• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாய்ம் - 3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
410
2
43
india
அத்தியாயம் - 3



"வசு! என் வாட்ச் எங்க வச்சிருக்க, என் ஷெல்ஃப்ல காணோமே?"

"மா! என்னோட ஸ்கூல் பெல்ட் எங்க? பழசு தான் இங்க இருக்கு. புதுசக் காணோம்"

"மா என்னோட டி-ஸ்கேல் பாத்தியா? இங்க தான் வச்சேன், காணோம்"

இது போன்ற சில பல கேள்விகளுக்கு பதில் அளித்தவாறு பம்பரமாகச் சுற்றிக் கொண்டு இருந்தாள், புதியதாக இல்லத்தரசி என்ற பட்டம் வாங்கியிருந்த வசுதா. சிறியவன் ஆதித்யா புதிய கல்வி ஆண்டில் காலடி வைத்திருந்தான். அதையொட்டியே வீடு மாற்றும் பணியைச் செய்து இருந்தார்கள். புதிய பள்ளிக்குச் செல்கிறான் என்று வசுதா தான் டென்ஷனாக இருந்தாளே தவிர, பிள்ளை எப்போதும் போல கிளம்பி கொண்டு இருந்தான்.



"மா! இன்னைக்கு புக்ஸ் கூட க்ளாஸ் வொர்க் நோட்ஸ் மட்டும் எடுத்துட்டு போனா போதும். எதுக்கு எல்லா நோட்டையும் எடுத்து வச்சிருக்க? எனக்கு எக்ஸ்ட்ரா வேலை இப்போ"



மூவரும் தயாராகி உணவு மேசைக்கு வர, விஷ்ணு பிள்ளைகளிடம் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.



"அர்ஜூன் காலேஜ் பஸ் எங்க நிக்கும்னு கரெக்டா கேட்டுட்ட தானே. டிரைவர் நம்பர் இருக்கா, ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்ணிடு"



"அப்பா! காலேஜ் பஸ் … சிக்னல்ல தான் நிக்குமாம். நிறைய நடக்கணும். மிஸ் பண்ணிட்டா ரொம்ப கஷ்டம். இப்போ தான் நாம காலேஜூக்கு பக்கமா வந்துட்டோமே. லைசன்ஸூம் வாங்கியாச்சு. ப்ளீஸ்! எனக்கு பைக் வாங்கி கொடுத்திடுங்களேன். நான் பாட்டுக்கு ஃப்ரீயா போயிட்டு வருவேன்"



"நோ அர்ஜூன்! இந்த வருஷத்துக்கு பஸ் ஃபீஸ் கட்டியிருக்கோம் ஞாபகம் இருக்கா? வருஷம் முடிய இன்னும் இரண்டு மாசம் இருக்கு. அதுவும் போக, காலேஜ் பஸ்ல போறது தான் சேஃப். பைக் எல்லாம் வாங்கித் தருவேன்னு கனவுல கூட நினைக்காத"



"அடுத்த செம்ல இருந்து எனக்கு நிறைய ஃபீல்டு வொர்க் இருக்கும் பா. காலேஜ் பஸ் எல்லாம் அனுப்ப மாட்டாங்க. பைக் இருந்தால் தான் வசதி. ப்ளீஸ் பா"



"நானும் பைக் ஓட்டினவன் தான். சாதனை பண்றேன்னு முட்டியை உடைச்சிட்டு நான் பட்ட அவஸ்தை, நீயும் படவேண்டாம். நோ மீன்ஸ் நோ தான். திரும்பத் திரும்ப கேட்டு எனக்கு டென்ஷன் ஏத்தாத, அர்ஜூன்"



"நீங்க வண்டி ஓட்டி மாதிரியே நானும் ஓட்டுவேன்னு ஏன் நினைக்கிறீங்க. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனா எனக்கும் ஆகணுமா? நான் நல்லா ஓட்டுவேன்னு நம்புங்க பா"



