என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -8
மலர்விழிக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. முதன் முதலில் விகாஸைச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் கட்டுக்களுடன் இருந்தவனைப் பார்த்து அவளும் பயந்து தான் போனாள்.
ஆனால் ஈஸ்வரின் விசாரணைக்குப் பிறகு தான் தான் நினைத்தபடி உயிருக்கு ஆபத்து இல்லை என்று சற்றுத் தெளிவு ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னது இது தான்,”ஆக்சிடென்ட் நடந்த நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் அவனது கால்களை நசுங்கி இருந்த காரில் இருந்து வெளியே எடுக்க முடிந்தது. அதனால் அவனது கால்களில் தான் பெரிய பிரச்சனை, நன்றாக நடமாட சில மாதங்கள் கூட ஆகலாம். அந்த போதையிலும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் தலைக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. ஆக்சிடன்ட் ஆன ஷாக் இருக்கும், அதோட எஃபெக்ட்ஸ் கொஞ்ச நாள் இருக்கும், அவ்வளவு தான் “என்று தெளிவாகவே விம் போட்டு அவளுக்கு விளக்கி இருந்தான்.
இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகு தான் அவள் தற்காலிகமாக விகாஸின் சீட்டில் அமர ஓகே சொன்னாள். இடைப்பட்ட காலத்தில் அவளைக் குழப்பியது யார் என்று யோசித்த போது ரஞ்சனின் முகம் நினைவுக்கு வந்தது. நிஜமாகவே அவன் தான் குழப்பி விட்டானா என்று மேலும் அவளை யோசிக்க விடாமல் அவனே அங்கு வந்து நின்றான்.
“ஹேய் ஃப்ளவர்! என்ன இங்கே? விகாஸைப் பார்க்க வந்தியா? பார்த்தாச்சா?”
“ஹான்.. ஆமா.. ரஞ்சன்.. கிட்டத்தட்ட நான் விகாஸை மறந்தே போயிட்டேன். என்ன இருந்தாலும் என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச முதல் பாஸ். ரொம்ப நல்ல மனுஷன். பார்க்காமல் விட்டுட்டோமேன்னு தோணுச்சா அதான் உடனே கிளம்பிட்டேன். நீங்களும் அவரைப் பார்க்கத் தான் வந்தீங்களா?”
“நோ.. டியர்! இங்கே ஒரு க்ளையன்ட் நமக்கு. பெரிய எக்ஸாம் கான்ட்ராக்ட் ஒன்னு. சைன் பண்ண வேண்டிய மனுஷன் இங்கே வந்து படுத்துட்டார். அதான், பார்த்து ஒரு சலாம் போட்டு போறேன். நம்மளை மறந்துடக் கூடாதில்லையா” என்றான் அவள் காதுக்குள் ரகசியமாய்.
“அது சரி..”
“இவ்வளவு தூரம் கார் ஓட்டிட்டு வந்தியா?”
“இல்லையே.. நான் கேப்ல வந்தேன். நீங்க கிளம்புங்க. நான் விகாஸைப் பார்த்துட்டு கிளம்பிடுவேன்.”
“உன்னைத் தனியே விட்டுப் போறதா! நோ வே.. வெயிட் பண்றேன்.. இப்போ தான் ஐசியூல இருந்து வரேன், திரும்ப உள்ளே விடமாட்டாங்க. இல்லேன்னா நானும் உன் கூட உள்ளே வந்துடுவேன்” என்று ஏகத்துக்கும் கவலைப்பட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
தலைகுனிந்து யோசித்தவள், “ஹேய்.. இங்கே பாரு டா. நம்ம லிட்டில் மான்ஸ்டர்” என்ற சத்தம் கேட்டு சந்தோஷமாக நிமிர்ந்தாள். எப்போதும் இந்த மான்ஸ்டர் என்ற வார்த்தைக்கு பொங்கி எழுபவள் இன்று குதூகலமாக அவர்களை வரவேற்றாள்.
