• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி -3



விக்ரமன், அந்த வகுப்பறையை விட்டு வெளியே வந்த போது மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருந்தான். இரண்டு மணி நேரம் வகுப்பு முடித்து, Any questions?" என்று அவன் நிறுத்திய போது, அங்கே இருந்த அனைவரின் முகத்திலும் தோன்றிய கலவையான உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கேள்வி கேட்கலாமா கூடாதா, என்பது போல விழித்தவர்களை ஊக்குவித்து, அவர்களைக் கேட்க வைத்து அதற்கு விளக்கம் அளித்து என முழுமையாகத் தனக்குத் திருப்தியான பின்பே நிறுத்தினான்.



அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் பெண்களின் உடல் நலன் மற்றும் மனநலனைப் பற்றிய அக்கறை வெளிப்பட்டது. அறையில் இருந்த பெண்கள் அனைவரும் அவனைப் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமோ என்று யோசிக்கத் தொடங்கி இருந்தனர். அவனைப் பற்றிய முந்தைய வரலாறு அப்படி.



தனது சீனியர் புரோஃபசர் புருஷோத்தமனைச் சந்தித்து வகுப்பு நடத்திய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பில் இருந்து நேராக அவரிடம் சென்றான் விக்ரமன். வேகமாகச் சென்றவன், அவரது அறையில் இருந்த இன்னொரு நபரைக் கண்டு தயங்கி வாசலிலேயே நின்றான்.



"ஹேய். யங் மேன். வா. வா. என்ன அங்கேயே நிக்கிற? உள்ளே வா."



"குட் மார்னிங் சார்!"



"குட்மார்னிங்! குட்மார்னிங்! அப்புறம் இன்னைக்கு க்ளாஸ் எப்படி? ஆர் யூ சேட்டிஸ்ஃபைட்?( உனக்குத் திருப்தியா?)"



"சார்! அது வந்து…"



"என்ன மேன், வந்து போய்னு இழுக்கிற? முதல்ல உட்காரு. உன் கிட்ட நிறைய பேசணும், இல்லை இல்லை விசாரிக்கணும். ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்ஸ் உன் மேல" என்றபடி அங்கே இருந்த அருந்ததியைப் பார்த்தார்.



சீனியருக்குத் தெரியாமல் தாயை முறைத்தான் விக்ரமன். அவரோ, உன் முறைப்பெல்லாம் என்னிடம் செல்லாது என்பது போல் அமர்ந்து இருந்தார்.



"சார்! இன்னைக்கு க்ளாஸ் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது. நீங்க அந்த ஸ்டூடன்டஸையும் ஃபீட்பேக் கேளுங்க. அதுக்கப்புறம் நான் கன்டிநியூ பண்ணலாம்னு நீங்க சொன்னா பண்றேன். எனக்கு வேறெந்த அசைன்மென்ட்டும் இப்போ இல்லை. நான் என்ன பண்ணட்டும்"



"கமான் விக்ரம். உன்னோட சப்ஜெக்ட் நாலட்ஜ் அண்ட் டெடிகேஷன் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இந்த பேப்பர் நீ தான் கம்ப்ளீட் பண்ற. இன் ஃபேக்ட் அந்தப் பசங்களும் அதைத் தான் சொல்லுவாங்க. இன்னைக்கு வேறெந்த வொர்க்கும் இல்லை. லேபர் ரூம்ல அசிஸ்டன்ஸ் தேவைப் படலாம். செக் பண்ணிக்கோ!"



"ஓகே சார்!" என்று எழுந்தவனைப் பார்வையால் நிறுத்தி வைத்தார் அவர்.



"விக்ரம்! கொஞ்சம் உட்காரு. நான் உன் கிட்ட பேசணும்னு சொன்னேன். இது ப்யூர்லி பர்சனல்."



"அங்கிள்…." தாயை முறைத்தபடி சிணுங்கினான்.



"இட்ஸ் ஓகே. நீ அப்புறம் உங்க அம்மாவை முறைக்கலாம். இப்போ விஷயத்துக்கு வருவோம். உன் ஹையர் ஸ்டடீஸ் பத்தி முடிவே பண்ணிட்டியா? பி.எச்டின்னா குறைஞ்சது நாலஞ்சு வருஷம் போயிடும். அருந்ததி சொல்ற மாதிரி இரண்டு வருஷம் வொர்க் பண்ணிட்டு, கல்யாணமும் பண்ணிட்டு போயேன். வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் வில் பி வெரி ஹெல்ப் ஃபுல் டு யூ. நம்ம ஃபீல்டுல எப்போ வேணும்னாலும் படிக்கலாம்.



ஆனால் கல்யாணம்…

அதுல இன்ட்ரெஸ்ட் இல்லேன்னா வேற விஷயம். இருக்கும் போது, பண்ண வேண்டிய வயசுல பண்ணனும். அவளும் டாக்டர் தானே, இரண்டு பேரும் சேர்ந்தே போகலாமே." அவரது பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன் கடைசி வார்த்தைகளில் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.