"ஆமாம் ஆமாம்! நம்புங்க பா! நம்புங்க! நம்பிக்கை அதானே எல்லாம்" இடையே புகுந்த ஆதித்யாவை முறைத்தவன், "ப்ளீஸ் பா! நான் கேர்ஃபுல்லா ஓட்டுவேன். இட்ஸ் எ ப்ராமிஸ்"



"ஓகே ஓகே… யோசிக்கிறேன். பட் இப்போ ஃபைனான்ஸ் ரொம்ப டைட்டா இருக்கு. அடுத்த செம் வரும் போது பார்க்கலாம்"



"தேங்க்ஸ் பா. தேங்க்ஸ் சோ மச்"



"பாத்தியா மா! அர்ஜூன், ஆயிரத்தெட்டு ப்ளீஸ் போட்டு அப்பாவக் கவுத்திட்டான். ஆனா, அர்ஜூன் எதுக்கும் இந்தப் பேச்சை ரெகார்ட் பண்ணி வச்சுக்கோ, நான் எப்போ பைக் வாங்கித் தரேன்னு சொன்னேன்னு கேட்டாலும் கேப்பார்" என்ற ஆதித்யாவின் புறம் தந்தையின் கவனம் திரும்ப, "அப்பா! நான் ஸ்கூல் பஸ்ல போகலை. சைக்கிள்ல தான் போகப் போறேன்" என்றான் அவசரமாக.



"ஐ நோ. நீ சைக்கிள்ல தான் போகப் போற. பட் புது ஏரியா, அதோட புது ஸ்கூல். பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வரணும். மெயின் ரோட்டில போகும் போது ஓரமா ஓட்டணும். திரும்பிப் பார்த்துட்டே ஓட்டக்கூடாது" என்று ஆரம்பித்து நீண்ட அறிவுரை பட்டியலை முடித்த போது



"வை ப்ளட்"



"சேம் ப்ளட்" என்று சகோதரர்கள் இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்.



டிபனைப் பரிமாறியபடி அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு இருந்த வசுதாவிற்குத் தனது வருமானம் நின்றதால் தான் இந்த நிலைமையோ என்று தோன்றியது. குழந்தைகளுக்கு எதையுமே இல்லை என்று சொல்லாமல் வளர்த்தவளுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பிள்ளைகள் இருவரும் நிலைமையை புரிந்து கொண்டு நடந்தாலும் இவளது மனம் குறுகுறுத்தது.



"வசு! ப்ராபர்டி டேக்ஸ் பே பண்ணின பில் இருக்குல, இபி ஆஃபீஸ்க்கு போய் நேம் சேஞ்ச் அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்துடு. ஆதார் கார்டுல அட்ரஸ் சேஞ்ச் பண்ண என்ன ஆப்ஷன் இருக்குன்னு பாரு. அத வச்சு தான் மத்த டாகுமெண்ட்ஸ் எல்லாம் அட்ரஸ் மாத்தணும். அப்புறம் வண்டி இன்ஷூரன்ஸ் இந்த மன்ந்த் முடியப் போகுதுன்னு நினைக்கிறேன், கொஞ்சம் செக் பண்ணிடு"



"அம்மா! ப்ரிண்டர்ல கேட்ரிஜ் இருக்குல்ல? இல்லேன்னா மறக்காம ஆர்டர் பண்ணிடுங்க. எனக்கு ப்ராஜெக்ட் வொர்க் ப்ரிண்ட் அவுட் எடுக்கணும். அப்படியே இரண்டு ஃபைல் வேணும்"



"ஃபைல் நிறைய இருக்கேடா. பாக்ஸ் ஓபன் பண்ணி பாத்தியா?



"எனக்கு டைம் இல்லம்மா. நீங்களே ஸ்டேஷனரி பாக்ஸ் ஓபன் பண்ணி எடுத்து வச்சிடுங்க"



விஷ்ணுவும் அர்ஜூனும் அவர்களின் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுப் பறந்துவிட, ஆதித்யா அவனது சைக்கிளைத் துடைத்துக் கொண்டு இருந்தான்.