கேள்வியாகப் பார்த்த ரஞ்சனிடம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். ஒரு நொடி, ஒரே ஒரு நொடி, மூவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் ஸ்கேன் செய்தது. அடுத்த நொடியே கார்த்திக்கை நோக்கிக் கையை நீட்டிய ரஞ்சன், “உங்களை மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம். இவ்வளவு சீக்கிரம் மீட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை” என்று மலர்விழியைப் பார்த்தான்.
அவளோ ஈஸ்வரிடம் கண்களால் ஏதோ செய்தியைக் கடத்திக் கொண்டிருந்தாள். அதைச் சரியாக ஈஸ்வர் பிடித்த அதே வேளையில் இன்னும் இரண்டு கண்களும் தெளிவாகப் படம் பிடித்துக் கொண்டது.
“நீங்க மிஸ்டர்.ஈஸ்வர் தானே! தி ஃபேமஸ் டிடெக்டிவ்??” ஈஸ்வரின் பார்வையைத் தன் புறம் திருப்பினான் ரஞ்சன். அவன் பார்வையில் பொறாமை பொங்கி வழிந்தது. அதை உணர்ந்து கொண்ட ஈஸ்வர் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான், இருக்கும் இடம் உணர்ந்து சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.
“உங்க இரண்டு பேரையும் பார்க்கும் போதே விஷயம் எல்லாருக்கும் புரிஞ்சிடும். இதுல என்னைப் பார்த்து பொறாமை வேறயா?? கார்த்திக் மாதிரியே இந்த மேடம் எனக்கும் லிட்டில் மான்ஸ்டர் தான்.. ஆனா உங்களுக்குள்ள என்ன? இது எத்தனை நாளா நடக்குதுன்னு தெரியலை. அதைப் பத்தி அப்புறம் டீடெயிலா கவனிச்சுக்கறேன். இப்போ வந்த வேலையைப் பார்க்கறேன். வா கார்த்திக்!”
ஆனால் ஈஸ்வர் சொன்ன விஷயம் கார்த்திக்கிற்கு உவப்பாக இல்லை. அவனுக்கு ஏனோ ரஞ்சனைப் பிடிக்கவில்லை. ரஞ்சனின் முகத்தில் இருந்து அவனால் ஒன்றும் உணர முடியவில்லை என்றாலும் அவன் சரியில்லை என்று மனம் அறுதியிட்டுச் சொன்னது. அடுத்த நொடியே தங்கைக்கு அண்ணனாக நடந்து கொள்ள விழைந்தான்.
“இதோ வரேன் ஈஸ்வர்” என்ற கார்த்திக், “ஃப்ளவர் நீ விகாஸைப் பார்த்துட்டேன்னா கார்ல வெயிட் பண்ணு. நாங்க வந்துடறோம்” என்று சாவியை நீட்டினான். அதாவது மறைமுகமாக நீ எங்களுடன் தான் வந்தாக வேண்டும் என்ற எச்சரிக்கை.
“ஓகே கார்த்திக்.. ஆனால் நீங்க முதல்ல வந்துட்டா என்ன பண்ணுவீங்க..”
“இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல வெயிட் பண்ண இடமே இல்லையா? கேள்வி கேட்டு கொல்லாம ஒரு நாளாவது சொன்னது மட்டும் செய்!” என்று எரிந்து விழுந்தவன் ஈஸ்வருடன் சென்றான்.
“இன்னைக்கு இவனுக்கு என்ன தான் ஆச்சோ.. ஓவரா பண்றான்.. வீட்டுல போய் இருக்கு இவனுக்கு..” என்ற மலர்விழியைப் பார்த்துச் சிரித்தான் ரஞ்சன்.
“ஹலோ ஃப்ளவர் மேடம்! எனக்கு பாஸ்னு அண்ணன் கிட்ட அறிமுகப் படுத்தற பொண்ணு பாஸ் கைய இப்படியா பிடிச்சிட்டு இருப்பா? அதான் அவங்க டக்குன்னு கேட்ச் பண்ணிட்டாங்க. இது அவங்களோட ப்ரில்லியன்ஸ் இல்லை.. நீ தான் காட்டிக் கொடுத்துட்ட..” என்றவன் தனது இடது கையுடன் பிணைந்திருந்த அவளது கையை தூக்கிக் காட்டினான்.
