எடுத்து வாயில் சரித்தவாறே, ‘கோக் குடிக்கிறியா?” என்றான் நண்பனிடம்.
அதே சமயத்தில், ‘மென்டோஸ்’ மிட்டாயை வாயில் போட்டுக் கொண்ட பாலசரவணன், “கோக் குடிக்காதன்னு சொன்னாக் கேட்கறியா? இந்த மென்டோஸ் மிட்டாயை கோக், இல்லை, பெப்சி பாட்டில்ல போட்டா, ஒரு எரிமலையே வெடிக்கும். என்னைக் க்ளோஸ் பண்ண வழி தேடுறியா?” என்றான் பாலசரவணன்.
“என்னடா சொல்லற?” எனக் கதிர் அதிசயம் காட்ட, “ஆமாம்டா, மென்டோஸ் மிட்டாயைச் சாப்பிட்டுட்டு கோக்கோ, பெப்சியோ குடிக்கிறது உடம்புக்கு நல்லதில்லை” என்றான் பாலசரவணன்.
“அப்படியா? அப்போ கோக்ல போட்டு சோதிச்சுப் பார்த்திட வேண்டியதுதான்” எனக் குதூகலமான கதிர், கையிலிருந்த பாட்டிலை அங்கே வைத்து, நண்பனிடமிருந்து மென்டோஸ் மிட்டாயைக் கேட்டான்.
கதிர், ‘எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு’ என்ற வள்ளுவரின் வரிகளை அச்சரம் பிசகாமல் கடைப்பிடிப்பவன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதனால், “உன்கிட்டே போய்ச் சொன்னேன் பாரு.” எனப் பாலசரவணன் தலையில் அடித்துக் கொண்டாலும், சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாய் பையிலிருந்து சிலவற்றை நண்பனின் கையில் கொடுத்தான்.
உடனே கதிரின் மூளை படுபயங்கரமாக வேலை செய்து, “கோக்ல போட்டா நிறைய பீய்ச்சி அடிக்குமா, இல்லை, பெப்சில போட்டா நிறைய எகிறுமா? பந்தயம் வைக்கலாம்” என்றான்.
“தூ. போட்டி வைக்கிறியா?” எனப் பாலசரவணன் துப்ப, “இப்போ பெப்சிக்கு எங்கேடா போறது?” என உரக்க யோசித்துக் கொண்டிருந்தான் கதிர்.
அப்போது அங்கே தனியாக மணலில் வீற்றிருந்த பெப்சி பாட்டிலைக் கண்ட கதிர், “அக்கடச் சூடு” எனப் பரபரப்பாக அதை நோக்கி ஓடினான். “டேய்.. அது யாருதுன்னு தெரியாது.. வேண்டாம்டா” எனப் பாலசரவணன் கதிரைப் பற்றி இழுத்தான்.
“இங்க யாரும் இல்லை.. வாடா. இது சுதந்திர நாடு” எனக் நண்பனின் கையை உதறிவிட்டு, அந்தப் பெப்சி பாட்டிலை நோக்கி நடந்தான் கதிர். (எதெதெற்கு எல்லாம் சுதந்திரத்தைக் கட்டி இழுப்பது என்ற விவஸ்தை வேண்டாம்?)
கோக் மற்றும் பெப்சி பாட்டில் ஒவ்வொன்றிலும் மூன்று மென்டோஸ் போட்டுவிட்டு கதிர் தள்ளி நிற்க, பாலசரவணன் சொன்னக் கூற்றின்படி இரண்டிலிருந்தும் நுரைத்து மேலெழும்பிப் பீய்ச்சி அடிக்க ஆரம்பித்தது.
கதிர், “ஹே” என ஆரவாரம் செய்ய, “ஓஹ் காட்” என்ற பெண்ணின் அலறல் கேட்டது. அதனால் கதிரும், பாலசரவணனும் திரும்பியதில் ‘பெப்சி’ வெற்றி பெற்றதா, இல்லை, ‘கோக்’ வெற்றி பெற்றதா எனக் கதிரால் சொல்ல முடியாமல் போனது.
இதுவரையில் பலவிதக் குளியல்களைப் பார்த்திருக்கிறாள் எழில்மலர். ஆனால் இப்படி ஓர் குளியலை அவள் எங்கும் பார்த்ததில்லை.
