• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 7

Lavans

Member
Sep 3, 2024
60
0
18
California

அத்தியாயம் - 7

சக்தி எழும் போதே எரிச்சலின் உச்சத்தில் இருந்தான். ஆறு மணிக்கு வைத்த அலாரம் அலறாமல் போனது. காலை ஆறு மணி என வைப்பதற்குப் பதிலாக, மாலை ஆறு மணிக்கு வைத்தால்?



தாமதமாக எழுந்து, வேலையிடத்துக்குப் போய் செய்ய வேண்டியதை ஒழுங்குப்படுத்திவிட்டு நீதிமன்றம் நோக்கிப் பறந்தான். அன்று தான் அவனுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கில் இறுதிக் கட்டத் தீர்ப்பு வருகிறது.



‘ச்சே. இதனால் எத்தனை நேரமும், பணமும் விரயம்?’ எனப் புலம்பிக் கொண்டே நீதிமன்றம் சென்றடைந்தான் சக்தி



அனைவரும் வந்து சேர்ந்ததும், சக்தியின் வக்கீல், “அந்தக் கட்டிடம் இருக்கும் இடம் அப்போது என் கட்சிக்காரர் வேலை செய்த நிறுவனத்தின் பெயரில் தான் இருந்தது. அதனால் நடந்த சம்பவத்துக்கு நிறுவனம் தான் முழுப் பொறுப்பாகும்” என்று தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.



“அவர் சொல்வது அனைத்தும் சரியே. சம்பவம் நடந்ததுமே தவறைத் திருத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட நிறுவனம் வீட்டின் உரிமையாளருக்கு ஓர் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டனர்.



ஆனால் அவரின் குற்றச்சாட்டே வேறு. என்ஜீனியராகப் பொறுபேற்றுக் கொண்ட சக்தி என்பவர், பொறுப்பில்லாமல் செயல்பட்டிருக்கிறார். என்ஜீனியரான தனக்கு எல்லாம் தெரியும் என்றும், நான் பார்த்துக் கொள்கிறேன், சொன்னதைச் செய்யுங்கள் என்றும் பலமுறை தனக்குக் கீழே வேலை செய்தவர்களிடம் சொல்லியிருக்கிறார்.



அதற்கு ஆதாரமாக நான்கு நபர்களின் வாக்குமூலம் இதில் உள்ளது” எனச் சில காகிதங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தாள் எழில்மலர்.



அதைக் கேட்ட சக்திக்கு அது தானே உண்மை என்று உறுத்தியது. அன்று அந்த மேஸ்திரியும், கண்காணிப்பாளரும் சொன்னபொழுது, ‘எஞ்சினீயரிங் படிச்ச எங்களுக்குத் தெரியாதா? வந்துட்டார் பெரிசா.’ என அவன் சொன்னான் தானே.



எல்லாம் படித்து முடித்த சமயத்தில், இளம் ரத்தம் வேகமெடுத்து செயல்படும் சமயத்தில் தலைக்கனம் கொண்டு சொன்னது. இப்போது அதுவே அவனுக்கு எதிராகத் திரும்புகிறது.



இருபக்கமும் நன்று அலசிய நீதிபதி, ‘சக்தியின் பொறுப்பற்றதனத்தால் பலருக்கும் இதில் சிக்கல். அதனால் அவர் ரூபாய் ஐந்து லட்சம் சம்மந்தப்பட்டவருக்கு வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.



சக்திக்குப் பாதகமாக வந்த தீர்ப்பைக் கேட்டதும் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தனக்கு நஷ்டம் எற்படுத்தியதுமில்லாமல், தன் பெயரைக் களங்கப்படுத்திவிட்டனர் எனக் கோபத்தில் போய் தன் வக்கீலிடம் பொரிந்துவிட்டான் சக்தி.



