• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

உருகியோடும் 6

Sungudi

Moderator
Apr 6, 2025
20
25
3
6. சித்திரப் பூவிழி வாசலிலே

மறுநாள் காலை சித்ரா எழுந்த போது வீட்டில் சத்தியபாமா இல்லை. வாசலில் நிற்கிறாரோ என்று கதவைத் திறக்கப் பார்க்க, அது வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. மெலிதான பயம் ஓடி மறைந்தது அவளுக்குள். திருமணம் தான் அவசரமாக முடிந்தது, வரவேற்பு முடிந்த மறுநாள் காலை இப்படியா விடிய வேண்டும்?

இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த படியால் வீடு கொஞ்சம் பழகியிருந்தது. பின் வாசலுக்குச் சென்றாள். பக்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருந்த பாட்டி ஒருவர், “வாம்மா புதுப்பொண்ணு! உங்க மாமியா விடிய வெள்ளன வாசல் தொளிச்சிருவாளே.. இன்னிக்கு என்ன துடிக்கலையா தூங்கிட்டிங்களா?” என்று பதிலை எதிர்பாராமல் கேட்டு விட்டுச் சென்றார்.

காலைக் கடன்களை முடித்து கொஞ்ச நேரம் சென்று குளிக்கலாம் என்று நினைத்தவள், உள்ளே போய் தனியே என்ன செய்வது என்று குளியல் வேலையையும் முடித்தாள். முதன்முறையாக வாழ்வு குறித்த பயம் அவளுக்குள் தோன்றியது. நல்ல வேளையாக அவள் குளித்து முடித்து வெளியே வருகையில் சத்தியபாமாவும் முகுந்தனும் வந்து விட்டார்கள். முகுந்தன் அறைக்குள் இருக்கும் அரவம் கேட்டது. வேகமாகச் சென்று சித்ரா எட்டிப் பார்க்க, அதற்குள் படுத்து கண் மூடியிருந்தான் முகுந்தன். தூங்குவது போல் பாவனை செய்கிறானோ என்று ஒரு கணம் தோன்றியது.

முக்கியமான நிகழ்வு முடிந்து காணாமலே போய்விட்டு, இப்போது திரும்பியும் வருகிறான் என்றால் காரணம் தெரிந்து கொள்ளக் கூடவா தனக்கு உரிமை இல்லை என்று சிந்தித்திருக்க வேண்டும். பிறந்த நாள் முதலே தந்தையைப் பார்த்த நினைவில்லை சித்ராவுக்கு. ஒரு குடும்பம் என்றால் எப்படி இருக்கும், ஒரு ஆணுக்கு எவ்வளவு பொறுப்புணர்வு இருக்க வேண்டும் எவ்வளவு என்பதெல்லாம் தெரியாது. யாரையும் குற்றம் கண்டுபிடித்துப் பழக்கம் இல்லாதவள். தம்பி தங்கைக்குத் தெரிந்த அளவு கூட உலக விபரம் அவளுக்கு இல்லை.

‘பாவம் ஏன் மனுஷங்களோட அழுக்குகளைத் தெரிஞ்சு நிம்மதி இல்லாம தவிக்கணும்? அவ பாட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கட்டும்’ என்று நினைப்பார் சுப்பம்மாள். வேலைக்கு போகும் இடத்தில் இவளின் குழந்தைத்தனத்தை யாரும் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்ற பதட்டமும் இருக்கும். இருந்தாலும், ‘பார்த்து நடந்துக்கணும் கண்ணு.. மனுஷங்க நாலு விதமாத் தான் இருப்பாங்க’ என்று சொல்வார். புரியாமலேயே தலையாட்டிக்கொள்வாள் சித்ரா.

நல்ல வேளையாக அவள் வேலை பார்க்கும் நிறுவனம் நியாயமானது. பெண்பிள்ளையை பயப்படாம தாராளமாக அனுப்பலாம், வேலைச் சுரண்டல் நடக்குமோ என்றும் கவலைப்பட தேவையில்லை. ‘இத்தனை வருஷம் உழைச்சு சம்பாதித்த பொண்ணு இப்படி வெள்ளந்தியா இருக்கும்னு சொன்னா யாரும் நம்புவாங்களா?’ என்பது சுப்பம்மாளின் அங்கலாய்ப்புகளில் ஒன்று. இப்படியான குணநலன்களைக் கொண்டிருந்தாலும், கணவன் ஏன் இரவு வரமாட்டேன் என்பதைச் சொல்லவில்லை என்று மட்டும் நினைத்தாள். முகுந்தனை எழுப்பிக் காரணம் கேட்பதற்கு வாய் வரவில்லை.