சுகந்தன் தன் நண்பர்களுடன் வருவதற்காகத் தாமதமாக, முன்னமே கடற்கரைக்கு வந்த எழில்மலர் சற்று நடக்கலாம் என சில எட்டுக்கள் எடுத்து வைத்திருப்பாள். தன்மேல் வந்து
‘ஜோ’வென தண்ணீர் அடித்ததில் சுனாமி வந்துவிட்டதோ என ஒரு கணம் திகைத்துவிட்டாள்.
ஆனால் எந்த ஊரில் இனிப்பாகச் சுனாமி வரும்? என மூளை வீறுகொண்டு எழ, என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்தாள்.
அங்கே கதிரைப் பார்த்தும், மனமெல்லாம் தித்திப்பாக, ‘இது சுனாமியே தான்’ என நினைத்துக் கொண்டு, “எதுக்கு சார், என்மேலே எதையோ கொட்டிக் கவிழ்த்தீங்க? என் ட்ரெஸ் பாழாயிடுச்சு” என அவனைத் தெரியாததைப் போல் போலியாக மிரட்டினாள் எழில்மலர்.
“ஹே. நீங்களா? எப்படி இருக்கீங்க?” என்றான் கதிர் அவளைப் பார்வையால் வருடியவாறே. கதரின் வாய் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது, கண்களும், மூளையும் எழில்மலரைப் பற்றிய ஆராய்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தது.
அன்று எழில்மலரைப் பார்த்த பொழுது சின்னப் பெண் போலே சுரிதார் அணிந்து துள்ளலாகத் திரிந்து கொண்டிருந்தாள். அதனால் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பாளோ என்று ஆரம்பத்தில் நினைத்தான் கதிர்.
ஆனாலும் சம்யுக்தா ‘நான் ஒரு ஜர்னலிஸ்ட்’ எனச் சொன்னதை வைத்துப் பார்த்தால் அவள் வயதை ஒத்தே தான் இவளும் இருப்பாள் என நினைத்துக் கொண்டான் கதிர். ஆனால் இன்று கஞ்சி போட்ட புடவை கட்டி மிகவும் மிடுக்காகத் தெரிந்தவளைப் பார்த்ததும் அவனுக்கு மூளையும் மனமும் கிறுகிறுத்துப் போனது.
அவளை ரசித்தவாறே அவன் பேசிக் கொண்டிருக்க, எழில்மலரோ கதிரைத் தெரிந்ததைப் போல் காட்டிக் கொள்ளாமல், “யார் நீங்க?” என்று புருவத்தைச் சுருக்கி வேண்டுமென்றே இழுத்தாள்.
“வாட்? ஞாபகம் இல்லையா? உங்க ஞாபக சக்தில தீயை வைக்க” எனக் கதிர் கண்களை விரித்துச் சொன்னதும், எழில்மலருக்கு உள்ளுக்குள் சிரிப்புக் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொண்டிருக்காமல், “என்னது தீயை வைக்கவா?” என முறைத்தாள். ஏதோ அவனைப் பார்த்து வழிவதைப் போல் ஆகிவிடக்கூடாது. அதுவும் சுகந்தன் எந்நேரமும் வரலாம்.
“இல்லை. உங்க ஞாபக சக்தியில் தீபம் ஏத்தி வைக்கன்னு சொல்ல வந்தேன். நாக்கு ட்ராக் மாறி ஓடிடுச்சு.” என்றான் கதிர்.
“ட்ராக் மாறி ஓட அது என்ன ரேசிலா போகுது?” எனக் கேட்டது பாலசரவணன்.
“யார் நீங்க?” என மீண்டும் எழில்மலர் கதிரிடம் கேட்க, அவளுக்குத் தன்னை ஞாபகமில்லை என்றதும், அவளுள் தான் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா என்று முதலில் சிணுங்கினான்.
ஆனால் அடுத்த கணமே, ‘பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னைப் பார்த்து அசந்து நிற்க, நீ என்ன பெரிய ஹீரோவா கதிர்? உன்னை நீயே விளம்பரப்படுத்திக்கணும். அதைச் செய்’ என மனதைத் தேற்றிக் கொண்டான்.
“யூ சீ. ஒன்ஸ் அப்பான் எ டைம். பெங்களூருவில் உங்களைப் பார்த்தேன்” எனக் கதிர் அவன் தோளில் வைத்திருந்த பையை எடுத்தான்.
