• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 9

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 9



"என்ன வைஜு! நான் கூப்பிட்ட உடனே என்ன ஏதுன்னு கேட்காமல் வந்துட்ட. அண்ணா மேல அவ்வளவு நம்பிக்கையாடா? எனக்கு அப்படியே புல்லரிக்குதுடா." காரை ஓட்டிக் கொண்டே அருகில் இருந்த வைஜயந்தியையும் ஓட்டிக் கொண்டிருந்தான் மாதவன்.



"ஏன் உனக்கு இப்படி ஒரு டவுட்டு அண்ணா? என்ன பெரிசா காரணம் இருக்கப் போகுது? அண்ணியைப் பார்க்கிறதுக்கு போகப் போற, ஏதாவது சாக்கு வேண்டாம்? வைஜு தான் பார்க்கணும்னு சொன்னான்னு சொல்லிக்கலாமே! கார் அந்த ரூட்ல தானே போயிட்டு இருக்கு."



"அச்சோ! என்ன அறிவு என்ன அறிவு? கண்ணு வேர்க்குது போ! அவ இப்போ என் பொண்டாட்டி டா, இப்படி நந்தி எல்லாம் தேவையே இல்லை யூ நோ. ஆல் டைரக்ட் டீலிங் தான்."



"மாதவாஆஆஆ! நான் நந்தியா உனக்கு?"



"சே.. சே.. நீ என் செல்லத் தங்கை டா. உன்னை யாரு நந்தின்னு சொன்னது.. அண்ணா கிட்ட சொல்லு.. அவங்களை ஒரு வழி ஆக்கிடறேன்"



வைஜயந்தி வாய் திறக்கும் முன் அவர்கள் சேர வேண்டிய இடம் வந்திருக்க காரைப் பார்க் செய்தபடி, "இன்னைக்கு நான் தான் அந்த வேலை பார்க்கப் போறேன்" என்று முணுமுணுத்தான் மாதவன்.



ஓஎம்ஆர் ஃபுட் ஸ்ட்ரீட்டில் அவன் காரை நிறுத்தி விட்டு இறங்க எதுவும் புரியாமலே தானும் இறங்கினாள் வைஜயந்தி.



Date Palm Beverly juice village, "நீ தான் இலை தழைக்கெல்லாம் பிராண்ட் அம்பாசிடர் ஆச்சே. அதான் எதுக்கு வம்புன்னு இங்கே வரச் சொல்லிட்டேன். நான் பாட்டுக்கு பிஸா, பர்கர்னு போய் உன் கிட்ட பாட்டு வாங்குறதுக்கு பதிலா இது சேஃப் பாரு. வரவேண்டிய ஆளு வந்தாச்சா தெரியலையே" அவளிடம் பேசிக் கொண்டே வேகமாக உள்ளே நுழைந்தான் மாதவன்.



"ஏய் அண்ணா! நில்லு நில்லு.. என்ன தான் நடக்குது இங்கே? யாரைப் பார்க்க வந்திருக்கோம்?" கேட்கும் போதே ரெஸ்டாரன்ட் ஓரத்தில் ஒரு மேசையில் இருந்த அரவிந்தனைப் பார்த்து விட அவன் இவர்களைப் பார்த்து கை ஆட்டினான்.‌ வைஜெயந்தியைப் பார்த்ததுமே அவன் முகத்தில் ஒரு சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.



"வைஜு! டக்குன்னு ரியாக்ட் பண்ணிடாதே. நான் ஏற்கனவே அரவிந்த் கிட்ட பேசிட்டேன். அவன் சொல்றது எல்லாம் சரியா தான் தெரியுது. நானே உன் கிட்ட பேசறேன்னு சொன்னேன். ஆனால் அவனுக்கு, அவன் வாயாலேயே உன் கிட்ட சொல்லணுமாம். உன் ரியாக்ஷன் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் எதையும் டிசைட் பண்ணனும்னு சொல்லிட்டான். அதான் இப்படி ஒரு மீட்டிங், நாம ஏற்கனவே டிசைட் பண்ணினது தானே. இப்போ நீ அவன் கூட பேசு, உனக்குப் பிடிச்சிருந்தாலும் உடனே சொலாலணும்னு அவசியம் இல்லை. நிதானமா யோசிச்சு முடிவு பண்ணலாம்." நீளமாகப் பேசி விட்டு மூச்சு வாங்கிய மாதவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள் வைஜயந்தி.



"நோ.. நோ.. டெர்ரர் லுக் மை டியர் தங்காச்சி.. மீ யுவர் புவர் ப்ரதர்.. நீ லுக்கு விட வேண்டிய ஆள் அங்கே வெயிட்டிங்.. வா.. இன்னும் இங்கேயே நின்னு பேசிட்டு இருந்தால் அவன் பயந்துக்கப் போறான். போகப் போக பழகிடுவான், இப்போ கொஞ்சம் புதுசு பாரு."



வைஜெயந்தியை அழைத்துச் சென்று அரவிந்தன் இருந்த டேபிளில் அமர்ந்தான் மாதவன். மறக்காமல் அவளைத் தனக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான், அதாவது அரவிந்தனுக்கு நேரெதிராக இருந்தது அந்த நாற்காலி. அடுத்த நொடியே எந்த வித முஸ்தீபும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.



