அத்தியாயம் -7
எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக வசுதா மும்முரமாக தயாராகிக் கொண்டு இருந்தாள். இதுவரை முதல் இரண்டு இடங்களில் இருந்து வந்தவள் இப்போது முதல் இடத்தை மட்டுமே குறிக்கோளாக மாற்றிக் கொண்டாள். அவளது உற்ற தோழிக்கும் அவளுக்கும் இடையே நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதைக் காலம் தான் நிர்ணயிக்கும்.
பள்ளியில் நடக்கும் மாலை நேர வகுப்புகளில் ஆசிரியர் இன்னும் வராமல் இருக்க, தோழியரின் அரட்டைக் கச்சேரி களை கட்டியது.
"ஏய் வசுதா! லேட்டஸ்டா வந்த நதியா படம் பாத்துட்டியா?"
"ஓய்! என்னைப் பாத்து என்ன கேள்வி கேட்டு வைக்கிற? எங்க வீட்டுல சினிமா பாக்கிறத விட்டுப் பல வருஷம் ஆச்சு. எல்லாம் என் தம்பியால வந்தது. சினிமால வந்த சண்டையெல்லாம், வீட்டுல வந்து போட்டான். அப்பா மொத்தமா சினிமாவுக்கே தடா போட்டாங்க"
"சரி சரி கோவிச்சுக்காத, உனக்காக நான் ஸ்டில்ஸ் கொண்டு வந்து இருக்கேன் பாரு. இதையும் உன் டைரில ஒட்டிக்கோ"
"சீக்கிரம் கொடு, டீச்சர் வந்துடப் போறாங்க" கண்கள் மின்ன அவற்றை வாங்கிக் கொண்டவள், எப்போதும் கூடவே வைத்திருக்கும் டைரியில் ஒட்டி விட்டாள்.
டைரி முழுவதும் விதம் விதமான போஸில் இருந்த நதியாவை கண்களில் நிரப்பிக் கொண்டவள், "ம்ச். டைரி முடிஞ்சு போச்சுடி. அடுத்த டைரி வர நாளாகுமே?" என்று வருத்தப் பட்டாள்.
"நான் கொண்டு வந்து தரேன். இந்தப் படத்தில நதியா போட்டு இருக்க ட்ரஸ் நல்லா இருக்குல்ல"
"அவங்க கம்மல், வளையல் எல்லாம் கூட சூப்பரா இருக்கு. இந்த தடவை லீவுக்கு போகும் போது தாத்தா கிட்ட கேட்கணும்"
"கம்மல் மட்டுமா? டிரஸ் வாங்கலையா டி?"
"இந்த டிரஸ் எல்லாம் வாங்கித் தர மாட்டாங்க" சோகமாகச் சொன்னவளைப் பாவமாகப் பார்த்தனர் சுற்றி இருந்த எல்லோரும். படிப்பில் புலியாக இருந்த வசுதா ஒரு நதியா பைத்தியம், அதுவும் திரையில் பார்க்காமல், செய்தித் தாள்களில் வரும் புகைப்படங்களைக் கொண்டே பைத்தியம் ஆனவள். நதியா ஹேர் ஸ்டைல் கம்மல் வளையல் செயின் என்று கலக்குபவள். காதில் போட்டவை எல்லாம் ஒத்துக் கொள்ளாமல் புண்ணாகிப் போன போதும் நதியாவை விடவில்லை அவள். இருபது வயதில் காது கிழியும் நிலைக்கு வந்தது தான் கண்ட பலன்.
"ஏய் எல்லாரும் அரட்டைய நிப்பாட்டி நேரா உட்காருங்க டி. டீச்சர் வந்துட்டாங்க" அரக்கப்பரக்க ஓடிவந்தாள் ஒருத்தி. டீச்சர் என்றதும் நதியாவை மறந்து, நல்ல பிள்ளையாக எழுந்து, "சரி.. சரி.. , எல்லோரும் வீட்டுப் பாட நோட்டைக் குடுங்க. டீச்சர் அடுக்கி வைக்கச் சொல்லி இருக்காங்க" என்றாள் வகுப்புத் தலைவியாக மாறி.
"அச்சச்சோ நான் வீட்டுப் பாடம் முடிக்கலையே! மறந்தே போச்சே" மறக்காமல் நதியா படங்களை கொண்டுவந்தவள் இவள்.
"ஏய் வசுதா, நீயும் பேசிட்டு தானே இருந்த, சொல்லி இருக்கலாம் இல்ல?" இது இன்னொருத்தி.
"அவளை நம்பாதீங்க, நம்மள மாட்டி விட்டு நல்ல பேரு வாங்கிடுவான்னு சொன்னா கேட்டீங்களா, அனுபவிங்க!" என்று வாழ்த்தினாள் ஒருத்தி. அப்படியெல்லாம் இல்லை என்று இவள் சொன்னதே இல்லை.
"அவளா வந்து உங்க கிட்ட பேசினா? வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு தானே நீங்க அரட்டை அடிச்சிருக்கணும். நீங்க தப்பு பண்ணிட்டு அவளைக் குறை சொல்லுவீங்களா?" பொங்கினாள் சுஜாதா, வசுதாவின் உயிர்த் தோழி.
