அத்தியாயம் - 5
கைப்பேசியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த மகனின் முன்னால் வந்த அவன் அன்னை, பத்மா, “ஃபோனை ஆன் பண்ணிப் பேசினாத் தான் எதிர்ல இருக்கறவங்களுக்குக் கேட்கும் கண்ணா” என்றார்.“அட. அப்படியா? இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போச்சே” என முகத்தை அதிசயமாக வைத்துக் கொண்டு கதிர் சொல்ல, “சரி. சரி. ரொம்ப ‘பிட்’ போடாத.. நீ கேட்ட மாதிரி எழுதி உனக்கு மெயில் பண்ணிட்டேன்” என்றார் பத்மா.
“என் புஜ்ஜி அம்மா” என அவர் கன்னத்தைக் கிள்ளித் தன் உதட்டின் மேல் வைத்து ஓர் செல்ல உம்மா கொடுக்க, “கடைக்குப் போயிட்டு அப்படியே என் நிகழ்ச்சிக்குப் போக சரியா இருக்கும்.. கிளம்பலாமா” என்றார் பத்மா.
“அம்மா, இன்னும் நிறைய நேரமிருக்கு.. ஆனாலும் இது டூ மச். யூ நோ. என் பிறந்த நாளைக்கு எனக்குக் ‘கிப்ட்’ கொடுக்கறதுல அர்த்தம் இருக்கு. ஆனா, உங்களுக்கு எதற்கு கிப்ட் வாங்கிக் கொடுக்கணும்.?” எனக் கதிர் சலித்துக் கொள்ள,
“என்னடா இப்படிக் கேட்டுட்ட? இப்போ பிறந்தநாள் கொண்டாடறப்போ என் ஞபாகம் இருக்கும். ஆனா உனக்கு வயசாக ஆக, உன்னைக் கஷ்டப்பட்டுப் பெத்த என்னை மறந்துடுவியே.
கிஃப்ட் வாங்கிக் கொடுக்கிற வேலையைக் கொடுத்தா ஒவ்வொரு வருஷமும் என்னை ஞாபகம் வச்சுக்குவியே. அத்தோடு கஷ்டப்பட்டுப் பெத்த எனக்கு என்ன செஞ்சேன்னு நாளைக்கு நாக்கு மேலே பல்லு போட்டு யாரும் கேட்கக் கூடாது பாரு” என்றார் பத்மா.
இது தான் கதிரின் அன்னை. ஒவ்வொருத்தரின் மகிழ்ச்சிக்குக் காரணம் பொருட்களிலோ, இல்லை, வெளியில் நடக்கும் நிகழ்வுகளோ இல்லை. அது ஒவ்வொருத்தரின் மனதில் தான் உள்ளது என எண்ணுபவர்.
அதனால் மகனையும் அப்படியே வளர்த்ததில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் என்ன இவனின் இந்தக் குணத்தால், சக்திக்கு இவனைச் சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது.
“இப்போ யாரு ‘பிட்’ போடறது? ‘கிப்ட்’ வேணும் என நேரடியாக் கேட்க வேண்டியது தானே?” எனக் கதிர் சொல்ல, “என்னோடது எல்லாம் எப்படியும் வீட்டுக்கு வர்ற மருமகளுக்குத் தானே போய்ச் சேரும். அதனால் எப்படியும் உனக்குத் தான் லாபம்” என்றார் அவன் அன்னை.
“ச்சே. என்ன ஒரு ராஜதந்திரம்? இப்படிப் பேசியே எதிராளியைக் கவுத்திடுங்க. உங்களுக்காகவே லா படிச்சப் பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்” என்றான் கதிர்.
“என்னடா நீ சொல்லறதைப் பார்த்தா ஏற்கனவே பொண்ணைப் பார்த்துட்டு இங்கே வந்து ‘பிட்’ போடற மாதிரி இருக்கு” எனக் கதிரின் காதைத் திருகவும்,
“அட போங்கம்மா. நீங்க வேற. பார்த்தப் பெண்ணைக் கோட்டைவிட்டுட்டேன்.” என்றான்.
“என்னடா இப்படிச் சொல்லற? நான் பேசி ‘ஓ.கே’ சொன்னதுக்கு அப்புறம் தான் உனக்குக் கல்யாணம். ஞாபகமிருக்கில்ல” என பத்மா கண்ணை உருட்ட,
“அம்மா, சும்மா கண்ணை உருட்டாதீங்க. ‘தமிழ் பேராசிரியர் மாதிரியில்லை.. தமிழ் சீரியல்ல வர்ற வில்லி மாதிரியே இருக்கீங்க” என அன்னையைக் கலாய்த்தான்.
