• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 16

Annapurani

Member
Mar 27, 2025
33
0
8
16.



நாளை காலை அறுவை சிகிச்சை என்ற நிலையில், இந்த நேரத்தில் மருத்துவமனையில் தன் மாமியாரின் அருகே இருக்க வேண்டியவள் இப்படி சோர்ந்து போய் தளர்ந்த நடையுடன் இங்கே வருகிறாள் என்றால், அவள் மாமியாருக்கு ஏதேனும்.... என்று நினைத்து பதறியபடி விசாரித்தார்கள் அபியின் அம்மா இந்துவும் அவளுடைய சித்தி சாருவும்!

"என்ன அபி... என்னாச்சு.... ஏன் இப்டி சோர்ந்து போய் வர...." என்று சாருமதி பட படவென்று கேட்க,

"அபிம்மா! என்னடா... என்ன... அத்தைக்கு நாளைக்கு ஆபரேஷன் இல்லையா?" என்று நிதானமாக ஆனால் தெளிவாக கேட்டாள் அபியின் அம்மா இந்துமதி!

இருவரின் கேள்விக்கும் பதிலெதுவும் சொல்லாமல் குலுங்கி அழத் தொடங்கியவளை கலவரமாய்ப் பார்த்தார்கள் பெரியவர்கள் இருவரும்!

சத்தம் கேட்டு உள்ளறையிலிருந்து எழுந்து வந்த அபியின் சித்தப்பா கோபாலன் அபியை சமாதானம் செய்து என்னவென்று விசாரித்தார்!

அபி அழுகையினூடே நடந்ததை சுருக்கமாய் விவரித்தாள்!

"காணாம போன என் மாமனார் பத்திரமா திரும்பி வந்துட்டார்! இவ்ளோ நாள் ஒரு ஆக்ஸிடென்ட்ல மாட்டி அவர் அம்னீஷியானால பாதிக்கப் பட்டிருந்தார்! அப்டி பாதிக்கப்பட்டிருந்தாலும் தன் மனைவியையும் மகனையும் மட்டும் ஞாபகம் வெச்சிருந்தார்!

இன்னிக்கு எங்க ஹாஸ்பிடல்ல நெஞ்சு வலின்னு கொண்டு வந்து அவர சேர்த்தாங்க! அத்தையோட பெட்டுக்கு எதிர் பெட்ல அட்மிட் பண்ணி நாந்தான் அவருக்கு ட்ரிப்ஸ் போட்டு பாத்துகிட்டிருந்தேன்!

அப்ப அத்தை ஹரி! ஹரீன்னு இவர் பேர் சொல்லி சத்தம் போட்டு ஆப்ரேஷன் பண்ணிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க! அவங்களோட சத்தம் கேட்டு கண்ணு முழிச்ச எதிர் பெட்ல இருந்த என் மாமனார், ஓடி வந்து அத்தைய கட்டி பிடிச்சிகிட்டு ஒரே அழுகை! அப்றம் ஹரி வந்தப்றம்தான் அவருக்கு அம்னீஷியான்னு தெரிஞ்சது!

எல்லாம் நல்லபடியா முடிஞ்சதேன்னு சந்தோஷப்பட்டா, ஹரி என்னைய அங்கேந்து போன்னு சொல்லிட்டார்! நா அத்தைக்கு ஆபரேஷன் செய்யக் கூடாதுன்னு என்னை வெரட்டிட்டார்!" என்று சொல்லி குலுங்கி அழுதாள்!

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கோபாலன், அபியை சமாதானம் செய்தார்!

"ஓகே! ஓகே! எல்லாம் சரியாய்டும்! ஆபரேஷன் முடியட்டும்! நாம பேசிக்கலாம்! நீ அழாத அபி! எதாவது சாப்டியா?" என்று அவளிடம் பேசிக் கொண்டே தன் மனைவிக்கு கண் சாடை செய்ய, அபியின் சித்தி சாருமதி அபிக்கு ஒரு தட்டில் சிற்றுண்டியை எடுத்து வந்து கொடுத்தாள்!

அபி அதை வேண்டாம் என்று மறுக்க, கோபாலனே அவளுக்கு ஊட்டி விட்டு அவளை சாப்பிட வைத்தார்!