‘ஐயோ. இவன் ஒரு சின்ன வார்த்தையையே பக்கம் பக்கமா சுத்துவானே? சுகந்தன் வந்தான்னா டேஞ்சர்’ எனப் பதறிய எழில்மலர், கதிர் தோளிலிருந்த பையைப் பார்த்ததும், “உங்க கவசக் குண்டலத்தை விடறதா இல்லையா?” என்றாள்.
“இப்போ ஞாபகம் வந்துடுச்சா? பாருங்க. இதுக்காகத் தான் இதைக் கையோடு வச்சுட்டு சுத்தறேன்” என்றான் கதிர் பெருமையாக.
“அப்போ ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடிச்சதை மனசுல வச்சுட்டு பழி வாங்க என்மேலே எதை அடிச்சீங்க?” என்றாள் எழில்மலர்.
“ம்ஹூம். நான் அப்படியெல்லாம் பழி வாங்கற கோஷ்டியில்லை. என்னை வில்லன் ரேஞ்சுக்கு நினைக்கக் கூடாது. ரொம்பவும் வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு ஹீரோ ரேஞ்சுக்காவது யோசிங்க.. இவனைப் பெங்களூரில் பார்த்திருப்பீங்களே” எனப் பாலசரவணனைச சுட்டிக் காட்டிய கதிர்,
“ஆனா, என்னையே ஞாபகம் இல்லாதப்போ இவனை எப்படி ஞாபகம் இருக்கும்?” என்றான்.
“இப்போ அவங்க அதைச் சொன்னாங்களா?” என பாலசரவணன் நண்பனைப் பார்த்துப் பல்லைக் கடிக்க, “இருடா. உண்மையை விளக்கணும். இல்லை, நம்மை சரித்திரம் தப்பாப் பேசும்” என்றான் கதிர்.
பின்னர் எழில்மலரிடம் திரும்பி, மென்டோஸ் மிட்டாயைக் கோக்கில் போடுவதைப் பற்றிச் சொன்னவன், “பாலசரவணனுக்குப் புரிய வைக்க செயல்முறை விளக்கம் தந்தேன். அதுல நீங்க வந்து சிக்கி டென்சனாயிட்டீங்க.” என்றான் கதிர்.
“என்னது எனக்குச் செயல்முறை விளக்கமா?” என்ற பாலசரவணனின் குரல் அலைகளுடன் அமுங்கிப் போக,
“குட். இதையெல்லாம் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கறவங்களைப் பார்த்தா எனக்கு எரிச்சல் வரும். கொஞ்சம் கூட உடம்பைப் பத்தி அக்கறை இல்லாதவங்க. உங்க நண்பனுக்கு எடுத்துச் சொல்லுங்க” என்றாள் எழில்மலர்.
“என்னது?” என பாலசரவணன் கதிரை முறைக்க, “கண்டிப்பா. தோழன்டா” என பாலசரவணனின் தோளில் கைப்போட்டுக் கொண்டான்.
அதற்குள் எழில்மலரின் கைப்பேசி அலற, சுகந்தன் என்ற பெயரைப் பார்த்தும், “நான் கிளம்பறேன்.. நேரமாகுது” என அங்கிருந்து விடுவிடுவென்று நகர்ந்தாள். சுகந்தன் பார்த்தால் என்ன ஏது என்று குடைந்துவிடுவான். முதலில் தான் தெளிவாக இருப்போம் என்ற எண்ணத்தில் தான் அப்படி ஓடினாள் எழில்மலர்.
அவள் நகர்ந்ததும், “என்னடா நடந்தது இப்போ?” என பாலசரவணன் கதிரை முறைக்க, “என்ன நடந்தது? ஒண்ணுமில்லையே” என்றான் கதிர்.
“எப்படிடா ஒண்ணுமே நடக்காத மாதிரி உன்னால் பிட்டு போட முடியுது?” எனக் கேட்ட பாலசரவணன், “ஆனாலும் அந்த விஷயத்தில் உன்னைப் பாராட்டியே ஆகணும்” என்றான் மெச்சுதலாக.
“என் விஷயத்தை விடுடா. இப்போ உன் விஷயம் யோசிக்கலாம். ஞாபகமிருக்கட்டும். கீர்த்திகா விஷயத்தில் நான் எது செஞ்சாலும் வாயைத் திறக்க மாட்டேன் என வாக்குக் கொடுத்திருக்க.” என அவனைத் திசைத் திருப்பினான் கதிர்.