டீச்சர் உள்ளே நுழைய மொத்த வகுப்பும் அமைதியாக எழுந்து நின்றது.
"வணக்கம் டீச்சர்!"
"வணக்கம்! எல்லாரும் உட்காருங்க. வசுதா அந்த நோட்டெல்லாம் எடுத்துட்டு வா" டீச்சரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, அவர் சொன்ன வேலையை செய்தவள், மெதுவாக அவரிடம் ஏதோ முணுமுணுத்தாள்.
"எழுதி முடிக்காதவங்க எல்லாம் சீக்கிரம் எழுதுங்க. இந்த நோட்டெல்லாம் திருத்தி முடிக்கிறதுக்குள்ள கொடுத்துடணும்" என்று சொல்லி வசுதாவிடம் பேசத் தொடங்கினார்.
"வசுதா! எப்படிப் படிச்சிருக்க?"
"ரொம்ப நல்லா படிச்சிருக்கேன் டீச்சர்"
"எதிலெல்லாம் நூற்றுக்கு நூறு வாங்க முடியுமோ வாங்கணும், சரியா"
"கண்டிப்பா டீச்சர். நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன்"
"குட்! பிள்ளைங்களா, மேப் நோட்ட எடுங்க. இந்தியா மேப்ல, நான் போர்ட்ல எழுதற எல்லா இடத்தையும் குறிங்க பார்க்கலாம். இரண்டு இரண்டு பேரா உட்காருங்க"
சுஜாதாவும் வசுதாவும் பெஞ்சுகளை விட்டுக் கீழே இறங்கி உட்கார்ந்தனர். திடீரென தனக்கு ஏதோ நடப்பதாக உணர்ந்தாள் வசுதா, பேச நினைத்த வார்த்தைகள் வாய்க்குள்ளேயே புதைந்ததன, கை கால்கள் எல்லாம் வெட்டி இழுக்க, "டீச்ச்ச்சர்! வசுதாவுக்கு என்னமோ ஆகுது" தோழியைத் தோள் மீது சாய்த்துக் கொண்டு அலறினாள் சுஜாதா.
டீச்சர்களெல்லாம் தனக்கு சேவகம் செய்வதைக் கண்டும் மறுக்க முடியாத உணர்வற்ற நிலையில் மயங்கத் தொடங்கினாள் வசுதா.
அவள் மயக்கம் தெளிய ஆரம்பித்த போது, "டீச்சர்! நான் வசுதாவோட அம்மா. அவளுக்கு எப்படி இருக்கு?" தாயின் பதற்றமான குரல் கேட்டது. பின்னாடியே அவளது தாத்தாவும் குடும்ப மருத்துவருடன் நின்றிருந்தார்.
அந்தப் பதற்றத்திலும் மருத்துவருடன் வந்த தாயை நினைத்து இப்போது பெருமைப் படும் மனது, அன்றைய தினம் 'இவங்க கூட்டிட்டு வராம, இதுக்காக வேற யாரும் வருவாங்களா என்ன?' என்று குதர்க்கமாகவே நினைத்தது. "தாயைப் போல பிள்ளை" என்று சொல்வதைப் போல இந்த விஷயத்தில் வசுதாவிற்கும் தாயின் நிதானம் பரம்பரை சொத்தாக வந்திருக்கிறது.
"பிள்ளை இப்படி துடிக்கிறான், நீ இப்படி அழுத்தி தேய்க்கணுமா?"
"அச்சோ! கீழ விழுந்த குழந்தையைத் தூக்காமல் தானே எழுந்திரிக்கணும்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கா. இவளெல்லாம் பெத்த தாயா? மனசு பதறாதா?"
"கொஞ்சமாவது அவளுக்குப் பதறுதா பாரு. உடம்பு அனலா கொதிக்குது. பச்சைத் தண்ணில துண்டை முக்கித் துடைச்சிட்டு இருக்கா" என்பது போன்ற அர்ச்சனைகளை வாங்கும் போது தாயின் நினைவு வரும் அவளுக்கு.
--------
இப்போது ஆல்பத்தின் அடுத்த பக்கம், இதெல்லாம் அத்தைகள் மற்றும் சித்திகளின் திருமண புகைப்படங்கள். தாயின் தோற்றத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்ட மாற்றம் கண்ணை உறுத்தியது. இந்தப் புறம் அவர் வீட்டின் மூத்த மருமகள் மட்டும் அல்லாமல் ஒரே மருமகள். பிறந்த வீட்டிலும் அவர் தான் மூத்த மகள், ஒரே ஒரு அண்ணன். இரு வீட்டிலும் வரிசையாகத் திருமணம், சீமந்தம், பிள்ளைப் பேறு என்று ஓயாத பொறுப்புகள். அண்ணியாக அக்காவாக அத்தனைக்கும் வளைந்து கொடுத்து, ஓடி ஓடிக் களைத்து போன போது உடம்பு "நான் இதற்கு மேல் தாங்க மாட்டேன்" என்றது.
