• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -8

Lavans

Member
Sep 3, 2024
61
0
18
California

அத்தியாயம் – 8

எழில்மலரின் கழுத்தில் தமிழ் பாசக்கயிறு வீசும் போதே வந்துவிட்டான் கதிர். ஆனால் எழில்மலரே அவனைச் சமாளித்துவிட, கதிர் அவர்கள் பேசுவதையெல்லாம் மறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்தான்.



எழில்மலரை நினைத்து அவனுக்கு மேலும் பெருமையாக இருந்தது. தன்னைப் போலவே அவளின் குணமும் இருக்கிறது என நினைத்துப் பூரித்துப் போனான்.



கதிரை அங்கே எதிர்பார்க்காத எழில்மலர், ‘இவனா?’ என அவளின் மனம் புத்துணர்ச்சி கொண்டது. கூடவே, ‘என்ன சொன்னான் இவன்? அங்க தான் என் மனசுல நிக்கறீங்க என்றா?’ என மூளையும் கிறுகிறுத்துப் போனது.



ஆனாலும் அதை உடனே ஏற்றுக் கொள்ள முடியாமல், “என்ன உளறிட்டு இருக்கீங்க?” என்றாள்.



“என் மனசு ‘மவுண்ட் எவரெஸ்ட்டை’ விடவும் உயர்ந்த இடம். அந்த உயர்ந்த இடத்தில் நிக்கறீங்க எனச் சொன்னேன்” எனக் கதிர் சிரித்துச் சமாளிக்க, “ம்ம்ம். அது சரி. ஆமா, நீங்க எங்கே வந்தீங்க?” என்றாள் எழில்மலர்.



“அன்று உங்களைப் பார்த்தப்போ காலேஜ் படிக்கிற பொண்ணுன்னு நினைச்சேன். இப்போ தான் ஒரு கேஸ் ஜெயிச்சுட்டு வர்றீங்க எனச் சொன்னாங்க. நீங்க தான் இப்போ இருக்கிற இளம் வக்கீல்களில் கிங்காம். ஆனா நீங்க ராணி இல்லையா?” என்று அவனுக்கே உரித்தான சந்தேகத்தை வெளியிட்டான் கதிர்.



“இதைத் தெரிஞ்சுக்கறதுக்கா இத்தனை தூரம் வந்தீங்க? ஒரு ஃபோன் போட்டுக் கேட்டிருக்கலாமே. நான் இன்னும் இளவரசி தான்.. கல்யாணம் ஆனவங்களுக்குத் தானே ராணிப் பட்டம் கொடுக்க முடியும்?” எனக் கதிரை மடக்கினாள்.

அவள் பதிலில் சிரித்தவன், “எப்படியோ உங்களுக்குக் கல்யாணம் ஆகலைன்னு சொல்லிட்டீங்க. அப்பாடா. இப்போ தான் நிம்மதியா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ். சரி. ஃபோன் நம்பர் தாங்க எழில்மலர்” என்றான்.



அவன் சொன்ன முதல் பாதியில் திகைத்தவள், பின்னர் சுதாரித்து, “இது என்ன புது ட்ரெண்டா ஃபோன் நம்பர் வாங்க? அதுக்கு வேற ஆளைப் பாருங்க” அவள் ஓர் அடி எடுத்து வைக்க,



“ஒரு நிமிஷம் இருங்க.. என் ஃபிரெண்ட் பாலசரவணன் வர்றான் பாருங்க.. அவனுக்குத் தான் உங்க உதவி தேவை” என்றான் கதிர்.



“அப்படியா? உங்க ஃபிரெண்ட்டைக் கூட்டிட்டு வாங்க. உள்ளே போய்ப் பேசலாம்” என உள்ளே நடந்தாள் எழில்மலர்.



செல்லும் அவளையே கதிர் பார்த்திருக்க, அவனருகில் வந்த பாலசரவணன், “என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லறேன் என இங்கே எதுக்குடா வரச் சொன்ன?” என்றான்.



