• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -6

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
393
0
43
india
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -6

முரளிதரன் தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறி இருந்தான். மலர்விழி தான் தங்கள் வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே ஒரு ஃப்ளாட்டைத் தேடிப் பிடித்திருந்தாள். அவர்களுக்கும் பிடித்திருந்ததால் விரைவில் குடியேறிவிட்டனர்.

முரளியின் மனைவி ராதிகா மூன்று குழந்தைகளின் தாய் என்று சொல்ல முடியா வண்ணம் சந்தூர் சோப் விளம்பர மாடல் போல இருந்தாள்.

ஆணொன்றும், இரண்டு பெண்களுமாக ட்ரிப்லெட்ஸ் என்று சொல்லப்படும் மூன்று பிள்ளைகள் அவர்களுக்கு. பெண்கள் இருவரும் முரளிதரனின் சாயலில் ஒரே மாதிரி இருந்தார்கள். ஆண், தாயின் சாடையில் இருந்தான். அனைவரும் ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி சேர்க்கைக்காகக் காத்திருந்தனர்.

மூவருமே மும்பை ஐஐடிக்கு குறி வைத்திருந்தனர். “அச்சோ! உங்களோட சேரவே கூடாது போல இருக்கே. பெரிய படிப்ஸா இருக்கீங்க. அதெப்படிடா மூணு பேரும் சொல்லி வச்சது மாதிரி மார்க் வாங்கி இருக்கீங்க? இதுல நேஷனல் லெவல் ரேங்க் வேற. நான் எதுக்கும் உங்க கிட்ட இருந்து தள்ளியே நிக்கறேன். சுந்தரிக்கு தெரிஞ்சா என் காதுல ரத்தத்தைப் பார்க்காம நிறுத்த மாட்டாங்களே! என்னடா இது இந்த மலர்விழிக்கு வந்த ஜோதனை! ஆனாலும் நீங்க பசங்கள இப்படி வளர்த்திருக்கக் கூடாது ஆன்ட்டி. கொஞ்சம் அப்படி இப்படி வளர்த்திருக்கலாம்” என்று இடைவெளி இல்லாமல் புலம்பினாள் மலர்விழி.

“ஹலோ மலர்விழி மேடம் இதெல்லாம் உங்க ஆன்ட்டியோட சாதனை இல்லை. எல்லாமே என் ட்ரைனிங்” என்று மார்தட்டிக் கொண்டு அங்கு வந்தான் முரளிதரன்.

“இருக்கலாம் சார். நீங்க ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் ஆஃபீஸ்லயே இருக்கிறத பார்த்து வளர்ந்த ட்ரைனிங் இருக்கலாம்” என்று கண்ணடித்தாள் மலர்விழி.

ராதிகா மட்டும் இன்றி மூன்று பிள்ளைகளும் சேர்ந்தே அவளுக்கு ஹைஃபை கொடுத்தார்கள். “பசங்க ஒரு நாள் யாரும்மா இந்த அங்கிள்னு கேட்கப் போறாங்கன்னு சொல்லிச் சொல்லி தூங்கற நேரம் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருக்காரு” என்று தோளில் இடித்துக் கொண்டாள் ராதிகா.

இப்படி முரளிதரனின் குடும்பத்துடன் மலர்விழி ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொள்ள கம்பெனியில் அவளது வேலையில் அதாவது டிபார்ட்மெண்ட்டில் மாற்றம் நிகழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்று காலை அலுவலகம் சென்ற மலர்விழி அங்கிருந்த பரபரப்பை கண்டு ஆச்சரியம் அடைந்தாள். யாரிடமும் எதுவும் கேட்க முடியாவண்ணம் அனைவரும் ஒரு சீரியஸ் மோடில் இருந்தனர்.

அவசரமாக தலைமை அதிகாரிகளுக்கிடையே ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத வகையில் டெக்னிக்கல் மற்றும் க்வாலிக்டி டீம் தலைவர்களும் அங்கே கூடினார்கள்.

அரை மணி நேர கூட்டத்திற்குப் பிறகு அனைவருக்கும் ரஞ்சனிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. “ ***** ஊரில் உள்ள தேர்வு மையத்தில் விதிமீறல் நடைபெற்று இருப்பதாக அமெரிக்காவில் உள்ள க்வாலிக்டி டீம் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்ட நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றது அந்த மெயில்.