****வேலையிடத்தில் தவறி விழுந்த பெண்ணை கடமையே என்று ஏதோ ஓர் மருத்துவமனையில் சேர்க்காமல், ஓர் பிரபல மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்கு உண்டான செலவனைத்தையும் ஏற்றுக் கொண்டான் சக்தி.
அந்தப் பெண்ணிற்குக் கையில் மட்டும் எலும்பு முறிவு. மற்றபடி உயிருக்கு எந்தப் பாதிப்புமில்லை என்றதில் நிம்மதியான சக்தி, தன் தொழிலாளர்களை அழைத்து விபரத்தைப் பகிர்ந்து கொண்டான்.
சக்தியின் அணுசரணையான மற்றுமொரு முகத்தைப் பார்த்த தொழிலாளர்கள், ‘இவனால் இப்படியெல்லாம் பேச முடியுமா? பார்க்கத் தான் இப்படி இருக்கிறான். ஆனால் இவனுக்கு நல்ல மனசு தான்’ என அவனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.
அனைத்து வேலையையும் முடித்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேதி குறித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகையில் மாலை ஏழு மணியாகிவிட்டது சக்திக்கு. அப்போது அவன் வக்கீலிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார். சாரி. உங்களை மீட் பண்ணறேன்னு சொல்லி மறந்து போயிட்டேன். இங்க ஒரு சின்னப் பிரச்சனை” என நடந்ததை விவரித்தவன், “ஃபோன்ல வேற சார்ஜ் இல்லை.. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்” என்றான்.
“இட்ஸ் ஓகே. பெரிசா ஒண்ணுமில்லைப்பா. நம்ம கேஸுக்கு எதிரா, புதுசா வந்த சின்னப் பொண்ணு தான் இனி வாதாடப்போகுதாம். ஒரு கேஸு ஜெயிச்சிருக்கு. அதனால் பெருசா எந்த அனுபவமுமில்லை. அதனால் கவலையேவேண்டாம். அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்” என்றார் எதிர்முனையில் இருந்த அவன் வக்கீல்.
“நாம ஜெயிச்சிடுவோம் என எனக்கு நம்பிக்கை இருக்கு சார்.” எனச் சொன்ன சக்தி, வக்கீலுக்கே நம்பிக்கை விதைத்தானோ, இல்லை, அவனுக்கேவா?
“கண்டிப்பா. கண்டிப்பா. அடுத்த வாரம் இறுதித் தீர்ப்பு வருது. மறந்துடாத. அப்போப் பார்க்கலாம்” என வக்கீல் அழைப்பை வைக்க, சக்தி குளிக்கச் சென்றான்.
ஏழு வருடங்களுக்கு முன்னால், படிப்பு முடிந்ததும், சக்தி அவன் நண்பன் தினேஷின் தந்தை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். நண்பன் என்று சொல்லிக் கொண்டவன், ‘சக்தி, அப்பாக்கு ஹெல்ப்பா இருடா.’ என வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்கப் போகும் சமயத்தில் அவனிடம் கேட்டுக் கொள்ள, இவனும் சம்மதித்தான்.
சக்தி சேர்ந்தபொழுது அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டுவதில் முனைந்திருந்தது அந்நிறுவனம். சக்தி சேர்ந்து முதன் முதலில் கட்டியது அதைத் தான். வீடு நல்ல முறையில் முடிவடைந்து, கிரகப்பிரவேசமும் இனிதாக நடந்தேறியது. அதிலிருந்த ஐம்பது வீடுகளில் ஓர் வீட்டின் மேற்கூரை மட்டும், ஓர் இடத்தில் பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பொடியன் கதிர் கூட, ‘என்ன காக்காக்கு டாய்லெட் கட்டினீங்களா?’ என அன்று கிண்டலடித்தானே.
சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர், நிறுவனத்துடன் பிரச்சனை செய்ய, ‘நஷ்டஈடு தருகிறோம்” எனப் பேசி அவரை அமைதிப்படுத்திவிட்டனர்.
பிரச்சனை அத்துடன் முடிந்தது என நிம்மதியாக இருந்தான் சக்தி. ஆனால் எல்லாம் அவன் அந்த நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து தனித்துச் செயல்படும் வரையில் தான்.
