• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அத்தியாயம் -6

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் – 6

மதுரை சொர்க்க வாசல் அரண்மனை. மன்னர் திருமலை நாயக்கர் படுக்கையில் கிடந்தார். சில மாதங்களாகவே அவரது உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயனாபடுத்தி மதுரையைக் கைப்பற்ற அவரது எதிரிகள் திட்டம் வகுத்தார்கள்.

மைசூரில் இருந்து மாபெரும் கன்னடப் படை ஒன்று தளபதி கொம்பையா தலைமையில் மதுரை நோக்கி வருவதாக உளவுத்துறை செய்தி சொன்னது.

சடைக்கன் சேதுபதியின் காலத்தில் மதுரைப் படை, சேது நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது. இராமேஸ்வரத்தில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்த போது மைசூர் சாம்ராஜ உடையாரின் படைகள் மதுரை மீது படையெடுத்தன. தளபதி இராமப்பையனின் தலைமையில் வடக்கே சென்ற நாயக்கர் படை மைசூர் படையைத் தோற்கடித்து ஸ்ரீரங்கபட்டினம் வரை சென்று விரட்டி அடித்தது.

அதன் பின்னர் விஜயநகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில், மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி பகுதிகளை ஆண்ட நாயக்க மன்னர்களின் கூட்டுப் படைக்கும் விஜயநகரம் மற்றும் மைசூர் அரசின் கூட்டுப் படைக்கும் இடையே நடந்த போரிலும் மைசூர் அரசு வீழ்த்தப்பட்டது.

அந்தத் தோல்விகளுக்குப் பழி வாங்கும் விதமாக மைசூர் அரசர் நரசராஜன் காந்தீரவன், மதுரை நாயக்கர் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்தார்.

மைசூர் அரசரின் தளபதி கொம்பையாவின் தலைமையில் கன்னட வடுகப் படையினர், திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துக்குள் புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில் தாக்கப்பட்டவர்களின் மூக்குகள் மேல் உதட்டுடன் சேர்த்துக் கொடூரமாக அறுக்கப்பட்டு, பின்னர் அவை சாக்குப் பையில் குவிக்கப்பட்டு, மைசூர் அரசரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.

போரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறான். மூக்குகள் மேலுதடுடன் சேர்த்து அறுக்கப்பட்டு சாக்கில் போடப்பட்டு அரசரின் பார்வைக்கு அனுப்பட்டது. அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் வைத்திருந்தனர்.

கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ் மண்ணில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர். இதையடுத்து தொடர்ச்சியாக பல ஊர்களை தாக்கி திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை. இச்செய்தி அறிந்ததும், கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுக்க நினைத்தார் திருமலை நாயக்கர். ஆனால் அவரோ படுக்கையில் இருக்கிறார், தளபதி இராமப்பையனும் காலமாகி விட்டார். அவரது தமையன் தான் தற்போதைய தளபதி என்றாலும் பெரும் படையை எதிர்த்து நின்று போரிடுவானா என்பது சந்தேகம் தான்.

மறவர் சீமையின் வலிமையை உடைக்கும் விதமாகத் தான் அங்கே இருந்த அரசியலில் தலையிட்டு மூன்றாகப் பிரித்தார் திருமலை நாயக்கர். அவரது உள்ளக் கிடக்கையை காலம் மாற்றி எழுதி விட்டது. ரகுநாத சேதுபதியின் கீழ் சேது நாடு மிகுந்த வல்லமையுடன் விளங்கியது.

இப்பொழுது திருமலை நாயக்கரின் சிங்காசனத்திற்கு பேராபத்து எழுந்துள்ளது. நாயக்கப் பேரரசின் கீழ் எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள் இருந்தனர். அவர்களில் வலிமையான ஒருவரைப் படைத் தலைமை ஏற்கும்படி செய்து கன்னடப் படைகளுடன் போரிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கலாம்.