“எங்க அத்தை வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டீங்க?” சத்தியபாமாவிடம் போய் நின்றாள்.

“வா சித்ரா! அதிகாலைல தான் போனேன். நீ அசந்து தூங்கிக்கிட்டு இருந்த.. சொந்தக்காரப் பாட்டி ஒண்ணு இழுத்துக்கிட்டு கிடக்குது. அது போய் சேர்ந்துடுச்சுன்னு வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க.. போய் எட்டிப் பார்த்துட்டு வந்தேன்.. ஜீவன் இன்னும் இருக்குது. நீ பயந்துட்டியா கண்ணு? மன்னிச்சுக்கோ” என்றார்.

“பரவாயில்லை அத்தை!”

அடுத்த ஒரு வாரமும் அதே போல் தான் நிலவரம். முகுந்தனும் சத்தியபாமாவும் ஏதோ கூடிக் கூடி பேசுவதும், இவளைப் பார்த்தவுடன் பேச்சை நிறுத்திக் கொள்வதுமாக இருந்தனர். இருவர் முகமும் மலர்ச்சியாக இல்லை. சில நேரங்களில் அவளிடம் நெருக்கம் காட்டினான். சில நேரங்களில் விலகிப் போனான். மொத்தத்தில் காதலிக்கும் போது இருந்த முகுந்தன் தானா இவன், என்று கேட்டால் இல்லவே இல்லை என்பாள் சித்ரா.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கழிந்த நிலையில் கண்ணாடியை பார்த்து தன் தலை முடியை சீவிக் கொண்டிருந்த முகுந்தன், “நீ வேணா வேலைக்கு மறுபடியும் போக ஆரம்பியேன்.. வீட்டுல உனக்கு போர் அடிக்கல?” என்று முகுந்தன் கேட்க, தானே கேட்பதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சித்ரா, ‘நாளைலேருந்து போறேன்’ என்றாள். முகுந்தனின் கையில் திருமணத்தன்று அவள் அணிவித்த மோதிரம் இல்லாததை அவள் கவனிக்கவில்லை.

மறுநாள் சித்ரா வேலைக்குச் சென்ற போது திருமணம் முடிந்த புதுப்பெண் விடுமுறைக்குப் பின் முதன்முறையாக வேலைக்குச் சென்றால் தோழிகள் என்னவெல்லாம் பேசினார் பேசுவார்களோ அத்தனையும் பேசினார்கள். சித்ரா மட்டும் படாமல் பதிலளித்ததை வெட்கம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். மணிமேகலைக்கு மட்டும் வித்தியாசம் தெரிந்தது.

அவர்களது நிறுவனத்தில் வாசலில் நுழைந்ததிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்வதற்கு சிறிது நேரம் நடக்க வேண்டும். சித்ராவுக்கு இப்படி நடப்பதிலும் ஒரு சிறிய விளையாட்டுப் பழக்கம். வழியில் சதுரம் சதுரமாகக் கற்கள் பதித்த தளம் இருக்கும். எப்பொழுதும் முதல் கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்தை விட்டுவிட்டு மூன்றாவது கட்டத்தில் கால் வைத்து தாண்டித் தாண்டி போவாள். பாண்டி விளையாட்டின் விதிகளைப் போல சதுரத்தின் ஓரங்களில் இருக்கும் எல்லைக் கோடுகளில் கால் வைத்துவிடக் கூடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள்.

அன்று வேலைக்குச் சென்றவள், மற்றவர்களைப் போல் கோடுகளிலும் கால் வைத்துச் சென்றாள். “ஏன் சித்ரா ஒரு மாதிரி இருக்கே? எதுவும் பிரச்சனையா?” என்று மணிமேகலை கேட்க, “அதெல்லாம் இல்லையே!” மறுத்தாள் சித்ரா.

“ரொம்ப நடிக்காத! காலையில் உள்ள வரும்போது கவனிச்சிட்டேன். தாண்டித் தாண்டி வர்ற நீ நேரா நடந்து வர்றப்பவே தெரிஞ்சு போச்சு” என்றாள் மணிமேகலை.