“வில்லியா? சில்லியாப் பேசக் கூடாது. நான் ஹீரோயினாக்கும்” என்றார் பத்மா.
“ஐயோ பாவம் பார்வையாளர்கள்” என உச்சுக் கொட்டியவன், “அம்மா, மோகினி மாதிரி வெள்ளையும், சொள்ளையுமா வந்தா. பட்டாம்பூச்சி மாதிரி பறந்தா. படபடன்னு பேசினா. திடீர்ன்னு கிளம்பிட்டா.
எல்லாமே கனவு மாதிரி இருக்கு. என்னோட இந்த வில்லன்கள் மட்டும் இல்லைனா இந்நேரம் அந்தப் பெண்ணை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருப்பேன். ‘இட்ஸ் ஓகே.’ இப்பவும் கெட்டுப் போகலை. சீக்கிரம் கொண்டு வந்து நிறுத்திடுவேன்” என்றான் கதிர்.
“வில்லன்களா? யாரைச் சொல்லற?” என பத்மா அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்க,
“வேற யாரு? பாலசரவணன் தான். அவன் ஒருத்தன் பத்து வில்லன்களுக்குச் சமம். அவனுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சது, எனக்கு மட்டும் அழகான பொண்ணு கிடைச்சிடுச்சுன்னு வயிறு எரிவான். பொறாமைப் பிடிச்சவன்” என்றான் கதிர்.
அப்போது மொத்தென்று கதிரின் முதுகில், சோபாவின் மேலிருந்த அலங்கார தலையணை பதம் பார்க்க, “ஆஹ்” என அலறியவன், “யாரது கோழை என் புறமுதுகில் எறிவது? தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வரச் சொல்லவும்” என நாடகப்பாணியில் பேசியவாறே திரும்பிப் பார்த்தான் கதிர்.
“நான் வயிறு எரிவேனா?. கரெக்ட்.. எல்லாத்தையும் உன்மேலே எறியப் போறேன்” எனப் பாலசரவணன் அங்கிருந்த பூக்குவளையை எடுத்தான்.
நண்பர்களின் கலாட்டாவில் பத்மா சிரிக்க, “அம்மா, உங்க முன்னாடியே உங்க பையனை ஒருத்தன் அடிக்கறான். அதைப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கீங்க. போய் அவனைப் பிடிச்சு தூண்ல கட்டிவைங்க. ஆயிரம் சவுக்கடி கொடுக்கணும்” என அவன் அன்னையிடம் சொன்னவன்,
“பாலசரவணா, அதுக்காக இவ்வளவு கனமானதை வச்சா அடிப்ப.. ஒரு கர்சீப்பை வீசியிருக்கலாமே” என்றான் நண்பனிடம் கதிர்.
“ஏன்? பூவை வீசியிருக்கலாம்.” என பாலசரவணன் கிண்டலடிக்க, “அது இன்னும் ‘பெட்டெர்’. இப்போ தான் எனக்குத் தோழன் மாதிரி நடந்துக்கற” என்றான் கதிர்.
“ஆன்ட்டி. அந்த வாழைப்பூவை எடுத்துட்டு வாங்க. வீசலாம்.” எனப் பாலசரவணன் சிரிக்காமல் சொல்ல, “அடப்பாவி.” என்றான் கதிர்.
“மொக்கையைப் போடறது பெரிசில்லடா. நாம பல்பு வாங்காம மொக்கையைப் போடணும். அது தான் பெருசு” என அன்று பெங்களூருவில் கதிர் சொன்னதை வைத்தே கலாய்த்தான்.
“இருப்பா, பாயசம் எடுத்துட்டு வரேன். சாப்பிட்டுட்டே பேசுங்க” என பத்மா அகல, “ம்ம்ம். எல்லோரும் குருவை மிஞ்சிய சிஷ்யனாயிட்டு வராங்க. பரவாயில்லை. நானெல்லாம் உன்னை மாதிரி பொறாமைப்படப் போவதில்லை” என்றான் கதிர்.