"இங்க பார் அபி! நீ தைரியசாலி பொண்ணு! எவ்ளோ துணிச்சலா ஹரிய கல்யாணம் பண்ணியிருக்க? அவங்க வீட்ல அந்த சர்வன்ட் மெய்ட் எவ்ளோ அட்டகாசம் பண்றா! அவளையே நீ ஈசியா ஹேன்டில் பண்ற! உன் கணவர் உன் மேல உயிரையே வெச்சிருக்கார்! நீ அவர்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டியேன்னு சின்ன கோவம் அவ்ளோதான்! அது சீக்கிரமே சரியாய்டும்! இப்ப அவங்கப்பாவும் பத்திரமா திரும்பி வந்துட்டார்! அவங்கம்மாவும் நல்லபடியா ஆபரேஷன் ஆகி வந்திடுவாங்க!

அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா உன் பக்கத்தில இருக்கற நியாயத்த மாப்பிள்ளைக்கு எடுத்து சொல்லி புரிய வெப்பாங்க! அப்டியே அவர் புரிஞ்சிக்கலன்னாலும் நாம அவருக்கு புரிய வெப்போம்!

அவருக்கு உன் மேல கோவம்தானே தவிர வெறுப்பு கிடையாது! சரியா!" என்று சொல்லி புரிய வைக்க, அபி மனம் தெளிந்தாள்!

"தேங்க்ஸ் சித்தப்பா! நா ரொம்ப பயந்துட்டேன்!"

"அபிக்கு பயமா? அதெல்லாம் உனக்கு செட்டாகாது..... நீ சரியான அராத்து.... அப்டி இருந்தாதான் மாப்பிள்ளைக்கே உன்ன பிடிக்கும்!" என்றார் கோபாலன்!

இதைக் கேட்ட அபி சிரிக்க,

"ம்... இப்டிதான் இருக்கணும்! எல்லாம் நல்லபடியா முடியும்! நீ எதுக்கும் கவலப்படாத! முகம் கழுவி பொட்டு வெச்சிகிட்டு சாமி விளக்கேத்தி அத்தைக்காக வேண்டிக்கோ!" என்றுவிட்டுப் போனார் கோபாலன்!

அவர் சொன்னது போலவே முகம் கழுவி பொட்டு வைத்துக் கொண்டு சாமி விளக்கேற்றி தன் மாமியாருக்காக அவள் வேண்டிக் கொண்டாள்!

அப்போது அவளுடைய கைப்பேசி அழைத்தது! எடுத்துப் பார்க்க, அவள் வேலை செய்யும் மருத்துவமனையின், அவளுடைய துறையின் தலைமை செவிலி அழைத்தாள்!

"சொல்லுங்க சிஸ்டர்! அத்தைக்கு ஒண்ணுமில்லையே!?"

"இல்ல டாக்டர்! உங்க மாமியார் நார்மலாதான் இருக்காங்க! நா வேற விஷயமா போன் பண்ணினேன்!"

"சொல்லுங்க சிஸ்டர்!"

"நம்ம சீஃப் டாக்டரோட அம்மாவுக்கு சீரியஸ்ன்னு அவர் அவசரமா அவரோட பூர்வீக கிராமத்துக்கு கிளம்பிட்டார்! அதனால அவர் ஃபிக்ஸ் பண்ணிருக்கற ஆபரேஷன் எல்லாம் வேற டாக்டருக்கு மாத்திட சொன்னார்! சிலத கேன்சல் செய்துட்டார்! ஆனா உங்க மாமியாருக்கு நாளைக்கு கட்டாயம் ஆபரேஷன் செஞ்சே ஆகணும்னு சொன்னார்! நீங்களே செய்வீங்கன்னு சொன்னார்! நாளைக்கு காலைல ஆறு மணிக்கு உங்களுக்கு ஓகேயா? இல்ல ஏழு மணிக்கு ஃபிக்ஸ் பண்ணவா? இத கேக்கதான் போன் பண்ணினேன் டாக்டர்!" என்றாள் அந்தச் செவிலி!

அபிநயாவுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை!

