• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 9

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
400
0
43
india

என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -9



வாசலையும் அவனையும் மாறிமாறிப் பார்த்த மலர்விழியைக் கண்டு சிரித்தான் ரஞ்சன்.



“என்ன ஆச்சு மலர்? எதுக்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் கொடுக்கற? கொஞ்சம் உன் ஷாக்கைக் குறை. அப்பவே வெளியே போன நான் எப்படி ஹாஸ்பிடல் உள்ளே இருந்து வந்தேன்னு தானே உனக்கு சந்தேகம். வேற எதுவும் இருந்தாலும் கேளு. உன் டவுட்ஸ ஒவ்வொன்னா நான் க்ளியர் பண்றேன்.”



“அதெல்லாம் எதுக்கு மிஸ்டர்.ரஞ்சன்? நீங்க வேலையில்லாமலா திரும்பி வந்திருப்பீங்க?” என்று இடக்காகக் கேட்ட கார்த்திக், என் தங்கை உன்னுடன் பேசுவதை நான் விரும்பவில்லை என்று தன் உடல்மொழி மூலம் வெளிப்படையாகவே காட்டினான்.



அவனது செய்கையை மலர்விழி உணர்ந்ததாகவே தெரியவில்லை.

“ம். சொல்லுங்க ரஞ்சன், என் கிட்ட இரண்டாவது தடவை ஐசியூ உள்ளே விடமாட்டாங்கன்னு சொன்னீங்க. இப்போ அங்கே இருந்து தான் வரீங்க. மலர்விழி வான்ட்ஸ் டூ நோ.”



“நானே பாதி தூரம் போயிட்டு திருப்பி வந்திருக்கேன் மலர். அந்த க்ளையன்ட் இன்னைக்கே நல்ல நாளா இருக்கு, சைன் பண்ணிடலாம்னு அவரோட ஆஃபீஸ் செட்டப்பையே இங்கே பண்ணிட்டார். என்ன அப்படிப் பார்க்கிற, பணம் இருந்தால் எதை வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாத்தலாம் இல்லையா” என்று புன்னகையுடன் பொறுமையாக ஒரு பெரிய விளக்கம் கொடுத்தான். அவன் கையில் இருந்த பெரிய கம்பெனியின் பெயரைத் தாங்கியிருந்த ஃபைல் அவன் சொன்னது உண்மைதான் என்றது.



“தட்ஸ் ஓகே மிஸ்டர்.ரஞ்சன்! இதோ நாங்க கூட கார்ல ஏறிட்டு வீட்டைப் பார்த்துப் போகாமல் கேண்டீன் போகலாம்னு திரும்பி வந்திருக்கோம்.” தாங்கள் அவனை சந்தேகப்படவில்லை என்று பேசி வைத்தான் ஈஸ்வர்.



அதற்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தவன் அவர்களிடம் தலையசைத்துவிட்டுக் கிளம்பினான்.



மலரைப் பார்த்து, “இப்போ நிஜமாவே கிளம்பறேன். சந்தேகம் இருந்தால் நீ வந்து செக் பண்ணிக்கலாம்” என்றவன் அவள் வருவாளா என்று கண்களால் சவால் விடுத்தான்.



ஈஸ்வருக்கும் கார்த்திக்கும் நடுவே நின்றிருந்த மலர் என்ன செய்வது, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்து நின்றாள்.

சற்று யோசனைக்குப் பிறகு அவனை நோக்கித் திரும்பியவளை, கார்த்திக் தடுத்து நிறுத்தினான்.



“இப்போ என்ன? மலர் உங்களை எதுவும் தப்பா நினைக்கலைன்னு உங்களுக்கு தெரியணும், அவ்வளவு தானே, நீ இங்கேயே நின்னு பேசு மலர். நாங்க கேண்டீன் போறோம். நீ தான் ரொம்ப பசிக்குதுன்னு சொன்ன, சீக்கிரம் வந்து சேரு. ஸீ யூ மிஸ்டர்.ரஞ்சன்!” என்ற கார்த்திக் ரஞ்சனை முறைத்து விட்டு ஈஸ்வரை இழுத்துச் சென்றான்.



தனித்து விடப்பட்ட இருவரும் பேசாமல் அமைதியாகவே நின்றனர். “என்ன மலர்? என்ன குழப்பம் உனக்கு?”