நண்பன் வந்துவிட்டானே என்று தனித்து வந்து ஓர் நிறுவனத்தை சக்தி நிறுவ, தங்களிடம் தொழில் கற்றுக் கொண்டு அவன் தனித்து முன்னேறுவதா என இவன் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியில், மேற்கூரை இடிந்து விழுந்த அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரை உசுப்பிவிட்டு, சக்தி மேலே வழக்குப் போட வைத்தனர்.
அந்நிறுவனமே சக்தி மேலே வழக்குத் தொடர்ந்தால் அந்நிறுவனத்தின் பெயர் கெடும் என்ற காரணத்தால் வீட்டின் உரிமையாளரை உசுப்பிவிட்டிருக்கிறார்கள் என எண்ணிக் கொண்டான் சக்தி.
‘எஞ்சினீயராக அவன் பொறுப்பில் இருந்த பொழுது கவனக்குறைவாகச் செயல்பட்டான். கூரை விழுந்து உயிருக்கு ஏதவது சேதமாகியிருந்தால்?
அதை நினைத்து அவரும், அவர் குடும்பமும் மனவுளைச்சலால் அவதிப்படுவதற்குச் சக்தி காரணமாகிவிட்டதனால் அவன் நஷ்டஈடு வழங்கவேண்டும்’ என்று மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுத் தாக்கல் செய்திருந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.
எல்லாம் அவன் பெயரை களங்கப்படுத்தவே என்ற எண்ணத்தில் கட்டுமான நிறுவனம் தான் இதற்கு முழுப்பொறுப்பு என்று சக்தி எதிர்த்து வாதாட, அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் உருண்டுவிட்டன. அந்த வழக்கின் இறுதிகட்டத் தீர்ப்பு அடுத்து வாரம் வருகிறது.
குளித்துவிட்டு அறைக்குள் சக்தி வர, அவனது அலைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. “நந்தா சொல்லுடா” எனச் சக்தி சொன்ன பிறகே அவன் ஏன் அழைத்தான் என்று புரிந்தது.
“சாரிடா நந்தா. ஒரு சின்னப் பிரச்சனை. இதோ இப்போ கிளம்பி வந்துட்டே இருக்கிறேன்” என்றான் சக்தி.
அவன் நண்பன் நந்தகுமாரின் மகனுக்கும் அன்று முதல் பிறந்தநாள். இவன் ஏன் அந்தக் கடன்காரன் கதிர் பிறந்த அன்று பிறந்தான்? எனச் சக்தி பலமுறை எண்ணியதுண்டு. அதெல்லாம் யார் கைகளிலும் இல்லை என்று தெரிந்தும், கதிரை ஞாபகப்படுத்துவதால் இப்படி எழும் சிந்தனையை அவனால் தடுக்க இயலவில்லை.
ஓர் பிரபல நட்சத்திர ‘ஹோட்டலி’லே விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான் நந்தகுமார். ஆனால் நடந்த அமளி துமளியில் அதைப் பற்றிய நினைவேயில்லாமல் இருந்துவிட்டான் சக்தி.
“நீ மட்டும் தனியா வராத. வீட்ல கூட்டிட்டு வாடா” என நந்தகுமார் சொல்ல, “நான் மட்டும் வர்றேன்.. உனக்குத் தான் மதியோட நிலைமை தெரியுமே. அதனால் அம்மாவும் இப்போ வெளியில் வர்றதில்லை” என்றான் சக்தி சோகமே உருவாக.
“என்ன நிலைமை? நீ இப்படிச் சொல்லிச், சொல்லியே மதியை ஒரு வழிப் பண்ணிடுவ. ஒண்ணு அவளைக் கண்டபடி திட்டு, இல்லை, இப்படிப் பொத்தி வை. நார்மலா இருக்க மாட்டியா? என்னமோ பண்ணித்தொலை” எனக் கோபமாக அழைப்பை வைத்துவிட்டான் நந்தகுமார்.
‘போங்கடா. உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தாத் தான் எங்க கஷ்டம் தெரியும்’ என முணுமுணுத்த சக்தி, கிளம்புவதற்கு ஆயத்தமானான்.
சக்திக்கு எப்பொழுதும் அவன் கவலை, அவன் கஷ்டம் என்று அதிலேயே உழன்று கொண்டிருக்க மிகவும் பிடிக்கும். அப்படி இருந்தால் அதற்கு ஓர் தீர்வு கிடைக்கும் என்று யாராவது சொல்லி இருப்பர்களோ என்னவோ?