"மருமக சொல்லிட்டா அப்பீலே கிடையாது" மாமனார் மெச்சிய மருமகள். குடும்பத்தின் அன்றாட வாழ்வில், சில பல சறுக்கல்களைச் சந்தித்த போதும், கறாராக நாத்திகளிடம் நடந்து கொண்ட போதிலும், செய்ய வேண்டிய முறைமைகளைத் தன் நகைகளை வைத்தாவது செய்து விட்டவர்.
பிறந்த போது அவளது தாத்தா கொடுத்த வசுதாவின் கழுத்துச் சங்கிலி கூட பல வருடங்கள் வங்கியில் தான் "பத்திரமாக" வைக்கப் பட்டு இருந்தது. அந்த வகையில் உயிருடன் இருக்கும் வரையில் நாத்தனார்கள் மெச்சிய அண்ணியாகவும் ஆனார், அதன் பிறகு அவரது செயல்கள் பலவும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதே நிதர்சனம்.
இருந்தாலும், 'என்னிடமும் அதே கறார்த்தனத்தைக் காட்டி இருக்க வேண்டாம்' என்பது தான் வசுதாவின் எண்ணம். "அம்மா! நான் உன் பொண்ணு, நாத்தனார் இல்லை" அடிக்கடி தாயிடம் எரிந்து விழுந்திருக்கிறாள் வசுதா. பிறந்த நாளன்று உடுக்கும் ஆடையைத் தவிர மற்ற எதிலும் அத்தைகளுக்கும் அவளுக்கும் பேதம் என்பது இருந்ததே இல்லை. அதையும் கூட பல முறை அடம் பிடித்தே வாங்கி இருக்கிறாள்.
இப்படியாக கடைசிக் கல்யாணம் முடிந்த போது வசுதா முதுகலைப் படிப்பின் பாதியில் இருந்தாள். தாயும் தந்தையும் எத்தனை கஷ்டத்திலும் படிப்பு வேண்டாம் என்று அவளுக்குத் தடை போட்டதே இல்லை, அந்த வகையில் வசுதா மிகவும் கொடுத்து வைத்தவள் தான். ---------
இந்தப் பக்கம் முழுவதும் அவளது சிறிய அத்தைகளின் பிள்ளைகள். இந்தப் புகைப்படங்கள் எல்லாம் வசுதாவின் கை வண்ணம். பிள்ளைகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளைத்து வளைத்து எடுத்திருந்தாள். அவளுக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்படக் காரணமே இந்தக் குழந்தைகளின் சின்னச் சின்ன செய்கைகள் தான். குழந்தைகளின் உலகம் தான் எத்தனை அழகு. "க்யூட் குட்டீஸ்" என்று கொஞ்சிக் கொண்டாள். அந்தக் குட்டீஸ் எல்லாம் இப்போது கல்யாண வயதில் இருந்தார்கள்.
தாத்தா இறந்து அவரது காரியங்களுக்காக மொத்தக் குடும்பமும் ஒன்று கூடிய போது எடுத்த படங்கள். ஏழு மாதக் குழந்தையில் இருந்து இருபத்து மூன்று வயது இளைஞர் வரை இருந்த தாத்தாவின் பேரன் பேத்திகள். 'அந்த நாளும் வந்திடாதோ?' என்று ஏங்க வைக்கும் படங்கள்.
சாதாரணமாகவே கூட்டமாக இருக்கும் அவர்களது வீடு, கோடை விடுமுறைக் காலங்களில் "ஜே ஜே" என்று இருக்கும். ஒரு நாளில் பாதி நேரம் தெருவிலும் மரங்களின் மீதும் தான் கழியும். இவர்களது ஹைட் அண்ட் சீக் விளையாட்டு முழுக்க முழுக்க மரங்களில் தான் நடக்கும். மரமேறுவதில் போட்டிகள் கூட நடந்திருக்கிறது, காலொடிந்த சம்பவமும் நடந்திருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி இவர்களுக்கிடையே கட்டிப் புரண்டு சண்டையும் நடந்திருக்கிறது. சின்னவர்கள் எல்லாம் இரண்டு நாட்களில் எதுவுமே நடக்காதது போல், புதியதாக மரமேறும் போட்டியில் ஈடுபட அம்மாமார்கள் தான் எதிரியை போல முறைத்துக் கொண்டு அலைவார்கள்.
உப்பு பிஸ்கட், கொய்யா, சப்போட்டா வெள்ளரிப்பிஞ்சு வேர்க்கடலை பட்டாணி இறுக்கிக் கட்டிய மல்லிகைப்பூ முல்லைப் பூ என்று வீடு களை கட்டும். "அவனுக்கு அது பிடிக்கும் இவனுக்கு இது பிடிக்கும்" என்று பார்த்துப் பார்த்து செய்யும் மாமியை யாருக்குத்தான் பிடிக்காது. "என்னை வச்சுத் தானே அவங்களுக்கு நீ உறவு. ஆனால் ஒண்ணாவது மாமான்னு வருதா பாரு எல்லாத்துக்கும் மாமி தான் வேண்டியிருக்கு" வசுதாவின் தந்தை கூடப் பல நேரங்களில் புலம்பியிருக்கிறார். மாமி என்ற உறவில் மூழ்கிப் போய் "வசும்மா! மாமிக்குக் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று கூட அழைத்திருக்கிறார்.