அமெரிக்க டீம் கண்டுபிடித்தது என்றால் இங்குள்ள டீம் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தமா இல்லை அவர்களும் உடந்தை என்று அர்த்தமா? இது தான் இந்தியாவில் முதல் முறை என்பதால் அனைவரும் மிகுந்த டென்ஷனில் இருந்தனர்.

தேர்வு எழுதிய ஒரு குறிப்பிட்ட நபரின் ரிசல்ட் மாற்றப்பட்டிருந்தது. சரியான காரணமும் பர்மிஷனும் இல்லாமல் சர்வரைத் தொடவே முடியாது. இங்கே மையத்தின் சர்வர் முதல் தலைமை அலுவலகத்தின் மெயின் சர்வர் வரை பல தகவல்கள் மாற்றப்பட்டிருந்தது.

தேர்வு மையத்தின் அலுவலர் இருவர் பணத்துக்காகத் தான் செய்தோம் என்று செய்த தவறை ஒத்துக் கொள்ள அவர்களை வேலையை விட்டு நீக்கினார்கள். மையத்தின் மேனேஜருக்கும் இன்க்ரீமென்ட் சமயத்தில் ஆப்பு காத்திருந்தது.

ஆனால் தலைமை அலுவலகத்தில் யாரும் அவ்வளவு எளிதில் தங்களை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. பதினைந்து நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தியும் ஒருவரும் தாங்கள் தான் செய்தோம் என்று சொல்லவே இல்லை.

தங்களில் யாரும் இப்படிச் செய்யவில்லை, எங்கள் லாக்-இன் பயன்படுத்தி வேறு யாரோ செய்திருக்க வேண்டும் என்றே சாதித்தனர். முறையாக ஹேக்கிங் தெரிந்தவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும். ஆனால், ஐபி அட்ரெஸ் முதற்கொண்டு பல டெக்னிக்கல் விஷயங்கள் தெளிவாக குற்றவாளியைக் காட்டிக் கொடுக்கும் போது வாயால் சொல்வதை எப்படி நம்ப முடியும்?

அதனால் அவர்களைப் பதவி நீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டது. அவர்களாக விலகினால் வேறு வேலை தேடும் போது பிரச்சினை இருக்காது, இல்லையெனில் அது கஷ்டமாகிவிடும் என்று ரஞ்சன் சொல்ல, அது ஒரு மிரட்டலாக மற்றவருக்குத் தோன்றியது.

ஒன்றிரண்டு பேரைத் தவிர டெக்னிக்கல் மற்றும் க்வாலிக்டி டீமில் அனைவரும் ராஜினாமா கடிதத்தை நீட்ட, கேள்வியாகப் பார்த்தான் ரஞ்சன்.

“எதுக்காக எங்களை டார்கெட் பண்றாங்க, யார் பண்றாங்கன்னு தெரியலை. இதுக்கு மேல இங்கே இருந்தால் எங்களோட தன்மானம் தான் அடிவாங்கும். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் மட்டும் கொடுத்திடுங்க. வி வில் டேக் கேர்” என்று சென்று விட்டார்கள்.

தலையைப் பிடித்துக் கொள்வதைத் தவிர ரஞ்சனுக்கு வேறு வழியிருக்கவில்லை. இங்கே நடந்த எதுவும் தெரியாமல் கிட்டத்தட்ட ஒரு டீமையே புதிதாக தேர்ந்தெடுப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயத் தொடங்கினான்.

பைத்தியம் பிடித்து விடும் போலிருக்க, காஃபிடேரியா வந்து ஒரு காஃபியுடன் அமர்ந்தான். அங்கே பலரும் நடந்த விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க அதில் மலர்விழியும் அடக்கம். பார்த்த அவனது மனம் ‘யுரேகா!’ என்று அலறியது.

அடுத்த பத்தாவது நிமிடம், “மலர்! கம்பெனிக்கு இப்போ ரொம்ப கிரிட்டிகல் பொஸிஷன். நீங்க க்வாலிக்டி டீம்ல ஜாயின் பண்ணினா பெட்டரா இருக்கும். நீங்க வச்சிட்டு இருக்கற சர்டிபிகேட்ஸுக்கு டைரக்டா டீம் லீடர் பொஸிஷனே கொடுக்கலாம். பட் அதுல இப்போ இருக்கிறவன் விட்டுத் தரத் தயாராக இல்லை. அதனால் அனலிஸ்ட் போஸ்ட் தான் கொடுக்க முடியும். ஓகேவா?”