“இல்ல.. வீட்டுல நான் நம்மைப் பற்றி எதுவுமே சொல்லலை. எப்போதும் கார்த்திக் கிட்ட சின்ன விஷயமா இருந்தாலும் ஷேர் பண்ணிப்பேன். அதான் அவன் கடுப்புல இருக்கான்“



கார்த்திக்கின் நடவடிக்கை பற்றி விளக்கம் கொடுக்க முயன்றவளைக் கை நீட்டி தடுத்து நிறுத்தினான்.



“கார்த்திக் மட்டும் இல்லை.. எல்லா ப்ரதர்ஸூக்கும் அப்படித்தான் இருக்கும். அதை நாம தனியா டீல் பண்ணிக்கலாம். இப்போ நீ ஹாஸ்பிடல் வந்த விஷயம் மட்டும் பேசுவோம்.

விகாஸைப் பார்த்தியா? எப்படி இருந்த மனுஷன் இப்போ எப்படி இருக்கார்னு பார்த்தியா? யாருமே இத்தனை நாள் ஆகும்னு நினைக்கவே இல்லை. பெஸ்ட் டாக்டர்ஸ், பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க ஆனாலும் எந்த யூஸும் இல்லை.”



“நீங்க பார்த்தீங்களா?” அவன் பேசிக்கொண்டிருந்த போதே சட்டென்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் மலர்விழி.



“வாட் டூ யூ மீன்.. நீ என்ன சொல்ற.. நான் எதைப் பார்க்கணும்?” என்று கேட்டவனது கண்களைச் சந்திக்க முடியாமல் திணறினாள் மலர். இவனிடம் விகாஸ் பற்றிய சந்தேகங்களை பேசக் கூடாது என்று நினைத்திருந்தவள் தன்னை அறியாமல் கேட்டுவிட்டாள்.



“நத்திங் ரஞ்சன். எனக்கு டைம் ஆச்சு.. அண்ணா வெயிட் பண்ணுவான், நான் அப்புறம் பேசறேன்” என்று கிளம்பியவளின் கை அவனது இரும்புப் பிடியில் சிக்கி இருந்தது.



“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிட்டு போ மலர். ஐ வோன்ட் ஸ்டாப் யூ” என்றவனது கண்களில் இருந்த தீவிரம் இவளை நடுங்கச் செய்தது.



“ம்ச்.. ரஞ்சன்.. கை வலிக்குது.. முதல்ல கையை விடுங்க..” கையை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டவள் சிவந்திருந்த இடத்தைத் தடவிக் கொண்டாள். அதைப் பார்த்துப் பதறியவன் சட்டென்று தன் கோபத்தை விடுத்தான்.



“ஓ மை காட்.. ஸாரி மலர்.. இப்படியா பிடிச்சேன்.. நான் ஒரு இடியட். விகாஸை இப்படிப் பார்த்ததுல கொஞ்சம் குழம்பி இருக்கேன்னு நினைக்கிறேன். உங்க அண்ணா வேற தமிழ் சினிமால வர்ற அண்ணா மாதிரி என்னை முறைச்சிட்டுப் போயிருக்கார். என்ன இருந்தாலும் அவர் தயவு எனக்கு வாழ்க்கை பூராவும் தேவைப்படும். உன்னை இப்போ விடலேன்னா, பின்னாடி எனக்குத் தான் கஷ்டம். நீ கிளம்பு. விகாஸ் விஷயமெல்லாம் இந்த குட்டி மண்டைல போட்டுக்காத. பை மலர்.. சியர் அப் பேபி.”



அவளைத் தோளோடு அணைத்து விடுவித்தவன் விறுவிறுவென வாசலை நோக்கி நடந்து விட்டான். வழக்கம் போல முகத்தில் ஒரு வித்தியாசமான பொருள் விளங்கா புன்னகை. என்ன மாதிரியான மேக் இவன் என்று வியந்தபடி கேண்டீன் நோக்கித் திரும்பினாள் மலர். மனதில் ஏதோ ஒரு குழப்பம் நிலவியது.



அங்கே, தங்கையை நோக்கி நெற்றிக் கண்ணைத் திறக்க தயாராக இருந்த கார்த்திக் இருக்கும் இடம் உணர்ந்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். மூவரும் அமைதியாக வயிற்றை நிரப்பிவிட்டு வெளியே வந்து காரில் ஏறினார்கள்.