"ஹாய் அரவிந்த்! இவ தான் எங்க வீட்டு அறுந்த வாலு வைஜயந்தி! அந்த வாலுத்தனம் தான் உனக்கும் பிடிச்சுப் போச்சுன்னு நினைக்கிறேன். இரண்டு பேரும் பேசி ஏதோ ஒரு முடிவுக்கு வந்து சேருங்க. ஒரு இரண்டு மணி நேரம் போதுமா, அதுக்குள்ள நான் என் பொண்டாட்டியை பார்த்துட்டு வரேன். அவகிட்ட எதையும் ஷேர் பண்ணிக்காமல் என்னால இருக்க முடியாது. இத்தனை நாள் இருந்ததே கஷ்டமா இருக்கு" என்று கிளம்பி விட்டான் மாதவன்.



சட்டென்று எழுந்து சென்று விட்ட மாதவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் வைஜயந்தி. "ஸார் யுவர் ஆர்டர் ப்ளீஸ்!" என்று வந்த பேரரின் குரலில் திரும்பினாலும் அவர் ஏதோ புரியாத பாஷையில் பேசுவது போல விழித்தாள்.



"ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஸார், கூப்பிடறோம்." அவரை அனுப்பி வைத்த அரவிந்தன் வைஜயந்தி யின் புறம் மெனு கார்டை திருப்பினான்.



"ஆர்டர் பண்ணிட்டா நாம ஃப்ரீயா பேசலாம், வைஜயந்தி. ப்ளீஸ்.." அவள் கண்களுக்குள் பார்த்தபடி சொன்னான்.



திடீரென்று வார்த்தைகள் எல்லாம் மறந்து போய் விட்டது போல உணர்ந்தாள் வைஜயந்தி. "இது வரை இல்லாத உணர்விது" என்று அவளது மனம் சத்தமில்லாமல் பாடத் தொடங்கி இருந்தது.



"வைஜயந்தி!" மீண்டும் அவன் அழைக்கத் தரை இறங்கியவள், பார்வையை மெனு கார்டில் பதித்தாள்.



பேரரை அழைத்து இருவருக்குமாக ஆர்டர் கொடுத்து விட்டு, தொண்டையைச் செருமி பேசுவதற்கு ஒத்திகை பார்த்தான் அரவிந்தன்.



"என் கிட்ட நீங்களே பேசணும்னு சொன்னீங்களாம். அண்ணா சொன்னான். எனக்கு உங்க பாஸ்ட் பத்தி அக்கறை இல்லை. பெரியவங்க பேசி பண்ற முடிவு எதுவானாலும் எனக்கு ஓகே தான். நீங்க பழைய விஷயம் சொல்லணும்னு நினைச்சதே உங்க பக்கம் நியாயம் இருக்குன்னு காட்டுது. சொல்லித் தான் ஆகணும்னு நினைச்சால், ஐ ஹேவ் நோ அப்ஜக்ஷன். ஒரு வேளை என் கிட்ட ஷேர் பண்ணினால் உங்களுக்கு கொஞ்சம் ரிலீஃப் கிடைக்குமானால் ஐயாம் ரெடி." அவனுக்குத் தனது நிலையை தெளிவாகவே சொல்லி விட்டாள்.



அவளது வார்த்தைகள் உணர்த்திய செய்தியை அனுபவிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. வேறு வழியின்றி தனது பழைய கதையைச் சொல்லத் தொடங்கினான்.



சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு.. அரவிந்தன் அப்போது இந்தோ- ஜப்பான் கொலாபரேஷனில் இருந்த ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். கம்பெனி அவனை டெபுடேஷனில் ஜப்பான் அனுப்பியது. கைகொள்ளாத சம்பளம், அதே சமயம் செலவுகளும் ஜாஸ்தி. ஆரம்பத்தில் இந்திய உணவைத் தேடியவன் செலவைப் பார்த்து மயங்கி விழாதது ஆச்சரியம் தான். அவனது திறமைக்குச் சவாலாக அமைந்த வேலையைப் பாதியில் விடவும் மனமில்லை.



ஆனால் உயிர் வாழ சாப்பாடு முக்கியம் ஆயிற்றே.. அனுபவம் தந்த பாடத்தில், ஜப்பானிய உணவுகளில் ஒரு மாபெரும் ஆராய்ச்சியே நடத்தியவன் தனக்கேற்ற உணவுகளைக் கண்டு கொண்டான். எதிர்காலம் பற்றிய பெரிய கனவுகள் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருந்தவனைப் புரட்டிப் போடுவதற்காகவே ஒருத்தி வந்தாள்.



அவனது தாய் தந்தை இருவருமே சேர்ந்து தேர்ந்தெடுத்த மணமகள் தான். அவர்களுமே மேலோட்டமான அலங்காரங்களில் ஏமாந்து தான் போய் விட்டனர்.