"பார்த்து போயிடுவியா ஆதி? அம்மா வேணும்னா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கூட வரட்டுமா?"



"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. உனக்கு சைக்கிள் ஓட்டவும் தெரியாது. நீ நடந்து வருவ, நான் உன் ஸ்பீடுக்கு சைக்கிள் ஓட்டணும். அப்புறம் எனக்கு ஸ்கூலுக்கு லேட்டாகிடும், உனக்கும் காலெல்லாம் வலிக்கும். நானே போய்க்கிறேன்"



"அதில்லடா! இரண்டு சிக்னல் க்ராஸ் பண்ணனும். மெயின் ரோட்டில ட்ராஃபிக் ஜாஸ்தியா இருக்கும். அதான் யோசிக்கிறேன்"



"இப்படி சொல்லிச் சொல்லியே என்னை எங்கேயும் தனியா அனுப்பாம விட்டுட்ட மா.

இந்த அர்ஜூன் எப்போ பார்த்தாலும் என்னைப் பாப்பான்னு கேலி பண்றான். நீ முதல்ல என்ன குட்டிப்பாப்பா மாதிரி ட்ரீட் பண்றத நிறுத்து. நான் இப்போ நைன்ந்த் படிக்கிறேன். கொஞ்சமாச்சும் பெரிய பையனா ட்ரீட் பண்ணுமா"



அவன் சொல்வதும் சரிதான், ஏனோ அவனைக் குழந்தையாகவே பாவிக்கத் தோன்றியது அவளுக்கு. "மா! என்னை இப்படிக் கொஞ்சினதா எனக்கு ஞாபகமே இல்லம்மா!" அவனைக் கொஞ்சுவதைப் பார்த்து, அர்ஜூன் கூட அடிக்கடி அவளிடம் கோபித்துக் கொள்வான். இன்னும் அவள் முகம் தெளியாதது கண்டு,



"இந்த ரோட்டுல தான் ஏற்கனவே இரண்டு ரிகர்சல் எல்லாம் பாத்தோமில்ல, அப்புறம் என்னம்மா?"



"ஓகே டா, செல்லம். பார்த்து போயிட்டு வா. நல்லா படி. ஃப்ரண்ட்ஸ எல்லாம் விட்டுட்டு வந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணாத. புது ஃப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க"



"மா! போதும் நான் கிளம்பறேன். காத்தடிக்கற பம்ப் புதுசா வாங்கணும்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா?"



"ஏன் டா பழசு என்ன ஆச்சு?"



"அதுல பின் உள்ள மாட்டிக்கிச்சு. உடைச்சுத் தான் எடுக்கணும். நீ புதுசே வாங்கிடுமா, அது தான் பெட்டர்"



"நீ போற வழியிலே தான் சைக்கிள் கடை இருக்கே, தேவையான போது காத்தடிச்சிட்டு போகலாமில்ல. எதுக்குடா வீட்டுல ஒரு பம்ப்?"



"நீயா தானே முதல்ல வாங்கி கொடுத்த, இப்போ எதுக்குன்னு கேட்கிற?"



'சரியான கேள்விக்குப் பிறந்தவன். பாயிண்ட் பாயிண்ட்டா கேட்டு நம்மளப் பைத்தியம் ஆக்கிடுவான். ஆனாலும் இவன் இவ்வளவு புத்திசாலியா இல்லாமல் இருந்திருக்கலாம்' மனதுக்குள் நொடித்துக் கொண்டு, வெளியே "பழைய வீட்டுல கடை பக்கமா இல்லை. இப்போ இருக்குல்ல?" என்று கேட்டு அவனுக்கு அம்மா என்று நிரூபித்தாள் இல்லை... இல்லை …நிரூபிக்க முயன்றாள்.



"மா! வீட்டுல இருந்து கடைக்குப் போறதுக்குள்ள பஞ்சர் ஆயிட்டா என்ன செய்யறதுன்னு நீ தானே அப்பா கிட்ட கேட்ட? அது என் காதிலயும் நல்லாவே விழுந்துடுச்சு. எப்படியும் பம்ப் வாங்கத் தான் போற, எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்டு என் எனர்ஜியும் சேர்த்து வேஸ்ட் பண்ற?"