“வாடா, உள்ளே போயிட்டே பேசலாம்” எனக் கதிர் எழில்மலரைப் பின்பற்றி நடக்க முயல, அவன் கையைப் பிடித்து இழுத்த பாலசரவணன்,



“அப்போ. நீ சொன்ன மோகினிப் பிசாசு இவங்க தானா? என் வாழ்க்கையில் லைட் சுவிட்ச் போட வந்த மாதிரி தெரியலை. உன் வாழ்க்கைக்குக் ‘கரண்ட்’ உற்பத்தி செய்ய வந்த மாதிரி இருக்கே” எனப் பாலசரவணன் நண்பனைச் சந்தேகமாகப் பார்த்தான்.



“ச்சே. கேட்ச் பண்ணிட்டியேடா”



“அப்போ என்னைப் பகடைக்காயாக மாத்திட்ட. அப்படித்தானே” எனக் கோபமாக பாலசரவணன் நண்பனை முறைக்க,



“இப்படி யோசிச்சுப் பாரு. நம்ம தொழிலுக்கு அடிக்கடி வக்கீல் தேவைப்படுது. அதுக்கு மட்டுமே எவ்வளவு செலவு செய்யறோம். வக்கீல் பெண்ணைக் கட்டிக்கிட்டா அதெல்லாம் நமக்கு லாபமில்லை?” என்றான் கதிர்.



“நீ இவ்வளவு நல்லவனாடா? எனக்குத் தெரியாமல் போயிடுச்சே?” என வியந்தவன், “ஆனாலும் நீ சொல்லற சப்பைக் காரணத்தை நம்ப நானொண்ணும் அவ்வளவு நல்லவனில்லை. உனக்கு வேணா லாபம். எனக்கில்லை” என்றான் பாலசரவணன்.



“நம்புடா. இப்போதைக்கு என் தோழன்டா நீ. உன் பிரச்சனைக்கு ஓர் தீர்வு காண இவங்கக்கிட்டே ஆலோசனை கேட்க மட்டும் தான் வந்தேன். ஜூனியர் என்கிறதுனால பீஸ் கம்மி.” என்றான் கதிர்.



“சரி, இவங்களை எப்படிக் கண்டுபிடிச்ச?” என பாலசரவணன் கேட்க,



“என் பர்த்டே அன்னைக்கு இங்கே ஒரு கேஸ் விசயமா வந்தப்போ பார்த்தேன். அப்போ, பேச முடியலை. இல்லைனாலும் அந்த ஜர்னலிஸ்ட் வேலை செய்யற பத்திரிக்கைக்கு போய் விசாரிச்சிருப்பேன்” எனக் கதிர் சம்யுக்தாவை மனதில் வைத்துக் கொண்டு சொன்னான்.



“அப்போ. அன்று தேவையில்லாமல் என்னைப் பீச்சுக்கு இழுத்துட்டுப் போனது இவங்க அங்க வருவாங்கன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சதாலா?” எனச் சரியான பாயிண்ட்டை பாலசரவணன் பிடிக்க,



“ச்சே. அப்பப்போ என் தோழன் என நிரூபிக்கிறடா. ஃபோன்ல யார்கிட்டேயோ சொல்லிட்டு இருந்தாங்க. அப்படியே கேட்ச் பண்ணிட்டேன்” என்றான் கதிர்.



முன்னே சென்ற எழில்மலர், அவர்கள் பின்தொடர்ந்து வராமல் தேங்கி நிற்பதைப் பார்த்து, ‘என்ன?’ எனச் சைகையால் வினவினாள்.



ஒண்ணுமில்லை எனத் தலையை ஆட்டிய கதிர், பாலசரவணனிடம், “இப்போ வா உள்ள போகலாம். வாயைத் திறக்க மாட்டேன்ன்னு சொல்லியிருக்க. ஞாபகமிருக்கட்டும்” என உள்ளே சென்றான் கதிர்.



எழில்மலர் காட்டிய இருக்கையில் இருவரும் அமர, “யூ சீ ஒன்ஸ் அப்பான் எ டைம் பாலசரவணன் ஓர் பொண்ணை ரொம்பத் தீவிரமா லவ் பண்ணினான். ஆனால் அந்தப் பொண்ணு இவனை வேண்டாம் என ரிஜக்ட் பண்ணிடுச்சு” என கதிர் எப்பொழுதும் போல் அவன் கதையளக்கும் திறனை எடுத்துவிட,



“டேய், அவ என்னை வேண்டாம்ன்னு சொன்னப்போ கூட நான் இத்தனை பீல் பண்ணலைடா” என கதிரின் காதில் பாலசரவணன் முணுமுணுக்க, அதைப் பொருட்படுத்தாமல், “அதான் உங்ககிட்டே சொல்லி” எனக் கதிர் தொடர்ந்தான்.