“அச்சோ…” என்று அவனிடம் இருந்து கையை உருவப் பார்த்த மலர்விழிக்குத் தோல்வியே மிஞ்சியது.
“இப்படி ஷேம்.. ஷேம்.. ஆகிப் போச்சே மலர்.. இப்போ என்ன பண்ணலாம்?” ரஞ்சன் பேச்சை வளர்த்த இருவருக்குமே ஹாஸ்பிடல் காரிடாரில் நிற்கிறோம் என்ற எண்ணமே இல்லை.
“மிஸ்.மலர்விழி! வாங்க. மிஸ்டர்.விகாஸைப் பார்க்கணும்னு பெர்மிஷன் கேட்டு இங்கே என்ன பண்றீங்க?* என்று நர்ஸ் ஒருவர் வந்து கேட்கும் வரை இருவரும் தனி உலகத்தில் இருந்தார்கள்.
“இதோ வந்துட்டேன் சிஸ்டர்! ஸீ யூ ரஞ்சன். ஈவ்னிங் பேசறேன்” என்று ரஞ்சனிடம் விடைபெற்று அந்த நர்ஸின் பின்னால் வேகமாக நடந்தாள் மலர்விழி, கிட்டத்தட்ட ஓடினாள் எனலாம்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சன் ஒரு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
ஐசியூ வாசலில் விகாஸின் மனைவி மலர்விழிக்காகக் காத்திருந்தாள்.
இருவருமாக ஐசியூவிற்கான உடை அணிந்து உள்ளே சென்றனர். பெரிய மருத்துவமனைகளில் இது கட்டாயம் செயல்படுத்தப் படுகின்றது. உள்ளே சென்ற மலர்விழி முதலில் சுற்றுப் புறத்தை நிதானமாக ஆராய்ந்தாள். திடீரென அவளுக்கு விகாஸின் ஹாஸ்பிடல் வாசத்தின் மேல் வந்த சந்தேகம் இதையெல்லாம் செய்யச் சொன்னது.
முதல் நாள் பார்த்தது போலவே ஏகப்பட்ட ட்யூப் மற்றும் வயர்கள் புடைசூழப் படுத்திருந்தான் விகாஸ். மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அதுவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது போல அவன் முகமோ உடலோ இல்லை. எப்போதும் போலவே இருந்தது. உற்றுப் பார்த்தால் கண்கள் இமைப்பது போல் தோன்றியது. ஐசியூவின் குளிரைத் தாங்க முடியாமல் கைகால்களில் கண்டிப்பாக ஒரு நடுக்கம் இருந்தது.
ஆங்காங்கே தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு அவனது பிபி, பல்ஸ், ஆக்ஸிஜன் லெவல் போன்றவற்றைக் காட்டிக் கொண்டு இருந்தன. நல்ல ஆரோக்கியமான மனிதனுக்குக் கூட அத்தனை பர்ஃபெக்டாக ரீடிங் இருக்காது. இங்கே அத்தனையும் பக்கா என்று சொல்வது போல இருந்தது. சீராக மூச்சு விட்டுக்கொண்டு இருந்தான்.
சட்டென்று பார்த்தால் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பது போலத்தான் இருந்தான். திருமதி.விகாஸ், அவனது தலைமாட்டில் சென்று முடியைக் கோதி விட்டாள். அந்த நேரத்தில் அவனது உடலில் ஒரு அசைவு ஏற்பட்டது போலிருந்தது. கண்கள் நன்றாகத் திறந்து மூடியது போலவே இருந்தது. எல்லாம் மலர்விழியின் கற்பனையோ என்று எண்ணும் வகையில் அடுத்த நொடியே அங்கே எந்த ஒரு அசைவும் இல்லை.
அங்கே இருந்த டாக்டரிடம், “விகாஸோட ப்ராப்ளம் தான் என்ன டாக்டர்? எத்தனை நாள் தான் இப்படி ஹாஸ்பிடல் பெட்ல இருக்க முடியும்? அவரோட டெஸ்ட் ரிபோர்ட்ஸ் எல்லாம் என்ன தான் சொல்லுது? நான் பார்க்க முடியுமா? வேற எங்கேயாவது கூட்டிட்டு போய், ஐ மீன் யுஎஸ், யுகே எங்கேயாவது போய் ட்ரீட்மெண்ட் பண்ணலாமா?” என்று நேரடியாகவே கேட்டு வைத்தாள்.
அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் திருதிருவென விழித்தாரே தவிர வாயைத் திறந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மலர்விழி அவரை சந்தேகமாகப் பார்க்க, சமாளித்துக் கொண்ட டாக்டர் பதில் பேச ஆரம்பித்தார்.
“ஸாரி மேடம்! நீங்க கேட்ட எல்லாம் பர்சனல் டேட்டா அபவுட் விகாஸ். நீங்க யாரு, இவருக்கு எந்த வகையில் சொந்தம். இப்படி வந்து போற எல்லாருக்கும் பதில் சொல்றது எங்க வேலை கிடையாது. அன்ட், நீங்க இந்தியாவோட ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஹாஸ்பிடல்ல நின்னுட்டு வேற எங்கேயும் போகலாமான்னு கேட்கிறீங்க. எங்களை, எங்க ட்யூட்டியைப் பார்க்க விடுங்க. ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்.”
சற்று கடினமாகவே சொன்னவன் விகாஸை செக் செய்து ஏதோ ஊசி மருந்தை ஏற்றிவிட்டு சென்றான்.
போவதற்கு முன்பு “எங்க மேல நம்பிக்கை இல்லேன்னா தாராளமா யூ கேன் டிஸ்சார்ஜ் ஹிம் அன்ட் அட்மிட் எனிவேர். இவருக்கு இருக்கற காம்ப்ளிகேஷன்ஸுக்கு எங்கேயும் அட்மிஷன் கிடைக்காது” என்று எக்ஸ்ட்ரா பிட் ஒன்றையும் போட்டு விட்டே போனான். கேட்டிருந்த விகாஸின் மனைவியின் முகம் வெளுத்துப் போனது.
ஆனால் மலர்விழிக்குத் தான் அதில் ஏதோ விஷயம் இருப்பதாகவே தோன்றியது. அவன் டஸ்ட் பின்னில் போட்டுப் போன காலி பாட்டிலை எடுத்துப் பார்த்த மலர்விழி தன் கையில் இருந்த பையில் மறைத்து வைத்துக் கொண்டாள்.
மீண்டும் தனது கவனத்தை விகாஸிடம் திருப்பியவள், அவன் முகத்தில் ஒரு நிமிடம் பார்வையை நிலைக்கவிட்டாள். இடது கையில் தான் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. வலது கையைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றாள். தான் உணர்ந்து கொண்டதை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.
“சீக்கிரம் எழுந்து வாங்க விகாஸ்! வி ஆல் ஆர் மிஸ்ஸிங் யூ!” என்றவள் அவன் மனைவியிடம் தலையசைத்து வெளியே வந்து விட்டாள்.
பின்னோடு வந்தவள், “தாங்க்ஸ் ஃபார் கம்மிங் மலர். நீங்க கேட்ட கேள்வி எல்லாம் நானும் நிறைய தடவை கேட்டுட்டே இருக்கேன். டீடெயில்ஸ் எதுவும் எனக்கும் தரலை மலர். கேட்டா மழுப்பலா பதில் சொல்றாங்க” என்று ஆரம்பித்து நிறைய புலம்பினாள்.
“சீக்கிரம் வந்துடுவார் மேடம். நம்புங்க” என்று அவளது தோளை அணைத்து ஆறுதல் கூறினாள்.
“நானும் அவர் எப்படியும் எழுந்து வந்துடுவார்னு நம்பிக்கையோட தான் இருக்கேன் மலர். நீங்க அடிக்கடி வந்துட்டுப் போங்க.. ப்ளீஸ்”
“டைம் கிடைக்கும் போது கண்டிப்பா வரேன் மேடம். டேக் கேர்!” என்று கார் பார்க்கிங் நோக்கி நகர்ந்தாள் மலர்விழி. பின்னோடு ஓடிவந்த விகாஸின் மனைவி சொன்ன விஷயம் கேட்டு ஃப்ரீஸாகி நின்றாள்.