"ஙே" என்று விழித்தாள் வசுதா. தாயை அசடு வழிய வைத்த திருப்தியுடன்

"பை மா" என்று கிளம்பி விட்டான் அவன்.



இன்னைக்கு லிஸ்ட் இவ்வளவு தான். அவள் வேலைக்கு செல்லவில்லையே என்று வருத்தப்படுவாளாம், அவளை நாள் பூராவும் பிஸியாக வைத்திருக்க உதவி செய்கிறார்களாம், நல்ல உதவியாகத் தான் தெரிகிறது. அவரவர் பள்ளி கல்லூரி அலுவலகம் என்று கிளம்பியிருக்க, அவ்வளவு பெரிய வீட்டில் வசுதா தனித்து விடப்பட்டாள். செய்வதற்கு மலை போல் வேலைகள் வீட்டுக்குள் காத்திருக்க, வேளியே சென்றவர்களும் அவர்களால் முடிந்த அளவு வேலைகளைக் கொடுத்துச் சென்றிருக்க, அவளுக்கோ எதையும் செய்யத் தோன்றவில்லை. மனம் ஏனோ வெறுமையாக இருந்தது.



இந்த வேலைகளையெல்லாம் வருடக்கணக்கில், இவளும் வேலைக்கு செல்லும் போதும், செய்து கொண்டு இருந்தவள் தான். ஆனாலும், இன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது. 'முளைக்கும் போதே ஆம்பிளைங்கிற திமிரும் கூடவே வந்திடும் போல. எல்லாமே நான்தான் செய்யணுமா? இவங்களுக்கு எல்லாம் கண்ணு தெரியாதா? இல்லை மூளை வேலை பாக்காதா? தலைவணங்கி வேலை செஞ்சா தேய்ஞ்சா போயிடுவாங்க?'



தனக்காக காலை உணவாகத் தயாரித்து வைத்திருந்த சத்துமாவுக் கஞ்சியை வேண்டா வெறுப்பாக விழுங்கியவளை ஏனோ ஒரு விதத் தனிமை சூழ்ந்து கொண்டது. கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது தோன்றும் உணர்வுகள் தான், இப்போது பன்மடங்காகப் பெருகி இருக்கிறது.



சிறிது காலமாகவே, எரிச்சல், கோபம், ஆங்காரம் என்று எதற்கெடுத்தாலும் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய வசுதாவின் புதிய முகத்தைக் கண்டு "அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு" பிள்ளைகள் மிரண்டு போய் இருந்தனர். அவளுக்கே அவளைப் பிடிக்காமல் போய் விடுமோ என்று பயமாக இருந்தது. இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்று அவளது கற்பனைக் குதிரை பிரமாதமாகப் பறந்தது.



என்னவாக இருக்கும் என்று மெத்தப் படித்தவர்களின் முதல் டாக்டரான இன்டெர்நெட்டைக் குடைந்தால், பெரீ மெனோபாஸூக்கான அறிகுறிகள் என்றது. தொடர்ந்து ஆராய்ந்து பார்த்த விஷயங்கள் அவளை மேலும் பயமுறுத்தின. 'ரொம்ப பழைய லிஸ்ட் வச்சிருக்காங்க போல. நாப்பதே நாப்பது தான் இருக்கு. எனக்கு நானூறு பிரச்சினை இருக்கேடா. லிஸ்ட்ட அப்டேட் பண்ணுங்கடா. நான் வேணும்னா ஹெல்ப் பண்றேன்' மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்து கொண்டாள்.



மனநிலையில் ஏற்படும் மாற்றங்களோடு போனசாக, உடலில் ஏற்படும் மாற்றங்கள், தினமுமே பீரியட்ஸ் நாட்கள் போல, அதற்கான அத்தனை அறிகுறிகளோடும், வரும் முன் வந்த பின் என்று மாதம் முழுவதுமே ரகம் ரகமான ஏதேதோ உபாதைகள், உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை இனம் விளங்கா பிரச்சினைகள்.