நடந்த விஷயங்களைச் சொன்னாள் சித்ரா.

“ம்ஹ்ம்ம்.. கொஞ்சம் பொறுத்திருந்து பாரு..‌ என்ன நடக்குதுன்னு பாக்கலாம்” மணிமேகலைக்கும் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவள் வேலை முடித்து வந்த போது வீட்டில் முகுந்தனும் இல்லை, சத்தியபாமாவும் இல்லை. மாறாக சுப்பம்மாள் அமர்ந்திருந்தார். ஏனோ திக்கென்று இருந்தது சித்ராவுக்கு.

“வா டீ! ஏதோ சொந்தத்தில் துஷ்டியாம்.. (துக்க நிகழ்வு)‌. உங்க மாமியாரும் வீட்டுக்காரரும் போயிருக்காங்க. ஏதோ வயசான கிழவியாமே?” என்று சுப்பம்மாள் கேட்க,

“ஆமா.. ஒரு பாட்டி சீரியஸா இருக்கிறதா சொன்னாங்க”

“அவங்களா தான் இருக்கும். காலமாயிட்டாங்க போல.. அடக்கம் பண்றதுக்கு சொந்த ஊருக்குக் கொண்டு போயிட்டாங்களாம். இவங்களும் கூடப் போயிருக்காங்க. ஏதோ ஒரு நம்பர்ல இருந்து உங்க அத்தை போன் போட்டாங்க. சித்ராவைக் கொண்டு போய் ஒரு வாரம் உங்க வீட்ல வச்சுக்கோங்க அப்படின்னு சொன்னாங்க” என்று சொல்லி நிறுத்தினார் சுப்பம்மாள்.

“ஏன்மா? அப்ப நாம அந்த ஊருக்குப் போக வேண்டாமா?”

“அதே கேள்வி தான் டி‌ எனக்கும். இவங்க சொந்தக்காரங்க யாரு, இவங்க குடும்பத்துப் பழக்கம் என்ன, எதுவும் நமக்குத் தெரியாது. யாரைக் கேட்கிறது, என்ன செய்றது ஒன்னும் புரியல.. உங்க அத்தையும் ஃபோன்ல படபடப்பா பேசினாங்க.. எந்த ஊரு எதுவும் சொல்லல..‌ இங்கே பக்கத்து வீட்டுக்காரங்க நான் உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து என்கிட்ட விசாரிக்கிறாங்க.. அவங்களும் வேற வேற ஜனங்க தான் போல.. உன் மாப்பிள்ளைக்கு சொந்தக்காரங்க இல்லையாம்.. கொஞ்சமாவது யோசிச்சு இந்தக் கல்யாணத்தைப் பண்ணியிருக்கலாம் நீ!” என்று லேசாகக் கலங்கத் துவங்கிய கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார் சுப்பம்மாள்.

“அதை விடும்மா! நம்ம வீட்டுக்கு நான் வந்தே எத்தனை நாளாச்சு. போவோமா?” போலியாக உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு கிளம்பினாள் சித்ரா.

பின்னே, வீட்டை விட்டு வந்து ஏழு நாட்கள் கடந்திருந்தனவே.. அக்கம் பக்கத்தை, கோழிக் குஞ்சை, தன் சொந்த
உடைமைகளை எல்லாம் பார்ப்பதற்கு அவளுக்கு ஆசை இருக்காதா என்ன?

“முதன்முறையா வர்றவ புருஷனோட தானே வரணும்.. அதான் யோசனையா இருக்கு” அரை மனதாகவே சுப்பம்மாள் கூட்டிக் கொண்டு சென்றார்.

“என்ன சித்ரா மட்டும் வந்திருக்கா மாப்பிள்ளை வரலையா?” என்ற கேள்விகள் தவிர அடுத்த சில நாட்கள் சுமூகமாகவே சென்றன. முகுந்தன் தன்னுடைய அழைப்புகளை ஏற்கவில்லை என்ற குறை மட்டும் சித்ராவுக்கு. இரவுகளில் சற்று அதிகமாக அந்த எண்ணம் தோன்றியது.

