2.
கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை முடிந்து இறைவனையும் இறைவியையும் வணங்கினர். ஹரி தன் தந்தை தங்களுடன் சீக்கிரமாகவே வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று மனமுருகி வேண்டினான். பிரசாதத்தை வாங்கிக் கொண்டு இருவரும் பிரகாரத்தை வலம் வந்தனர். கொடிமரத்தின் முன்னால் விழுந்து வணங்கினர். மண்டபத்தில் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வந்தனர்.
"கொஞ்ச நேரம் அப்டி மண்ல உக்காரலாமா ஹரி?" அம்மா கேட்டாள்.
"ம்! சரிம்மா! நீங்க உக்காருங்க. நான் இத வெச்சுட்டு வரேன்." என்று கூறிவிட்டு பிரசாதத்தைக் காரில் வைத்துவிட்டு வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தான். இருவரும் கடலைப் பார்த்தபடி மணல்மேல் அமர்ந்திருந்தனர். இருவர் மனமும் ஒன்றையேதான் நினைத்தது. நான் என்ன தப்பு பண்ணினேன். என்னை விட்டுட்டுப் போக அவருக்கு எப்டி மனசு வந்துச்சு? என்று!
நந்தினியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"நான் என்னமா தப்பு பண்ணினேன்? ஏம்மா அப்பா என்னப் பத்தி நெனக்கவேயில்ல!" ஹரி வாய்விட்டு கேட்டான். நந்தினியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"ப்ளஸ் டூ படிக்கற பையனா இருந்தாலும் நான் அவர் மேல காலப் போட்டுகிட்டு தூங்கினாதானே எனக்கு தூக்கமே வரும். இது அவருக்கும் தெரியும்ல. திடீர்னு விட்டுட்டுப் போனா நான் தவியா தவிப்பேன்னு அவர் ஏம்மா நெனக்கவேயில்ல?"
"....."
"உங்க கூட கோவிச்சிக்கிட்டு என்ன எப்டிமா அவர் பழி வாங்கலாம்? எந்த ஊர் நியாயம்மா இது?" இதற்கும் நந்தினியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"நான் ப்ளஸ் டூல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததப் பாத்து திரும்ப வருவார்னு எவ்ளோ நம்பினேன். ஏம்மா அவர் வரல?"
"....."
"அப்பா ஏம்மா நம்மள விட்டுட்டு போனாரு?" அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.
"....."
"அப்பா எப்பமா வருவாரு?" அவன் பள்ளிச் சிறுவன் போல தன் தாயின் மடியில் தலை கவிழ்ந்து சத்தமில்லாமல் அழுதான். ஆனால் அவன் உடல் குலுங்கியதிலிருந்து அவன் எவ்வளவு வேதனையுடன் அழுகிறான் என்று நந்தினியால் உணர முடிந்தது. அவனுடைய முதுகில் மென்மையாகத் தட்டியபடியே நந்தினியும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவன் சிறியவன். அன்னையின் மடியில் அத்தனை வேதனையையும் இறக்கி வைத்துவிட்டான். ஆனால் அந்த அன்னை? அவள் யாரிடம் தன் வேதனையை இறக்கி வைப்பாள்? எதுவும் செய்வதறியாது கடலை வெறித்தபடி கண்ணீர் வடித்தாள். அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் ஹரியின் கைகளில் பட்டுத் தெரித்தது. அவன் அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
"அம்மா! ஸாரிம்மா. உங்கள இன்னிக்கும் நான் அழ வெச்சுட்டேன். அழாதீங்கமா!" சொல்லிக் கொண்டே அன்னையின் கண்ணைத் துடைத்தான்.
"இல்லடா கண்ணா! நீ என்ன அழ வெக்கலடா! நானும் அப்பாவும் சேந்து உன்னதான் அழவெச்சுட்டோம். நான் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போயிருக்கணும். நான் விட்டுக் குடுக்கல. அவர் விட்டுட்டு போய்ட்டார்." இப்போது அன்னை உடைந்து அழுதாள்.