"அரவிந்தா! உன் வாட்ஸ்அப்ல பொண்ணோட டீடெயில்ஸ் அனுப்பி இருக்கேன் பாரு.. எங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு பா. உனக்கு ஓகேன்னா சொல்லு.. மேல ப்ரோசீட் பண்ணலாம்."



"நான் இன்னும் ஆஃபீஸ்ல தான் இருக்கேன் பா. இன்னைக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. வீட்டுக்கு போக லேட் ஆகும். காலைல பார்த்துட்டு கூப்பிடுறேன் பா."



நேரமில்லை என்று தந்தைக்கு பதில் சொல்லி வைத்திருந்தாலும் ஆர்வக் கோளாறில் அவனது கை தானாக வாட்ஸ்அப்பை ஓபன் செய்தது. நேஹா என்ற பெயரில் வந்திருந்த டீடெயில்ஸ் அவனதுக்குத் திருப்தியாகவே இருந்தது. ஏன் இத்தனை பணக்கார இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி தோன்றாமல் இல்லை. இது அவனது அம்மாவின் வேலையாகத் தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினான்.



வந்திருந்த ஃபோட்டோவில் பார்வையை நிலைக்க விட்டவன் அடுத்த இரண்டாவது நிமிடம் "எனக்கு ஓகே பா.. ப்ரோசீட் பண்ணுங்க" என்று பதில் அனுப்பி வைத்தான்.



அதன் பின்னர் வேலைகள் முடுக்கி விடப்பட்டு, இது நிச்சயதார்த்தமா கல்யாணமா என்னும் அளவுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பணக்கார சம்பந்தம் என்று மருமகளுக்கு வைர நெக்லஸ், வைர மோதிரம் என்று அமர்க்களப் படுத்தி இருந்தார் தமயந்தி. ஒரு வார விடுமுறையில் வந்திருந்த அரவிந்தன் உடனே ஊர் திரும்ப, அவனுக்கு முன்பே அங்கே காத்திருந்த நேஹா அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.



"வாவ் நேஹா! வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். நீ எப்படி இங்கே? அதுவும் கரெக்டா வீட்டுக்கு வந்திருக்க? அம்மா வேலையா இது? உன் கிட்ட சாவி எங்க இருக்கும்னு சொல்லி விட்டாங்களா? கூட யார் யார் வந்திருக்காங்க?"



ஒரு பக்கம் இந்த சர்ப்ரைஸ் அவனுக்குப் பிடித்திருந்தாலும் மறுபுறம் அவள் சொல்லாமலே அவன் வேலை பார்க்கும் வேறு நாட்டுக்கு வந்ததோடு இல்லாமல் வீட்டுக்கும் வந்தது அவனுக்குச் சரியாகப் படவில்லை. ஏதோ அவனை வேவு பார்க்க வந்தது போலிருந்தது.



அவனது அடுக்கடுக்கான கேள்விகளில் கிளுக்கிச் சிரித்தவள், "ஹேய் அரவிந்த்! எதுக்கு இவ்வளவு ஷாக்? நான் தனியா தான் வந்தேன். உங்க ப்ராஜெக்ட் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடும்னு ஆன்ட்டி சொன்னாங்க. எனக்கு ஜப்பான் சுத்திப் பார்க்கணும்னு ஆசை. அதான் டாடி கிட்ட சொன்னேன். உடனே விஸா, டிக்கெட் எல்லாம் ரெடி பண்ணி அனுப்பிட்டார்.



எதுக்கு வெளியே தங்கணும், அரவிந்தோட வீடே பெரிசா தான் இருக்குன்னு ஆன்ட்டி தான் சொன்னாங்க. அவங்களே இந்த வயசுல ஜப்பானைச் சுத்திப் பார்க்கணும்னு வந்தாங்களாமே. இன்டியன் ஃபுட் தான் கிடைக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க. தாட்ஸ் ஓகே… எனக்கு ஜாப்பனீஸ் ஃபுட் போதும்.



என்ன, இந்த வீடு பெரிசா இருந்தாலும் ஒரே ஒரு பெட்ரூம் தான் இருக்கு. எனக்கு சோஃபாவில படுத்து பழக்கம் இல்லை. உன் ஹைட்டுக்கு உன்னாலயும் முடியாது. ஸோ நாம இரண்டு பேருமே ரூம்லயே படுத்துக்கலாம். கட்டில் கொஞ்சம் சின்னது தான். பட் நோ ப்ராப்ளம், கபுள்ஸூக்கு வசதி தான். நமக்கு ஒரு ரிகர்சல் பார்த்த மாதிரி இருக்கும்."



அவள் சொன்ன செய்திகளை உள்வாங்கிக் கொள்ள சற்று நேரம் பிடித்தது அவனுக்கு. அவன் மாடர்ன் எண்ணங்கள் உள்ளவன் தான். ஆனால் ஊர் சுற்றிப் பார்க்க என்று திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு அந்த எண்ணங்கள் மாடர்னாக இல்லை. அதுவும் அவனது பெற்றோர் வந்ததை அவள் சொன்ன தொனி அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.