அவ்வளவு தான், “ஹேய்.. ஃப்ளவர்.. உங்க இரண்டு பேருக்குள்ள என்ன ஓடுது.. என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கான் அவன்.. உங்க ஆஃபீஸ்ல உனக்கு பாஸா இருந்தா எனக்கென்ன.. ” என்று ஆரம்பித்து மலர்விழியின் காதுகளில் ரத்தம் வரும் வரை பேசித் தீர்த்து விட்டான் கார்த்திக்.



“மலர் விஷயத்தை அப்புறம் டீல் பண்ணிக்கலாம் கார்த்திக். இப்போ நாம ஸ்டேஷன் போறோமா இல்லையா.. அதைச் சொல்லு” ஈஸ்வர் மச்சானைத் திசை திருப்ப பல முயற்சி செய்ய அவையெல்லாம் தோல்வி தான்.



“ஷ்ஷ்… கார்த்திக்! என் விஷயம் நாம வீட்டுல போய் பேசிக்கலாம். இப்போ ஹாஸ்பிடல்ல நான் பார்த்த விஷயத்தை என்ன பண்றதுன்னு பாரு. ஸ்டேஷன் போனா எஃப்ஐஆர் கிடைக்குமா?”



“ஓ.. கிடைக்குமே.. நம்மளைப் பார்த்த உடனே, இதுக்கு தானே வந்திருக்கீங்கன்னு அவங்களே எடுத்துக் கொடுத்திருவாங்க. மூளை வேலை செய்யுதா இல்லையா, நாமளே அவங்களை சந்தேகப்பட்டு எஃப்ஐஆர் கேட்கப் போறோம். பிரச்சினை இருந்தால் நம்மளை அப்படியே துரத்தி விடத் தான் பார்ப்பாங்க. கூடவே, யார் இதையெல்லாம் செய்யச் சொன்னாங்களோ அவங்களுக்கு உடனே விஷயம் போகும். நம்மையும் போட்டுத் தள்ள ட்ரை பண்ணுவாங்க” என்ற ஈஸ்வரைத் திகிலுடன் பார்த்தாள் மலர்விழி.



“என்ன முழிக்கிற நாம போய் டைரக்டா இந்த நம்பரைக் கேட்க கூடாது. இதை வேற மாதிரி தான் டீல் பண்ணனும். நீ அமைதியா இருக்கிறதா இருந்தால் ஸ்டேஷன் உள்ள வா. இல்லேன்னா கார்லயே இரு” அவன் பங்குக்கு ஒன்று சொன்னான் கார்த்திக்.



“நான் வாயைத் திறந்து எதுவும் பேசலை, ஆனால் எனக்கு அந்த எஃப்ஐஆர் பார்க்கணும். நானும் வரேன்.. ப்ளீஸ் கார்த்திக்” என்று நிறைய ப்ளீஸ் போட்டவள் குறிப்பிட்ட எஃப்ஐஆரைப் பார்த்த உடன் மயக்கம் போடாத குறையாக தலையைப் பிடித்துக் கொண்டாள்.



ஈஸ்வர் தனது வாய் சாமர்த்தியம் எல்லாம் காட்டி குறிப்பிட்ட எஃப்ஐஆர் நோட்புக்கை வாங்கி இருக்க அவர்கள் பார்த்த விஷயம் தான் துளிக்கூட நம்ப முடியாத வகையில் இருந்தது.



ஆக்சிடன்ட் நடந்த அன்று பதிவான எஃப்ஐஆர் காப்பி ஈஸ்வரிடம் இருந்தது. ஆனால் இன்று போலீஸ் ரெகார்ட் காட்டிய எஃப்ஐஆர் முற்றிலும் புதிய விஷயங்களைச் சொன்னது. எஃப்ஐஆர் நம்பர், தேதி, எழுத்தாளர், கையொப்பம் எல்லாமே சரியாக இருந்தது. ஆக்சிடன்ட் நடந்த போது என்ன நடந்தது என்பதைத் தவிர. அதனுடன் அட்டாச் ஆகியிருந்த புகைப்படங்களும் வேறு கதை சொன்னது.



சத்தம் போடாமல் அனைத்தையும் ஒரு ஃபோட்டோ எடுத்த ஈஸ்வர் மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.



காரில் ஏறி அமர்ந்த அடுத்த நொடியே மலர்விழி படபடவென பொரிய ஆரம்பித்து விட்டாள்.