பாலசரவணனும், கதிரும் சேர்ந்து சொந்தமாகக் கட்டுமான நிறுவனம் ஒன்றை நிறுவி, இயற்கை எழில் தவழும் வகையில் வீடு, மற்றும் அலுவலகம் கட்டிக் கொடுத்து வருகிறார்கள். மனதுக்கு அதிக அளவில் புத்துணர்ச்சி தருவதில், செடி, கொடிகளுக்கு நிகர் வேறெதுவுமில்லை என்ற ஒருமித்த கருத்தைக் கொண்டவர்கள் என்பதால் எவ்வித கருத்து வேறுபாடுகளும் வந்ததில்லை.
அதனால் வீடோ, அலுவலகமோ எதைக் கட்டினாலும் அதில் செடி, கொடிகளின் பங்கு மிகுந்திருக்கும். அதற்காக நிறைய இடத்தை வீணும் செய்ய மாட்டார்கள்.
வளர்ந்து வரும் இந்த நகர்புறச் சூழலில் இடப்பற்றாக்குறை இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல், பச்சை பசேலென்று செடி கொடிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தால் யார் தான் மறுப்புச் சொல்வார்கள்? அதனாலேயே இப்போதைய வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருந்தனர் இருவரும்.
இப்படித் தனித்து இத்துறையில் கால் பதித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளே ஆனாலும், அவர்களின் கலகலப் பேச்சிலும், திறமையான வேலை நுணுக்கத்தினாலும், உழைப்பாலும் மளமளவென்று முன்னேறிவிட்டனர்.
கதிர் ஆர்கிடெக்ட் என்றால், பாலசரவணன், சிவில் என்ஜினீயர். அதனால் இரண்டு துறையிலுள்ள நுணுக்கங்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.
“ஆமா, வரும் போது என்னமோ மோகினிப் பிசாசைப் பார்த்தேன்ன்னு சொல்லிட்டு இருந்த” எனப் பாலசரவணன் கேட்க, “டேய். தங்கச்சிடா. பிசாசுன்னு எல்லாம் சொல்லக் கூடாது. அப்புறம் கோள் மூட்டிடுவேன்” என்றான் கதிர்.
“நீ கோள் மூட்டு. இல்லை, கிரகத்தை மூட்டு. எனக்குப் பிரச்சனையில்லை. இப்போ என் பிரச்சனைக்கு ஓர் தீர்வைச் சொல்லி, என் வாழ்க்கையில் விளக்கேத்தி வை. ” என்றான்.
“என் பிறந்த நாளுக்குக் கூப்பிட்டு ஒரு விஷ் பண்ணமுடியலை. ஆனா நான் உன் வாழ்க்கையில் லைட் சுவிட்ச் போடணுமா?” எனக் கதிர் முறைக்க,
“ப்ச். காலையில இருந்து ஒரே சோகம்டா.. குப்புறப்படுத்து சோகப்பாட்டுக் கேட்டுட்டு இருந்தேனா, அதனால் உனக்கு பர்த்டே சாங் பாட முடியலை” என்றான் பாலசரவணன்.
“இங்க பார்றா. பாட்டுக் கேட்டு சோகத்தைத் தாலாட்டுப் பாடி தூங்க வச்சாராம். எல்லாம் வித்தியாசமாத் தான்டா யோசிக்கறீங்க. சரி, என்ன விஷயம்?” என்றான் கதிர்.
“அது. எங்க வீட்டுக்கு லெப்ட் வீட்டில் ஒரு சின்ன வாண்டு வந்து சேர்ந்திருக்கு. என்ன சொன்னாலும் எனக்குக் கவுண்ட்டர் கொடுத்துட்டு இருக்குடா.. அதைப் பார்த்து ரைட்டுல இருக்கிற பெரிய பொண்ணு என்னைக் கேவலமாப் பார்க்கிற மாதிரியே இருக்கு. நானும் ரௌடின்னு ப்ரூவ் பண்ணனும்.. அந்தச் சின்ன வாண்டை அந்த வீட்டை விட்டுத் துரத்தணும்” என்றான் பாலசரவணன்.
“வில்லன்களைப் பல டிசைன்ல பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு சின்னப் பொண்ணு வில்லன் எனச் சொல்லறதை இப்போ தான் பார்க்கிறேன்” எனக் கதிர் வாயைக் கூட மூடவில்லை,
“நீயெல்லாம் ஒரு தோழனாடா? என் பிரச்சனைக்கு வரிஞ்சு கட்டிட்டு வரவேண்டாம்.. உன் நண்பனுக்கு ஓர் தலையிறக்கம்ன்னா அப்படியே பதற வேண்டாம். உட்கார்ந்து அலசி ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்க” எனப் பொங்கினான் பாலசரவணன்.