“வாட்! ரஞ்சன்! இது ஜோக் இல்லையே. நான் கொஞ்சம்.. இல்லை.. ரொம்ப யோசிக்கணும். இப்போ நான் பார்க்கற வேலையை விட அது ரொம்ப பொறுப்புள்ள வேலை. அதுவும் போக என்னால யுஎஸ் டைமிங்க்ல எல்லாம் வொர்க் பண்ண முடியாது. ஆறு மணி ஆனா சீட்ட விட்டு எழுந்துக்கணும். இதுக்கெல்லாம் க்வாலிக்டி டீம்ல இடம் இருக்கா?” என்றாள் சீரியஸாக.

“ஹூம்… கொஞ்சம் கஷ்டம் தான். பட் நல்ல கேன்டிடேட் வேணும்னா சில விஷயங்களை கம்பெனியும் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போகணும், யூ நோ. அந்த விதத்தில் உனக்கு சில சலுகைகளை என்னால கொடுக்க முடியும். நாளைக்கே ஜாயின் பண்ணிக்கோ.”

“ஓ… அப்போ.. என் கரண்ட் பொஸிஷன்?? அப்படியே அந்தரத்தில விட்டுட்டு அங்கே ஜாயின் பண்ணிடலாமா?” என்று சிரித்தவளோடு தானும் சிரித்தான் ரஞ்சன். அந்த சிரிப்பின் அர்த்தம் அவனே அறிவான்.

இப்படியாக மலர்விழி க்வாலிட்டி டீமில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. அதன் பாஸ் யாரென்று இதுவரை தெரியவில்லை. அங்கே யாருக்கும் தெரியவில்லை என்பது தான் ஒரு விந்தையாக இருந்தது.

ஃபோனில் மட்டுமே என்ன செய்ய வேண்டும் என்று சொன்ன பாஸ் மாதத்தில் முப்பது நாட்களும் ட்ராவலில் இருப்பாராம். இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளின் தேர்வு மையங்களுக்கும் சென்று எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று செக் செய்கிறார் என்றார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று கடவுளுக்கும் அந்த பாஸுக்கும் தான் தெரியும்.

மலர்விழி இன்னும் அறியாத ஒன்று அந்த பாஸுக்கும் பாஸ் ஒருவன் அவள் பக்கத்தில் இருந்தே அவளை ஆட்டி வைக்கிறான் என்பது. அதை அவள் உணர்ந்து கொண்ட போது அவளது மனமும் அவன் பால் சாய்ந்திருந்தது.

***************
கமல் சக்சேனாவின் விவகாரத்தோடு விகாஸ் மிஸ்ராவின் விபத்தும் சேர்ந்து கொள்ள ஈஸ்வரும் கார்த்திக்கும் தீயாய் வேலை செய்ய வேண்டியதாயிற்று. இருவருக்கும் பொதுவாக இருந்தது xyz கம்பெனி மட்டும் தான். ஒரு வேளை பிரச்சினைகள் அங்கே இருந்து தான் ஆரம்பித்ததா?

டெல்லியில் இருந்து கமலின் பொருட்களைக் கொண்டு வந்த ஈஸ்வர் அவற்றை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விட்டான். அவனுக்குக் கிடைத்ததெல்லாம் கலர் கலராக ரகம் ரகமான பேனாக்கள், ஒவ்வொன்றும் குறைந்தது ஆயிரம் ரூபாய் இருக்கலாம். அதே போல சில நோட்டுப் புத்தகங்கள் (அவற்றில் ஒரு எழுத்து கூட எழுதப் படவில்லை என்பது ஹைலைட்).

சில டிராவல் புத்தகங்கள், அவர் சென்று வந்த மற்றும் செல்ல இருந்த ஊர்களைப் பற்றியது. அவற்றில் ஆங்காங்கே சில குறிப்புகள் இருந்தன. ஈஸ்வரின் நேரம் அவற்றை சரியாகக் கவனிக்கவில்லை. இல்லாவிட்டால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்திருப்பான். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை போலும்.