அவனது மாடர்ன் சிந்தனை எல்லாம் திருமணத்திற்கு முன் மொபைல் ஃபோனில் கடலை போடுவது, ஏதோ ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டு இருப்பது, தோளோடு உரசியபடி நடப்பது, சிலபல பரிசுகளைக் கொடுப்பது, சில நாட்களில் தனக்கு உரிமையாகப் போகிறாள் என்ற முறையில் பட்டும் படாமல் இதழ்கள் உரசிக் கொள்வது என்ற அளவில் நின்றது. ரிகர்சல் என்று அவள் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் விளங்கியவன் ஆடிப் போனான்.



ஆனால் அவளோ திருமணத்திற்கு முன்பே அனைத்திற்கும் தயாராக இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அரவிந்தன் திகைத்து நின்றது சில நொடிகள் தான், அதற்குள் சுதாரித்துக் கொண்டான்.



"என்ன அரவிந்த்! என்ன சொல்லி என்னைக் கழட்டி விடலாம்னு யோசிக்கிறீர்களா? சான்ஸே இல்லை. இன்னும் ஒரு மாசம் நானும் இங்கே தான் இருக்கப் போறேன். நீங்க எது சொல்றதா இருந்தாலும் இதை மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க."



"நான் எதுக்கு புதுசா யோசிக்கணும்? எல்லாம் பழைய யோசனை தான்.. இங்கே எனக்கு எப்போதுமே நைட் ஷிஃப்ட் தான். பகல்ல தூங்கவே நேரம் சரியா இருக்கும். சில நாள் ஆஃபீஸ்லயே தூங்கிடுவேன். இதுல நான் எங்கே உன் கூட ஊரைச் சுத்த?" கூடவே ஒரே ரூமில் படுக்க என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டான்.



"வாட்.. ஆன்ட்டி அப்படிச் சொல்லவே இல்லையே.."



"உன் கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை நேஹா. சந்தேகம் இருந்தால் நீயே உன் ஆன்ட்டிக்கு ஃபோன் பண்ணிக் கேளு. அவங்க கூட ஒரு மாசம் இருக்கேன்னு வந்துட்டு பத்து நாள்ல ரிட்டர்ன் ஆகிட்டாங்க. நான் சேர்த்து வச்ச லீவெல்லாம் எங்கேஜ்மென்டுக்கே செலவழிச்சாச்சு. லீவு எடுக்கிறது ரொம்பவே கஷ்டம். இங்க்லீஷ் தெரிஞ்ச டூர் ஆபரேட்டர் கிட்ட டூர் அரேஞ்ச் பண்ணித் தரேன். நல்லா சுத்திப் பாரு. வீக் எண்ட் எனக்கு ஒரு நாள் தான். அதுவும் வொர்க் எதுவும் இல்லேன்னா தான்.."



நீளமாகவே விளக்கம் கொடுத்தான் அரவிந்தன். ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாள், எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வாள் என்று தான் அவனும் நினைத்தான். ஆனால் அவளோ கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தாள்.



தமயந்தியிடம் பேசி விட்டு வந்தவள், "சரி.. எனக்கு டூர் அரேஞ்ச் பண்ணிக் கொடுங்க.. பார்க்கலாம்.." என்றாள்.



இரண்டாவது நாளே தனியாகச் செல்லப் பிடிக்கவில்லை என்று இவனை விடுமுறை எடுக்கச் சொல்லி வலியுறுத்தினாள். முடியாது என்ற பதிலில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



அன்று நைட் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பியவன் இவள் டூர் சென்றிருந்த வேளையில் நன்றாக உறங்கி விட, அருகில் யாரோ ஒருவர் இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான். இவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்தவள் நேஹாவே தான். முதல் இரண்டு நாட்களும் அலுவலகத்திலே உறங்கி விட்டவன் இன்று மிகவும் அலுப்பாக இருக்க, மெத்தையில் சுகமாகப் படுக்கலாம் என்று வந்திருந்தான். அவளிடம் எதுவும் பேசாமல் அலுவலகம் சென்று விட்டான். மறுநாள் வீடு திரும்பும் எண்ணம் இல்லாமல் இருந்தவனை ஒரு தொலைபேசி அழைப்பு வந்து தலையில் இடியை இறக்கியது.



"மருமகளை என்னடா பண்ணித் தொலைச்ச? ஒரு மாசம் அங்கே தங்கறேன்னு வந்தவ நாலே நாள்ல திரும்பி வந்திருக்கா. பிள்ளை முகம் பார்க்கவே நல்லா இல்ல. எவ்வளவு ஆசையா வந்தா தெரியுமா?"



தமயந்தி மகனைக் கேள்விகளால் துளைக்க அவருக்குப் பதில் சொல்ல இஷ்டம் இல்லாமல் அமைதியாக இருந்தான் அரவிந்தன். அவள் வருவதைத் தன்னிடம் சொல்லாமல் விடுத்த தாயின் மேல் அவனுக்குக் கோபம் இருந்தது.



"நான் இவ்வளவு பேசறேன்.. பதில் சொல்றானா பாருங்க. நீங்களே பேசுங்க உங்க அருமைப் பிள்ளை கிட்ட" தமயந்தி கணவரிடம் முறையிட கைபேசி இடம் மாறியது.