“என்ன சார் ஜெயிச்சிடுவோம் எனச் சொன்னீங்க?” எனச் சக்தி எரிச்சலடைய,



“கடைசி வரைக்கும் கேஸ் நம்ம பக்கம் தான் இருந்தது. ஆனால் நீங்க முன்னாடி வேலை செய்த நிறுவனத்தின் மேனேஜர், பணத்துக்கு ஆசைப்பட்டு எதிர்கட்சிக்குத் தாவிட்டான். ‘சக்தி தான் இதற்கு முழுப் பொறுப்பு. நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை’ என்று சொல்லிவிட்டார்” என்றார்.



சக்தி மெளனமாக இருக்க, “அதுவும் புதுசா வந்த பொண்ணு சும்மா பின்னிப் பெடலெடுக்குது” என அவர் சொல்லவும்,



“அந்தப் பெண்ணைப் பத்திப் புகழ் பாடறதுக்குத் தான் என்கிட்டே காசு வாங்கினீங்களா? எனக்கு இதனால் எவ்வளவு பெரிய நஷ்டம் தெரியுமா?” என்றான் காட்டமாக. (நல்லதைப் பாராட்டினால் தப்பா ராசா?)



“அதில்லைங்க தம்பி” எனப் பேசும் பொழுதே அவர் கைப்பேசி அலற, விட்டால் போதுமென்று அங்கிருந்து நழுவினார் அவன் வக்கீல்.



அதே சமயத்தில் எழில்மலர் சக்தியைக் கடந்து செல்ல, “பொய் பேசறதுக்குத் தான் வக்கீலுக்குப் படிக்கறது.. இப்படிப் பொய் பேசி, காசு சம்பாதிக்கிறது எல்லாம் ஒரு பொழப்பா?



வேறெதுவும் படிக்க கிடைக்காமல் தானே வக்கீலுக்குப் படிச்ச? உனக்கு எல்லாம் எத்தனை அறிவு இருக்கப் போகுது?” என சத்தமாகச் சொன்னான் சக்தி.



அவளைத் தான் சீண்டுகிறான் எனப் புரிந்து கொண்ட எழில்மலர் திரும்பி அவனிடம் சென்றாள். “ச்சே. கரெக்ட்டா சொல்லிட்டீங்களே. ஆனா, எனக்கு ஒரு டவுட். அறிவில்லாத என்கிட்ட தோத்த உங்களுக்கு எத்தனை அறிவிருக்கும் என வியப்பாக இருக்கிறது” என்றவளின் குரல் நிதானமாக ஒலித்தாலும், அதில் மலையளவு கிண்டல் நிறைந்திருந்தது.



அவளின் கிண்டலில் கதிரை அவனுக்கு ஞாபகப்படுத்த, ‘இப்படித் தானே அவனும் ஆப்பை என் பக்கம் திருப்பிவிடுவான்’ என எரிச்சல் கொண்ட சக்தி, “ஏய் திமிரா?” என ஆட்காட்டி விரலை உயர்த்தி மிரட்டினான்.



“இந்தப் பூச்சாண்டியெல்லாம் இங்கே வேண்டாம். போங்க போய் இனியாவது ஒழுங்கா கட்டிடத்தைக் கட்டுங்க” என்றாள் நிதானமாக எழில்மலர்.-



“நீயெல்லாம் ஒரு வக்கீல்.. இந்த நாடு ரொம்பப் பாவம். பேசாம வீட்ல இருக்காம இங்க வந்து ஏன் என் உயிரை வாங்கற?” என்றான் சக்தி அப்பொழுதும் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லாமல்.



அவன் கவலை அவனுக்கு. இப்பொழுது தான் தேவையில்லாமல் ஏற்பட்ட செலவை எல்லாம் சரிக் கட்டியிருந்தான். அதற்குள் மீண்டும் ஐந்து லட்சம் தண்டமா? என்ற சிந்தனை ஓட எழில்மலரிடம் பொறிந்தான். ஐந்து லட்சம் என்பது இப்போது அவனுக்கு எவ்வளவு பெரிய தொகை?



“உங்க உயிரை அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியும் என எனக்குத் தெரியாம போயிடுச்சே. சோ சேட்” என எழில்மலர் உச்சுக் கொட்ட, “உன்னை” என்று பல்லைக் கடித்தான் சக்தி.