"வாட்! அங்கிள்! நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்கே புரியுதா?"





"ஏன் புரியாமல்? உனக்கும் எனக்கும் நல்லா தெரிஞ்ச பாஷைல தானே பேசறேன்."



"அங்க்கிள்….!" என்று பல்லைக் கடித்தவன், "அவளும் டாக்டர் தானேன்னா என்ன அர்த்தம்.. பொண்ணு பார்த்து வச்சது மாதிரியே பேசறீங்க?" வார்த்தைகளில் அனலடித்தது.



"ஹா… ஹா… ஹா… ஹப்பா.. என்ன கோபம் என்ன கோபம். விசுவாமித்திரன்னு உனக்குப் பேர் வச்சிருக்கிறதுல தப்பே இல்லை. பொண்ணு… நீ பார்த்தா என்ன நாங்க பார்த்தா என்ன… பார்த்தாச்சு அப்படிங்கிறது தானே விஷயம்."



"ஹூம்… நான் பார்த்தால் மட்டுமே போதாது அங்கிள். அந்தப் பொண்ணும் பார்க்கணும். பேரன்ட்ஸோட சம்மதமும் வேணும். அதையும் கன்ஃபர்ம் பண்ணிட்டு வரேன். அதுக்கு அப்புறம் பேசலாம்" என்றவன் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான். இந்த விஷயத்தில் அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.



விக்ரமனின் புரோஃபசர் புருஷோத்தமனும் அவனது தாயும் பள்ளிக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கல்லூரியில் தேவராஜனும் சேர்ந்து கொள்ள அவர்களின் நட்பு மாறாமல் வளர்ந்தது. அவர்களின் குடும்பங்களும் இன்று வரை நட்போடு தான் இருந்ததன.



தன்னால் பெற்றோரைச் சமாளிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அவரது நண்பரை அணுகுவது விக்ரமனின் பல வருட வாடிக்கை. மகளிர் மருத்துவத்தில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆர்வத்தைக் கண்டு பெற்றோர் தயங்கி நின்ற வேளையில் இவர் தான் அவனுடன் நின்றார். இப்போதும் பெற்றோர் தயங்கினால் இவரிடம் வரவேண்டும் என்று அவன் நினைத்திருக்க, அவர்கள் முந்திக் கொண்டார்கள். விக்ரமன் கிளம்பிய பிறகு நண்பர்கள் இருவரும் வேறு பேச்சுக்கு மாறினார்கள்.



"இப்படித்தான், இவன் என்ன நினைக்கிறான்னே தெரிய மாட்டேங்குது. இப்போ நீ கேட்டதுக்கும் சேர்த்து என்னைத் தான் முறைப்பான். ஏன் புருஷோத், அந்தப் பொண்ணு யாரா இருக்கும்னு உனக்கு ஏதாவது அசம்ப்ஷன்ஸ் இருக்கா?"



"ம்ச்.. நோ ஐடியா. அது தெரிஞ்சாலும் இந்த விஷயத்தில விக்ரம் பேசற வரைக்கும் வெயிட் பண்றது தான் நமக்கு நல்லது."



"அதுவும் சரிதான். ராஜ் இன்னைக்கு நைட் அவன் கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கார். பார்ப்போம். அப்புறம், நீ சொல்லு, மாதவனோட கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? கல்யாணத்துக்கு இன்னும் நாலே நாள் தானே இருக்கு."



"நமக்கென்ன வேலை, எல்லாத்தையும் ஒரு ஈவன்ட் மேனேஜர் கிட்ட கொடுத்தாச்சு. தேவையான எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. நாம டயத்துக்கு மண்டபத்தில போய் நின்னா போதும். சொல்லப் போனால், பொண்ணும் மாப்பிள்ளையும் ரிசப்ஷனுக்கு போடற டிரஸ் கூட அவங்க செலக்ஷன் தான். நிக்கறது, சிரிக்கிறதுன்னு அவங்களுக்கு ரிகர்சல் வேற."



"பின்னே, உன் காலம் மாதிரிப் பாட்டி சொன்னதைக் கேட்டு கல்யாணம் வரைக்கும் பொண்ணு கூடப் பேசமாட்டேன்னு அடம் பிடிப்பாங்களா? இந்தக் காலத்துப் பசங்க வெரி ஸ்மார்ட். பதட்டம் இல்லாமல் கல்யாணத்துக்கு ரெடி ஆகறாங்க. ஒவ்வொரு ஈவன்ட்லயும் பயமில்லாமல் ஒரு இன்வால்வ்மென்ட்டோட (ஈடுபாடு) செய்யறாங்க."



"ஹேய், அதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா? ஹேமா தான் அப்பப்போ போட்டு தாக்குவா, நீயுமா?"