"அதானே உனக்கு என்னைக்குத் தான், நான் உன் பொண்ணு ஞாபகம் வருமோ? பேசாமல் நான் மாமின்னு ஒரு சீரியல் எடுக்கலாம்னு பார்க்கிறேன்" என்று முறைத்துவிட்டு போவாள் இவள். அந்த அளவுக்கு மாமி ரோலில் வசுதாவின் அன்னை தன்னையே மறந்து போவார். அனைவரும் கிளம்பும் போது கொடுத்து விடப் படும் புதுத் துணிகள், வசுதாவின் புது யூனிஃபார்முக்கு வேட்டு வைக்க ஆரம்பிக்க, இவள் தாய் வழித் தாத்தா வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தாள். தனக்கான முக்கியத்துவத்தை அங்கே தனி ஆவர்த்தனமாக நிலை நாட்டினாள்.
அவளது தம்பியோ மாமன் மகனோ தத்தமது தாயில்லாமல் வர மாட்டார்கள் என்பதால் இவளது ராஜ்ஜியம் தான் அங்கே கொடி கட்டிப் பறந்தது.
வசுதாவின் கடைசி சித்திக்கும் அவளுக்கும் இடையேயான வயது மிக மிகக் குறைவு என்றாலும் படிப்பில் சுட்டியாக இருந்த பேத்தியை தாத்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரது பிள்ளையோ பெண்களோ அவர் எதிர்பார்த்த அளவு படிக்காத நிலையில் அவரது கவனம் முழுவதும் ஆர்வமாக படிக்கும் பேத்தியில் நிலைத்தது. அவளுக்குப் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தார், நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். "படி படி" என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது.
இப்படியெல்லாம் அவளது ஆர்வத்தை தூண்டிய தாத்தா அவளது மருத்துவ நுழைவுத் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக இறந்து போனார். வீட்டின் சூழ்நிலை கருதி அவளால் தேர்வெழுத முடியாமல் போக, கலர் கலரான டாக்டர் கனவுகளில் மிதந்த அவளது நிலைமை "நானும் டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன்" என்ற புலம்பலோடு நின்றுவிட்டது.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று தனக்குப் பிடிக்காத இயற்பியலில் முட்டி மோதி இளங்கலை முடித்த போது அவளது குறிக்கோள் ஐஎஸ்ஆர்ஓவில் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்று மாறி இருந்தது. அதற்கேற்ற முதுகலைப் பட்டத்தை தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெற்றுவிட்டவளுக்கு வீட்டில் போதிய ஆதரவு இல்லாததால் வேறு வழியில் பயணிக்க வேண்டிய தாயிற்று. இந்த மாற்று வழியில் அவளது ஆர்வம் குறையாதவாறு தந்தை வழித் தாத்தா பார்த்துக் கொண்டார்.
"அம்மா! நீ நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும். அதுக்கு நிறைய முயற்சி பண்ணனும்"
"தாத்தா போன வாரம் தானே நமக்கு எது கிடைக்கணுமோ அதுதான் கிடைக்கும்னு சொன்ன. இந்த வாரம் அப்படியே மாத்தி பேசற"
"அப்படி இல்லம்மா. கிடைக்காததை நினைத்து வருத்தப் படுறதை விட, இனிமே என்ன செய்யணும்னு தெளிவா யோசிக்கலாமே. உனக்கு நிறைய டைம் இருக்கு நல்லா படி, கலெக்டர் ஆகணும்னு முயற்சி பண்ணு. வேற வேலை எதுக்கும் போகக்கூடாது. அவளை வேலைக்கு அனுப்பாதே, கலெக்டர் ஆகணும்னு நான் உங்க அப்பாகிட்ட கூட சொல்லி இருக்கேன் தெரியுமா?"
"ஓ தேங்க்ஸ் தாத்தா. நான் கண்டிப்பா உங்க ஆசையை நிறைவேத்துவேன். உங்க உடம்ப நல்லா பாத்துக்கோங்க. அப்போ தான் நான் கலெக்டரா வரும் போது என் கூடவே வர முடியும்"
"சரிம்மா.. சரி" என்றவர் அவள் முதுகலை படிப்பை முடிக்கும் முன்னே இறந்து போனார்.
------
இவையெல்லாம் அவளது வசந்த காலத்தின் அடையாளங்கள். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய போது எடுத்த படங்கள். இதுவரை பார்த்த வேலைப் பளுவின் காரணமாக வசுதாவின் தாய் வீல்சேரோடு முடங்கி இருக்க, இவள் முதுகலை படிப்பை முடித்து இருந்தாள்.
இதுவரை அடுப்படி எந்தத் திசையில் என்று கேட்டுக் கொண்டு இருந்தவள் தலையில், சமையல் உட்பட மொத்த வீட்டு வேலைகளும் விழுந்தது. தம்பி முதுகலையில் அடியெடுத்து வைத்திருக்க, இவளுக்கு அடுத்தது என்ன என்று பெரிய சர்ச்சை நடந்தது அங்கே.