திருமலை நாயக்கரின் சுய சாதிக்காரர்களான நாயக்கர், அவரைப் போலவே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தார், ரெட்டியார் என அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் இருக்கிறார் அல்லவா. அவர்களில் ஒருவருக்கு கன்னடப் படையுடன் மோதும் பொறுப்பைக் கொடுக்கலாமே.

இது போன்ற பல்வேறு வழிகளை யோசித்தார் திருமலை நாயக்கர். பாளையக்காரரிடம் திறமை இருக்கலாம், கன்னடப் படையுடன் போரிட்டு வீழ்த்தும் ஆண்மை இருக்கிறதா? அப்படி இருந்தாலும் நாளை போரில் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் திருமலை நாயக்கரிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்வார்களா? வெற்றிக் களிப்பில் தங்களையே மதுரை மன்னராக அறிவித்துவிட்டால்…

இவ்வாறு யோசித்துக் கடைசியாக நம்பிக்கைக்கு உரியவராக திருமலை சேதுபதி மன்னரிடம் உதவி கேட்பது என்ற முடிவுக்கு வந்தார் திருமலை நாயக்கர். தனது சார்பில் சேதுபதிக்கு ஓலை அனுப்புமாறு ராணியைப் பணித்தார்.

********

சேதுபதி மன்னர் காலை உணவை முடித்துக் கொண்டு அரண்மனையின் முற்றத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அரண்மனை தோட்டத்தில் மயில்களும் மான்களும் ஆங்காங்கே துள்ளி குதித்து காலை வேளையை குதூகலமாக்கிக் கொண்டிருந்தன. வண்ணமயமான, வாசனை மிகுந்த பூக்கள் மனதிற்கு உற்சாகம் தருவதாக இருந்தன. மன்னரது மனம் ஒரு வித ஏகாந்தத்தை உணர்ந்தது.

‘தன்னால் இயன்ற வரை சேது நாட்டின் எல்லைகளை விரிவாக்கம் செய்தாயிற்று. செம்பிநாட்டு மறவர்களது பூர்வீகப் பகுதியான சோழ மண்டலத்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியினையும் சேதுநாட்டுடன் இணைத்தாயிற்று . மறவர் சீமையின் வட கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தியாயிற்று. இதற்கு மேல் போர் செய்வது உசிதமல்ல. தமிழ் மண்ணில் ஒரு வலிமையான அரசாக மறவர் சீமையை உருவாக்கி ஆயிற்று. இனிமேல் தமது குடிமக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டார்.

அதற்காக ஒரு எதிரிகள் தாக்குதல் நடத்தும் போது எதிர்த்துப் போர் புரிய மாட்டேன் என்று ஒதுங்கி நிற்கும் குலத்தில் அவர் பிறக்கவில்லை. தானாக எந்தப் போரையும் முன்னெடுத்துச் செல்ல அவருக்கு விருப்பம் இல்லை.

அவரது தற்போதைய கவலைகள் எல்லாம் உள்நாட்டில் நிலவும் சில கலகப் பேச்சுகள் தான். தன்னைக் கொல்ல நினைக்கும் பகைவர் யார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரது பகைவர்களும் மிகவும் திறமையானவர்களாக இருந்தார்கள்.

“மன்னருக்கு வணக்கம்! மதுரையில் இருந்து அவசரச் செய்தியுடன் ஒருவர் வந்துள்ளார்.” அரண்மனை காவலாளி அவசரமாகச் சொன்னார். மன்னரின் உத்தரவு பெற்று மதுரைத் தூதுவரை உள்ளே அழைத்து வந்தார் காவலாளி.

“சேதுபதி மன்னருக்கு வணக்கம். இந்த ஓலையைத் தங்களின் நேரடியாகச் சேர்ப்பிக்கும்படி மகாராணியாரது உத்தரவு” என்று ஓலையைப் பணிவோடு மன்னரின் முன்பு நீட்டினார்.

அதனை எடுத்துப் படித்த ரகுநாத சேதுபதியின் முகம் யோசனையைத் தாங்கி நின்றது. “தூதுவரே! விருந்தினர் விடுதியில் சற்று இளைப்பாறிக் கொண்டிரும். ஓலைக்கான பதிலை சில நாழிகைகளில் கொடுத்து விடுகிறோம்” என்றார் சேதுபதி மன்னர்.