"இதெல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம். கல்யாணத்துல கூட பாட்டி பார்வையில படும் போதெல்லாம் விரைப்பா நின்னியே.. மறக்க முடியுமா…போன வாரம் கூட ஹேமா கிட்ட இதைப் பத்தி பேசினேனே!"



'அடிப்பாவிகளா! எத்தனை வருஷம் ஆனாலும் விட மாட்டீங்களா? மீ ரொம்ப பாவம்' மனதுக்குள் தான் நினைக்க முடிந்தது அவரால்.



"உன் மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்குது. வால்யூமைக் குறை. நான் கிளம்பறேன். இன்னொரு தீசிஸ் செக் பண்ணனும். நாளைக்குப் பேசறேன்னு ஹேமா கிட்ட சொல்லு."



"ஷ்யூர்.. நானே சொல்லணும்னு இருந்தேன். கண்டிப்பா பேசு அருந்ததி. ஹேமா ஒரு வாரமா கொஞ்சம் அப்சட். என்னால எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியல. சொன்னப் போனால் எனக்கே யாராவது ஆறுதல் சொல்ற நிலைமைல இருக்கேன்."



நண்பனின் குரலில் இருந்த வருத்தம் அருந்ததியை மேலும் சில நிமிடங்கள் அங்கேயே தேங்க வைத்தது. "ஏன்? என்ன ஆச்சு? பையன் கல்யாணம்னு ரொம்ப ஆர்வமா இருந்தாளே? மருமகளுக்கு அதை வாங்கறேன் இதை வாங்கறேன்னு பெரிய லிஸ்ட்டா சொன்னா."



"அதிலெல்லாம் எந்தக் குறையும் இல்லை. எல்லாம் வரப்போற சம்பந்தியோட உபயம் தான். அது சரியில்லை, இது சரியில்லைன்னு ஒரே புலம்பல். பொண்ணுக்கு வாங்கற முகூர்த்தப் புடவையில இருந்து, எல்லாம் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு ஏகப்பட்ட அட்வைஸ். ஹேமா சாதாரணமாவே எல்லாத்துக்கும் மெனக்கெடுவா. என் பையன் கல்யாணம், என் மருமகளுக்கு செய்யறேன்னு இன்னும் ஜாஸ்தியா மெனக்கெடறா. ஆனால், அதுக்கெல்லாம் அந்த லேடி படுத்தற பாடு இருக்கே. இந்தக் காலத்துல பொண்ணு வீட்டுக்காரங்க போடற கண்டிஷன் எல்லாம் வேற லெவல். இன்னும் கல்யாணத்துல என்னவெல்லாம் நடக்கப் போகுதோ? நினைச்சாலே டென்ஷனா இருக்கு."



"எதுக்கு டென்ஷன்? அதெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடக்கும். மாதவனோட வுட் பி, அவ பேர் என்ன… ஹான்.. ஸ்வேதா. பழகறதுக்கு ரொம்ப நல்ல பொண்ணா இருந்தாளே. மாதவனோட கேரக்டருக்கும் உங்க வீட்டுக்கும் நல்லா ஒத்துப் போகும்னு நினைச்சேனே."



"அம்மா பண்றதுக்கு பொண்ணைக் குறை சொல்ல முடியுமா? ஒவ்வொரு தடவையும் ஸ்வேதா தான் அவ அம்மா பண்ற குளறுபடி எல்லாம் சமாளிக்கிறா. நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அவங்க எல்லாத்துலயும் தலையிட்டு பிரச்சினை பண்ணாமல் இருந்தால் சரி."



"முன்னாடி பையனைப் பெத்தவங்க செஞ்சதை எல்லாம் இப்போ பொண்ணு வீட்டில செய்யறாங்க. டிட் ஃபார் டாட்னு இவங்க பண்றதெல்லாம் பசங்க லைஃப பாதிக்காமல் இருந்தால் சரி. நாம நல்லதையே நினைப்போம். என்ன ஹெல்ப்பா இருந்தாலும் தயங்காமல் கேளு. நாளைக்கு நான் வீட்டுக்கு வந்து ஹேமா கிட்ட நேர்லயே பேசறேன். ரொம்ப டைம் ஆகுது, நான் வரேன் புருஷோத்."



"ம்ம். உன் கிட்ட பேசினதுல ஐ ஃபீல் பெட்டர் நவ். சீ யூ லேட்டர்."



******



புரோஃபசரின் அறையில் இருந்து நேராகக் காண்டீன் சென்ற விக்ரமன் தனிமையை நாடி ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தான். மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் படையெடுத்தன. எம்.எஸ். படிப்பின் இறுதி ஆண்டில் இருப்பவன், அவனது எதிர்காலம் பற்றி சில முடிவுகளை எடுத்து இருந்தான். மிகுந்த யோசனைகளுக்குப் பின்னர் எடுத்த முடிவுகள். பெற்றோரிடம் பேசி சம்மதம் பெற வேண்டும். மறுப்பேதும் இருக்காது என்றே இன்று காலை வரை, நம்பியிருந்தான். இப்போது அந்த நம்பிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.