"பா! நான் சிவில் சர்வீசஸ் எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ணப் போறேன். ஐஏஎஸ் ஆகணும், தாட் இஸ் மை அல்டிமேட் கோல். தாத்தா சொல்லி இருக்காங்க"
"இதோ பாரு வசும்மா! என்ன வயசு ஆகுதுன்னு ஞாபகம் இருக்கா உனக்கு? இந்த வயசுல எனக்கு தம்பியே பிறந்துட்டான். இன்னமும் சும்மா படிக்கணும் படிக்கணும்னு சொல்லிட்டு இருக்காத, படிச்சதெல்லாம் போதும். நல்ல நாள் பார்த்து உன் ஜாதகத்தை எடுக்கணும்"
"ஹான்…. தம்பியே பிறந்துட்டான், அப்புறம் வேற என்ன சாதிச்சிட்ட நீ. அப்படியே வீட்டுக்குள்ள சுத்தி சுத்தி அந்தக் கல்யாணம், இந்த சீமந்தம் அடுத்து பிரசவம்னு ஓடி ஓடி இதோ நாப்பத்தைஞ்சு வயசுல வீல் சேர்ல உட்காந்து இருக்க. என்னால இப்படி எல்லாம் இருக்க முடியாது மா. நான் சிவில் சர்வீஸூக்குப் பிரிப்பேர் பண்ணத்தான் போறேன். அது வேண்டாம்னு சொன்னால் வேலைக்குப் போவேன். இப்போதைக்கு எனக்கு கல்யாணம் எல்லாம் கண்டிப்பா வேண்டாம். ஒரு ரெண்டு வருஷமாவது ஆகட்டும்"
"இப்போ ஜாதகம் எடுத்தா உடனே எல்லாம் அமைஞ்சிடுமா? ஆறு மாசமாவது ஆகும்"
"ஓகே, ஆறு மாசம் ஆகும். வர்றவங்க கேட்கிறதெல்லாம் கொடுக்கிறதுக்கு ஏதாவது வச்சிருக்கியா? உன் காதுல கழுத்தில இருக்கிறது மட்டும் தான் மிச்சம், ஞாபகம் இருக்கா? கையில பாரு தேய்ஞ்சு போய் வளையல்னு பேருல ஒரு வளையம். இதை வச்சு என்ன செய்யலாம், ஒரு வேளை என் அழகுல மயங்கி எதுவுமே வேண்டாம்னு சொல்ற யாரையாவது எதிர் பார்க்கிறியோ? அதுக்கு நான் உன் கலர்ல இருந்திருக்கணும்"
"பாருங்க இவளை எப்படிப் பேசறான்னு!"
தாய்க்கும் மகளுக்கும் இடையே விழி பிதுங்கி நின்றவரைப் பஞ்சாயத்துக்கு அழைத்தால் அவர் என்ன தான் செய்வார். மனைவியின் கவலை அவருக்கு புரிந்தாலும் வீட்டு நிலைமையை பாயிண்ட் பாயிண்டாக அள்ளி விடும் மகளை மறுத்துப் பேசவும் முடியவில்லை இரண்டு நாட்கள் விஷயத்தை ஆறப் போட்டவர், மூன்றாம் நாள் மகளிடம் ஒரு கடிதத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
இவளது வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் அது. உள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டு இருந்த கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டு இருந்தது அவளுக்கு. அவள் எதிர் பார்த்த சாஃப்ட்வேர் துறைக்கு உள்ளூரில் வாய்ப்பு இல்லாததால் கிடைத்த பணியை ஏற்றுக் கொண்டாள்.
வசுதாவிற்குமே தாயின் வருத்தங்கள் எல்லாம் புரிந்தாலும், தன்னால் இயன்றவரை வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். வீட்டில் நடந்த ஒவ்வொரு திருமணத்திற்கும் அதன் பிறகு நடந்த எல்லா விசேஷங்களுக்கும் சீர் செய்ய வேண்டும் என்று பெற்றோர் திணறியதை அவள் அறிவாள். இத்தனைக்கும் இடையே அவளையும் அவளது தம்பியையும் நன்றாகவே படிக்க வைத்திருந்தார்கள். தனது திருமணம் என்பது தந்தைக்குப் பெரிய சுமையாக இருந்துவிடக்கூடாது என்பதே அவளது நினைப்பு.
அதுவுமில்லாமல் இத்தனை காலம் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த தாயை சக்கர நாற்காலியில் பார்க்கும் போது, அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. அவள் கேட்காமலேயே அவளது அனைத்து தேவைகளையும் முடிந்தவரை பூர்த்தி செய்த தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஞானோதயம் பிறந்தது. கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று கூட நினைத்தாள், அப்படியிருக்க பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் தற்காலிகமாக தள்ளிப் போட்டாள்.
முதல் நாள் வேலை, இதோ நன்றாக உடுத்துக் கிளம்பி விட்டாள். இதுவரையில் பெண்கள் பள்ளி, கல்லூரி என்று முழுவதும் பெண்களையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு, இரு பாலாருக்குமான கல்லூரி மிகவும் புதிதாகத் தெரிந்தது. பாடத்தைக் கற்றுக் கொடுத்ததோடு இவளும் வாழ்க்கையின் பல கோணங்களைக் கற்றுக் கொண்டாள் என்றே சொல்லலாம்.