திருமலை நாயக்கரின் தொடக்க காலத்தில் தன் முன்னோருடன் போர் நடந்த போதிலும், ஒரு சுமுகமான நிலைமை இரு நாட்டிற்கும் இல்லாத போதிலும் மதுரை சீமையின் பொது மக்கள் தாக்கப்படப்போகும் அபாயத்தையும், விஜய நகர அரசோ மைசூர் அரசோ மதுரையில் நிலைபெற்றால் அவர்களுடன் பெரும் போர் நடந்த வேண்டி இருக்கும் என்பதையும் சேதுபதி ரகுநாத தேவர் உணர்ந்து இருந்தார். அதனால் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்.

பிரதானியிடம் தனது முடிவு குறித்து விவாதித்தார். கோட்டைத் தளபதியை வரவழைத்து விவாதித்தார். பிறகு தன் முடிவைச் செயல்படுத்த விழைந்தார்.

“மதுரை மன்னருக்கு நாம் உதவலாம்‌ என்றே நினைக்கிறேன்‌. எவ்வளவு வீரர்களைத்‌ திரட்டலாம்‌?”

"கன்னடியர்கள்‌ ஏற்கனவே இருமுறை மதுரை மீது படை யெடுத்து தோல்வி அடைந்தனர்‌. இம்முறை கூடுதலான படையுடன்தான்‌ வருவார்கள்‌. அவர்களை எதிர்க்க மகாராஜா(சேதுபதி) அவர்களையே மதுரை மன்னர்‌ தலைமை தாங்கி போர்‌ நடத்தும்படி கோரியிருப்பதால்‌ தாம்‌ இருபது ஆயிரம்‌ மறவர்களுடனாவது
செல்ல வேண்டும்‌."

"சரி, நமது பாளையங்களுக்கு அவசர ஓலை அனுப்புங்கள்‌. திருப்பத்தார்‌ சீமை, அஞ்சுகோட்டை சீமை, காளையார்‌ கோயில்‌ சீமை, நாலுகோட்டைச்‌ சீமைப்‌
பாளையக்காரர்கள்‌, மறக்குடி மக்களைத்‌ திரட்டி அடுத்த நான்கு நாட்களுக்குள்‌ படைமாத்தூரில்‌ நிலை கொள்ள வேண்டும்‌. கமுதி, ஆப்பனூர்‌, சாயல்குடி, பரமக்குடி, சீமைப்‌ பாளையக்‌ காரர்கள்‌ தங்களது படைகளுடன்‌ அடுத்த மூன்று நாட்களில்‌ மதுரைக்‌ கோட்டைக்கு வத்து சேர வேண்டும்‌. தாம்‌ அங்கு சென்று தல்லாகுளம்‌ மைதானத்திற்குப்‌ போய்ச்‌ சேரலாம்‌...... வெகு விரைவில் ‌படைகளுடன்‌ மதுரையில்‌ சந்திப்பதாக திருமலை மன்னருக்கு பதில்‌ அனுப்பிவிடுங்கள்‌."'

"உத்திரவு" என்று பிரதானி விடைபெற்றார்.

அந்த விசாலமான அறையில்‌ அமர்ந்திருந்த சேதுபதி மன்னரது சிந்தனை யாவும் மதுரைச்‌ சீமை சென்று கன்னடப் படைகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும்‌ உத்திகளைப்‌ பற்றியே சுழன்று கொண்டு இருந்தது.

********

மதுரை. சொர்க்க விலாசம்‌, திருமலை நாயக்கரின் அரண்மனை. அதன் முகப்பில்‌ மன்னரது பிரதானிமற்றும்‌ உயர்‌ அலுவலர்களும்‌ காத்திருந்தனர்‌.

குதிரைகளில்‌ வீரர்கள்‌ பின்‌ தொடர அழகிய அரபு நாட்டுக்‌ குதிரை ஒன்றில்‌ வந்த ரகுநாத திருமலை சேதுபதி, அரண்மனையின்‌ பிரதான வாசலில்‌ இறங்கி கம்பீரமாக மாளிகைக்குள்‌ நடந்து சென்றார்‌.