அவள் பிறந்ததிலிருந்தே பல்வேறு உடல் பிரச்சனைகளைச் சந்தித்தவள் தான். ஆனால் இது புதிது. இது வரை பிரச்சினை செய்யாத தைராய்டு கூட சட்டென்று உயர்ந்தது.



ஜீரோ சைஸ்ஸில் இருந்தவள் பக்கவாட்டில் வளர்ந்து படிப்படியாக எக்ஸ்ட்ரா லார்ஜ்க்குப் போனதில் அவளது வார்ட்ரோப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை, விதம் விதமான உடைகளை அணிகிறோம் என்றே நினைத்தாள். காலப் போக்கில் அவள் ப்ராண்ட் பார்த்து, ஆயிரக்கணக்கில் செலவழித்து தேடித் தேடி வாங்கிய உடைகளை எல்லாம் மூலையில் வைக்க வேண்டிய சூழ்நிலை வந்த போது, திணறிப் போனாள். விலை குறைவான உடைகளுக்கு மாறினாலும் பிராண்டட் துணிகளை வாங்குவதை நிறுத்தவில்லை.



ஒரு கட்டத்தில், இனிமேல் எடை குறையும் வாய்ப்பே இல்லை என்று உடைகளை மற்றவருக்கு மூட்டை கட்டிக் கொடுத்து விட்டாள். பெரிய குடும்பத்தில் முதல் பேத்தியாகப் பிறந்ததின் பலன்! சைஸ் வாரியாக இவளது உடைகளை அணிந்து கொள்ள ஏகப்பட்ட போட்டி. இவற்றில் சுடிதார், ஸ்கர்ட், ஜீன்ஸ், பேன்ட் என்று பலரக உடைகளும் அடக்கம்.



இப்படியான சிந்தனைகளில் இருந்தவளை அவளது ஒன்று விட்ட சகோதரிகளில் கடைக்குட்டி, பாசமாக அலைபேசியில் அழைத்தாள்.



"இப்போ தான் உன்னை நினைச்சேன். ஆயுசு நூறு தான் போ"



"வசு அக்கா! அடுத்து எப்போ புது டிரஸ் வாங்குவ?"



"எதுக்குடி கேட்கிற?"



"இல்ல.. நீ புதுசா வாங்கிட்டா, அடுத்த ரவுண்ட் உன் டிரஸ் எல்லாம் எனக்குத் தான் வரணும். நானும் நாலு மாசமா வெயிட்டிங். அதான் கேட்டேன்"



"அடிப்பாவி! இதென்ன ட்ரைன் டிக்கெட்டா? நீ வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கேன்னு சொல்றதுக்கு. நானே கொஞ்ச நாளா வெயிட் போடாமல் இருக்கேனேன்னு சந்தோஷப் பட்டுட்டு இருக்கேன். அது பொறுக்கலையா உனக்கு"



"சே.. சே.. நீ அப்படியெல்லாம் சந்தோஷப் படக்கூடாது அக்கா! எல்லாரும் உன் டிரஸ் போட்டு சுத்தறாங்க. நான் மட்டும் குறைஞ்சா போயிட்டேன். என் மேல பாசமே இல்லையா உனக்கு? புது வீட்டுக்கு வந்துட்ட. வேலை நிறைய இருந்திருக்கும். அப்போ கண்டிப்பா வெயிட் ஏறியிருக்கணுமே? நார்மலா எல்லாருக்கும் பயங்கரமா வேலை செஞ்சா வெயிட் குறையும், உனக்குத்தான் ரிவர்ஸ்ல வொர்க் பண்ணுதே. வாட் டு டூ. எதுக்கும் செக் பண்ணி பாரு"



"ஓய்… நேரில வந்தேன்..உதை பின்னிடுவேன். வைடி ஃபோன"



"மறக்காம வெயிட் செக் பண்ணுக்கா"



'என்ன பேச்சு பேசறா? இப்படி ஆகிடுச்சே என் நிலைமை?' என்று நினைத்தவள், நேராகக் கண்ணாடியின் முன் சென்று நின்றாள். அவள் அணிந்திருந்த நைட்டிக்குள் உருவம் என்ன சைஸ்ஸில் இருந்தது என்று அனுமானிக்க முடியவில்லை. பிறந்த நாளன்று கூட கோவிலுக்குச் செல்வதற்காக என்று புதுப் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள்.