இரண்டு வருடங்கள் சென்றிருக்கும். வசந்த காலத்தை நீண்ட நாட்கள் அனுபவிக்க விடாமல், அவளுக்கு வரன் தேடும் பணியை ஆரம்பித்து விட்டார்கள். வந்தவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் இவர்களை ஸ்தம்பிக்க வைத்தது. பெண் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்ற கண்டிஷனைச் சொன்னவர்கள், இவளது வேலையைச் சொன்னதும், "பொண்ணு ஏன் ஐடி வேலைல இல்லை. இந்த ஊர்ல எல்லாம் லெக்சரர் ஜாப் கிடைக்காது. இரண்டு பேரும் வேலைக்கு போனால் தான் குடும்பம் நடத்த முடியும்" இது பெரிய குடும்பத்தில் கடைசிப் பையனாகப் பிறந்து விட்ட சிங்கப்பூர் மாப்பிள்ளை. பெண் பார்க்கவே முப்பது பேருடன் வந்தவன். ஊருக்குப் போய் யோசித்து ஒத்து வராது என்று சொன்னார்கள்.
அடுத்தவன் ஹாங்காங் மாப்பிள்ளை அம்மா அப்பா பையன் என மூவர் மட்டுமே பெண் பார்க்க வந்திருந்தனர். பையனுக்கு அக்கா போல் இருந்த அம்மாவை பார்த்து வாயைப் பிளந்தாள் வசுதா. பெண்ணுக்கு மட்டும் அல்லாமல் குடும்பத்துக்கே சோசியலைஸ் செய்ய தெரியவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டு. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தென்தமிழகத்தின் நாகரீகம் பிடிக்காது தான்.
தாயின் உடல்நிலையில் சற்றே இறக்கம் ஏற்பட இவளுக்கு வரன் ஒன்றும் அமையாததும் சேர்ந்துகொள்ள ஜோசியரிடம் படையெடுத்தார்கள். அவர் சொன்ன பரிகாரங்களை எல்லாம் சிரத்தையுடன் கேட்ட போது ஒரு வார்த்தை மட்டும் வசுதாவிற்கு உறுத்தலாகவே இருந்தது. பெண்ணிற்கு திருமணம் ஆகி வெளியேறிவிட்டால் தான் தாயின் உடல்நிலையை நேர்மறையான மாற்றங்கள் நிகழும். தாயும் பெண்ணும் அருகருகே இருப்பது தாய்க்கு நல்லதல்ல என்பது அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது
'நான் அம்மான்னு கூப்பிடறதால தானே இந்த பிரச்சனை, பேசாம அம்மான்ற வார்த்தையையே யூஸ் பண்ணலேன்னா சரியாகிடுமா?' என்று கூட யோசித்து இருக்கிறாள். ஒரு நாள் இந்த ஆக்கப்பூர்வமான யோசனையைத் தாயிடம் சொல்லி விட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
"நிறைய படிச்சிருந்தா இப்படித்தான் லூசுத்தனமா யோசிக்கச் சொல்லும். நான் அம்மான்னு ஆனதே உன்னால தான் டி. நீ கூப்பிடாமல் யார் கூப்பிடுவா. போ… போய் உருப்படியா ஏதாவது வேலையை பாரு"
பரிகாரங்கள் தொடர்ந்ததில் வசுதாவிற்கு ஏற்ற வரனைக் கண்டுபிடித்து இருந்தார்கள். இதிலும்கூட விஷ்ணுவின் படிப்பு அவனுக்கு ஒரு குறையாக இருக்க, வசுதாவோ "கல்யாணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே ஒழிய, அவர்கள் படித்த படிப்பிற்கு அல்ல" என்று ஒதுக்கிவிட்டாள்.
பெண் பார்ப்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் நாங்கள் மாப்பிள்ளையின் பெற்றோர் என்று நிரூபிக்க முயன்றனர், விஷ்ணுவின் பெற்றோர். அவர்களது சமூகத்தில் திருமணச் செலவுகள் யாவும் பெண் வீட்டைச் சேர்ந்தது. "எங்களால ஒவ்வொரு விஷயத்துக்கும் ஊருக்கு வரமுடியாது, பெண்ணை இங்கே அழைத்து வந்து காட்டுங்க. நிச்சயதார்த்தமும் கல்யாணமும் உங்க ஊர்லயே வச்சுக்கலாம். செலவு பத்தி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றனர். பெண்ணைப் பெற்றவர் வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள, வசுதா வரமுடியாது என்று ஒற்றைக் காலில் நின்றாள். "அம்மாவால எங்கேயும் வர முடியாது. அவங்க இங்கே வந்து பார்க்க இஷ்டம் இருந்தால் வரட்டும். நான் எங்கேயும் வர்றதா இல்லை"
சாம தான பேத முறைகளைக் கையாண்டு அவளைச் சமாதானப் படுத்தி சென்னையில் ஓர் அத்தை வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் பார்க்கும் படலத்துக்கு, மகனுடன் வந்த விஷ்ணுவின் பெற்றோர் நாலு லிட்டர் கஞ்சியைக் குடித்தது போல இருந்தனர். வார்த்தைகளை எண்ணி எண்ணிப் பேசிய விஷ்ணுவின் தாயையும் சுற்றி இருக்கும் யாரையும் எண்ணாமலே மடை திறந்த வெள்ளமாகப் பேசிய விஷ்ணுவின் தந்தையையும் ஆச்சரியமாகப் பார்த்தாள் வசுதா. அவர்களது பேச்சிற்கு நடுவே விஷ்ணுவும் அவனுடன் வந்த நண்பனும் கூட சில பொதுவான வார்த்தைகளைப் பேசினார்கள்.
சிரித்த முகத்துடன் இருந்த விஷ்ணுவை வசுவிற்கும் பிடித்துவிட இதோ இருவரும் தனியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். "தனியா பேசச் சொல்லிட்டு உங்க அத்தையும் அவங்க பொண்ணும் ரூம் வாசலிலேயே நின்னா என்னத்த பேச முடியும்?" என்றான் விஷ்ணு. 'இவங்க அம்மா கூட அவளோட நின்னு பேசிட்டு இருக்காங்க. சொல்லப் போனா அவங்க தான் அவளை கூட்டிட்டு வந்தாங்க. இது இவன் கண்ணுக்குத் தெரியலையாக்கும்' என்று மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்தாள்.
வேலைக்கு போகவேண்டும் என்ற கண்டிஷனை தவிர மற்ற எதையும் பேசாமல், அறையை விட்டு வெளியே சென்றவன், பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
------
அவளது நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேற, கல்யாணத்தில என்னென்ன செய்ய வேண்டும் என்ற பேச்சு வார்த்தை இரு அம்மாக்களுக்கும் இடையே தொடங்கியது. அதனைத் தனது அறையில் இருந்து ஒட்டுக் கேட்டாள் வசுதா. அவளது தாய் வழக்கம் போல ஒன் மேன் ஆர்மியாகச் செயல்பட அந்தப் பக்கம் பாயிண்டுகளை எடுத்துக்கொடுக்க பத்துப் பேர் சுற்றி இருந்தனர்.
"எங்க பொண்ணுக்கு 40 பவுன் நகையும் 2 கிலோ வெள்ளி பாத்திரமும் கொடுத்திருக்கோம். வைரத்தோடு வைர மூக்குத்தி மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் இதெல்லாம் தவிர தனியா வைக்கும் போது கட்டில் பீரோல இருந்து வீட்டுக்கு தேவையான பண்டம் பாத்திரம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்"
'லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே'
"உங்க பொண்ணு எங்க இருக்காங்க. என்ன வேலைக்கு போறாங்க" வசுதாவின் அம்மா பாயிண்ட்டைப் பிடிக்க,
"சேச்சே... என் பொண்ணு எதுக்கு வேலைக்கு போகணும் அதான் எங்க மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறாரே?"
'இவரோட பையன் அந்த மாதிரி சம்பாதிக்கலையோ?'
"இங்க பாருங்க சம்மந்தி! உங்க பொண்ணுக்கு அவ்வளவு செஞ்சிருக்கீங்கனு சொல்றீங்க. அதை அளவுகோலா வச்சு நான் என் பொண்ணுக்கு செய்ய முடியாது. என் பொண்ணுக்கு என்ன செய்யணுமோ அத நான் கண்டிப்பா செய்வேன். இன்னும் சொல்ல போனா அவ வேலைக்கும் போகப் போறா. இந்த சம்பளத்தை எல்லாம் எங்க கிட்ட வந்து குடுன்னு நாங்க கேட்க மாட்டோம். அதெல்லாம் உங்களுக்கு வருமானம் தானே"
'வாவ் சூப்பர் மா. தூள் கிளப்புற'
இதையெல்லாம் எதிர்பார்க்காத விஷ்ணுவின் தாயும் மாப்பிள்ளையின் அம்மா என்ற கெத்து குறையாமல், "எனக்கு இருக்கிறது ஒரே பையன், அவன் இதையெல்லாம் கேட்கக் கூடாதுன்னு தான் சொன்னான். அதுக்காக நாம அப்படி விட்டுவிட முடியுமா? செய்யறத நல்லா செய்யுங்க. அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்று முடித்துவிட்டார்.
'பரவாயில்லையே இந்த விஷ்ணு அம்மா கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கானே' என்று மெச்சிய போதே 'ஒருவேளை பெண் பார்க்க வந்த போதே இந்த விஷயங்கள் எல்லாம் பேசி இருந்தால் இந்த மாமியார் அம்மா நம்மள வேண்டாம்னு சொல்லி இருப்பாங்களோ?' என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
-----
அடுத்தது திருமணம் தானே. தேவைகள் எல்லாம் பட்டியலிடப்பட்டு எங்கு வாங்குவது எப்போது வாங்குவது என்ற பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருந்தது. இதில் தான் வசுதா தனது தாயின் மேலான கோபத்தை மொத்தமாகக் காட்டினாள். இதுவரை வீட்டில் நடந்த கல்யாணங்களுக்கெல்லாம் ஓடி ஓடி நகை வாங்குவது, துணிமணிகள் வாங்குவது, பாத்திரம் பண்டம் என்று எல்லாவற்றையும் அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளாது தானே செய்தவர் தனது ஒரே பெண்ணின் கல்யாணத்திற்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.
"எல்லாருக்கும் செஞ்ச, எனக்கு மட்டும் நானே போய் வாங்கணுமா? முடியாது போ!" முகத்தை திருப்பிக் கொண்டு போனவள் ஒருவாரமாக மௌனவிரதம் காத்தாள். தாயோ தந்தையோ சமாதானத்திற்கு வந்தபோது காது கொடுத்துக் கேட்கவே இல்லை. நாட்கள் மெல்ல நகர்ந்து, உற்றார் உறவினர் எல்லாம் திருமண ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்க ஆரம்பித்தனர். பதில் சொல்ல முடியாது பெற்றோர் தவிக்கையில் வசுதாவிற்கு சங்கடமாக இருந்தது.
'ஒருவேளை சின்ன வயதில் இருந்து அம்மாவைச் சரியாக புரிந்து கொள்ளாமல் ஒதுக்கி உதாசீனப்படுத்தியதன் விளைவு தான் இதுவோ, எனக்கான பனிஷ்மெண்ட்டோ இது?' என்று அவளது மனம் மாற்றுப் பாதையில் சிந்திக்க ஆரம்பித்தது 'அப்படியே தான்' என்று அடித்துச் சொன்னது மனசாட்சி.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் மாமனாரிடம் அனுமதி பெற்று வசுதாவிடம் போனில் பேச ஆரம்பித்த விஷ்ணுவும் அவளுடைய வருத்தங்களை புரிந்து கொண்டு சமாதானமாகப் பேச ஆரம்பிக்க, இவளும் தாயின் பக்கம் இருந்து யோசிக்கலானாள்.
வேண்டாவெறுப்பாக கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தவள், பின்னர் அதில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்தாள். ஆனாலும் சில நேரங்களில், பார்த்து வாங்கத் தெரியாமல் திணறித்தான் போனாள். உடன்வந்த அவளது தந்தைக்குமே எதை எப்படி வாங்க வேண்டும் என்ற விஷய ஞானம் இல்லாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. அந்த அளவிற்கு வசுதாவின் தாய் பாரங்களைச் சுமந்து இருந்தார்.
வசுதாவின் வீட்டில் அடுத்த தலைமுறையின் முதல் கல்யாணம். வீடு சொந்த பந்தங்களால் நிறைந்து ஜேஜே என்று இருக்க, இளைஞர் பட்டாளம் குதூகலமாக இருக்க, பார்த்திருந்த வசுதாவின் முகத்தில் கல்யாண களை வந்தது. கல்யாணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள் என்றாலும், அந்த நாளின் ஞாபகங்கள் சிலருக்கு சந்தோஷமாகவும் மற்றவருக்கு வேறாகவும் அமைந்துவிடும். வசுதாவிற்குத் திருமணத்தைப் பற்றிய எத்தனையோ நல்ல விஷயங்கள் ஞாபகம் இருந்தாலும், புகைப் படங்களைப் பார்க்கும்போது அன்று அவள் பயந்த விதம் தான் ஞாபகம் வரும், சுற்றி இருந்தவர்களின் முகபாவனைகள் அவளை பயப்பட வைத்தது.
விஷ்ணுவின் மற்ற உறவினர் எல்லாம் இவர்களோடு குறிப்பாக இவளோடு கலகலப்பாக பேச அவனது தாயும் தங்கையும் 'நான் மாமியாராக்கும்' 'நான் நாத்தனாராக்கும்' என்று அவர்களது கெத்து குறையாமல் பார்த்துக் கொண்டனர். அதை அவர்களின் முகத்திலும் வெளிப்படுத்தியது தான் கல்யாண உற்சாகங்களைக் குறைப்பது போல இருந்தது. சிற்சில நிகழ்வுகளிலும் உற்சாகத்தைக் குறைக்கும் வகையில் பேசியோ செயல்பட்டோ இருந்தார்கள்.
"மா! தயவுசெஞ்சு இந்த ஃபோட்டோ எல்லாம் எங்களைப் பார்க்கச் சொல்லாத. கான்ஜூரிங் படம் கூடப் பாத்துடலாம். இதையெல்லாம் கண் கொண்டு பாக்கவே முடியாது" அர்ஜூனும் ஆதித்யாவும் அவளது திருமண ஆல்பத்தையே ஒளித்து வைத்து விடுவார்கள்.
இத்தனையையும் தாண்டி வசுதா - விஷ்ணு திருமணம் நடந்து முடிந்திருக்க இதோ மணமக்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. என்றுமே எதற்குமே அழாத வசுதா இதனையும் சாதாரண நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாள். தந்தை அழுது விடுவாரோ என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளை அப்படியே உருக வைத்தது அவளது தாயின் கலங்கிய கண்கள்.
'அம்மா அழுகிறாளா!!!' ….
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.