“ஹலோ என்ன கூட்டிட்டுப் போய் மந்திரம் போட்டு வசியம் பண்ணனுமா? அதெல்லாம் லா ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. என்னைப் பார்த்தா வேலை வெட்டியில்லாதவ மாதிரி இருக்கா உங்களுக்கு?” என எழில்மலர் இடைவெட்டினாள்.



இவர்களைப் பார்த்தால் கேஸுக்காக வந்தவர்களைப் போல் தெரியவில்லையே. வேறென்ன எண்ணத்தில் வந்திருக்கிறார்கள் என மனதின் ஓரத்தில் இப்பொழுது சந்தேகம் எழுந்தது எழில்மலருக்கு.



சற்றுமுன்னர் கூட ‘மனசுல நிக்கறீங்களே?’ எனச் சொன்னானே என அவளின் மனம் கற்பனைக் குதிரையை விரட்ட ஆரம்பித்திருந்தது. வேலையிடத்தில் வைத்து ஏதும் ரசாபாசம் ஆகிவிடக் கூடாதே என மிகவும் ஜாக்கிரதையாகப் பேச நினைத்தாள்.



“அவசரப்படாதீங்க மலர்” எனக் கதிர் சொல்லவும், “மலரா?” என முறைத்தது எழில்மலர் அல்ல. நம்ம பாலசரவணன்.



“தப்பா நினைச்சுக்காதடா. எழில்மலர் பெயர் எவ்வளவு நீளமா இருக்கு? அதான் அதைச் சுருக்கிக் கூப்பிட்டேன்” என்றான்.



‘ஏண்டா, எழில்மலர்ங்கற பெயர் உனக்கு நீளமா?’ எனப் பாலசரவணன் நண்பனை முறைப்பதைத் தொடர, கதிர் அவனைப் பார்த்தால் அல்லவா?



இதே கதிர் தான் பாலசரவணன் என்ற அவனின் பெயரை பாலா, அல்லது, சரவணா என்று அழைக்கச் சொன்னதற்கு, “டேய், அப்பா-அம்மா பெயர் வைக்கிறதே கூப்பிடறதுக்கு. அதையும் ஏன் சுருக்கிக் கூப்பிடணும்?” என்று சொன்னவன்.



இப்போது எழில்மலரிடம் இப்படிப் பேசினால் பாலசரவணனுக்கு கோபம், எரிச்சல் என்று எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வராதா?



“எப்படியோ கூப்பிடுங்க. இப்போ விஷயத்துக்கு வாங்க” என எழில்மலரின் குரலில், நண்பனை முறைப்பதை விட்டுவிட்டுப் பேச்சில் கவனம் செலுத்தினான் பாலசரவணன்.



“அது அந்தப் பொண்ணுக்கு இப்போ கல்யாணமாகிடுச்சு” எனக் கதிர் தொடர, எழில்மலருக்குப் புரிந்துப் போனது. இவர்கள் வேண்டுமென்றே தான் இங்கே வந்திருக்கிறார்கள் என்று.



“சார். எனக்கு நிறைய வேலையிருக்கு. சும்மா அறுக்காம கிளம்பறீங்களா?” என எழில்மலர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த மூத்த வக்கீல்,



“எழில், சார் நமக்குத் தெரிஞ்சவர் தான்.. நீ கூட அன்னைக்கு கேட்டியே தெரிஞ்சவர் மாதிரி இருக்கிறார்ன்னு” என நிறுத்தினார்.



கதிர் மலர்ச்சியுடன் எழில்மலரைப் பார்க்க, அவளோ, ‘ச்சே இப்படி இவன் முன்னாடியே போட்டுக் கொடுத்துட்டாரே.’ என நினைத்தாள்.



“பார்த்து ஹெல்ப் பண்ணுமா. நான் வேற வேலையில் பிஸி. அதான் உன்னைப் பார்க்கச் சொன்னேன்” என அங்கிருந்து நகர்ந்தார்.



