10.
படிக்காத மனைவியானாலும் அவளின் குழந்தைத்தனமான பேச்சும் கள்ளமில்லாத சிரிப்பும் ஆளை அசரடிக்கும் அழகும் ஹரியை என்னென்னமோ செய்தது! தினம் தினம் அவன் அந்த இன்பத்தில் தன்னைத் தானே விரும்பித் தொலைத்துக் கொண்டிருந்தான்!
அன்று அவன் அலுவல் முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது, அபிக்கும் பொன்னம்மாளுக்கும் ஏதோ பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது!
"ஐயோ... அப்டில்ல.... உங்களுக்கு கணக்கு தெரீல...." என்று பொன்னம்மாள் கூற,
"எனக்கு கணக்கு தெரியும்.... நீங்க என்ன ஏமாத்த பாக்கறீக.... இங்க பாருங்க.... அரக்கிலோ கத்ரிக்கா வாங்கினோம்... அரக்கிலோ தக்காளி.... அரக்கிலோ வெங்காயம்.... கத்ரிக்கா இருவது ரூபா.... தக்காளி இருவது ரூபா... வெங்காயம் இருவத்தஞ்சி ரூபா... மொத்தம்.... ம்....." என்று தன் விரல் விட்டு எண்ணுவது போல பாவனை செய்துவிட்டு, மேலும் எண்ணுவதற்கு தன்னிடம் இருக்கும் விரல்கள் பத்தாமல் பொன்னம்மாளின் கையைப் பிடித்து எண்ணி, பின்னர், கொஞ்சம் யோசனை செய்துவிட்டு,
"ஆங்... அறுவத்தஞ்சி ரூபாதான் ஆச்சி.... அத்த நூறு ரூபா குடுத்தாங்க.... நூறுல அறுவத்தஞ்சி போச்சின்னா...." என்று கூறிவிட்டு அவள் திரும்பவும் விரல் விட்டு எண்ணத் தொடங்க,
"ம்க்கும்... இந்தா பாருங்க சின்னம்மா.... நீங்க இங்கியே குந்திகினு எண்ணிகிட்டிருங்க.... நா போறேன்... எனுக்கு வேலயிருக்கு...." என்று சொல்லிவிட்டு மட மடவென்று எழுந்து உள்ளே போனாள்!
ம்... போடற வேஷத்த ஒழுங்கா போடணுமேன்னுதான் உங்க கிட்ட நடிச்சிகிட்டிருக்கேன் பொன்னம்மா! அதான், நீங்க அத்தைய இன்னும் ஏமாத்திகிட்டிருக்கறதக் கண்டும் காணாம இருக்க வேண்டியிருக்கு! என்று அபிநயா தனக்குள் கூறிக் கொண்டே எழ முயன்ற போது, தன் அன்புக் கணவன் ஹரியின் கார் வீட்டு காம்பௌண்டுக்குள் நுழைவது கண்டு, அப்படியே அமர்ந்து எண்ணுவதை தொடர்ந்தாள்!
தன் காரை அதனிடத்தில் பார்க் செய்துவிட்டு வந்த ஹரி, இவள் வாசலில் அமர்ந்து விரல் விட்டு எண்ணுவதைப் பார்த்துவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்!
"என்ன பண்ணிகிட்டிருக்க...."
"ம்... எண்ணிகிட்டிருக்கேன்...."
"என்ன எண்ணிகிட்டிருக்க? எத்தன விரல் இருக்குன்னா..."
"ஐயோ அதில்ல மாமா.... இந்த பொன்னம்மால்ல பொன்னம்மா...." என்று கூறி அவனிடம் தான் காய் வாங்கிய கணக்கைக் கூறி,
"அவுக நூறுல அறுவத்தஞ்சி போனா இருவது ரூபாதான் வரும்ன்னு சொல்றாக... ஆனா எப்டி எண்ணினாலும் எனக்கு இருவத்தி மூணு ரூபாதான் வருது... அதான் எண்ணிகிட்டிருக்கேன்! நீங்க சொல்லுங்க மாமா! நூறுல அறுவத்தியஞ்சி போச்சின்னா இருவத்தி மூணு தானே வரும்?" என்றாள் அப்பாவியாய்!