இருபுறமும்‌ நின்றுகொண்டிருந்த பெரிய யானைகள்‌ தங்களது துதிக்கைகளை மேலே உயர்த்திப் பிளிறி சேதபதி மன்னருக்கு வரவேற்பு அளித்தன. அரண்மனைக்குள் இருந்த ஒரு மண்டபத்தில்‌ இருந்து இசைக்‌ கருவிகளின்‌ இசை இனிமையாக ஒலித்தது. அடுத்து பலத்த ஓசைகளுடன்‌ அதிர்வேட்டுகள்‌ வெடித்தன. உயரமான தூண்களுக்கிடையில்‌ அமைந்திருந்த புல்‌ தரையைக்‌ கடந்து சிறிய படிக்கட்டுகள்‌ வழியாக தர்பார்‌ மண்டபத்திற்குள்‌ நுழைந்தார்‌ சேதுபதி மன்னர்.

வரிசையாக நின்றிருந்த வீரர்கள்‌ மன்னரை வணங்கி மரியாதை செலுத்தினர்‌.
சேதுபதி மன்னரின் நினைவுகள் மூன்றாண்டுகள் முன்பு சென்றது. எட்டையபுரம் பாளையக்காரரை போரில் வீழ்த்தி சிறைப்படுத்தி இதே தர்பாரில் சிங்காசனத்தில் வீற்றிருந்த திருமலை நாயக்கர்‌ முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தும், அந்த பாளையக்காரருக்கு மன்னிப்பு வழங்கும் படி நாயக்கரிடம் கேட்டுக்கொண்டதும், அதன் படியே நாயக்கர் எட்டையபுரம் பாளையக்காரரை மன்னித்து அவரது பாளையத்தை திருப்பி அளித்ததையும் கூடவே தமக்கு ஏராளமான பரிசுகளை அளித்துக் கவுரவித்ததையும் நினைத்துக் கொண்டார்.

அப்போதிருந்த தர்பார் மண்டப அமைப்பு தற்போது வெகுவாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. “இப்படி வலதுபுறம் வாருங்கள்” என்று பிரதானி சேதுபதி மன்னருக்கு வழியைக் காண்பித்தார். அங்கே திரும்பி சொர்க்க வாசல் அரண்மனைக்குள் நுழைந்தார் சேதுபதி.

விசாலமான அறை ஒன்றில்‌ நான்கு யாழிகள்‌ தாங்கிய பஞ்சசயன கட்டிலில்‌ திருமலை நாயக்கர்‌ படுத்திருப்பதும்‌ பக்கத்தில்‌ பட்டத்தரசி அக்கம்மா மற்றும்‌ பணியாளர்கள்‌ மன்னரைச்‌ சூழ்த்திருப்பதையும்‌ கவனித்தார்‌.

சேதுபதி மன்னர் உள்ளே நுழைந்ததைப் பார்த்த பட்டமகிஷி, “மகாராஜா! நமஸ்காரம்! உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார்.

"நமஸ்காரம்‌" என்று பதிலுக்கு சேதுபதி மன்னரும் அரசியாரையும்‌ திருமலை நாயக்சுரையும்‌ இருகரம்‌ கூப்பி மிகுந்த வாஞ்சையுடன்‌ வணங்கினார்‌.

"வாருங்கள்‌... வாருங்கள்‌" என்றது படுத்திருந்த நிலையில்‌ திருமலை நாயக்கரது பலவீனமான குரல்‌. கட்டிலின்‌ அருகில்‌ இடப்‌பெற்றிருந்த இருக்கையில்‌ அமருமாறு திருமலை நாயக்கர்‌ சைகை செய்தார்‌. அதில்‌ சேதுபதி மன்னர் அமர்ந்த பொழுது, மதுரை மன்னரது உடல்‌ நலிவு எந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை அவரால்‌ புரிந்துகொள்ள முடித்தது.