“உண்மையைச் சொன்னாக் கோபம் வரத் தான் செய்யும்” என எழில்மலர் சொல்ல, “என்ன உண்மையம்மா” என்றவாறே சக்தியின் வக்கீல் அங்கே வந்தார்.



“வேறெதுவும் படிக்கக் கிடைக்காத முட்டாள்ங்க தான் வக்கீல் வேலைக்கு வருவாங்க என சார் சொல்ல, அதை நான் மறுத்துட்டு இருந்தேன். உங்களையும் சேர்த்துத் தான் சொன்னார் என நினைக்கிறேன். மிச்சத்த அவர்கிட்டேயே கேட்டுக்கோங்க.” என்றாள் எழில்மலர்.



சக்தியின் கோபம் அவன் வக்கீலுக்கு அத்துப்படி. கடந்த மூன்று வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறாரே. ‘கோபத்தில் இவளிடம் எதைச் சொன்னானோ?’ என வக்கீலும் சக்தியைப் பார்க்க, அவன் முகம் சிவந்திருந்தது.



“சார் இப்படித் தான் எல்லாத்திலேயும் கோபப்படுவாரா? கோபமா கட்டின வீடுனால, கூரைக்கும் அதே அளவுக்குக் கோபம் வந்துடுச்சு போல. அதான் டமால்ன்னு விழுந்துடுச்சு. இனிமேலாவது கோபப்படாம, நிதானமா இருக்கப் பழகிக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா மறுபடியும் சந்திக்க நேரிடும்” எனச் சக்தியின் வக்கீலிடம் சொன்னவள்,



“ ‘ஓபன் ஏர் யுனிவர்சிட்டி’ கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ‘ஓபன் ஏர் வீடு’ இப்போத் தான் பார்க்கிறேன். சூப்பர்.. நல்ல முன்னேற்றம் தான்.



கதிர்ன்னு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் காக்காக்கு ‘டாய்லெட்’ கட்டணும் எனச் சொன்னார். உங்க கிட்டே வேணா அனுப்பி வைக்கிறேன். கட்டிக் கொடுங்க” எனச் சிரித்தாவாறே அங்கிருந்து வேலையிடத்துக்குச் சென்றாள் எழில்மலர்.



‘நீ காக்காக்கு டாய்லெட் கட்டத் தான் லாயக்கு..’ எனச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாளே என எழில்மலரின் பேச்சு நெஞ்சில் எரிச்சலைக் கிளறிவிட, அவளது சிரிப்பு அதற்கு மேலும் தூபம் போட்டது.



கூடவே கதிர் என்ற பெயரைச் சொல்லவும், ‘இவளும் அந்தப் பொடியனைப் போலவே கிண்டலடிக்கிறாளே’ என வெகுண்டான்.



‘இவ மட்டும் என் கண்ணுல படட்டும். வச்சுக்கறேன்.’ எனப் பொருமியவாறே அங்கிருந்து கிளம்பினான் சக்தி. (இப்போ மட்டும் இவ என்ன உன் காலிலா பட்டா ராசா?)



****

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு எழில்மலர் திரும்ப எத்தனிக்கையில், அவள் கழுத்தைச் சுற்றி வளைத்த இரு கரங்கள் அதை நெறிக்க ஆரம்பிக்க, “உன்னைக் கொல்லாம விட மாட்டேன்க்கா. மா.. மாட்டேன்டி” என ஓர் இளைஞனின் குரல் தொடர்ந்து ஒலித்தது.



எழில்மலரின் கழுத்தைப் பற்றியிருந்தவனின் பிடி அப்படி ஒன்றும் விலக்கிவிட முடியாத அளவிற்குப் பலமாக இல்லை.



“முதல்ல என்னை டீன்னு சொல்லறதா, இல்லை, அக்கான்னு சொல்லறதான்னு முடிவு பண்ணிட்டு வாங்க” என அவள் இயல்பாகப் பேசவும், அவள் கழுத்தைப் பற்றியிருந்த இளைஞனின் பிடி இளகிவிட்டது.