தந்தையிடம் அவனுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நேஹாவின் ஜப்பான் வருகையில் அவரது பங்களிப்பு எதுவும் இருந்திருக்காது என்று அவனுக்குத் தெரியும். அதனால் சொல்வதற்கு சங்கடமாக இருந்த போதும், நடந்த விஷயங்களை எல்லாம் தந்தையிடம் தெளிவாகவே சொல்லி விட்டான். இதற்கு மேல் எது நடந்தாலும் அது தன்னைப் பாதிக்காது என்பதையும் சேர்த்தே சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.



அதற்காகவே காத்திருந்த தமயந்தி தனது புலம்பலைத் தொடர தாமோதரன் நெற்றிக் கண்ணைத் திறக்காத குறையாக மனைவியை வாங்கி விட்டார். நேஹாவின் பணத்தைப் பார்த்து மயங்கிக் கிடந்த தமயந்திக்கும் அவள் இந்த அளவுக்குப் போவாள் என்பதே அதிர்ச்சியாக இருந்தது. அவரது எண்ணம் எல்லாம் மகன் நைட் ஷிஃப்ட் பார்க்கும் போது இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு நேரங்களில் தூங்கினால் என்ன, என்பது தான்.



என்ன செய்வது என்று பிள்ளையைப் பெற்ற மனிதர்கள் யோசித்துக் கொண்டு இருக்க, பெண்ணைப் பெற்றவர்கள் யோசிக்கவே இல்லை. நேரடியாக வந்து அவர்கள் பெற்ற அரவிந்தன் நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாதவன். இப்படி ஒருவனைத் திருமணம் செய்து எங்கள் பெண் மேல்தட்டு சொசைட்டியில் கஷ்டப்படுவதை விட இப்போதே நிறுத்தி விடலாம் என்று நிச்சயத்தை முறித்துக் கொண்டனர். தாமோதரன் செய்த செலவுகள் அனைத்திற்கும் நஷ்ட ஈடாக பெரும் தொகைக்கான செக்காக எழுதி நீட்டினார் அந்தப் பெரிய மனிதர்.



"பரவாயில்லைங்க.. எங்களுக்கு இப்படி எல்லாம் மனுஷங்க இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு பாடமா அமைஞ்சதே.. அதுக்கான செலவா நினைச்சிக்கறோம்.. நீங்க கிளம்புங்க" என்று தாமோதரன் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டார். பணக்காரப் பெண் என்று ஏகப்பட்ட செலவு செய்து நிச்சயதார்த்த சீர் வரிசைத் தட்டுகளை அடுக்கி இருந்தவருக்கு பணக்கார சம்பந்தம் கைவிட்டுப் போனது ஒரு குறையென்றால் தாமோதரன் அந்தப் பணத்தை வாங்காதது இன்னும் ஒரு பெரிய குறையாக இருந்தது. தாமோதரனுக்கோ நல்ல வேளை மகன் தப்பித்தான் என்றிருந்தது.



அரவிந்தன் தெளிவாக இருந்தான். "அம்மா! உடனே வேற பொண்ணு பார்க்கிறேன்னு ஆரம்பிக்காதீங்க. எனக்கு ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ஒத்து வராது. நீங்க ஸ்வேதாவுக்கு வரன் பார்க்க ஆரம்பிங்க. அப்புறம் என்னைப் பத்தி யோசிக்கலாம். ஒரு வேளை எனக்கே யாரையாவது பிடிச்சிருந்தா சொல்றேன்.. அப்போ பேசிக்கலாம்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.



பழங்கதை பேசி முடித்து என்ன முடிவு செய்வாள் என்று வைஜயந்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அரவிந்தன்.



"இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே.. மேடி வரதுக்கு.. அதுக்குள்ள இன்னொரு ஜூஸ் இல்லை ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணலாமா. இப்போ என்னோட நோ.. நோ.. நம்மளோட ட்ரீட். உங்க ஃபேவரைட் ஃப்ளேவர் என்ன?"

சுற்றி வளைத்து புரியாத பாஷையில் அவள் சொன்ன சம்மதம் அரவிந்தனுக்குப் புரிந்த வேளையில் அவனது நாற்காலி வைஜெயந்தியின் அருகே இடம் பெயர்ந்தது.



******



"ஹாய் ஸ்வீட்டி!" கதவைத் திறந்த மனைவியின் கண்களில் இருந்த கேள்வியைக் கவனிக்காதவன் போல உள்ளே நுழைந்தான் மாதவன். அவனது மாமியார் தூங்கும் நேரம் இது என்பதை அவன் நன்றாக அறிவான். அதனாலேயே அழைப்பு மணியை அழுத்தாமல் மனைவிக்கு அழைப்பு விடுத்துக் கதவைத் திறக்கச் சொன்னான்.



"கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் டா. ரூமுக்கு போயிடலாம்" என்று அறைக்குள் அழைத்துச் சென்றவன் அப்போது தான் மனைவியிடம் தெரிந்த பதற்றத்தைக் கவனித்தான்.