"இப்பொழுது உடல்‌ நலம்‌ எப்படி இருக்கிறது?" என்று சேதுபதி மன்னர்‌ கேட்டார்‌.
"பரவாயில்லை... எல்லாம்‌ மீனாட்சி தாயின்‌ கிருபைதான்‌"' திருமலை நாயக்கரது பதில் பலவீனமான குரலில் வந்தது.

"மகாராஜா விருப்பப்படி எங்களது சீமை மறவர்களைத்‌ திரட்டி வந்திருக்கிறேன்‌. இருபத்தைந்தாயிரம் பேர்‌. தல்லாகுளம்‌ மைதானத்தில்‌ முகாம் இட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது என்று தாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேதுபதி.

"மிக்க சந்தோஷம்‌! ரகுநாத தேவரே!” என்ற திருமலை நாயக்கர் தனது பிரதானியிடம் திரும்பினார். “பிரதானியாரே சேதுபதி மன்னருக்கு நடப்பை எடுத்துச்‌ செல்லுங்கள்‌” என்று உத்தரவிட்டார். பிரதானி சொல்லத்‌ தொடங்கினார்‌.

"மகாராஜா! கன்னடப்படைகள்‌ தமது சீமைக்குள்‌. வடக்கே தாராபுரத்தை தெருங்கிக்‌ கொண்டு இருப்பதாக நேற்றைய தகவல்‌, அவர்கள்‌ சுமார்‌ முப்பதாயிரம்‌ பேர் இருக்கலாம்‌. முழுவதும்‌ காலாட்‌ படைகள்‌. ஒரு சில தனபதிகளிடம்‌ மட்டும்‌
குதிரைகள்‌ இருப்பதாக தகவல்‌. நமது சமஸ்தானத்தில்‌ முப்பதாயிரம்‌ காலாட்களும்‌ இரண்டாயிரம்‌ குதிரை வீரர்களும்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளனர்‌. வண்டியூர்‌ மைதானத்தில்‌ உள்ள அவர்களை தங்களது. படைகளுடன்‌ இணைத்து தலைமை தாங்கிச்‌ சென்று வெற்றி பெற வேண்டும்‌ என்பது எங்களது வேண்டுகோள்‌. மூன்று நாட்களில்‌ இங்கிருந்து அம்மைதாயக்கனூர்‌ போய்ச்‌ சேரலாம்‌. அந்த சமயம்‌.
கன்னடப்‌ படைகளும்‌ திண்டுக்கல்லை அடுத்து வந்துவிடும்‌. வழியில்‌ நமது பாளையக்காரர்கள்‌ எல்லா உதவியும்‌ செய்வார்கள்‌. தங்களது துணைக்குச்‌ செல்லுமாறு மகாராஜா அவர்கள்‌ எனக்கு உத்திரவு இட்டுள்ளார்கள்‌."

"நல்லது. நாம் இன்று மாலையே புறப்படலாம்‌. ஆனால்‌ இவ்வளவு பெரும்‌ படை தேவை இல்லை. தங்களது காலாட்‌ படையில்‌ பத்தாயிரமும்‌, ஆயிரம்‌ குதிரை வீரர்களும்‌ போதுமானவர்கள்‌” என்று தமது கருத்தைச்‌ சொன்னார்‌ சேதுபதி மன்னர்‌.

சேதுபதி மன்னரை ஆசீர்வதித்து திருமலை நாயக்கர்‌ சொன்னார்‌. "தங்களது உசிதம் போல்‌ செய்யுங்கள்‌. தாங்கள்‌ மேற்கொண்டுள்ள இந்த உயர்ந்த பணிக்கு மதுரைப் பேரரசு என்றும் தங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. எனது மீனாட்சித் தாயின்‌ துணையுடன்‌ தாங்கள்‌ வெற்றியடன்‌ திரும்பி வருவீர்கள் என்று எதிர்பார்க்‌கின்றேன்‌."
மீனாட்சி சொக்கநாதர்‌ கோயிலில்‌ இருந்து குருக்கள் சொண்டு வந்திருந்த விபூதி பிரசாதத்தை தமது கையாலேயே எடுத்து சேதுபதி மன்னர்‌ நெற்றியில்‌ பூசி வாழ்த்தினார்‌ திருமலை நாயக்கர்‌. மன்னருக்கும்‌ மகாராணிக்கும்‌ வணக்கம்‌ சொன்னார்‌ சேதுபதி.