கார்த்திக் கூட சொன்னான், “டேய் அதுல ஏதோ எழுதி இருக்கே, என்னன்னு தான் பாரேன்.”

“என்னத்தைப் பெரிசா எழுதி இருக்கப் போறான். அவன் ஒரு ப்ளான் சொல்லி இருந்தா, இவன் இவனோட ப்ளான எழுதி வச்சிருப்பானா இருக்கும்” என்று அவன் சொன்னதற்காக ஒரு பக்கத்தைப் படித்தவன் பார்த்தாயா என்பதைப் போல மற்றவனிடம் காட்டினான். அதற்கு மேல் அவற்றை எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை.

கமலின் மனைவி மூலம் ஈஸ்வர் அவனது அட்வெஞ்சர் மோகத்தை அறிந்திருந்தான். சிறு இடைவெளி கிடைத்தாலும் அட்வெஞ்சர் என்று எங்காவது சென்றுவிடும் பழக்கம் கமலுக்கு இருந்தது என்று. கடைசியாக xyz கம்பெனி குழுவுடன் இமயமலையில் பத்து நாட்கள் ஒரு கடினமான ட்ரெக்கிங் சென்று வந்தான். அதன் பிறகு திடீரென்று கம்பெனி மாறிவிட்டான் என்பதையும் கமலின் மனைவி சொல்லி இருந்தாள்.

அன்றிரவு இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது தான் மலர்விழிக்கு விகாஸைப் பற்றிய ஞாபகம் வந்தது. “ஓ மை காட்! கார்த்திக்! நான் ஒரு மாசமா விகாஸை போய் பார்க்கவே இல்லை. எப்படி இருக்காருன்னு தெரியலையே. ஏதாவது முன்னேற்றம் இருக்கா, டிஸ்சார்ஜ் ஆகிட்டாரா எப்படி தெரிஞ்சுக்கறது?”

“ஷ். மலர்.. மெதுவா பேசு. அம்மாக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. நான் நாளைக்கு அந்தப் பக்கம் போவேன். அப்படியே விகாஸைப் பார்த்துட்டே வரேன்.”

“தட்ஸ் ஓகே.. நான் பாரு அவரைப் பத்திக் கேட்கவே மறந்து போயிட்டேன். அந்த ஆக்சிடன்ட் பத்தி விசாரிச்சீங்களா? ப்ளான்ட் ஆக்சிடன்ட் இல்லேல்ல? போலீஸ் ஏதாவது பண்றாங்களா?”

“போலீஸ் தானே, வழக்கம் போல கேஸ இழுத்து மூடிட்டாங்க. பட், விகாஸ் விஷயத்தில் தப்பு விகாஸ் மேல தான் இருக்கும் போல தெரியுது மலர். ட்ரங்க் அன்ட் ட்ரைவ் கேஸ். தாஜ்ல அவர் தள்ளாடிட்டே வந்து கார் எடுக்கிறதெல்லாமே க்ளியரா ஃபுட்டேஜ் இருக்கு. ராத்திரி இரண்டு மணிக்கு வண்டிய எடுத்திருக்கார். இரண்டு ரோடு தாண்டி மீடியன்ல கொண்டு போய் சொருகியிருக்கார். பழக்க தோஷத்துல சீட் பெல்ட் போட்டிருக்கார். ஸோ.. ஏர் பேக் ஓபன் ஆகிடுச்சு. மூளைக்கு பெரிய டேமேஜ் இல்லை. ஸ்பைன்ல மட்டும் தான் பலமான அடி.. மே பி சின்னச் சின்ன ஃப்ராக்சர் கூட இருக்கலாம்.“

“கம் அகெயின்.. மூளைக்கு டேமேஜ் இல்லைன்னா எப்படி கோமாக்கு போனார்? என்ன நடக்குது இங்கே?”

“மலர்…” கார்த்திக்கும் இப்போது தான் அதை உணர்ந்து கொண்டான்.