எழில்மலர் அலுவலகத்துக்கு வரும் முன்னாலேயே அந்த மூத்த வக்கீலிடம் சென்ற கதிர், அவரிடம், “சார், ஒரு சின்னப் பிரச்சனை. ‘கோர்ட் கேஸ்’ன்னு எல்லாம் போக வேண்டாம்.. கொஞ்சம் அட்வைஸ் வேணும். நீங்க செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்க ஜூனியர்” என எழில்மலரின் அறையைக் காட்டி,



“புதுசா சேர்ந்தவங்க இருந்தாப் போதும்” என்று சொன்னான்.



அவரும் வீடு வாங்குவதற்கு ஆலோசனை கேட்கிறார்கள் என மேலோட்டமாக விஷயத்தைத் தெரிந்து கொண்டு எழில்மலரிடம் அனுப்பி வைத்தார்.



“என்னைத் தெரியும் எனச் சொன்னீங்களா?” எனக் கதிர் கேட்க, “உங்களைத் தெரியும் எனச் சொல்லலை. பின்னாடி இருந்து பார்த்ததும் எனக்குத் தெரிஞ்சவர் மாதிரியே இருந்தீங்க. சரி வந்த விஷயத்தைச் சொல்லுங்க” எனக் கேட்டாள்.



“அப்போ என்னைப் பார்த்தீங்க?” எனப் புன்னகையுடன் பார்க்க, “டேய், நீ என்ன பேயா? உன்னைப் பார்த்தது அவ்வளவு பெரிய விஷயம் எனக் கேட்டுட்டு இருக்க. என் விஷயத்துக்கு வாடா” என்றான் பாலசரவணன். அவன் அவசரம் அவனுக்கு.



தன் குட்டு உடைப்பட்டு விட்டதே என எழில்மலர் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்க, பாலசரவணனின் பேச்சு அவளுக்கு நிம்மதியைத் தந்தது.



கதிரும் அதற்குமேல் அதிலேயே உழன்று கொண்டிருக்காமல், “அந்தப் பொண்ணு இப்போ இவனுக்குப் பக்கத்து வீட்ல வந்து குடியேறியிருக்கு. அவங்களை அந்த வீட்டைவிட்டுத் துரத்தணும்.



அதான் உங்ககிட்டே ஆலோசனை கேட்கலாம் என வந்தோம்” எனக் கதிர் சொல்ல எழில்மலரால் இத்தனை நேரம் காட்டிக் கொண்டிருந்த மிடுக்குத்தனத்தைத் தொடர்ந்து காட்ட முடியவில்லை.



‘ஹ.. ஹ.. ஹா.’ எனச் சிரிக்க, “ஏங்க. வக்கீல் மாதிரி நடந்துக்கோங்க. என் வேதனை உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?” என வெகுண்டது சாட்சாத் நம்ம பாலசரவணன் தான்.



“இல்லைங்க சார்” என எழில்மலர் சிரிப்பை அடக்க முயன்றும் தோற்றுப் போக, “இது தான் விதி வலியதுன்னு சொல்லுவாங்களோ” என அவளின் இயல்பான குணம் தலைத்தூக்கியது.



கதிரும் அவளுடன் இணைந்து கலகலவென சிரிக்க, “இப்போத் தானே சொன்னேன். வக்கீல் மாதிரி பேசுங்கன்னு.. இப்போ ஜோசியக்காரன் மாதிரி பேசிட்டு இருக்கீங்க.” என்றான் பாலசரவணன்.



“நீங்க மட்டும் என்னை வக்கீல்ன்னு நினைச்சா வந்து பேசிட்டு இருக்கீங்க. வெளியில் ‘இங்கு குண்டர்கள் கிடைக்கும்’ என போர்டு போட்டிருக்கா என்ன?” என எழில்மலர் கேட்க,



“அட. இங்க பார்றா, மொக்கைக்கே பொக்கே கொடுக்கறாங்க” எனப் பாலசரவணனிடம் கதிர் சொன்னான்.