"சென்று வருகிறோம்‌” என்று விடைபெற்று திருமலை சேதுபதியும்‌, பிரதானியும்‌ அங்கிருந்து அகன்றனர்‌.

****************
1சேதுபதியின் படையில் இருபத்தைந்து ஆயிரம் பேர் மற்றும் மதுரை படையில் சேர்ந்த பத்தாயிரம் பேர் என மொத்தம் முப்பத்தைந்தாயிரம் எண்ணிக்கையிலான படைக்கு தலைமை தாங்கிய சேதுபதி கன்னட படையின் மதுரை முற்றுகையை தகர்த்தார். மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் மறவர்கள் நின்றார்கள்.


1 வெறும் ஆறு மணிநேரத்தில் இருபத்தி ஐந்து ஆயிரம்(25000) மறவர்களுடன் சேதுபதி மதுரையை அடைந்ததாக சொல்லப்படுகிறது

மைசூர் வடுகப்படை திண்டுக்கல் நோக்கி விரட்டி அடிக்கப்பட்டது. திண்டுக்கல் கோட்டையில் மைசூர்ப்படைகள் தஞ்சம் அடைந்தது. சேதுபதியின் படைக்கு முன் தன்னை பலவீனமான உணர்ந்த மைசூர் தளபதி கூடுதல் படை வேண்டும் என மைசூருக்கு தகவல் அனுப்பினான். சிறிது நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த இருபதாயிரம் பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது.

சேதுபதியின் தலைமையிலான படைகளும் மைசூர் படைகளும் நேருக்கு நேராக மோதின.. அதீத போர்வெறியுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் பனிரெண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரர்களின் உடல்கள் பல நாட்கள் அதே இடத்தில் கிடந்ததால் சிதைந்து, காய்ந்து கருவாடானது.2

சேதுபதி படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மைசூர் படை வீரர்கள் சிதறி ஓடினார்கள்.

********************
குதிரைகளின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் இருந்தார்கள். நாள் முழுவதும் போரிட்ட களைப்பில்லாமல் குதிரைகள் நூல் பிடித்தாற் போல வரிசையாக நடந்து கொண்டிருந்தன. .

“ம்ம்... வீரர்களே வேகமாகச் செல்லுங்கள். இன்னும் இரண்டு நாழிகைக்குள் தாடிக்கொம்பு சென்று விடலாம்” என்று கன்னிவாடி பாளையக்காரரின் உரத்த குரல் கேட்டு குதிரைகளை வேகமாகச் செலுத்தினார்கள்.

தோப்பூர்‌ கணவாயில்‌ கன்னடப்‌ படைகளை திட்டமிட்டபடி அழித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருத்தது மதுரைப் படையின் ஓர் அணி. அந்த அணிக்குத் தலைமை தாங்கிய சேதுபதி மன்னரும்‌ கன்னிவாடி நாயக்கரும்‌ கம்பீரமாக வந்துகொண்டு இருந்தனர்‌. தூரத்தில்‌ சிறுமலையின்‌ பின்னணியில்‌ அந்த கிராமத்து பெருமாள்‌ கோயிலின்‌ கோபுரம்‌ அந்தி நேர வெயிலில்‌ அழகாகக்‌ காட்சி அளித்தது.
கோவில்‌ முகப்‌பில்‌ குதிரைகளில்‌ இருந்து சேதுபதி மன்னரும்‌ கன்னிவாடி பாளையக்காரரும்‌ இறங்கி பெருமாளை சேவித்து நின்றனர்‌.