நடுவில் ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்ட சத்தியபாமா, “என் ஃபோனைப் பத்தி உனக்குத் தெரியும்ல மா.. வழக்கம் போல அது ரிப்பேராப் போச்சு. முகுந்தன் ஃபோனும் தண்ணிக்குள்ள விழுந்துருச்சாம். இங்கே அந்த பாட்டிக்கு சொந்தக்காரங்க கிடையாது. எல்லாம் நாங்க தான் செய்றோம்.. ரெண்டு மூணு நாள்ல வந்துடுவோம்” என்று சொல்லிவிட்டு வைத்தார்.

“சரிங்க அத்தை! சரிங்க அத்தை!” என்று சித்ரா பதில் சொன்னதைக் கேட்டுவிட்டு வேகமாக வந்த சுப்பம்மாள்,

“அட சம்பந்தியா பேசுறாங்க? அவ்வளவு நெருங்கின சொந்தம்னா நாம போக வேண்டாமா? எந்த ஊரு என்னன்னு கேட்காம விட்டுட்டியே? என்கிட்டயாவது கொடுத்திருக்கலாம் இல்ல”

‘என்ன, இந்தப் புள்ள இன்னும் விளையாட்டா இருக்குது? கல்யாணத்தைத் தான் விளையாட்டு போல பண்ணிக்கிச்சு. போனா போகுதுன்னு ஏத்துக்கிட்டாச்சு. எனக்கு என்னமோ மனசுக்கு சரியாப் படலையே! கடவுளே! மத்த ரெண்டு பிள்ளைகளையும் கரையேத்தனும் நானு. என்னை சோதிக்காதப்பா!’ என்று தனக்குள் குழம்பியபடி இருந்தார்.

சரியாக ஆறு நாட்கள் கழித்து சித்ரா வேலை விட்டு வந்த நேரம் ஆட்டோ ஒன்று சுப்பம்மாள் வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞன் மட்டும் இறங்கினான். சுமார் முப்பது வயது இருக்கலாம்.

“வணக்கம்மா. என் பெயர் பூபதி. சத்தியபாமான்னு ஒரு அம்மா இருக்காங்கல்ல.. அவங்க உங்களையும் அவங்க மருமகளையும் கூட்டிட்டு வரச் சொல்லி ஆட்டோ அனுப்பினாங்க, அவங்க ஏரியால தான் ஆட்டோ ஓட்டுறேன் நானு..” என்றான்.

இப்படித்தானே முகுந்தனும் வந்து அழைத்தான், அன்று காரில் ஏறி போன போது ஒரு குண்டைப் போட்டார்கள். இப்போது என்னவோ.. என்று நினைத்தாலும், வந்தவனைப் பார்க்க நம்பிக்கையாகத் தெரிந்ததால், “உங்க அத்தை வந்துட்டாங்க போல டி! வா!” என்று சித்ராவை அவசரப்படுத்தி கூட்டிச் சென்றார் சுப்பம்மாள்.

“அக்கா! அப்பா படத்துக்கு டாடா காட்டாமப் போற நீ” என்றான் அவள் தம்பி.

ஒரு வாரத்துக்குப் பின் இப்போதுதான் கணவனைச் சந்திக்கப் போகிறாள். மகிழ்ச்சியில் சித்ரா ஆட்டோவில் ஏறினாள். வயதுக்கேயுரிய ஆர்வத்தில் ஒரு ஆணிடம் ஈர்க்கப்பட்டது, ஏதோ ஒரு அவசரத்தில் திருமணம் செய்து கொண்டது, தாம்பத்தியம் என்றால் என்னவென்று அரைகுறையாகத் தெரிந்து கொண்டது, திடீர் வரவேற்பு, பின் கணவனைக் கண்ணிலே பார்க்காதது, பார்த்தது இப்படியாக சித்ராவுக்கு கடந்த ஓரிரு மாதத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். தன் வாழ்வே ஒரு பெரிய ரங்கராட்டினத்தில் சுற்றி வந்தது போல் உணர்ந்தாள். அவள் எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள் நடக்கவில்லை.

சித்ரா ஆர்வமுடனும், சுப்பம்மாள் குறுகுறுக்கும் மனதுடனும் அங்கு செல்ல, அவர்களை வரவேற்ற சத்தியபாமா அவர்களது வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரத் தயாராக இருந்தார்.

-தொடரும்.
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Sad
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
295
27
43
47
Bangalore
தாயிடம் சொல்லாமல்
தானாக முடிவெடுத்து
தவித்து நிற்கும் தாரகையே.... இப்படி பட்ட திருமணம்
தேவையா????