“டேய். எதுக்கு இப்போ பொங்கல் பாத்திரம் மாதிரி பொங்கிட்டு இருக்க.? அந்த ரைட் வீட்டுப் பெரிய பொண்ணு உன்னைக் கேவலமா பார்த்தா என்ன? அவளை லவ் பண்ணறியா?” என கதிர் அவனிடம் கேட்க,
“லவ்வா. நானா? நெவர். என் அகராதியில் லவ் என்கிற வார்த்தையே இல்லை என உனக்குத் தெரியாதா?” என சிவாஜியை விடவும் உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான் பாலசரவணன்.
“இப்போ பீல் பண்ணி என்ன செய்ய? அதை நீ அகராதி வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்கணும்” எனக் கிண்டலாகச் சொன்ன கதிர்,
“அப்புறம் எதுக்கு இல்லாத உன் இமேஜை கயிறு கட்டி இழுத்து வைக்க நினைக்கிற? உண்மையான காரணத்தைச் சொல்லு” என கதிர் கேட்டான்.
“எப்படிக் கண்டுபிடிச்ச?” என பாலசரவணன் வாயைப் பிளக்க, “என்கிட்டே மொக்கையை ‘டன்’, ‘டன்’னா வாங்கிட்டு ‘கின்’ன்னு நிப்பியே. இதுக்கெல்லாம் அசரற ஆளா நீ?” என்றான் கதிர்.
“உனக்குக் கூட என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கு.. சொல்லறேன் கேளு” என மோட்டுவளையைப் பார்த்தான் பாலசரவணன். பிளாஷ்பேக் சொல்கிறானாம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், பாலசரவணன் தற்சமயம் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்களுக்குப் பக்கத்துக்கு வீட்டுக்கு ஓர் குடும்பம் புதிதாகக் குடியேறியிருக்கிறது.
அந்த வீட்டை வாங்க வேண்டும் எனப் பிரியப்பட்டார் பாலசரவணனின் தந்தை. ஆனால் பாலசரவணனோ,
“இப்படி ஓர் தங்கமான எஞ்சினியர் மகனை வைத்துக் கொண்டு இத்துப் போன வீட்டை வாங்க நினைக்கறீங்களா? நீங்களே என்னை மதிக்கலைன்னா வேறு யாரு என்னை மதிப்பா. நான் இதை விட நன்றாக வீடு கட்டிக் கொடுக்கிறேன்” எனப் பாலைப் போல் பொங்கினான்.
மகனுக்குப் பிடிக்காததை ஏன் செய்ய வேண்டும் என்று அவரும் அமைதியாகிவிட்டார். புதிதாக வந்த அவ்வீட்டின் உரிமையாளர் அடிக்கடி வெளியூர் செல்வதாலும், அவரின் மனைவி வேலை பார்க்கும் இடம் அங்கிருந்து மிக அருகில் என்ற காரணத்தாலும் அங்கே குடிப்பெயர்ந்தனர்.
நேரமின்மை காரணத்தால் தங்கள் ஆறு வயது மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரமில்லை என பாலசரவணனின் தந்தையிடம் புலம்பினார் அந்த வீட்டின் உரிமையாளர்.
முதலிலேயே, ‘சொல்லிக் கொடுப்பது, என் மூச்சு. இறுதிவரையில் தொடரும் என் பேச்சு’ என பாலசரவணன் வடையைத் தின்றுவிட்டு, மடையைத் திறந்த வெள்ளமென அந்தக் குடியிருப்பில் அனைவரிடமும் வீரவசனம் பேசியிருந்தான்.
அதனால் “என் மகன் சொல்லிக் கொடுப்பான்” என பாலசரவணனைக் கோர்த்துவிட்டார். அவனும் என்னவோ பாரத ரத்னா விருதை வழங்கிவிட்டதைப் போல் நடமாடிக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்தச் சிறுமியின் அன்னையைப் பார்த்தும் அவனின் மகிழ்ச்சி மழை மேகமாய் கலைந்து போனது. அந்தச் சிறுமியின் அன்னை, கீர்த்திகா கல்லூரிக் காலத்தில் பாலசரவணன் ஒருதலையாகக் காதலித்தப் பெண்.
நண்பன் சொன்னதைக் கேட்டு, “ஹா. ஹா. ஹா.. முடியலை. அந்த கீர்த்திகா போயும், போயும் உன் வீட்டுக்குப் பக்கத்திலா குடி வரணும்” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் கதிர்.