"என்னம்மா.. என்ன ஆச்சு..‌டென்ஷனா இருக்க? பிபி ஷூட் அப் ஆகிடப் போகுது.."



"...."



"ஸ்வீட்டி!! என் கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு என்ன விஷயம் உன்னை டென்ஷன் ஆக்குது?"



"அது… வந்து… மாது…"



"நீயும் நானும் வந்தாச்சு.. இப்போ என்ன விஷயம்னு சொல்லு"



"ஸ்ரேயாவும் அம்மாவும் காலைல பேசிட்டு இருந்தாங்க. விக்ரம் பத்தி பேசின மாதிரி இருந்தது. விக்ரம் தனக்கேத்த மாதிரி இல்லை, எதுக்கும் பிடி கொடுக்காமல் நழுவறான், அவனை எல்லாம் வளைக்கணுன்னு எனக்கு அவசியம் இல்லைன்னு ஸ்ரேயா சொன்னா, அதுக்கு அப்புறம் அம்மா பேசினது தான்.. எனக்கு பிபியை ஏற வச்சிடுச்சு."



"அவங்களுக்கு விக்ரம் மாப்பிள்ளையா வந்தால் நல்லா இருக்கும்னு தோணி இருக்கலாம். அதுக்காக ஃபீல் பண்ணி இருப்பாங்க.‌ நீ எதுக்கு இதையெல்லாம் நினைச்சு டென்ஷனாகிற?"



"இல்ல மாது.. அம்மா பேசினது வருத்தம் இல்லை. அவங்களுக்கு அண்ணாக்கு வைஜயந்தியைப் பிடிக்கும்னு தெரிஞ்சிருக்கு. எப்படியும் அந்த விஷயத்தை பேசும் போது தன்னோட கண்டிஷனைப் போடுவேன்னு சொல்றாங்க."



"புரியலை.. என்ன கண்டிஷன்?"



"அதாவது.. பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கிற மாதிரி.. அதுக்கு சம்மதிச்சால் தான் சம்பந்தம் பேசலாம்னு.. எனக்குப் பயம்மா இருக்கு மாது.. அண்ணா ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கான். அந்த நேஹா பண்ண அதே விஷயத்தை இப்போ அம்மா வேற மாதிரி ஸ்ரேயாவை விட்டு விக்ரமுக்கு பண்ண நினைக்கிறாங்க.. இது எங்க கொண்டு போய் முடியும்னு தெரியலையே.."



அவள் பேசப் பேச தான் பேச வந்த காரியத்தை மறந்து மனைவியைச் சமாதானப் படுத்தத் தொடங்கி இருந்தான் மாதவன்.



"ஷ்ஷ்.. ஸ்வேதா.. இங்கே பாரு.. இதை எல்லாம் உன் குட்டி மூளைக்குள்ள போட்டு டார்ச்சர் பண்ணாத.. அப்புறம் என் பொண்ணு பாவம்.. அம்மா ஏன் இப்படி ஆகிட்டான்னு அவளும் தலையைப் பிச்சுக்கப் போறா!"



"அது சரி.. உங்களுக்கு உங்க பொண்ணு தலையைப் பிச்சுக்கக் கூடாது.. அது தான் முக்கியம்.. "



"என்னடா இப்படி சொல்லிட்ட? உன் மேல அக்கறை இல்லாமலா பேசறேன்."



"நம்பிட்டேன்.. நீங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வந்தீங்க. அதைச் சொல்லுங்க முதல்ல."



"நம்ம அரவிந்தன்.." வேகமாக ஆரம்பித்தவனுக்கு அப்போது தான் ஸ்வேதா சொல்லிக் கொண்டு இருந்த விஷயங்கள் மண்டையில் உரைத்தது.

இதையும் சொன்னால் கண்டிப்பாக டென்ஷன் ஆவாள் என்று தவிர்க்கப் பார்த்தான்.



"அது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்லடா. நீ வீட்டுல எது நடந்தாலும் டென்ஷன் ஆகாமல் இரு. ஆன்ட்டி, உனக்கு ஏற்கனவே பிபி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லி இருக்காங்க தானே. இன்னும் டென்ஷன் ஆனால் பிபி ஜாஸ்தி ஆகிடும்."



அவன் சொல்ல வேண்டாம் என்று நினைத்த விஷயத்தை அவனது மொபைல் சொல்லி விட்டது. கட்டில் மேல் வைத்திருந்த மொபைல் விடாமல் அழைக்க, எதிரே நின்று கொண்டிருந்த மாதவன் எடுப்பதற்கு முன் அருகில் அமர்ந்திருந்த ஸ்வேதா, அது அரவிந்தனின் அழைப்பு என்றறிந்து ஸ்பீக்கரில் போட்டாள்.



"மாதவா! நாங்க பேசி முடிச்சாச்சு. நீ வந்து வைஜுவ கூட்டிட்டு போறியா? இல்லை நானே கொண்டு போய் ட்ராப் பண்ணட்டுமா?" எதிர் முனையில் இருப்பது யார் என்று தெரியாமல் அவன் பேசிக்கொண்டே போக, சட்டென்று மொபைலை எடுத்து ஸ்பீக்கரை ஆஃப் செய்து காதில் வைத்தான் மாதவன்.