“எது எதுக்குத் தான் வக்கீல்கிட்டே ஆலோசனை வாங்கணும்ன்னு விவஸ்தையில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி லவ் பண்ணற பொண்ணுகிட்டே ப்ரொபோஸ் பண்ணறதுக்கு சாட்சியா வருவீங்களான்னு வந்து நிக்கிறான் ஒருத்தன்” என எழில்மலர் சொல்ல,



“நமக்கெல்லாம் அந்தச் சிரமமில்லை. அதற்கு வக்கீலையே லவ் பண்ணிடுவேன்” எனப் புருவத்தை உயர்த்தினான் கதிர்.



எழில்மலரின் நெஞ்சம் தடதடவென்று அடித்துக் கொண்டிருக்க, “டேய். ட்ராக் மாறாமப் போகணும்” எனப் பாலசரவணன் நண்பனை எச்சரித்தான்.



எழில்மலருக்குத் தோன்றிய படபடப்பை மறைத்தவாறே, “நீங்கெல்லாம் எங்கிருந்து கிளம்பி வர்றீங்க?” என்றாள்.



“இதுக்காக தனியா வேற்று கிரகத்தில் இருந்தா வர முடியும்? எல்லாம் அம்மா வயிற்றில் இருந்து தான் கிளம்பி வர முடியும்” என்ற கதிர் “சொல்லுங்க, எங்களுக்கு உதவி செய்ய முடியுமா, முடியாதா?” என்றான் கதிர்.



“என்ன சார் உங்களோட ஒரே தொல்லையாப் போச்சு.. நான் கிரிமினல் லாயர்” என்றாள்.



“என்ன நீங்க கிரிமினலா? அதையும் நீங்களே ஒத்துக்கறீங்களா?” என்றான் கதிர்.



“மொக்கைப் போடாதீங்க. ” என அவள் சலித்துக் கொள்ள, “அந்த வீட்டை விலைக்கு வாங்கணும். வீடு அந்தப் பெண்ணோட ஹஸ்பன்ட் பேர்ல இருக்கு. அந்த வீட்டு, டாக்குமெண்டில் ஏதாவது ஓட்டை இருக்கான்னு நல்லா அலசி ஆராயணும்” என்றான் கதிர்.



இப்போது கதிரின் எண்ணம் புரிய, தான் இருக்கும் இடத்தை மறந்து சிரித்த எழில்மலர், “ஏன் சார் உங்க ஃபிரெண்ட் சொல்லறார் என நீங்களுமா ஒத்துக்குவீங்க? வீட்ல மூட்டைப்பூச்சி வந்திடுச்சுன்னு வீட்டைக் கொளுத்தற மாதிரி இருக்கு நீங்க செய்யறது.



அவங்க உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தா உங்களுக்கு என்ன? பேசாமல் உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க” என பாலசரவணனிடம் சொல்ல,



‘என் வேலையைப் பார்க்க முடியாமல் தானே இங்க வந்தேன்..’ என நினைத்தவன், “அவன் விளையாட்டாப் பேசினாலும் காரியத்தை நடத்திக் கொடுத்திடுவான். கூடுதலா இந்த விஷயத்தில் நான் வாயைத் திறக்க மாட்டேன் என சத்தியம் பண்ணியிருக்கிறேன்.. ஏன்னா அவன் தோழன்” என்ற பாலசரவணன்,



‘எப்புடி? நான் சொன்னதைக் கடைப்பிடித்தேன்’ எனக் கதிரை ஓர் பார்வைப் பார்த்தான்.



“நண்பனுக்கு ஏத்த ஜால்ரா தான்” என எழில்மலர் கிண்டலாகச் சொல்ல,



“லவ் வந்தா லவ் லெட்டர், ட்விட்டர்ன்னு போறது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே லவ் வெற்றியடையலைன்னா இப்படி வக்கீலை வச்சு பெட்டரா யோசிக்கணும். கவலைப்பட்டு, குப்புறப்படுத்து பாட்டுக் கேட்கக் கூடாது” என்றான் கதிர், பாலசரவணனைப் பார்த்தவாறே.



கதிரின் பேச்சில் பாலசரவணன், ‘அது’ என்று நண்பனைப் பார்க்க, “ஆனாலும் இப்படி ஓர் குடும்பத்தை வீட்டை விட்டுத் துரத்தறது தப்பில்லையா?” என்றாள் எழில்மலர்.



“நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க? இவன் ஜெர்க் ஆகிற மாதிரி அந்தப் பெண்ணும் பாலசரவணனைப் பார்த்து ஜெர்க் ஆகியிருக்கும் இல்லை. அங்கிருந்து போக நினைச்சாலும் தன்னால் புலம்பெயர்ந்த புது வீட்டைவிட்டு என்ன சொல்லிக் கிளம்ப முடியும்?



இவனுக்கு என்னை மாதிரி ஒரு தோழன் கிடைச்சிருக்கான். ஆனால் பாவம் அந்தப் பெண் என்ன பண்ணும்?



பாலசரவணன் பழசை மனசுல வச்சுட்டு எங்கே அவளிடம் ஏதாவது கலாட்டா பண்ணிடுவானோன்னு பயப்படலாம். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கலாம் இல்லையா?” என கதிர் நடைமுறைச் சிக்கலை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க,



“என்னைப் பத்தி ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு.. விட்டா, கீர்த்திகாவுக்கு நீயே எல்லாத்தையும் எடுத்துக் கொடுப்ப போல இருக்கே” என முணுமுணுத்தான் பாலசரவணன்.



கதிர் சொன்னதைக் கேட்டதும், ‘அப்படியும் இருக்குமோ’ என நினைத்த எழில்மலரின் உள்ளமோ உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தது.



அன்று பெங்களூரில் பார்த்ததுமே, கண்டதும் காதல் என்று இல்லாவிட்டாலும், அவளைப் போலவே சிரித்துக் கலகலவென்று பேசுவதால் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்திருந்தான் கதிர்.



அது போதாது என்று அவள் கனவில் வேறு தோன்றி அவளுள் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தான். அதன்பிறகு அவனைப் பற்றி தன் மூத்த வக்கீல் மூலமாகச் சிறிது அறிந்ததும், தன்னையும் அறியாமல் அவனுடன் பேசுவதில் ஆர்வம் கொண்டாள். ஆனால் அதற்காக அவசரமும் காட்டவில்லை.



கதிர் கேட்பதைப் போல் பாலசரவணனின் பிரச்சனைக்குத் தன்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று தெரியாது. ஆனால் கட்டாயம் கதிரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் என்று தோன்றியது எழில்மலருக்கு.



(அடப்பாவி, இது மட்டும் பாலசரவணனுக்குத் தெரிந்தால் அவன் கொலைவெறியாகிக் கதிரை உண்டு இல்லை என்று செய்திருப்பான். பாவம் அவனால் மனதில் உள்ளதைப் படிக்க இயலாததால் கதிர் தப்பித்தான்.)



“ம்ம்ம். என் பாஸ் சொன்னார்ன்னு உங்களுக்கு உதவறேன். அந்த வீட்டோட பத்திரம் இருக்கா?” என்றாள்.



நண்பர்கள் இருவரும் பலமாக, ‘இல்லை’ என்று தலையை ஆட்ட, “சரி.. நான் என்ன பண்ண முடியும்ன்னு பார்க்கிறேன்.. ஆனா பீஸ் கரெக்ட்டா தந்திடணும்” என்றாள். அவள் வழியில் அலுவலகத்துக்கும் வருமானம் வருகிறது என்பதால் உற்சாகமாக இருப்பதாய் காட்டிக் கொண்டாள், உண்மைக் காரணத்தை மறைத்து.



“ஜூனியருக்கு பீஸ் அதிகம் இருக்காது தானே?” என பாலசரவணன் சொல்ல, ‘உன்னை வாயைத் திறக்கக் கூடாதுன்னு சொன்னேன்’ என கதிர் வாய் மேல் கையை வைத்து சமிங்ஞை செய்தான்.



“என்ன” என எழில்மலர் முறைக்க, “அது. உங்க திறமை மேலே அவனுக்குப் பொறாமை” எனக் கதிர் சமாளித்தான். அதன்பின்னர் வேண்டிய விவரங்களைச் சேகரித்துக் கொண்ட எழில்மலர், “கூடிய சீக்கிரம் கூப்பிடறேன்” என அவர்கள் அனுப்பி வைத்தாள்.
 

Author: Lavans
Article Title: அத்தியாயம் -8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.