அடக்கடவுளே! இவளுக்கு இந்த சின்ன கணக்கு கூட தெரியலயா? என்று தனக்குள் நொந்தபடி,
"ஐயோ இல்ல அபி... உனக்கு இது கூட தெரியாதா? அதான் ஆறாங்க்ளாஸ் வரைக்கும் படிச்சிருக்கல்ல..... நூறுல அறுவத்தியஞ்சு போனா முப்பத்தியஞ்சு வரும்! என்ன அபி! சரியா கணக்கு போடு!" என்று அதட்டினான்!
"ஹாங்... ணுப்பத்தியஞ்சா..... ஆனா..... பொன்னம்மாக்கா இருவதுன்னுல்ல சொன்னாக...."
"அவங்கள விடு.... நீ ஒழுங்கா கணக்கு போடு!" என்றான்.
அட என் மக்கு ஹீரோ! அவ உங்களை ஏமாத்தறான்னு சொல்றேன்! இதக் கூட புரிஞ்சிக்காம...... என்று தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டபடி,
"ஐயோ... மாமா! நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்... ஆனா என் கவல அதில்ல.... பொன்னம்மாக்கா இருவது ரூவா தான் குடுத்தாக...." என்று விளக்கி அவள் செய்த தில்லாலங்கடியை ஹரிக்கு உணர்த்தினாள்!
"ம்... சரி வா! மொதல்ல அவங்க கிட்ட கேக்கறேன்!" என்று கூறியபடி அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு பொன்னம்மாளிடம் போனான்!
"ம்ஹூம்... மாமா.... நீங்க போய் அவுக கிட்ட கேட்டா.... நா தப்பே பண்ல சின்னய்யா... உங்க சம்சாரம்தான் தப்பு தப்பா கணக்கு போடுதுன்னு சொல்லுவாக..." என்றாள் அபி!
"ம்... அதுவும் சரிதான்! நா இங்க நின்னு பாக்கறேன்! நீ போய் அவங்க கிட்ட கேளு...." என்று கூறி அவளை அனுப்பினான்!
அபி சென்று கேட்டு பொன்னம்மாள் அபியிடம் திரும்பவும் நூறில் அறுபத்தைந்து கழிந்தால் இருபதுதான் வரும் என்று கூறி சாதிக்க, இப்போதுதான் ஹரிக்கு பொன்னம்மாள் ஏமாற்றுவது விளங்கியது!
"எத்தன நாளா நடக்குது இந்தக் கூத்து!?" என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே ஹரி அவ்விடம் வர,
"அது ஒண்ணுல்ல சின்னைய்யா.... சின்னம்மாவுக்கு கணக்கு சரியா தெரீல.... நூறில அறுவத்தியஞ்சி போச்சுன்னா இருவத்திமூணுதான் வரும்னு சொன்னாங்க.... அதான் நா வேணும்னே இருவது வரும்னு சொன்னேன்! இதையாச்சி கண்டுபிடிக்கிறாங்களான்னு பாத்துகிட்டிருந்தேன்..... இந்தாங்க மிச்ச பணம்....." என்று கூறிக் கொண்டே மீதி சில்லறையை அவனிடம் கொடுத்தாள் பொன்னம்மாள்!
"பாத்தியா அபி! இவங்க உன்ன டெஸ்ட் பண்ணிருக்காக! இனிமே இப்டி கணக்கு தெரியாம நீ தவிக்க கூடாது! இன்னிலேந்து நா ஒனக்கு கணக்கு போட கத்து தரேன்!" என்றபடியே அவளை அழைத்துச் சென்றான் ஹரி!