கூடுதலாக வந்தவன், இவளை விடச் சின்னவனாகவும், பதட்டத்துடனும் இருந்ததால் அவளால் எளிதாக அவனை விலக்கி நிறுத்த முடிந்தது.



இது தான் எழில்மலர். ஏதாவது நடந்துவிட்டால, ‘ஐயோ இப்படி நடந்துவிட்டதே’ என மூலையில் போய் முடங்காமல், மூளையை உபயோகித்து காரணத்தை ஆராய்வாள்.



தான் கவலை கொண்டால், தன் மனநலன் கெடுவதோடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலைமையையும் மாற்றிவிடுவோம் என நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால் எதையுமே இலகுவாக எடுத்துக் கொள்வாள்.



அதற்குள் அங்கிருந்த காவலாளி ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார். விசாரித்ததில், அந்த இளைஞனின் அண்ணனுக்கு எதிரான வழக்கில் அவனுக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்கிறாள் எழில்மலர். அது தான் அவள் எடுத்து நடத்திய முதல் வழக்கு.



தன் அண்ணன் மேலுள்ள பாசத்தால் எழில்மலரைக் கொல்ல நினைத்து வந்திருக்கிறான். நினைப்பு மட்டுமே இருந்தது. பெரிதாக எந்தத் திட்டமிடலும் இல்லை.



“உன் அண்ணன் மாதிரி நீயும் ஜெயிலுக்குப் போகணுமா?” என அவனைக் காவலாளி மிரட்ட, “அண்ணா, நான் பார்த்துக்கறேன்” என எழில்மலர் அவரை அனுப்பி வைத்தாள்.



பின்னர் அந்த இளைஞனிடம் திரும்பி, “உன் பெயர் என்ன தம்பி?” என அவள் கேட்டதும், அந்த இளைஞனின் வாய் தன்னையுமறியாமல் “தமிழ்” என்றது.



“இங்க பாரு தமிழ், உன் அண்ணன் தப்புப் பண்ணியிருக்கிறார்” என அவனுக்கு நடந்ததைப் பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.



வேலையிடத்தில் அவன் அண்ணன் மதியரசன் பணம் கையாடல் செய்திருக்கிறான். அந்தப் பணத்தில் தன் காதலிக்கு நகையும் வாங்கித் தந்திருக்கிறான்.



அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே முன்பு வேலை செய்த இடத்திலும் பணம் கையாடல் செய்திருக்கிறான். அந்த நிறுவனம் போலீஸ், கேஸ் என்று போகாமல் பேசித் தீர்த்துக் கொண்டனர்.



எழில்மலர் சொல்வதைக் கேட்ட தமிழுக்கு இதையெல்லாம் நம்புவதா, இல்லை, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. கூடவே அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “பாசம் வைக்கிறது தப்பில்லை. ஆனால் அந்தப் பாசமே உன் கண்ணை மறைச்சு, அதனால் உன் வாழ்க்கையை அழிச்சுக்கக் கூடாது.



என்னைக் கொன்னுட்டு நீயும் ஜெயிலுக்குப் போயிட்டா உன்னைப் பெத்தவங்க என்ன பண்ணுவாங்க? என்னப் படிக்கிறே?” எனப் பரிவுடன் எழில்மலர் கேட்க தமிழ் உடைந்து போனான்.



“என்ஜினீயரிங் முதல் வருஷம் படிக்கிறேன் அக்கா. அப்பாவுக்கு உடல் சுகமில்லை. கூடவே அண்ணனோட நிலையை நினைச்சு அவர் படற வேதனையும் சேர, உங்களை. உங்களை” என அதற்கு மேல் தமிழால் பேசமுடியவில்லை.



“இந்த வேகத்தை உன் படிப்புல காட்டு.. நல்லா முன்னேறுவ” என்றதும் “காலேஜ் போனா, அண்ணன் ஜெயில்ல இருக்கறதைப் பத்தி ஃபிரெண்ட்ஸ் அசிங்கமாப் பேசறாங்க. முடியலைக்கா” என்றான்.