நந்தகுமாரிடம் சொன்னதைப் போல, சக்தி மட்டுமே விழாவுக்குச் சற்றுநேரம் கழித்து போய்ச் சேர்ந்தான். நேவி ப்ளூ பேண்ட்டுக்கு, கனக்கச்சிதமாக நீல வானின் நிறமுள்ள சட்டையணிந்து பார்க்க மிகவுமே நன்றாக இருந்தான்.
சிரித்தால் இன்னும் பிரமாதப்படுத்தியிருக்கலாம். ஆனால், எங்கே சிரித்தால் அவன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டதோ என்று மற்றவர்கள் எண்ணக்கூடும் அபாயம் இருப்பதால் சிரிப்பை முக்குச் சந்தில் உள்ள அடகு கடையில் வைத்துவிட்டு வந்திருந்தான்.
வரவேற்பறையில், நந்தகுமாரின் மகன், ‘ஆர்யன்’ என்ற பெயரை பூக்களால் அலங்கரித்து வைத்திருந்ததனர். அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில்லாமல், பரிசுப் பெட்டியை கையில் ஏந்தியவாறு ‘டக் டக்’கென்று என்று நடந்து சென்றான் சக்தி.
விழா நடக்கும் அறைக்குச் செல்ல சக்தி வலதுபுறம் திரும்ப, அதே சமயத்தில் எதிரே வந்த ஓர் பெண் இடது புறம் திரும்ப, சக்தியின் மேல் ‘டமாலெ’ன்று மோதினாள்.
எதிரே வந்தவள் சற்று நிதானமாக வந்திருந்தால் அந்த மோதலை எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒலிம்பிக்ஸில் ஓடிவருவதைப் போலல்லவா வந்தாள் எனச் சக்திக்கு எரிச்சல் வர, மோதியவளை தாங்கிப் பிடிக்காமல், அவளைப் பிடித்து தனக்கு எதிர்புறம் தள்ளிவிட்டான்.
(நீயெல்லாம் தேற மாட்டே.. மோதியவளைத் தாங்கிப் பிடிச்சிருந்தா இந்நேரம் அப்படி இப்படின்னு பெரிய ரொமான்ஸ் நடந்திருக்கும். உனக்கு நேரம் சரியில்லடா ராசா.)
சக்தி அப்படித் தள்ளியதும், அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டாள். சக்தி, அப்பொழுது தான் கவனித்தான். அவன் கையிலிருந்த பரிசுப் பெட்டியில் எதையோ கொட்டிக் கவிழ்த்திருந்தாள் அந்தப் பெண். கூடவே, நீலவானின் வண்ணச் சட்டையையும் வெட்கப்பட வைத்திருந்தாள்.
எல்லாம் அவள் கையிலிருந்த பழரசம் தான் சக்தியின் சட்டையில் கவிழ்ந்து, அந்திவானின் நிறத்தை ஆங்காங்கே பூசச் செய்திருந்தது. சக்திக்குச் சுறுசுறுவென்று கோபம் தலைக்கேறியது.
அதே சமயத்தில் வெளியில் வந்த நந்தகுமார் சக்தியின் கோலத்தையும், விழுந்திருந்த பெண்ணையும் பார்த்ததும் நடந்ததை ஊகித்துவிட்டான். ‘இவன் மகுடியில்லாமலேயே படம் எடுப்பானே. பாவம் இந்தப் பொண்ணு..’ என எண்ணிக் கொண்டான்.
கீழே விழுந்த பெண்ணோ, வாயை ஆங்கில எழுத்து ‘ஓ’ வடிவில், திறந்து வைத்துக் கொண்டு, முகமெல்லாம் சிவப்பேறிப் போய், கண்கள் கலங்கி, கையிலிருந்த காலியான பழரசக் கோப்பையைத் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கண்ணு எங்கே இருக்கு?” எனச் சக்தி அவளைத் திட்ட, “டேய் சக்தி, விடுடா.. பாவம் தெரியாமல் நடந்திருக்கும். கழுவிக்கலாம்டா” எனச் சக்தியின் கையிலிருந்த பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டான் நந்தகுமார்.