“நான் சொன்னேன் கேட்டீங்களா? இப்போ பாருங்க மொத்தமா மாத்தி வச்சிருக்காங்க. அதெப்படி அந்த எஃப்ஐஆர் புக்ல எந்த சேதமும் இல்லாமல் மேட்டர மட்டும் மாத்தி இருக்காங்க. போதையில் சீட் பெல்ட் போடல அதனால ஏர்பேக் ஓபன் ஆகலை, தலையில பலமான அடி, பிழைக்கறதே கஷ்டம். வார்த்தையா மட்டும் இல்லாமல் அதுக்கு சாட்சியா ஃபோட்டோ வேற.



இதையெல்லாம் நான் தெரிஞ்சுக்க கூடாதுன்னு தான் விரலால ஏதோ எழுதி இருக்கான், ஸ்டுபிட் ஃபெல்லோ. நான் நல்லா கிள்ளி வச்சிருந்தா அவன் அலறி எழுந்து உட்கார்ந்து இருப்பான். ஐசியூல அதையெல்லாம் ட்ரை பண்ண வேண்டாமேன்னு பார்த்தேன். ச்சே.. மிஸ் பண்ணிட்டேன்.. “ என்று முடித்தவளைக் கண்டு வயிறு வலிக்கச் சிரித்தனர் மற்ற இருவரும்.



விகாஸை சரமாரியாக திட்டியவளின் வார்த்தைகளில் அவனுக்கான மரியாதை காற்றில் பறந்து போயிருந்தது. அதுவும் அந்த ஃபோட்டோக்கள், இன்றைய ஏஐ உலகின் எடுத்துக்காட்டாகத் தான் இருந்தது.



“ஹப்பா…. புயல் அடிச்சு ஓய்ஞ்சது மாதிரி இருக்கு. நீ கொஞ்சம் அடங்கி இரு. இந்த மாதிரி விஷயத்தில் நீ தலையிட வேண்டாம். ரஞ்சன் கிட்ட இதைப் பத்தி வாயைத் திறந்து எதையும் பேசாதே. நாங்க பார்த்துப்போம். நீ எப்போதும் போல ஆஃபீஸ் போயிட்டு வா. அங்கே எதையாவது வித்தியாசமா பார்த்தால் மட்டுமே எங்க கிட்ட சொல்லு. மத்தபடி நீ போலீஸ் வேலையெல்லாம் பார்க்க வேண்டாம்” என்று இருவருமே ஸ்ட்ரிக்டாக எச்சரிக்கை விடுத்தனர்.



மலர்விழியின் உடல்மொழி அதைக் கேட்கமாட்டேன் என்றது. “மலர்! கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணு. ரொம்பவே பொறுப்பான வேலைல இருக்க, உன் வேலைல நீ கவனமா இரு, அதுவே போதும். ஒரு வேளை நீ எதையாவது செய்து வைச்சா அப்புறம் வேலைல கவனம் சிதறும், அது பெரிய பிரச்சனையாக வாய்ப்பு இருக்கு. பி கேர் ஃபுல்” என்று கடுமையாக எச்சரித்தான் ஈஸ்வர்.



“ஆமா மலர், நாம சந்தேகமா பார்க்க ஆரம்பிச்சா எல்லாமே தப்பா தான் தெரியும். நிதானமா யோசிச்சு பாரு, விகாஸ் மேல ஈஸியா கம்ப்ளைன் பண்ணிட்ட, ஒரு வேளை அவனே ஒரு விக்டிமா இருந்தால் என்ன பண்றது? நாம எல்லாத்தையும் யோசிச்சு தான் ஒவ்வொரு வார்த்தையும் பேசணும், அன்டர்ஸ்டான்ட்.”



அவன் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டவளாக தலையசைத்து வைத்தாள் மலர்விழி. அதையும் மீறி அவளது ஆர்வம் ஒரு நாள் வெளியிடப்பட்டது. விளைவு தான் எதிர்பாராததாக அமைந்து போனது.



************



மலர்விழியை வீட்டில் விட்டு மற்ற இருவரும் மீண்டும் ஈஸ்வரின் அலுவலகம் வந்தார்கள். அதே நேரத்தில் அங்கே ஹாஸ்பிடலில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து இரவு உணவை ருசித்துக் கொண்டிருந்தான் விகாஸ். அவனது விழிகளில் தென்பட்ட குரூரம் யாரும் அறியாதது.