“நீ ஏதாவது தப்பு பண்ணினியா?” என எழில்மலர் கேட்க, அவன் இல்லையென தலையாட்டினான்.



“உன் அண்ணனைப் பத்தி தப்பாச் சொல்லறேன்னு நினைச்சுக்காத. தப்பு செஞ்சுட்டும் பொய் சொல்ல உன் அண்ணனே தயங்கலை. அப்படி இருக்கறப்போ தப்பே பண்ணாத நீ ஏன் மத்தவங்க சொல்லறதைப் பத்திக் கவலைப்படணும்?” என்றாள்.



“அது” என அவன் தயங்க, “போ. படிக்கிறதுக்குத் தான் காலேஜ் போற. உன்னைப் பத்திப் புரிஞ்சுக்காத யாரும் உனக்கு ஃபிரெண்ட்ஸா இருக்க முடியாது.” என்றாள்.



அவள் சொன்னதையெல்லாம் தலையாட்டிக் கேட்டுக் கொண்ட தமிழ், “என்னை மன்னிச்சிடுங்க அக்கா. நான் வரேன்” எனக் கிளம்பினான்.



அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த எழில்மலர், “தமிழ், இங்க வா. படிக்கிறதுக்கு பணம் ஏதாவது தேவையா?” எனக் கேட்க, “அது.. இல்லைக்கா.. இருக்கு.. நன்றி” எனத் தடுமாறினான்.



அந்தத் தடுமாற்றத்திலேயே அவனுக்கு பணம் அவசியம். ஆனால் அதை மூன்றாம் மனிதரான தன்னிடம் சொல்வதற்குத் தயங்குகிறான் எனப் புரிந்து கொண்டாள் எழில்மலர்.



‘பிறரிடம் கையேந்துவது தன்மானத்துக்கு இழுக்கு என நினைக்கும் இவன் எங்கே? மற்றவர்களின் பணத்தில் காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்கும் இவன் அண்ணன் எங்கே? ஒரே வயிற்றில் பிறந்தாலும் என்ன வேற்றுமை’ என நினைத்த எழில்மலர்,



“உனக்கு ஒரு வேலை தர்றேன். செய்வியா?” என்றாள்.



“என்னக்கா?” என தமிழ் ஆர்வத்துடன் கேட்க,



“உனக்குக் கம்ப்யூட்டர்ல டைப் பண்ண வரும் இல்லையா? எனக்கு டைப் பண்ணித் தா. நான் கொடுக்கிற ஃபைல்ஸ் எல்லாம் கம்ப்யூட்டருக்கு மாத்தணும்” என அவளால் செய்ய முடிந்த வேலை என்றாலும் அவனுக்கு உதவி புரியும் நோக்கத்தில் அப்படிச் சொன்னாள்.



அதற்குச் சம்பளம் என்று ஓர் தொகையை தன் சம்பளத்தில் இருந்து தந்துவிடலாம் என நினைத்துக் கொண்டாள்.



உடனே சம்மதித்த தமிழ், “தேங்க்ஸ் அக்கா” என அவளை மீண்டும் எப்போது சந்திப்பது எனக் கேட்டுக் கொண்டு கிளம்ப, “இதையெல்லாம் நீ படிக்கிற நேரம் தவிர மற்ற நேரத்தில் தான் செய்யணும்” என்றாள் எழில்மலர். சரியென்று தலையாட்டிவிட்டு உற்சாகமாகச் சென்றான் தமிழ்.



“பரவாயில்லையே. வரவேற்பெல்லாம் சும்மா அதிரடியா இருக்கு உங்களுக்கு. ஆனாலும் அவனோட ஈகோவைப் பாதிக்காத வகையில் வேலை கொடுத்தீங்க பாருங்க. அங்க தான் நீங்க என் மனசுல நிக்கறீங்க” எனப் பரிச்சயமான குரலில் எழில்மலர் சடாரென்று திரும்பிப் பார்க்க, அங்கே கதிர் கன்னத்துக் குழிப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
 

Author: Lavans
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.