புருஷோத்தமன் வரை விஷயம் சென்று விட்டது என்றால் பெற்றோர் அவர்களது எதிர்பார்ப்பில் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இருபத்தேழு வயது முடியும் தருவாயில் இருக்கும் மகனின் திருமணம் பற்றிய அவர்களின் ஆசையைத் தவறென்று சொல்லி விட முடியாது. ஆனாலும்....



அவனே இப்போது தான் ஒரு பெண்ணை ஏறிட்டுப் பார்த்திருக்கிறான். அவள், ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்க்கிறாள் தான். ஆனால் இவள் தான் என் வாழ்க்கை என்று முடிவு செய்ய அது மட்டுமே போதுமா?



'வேறென்ன வேணும். அதான் அவளைப் பிடிச்சிருக்கில்ல. அவளுக்கும் பிடிக்கிற மாதிரி தான் இருக்கு. நீ போய் பேச வேண்டியது தானே. நீ என்னைக்கு முடிவு செஞ்சு... உனக்கெல்லாம் டைரக்டா அறுபதாம் கல்யாணம் தான்' மனசாட்சி காரி துப்பியது.



அவள் தானென்று முடிவு செய்தாலும் இப்போது திருமணத்திற்குத் தயாராக இல்லை அவன். மேற்படிப்பு வெளிநாட்டில் தான் என்ற முடிவில் இருப்பவன், திருமணம் செய்து கொண்டு மனைவியைப் பிரிந்து செல்ல மனமில்லை அவனுக்கு. ஆனால், புருஷோத்தமன் சொல்வதைப் போல செய்தால் இருவரும் சேர்ந்தே செல்லலாமே. மனதுக்குள் ஒரு சிறிய ஆசை முளைவிட்டு, இது கூட நல்லா இருக்கே என்று நினைக்க வைத்தது.



இப்படித் தீவிரமாக, சுய அலசலில் இருந்தவனை அங்கே ஏற்பட்ட ஆரவாரம் கலைத்தது. அந்தக் கும்பலின் நடுவே வந்தவளைக் கண்டதும் முகம் தானாகவே புன்னகை பூசிக் கொண்டது. அவர்களின் பார்வை படாத இடத்தில் அமர்ந்து இருந்தவனுக்கு மிகவும் வசதியாகப் போனது.



"ஹேய் இங்கே உட்காருங்க டி. அந்த இரண்டு டேபிளையும் சேர்த்து போடுங்க. அப்படித்தான். இப்போ எல்லாருக்கும் சீட் ரெடி. யாருக்கு என்ன வேணும்னு ஆர்டர் பண்ணிட்டா, வட்டமேசை மாநாட்டை ஆரம்பிக்கலாம். ரெடி ஸ்டார்ட்!"



"என்ன டாபிக்னு சொல்லாமல் ரெடி மட்டும் சொன்னால் எப்படி டி?"



"ஓ மை கடவுளே! உன்னையெல்லாம் மேய்க்க வேண்டியது இருக்குன்னு நினைக்கும் போதே எனக்கு ரத்தக் கண்ணீர் வருது டி. நம்ம கூட நாலு வருஷமா இருந்தும் ஏன் டி இவ இப்படி தத்தியா இருக்கா?"



"ட்ரைனிங் பத்தல போல இருக்கு. பரவாயில்ல விடு. இவளை அப்புறம் கவனிக்கலாம். இப்போ மேட்டருக்கு வா."



"அதாகப்பட்டது மஹாஜனங்களே! இப்போ நாம அவசரமா கூடிப் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்ததுன்னா... ஏன் வந்ததுன்னா... ஏய் ஏன் டி வந்தது?"



ஆளாளுக்கு வளவளத்துக் கொண்டு இருக்க விக்ரமனுக்கு வேடிக்கையாக இருந்தது. பள்ளிக் காலம் தொட்டே பொறுப்பு பொன்னுசாமியாக இருந்தவன் அவன். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. 'இன்னும் கொஞ்ச நாளில் டாக்டராகப் போறோம்னு இல்லாமல் எப்படி எல்லாம் ஜாலியா கலாய்க்கறாங்க! நாம தான் ரொம்ப ஓவர் படிப்ஸா இருந்துட்டோமோ? இது மாதிரி காலம் இனிமேல் வருமா?' என்ன செய்ய, அவனுக்குக் காலம் கடந்த ஞானோதயம்.



"ஹூம்..." பெருமூச்சுடன் அவர்களின் பேச்சில் கவனத்தைத் திருப்பினான்.