சீஃப் டாக்டர் சொன்னால் எப்படி மறுக்க முடியும்? ஆனால் நான் ஆபரேஷன் செய்ய ஹரி ஒத்துக் கொள்ள மாட்டானே! இப்போது என்ன செய்ய? என்று ஒரு நிமிடம் குழம்பித் தவித்தாள்!

இல்லை! இனி குழம்பவோ தவிக்கவோ நேரமில்லை! நா பதில் சொல்ல தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அத்தையின் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய்,

"சிஸ்டர்! காலைல ஏழு மணிக்கு ஃபிக்ஸ் பண்ணுங்க! நா கரெக்ட்டா வந்திடுவேன்!" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்!

கோபாலனிடம் இதைக் கூறினாள்!

"குட்! பாத்தியா! உன்ன வைத்தியம் பாக்கக் கூடாதுன்னு மாப்பிள்ளை சொன்னாரு! ஆனா நீதான் வைத்தியம் பாக்கணும்னு அந்த தெய்வமே உத்தரவு போட்டிருச்சு! தைரியமா போ! உன் கூட அந்த ஆண்டவனே இருக்கான்!" என்றார்!

அதன்படி அபி மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கும்பிட்டு முடித்து சரியாக ஐந்து மணிக்கெல்லாம் தான் வேலை செய்யும் மருத்துவ மனையை அடைந்தாள்!

அங்கே நந்தினியை அறுவை சிகிச்சைக்காக செவிலியர்கள் தயார் செய்தனர்!

நந்தினியை அறுவை சிகிச்சைக்கு அழைத்துப் போக, அறுவை சிகிச்சை அறைக்குள் இவள் நுழைந்ததைப் பார்த்த ஹரி, மிகவும் கோபமாக இவளைத் தடுத்தான்!

"நீதான் ஆபரேஷன் பண்ணப் போறியா?"

"ம்..."

"பித்தலாட்டம்.... நாந்தான் உன்ன எங்கம்மாவுக்கு எதுவும் செய்யக் கூடாதுன்னு சொன்னேன்ல.... அப்றம் எதுக்கு இங்க வந்து என் உயிர எடுக்கற...."

இவன் இப்படி கோபமாகப் பேச, தலைமைச் செவிலி வந்து விவரம் சொன்னாள்!

"சாரி சார்! எங்க சீஃபோட அம்மாவுக்கு திடீர்னு சீரியஸ்! அதனால சீஃப் அவங்க அம்மாவ பாக்க கிராமத்துக்கு கௌம்பிட்டார்!"

"அதுக்காக... உங்க ஹாஸ்பிடல்ல வேற டாக்டர்ஸே கிடையாதா? இந்த பொம்பள எங்கம்மாவுக்கு ஆபரேஷன் செய்யக் கூடாது...."

"சார்! அவங்க ரொம்ப கைராசியான டாக்டர்! ரொம்ப நல்லா வைத்தியம் பாப்பாங்க!"

"வேணாங்க.... இவங்க எங்கம்மாவுக்கு ஆபரேஷன் செய்யக் கூடாது.... நீங்க வேற டாக்டர ஏற்பாடு பண்ணுங்க.... முடியாதுன்னா நா எங்கம்மாவ வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்!"

"அது ரிஸ்க்கு சார்! உங்கம்மாவோட கன்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு... அவங்கள வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறது நாட் அட்வைசபுள் சார்! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!"

"உங்களால வேற டாக்டர ஏற்பாடு பண்ண முடியுமா முடியாதா?"

"இவ்ளோ எர்ளி மானிங்க்ல வேற டாக்டர்ஸ் எங்களால ஏற்பாடு பண்ண முடியாது சார்! ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க...." என்று செவிலி மன்றாடினாள்!

"அத்த உயிர் பிழைக்கறதும் பிழைக்காததும் உங்க வார்த்தைல தான் இருக்கு ஹரி!" என்றாள் அபி!

அதற்குள் உள்ளேயிருந்து ஓடி வந்து துணை செவிலி ஒருத்தி, "பேஷன்ட் மூச்சு விட ரொம்ப சிரமப்படறாங்க! டாக்டர் நா இஞ்செக்ஷன் போட்டுடவா?" என்று அபியைப் பார்த்து கேட்டாள்!