காரைத் திறந்து உள்ளே அமர்ந்தவள் அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை ஒரே மூச்சில் காலி செய்தாள். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர் கார்த்திக்கும் ஈஸ்வரும். சோர்வாக இருந்த மலரைப் பார்த்து, “இங்கேயே ஏதாவது சாப்பிட்டு போகலாமா மலர். ரொம்ப டயர்டா தெரியறயே” என்று கேட்டான் கார்த்திக்.
“வேண்டாம் கார்த்திக். நான் உங்க கிட்ட பேசிட்டு சாப்பிடறேன். இப்போவே சாப்பிட்டா, இருக்கிற டயர்ட்நெஸ்ல தூங்கிப் போயிடுவேன்.”
“ஹா… ஹா…ஹா” என்று சிரித்தவர்களை முறைத்தவள், “பி சீரியஸ் மேன்.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசப் போறேன். இந்த மாதிரி சிரிச்சு கடுப்பேத்த வேண்டாம்” என்றாள்.
“சரி.. சரி.. நீங்க சொல்லுங்க மேடம்.. நாங்க வாய்க்கு ஜிப் போட்டுட்டோம்”
ஆரம்பத்தில் விகாஸின் மனைவி பேசியதையும் டாக்டர் பேசியதையும் சொன்னவள், “இதையெல்லாம் விட முக்கியமானது நான் விகாஸோட கையைப் பிடிச்ச போது அவர் விரலால் என் கையில் don't ன்னு ஏதோ எழுதின மாதிரி இருந்தது. நிச்சயம் அவருக்கு நினைவு இருக்கு. வேற யாரோ இல்லை எதுவோ பிரச்சினை. அதான் கோமான்னு அவர் மனைவியையே நம்ப வச்சிருக்காங்க.”
“நீ சந்தேகத்தோட போனதால உனக்கு அப்படி தோணி இருக்கலாம் மலர்” என்று தங்கையை சமாதானப் படுத்தினான் கார்த்திக்.
“இட் மே பி மை இமேஜினேஷன். இங்கே பாரு அவருக்கு போட்ட இஞ்சக்ஷன், ஒன்னு பாராசிட்டமால் இன்னொன்னு டைக்ளோஃபினாக் (வலி நிவாரணி மருந்துகள்). அங்கே வேற எந்த கேஸ் ஷீட்டையும் , மெடிசின்ஸையும் காணோம்.”
“வாட்!” என்று அதை மாறி மாறி வாங்கிப் பார்த்தனர் ஈஸ்வரும் கார்த்திக்கும்.
“இதெல்லாம் விட, விகாஸோட வைஃப் ஒரு விஷயம் சொன்னாங்க. ஆக்சிடன்ட்ல நொறுங்கிப் போயிடுச்சுன்னு சொன்ன மொபைல இவங்க கண்டுக்கவே இல்லை. சிம் கூட வேற வாங்கல. ஆனால் கால்ஸ் கரெக்டா போகுது, வருதுன்னு வந்த போஸ்ட் பெயிட் பில் சொல்லுது. எதுவுமே புது நம்பரும் கிடையாதாம்.”
“ஏன் மலர் விகாஸே இந்த கேம் ஆடற ஆளா இருக்க சான்ஸ் இருக்கில்ல?” என்று கேட்டிருந்த போது மலர்விழிக்கும் அப்படியும் இருக்கலாமோ என்று தோன்றியது.
“சரி வா. இப்போ இதையெல்லாம் மறந்துட்டு எதையாவது வயித்துக்குள்ள போட்டு போவோம். அடுத்து ஸ்டேஷன் எல்லாம் போக வேண்டியதா இருக்கு” என்று மூவரும் கேண்டீன் நோக்கித் திரும்பினார்கள்.
என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் மூவருக்கும் ஏதோ பெரிய மாய வலையில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு. ஐசியூவைக் கடந்து செல்லும் போது தங்களை யாரோ உற்று நோக்குவதாகத் தோன்ற சட்டென்று திரும்பிய மூவரும் அங்கே வந்து கொண்டிருந்த ரஞ்சனை அதிர்ந்து போய் பார்த்தனர்.
காரணம் அவன் ஐசியூ உள்ளே இருந்து வந்தான்.