“அந்த கீர்த்திகாவை அங்கிருந்து துரத்தணும். என் அப்பா-அம்மாகிட்டே நான் லவ் சொன்னதை வத்தி வச்சிடுவாளோன்னு ‘பக் பக்’ன்னு அடிக்குது. அந்த வீட்டை நான் வாங்கணும்” என்றான் பாலசரவணன்.
“ஆனாலும் அப்படி என்னடா அவசியம் அந்த வீட்டை வாங்கணும்ன்னு? நீ முன்னே சொன்ன குறைகள் எல்லாம் இன்னும் அந்த வீட்டில் அப்படியே தானே இருக்கு” எனக் கதிர் சொல்ல,
“என்னடா நீ லூசுத்தனமாப் பேசற? அந்தப் பொண்ணு என் கண் எதிர்ல ஹாயா இருப்பா. நான் மட்டும் அவளோட பொண்ணுக்கு ட்யூசன் சொல்லிக்கொடுத்துட்டு மனசுல புழுங்கிட்டு இருக்கணுமா?” என்றான் பாலசரவணன்.
“அப்போ பாடம் நடத்த முடியாதுன்னு சொல்லிடு” எனக் கதிர் சொல்ல,
“உனக்கு மட்டும் தான் பெருமைப்பட காபி ரைட்ஸ் இருக்கா? எங்க திறமை மேலே நாங்க பெருமைப்படக் கூடாதா? ரொம்பவும் பொறுமையா சொல்லிக் கொடுப்பேன்னு நீயே எவ்வளவு பெருமையா சொல்லுவ.
அதை நம்பி நான் வீரவசனம் பேசியது எங்க குடியிருப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கறப்போ நான் அந்தப் பெண்ணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலைன்னு சொன்னா ஏன், எதற்கு எனக் கேள்விகள் வரும்.. அப்புறம் உண்மை வெளிவந்துவிடும்” என்றான் பாலசரவணன்.
“இது வீரவசனம் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” எனக் கதிர் சொல்ல,
“வேணா அப்படிப் பேசின என் வாயை ‘பினாயில்’ போட்டுக் கழுவறேன். இனிமேல் வாயைத் திறக்கலை. போதுமா? என் வாழ்க்கை ஒரே இருட்டா இருக்கு. கொஞ்சம் வெளிச்சம் ஏத்திவைடா” என்றான் பாலசரவணன்.
“சரி, இப்போ ஷாப்பிங் போறப்போ ஒரு லிட்டர் ‘பினாயில்’ வாங்கிட்டு வந்துடலாம். அப்புறம் உட்கார்ந்துப் பேசலாம்” எனக் கதிர் சொல்ல, “என்னோட கவலை உனக்குக் கொண்டாட்டமா இருக்காடா.? பிளான் பண்ணுடா” என்றான்.
“பேசாமல் நீயும் கல்யாணம் பண்ணிட்டு அந்த கீர்த்திகா முன்னாடி சந்தோஷமா” என கதிர் முடிக்கும் முன்னால், நிறுத்து என தன் வலது கையைத் தூக்கிக் காட்டிய பாலசரவணன்,
“இப்போ தான் நம் தொழிலில் முன்னேறிட்டு இருக்கிறோம். நாம் இன்னும் பெரிய அளவில் சாதிக்கணும். அப்புறம் தான் கல்யாணம்” என்றான்.
“கல்யாணம் பண்ணினா சாதிக்க முடியாதா? உன்னைத் தவிர யாராலும் இப்படி ஒன்றைக் கண்டுபிடிச்சிருக்க முடியாது.. சரி. வேண்டாம். நேராக அப்பாகிட்டே அந்த வீட்டை வாங்கலாம் எனச் சொல்லலாமே” என கதிர் முடிக்கும் முன்னால்,
“அது எங்களுக்குத் தெரியாதா? இத்தனை நாளா வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்த மகன் ஏன் அந்தர் பல்டி அடிக்கிறான்னு யோசிக்க மாட்டாரா? அவருக்கு உடம்பெல்லாம் மூளை. மாட்டிக்குவேன்” என்றான் பாலசரவணன்.
“எப்படியும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு நிரூபிக்கணும். சரி வா. ஷாப்பிங் முடிச்சு அம்மாவை இறக்கிவிட்டுட்டு, பீச்ல போய் யோசிக்கலாம்” என நண்பனின் தோளில் கையைப் போட்டான் கதிர்.
Author: siteadmin
Article Title: அத்தியாய்ம் - 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாய்ம் - 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.