எல்லோரையும் போல டூபைடூ அல்லது சில்க் காட்டன் ரவிக்கை அணிந்திருந்தால் கைக்குள் நுழையாமல் போயிருக்குமோ என்னவோ? அவள் அணியும் பனியன் துணியாலான ரவிக்கை, அவளை எப்போதும் போல் தான் காட்டியது. அவளும் 'நாளைக்காவது சுடிதார் போட்டுப் பார்க்கணும்' என்று தினமும் சபதம் எடுக்கிறாள் தான். அதைச் செயல்படுத்துவதில் தான் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் வந்து சேர்கின்றன.

அடுப்பில் சாதம், பால் என்று எல்லாவற்றையும் வைத்து விட்டு, பால் பொங்கி விடும் முன், அரக்கப்பரக்க ஐந்து நிமிடத்தில் குளித்து விட்டு வருபவளுக்கு நைட்டி என்பது பெரிய வரப்பிரசாதம் அல்லவா? சாதாரணமாக நைட்டி என்பது நைட்டில் அணிவது என்று லெக்சர் கொடுப்பவள் தான், சில நேரங்களில் இப்படி அவளது தலையெழுத்தை நைட்டி தான் தீர்மானிக்கிறது!!



இப்படியாக யோசித்துக் கொண்டு இருந்தவள் மீண்டும் ஒரிஜினல் பிரச்சினைக்கு வந்தாள். டாக்டரிடம் போகலாமா என்று யோசிக்கும் போதே, 'வழக்கமான டாக்டர் கிட்ட போறதா? இல்லை பக்கத்திலேயே டாக்டர் தேடறதா?

எத்தனை டாக்டர் பாக்கணும்? கைனகாலஜிஸ்ட், ஆர்த்தோ, நியூரோ, கார்டியோ ... யாரை முதலில் பார்ப்பது' என்று லிஸ்ட் போட்டவளுக்குத் தலை சுற்றியது.



"ஹேய் வசு! இதெல்லாம் எல்லாருக்கும் வரது தான். ஏதோ உனக்கு மட்டும் தான் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணிட்டு. இட்ஸ் கொயட் நேச்சுரல் மா. யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" விஷ்ணுவின் குரல் காதுகளில் எதிரொலித்தது.



தனக்கு ஒரு ஜலதோஷம் பிடித்தாலும் வீட்டையே இரண்டாக்கி விடும் விஷ்ணு, வசுவோ குழந்தைகளோ படாத பாடு பட்டாலும் சொல்லும் தாரக மந்திரம் "யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்பது தான். அதனாலேயே பெரும்பாலான சமயங்களில் அவனிடம் எதையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதில்லை. பெரிய வலிகளை எல்லாம் கூட சர்வசாதாரணமாக சகித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டாள்.



ஆனால் கடந்த ஒரு வாரமாக உடல் நிலையில் ஏற்பட்ட பல மாற்றங்களை, அவளால் தாங்க முடியாமல் போனது. 'இப்போது என்ன தான் செய்வது?'



'நானுறங்கும் நாள் வேண்டும் ..

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும் .. என் கண்ணில் நீர் வேண்டும் ..

சுகமாக அழ வேண்டும் ..' காற்றில் மிதந்து வந்த பாடல் அவளது நிலையைச் சொன்னது.