"அப்பவும் இப்பவும் எப்பவும் காலேஜ்ல நமக்குப் பேசறதுக்கு ஒரே டாபிக் தான். அது ஒன் அண்ட் ஒன்லி விசுவாமித்திரன் தான்" என்று ஒருத்தி சொல்ல, "ஆமாம் ஆமாம்... எப்போதுமே ஹாட் டாபிக் நம்ம விசுவாமித்திரன் தான்" என்று வழிமொழிந்தாள்.



விக்ரமன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. விசுவாமித்திரன் என்று அவனைத் தான் சொல்கிறார்கள் என்று நன்றாகவே புரிந்தது. இந்தக் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் பெண்கள் மத்தியில் அந்தப் பெயரில் தான் அவன் அழைக்கப் படுகிறான் என்பதும் நன்றாகவே தெரியும்.



முன்பிருந்த விசுவாமித்திரனாக இருந்தால் நேராக அந்தப் பெண்களிடம் போய் கோபப்பட்டுக் கத்தி இருப்பான். இப்போது இருப்பவன், விக்ரமன். தன் மனதில் ஏற்பட்ட சலனத்திற்கு எதிரொலி தேடிக் காத்திருப்பவன். அதனால், அவனது கவனம் முழுவதும் நியதியிடம் மட்டுமே இருந்தது.



'ஓ மை பிள்ளையாரப்பா! இதென்ன பப்ளிக்ல இவ்வளவு சத்தமா இப்படி எல்லாம் பேசுறாங்க?' எழுந்து சென்று விடலாமா என்று ஒரேயொரு கணம் யோசித்தான் விக்ரமன். ஆனால் தன்னைப் பற்றி என்ன தான் பேசப் போகிறார்கள் என்ற ஆர்வம் அவனை அங்கேயே நிறுத்தி வைத்தது.



"சரி சரி.. எல்லாரும் நல்லா கவனிங்க. ஏன்னா நான் சொல்லப் போறது ரொம்ப முக்கியமான விஷயம். முதல்ல, இத்தனை நாளும் நாம தூரத்தில இருந்து கஷ்டப்பட்டு செஞ்ச வேலையை பக்கத்தில இருந்து ஈஸியா செய்ய சான்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ஒரு ஓ.. போடுங்க"



"ஓ..."



"அப்படி என்ன வேலை ஈஸியாகிடுச்சு?"



"சரியான டவுட்டுக்குப் பிறந்தவ டி இவ. நம்ம காலேஜோட மோஸ்ட் ஹேன்ட்ஸம் ஹீரோவ பக்கத்தில‌ இருந்து சைட் அடிக்க ஒரு அரிய வாய்ப்பு.. இது போலக் கிடைக்கும்னு நாம கனவுலயாவது நினைச்சிருப்போமா?"



"ஆமாமில்ல..."



"ஆமாம் மட்டும் தான்.. நெக்ஸ்ட், அவருக்கு பெயர் மாத்த வேண்டிய அவசியம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஸோ... ஒரு நல்ல பேரை சூஸ் பண்ணுங்க. இன்னைக்கே நாள் நல்லா இருக்கு, பேர் வச்சிடுவோம்."



"கரெக்டா சொன்ன டி. லேடீஸைப் பார்த்தாலே நெற்றிக் கண்ணைத் திறக்கிறவன்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். இன்னைக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில லேடீஸைப் பத்தி அவனோட கண்ணோட்டம் என்னன்னு தெளிவா புரிய வச்சிட்டான். ஆவ்சம் மேன்!"



அவர்கள் பேசப் பேச தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் விக்ரமன். நியதியின் வாய் மொழிக்காக அவன் காத்திருக்க, அவளும் வாய் திறந்தாள்.



"ஏய்.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா? கிளாஸ கவனிப்பீங்களா, கிளாஸ் எடுக்கிற ஸ்டாஃப சைட் அடிப்பீங்களா? அப்புறம் எப்படி சப்ஜெக்ட் மண்டைல ஏறும்?" நியதி படபடவென்று பொரிந்தாள்.



"இதப் பாருடா! பிள்ளைப் பூச்சி எல்லாம் சவுண்ட் விடுது."



"என்ன இருந்தாலும் அவளோடது சின்சியர் சைட்டு பா. நம்மள மாதிரி டெம்பரரி கிடையாது."



"அதுக்காக, எதுவும் டிக்ளேர் பண்ணாம ரைட்ஸ் கேட்கிறது எல்லாம் த்ரீ மச்.. இதெல்லாம் செல்லாது செல்லாது."



"ம்ச்.. நான் என்ன சொன்னேன், நீங்க என்ன பேசறீங்க? நீங்களா எதையாவது இமேஜின் பண்ணிப் பேசாதீங்க."



"ஹை.. ஹை.. இந்தக் கதையே வேணாம். எங்களுக்கு எல்லாம் சின்ன வயசுலயே காது குத்தியாச்சு. வேற வழியே இல்லை உனக்கு, நீ அவனைப் பார்க்கிறேன்னு ஒத்துக்க தான் வேணும்."