அடக்கடவுளே! சாமர்த்தியமா தப்பிச்சிட்டீங்களா பொன்னம்மாக்கா? இருங்க! ஒருநாள் உங்க சீட்ட கிழிக்கறேன்! என்று மனதுக்குள் எண்ணியபடியே அவனுடன் சென்றாள் அபி!
அவன் சொன்னது போல ஹரி ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அபிக்கு அடிப்படை கணக்கான கூட்டலும் கழித்தலும் கற்றுத் தர,
இதைப் பார்த்தபடி கல்லூரியிலிருந்து வந்த நந்தினி,
"என்ன பண்ற ஹரி?" என்று கேட்டாள்!
"ம்... ஒங்க மருமகளுக்கு கணக்கு சொல்லி குடுத்துகிட்டிருக்கேன்!"
"என்ன?" என்று அவள் கொஞ்சம் அதிர்ச்சியாய் கேட்க,
அவன் நடந்ததைக் கூறினான்! நந்தினிக்கு சட்டென்று விஷயம் விளங்கிவிட்டது! அவள் அபியைப் பார்க்க, அவளும் கண்களாலேயே ஆமாம் என்றாள்!
இந்த பொன்னம்மா இவ்ளோ நாளா என்ன ஏமாத்திகிட்டிருக்காளா.... என்று நினைத்து அவளுக்கு கோபம் வர, அவள் பொன்னம்மாளைத் தேடிப் போவதற்குள்,
"மாமா! இருங்க! நா அத்தைக்கு காபி வெச்சி குடுத்திட்டு வரேன்!" என்று கூறிவிட்டு அவள் எழுந்தாள்!
"அதுக்குதான் பொன்னம்மாவ வேலைக்கி வெச்சிருக்கோம்! நீ இரு!" என்று கூறி அவன் அவள் கைபிடித்து நிறுத்தினான்!
ஆனால் அவனால் அபியை நிறுத்த முடியுமா என்ன?
"இருங்க மாமா!" என்று அழுத்தமாகக் கூறிக் கொண்டே ஓடியே போய்விட்டாள்!
ம்... இப்டிதான் சின்ன வயசில படிக்கறப்பவும் பண்ணியிருப்பா போல.... அதான் இப்டி படிக்காம இருந்து இன்னிக்கு சின்ன கணக்கு கூட போடத் தெரியாம வேலைக்காரங்க கிட்டல்லாம் ஏமாந்து போயிகிட்டிருக்கா.... என்று நினைத்துக் கொண்டான் ஹரி!
அபி அவசரமாக சமையலறைக்குப் போகவும் அதற்குள் பொன்னம்மாளே நந்தினிக்காக காபி கலந்து விட்டிருந்தாள்! அதை எடுத்துக் கொண்டு நந்தினியிடம் அவள் செல்ல, அவளைத் தடுத்து அந்த காபியை வாங்கிக் கொண்டு அபியே நந்தினியிடம் சென்றாள்! அங்கே நந்தினி கோபமாக இருந்தாள்!
"அத்த.... அமைதியா இருங்க...."
"இல்ல அபி! இத சும்மா விடக் கூடாது! இவ இவ்ளோ நாளா என்ன எவ்ளோ ஏமாத்தியிருக்காளோ!?"
"விடுங்க அத்த! அவள சீக்கிரமே கையும் களவுமா பிடிக்கலாம்! இப்ப நா சொல்ற மாதிரி செய்ங்க!" என்று கூறி அவள் காதில் எதையோ சொல்ல,
நந்தினி அதை கவனமாய் கேட்டுவிட்டு, தன் மருமகளைப் பார்த்து புன்னகைத்தாள்!
"சரி அபி! நீ முன்னால போ! நா இந்த காபிய குடிச்சிட்டு தெம்பா வரேன்!" என்றாள்!
அபியும் தன் மாமியாரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு திரும்பவும் ஹரியிடம் கணக்குப் பாடம் கற்றுக் கொள்ளச் சென்றாள்!