2 திண்டுக்கல்லில் அந்த இடத்தை, இன்றும் கருவாட்டுப்பொட்டல் என்றே அழைக்கின்றனர்.
அந்தி மயங்கிய அந்த நேரத்தில் திண்டுக்கல்‌ மலைக்‌ கோட்டைக்கு அண்மையில்‌ உள்ள அந்த தாடிக்‌ கொம்பு கிராமம்‌ மிகவும் பரபரப்புடன்‌ காணப்பட்டது. மைசூர்‌ கன்னடப்‌ படைகளைப்‌ பின்‌ தொடர்ந்து வந்த மதுரைப்‌ படையின்‌ ஒரு அணி அங்கு தங்கி இருத்தது. பெரும்பாலும்‌ குதிரை வீரர்களைக்‌ கொண்ட அந்தப்‌ பிரிவினர் அங்குள்ள சௌந்தரராஜப்‌ பெருமாள்‌ கோயிலுக்குக்‌ கிழக்கே உள்ள மைதானத்தில்‌ பாடி வீடு! அமைத்திருத்தனர்‌.
அவர்களுக்குத்‌ தலைமை தாங்கி வந்த சேதுபதி மன்னரும்‌ அவரது. வீரர்களும்‌, பணியாளர்களும்‌ கோயிலுக்கு வலதுபுறமாக உள்ள ஆயிரங்கால்‌ மண்டபத்தில்‌ தங்கி இருந்தனர்‌.

அம்மைய நாயக்கனூருக்கு அடுத்து இருந்த வெட்ட வெளியில்‌ நடைபெற்ற முதல்‌ நாள்‌ போரில்‌ கன்னடப்‌ படையின் பெரும்‌ பகுதி அழிந்து விட்டது. எஞ்சிய அணிகளும்‌ மைசூர்‌ நோக்கிப் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மதுரை வீரர்கள்‌, மாலை நேரம்‌ ஆகி விட்டதால்‌ தாடிக்கொம்பு கிராமத்தில்‌ தங்குவதற்கான ஏற்பாடுகளில்‌ முனைந்திருந்தனர்‌. சுமார்‌ இருபது வீடுகளை மட்டுமே கொண்ட
அந்தச் சிற்றூரில்‌ இவ்வளவு பெரிய படை எப்பொழுதும் தங்கியது இல்லை, என்றாலும்‌ சேதுபதி மன்னருக்ரு உதவியாக வந்த கன்னிவாடி பாளையக்காரர்‌ அந்த ஊர்‌ மக்களிடமிருந்து அனைத்து ஒத்துழைப்பையும்‌ பெற்று, தங்கும் வசதிகளையும், இரவு சாப்பாட்டிற்குத் தக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்‌.

கன்னிவாடி பாளையக்காரர் சேதுபதி மன்னரை அழைத்துக் கொண்டு சௌந்தரராஜப் பெருமாளை சேவிக்கச் செய்தார். அவர்கள் கோவிலில் இருந்து திரும்பி வந்த போது இரவுக்கான சிற்றுண்டி தயாராக இருக்க, இருவரும் இருக்கையில் அமர்ந்தார்கள்.
சேதுபதி மன்னர், பாளையக்காரரிடம் அளவளாவிக் கொண்டே உணவை அருந்தினார்.

“கன்னடப் படைகள் எத்தனை பேர் எஞ்சி இருப்பார்கள்?” என்று கேட்டார் மன்னர்.

“சுமார் ஐயாயிரம் பேர் இருக்கலாம்”

“அவர்கள் மைசூர் வரை செல்லும் வழி பற்றிய தகவல் தெரிந்த யாராவது இருக்கிறார்களா?”

“அவர்கள் தாராபுரம் நோக்கிப் பின் வாங்குவதாகத் தகவல். இங்கே வரும் போது கரூர், நாமக்கல், ஓசூர் வழியாக வந்தார்கள். ஆனால் இப்போது கரூர் சென்று காவிரியைச் சுற்றிக்கொண்டு தோப்பூர் கணவாய் வழியாகத் தான் அவர்கள் மைசூர் செல்வார்கள் எனத் தெரிகிறது. நாம் தாராபுரம் சென்றவுடன் கரூரைத் தவிர்த்துச் செல்ல இருக்கிறோம். காட்டுப் பாதையில் மேலைமலைத் தொடரின் அடிவாரத்திற்குச் சென்று காத்திருப்போம். அவர்கள் வந்ததும் திடீர் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது தான் நமது திட்டம்.”