"நீ போய் ஆபரேஷன் பண்ணுமா!" என்றார் சிவசங்கரன்!

"அப்பா! என்னப்பா..." என்று ஹரி கோபமாகக் கேட்க,

"அவங்கதான் சொல்றாங்கல்ல... அம்மா கன்டிஷன் க்ரிடிக்கல்லா இருக்குன்னு... உன்னோட வீண் பிடிவாதத்தால அவள இழக்க முடியாது ஹரி! ரொம்ப வருஷத்துக்கு அப்றம் அவள பாக்கறேன்! என் மனைவி எனக்கு முழுசா வேணும்!" என்று கோபமாய் ஆரம்பித்து வேதனையுடன் முடித்தார்!

அவருடைய பேச்சைக் கேட்டவன் எதுவும் சொல்லாது போசமல் நிற்க, சிவசங்கரன் அபியை நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்ய அனுப்பினார்!

"தேங்க்ஸ் மாமா!" என்று தன் மாமனாரைப் பார்த்து கூறிவிட்டு அபி அறுவை சிகிச்சை செய்ய விரைந்தாள்!

முழுதாக ஐந்து மணி நேரம், கண்ணும் கருத்துமாய் தன் மாமியாருக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாய் செய்து முடித்துவிட்டு வெளியே வந்தாள் அபி! அங்கே சிவசங்கரனும் ஹரியும் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்! கொஞ்சம் தள்ளி, ஆனந்தி, இந்துமதி, பாண்டியன், சாருமதி, கோபாலன் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

அபி வெளியே வருவதைப் பார்த்தவர்கள், அவளருகே வர, ஹரி மட்டும் அவளருகே வராமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

"ஆபரேஷன் சக்ஸஸ்! இன்னும் ரெண்டு மணி நேரத்தில அத்த கண் முழிச்சுடுவாங்க!" என்றாள்!

"நாங்க அவள பாக்கலாமா அபி!" சிவசங்கரன் கேட்டார்.

"அரை மணி நேரம் கழிச்சு பாக்கலாம் மாமா!" என்று கூறிவிட்டு,

"மாமா! இவங்க என்னோட அப்பா அம்மா!" என்று கூற,

"பாத்து பேசிக்கிட்டோம்மா! ஆனந்தி எங்களுக்குள்ள அறிமுகம் செஞ்சு வெச்சுட்டா!" என்றார்.

"தேங்க்ஸ் ஆன்ட்டி!" என்று ஆனந்தியிடம் நன்றி கூறி விட்டு அபி அங்கிருந்து நகர, ஹரி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்!

அனைவரும் ஒவ்வொருவராக சென்று நந்தினியை பார்த்துவிட்டு வந்தார்கள்.

நந்தினியை இருபது நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். அபி தன் மாமியாரை இரவும் பகலும் இடைவிடாது கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள்.

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அபியின் சீஃப் டாக்டர் தன் கிராமத்திலிருந்து திரும்பி வந்தார்!

நந்தினியை பரிசோதித்துவிட்டு அவளுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார்!

மேலும் அபி மிக மிகக் கடினமான அறுவை சிகிச்சையை யாருடைய மேற்பார்வையுமின்றி மிகவும் நேர்த்தியாகச் செய்திருப்பதாகப் பாராட்டினார்!

“க்ரேட் அபி! வொண்டர்ஃபுல்! நல்லா ட்ரெயின் ஆயிட்டீங்க!" என்றார் சீஃப்.

“தேங்க்யூ டாக்டர்!” என்று கண்களில் கண்ணீருடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

சீஃபுக்கு அவளுடைய கண்ணீரைப் பார்த்து மிகவும் குழப்பமாக இருந்தது!

சம்திங் ராங்! என்று நினைத்துக் கொண்டு தலைமைச் செவிலியை அழைத்து என்ன நடந்ததென்று விசாரித்து அறிந்து கொண்டார்!

ஓ! புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோ க்ளாஷ்! இதெல்லாம் சகஜம்! கொஞ்ச நாள்ல சரியாகிடும்! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்றுவிட்டார்!

அவர் நினைத்தபடி ஹரிக்கும் அபிக்கும் நடுவே எல்லாம் சரியாகிப் போகுமா?






- தொடரும்....