அவளது தனிப்பட்ட மனநலம் உடல்நலம் என்பதை எல்லாம் தாண்டி கணவன் மனைவிக்கு இடையேயான உறவில் விரிசல் விட ஆரம்பித்தது. போன வருடத்தில் ஒரு நாள் நடந்தது அது. அவள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலம் அது. அதுவரையில் இல்லாத வகையில் மாதச் சுழற்சியில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களில் குழம்பிப் போயிருந்தாள் வசுதா. ஏப்ரல் மாதத்தில், பத்து நாள் பயணமாக வட இந்தியாவில் இருந்த மலைப்பிரதேசங்களைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்து இருந்தனர்.



அர்ஜூனும் ஆதித்யாவும் பள்ளி இறுதித் தேர்வு எழுதிக் கொண்டு இருக்க, விஷ்ணு இயர் என்டிங் என்று டார்கெட்டின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த வேளையில், ஒற்றை ஆளாய் பெட்டி கட்டும் வேலை வழக்கம் போல வசுதாவின் தலைமேல் விடிந்தது.



காலை ஆறு மணிக்கு எழுந்தவளுக்கு நாள் நீண்டு கொண்டே போனது. வழக்கமான வேலைகளுடன், மூட்டை கட்டும் வேலையும் சேர்ந்ததில் எப்போதடா படுக்கையில் விழுவோம் என்றிருந்தாள். குளிர் பிரதேசத்திற்கு செல்வதால் அதற்கேற்ப உடைகளை பேக் செய்ய வேண்டியதாக இருக்க, சென்னை வெயிலில் உலா வருபவர்களுக்கு அந்த மாதிரி உடைகளைப் புதிதாக வாங்க வேண்டியதாகிற்று. மேலாளரான அவள், பத்து நாள் விடுமுறையில் செல்வதால் அலுவலகத்திலும் வேலை நெட்டித் தள்ளியது.



அன்றைய தினம் முடிந்து அடுத்த நாளைக் கடிகாரம் தொட்டுக் கொண்டு இருந்த வேளையில் படுக்கைக்கு வந்தவள், குறட்டை ஒலியுடன் தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி தலை சாய்த்தாள்.



ஆழ்ந்த உறக்கத்தில் பிடியில் சென்றவளை, விஷ்ணுவின் கைகள் அணைத்துக் கொண்டதும், தூக்கம் தூரம் போனது.



"ம்ச்" என்ற ஒற்றைச் சொல்லுடன் கைகளை விலக்கி விட்டாள்.



"வசு ப்ளீஸ்!"



"எனக்கு இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்குங்க. தயவு செஞ்சு தூங்க விடுங்க"



"உனக்கு எப்போ தான் டயர்டா இல்லாமல் இருந்திருக்கு? மனுஷனைப் படுத்தறதே பொழப்பா போச்சு. சே!"



"உங்களுக்கு என்ன? கொடுத்து வச்ச மகராசன். ஆஃபீஸ் போயிட்டு வரது மட்டும் தான் உங்க வேலை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா, குடிக்கிற தண்ணில இருந்து எல்லாம் கைக்கு வந்துடுது. இங்கே நாள் பூராவும் அல்லாடறது நான் தானே? இப்போ எல்லாம் ஹவுஸ் வைஃபா இருக்கிறவங்க கூட வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்காங்க. இங்கே அப்படியா? வேலைக்கும் போயிட்டு வந்து, வீட்டுலயும் வேலை பார்த்து, இது தவிர உங்க எல்லோருக்கும் எடுபிடி வேலையும் பார்க்க வேண்டியது இருக்கு. இதுல டயர்டா இருக்குனு ஒரு நாள் சொன்னது குத்தமா? எனக்கென்ன இப்போ தான் இளமை திரும்புதா?"



"ஏய் என்ன பேசற நீ? ஹெல்ப் பண்ண வந்தா, உனக்கு ஒன்னும் தெரியாது. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்ல வேண்டியது. இப்போ என்ன இப்படிப் பேசற?"