அவனது வைஜு என்ற அழைப்பிலேயே பேச்சு வார்த்தையின் முடிவை அறிந்து கொண்டான். ஆனால் இங்கே உருவாகி இருக்கும் சிக்கல்கள், மனைவியின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அக்கறையும் இருந்தது. என்ன செய்வது என்று அரவிந்தனையே கேட்டான். அவனது குழப்பம் இப்போது அரவிந்தனுக்கு மாறியது. அதற்குள் விஷயம் என்னவென்று கேட்ட வைஜயந்தி அரவிந்தனின் மொபைலை வாங்கினாள். அவள் யாருக்கும் பாதிப்பின்றி ஒரு முடிவை எடுத்தாள்.



"அண்ணா! டோன்ட் வொர்ரி. நான் ஓலா புக் பண்ணி வீட்டுக்கு போய்க்கிறேன். ரீச் ஆன உடனே ஃபோன் பண்றேன். அரவிந்த் வர்ற வரைக்கும் நீங்க அண்ணி கூடவே இருங்க. அவங்க டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கோங்க." இது தான் முடிவு என்று மாதவனின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து ஓலா ஆப்பை ஆராய்ந்தாள்.



அவளை ஆயிரம் பத்திரங்கள் சொல்லிக் காரில் ஏற்றி அனுப்பிய அரவிந்தன் தானும் வீட்டுக்கு விரைந்தான். அதற்குள் ஒரு வழியாக மாதவன் ஆதியோடு அந்தமாக அரவிந்தன் வைஜயந்தி விஷயத்தைச் சொல்லி முடித்திருந்தான்.



"இந்த விஷயம் அப்பாவுக்கு எப்படித் தெரியும் மாது? நம்ம கல்யாணத்துல நான் ஸ்ரேயாவத் தான் பார்த்தேன். அண்ணா எவ்வளவு சாமர்த்தியமா மூவ் பண்ணி இருக்கான். நிச்சயமா வைஜயந்தி அவனுக்கு நல்ல பேர் (pair) தான். ஆனால் இப்போ அம்மா நினைக்கிற விஷயம்.. எப்படி நடக்கும் மாது.. எனக்கென்னவோ பயம்மா இருக்கு"



"விஷயத்தை ஆறப் போடுவோம். அரவிந்தன் ஒன்னும் நாளைக்கே கல்யாணம் பண்ணி வைன்னு கேட்கலை. என்னைப் பொறுத்தவரை ஸ்ரேயாவுக்கு விக்ரமைப் பிடிக்காமல் போயிருக்கலாம், இல்லை வேற யாரையாவது அவளுக்கு பிடிச்சிருக்கலாம். இரண்டாவது விஷயத்துக்கு சான்ஸ் அதிகம். அதனால தான் அவளே இந்தப் பேச்சை எடுத்திருக்கான்னு தோணுது."



"என்ன விஷயம் மாதவன் சார்? மச்சினி மனசுக்குள்ள நினைக்கறதை எல்லாம் சொல்றீங்க?"



"அச்சோ.. என் பேர் தான் மாதவன்.. மத்தபடி நான் அந்த ஸ்ரீராமச்சந்திரனோட நேரடி வாரிசு யூ நோ.. என்னைப் போய் சந்தேகப் படறியேம்மா‌. சந்தேகப் படறியே" நடிகர் திலகமாக மாறி அவன் மனைவியின் டென்ஷனைக் குறைத்த வேளையில் உள்ளே நுழைந்தான் அரவிந்தன். அவன் பின்னோடு தாமோதரனும் வந்து சேர்ந்தார். அவரது முகமே அவர் எல்லா விஷயத்தையும் அறிவார் என்றது.



"வாங்க மாப்பிள்ளை! எப்போ வந்தீங்க? ஏதாவது சாப்பிட்டீங்களா?"



"நான் சும்மா ஸ்வேதாவைப் பார்க்கத் தான் வந்தேன் மாமா. லஞ்ச் எல்லாம் முடிச்சிட்டு தான் வந்தேன். இதோ கிளம்பிட்டேன்."



அதற்குள் தமயந்தி தூக்கம் கலைந்து எழுந்து வந்திருக்க, மாதவனையும் நேரங்கெட்ட நேரத்தில் வந்திருக்கும் கணவனையும் கண்டு புருவம் உயர்த்தினார்.



"ஒரு நிமிஷம் மாப்பிள்ளை. இதோ காபியோட வரேன்" என்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தபடி உள்ளே சென்றார்.



"நான் கிளம்பறேன் மாமா. எதுனாலும் நீங்க நிதானமா யோசிச்சுப் பேசி முடிவெடுங்க. நான் இருந்தால் நல்லா இருக்காது."



"என்ன மாப்பிள்ளை, நீங்க இந்த வீட்டைச் சேர்ந்தவர் இல்லையா? ஏன் இப்படிச் சொல்றீங்க?"



"இல்லேன்னு நானும் சொல்லலை மாமா. ஆனால் இதுல வைஜயந்தி சம்பந்தப்பட்டு இருக்கறதால தான் வேண்டாம்னு சொல்றேன்."