“என்ன விகாஸ், மலர்விழியை ஏமாத்தியாச்சுன்னு கேசுவலா இருக்கியா? இந்த நேரம் அவ உன் வேஷத்தைக் கண்டுபிடிச்சிருப்பா. கூடவே பெரிய டிடெக்டிவ் வேற” என்று ஒரு கேட்ட குரலுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனான் விகாஸ்.



“டிடெக்டிவா, அது யாரு மலர்விழி கூட? அவனுக்கு இங்கே என்ன வேலை?”



“அவன் தான் அந்த ப்ரகதீஸ்வர். கமல் சக்சேனா கேஸை அவன் தான் ஹேண்டில் பண்றான். போலீஸ் சூசைட் தான்னு க்ளோஸ் பண்ணதுக்கு அப்புறமும் தோண்டிட்டு இருக்கான். முழுசா தோண்டும் போது எல்லாரும் மாட்டிக்க வேண்டியது தான். அதுல நீ தான் முதல்ல இருப்ப” என்றது அங்கே இருந்த மற்ற குரல்.



“அதுக்கு முன்னாடி நாம முந்திக்கலாம். அந்த டிஜிபிய நாளைக்கு என்னைப் பார்க்க வரச் சொல்லி இருக்கேன். பார்ப்போம், யார் முந்திக்கறாங்கன்னு”



‘நீ அவங்க பேக் ரவுண்டு தெரியாமல் பேசற’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்ட மற்ற உருவம் வெளியே கட்டை விரலை உயர்த்தி வெற்றி உனக்கே என்று காட்டியது.



ஈஸ்வருக்கும் கார்த்திக்கும் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. அவனது அறையில் இருந்த போர்டில் மொத்த கேஸ் ஷீட்டையும் வரைந்து கொண்டிருந்தான் ஈஸ்வர். பொழுது போகாமல் கமல் சக்சேனாவின் டைரியைப் புரட்டிக் கொண்டிருந்த கார்த்திக் ஒரு பக்கத்தில் பார்வையைப் பதித்து அமர்ந்து விட்டான்.



“இப்போ என்னன்ன பாஸிபிலிடீஸ் இருக்குன்னு நாம பார்க்கலாம் கார்த்திக்” என்று திரும்பிப் பார்த்த ஈஸ்வர், கார்த்திக்கின் அருகில் வந்து அவன் எதைப் பார்த்துக்கொண்டு இருந்தான் என்று பார்த்தான். ஒட்டப்பட்ட இரண்டு பக்கங்கள் பிரிந்து அதனுள்ளே இருந்த எழுத்துக்களை படம் பிடித்துக் காட்டியது.



“ஹேய் இதென்ன.. இந்த டைரில எத்தனை புதையல் தான் இருக்கு. பெரிய லெட்டரே எழுதி இருக்கிறார் போல இருக்கே.



“They are not human. They can do anything to my family if I am not okay with their deal. All because of my crazy attitude towards girls.. they are asking my girls.. What can I do? This is not me. Why am I behaving like a coward….” என்று அதில் இருந்ததை முழுமையாக வாசித்தான். கிட்டத்தட்ட ஒரு வாக்குமூலம் போல அது இருந்தது.



“”ஸோ, அவனே ஒத்துக்கறான், தான் ஒரு பொம்பளை பொறுக்கின்னு. இவன் யார் கிட்டயோ கேட்ட விஷயத்தை இவன் கிட்ட கேட்ட போது தாங்க முடியலை”



“அதானே… இவன் பொண்டாட்டின்னா… “என்று நல்ல வார்த்தைகள்(!?) சொல்ல வந்த கார்த்திக் கஷ்டப்பட்டு வாயை அடக்கி, “இவனுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்குன்னா தக்காளி சட்னியா?” என்று முடித்தான்.



“ம்ச்.. விடுடா.. அப்போ..‌ அவனைச் சுத்தி ஏதோ ஒரு ப்ரஷர் உருவாக்கப் பட்டிருக்கு. அதனால தான் அவனோட டெத் நடந்திருக்கு. அந்த ப்ரஷரோட சோர்ஸ் யாருன்னு கண்டுபிடிக்கணும். “They” ன்னு எல்லா இடத்திலும் மென்ஷன் பண்ணி இருக்கான். ஸோ, நாம தேடறது கண்டிப்பா தனி ஆள் கிடையாது.”