கீழே விழுந்திருந்த பெண்ணோ, “மே.. ப.. மே. ப” எனப் பேச முடியாமல் திக்கவும், சக்தி திகைத்து நின்றுவிட்டான்.
‘ச்சே.. இப்படி வாய் பேச முடியாத பெண்ணிடம் போய் கோபப்பட்டு விட்டோமே’ என கூசிக் குறுகியவன்,
“டேய் நந்தா.. வாய் பேச முடியாதவங்க போல. நீங்க போங்க” என அந்தப் பெண்ணுக்குக் கையைக் கொடுத்து தூக்கிவிட்ட சக்தி, “நான் போய் கழுவிட்டு வரேன்டா” என்றான் நண்பனிடம்.
மீண்டும் அந்தப் பெண், “இல். மே. ப. மே. ப.. ப.” என ஏதோ சொல்ல வரவும், “இட்ஸ். ஓ.கே. தெரியாமல் நடந்திருக்கும்” எனச் சக்தி கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடினான்.
ஆம். ஓடினான் தான். இப்படி ஓர் பெண்ணைத் தள்ளிவிட்டோமே என்ற குற்றமனப்பான்மையில் தவித்துக் கொண்டிருந்தவன், அவள் முன்னால் நிற்கப் பிரியப்படவில்லை.
அங்கே ஒரு போர்க்களத்தை எதிர்பார்த்திருந்தால், அந்தப் பெண்ணின் நிலையுணர்ந்து, ‘பூ ஒன்று புயலானது’ என்ற ரீதியில் பேசாமல் போய் விட்டானே சக்தி என நந்தகுமாருக்கு அப்பொழுது தான் நிம்மதியானது.
அங்கிருந்த பெண்ணைப் பார்க்க, “ஹே. இங்க நின்னுட்டு என்னப் பண்ணற? போ. போய் சீக்கிரம் கழுவு” என அவளைத் தேடிக் கொண்டு ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான்.
அதே சமயத்தில், அவன் ஒரு வயது மகன், ‘அப்பா.’ என அழைத்துக் கொண்டு வர, இனி இது அவர்கள் பிரச்சனை என நந்தகுமாரும் உள்ளே சென்றுவிட்டான்.
“சாரி. என்னால் தான் இப்படி” என அந்த இளைஞன் சொல்ல, அந்தப் பெண், கீழே சிந்தியிருந்த பழரசத்தைச் சுட்டிக் காட்டினாள்.
“நான் பார்த்துக்கறேன். நீ முதல்ல போய் கழுவிட்டு வா” என அவளை விரட்டினான். விட்டால் போதும் என அந்தப் பெண்ணும் அங்கிருந்து ஓடியே போனாள்.
அங்கிருந்த ரெஸ்ட்ரூமுக்குச் சென்ற சக்திக்கு அந்தப் பெண்ணின் முகமே கண்ணில் நிறைந்திருந்தது.
‘எத்தனை அழகான முகம்? அதுவும் அந்த விழிகள் எதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருந்தனவே” என யோசித்துக் கொண்டிருந்தவன், ‘ச்சே.. நின்று அவள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். பாவம். அந்தப் பெண்ணுக்கு நினைத்ததை வார்த்தை வழியாகச் சொல்ல முடியாத குறையா?’ எனப் பரிதாபம் கொண்டான்.
உடையைக் கழுவினானோ இல்லையோ, அந்தப் பெண்ணின் முகமே அவன் எண்ணம் யாவும் நிறைந்திருந்தது. விழா நடக்கும் இடத்துக்கு வரும் பொழுது அவளை மீண்டும் பார்ப்போமா எனப் பார்வையை அங்கே சுழலவிட்டான் சக்தி.
ஆட்கள் பலரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் அவள் தடம் மட்டும் கண்ணில் பதியவில்லை. பக்கத்துக் கூடத்திலிருந்து, ‘யேஹ்’ என்ற ஆரவாரத்தைத் தொடர்ந்து பலத்த கரகோஷம் மட்டுமே கேட்டது.
நந்தகுமார் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போல் மேலும் பல விழாக்கள் அங்கிருந்த மற்ற கூடங்களில் நடந்து கொண்டிருந்தது. பிறந்தநாள் விழாவுக்கு உள்ளே சென்ற சக்திக்கு, அத்தோடு அவளின் நினைவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
Author: Lavans
Article Title: அத்தியாயம் - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.