"....." சற்று நேரம் பலத்த அமைதி நிலவ, நியதியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்காக அவளது நண்பர்கள் காத்திருக்க, விக்ரமனும் தனது காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருந்தான்.



"நான் சொல்றதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாது. ஆனால், என் வரைக்கும் அது தான் நிஜம். யெஸ், நான் அவனைப் பார்க்கிறேன் தான்.."



"ஓஹோ...." என்று ஆர்ப்பரித்தது கூட்டம்.



'யெஸ்!' என்றது விக்ரமனின் இதயம். அவன் தேடிய எதிரொலி கிடைத்து விட்ட சந்தோஷத்தைக் கண் மூடி அனுபவித்தான்.



"நான் இன்னும் முடிக்கலை. கண்டிப்பா படிப்பு முடியற வரைக்கும் நான் அவன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்."



"ஏய்.. என்னடி இப்படி சொல்ற?"



"இந்த வருஷம் முடிஞ்சா, அப்புறம் அவனைப் பார்க்கவே சான்ஸ் இருக்குமான்னு தெரியாது. அப்புறம் ஏன் டி..."



"இதான் ஜாடிக்கேத்த மூடின்னு சொல்வாங்களோ. அவனும் உன்னை மட்டும் தான் பார்க்கிறான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். உனக்கும் பிடிச்சிருக்கு. ஆனால் இரண்டு பேரும் சொல்ல மாட்டீங்க. இதென்ன சொல்லாமலே காதலா... எந்த காலத்தில இருக்கீங்க டீ இரண்டு பேரும்... ஷப்பாஆஆஆ.. நல்ல வேளை டா சாமி, நமக்கு யாரும் சிக்கலை. நமக்கு இந்த மாதிரி தெய்வீகக் காதல் எல்லாம் செட் ஆகாது.."



தோழியர் ஆளாளுக்குத் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்ய, நியதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். விக்ரமனின் மனம் மீண்டும் குழம்பிப் போனது. ஆனால் அடுத்து நியதி பேசிய பேச்சு அவனைத் தெளிவாக முடிவெடுக்க வைத்தது.



"எந்த ஒரு முடிவையும் எடுக்கிறதுக்கு முன்னாடி அதோட பாஸிட்டிவ் நெகடிவ் எல்லாத்தையும் யோசிக்கணும். அஃப்கோர்ஸ் எனக்கு அவனைப் பார்க்கப் பிடிச்சிருக்கு, அவன் பார்வையும் அதைத் தான் சொல்லுது. கல்யாணத்துக்கு இது மட்டுமே போதுமான்னு எனக்குத் தெரியாது. ஏன்னா கல்யாணம்கிறது என்னைப் பொறுத்தவரை ரொம்ப சீரியஸ் விஷயம். லைஃப்ல ஒரு தடவை தான்னு தெளிவா இருக்கேன்.



நம்ம புரோஃபஷன்ல டூயட் பாடறதுக்கெல்லாம் டைம் கிடையாது. லெட் மீ வெயிட் ஃபார் சம் மோர் டைம். அவன் தான் வேணும்னு என் மனசு அடம் பிடிச்சா, அப்போ கல்யாணம் பண்றதைப் பத்தி யோசிக்கலாம். அது வரைக்கும் நான் இப்படித் தான் இருப்பேன். ஹோப் யூ ஆல் அன்டர்ஸ்டாண்ட்." பேசி முடித்தவள் அவளது சாப்பாடு வந்திருக்க, அதில் கவனமானாள்.



அவளது தோழியர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க, விக்ரமனுக்கோ மனதில் இருந்து ஏதோ பாரம் இறங்கியது போலிருந்தது. அவளது சிந்தனையும் அவனை ஒட்டியே இருந்ததில் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தான். அவள் பேசப் பேச, 'வாட் எ கோ இன்சிடன்ஸ்? ஷி இஸ் அமேசிங்!' என்று சிலாகித்துக் கொண்டான்.



"தேங்க்ஸ் ஸோ மச் நிதி!" என்று முணுமுணுத்துக் கொண்டான்.



பெண்கள் கூட்டம் அதன் பிறகு கைக்கும் வாய்க்குமான சண்டையைச் சத்தமில்லாமல் முடித்துக் கொண்டு கிளம்பியது. வரும் போது இருந்த கலகலப்பு இல்லாமல் விக்ரமனுக்கே கஷ்டமாக இருந்தது. அவனது டெலிபதி வேலை செய்ததில், நியதி வாய் திறந்தாள்.