"ஆமா, நீங்க வேலை செய்யற லட்சணம் அப்படி. செய்யற வேலையை ஒழுங்கா செஞ்சா நான் ஏன் வேண்டாம்னு சொல்லப் போறேன். இவர் வேலை பார்க்க ஆரம்பிச்சா, கூட இருக்கிற எல்லாரும் என்ன செஞ்சிட்டு இருந்தாலும் நிறுத்திட்டு இவருக்கு எடுபிடி வேலை செய்யணும். கடைசில இரண்டு வேலையும் அந்தரத்தில நிக்கும். அதுக்கு நானே இரண்டையும் செஞ்சிட்டா உங்களுக்கு வேலை மிச்சமாகும், எனக்கும் வேலை ஒழுங்கா நடக்கும்"



பேசக்கூடாத இடத்தில் ஆரம்பித்த பேச்சு எங்கெங்கோ சுற்றி வார்த்தைகள் தடித்து, "சே, மனுஷன் பேசுவானா உன் கிட்ட? இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் உன் கிட்ட எனக்கென்ன பேச்சு. இனிமேல் உன் கிட்ட வந்தால் என்னன்னு கேளு" என்று திரும்பிப் படுத்து விட்டான்.



"அது சரி.." என்றவளும் அவனுக்கு சரியான பதில் கொடுத்து விட்ட திருப்தியுடன் தூங்கி விட்டாள். திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் முதன் முதலாக இருவருக்கும் இடையே ஒரு திரை விழுந்தது. இதற்கு முன்பும் சண்டைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அதைப் படுக்கை அறை வரைக்கும் நீட்டியதில்லை.



உடலில் ஏற்பட்ட ஹார்மோன்களின் மாற்றத்தை அவளும் உணரவில்லை, அவனுக்கும் உணர்த்தவில்லை.

அதன் பின்னர் வந்த நாட்களில் பகல் பொழுதுகள் எப்பொழுதும் போல சாதாரணமாகச் சென்றாலும் இரவுகளில் ஒரு விலகல் இருந்தது என்பதை அவளால் உணர முடிந்தாலும், அதனை மாற்றும் வழி தெரியாமல் திகைத்தாள்.



இதோ இப்போது புது வீட்டுக்கு வந்த பிறகாவது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பியவளுக்கு நேற்றைய நாள் மொத்தமாக ஏமாற்றத்தை மட்டுமே தந்தது. நினைத்தது கிடைக்கவில்லை என்று கவலைப் படாமல், கிடைத்ததை வைத்து சந்தோஷப்படும் ரகம் அவள். அவளுக்கே இப்போது என்ன எதிர்பார்க்கிறோம், ஏனிந்த மாற்றம் என்று புரியவில்லை.



வழக்கம் போல இதற்கும் கூகுள் ஆண்டவரிடம் விடை தேடினாள். அப்படித் துப்புத் துலக்கியதில் ஆண்ட்ரோபாஸ், அதாவது ஆண்களுக்கான மெனோபாஸ் என்பது பற்றிய விவரங்களை அறிந்து கொண்டவள், கணவனின் சமீபத்திய நடவடிக்கைகளை ஆராய்ந்து ஒரு வேளை கணவனுக்கும் இந்த பிரச்சனைகளோ, இதை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பிப் போனாள்.



அப்போதும் கூட அவளுக்குள் இருந்த பெண்ணீயவாதி குதர்க்கமாகவே யோசித்தாள். இதிலும் கூட இயற்கை பெண்களைப் பாரபட்சமாகவே நடத்துகிறது. எல்லாப் பெண்களும் கட்டாயம் மெனோபாஸ் என்ற நிலையைக் கடந்தாக வேண்டும், அதில் வெகு சிலர் சாதாரணமாகக் கடந்து விடப் பெரும்பாலானோர் வருடக் கணக்கில் மிகவும் கடினமாகவே கடக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த கட்டாயம் இல்லை, அவர்களுக்கும் அதே கடினமான பாதை தான் என்றாலும் ஆண்ட்ரோபாஸ் என்ற நிலையை எல்லா ஆண்களும் கடப்பதில்லை. அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள் தான்.



சும்மா கிடந்த மனம் பலவற்றையும் நினைத்துக் குழம்பித் தவித்தது.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாய்ம் - 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.