“ஏன் ஈஸ்வர், ஒரு வேளை இந்த விகாஸும் அதே மாதிரி ஆள் தானோ? மாட்டினா கொன்னுடுவாங்கன்னு தான் அவனே டிராமா போடறானோ?” தனது சந்தேகத்தை முன் வைத்த கார்த்திக்கைப் பார்த்து, “யூ மே பி ரைட்” என்றான் ஈஸ்வர்.



“அதானே, நீ என்னையெல்லாம் பாராட்டினா அப்புறம் மும்பையில ஜூன் மாதம் மழையே இல்லாமல் போயிடும்” என்று அலுத்துக் கொண்ட கார்த்திக் கமலின் டைரியை நிதானமாக ஆராய ஆரம்பித்தான்.



“கண்ணா! லட்டு தின்ன ஆசையா?” என்று கேட்பது போல பல விஷயங்கள் அந்த டைரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் படித்து முடித்த ஈஸ்வரும் கார்த்திக்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வழக்கம் போலத் தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்தனர். எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியாமல் பெரிய சிக்கலான விஷயமாக உணர்ந்தார்கள்.



“ஒரு சிறிய நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?” என்று ஒன்று போலவே இருவரும் சொல்லிக் கொண்டு கேஸை ஆராய்ந்தனர்.



“இதுக்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் ஈஸ்வர்? நல்ல படிப்பு, நல்ல கார்ப்பரேட் வேலை, நல்ல சம்பளம், நிறைய வசதிகள், இதையெல்லாம் தாண்டி எதுக்காக இப்படியெல்லாம் பண்றாங்க?”



“எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் கார்த்திக். இரண்டு கம்பெனிக்கு இடையே நீயா நானான்ற போட்டி, பணம் தான் யார் டாப் கம்பெனின்னு தீர்மானிக்குது. ஓரளவு பெயர் வர்ற வரைக்கும் உத்தமன் வேஷம் போடற கம்பெனி எல்லாம் அப்புறம் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வச்சிருக்கும். அந்த குறிக்கோளை அடைய அவங்க யூஸ் பண்ற ரொட்டித் துண்டுகள் தான் இந்த கமல் மாதிரி ஆட்கள். சரிப்பட்டு வராதவங்கள ஒன்னு கம்பெனிய விட்டு தூக்குவாங்க இல்லேன்னா உலகத்தை விட்டே தூக்கிடுவாங்க.”



“இப்போ நாம என்ன பண்றது?”



“இது தான் விஷயம்னு நமக்குத் தெரியும். இதுல யார் யார் இன்வால்வ் ஆகி இருக்காங்கன்னு கண்டு பிடிக்கறது தான் நம்மளோட அல்டிமேட் எய்ம்.”



“இந்த ட்ராப்ல மலர் மாட்டிக்க மாட்டால்ல.. நினைக்கவே பயமா இருக்கே”



“இவளா எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்.. “



“இந்த ரஞ்சன்.. அவனை எந்த அளவுக்கு நம்பறதுன்னு தெரியலையே. அவனும் இந்த க்ரூப்ல இருக்க மாட்டான்னு சொல்ல முடியாதே.. இந்த மலர் அவனைப் போய்..‌சே…” தனது ஆத்திரத்தை அங்கிருந்த ஒரு டேபிள் மேல் காட்டினான் கார்த்திக்.



“விடு, பார்த்துக்கலாம். மலர் மேல எனக்கு அக்கறை இருக்காதா? இவ்வளவு பண்றவன் அவனை விசாரிக்க மாட்டேனா? அதெல்லாம் அவனைப் பத்தி ஏற்கனவே டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. வெயிட் அன்ட் வாட்ச்!”



“ஏதோ உன்னை நம்பித்தான் இருக்கேன். ஒழுங்கா விசாரி..”



“ம்ம்..” என்ற ஈஸ்வர் கொடுத்த ரிப்போர்ட் படி ரஞ்சன் கோஸ்வாமி அக்மார்க் நல்ல பையன் என்று முத்திரை குத்தப்பட்டு அவனது காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டப் பட்டது.



ஒரு நல்ல நாளில் மிகவும் விமரிசையாக இருவரது நிச்சயதார்த்தமும் நடந்தேறியது.



தனது நிச்சயதார்த்த மோதிரத்தை சுழற்றிக் கொண்டே ஒரு நாணப் புன்னகையுடன் நின்றிருந்தாள் மலர்விழி. திருமண நாளை நினைத்துப் பார்த்து தனக்குத் தானே சிரித்தவளைப் பார்த்து விதியும் சிரித்தது.