"ஹேய் என்ன டி. எல்லாரும் இப்படி சோகமாகிட்டீங்க, சகிக்கலை. இப்போ என்ன ஆகிப் போச்சு. இன்னும் ஒரு வருஷத்துக்கு என் ஆளை எல்லாரும் தைரியமா சைட் அடிக்கலாம்னு பெர்மிஷன் கொடுத்திருக்கேன். அதுக்கே நீங்க எனக்கு ட்ரீட் தரணும். கமான் டெல் மீ... யாரோட ட்ரீட் முதல்ல? ஸ்டார் பக்ஸ் போகலாம்."



'அடிப் பாவி! இதுக்கு இவ வாயைத் திறக்காமலே இருந்திருக்கலாம்' என்றது விக்ரமனின் மைன்ட் வாய்ஸ்.



"ஹேய்... அப்படி எல்லாம் ஈஸியா விட்டுட முடியாது. நீ என்ன பெர்மிஷன் கொடுக்கிறது? நீ தான் அவன் கிட்ட டிக்ளேர் பண்ணப் போறதிலையே, ஸோ இன்னும் அவன் பப்ளிக் ப்ராபர்ட்டி தான். எங்களுக்கும் ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு. நாங்களும் சைட் அடிப்போம்." அவர்களிடம் பழைய கலகலப்பு திரும்பி இருந்தது.



பேசிக்கொண்டே அவர்கள் வெளியேற, புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அவனுக்கு. மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் பரவ முகத்தில் புன்னகை மலர்ந்தது. பெற்றோரிடம் பேசி வேண்டியதை மனதுக்குள் ஒத்திகை பார்த்தவன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.





*********





சென்னையின் ஐடி காரிடார் எனப்படும் ஓஎம்ஆர் சாலை. கடந்த பத்து ஆண்டுகளில், ஐடி அலுவலகங்கள் மட்டும் இன்றி, பிரம்மாண்டமான அடுக்கு மாடி குடியிருப்புகளும் வில்லா எனப்படும் தனி வீடுகளும் நிறைந்து சென்னையின் புதிய அடையாளமாக மாறிவிட்ட சாலை.



புகழ்பெற்ற கட்டுமானக் கம்பெனியின் லிஃப்ட் வசதியோடு கூடிய மிகப் பெரிய வில்லா அது. இரண்டு மாடிகளுடன் நான்கு படுக்கை அறைகள் மற்றும் பூஜைக்கென்று தனி அறையுடன் மிகவும் விஸ்தாரமான வீடு அது. மூன்றாவது மாடி முழுவதும் பரந்து விரிந்தமொட்டை மாடித் தோட்டம் அழகுக்கு அழகு சேர்த்தது. அத்தனையும் ஸ்வேதாவின் கை வண்ணம். அந்தி மயங்கும் வேளையில் பூஜை அறையில் விளக்கேற்றினாள் ஸ்வேதா. அவளது வாய் தானாகவே சில ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.



"ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே!!



விளக்கே திருவிளக்கே; வேந்தன் உடன்பிறப்பே!

சோதி மணிவிளக்கே; சீதேவி பொன்மணியே!

அந்தி விளக்கே; அலங்கார நாயகியே!... "



அடர் நீலத்தில் சில்க் காட்டன் புடவையை நேர்த்தியாக அணிந்து அதற்கேற்ற அணிகலன்களுடன் இருந்த செல்வி.ஸ்வேதா இன்னும் நான்கு நாட்களில் திருமதியாகப் போகிறாள். ஆங்கிலத்தில் எம்ஏ எம்.ஃபில் முடித்து விட்டு புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக இருக்கிறாள்.



அவளது வேலை நிமித்தம் பழகிய புடவை கட்டும் பழக்கம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போக பெரும்பாலும் அவளைப் புடவையில் தான் பார்க்கலாம். தேவைக்கேற்ப மற்ற உடைகளும் அணிபவள் தான் என்றாலும் புடவை தான் அவளது முதல் சாய்ஸ்.



பூஜையறையில் இருந்து வெளியே வந்த மகளிடம் தொடுத்துக் கொண்டிருந்த முல்லைப் பூவை எடுத்து நீட்டினார் தமயந்தி.



"மா! நீங்களே வச்சு விடுங்க"



"ம்ம்.. திரும்பு. ஹேர் பின்னை எடு. என் ராஜாத்தி! கல்யாணக் களை வந்தாச்சு என் பொண்ணுக்கு." பூவை வைத்து விட்டு பெண்ணுக்கு கைகளால் திருஷ்டி கழித்தார் தமயந்தி. மகளது திருமணம் பற்றிய சந்தோஷத்தோடு அவளை விட்டுப் பிரிய வேண்டும் என்ற நினைப்பும் கூடவே வந்து வருந்தியது.



"தமயந்தி! நான் காஃபி கேட்டு பத்து நிமிஷம் ஆச்சு. எந்த உலகத்தில இருக்க?" என்று கேட்டபடி வந்த தாமோதரன் மகளையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். ஸ்வேதா, காஃபிக்காக சமையலறை நோக்கிச் செல்ல தாமோதரன் மனைவியின் அருகே அமர்ந்தார்.