அபி சென்று ஹரி சொல்லிக் கொடுத்தது போல கூட்டல் கணக்கை தப்பு தப்பாய் போட்டபடி அமர்ந்திருக்க, நந்தினி கொஞ்ச நேரம் கழித்து ஹரியிடம் வந்தாள்!
"என்னடா.... இவளுக்கு ஏதாவது மண்டைல ஏறிச்சா? கணக்கு புரியுதா? ஒழுங்கா போடறாளா?"
"ம்ச்... இல்லமா.... ஒண்ணுமே தெரீல.... ஒண்ணு ரெண்டு மூணு கூட ஒழுங்கா சொல்ல மாட்றா? எப்டிதான் ஆறாவது வரைக்கும் படிச்சாளோன்னு ஆச்சர்யமா இருக்கு!" என்றான்.
"இதான்.... இந்த கர்மத்துக்குதான் படிக்காத பொண்ணு வேணாம்னேன்.... ஏதோ பொன்னம்மா நல்லவளா இருக்கப் போய் இன்னிக்கு தப்பிச்சா... இதே வேற யாராவதா இருந்தா இவள எவ்ளோ ஏமாத்தியிருப்பாங்க! யோசிச்சிப் பாரு...." என்றாள்!
"ம்.... நீங்க சொல்றது சரிதான்ம்மா! இனிமே அபி கைல ரொம்ப காசு குடுக்காதீங்க! அவளுக்கு கணக்கு தெரீல.... கடைக்கு போகறதுக்கு எல்லாம் பொன்னம்மாக்காவையே அனுப்புங்க! இவ நல்லா கணக்கு போட கத்துகட்டும்....." என்றான் ஹரி! (நெஜமாவே நீ மக்குதான் ஹீரோ!)
அபியும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக் கொண்டனர்.
சமையலறையில் இருந்த பொன்னம்மாளுக்கு இப்போது தைரியம் வந்துவிட்டது! ஹப்பாடா... நாம சொன்னத ரெண்டு பேரும் நம்பிட்டாங்க! எங்க அம்மா கண்டுபிடிச்சிடுவாங்களோன்னு நெனச்சேன்.... நல்ல வேள... ஏய் பொண்ணு... இனிமே உன்ன வெச்சே நா சம்பாதிச்சிடுவேன்டீ... இது போதும்டீ எனக்கு... என்று தனக்குள் சொல்லி குதித்துக் கொண்டிருந்தாள்!
நான்கு நாட்களாக தினமும் காலையும் மாலையும் அபிக்கு கணக்கு போட கற்றுக் கொடுப்பதே ஹரியின் வேலையாக இருக்க, அபியோ அவனுடைய பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள்!
"ஐயோ.... எத்தன வாட்டி சொல்லித் தருவேன்.... அஞ்சும் மூணும் எட்டு.... மூணும் அஞ்சும் எட்டுதான்.... புரிஞ்சுக்கோ அபி...." என்று கத்திக் கொண்டிருந்தான்.
"எப்டி மாமா.... அஞ்சும் மூணும் எட்டுதேன்.... ஆனா மூணும் அஞ்சும் எப்டி எட்டு வரும்.... ஏழுதானே வரும்..." என்று அவனை அழ வைத்துக் கொண்டிருந்தாள்.
"கடவுளே..... எனக்கு இன்னும் பொறுமையக் குடு...." என்று கத்தினான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை போலும்!
"ம்மா.... நீ கணக்கே கத்துக்க வேணாம்... ஆள வுடு சாமி.... போ... போய் உன் வேலயப் பாரு...." என்று இந்த கணக்கு கற்றுக் கொடுக்கும் பணிக்கு நிரந்தமாக மூடு விழா நடத்திவிட்டான்!
இந்தக் கூத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, அனுபவி மகனே! அனுபவி! என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இப்போது பொன்னம்மாவுக்கு தினம் தினம் நிறைய காசு கையில் வந்தது! அவளுடன் கடைக்கு வரும் அபிக்குதான் கணக்கு தெரியாதே! அதனால் செலவுக்காகக் கொடுக்கப்படும் பணம் எல்லாம் பொன்னம்மாளின் வசம் இருக்க அவள் குதூகலமாக வளைய வந்தாள்!
அபிக்கு கணக்கு வரவில்லையே ஒழிய வீட்டு வேலை நன்றாகவே செய்வதாக ஹரிக்குத் தோன்றியது! ஏனெனில் அபியின் வரவுக்குப் பிறகு, வீட்டின் அமைப்பே மாறிவிட்டது.
திரைச்சீலைகள் எல்லாம் அவனுக்குப் பிடித்த நிறத்தில் பிடித்த டிசைனில் இருந்தது. வீட்டில் மெல்லிய இசை எப்போதும் தவழ்ந்து கொண்டிருந்தது. சுவர்களில் புதிய ஓவியங்கள் அதுவும் அவனுக்குப் பிடித்த மாதிரி மாட்டப்பட்டு இருந்தது. வீட்டுத் தோட்டமும் அழகாக மாறியிருந்தது.
அது மட்டுமல்ல, அபி தானே தன் கைப்பட வீட்டை சுத்தம் செய்தாள். அவள் வருகைக்குப் பிறகு வீடு அதிக சுத்தமாக இருப்பது போல ஹரிக்குத் தோன்றியது. கழிப்பறை முதற்கொண்டு பளிங்கு போல காட்சியளித்தது. வீட்டில் சமைக்க பொன்னம்மாள் இருந்தாலும் அபியே அதிகம் சமைத்தாள்.
“பொன்னம்மாக்கா! வெங்காயம் கறுப்பா இருந்தா அத வெச்சி சமையல் பண்ணாதீக.... வயித்து வலி வரும்.... இந்த தேங்காயும் கெட்டுப் போச்சு!”
“முத்து! அந்தக்கடைல கவுச்சி வாங்காதீக! பாருங்க! எவ்வளவு அழுகியிருக்கு. இத சாப்ட்டா அத்தை உடம்பு என்ன ஆகறதுக்கு?” என்ற அபியின் கோபங்கள் ஹரிக்கு வியப்பளித்தன.
“ஏய்! பூக்காரக் கெளவி! உம்ம மருமவளைப் பத்தி ஒரு மூட குத்தம் சொல்லிக்கிட இங்கன வாராதீக. இப்டி வேண்டாத்த பேச்சு பேசறதுனாலதேன் உம்ம மருமவ உம்ம வெரட்டி விட்டுட்டாக. வாய்ல நல்ல வார்த்தையே வராதா உமக்கு? வாளற வீட்ல இப்டி தப்பு தப்பா பேசறீயளே! இனிமே இப்டி பேசிகிட்டு பூ எடுத்து வந்தீக நான் உம்மகிட்ட பூவு வாங்கவே மாட்டேன்ய்!" என்று கறாராகச் சொன்னாள்!
“இன்னாமா ஒம் மருமவ இப்டி சொல்லுது?”
“சரியாதானே சொல்றா! நீ கிளம்பு!” என்றாள் நந்தினி.
பூக்காரக் கிழவி புலம்பியபடி சென்றாலும் அதற்கப்புறம் அவள் இங்கு வரும்போது வாயை மூடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஹரி வியந்துதான் போனான்.
ஒருநாள் பூக்காரக்கிழவி நொண்டியபடி நடந்து வந்தாள்.
“என்ன கெளவி? நொண்டியடிக்கறீக? என்னாச்சு?” அபி கேட்டாள்.
“ஒண்ணுல்ல கண்ணு. வர வழியில கல் குத்திருச்சு. எச்சி வெச்சுட்டேன். காலைல நேரமே போனா எங்க வைத்தியரு கட்டு கட்டுவாரு. சரியா பூடும்.”
“எங்க காட்டு?” என்றவள் அவள் கால் காயத்தைப் பார்த்து, மைகாட்! எவ்ளோ ப்ளட் போயிருக்கு! என்று மனதுக்குள் நினைத்தபடி, "இரு வரேன்.” என்று உள்ளே சென்று முதலுதவிப் பெட்டி எடுத்து வந்து காயத்தை கழுவி சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்டிவிட்டாள். கூடவே டிபன் காபி தந்து சாப்பிட வைத்தாள்.
அப்போது வீட்டில் நந்தினியும் அவளும் மட்டும்தான் இருந்ததாலும் பொன்னம்மாளும் முத்துவும் இல்லை என்பதாலும் தைரியமாக அபி இதைச் செய்தாள்.
பூக்காரி கண்கலங்க நந்தினியிடம் கூறினாள்.
“ஒம்மருமவ வாய் நீளமே கண்டி மனசு தங்கம். மருந்து வச்சு கட்டி நாஷ்தா தந்து துண்ண சொல்லுது!” என்றாள்.
“கிழவி! உமக்கும் மனசு தங்கம்தான். ஆனா உம் மருமவள சண்டக்காரியா பாக்கீக. அப்டி பாக்காதீக. அவ கஞ்சிதேன் குடுத்தாலும் நீ வெக்கற கஞ்சி மாதிரி வருமான்னு கேட்டு பளகுங்க. அப்றம் பாருங்க! ஒமக்கு இட்லி தோசையே பண்ணிப் போடுவாக! ராஜ மரியாதைதான் ஒமக்கு!” என்றாள் அபி.
கிழவி அபிக்கும் நந்தினிக்கும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளிம்பினாள்!
அப்போது வெளிநாட்டில் வாழும் அபியின் தோழி ஒருத்தி அபிக்கு போன் செய்தாள்!
கிழவி வீட்டின் வெளியே வரவும் ஹரி உள்ளே நுழையவும் சரியாயிருக்க, ஹரி அந்தக் கிழவியின் காலைப் பார்த்து என்னவென்று விசாரித்தான்!
"ஒண்ணுல்ல தம்பி... கல்லு குத்திருச்சி.... உன் சம்சாரம் மருந்து வெச்சி கட்டி வுட்டிச்சி... டிபன் குடுத்திச்சி...." என்று கூறிக் கொண்டே அவள் செல்ல,
என் சம்சாரம் மருந்து வெச்சி கட்டி வுட்டிச்சா? என்ன உளற்ரா.... என்று நினைத்தபடி உள்ளே வந்தான். அவன் வருவதை அபி கவனிக்கவில்லை!
நந்தினியிடம் விசாரிக்க,
"பாத்தியா... கெழவிக்கு கண்ணு கூட தெரியல போல.... நாந்தான் கெழவி கால சுத்தம் பண்ணி மருந்து வெச்சி கட்டினேன்... உன் பொண்டாட்டி அவளுக்கு டிபன் குடுத்தா.. ஹையோ.. ஹையோ..." என்று நிலைமையை சமாளித்துவிட்டுத் திரும்ப, அபியின் ஆங்கில உரையாடல் உள்ளறையிலிருந்து கேட்டது. ஹரி சந்தேகமாய் உள்ளே வர, நந்தினி சட்டென்று அபி பேசிக்கொண்டிருந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை ஹாலிலிருந்தே ரிமோட்டில் மூலம் உயிர்ப்பித்து விட்டு அபியின் கவனத்தை திருப்பினாள்!
"ஓ! டிவியா! என்னடா இவ எப்படி இங்கிலீஷிலே பேசுவான்னு கொழம்பிட்டேன்!" என்று கூறி சிரித்தபடியே தன் வேலையைப் பார்க்கப் போனான்! (நம்பாத! உன்ன ஏமாத்தறாங்க ஹீரோ!)
ஆனால் இன்னும் இரண்டு தினங்களில் அபி தானே தன் படிப்பு பற்றிக் கூறப் போகிறாள் என்றும் அதற்கு முழு முதற் காரணம் தானே என்றும் இப்போது நந்தினிக்குத் தெரியாது!
தொடரும்.....