"அது எனக்கும் புரியுது மாப்பிள்ளை. ஆனால் இப்போ நீங்க கிளம்பினால் அதுவும் பிரச்சினை ஆகிடும். அதனால ப்ளீஸ்.. " அவர் சொன்ன கடைசி விஷயம் நியாயமாக இருக்க அமைதியாக அமர்ந்தான் மாதவன். மனைவியைத் தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டான்.



காஃபி டைம் முடிந்த உடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. தாமோதரன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.



"தமயந்தி! நம்ம சம்பந்தியோட ஃப்ரண்ட் தேவராஜனோட பொண்ணு வைஜயந்திய அரவிந்தனுக்குக் கேட்கலாம்னு நினைக்கிறேன். நல்ல குடும்பம், தங்கமான பொண்ணு."



"இப்போ அரவிந்தன் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?" ஸ்வேதா டெலிவரி இருக்கே?"



"கல்யாணம் இப்பவே பண்ணப் போறதா நான் சொல்லவே இல்லை. இந்தப் பொண்ணு அவனுக்கு மேட்ச் ஆகும்னு தான் சொல்லிட்டு இருக்கேன். அவளுக்கு படிப்பு முடிய ஆறேழு மாசம் ஆகிடும். அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ண முடியும்." மனைவி கோலத்தில் புகுந்தால் இவர் தடுக்கில் புகுந்தார்.



"அதெல்லாம் நல்லா தெரியுது. ஆனால் பையனுக்கு பொண்ணு பார்க்கிற நீங்க இன்னொரு பொண்ணும் நமக்கு இருக்குன்னு யோசிச்ச மாதிரி தெரியலையே"



"சுத்தி வளைச்சுப் பேசாமல் நேரடியா சொல்றியா?"



"நம்ம ஸ்ரேயாவுக்கு அந்த விக்ரம் தான் வேணுமாம். இரண்டு கல்யாணத்தையும் பேசி முடிங்க. இல்லேன்னா இரண்டுமே வேண்டாம்."



"அம்மா! விக்ரம் என்ன கடைல விக்கிற பொருளா? அவ விக்ரம் வேணும்ன உடனே வாங்கிக் கொடுக்க.. என்ன பேசறீங்க?"



"ஆமான்டா, உனக்குப் பிடிச்ச பொண்ணை வாங்கித் தர உங்கப்பா முயற்சி பண்றாரில்ல. அதனால நீ இப்படித் தான் பேசுவ. எவ்வளவு பணக்கார பொண்ணு அந்த நேஹா, அவளை அனுசரிச்சுப் போகாமல் எனக்குப் புத்தி சொல்ல வந்துட்டான்."



"அம்மா ஆஆஆ" அரவிந்தன் கத்திய கத்தலில் தமயந்தி பயந்து போய்த் தள்ளிப் போய் நின்றார்.



"என்ன நடந்ததுன்னு தெரிஞ்சும் இப்படிப் பேசறீங்கன்னா… நீங்களும் அந்தப் பொண்ணு பண்ணதுக்கு உடந்தையா.. அதைத் தான் உங்க அருமை மகளுக்கும் சொல்லி வளர்க்கறீங்களா? ரொம்பவே நல்லா இருக்கு.. ஆனால் நான் ஒரு தடவை பட்டதே போதும். என் கல்யாணப் பேச்சை இனி ஒரு தடவை நீங்க பேசாதீங்க.. அப்புறம் நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியது வரும்."



தாயும் மகனும் சுற்றுப்புறம் பறந்து அவரவர் கருத்தை ஆழமாக வலியுறுத்திக் கொண்டிருக்க சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கத் தான் முடிந்தது. திடீரென்று தனது தோளில் ஏறிய பாரத்தை உணர்ந்து திரும்பிய மாதவன், மனைவி சுயநினைவு இல்லாமல் மயங்கியது கண்டு திடுக்கிட்டுப் போனான்.



சட்டென்று வானிலை மாறியது அங்கே.. ஆம்புலன்ஸை வரவழைத்துத் தானும் ஏறிக்கொண்ட மாதவன் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கிளம்பி விட்டான். அவனது கார் சாவியை வாங்கிய அரவிந்தன் தானும் பின்னோடு கிளம்பி விட்டான். தாமோதரனும் அவனுடன் சேர்ந்து கொள்ள தனித்து விடப்பட்ட தமயந்தி டாக்ஸி பிடித்து வந்து சேர்ந்தார்.



தலையில் கை வைத்து மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் முன்பு அமர்ந்திருந்த அரவிந்தனின் நினைவுகள் கடந்த ஐந்தாறு மணி நேரத்தில் நடந்தவைகளையே வேதனையுடன் சுற்றி வந்தன. அவனது வேதனையை மேலும் ஏற்றவென்றே ஒரு செய்தி மருத்துவரிடம் இருந்து வந்தது.



எவ்வளவோ முயன்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை, ஸ்வேதாவும் சீரியஸாக இருக்கிறாள் என்ற செய்தி அவனை உயிரோடு கொன்று போட்டது.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.