"தமயந்தி!" அருகில் வந்து



"என்ன விஷயம் மா? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?"



"பொண்ணு கல்யாணம் ஆகிப் போனால் ஒரு அம்மா ஃபீல் பண்ணக் கூடாதா? அதுக்குக் கூட உரிமை இல்லையா?"



"உனக்கு உன் செல்லப் பொண்ணு தானே உசத்தி. இத்தனை நாளும் இவளை ஏதாவது சொல்லிட்டே இருப்ப. இப்போ என்ன, வேலை செய்ய ஆள் குறையுதேன்னு ஃபீலிங்கா?"



"அதுக்காக இவ என் பொண்ணு இல்லேன்னு ஆகிடுமா? உங்களுக்கு என்னைக் குறை சொல்லலேன்னா தூக்கம் வராது."



"உண்மையைச் சொன்னால் கசக்கத் தான் செய்யும். அதை விடு, அரவிந்த் ஃபோன் பண்ணி இருந்தான். ட்ரான்ஸிட்ல இருக்கானாம். காலைல வந்திடுவான். யாரும் ஏர்போர்ட் வரவேண்டாம், நானே வந்துக்கிறேன்னு சொல்லிட்டான்."



"வரட்டும்.. வரட்டும்... அவன் வந்த பிறகு நிறைய வேலை இருக்கு. நல்ல வேளை கல்யாணத்தன்னைக்கு வராமல் முதல்லயே வரானே. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. நாளைக்கு சாயங்காலமே பொண்ணு வீட்டுல பேசி மத்த ஏற்பாடுகளையும் கவனிக்கணும்."



"அவசரப் படாமல் செய்யலாம் தமயந்தி. முதல்ல ஸ்வேதா கல்யாணம் முடியட்டும். அப்புறம் அரவிந்த் நிச்சயதார்த்த வேலைகளைப் பார்க்கலாம். இரண்டையும் ஒன்னா வச்சுக் குழப்பாத."



"நீங்க ஒரு ஆள் போதும்..." என்று தமயந்தி ஆரம்பிக்கும் போதே



ஸ்வேதா காஃபியுடன் வர, அவர் பேச்சை நிறுத்தி விட்டார். தாமோதரன் கையை நீட்டும் முன், இன்னொரு கை வேகமாக இடையே வந்து காஃபியை எடுத்துக் கொண்டது. அந்தக் கைக்குச் சொந்தக்காரி ஒவ்வொரு துளியாக காஃபியை ரசித்துக் குடித்து விட்டுப் பாராட்டவும் செய்தாள்.



"வாவ்! காஃபின்னா ஸ்வே காஃபி தான். பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு. தேங்க் யூ ஸோ மச் மை டியர் ஸிஸ்டர். உன்னை விட இந்த காஃபியைத் தான் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்." இது தமயந்தி தாமோதரன் தம்பதியின் கடைக்குட்டி ஸ்ரேயா.



லோ வெயிஸ்ட் ரிப்ட் ஜீன்ஸ் அண்ட் கோல்ட் ஷோல்டர் டாப்ஸில் அல்ட்ரா மாடர்னாக இருந்த ஸ்ரேயா ஒரு ஃபேஷன் டிசைனர். யாருக்காகவும் எதற்காகவும் தன்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளப் பிடிக்காதவள். உருவத்திலும் உள்ளத்திலும் செயல்களிலும் தாயின் மறுபிறப்பாகவே இருப்பவள்.



"ஸ்வேதா கிட்ட ஒரு க்ராஷ் கோர்ஸ் எடுத்துக்கோ ஸ்ரேயா. அடுத்த வாரத்தில இருந்து நீயே காஃபி போடலாம்."



"ஓ மை காட். நோ சான்ஸ் டாடி. என்னைப் போய் கிச்சன்ல நிக்கச் சொல்றீங்களா? எனக்கு கிச்சனுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது. இனிமேலும் தெரிய வேண்டாம். என்னை ஆளை விடுங்க.



மாம்! என்னோட ரிசப்ஷன் ட்ரெஸ் இன்னும் ரெடி ஆகலை. பொட்டீக்ல எனக்கு ஒரு டூ அவர்ஸ் வொர்க் இருக்கு. நான் வரேன். டின்னர் முடிச்சிட்டு தான் வருவேன். லேட் ஆச்சுன்னா புலம்பாதீங்க. பை பை கல்யாணப் பொண்ணு. எனக்காக வெயிட் பண்ணாம உன் ஆளோட சந்தோஷமா கடலை போடு. என் கிட்ட ஸ்பேர் கீ இருக்கு. பை மாம்! பை டாடி!" டொக் டொக் என்ற ஹீல்ஸ் ஒலியுடன் வெளியேறினாள் ஸ்ரேயா.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.