போலீஸின் கையில் இருந்த ஆக்சிடன்ட் ரிப்போர்ட்தெளிவாக குறிப்பிட்டிருந்தது. “சீட் பெல்ட் போட்டிருந்ததால் ஏர் பேக் ஓபன் ஆகி அவரைக் காப்பாற்றி இருக்கிறது, மோதிய வேகத்தில் சீட் நசுங்கி முதுகில் அடி பட்டிருந்தது”

தனது கையில் இருந்த சாஃப்ட் காப்பியை எடுத்து மலர்விழியிடம் காட்டிய கார்த்திக், “இத்தனை நாள் எப்படி நாம இதைக் கவனிக்காம விட்டோம். என்ன நடக்குது இங்கே. யாரை முட்டாளாக்க பார்த்திருக்காங்க? மூணு மாசம் ஆகப் போகுது. சவுத்ல ஒரு சீஃப் மினிஸ்டருக்கு நடந்த மாதிரி உள்ளே என்ன ட்ரீட்மெண்ட் நடக்குதுன்னே தெரியலையே” என்று புலம்பித் தள்ளினான்.

“யாரையும் அவங்க உள்ளே அலோவ் பண்ணலையா? அந்த மேடம்.. அவங்க போனா .. ஹஸ்பன்ட தொட்டுப் பார்க்கணும்னு தோணாதா? அட்லீஸ்ட் இன்னொரு ஒபீனியன் வாங்கணும்னு சம்மரி கேட்கலாமே?” புலம்புவது இப்போது மலரின் முறையாகிற்று.

“நான் போய் பேசிப் பார்க்கட்டுமா கார்த்திக்?” என்றாள் ஆர்வத்துடன்.

“ம்ச்.. உனக்கொன்னும் பிரச்சினை இல்லை. ஒரு வேளை அவர் பதில் பேசிட்டா இன்னும் அவருக்கு பிரச்சினை ஆகிடும். ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடி நாலையும் யோசிக்கணும் மலர்.”

“யோசிச்சு… எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா? இந்தக் கம்பெனி இல்லேன்னா வேற கம்பெனி. போய்த் தொலையுதுன்னு விட்டுப் போயிடணும். சில நேரங்களில் சுயநலமா மட்டும் தான் இருக்கணும் கார்த்திக். அதுவும் அவர் பொண்ணு, நீ பார்த்துருக்கியா? நான் ஏதாவது செய்யத் தான் போறேன். எப்படி செய்யறதுன்னு லாயரும் டிடெக்டிவும் மூளையைக் கசக்கி யோசிங்க” என்று முடித்து விட்டாள்.

திடீரென அவளுக்கு வேறொரு சந்தேகம் வந்தது. அதை நினைத்துப் பார்க்கையில் கை காலெல்லாம் நடுங்கியது.

“மலர்.. என்னாச்சு.. ஆர் யூ ஓகே.. இப்படி உட்காரு”

“கார்த்திக்…”

“ம்”

“கார்த்திக்…….”

“ஏய்… எதுவா இருந்தாலும் சொல்லு மலர். சும்மா கார்த்திக்னு ராகம் பாடிட்டு..”

“இல்ல… இது கம்பெனியோட உள்விவகாரம். இருந்தாலும் கேட்கிறேன், இதே மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல நம்ம முரளி சாரையும் நிறுத்த சான்ஸ் இருக்கோ? எனக்கு அப்படித்தான் தோணுது. எனக்கு அதை நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கே”

“நீயா எதையும் கற்பனை பண்ணாதே. ஒருத்தருக்கு எதுவோ நடந்தா, அது எல்லாருக்கும் நடக்குமா? அமைதியா போ. அதுவும் இல்லாமல் இந்த மாதிரி கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயம், எங்களை மாதிரி மூணாவது மனுஷங்களுக்கு தெரியறத யாரா இருந்தாலும் நல்லவிதமா எடுத்துக்க மாட்டாங்க. நல்ல வேளை, இந்த நேரத்தில் நீ முரளிதரன் டீம்ல இல்லை. வேற யார் கிட்டயும் இதைப் பத்தி பேசாதே. நானே உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். அதுக்கு முன்னாடி ஈஸ்வர் கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்” என்று அவளை அனுப்பி வைத்து விட்ட கார்த்திக் ஈஸ்வரைப் பார்க்கக் கிளம்பினான்.

அங்கே ஈஸ்வரோ கமல் சக்சேனாவின் மறு முகத்தை அறிந்த அதிர்ச்சியில் இருந்தான்.