“கரூர் செல்லாமல் பழைய பாதையிலேயே அவர்கள் சென்றால் நாம் எப்படி அவர்களை வழிமறிக்க முடியும்?”

“ஒரு வேளை இந்தக் காட்டுப் பாதை வழியாகவே அவர்களும் செல்வதாக வைத்துக் கொண்டாலும், அவர்கள் மேலை மலையைச் சுற்றி வருவதற்குள் நாம் குறுக்குப் பாதையில் தோப்பூர் கணவாய் சென்றுவிடலாம். நம் நாட்டின் குறுக்குப் பாதைகளை எதிரிகள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏழே நாட்களில் நாம் அவர்களை நெருங்கி விடலாம். இந்தக் குறுக்குப் பாதை ஒரு நாள் பயணத்தைச் சுருங்கிவிடும்.”

“மிக்க மகிழ்ச்சி.”

“அப்படியெனில் நாம் புறப்படலாம் அல்லவா?”

“ஆம் புறப்படலாம்.” பெருமாள் கோவில் கோபுரத்தை கூப்பிய கரங்களுடன் தலைதாழ்த்தி வணங்கிய மன்னர் தன் குதிரை மீது ஏறிய போது அனைத்து வீரர்களும் பயணத்திற்குத் தயாராக இருந்தனர்.

மைசூர் படையை விடாமல், மைசூர் வரை துரத்திச் சென்றார்கள் சேதுபதி படையினர். அதோடு, நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் மக்கள் மூக்கை அறுத்த படை வீரர்களின் மூக்கையும் பதிலுக்குப் பதில் அறுத்தனர். மைசூர் படை எடுப்பு முறியடிக்கப்பட்டு மதுரை காப்பாற்றப்பட்டது.

போர் முடிந்து திரும்பிய மதுரை வீரர்கள் மீண்டும் தாராபுரம் வந்தார்கள். மன்னரும் படையினரும் அங்கே முகாமிட்டுத் தங்கினார்கள். இவ்வாறு மறவர் படையினர் ஆங்ககாங்கே முகாமிட்டுத் தங்கிய சிற்றூர் எல்லாம் இராமனாதபுரம் என்றே அழைக்கப்பட்டது. அன்றைய இரவு, மன்னருக்குப் படுக்கையைத் தயார் செய்து விட்டு வெளியே சென்ற அவரது பாதுகாவலன் ராமுத் தேவன் மீண்டும் அவசரமாக உள்ளே வந்து நின்றான். “மதுரையில் இருந்து ஓலையுடன் ஒரு சேவகர் வந்திருக்கிறார் மகாராஜா!” என்றான் பணிவுடன்.

மதுரையில் இருந்து வந்த செய்தியை அறிந்த மன்னரும் அவருடன் இருந்த கன்னிவாடி பாளையக்காரரும் புன்னகை செய்தனர்.

“இந்தத் திருமுகத்திற்குப் பதில் அனுப்பி விடலாம்” என்றார் பாளையக்காரர்.

“எப்போது மதுரை போய்ச் சேருவோம் என்பதையும் குறிப்பிட வேண்டும் அல்லவா?” என்றார் சேதுபதி.

‘நிச்சயமாக, நாளை புதன்கிழமை. பிற்பகலில் இங்கிருந்து புறப்பட்டால் வெள்ளிக்கிழமை முற்பகலில் மதுரையை அடைந்து விடலாம்.”

“அப்படியெனில்
நாயக்க மன்னருக்குப் பதில் அனுப்பி விடுங்கள்” என்று சேதுபதி மன்னர் சொன்னார். கன்னிவாடி பாளையக்காரர் மதுரைத் தூதுவரை அழைத்து அவ்விதமே சொல்லி அனுப்பினார்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom