• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -7

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
475
39
43
india
அத்தியாயம் – 7
அப்போது மாசிடோனியா நாட்டின் அரசர் பெர்டிகாஸ். பெர்டிகாஸின் சகோதரர் பிலிப்.
கிரேக்கர்களை விட மாசிடோனியர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் கிடையாது என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியை உள்ளுக்குள் நெருப்பாய் வளர்த்துக் கொண்டவர்.
தனது பதினைந்தாவது வயதில் மாசிடோனியாவின் தலைநகரான பெல்லாவில் இருந்து தீபு தீவுகளுக்குச் சென்று, தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
முதலில் மொழி. மாசிடோனியர்கள் என்றாலே கொச்சையாகப் பேசுகிறவர்கள் என்ற கூற்றை மாற்றியே தீர வேண்டும் என்பது அவரது முதல் எண்ணம். எனவே தீவிர மொழிப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆர்வமும், வேகமும் சேர்ந்து கொள்ள இதனை ஒரு வேள்வியைப் போல நினைத்துக் கற்கத் தொடங்கினார்.. கிரேக்க மொழியில் அற்புதமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.
மொழிக்குப் பிறகு போர்ப் பயிற்சிகள். ஆயுதங்களை லாவகமாகக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றார். போர் நுணுக்கங்கள் மற்றும் அதன் வித்தைகளைக் கற்றார்.
மூன்றே ஆண்டுகளில் மிகச் சிறப்பான பயிற்சியைப் பெற்று, அனைவரும் அதிசயக்கத்தக்கவிதமான தேர்ச்சியைப் பெற்றிருந்தார்.
அவருக்கே முழுதிருப்தி கிடைத்த பிறகு தனது தாயகத்திற்குத் திரும்பினார். தமையன் பெர்டிகாஸைச் சந்தித்தார். தனது பயிற்சிகளை விலாவாரியாக எடுத்துரைத்தார். அதனைச் செயல் விளக்கமாகவும் செய்து காண்பித்து அரசனை வியப்பில் ஆழ்த்தினார்.
சகோதரர் அற்புத ஆற்றலுடன் உருமாறி வந்திருப்பதைக் கண்டு வியந்து போன அரசர் பெர்டிகாஸ், “உனக்கு என்ன வேண்டும்? தயங்காமல் கேள். அதனைத் தருவதற்கு நான் காத்திருக்கிறேன்” என்றார் உணர்ச்சி பொங்க.
பிலிப்பும் தயங்காமல் பதிலளித்தார்: “இந்நாட்டின் படைத்தளபதியாக அமரும் அரிய வாய்ப்பைத் தாங்கள் எனக்கு அளிக்க வேண்டும்.”
இதைக் கேட்ட மன்னர், “தந்தேன் உனக்கு. இப்போது முதல் மாசிடோனியாவின் படைத்தளபதி பிலிப்” என்று மொழிந்தார்.
அதுவரையிலும் அங்கு பெயருக்குத்தான் படை இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்புறம் படை வீரர்களுக்குச் சிறப்பான பயிற்சியை அளிப்பதில் பிலிப் முன்னணியில் இருந்து செயல்பட்டார். தான் கற்ற அனைத்துப் பயிற்சிகளையும் அனைத்து வீரர்களுக்கும் பதினெட்டு வயதே நிரம்பிய அந்த படைத்தளபதி கற்றுக் கொடுத்தார்.
மாசிடோனியப் படை இப்போது சொல்லிக் கொள்கிற அளவிற்குத் தலைநிமிர்ந்து நின்றது.
இந்நிலையில் கி.மு. 359ஆம் ஆண்டு இல்லீரியா என்னும் பகுதியில் மலை ஜாதி மக்களோடு மாசிடோனியப் படைகள் பெரும் போரை நடத்த வேண்டி வந்தது.
கடுமையாக நடந்த அந்தப் போரில் மன்னர் பெர்டிகாஸ் வீரமரணத்தைத் தழுவினார். வழக்கமான முறைப்படி மன்னர் பெர்டிகாஸின் மகன் அமிண்டாஸ் அரசராக முடிசூட்டப்பட்டார்.
இந்தச் சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிலிப்பின் சொல்படியே அமிண்டாஸ் செயல்பட வேண்டிய நிலை உருவாயிற்று. அரசராக அமிண்டாஸ் இருந்தாலும், நிழல் அரசராக பிலிப்தான் செயல்பட்டு வந்தார். நாட்டின் ஒவ்வொரு முக்கிய முடிவையும் பிலிப்தான் எடுத்தார். விரைவில், அமிண்டாஸ் பொம்மை அரசராக மாற்றப்பட்டு விட்டான். அதனை உறுதி செய்த பிறகு ராணுவ ரீதியாக நாட்டைப் பலப்படுத்துவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார் பிலிப்.
அன்றைய காலக்கட்டத்தில் மாசிடோனியா பொருளாதார ரீதியாக அத்தனை வளமாக இல்லை. எனவே பிலிப் நினைத்தது போல படைபலத்தைப் பெருக்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இல்லாத நிலை. நிதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
பாங்கியஸ் என்றொரு தீவு அருகே இருந்தது. அங்கு தங்கச் சுரங்கங்கள் அதிகம். அதனைக் கைப்பற்றி விட்டால் பொருளாதாரப் பிரச்சினைகளை எளிதாகச் சமாளித்து விடலாம்.
அத்தீவைக் கைப்பற்றுவதற்கு முன்பாக, அதன் வாசல் புறமாக இருந்த ஆம்ப்பி பொலிஸ் என்னும் நகரைக் கைப்பற்ற வேண்டும். பிலிப்பின் முதல் போர் தொடங்கியது.
ஆம்ப்பி பொலிஸ் மிக எளிதாக அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அடுத்து பாங்கியஸ் தீவு. அதனையும் எளிதாக வென்றாயிற்று.
தனது சாதனை, காலம் காலமாகப் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நினைப்பு வரவே, அத்தீவின் பெயரை, ‘பிலிப்பி’ என்று மாற்றினார். அங்கிருந்த தங்கத்தால் மாசிடோனியாவில் செல்வம் செழித்தோங்கி, தேனாறும் பாலாறும் பாய்ந்தோடியது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
பணபலத்தின் உதவியால் தனது படை பலத்தை, தான் நினைத்தவாறு உருவாக்கினார். அதன் கட்டமைப்பை வலுப் பெறச் செய்தார்.
இப்போது மாசிடோனியப் படை கிரேக்கப் படைகளை விட உறுதியாக மாறியது. அடுத்தது என்ன என்பதை யோசிக்க ஆரம்பித்தார் பிலிப். மாசிடோனியாவிற்கு அரசராக வேண்டும். தனது கடின உழைப்பும், முயற்சியும், அறிவுத்திறனும் பிற்காலத்தில் தன் பெயரைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, அமிண்டாஸ் பெயரையா சொல்ல வேண்டும்?
நேராக அமிண்டாஸை அகற்றி விட்டு அரியணையில் அமர்ந்தார் பிலிப். இது மிக எளிதாகவே முடிந்தது. தன்னைத்தானே மாசிடோனியாவின் அரசராக அறிவித்துக் கொண்டு, முடி சூட்டிக் கொண்டார்.
ஆனால் தனது அரச பதவியை எந்தவிதப் பழிச் சொல்லும் வராதபடியும், மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்கிற விதமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.
அதற்கான திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தார். மன்னர் பெர்டிகாஸைக் கொன்ற இல்லீரியா மீது போர் தொடுத்து, வெற்றி ஈட்டி விட்டால், தனது வீரம் நிரூபிக்கப்பட்டு விடும். கூடவே தனது அண்ணனும், மன்னருமான பெர்டிகாஸைக் கொன்றவர்களைப் பழி வாங்கியவன் என்ற பேரும் கிடைத்து விடும். இதன் மூலம் மக்களின் அபிமானத்தையும், அமோக அங்கீகாரத்தையும் எளிதாகப் பெற்று விடலாம். தனது அரச பதவிக்குப் பிரச்சினை ஏதும் வராமல் தடுத்தும் விடலாம்.
“வீரர்களே! நாம் இப்போது அறிவிலும், வீரத்திலும் சிறந்தவர்களாகத் தேர்ச்சி பெற்று விட்டோம். இதற்கு மேலும் நாம் நமது வீரத்தை விவேகத்துடன் நிலைநாட்டத் தவறினால், பிற நாட்டவர்களுக்குக் காலம் முழுவதும் பணிந்தே இருக்க வேண்டும். எனவே இப்போது நாம் நமது வீரத்தை உலகுக்குக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. எனது அண்ணனை, நமது பேரரசர் பெர்டிகாஸைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்கான தக்க சமயம் இது. வீறு கொண்டு எழுவோம். இல்லீரியாவை வென்றெடுப்போம்” என்று வீரர்கள் மத்தியில் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார் பிலிப்.
இவரது செயல்பாட்டிற்கு படை வீரர்கள், பொதுமக்கள் என்று அனைவருமே சம்மதம் தெரிவித்ததோடு, உற்சாகமும் அடைந்தனர்.
அரசரான பிறகு நடக்கும் முதல் போர். அதில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்காக சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. நீண்ட நேர பூஜை முடிகிற வரையில் வீரர்கள் துடிப்புடன் காத்திருந்தனர்.
பின்னர், பிலிப் தலைமையில் மாசிடோனியப் படைகள் இல்லீரியாவை நோக்கி ஆக்ரோஷத்துடன் சென்றன. தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி இந்தப் போரில் வெற்றி பெற்றே தீருவது என்ற வைராக்கியம் நிறைய இருந்தது. காரணம் இதுதான் அவரது வருங்கால வாழ்க்கையை நிச்சயப்படுத்தும் ஒரு முக்கிய தருணம்.
அசைக்க முடியாத போர் வியூகங்கள்! அதிரடியான தாக்குதல்கள்! பலமுனைத் தாக்குதல்கள்! குதிரைப்படையின் அற்புத சாகசங்கள்!
பெர்டிகாஸை மிக எளிதாகத் தோற்கடித்த இல்லீரியர்கள் இப்போது திணறினர். பல நாட்கள் கடுமையான போர். எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்தும் இல்லீரியா வெகு விரைவில் மாசிடோனியர் வசமானது.
வெற்றியை மதுபானத்துடன் பிலிப்பும் அவரது படையினரும் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வீரன் ஒருவன் அங்கே வந்தான்.
அரைகுறை மதுமயக்கத்தில் இருந்த பிலிப், “வீரனே! என்னவோ செய்தி கொண்டு வந்திருப்பது போலத் தெரிகிறது. என்ன செய்தி?” என்று சற்று உளறலுடன் கேட்டார்.
“மகிழ்ச்சியான செய்தியுடன் வந்திருக்கிறேன் அரசே!” என்றான் வீரன் பவ்யமாக.
“இல்லீரியாவை வென்றதை விட மகிழ்ச்சியான செய்தியா? ஹஹ்ஹஹ்ஹா...” என்று இன்னும் ஓங்கிச் சிரித்தார் பிலிப்.
“ஆமாம். தங்கள் குதிரை ஒலிம்பியாட் பந்தயத்தில் முதல் பரிசை வென்றுள்ளது!”
இந்தச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார் பிலிப். “ஒரே நாளில் நம்பவே முடியாத இரண்டு வெற்றிகள். இன்று என் வாழ்நாளில் மறக்கவே முடியாத நாள்” என்று கூறியபடி, கோப்பையில் இருந்த மதுவை ஒரேயடியாக தொண்டையில் சரித்தார். .
சந்தோஷத்தின் உச்சியில் இன்னொரு கோப்பை மதுவையும் பருகிக் கொண்டிருந்தபோது, மற்றொரு வீரன் குதிரையில் இருந்து வேகமாக பிலிப்பை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனது பரபரப்பு, இன்னுமொரு முக்கியமான சேதி ஒன்றைச் சுமந்து கொண்டு வந்தது போலத் தெரிந்தது.
“நீ என்ன சேதியைக் கொண்டு வந்திருக்கிறாய்? சொல்” என்றார் பிலிப் பாதி மயக்கத்தில்.
“அரசே! தாங்கள் தந்தையாகி இருக்கிறீர்கள். மகாராணி ஒலிம்பியாஸ் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார்” என்றான் வீரன்.
அவ்வளவுதான், பிலிப் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.
“எனக்கு மகன் பிறந்திருக்கிறான். நான் தந்தையாகி இருக்கிறேன். அதுவும் எப்போது? வெற்றி மேல் வெற்றியாக செய்திகள் வந்து என்னை உற்சாகக் குளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான, ஈடிணையற்ற ஒரு தருணத்தில் எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அதிர்ஷ்டக்காரன்! வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றியாகக் குவிக்கப் போகிறான் அவன். உடனடியாக என் மகனை நான் பார்க்க வேண்டும். அவன் திருமுகத்தைப் பார்த்து ஆனந்தமடைய வேண்டும்” என்று குதூகலமாக அரண்மனை நோக்கிப் புறப்பட்டார் பிலிப்.
பெல்லா நகரமே உற்சாகத்தின் அரவணைப்பில் கிறங்கிப் போய்க் கிடந்தது. தெருவெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் சந்தோஷ நதியில் மூழ்கிக் கிடந்தனர்.
களிப்பில் திளைத்துக் கிடந்த மக்கள், குதிரையில் சீறிப் பாய்ந்து வந்த மன்னர் பிலிப்பைப் பார்த்ததும் இன்னும் மகிழ்ச்சி பொங்க, “மாமன்னர் பிலிப் வாழ்க!” என்று கோஷங்களை முழங்கினார்கள்.
படை அதிகாரிகள் புடைசூழ அரண்மனையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த மன்னர் பிலிப், மக்களின் உற்சாக வரவேற்பை சிரித்தபடியே ஏற்றுக் கொண்டார். உடனடியாகத் தனது வாரிசின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று வேகமாக அந்தப்புரத்தில் நுழைந்தார்.
அங்கு பிரசவித்த களைப்பில் கண் மூடியபடி அவரது மனைவி ஒலிம்பியஸ் கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவளது அருகில் தாதியும், மற்ற பணிப்பெண்களும்.
“எங்கே எனது மைந்தன்?” ஆவலுடன் பரபரப்பாக அறைமுழுவதும் கண்களை மேயவிட்டார்.
“என் மகனே!!” என்று உற்சாகம் பொங்கக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார்.
இவரது ஓங்கிய குரல் கேட்டுக் கண்விழித்தாள் ஒலிம்பியஸ். பிலிப்பின் மீது அவள் பார்வை பதிந்தது. அதில் ஒரு பரஸ்பர புரிதல்கூட இல்லை. வேற்று மனிதர் ஒருவரைப் பார்ப்பதைப் போலவே அவரைப் பார்த்தாள். இருவருக்குமான உறவு அப்படிப்பட்டது.
பொதுவாகவே நாடுகள் பலவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு பல்வேறு வழிகளைக் கையாள்வது அரசர்களின் வழக்கம்.
அதில் ஒன்று அரச குடும்பத்தில் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வது. பிலிப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஒலிம்பியஸை மணம் புரிவதற்கு முன்பாக இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்திருந்தன. ஒலிம்பியஸ் அவருடைய நான்காவது மனைவி. அதன் பிறகும் இரண்டு பேரை மணந்து மொத்தம் ஆறு திருமணங்கள் செய்து கொண்டவர் பிலிப். பிள்ளைச் செல்வங்களுக்கும் குறைவில்லை.
மாசிடோனியாவிற்குத் தென்கிழக்கே இருந்த நாடு எபிரேஸ். இந்நாட்டு அரசனோடு போரிட விரும்பாமல், நட்புறவோடு இருக்க விரும்பினார் பிலிப். இதற்காக அம்மன்னருக்கு நட்புத் தூது அனுப்பினார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு இளவரசியான ஒலிம்பியஸை மணம் செய்து கொள்ளும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது விருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பியஸைத் தனது நான்காவது மனைவியாக ஆக்கிக் கொண்டார் பிலிப்.
இது நடந்தது கி.மு. 359 ஆம் ஆண்டு. அத்துடன் மற்ற மனைவியர்களைப் புறம் தள்ளி விட்டு, ஒலிம்பியஸையே தனது பட்டத்து ராணியாகவும் அறிவித்தார். ஆனால் அவர்களுக்குள் கணவன் மனைவிக்கு இடையேயான சாதாரண பந்தபாசம் எதுவுமே கிடையாது. ஒருவருக்கொருவர் விரோதிகளாகவே இருந்தனர்.
பிலிப் என்ன சொன்னாலும் அதற்கு நேரெதிராகச் செயல்படுவதை மட்டுமே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருந்தாள் ஒலிம்பியஸ்.
அவள் மிகவும் கோபக்காரியாகத் திகழ்ந்தாள். பிலிப்பும் அதற்குச் சிறிதும் சளைத்தவர் இல்லை. எப்போதும் சண்டை சச்சரவுதான்.
ஒலிம்பியஸ் யாரையும் மதிப்பது கிடையாது. அவர்களை மரியாதைக் குறைவாகவும் நடத்துவதில் அலாதி விருப்பம் உடையவள்.
ஆனால் இதற்கெல்லாம் நேரெதிராக மற்றவர்கள் தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளிடம் மிகுந்து காணப்பட்டது. இதையெல்லாம் தாண்டி, ஒலிம்பியஸ் மீது மாற்றவே முடியாத அளவிற்கு வெறுப்பு ஏற்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அது மிகவும் வித்தியாசமானது.
பொதுவாக பிராணிகளை வளர்ப்பதிலும், அதன் மீது பாசத்தை வைத்திருப்பதிலும் பலருக்கு ஈடுபாடு உண்டு. கட்டிப் போட்டும், கூண்டில் அடைத்தும் வளர்ப்பது வாடிக்கை.
ஒலிம்பியஸம் அப்படித்தான் ஒரு பிராணியை வளர்த்து வந்தாள். ஆனால், பிலிப்புக்குத்தான் அது பிடிக்கவில்லை. எரிச்சலும் கோபமும் வந்தது. இதுவே நாளடைவில் அவள் மீதான பிடிப்பையும் சுத்தமாக நிறுத்திவிடச் செய்தது.
அப்படி அவள் வளர்த்த பிராணி பாம்பு!
நஞ்சு உமிழும் பாம்புகளை மட்டும் அன்றி மலைப்பாம்பையும் வளர்த்தாள்.
இந்தப் பாம்புகளை எல்லாம் கண்ணாடிக் கூண்டில் அடைத்து வைத்து வளர்த்தால் கூடப் பரவாயில்லை. அத்தனையும் அரண்மனையில், அவள் அறையில் உல்லாசமாக, சுதந்திரமாகத் திரிய விட்டிருந்ததுதான் பிலிப்பை அவளிடம் இருந்து தள்ளி வைத்தது.
பாம்புகளை எடுத்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு உலாத்துவதும், தான் உணவருந்தும்போது அவற்றையும் கூடவே வைத்துக் கொண்டு உணவளிப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக படுக்கையில் தன்னோடு பாம்புகளையும் படுக்க வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதுமாக இருந்தாள்.
மாபெரும் வீரராக இருந்தாலும் பிலிப்புக்குப் பாம்பைக் கண்டால் உதறல்தான். பாம்பைத் தெய்வமாக வழிபடும் தேசத்தில் பிறந்ததால் அவற்றைக் கொல்லவும் முடியாது தவித்தார் பிலிப்.
“நீ பாம்பை வளர்ப்பதும், அதனோடு சகவாசம் வைத்துக் கொண்டிருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. இவற்றை எங்காவது அனுப்பி விடு” என்று எத்தனையோ முறை கூறியிருக்கிறார்.
அதனை ஒரு பொருட்டாகவே கருதாமல், தன் விருப்பப்படியே நடந்து கொண்டிருந்தாள் ஒலிம்பியஸ்.
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், இப்படி ஒரு துணையுடன் குடித்தனம் நடத்துவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றுதான். இதனால் ஒலிம்பியஸின் அறைக்குள் நுழையவே அவர் பலமுறை தயங்கியிருக்கிறார்.
இப்போதும் அது போலவே, தனது குழந்தையைக் கொஞ்சி விட்டு, அதனைப் பெற்றெடுத்த ஒருத்தி கட்டிலில் சோர்ந்து கிடப்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல் அந்தப்புரத்தில் இருந்தும் வெளியேறி அரண்மனைக்குள் வந்தார்.

அப்போது சில வீரர்கள் அவசரமாக அங்கு வந்தனர். அவர்களின் பரபரப்பைப் பார்த்த பிலிப், ஏதோ ஒரு அவசரச் செய்தியைக் கொண்டு வந்திருப்பதைப் புரிந்து கொண்டார்.
“என்ன?” என்றார் சுருக்கமாக.
“ஆர்ட்டிமிஸ் கோயில் திடீரென எரிந்து போயிற்று மன்னா!” ஆசியா மைனரின் எபீஸஸ் என்னும் இடத்தில் உள்ளது இக்கோயில். பிரசித்தி பெற்ற கோயில். ஒரு பைத்தியக்காரன் நெருப்பை வைத்து எரிந்து போகச் செய்திருப்பதாக வீரர்கள் விபரம் தெரிவித்தனர்.
மகிழ்ச்சியான செய்திகளாக வந்து கொண்டிருந்த வேளையில், திருஷ்டி கழிப்பு போல ஒரு மோசமான தகவல்.
அரண்மனை முழுவதும் அன்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
மன்னரின் குழந்தைக்குப் பெயர் சூட்டும் திருவிழா!
குழந்தையைச் சுமந்தபடி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தாள் ஒலிம்பியஸ். குழுமியிருந்த கூட்டத்தினர் வருங்கால மன்னர் அங்கு வருகை தந்ததை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பிலிப் மேடை ஏறினார். குழந்தையின் அருகே சென்றார். நிதானமாக கடவுளைப் பிரார்த்தனை செய்தார்.
இச்சமயத்தில் ஊசி விழுந்தாலும் ஓசை கேட்கும் அளவிற்கு ஆழமான நிசப்தம்.
மெல்ல குனிந்து குழந்தையின் காதருகே தன் முகத்தைக் கொண்டு சென்றார்.
“அலெக்சாண்டர்... அலெக்சாண்டர்... அலெக்சாண்டர்...” என்று மூன்று முறை உரக்க அழைத்தார்.
குழந்தை என்னவோ ஏதோவென்று பிலிப்பைப் பார்த்து மெல்ல இதழ் விரித்துச் சிரித்தது.
கூட்டம் மொத்தமும், “இளவரசர் அலெக்சாண்டர் வாழ்க!” என்று உரக்கக் கூவியது.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.