"விடுங்கமா! வருவாரும்மா! என்னிக்காவது ஒருநாள் அவர் நம்மளத் தேடி வரதான் போறார். நம்ம மூணு பேரும் திரும்பவும் சந்தோஷமா இருக்கதான் போறோம்." என்று அன்னையைத் தேற்றினான் மகன்.
இருவரும் கண்ணைத் துடைத்துக் கொண்டனர். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
"நம்ம ஆனந்தி ஆன்டி மூலமா ஒரு கல்யாணத் தரகர் வந்திருந்தார். நாலஞ்சு பொண்ணுங்க போட்டோ கொடுத்துட்டுப் போனார். நீ பாக்கறியா?"
"ம்ச்! வேணாம்! நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்."
"அப்டியெல்லாம் சொல்லாதடா! உன் கல்யாணத்த சாக்கிட்டாவது உங்கப்பா நம்ம கூட வந்து சேரலாம்ல?"
"சரி! நீங்களே பாருங்க! என்கிட்ட காட்ட வேண்டாம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்தான். பொண்ணு படிச்சிருக்கக் கூடாது."
"என்னடா ஔர்ற?"
"ஔறலம்மா."
"என்னாலதானே......"
"ஆமான்னு கூட வெச்சுக்கலாம். நான் ரொம்ப தெளிவா இருக்கேன். உங்க படிப்பாலதான் ப்ரச்சனையே. அதனால படிக்காத பொண்ணுதான் வேணும்."
"இந்த காலத்தில ஒண்ணும் படிக்காத பொண்ணு எப்டிடா கிடைப்பா?"
"அப்டின்னா வெறும் டென்த் முடிச்சவ இல்ல ப்ளஸ் டூ ஃபெயிலானவ. இப்டி யாரையாவது பாருங்க. அழகா இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. சொத்தும் வேணாம். வரதட்சணை கேக்கவேகூடாது. இதுதான் என் கண்டிஷன். இப்டி யாராவது கிடைச்சான்னா பாருங்க. அவசரம் இல்ல. மெதுவா தேடுங்க." என்றான்.
"என்னடா இப்டி சொல்ற?"
"ம்மா! ப்ளீஸ்! நான் தெளிவா சொல்லிட்டேன். இதுக்கேத்த மாதிரி பொண்ணு பாருங்க. நான் வாயே தெறக்காம தாலி கட்றேன். இல்லன்னா எனக்கு கல்யாணமே வேணாம்."
"சரி!" மனதுக்குள் அழுதாள். நீ கூட என்ன புரிஞ்சுக்கலடா! என்று அவள் உள்ளம் அரற்றியது. ஆனால் அமைதியாக இருந்தாள்.
அவன் மணி பார்த்தான். ஒருவரை ஒருவர் பார்த்து கிளம்பலாமா என்று ஜாடையாகக் கேட்டுக் கொண்டனர். மணலைத் தட்டிக் கொண்டு எழுந்தனர். மெதுவாக காரை நோக்கி நடந்தனர்.
இவர்கள் பேசியது எல்லாம் அருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு ரொம்பக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவர்கள் சத்தமாகப் பேசவில்லை, என்றாலும் இவர்கள் மெதுவாகவும் பேசவில்லை. அருகில் கல்லூரிப் பெண்கள் சிலர் சளசளத்தபடி இருந்தனர். அவர்கள் தங்கள் அரட்டையில் மும்முரமாக இருந்ததால் இவர்கள் பேசியது யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை.
ஆனால் அவர்கள் அரட்டை சத்தத்தையும் மீறி தாய் மகன் இருவரும் பேசியது அருகில் அமர்ந்திருந்த அபிக்கு நன்றாகவே கேட்டது.
ஹரி கோவிலிலிருந்து வெளியே வருவதைப் பார்த்ததுமே அவள் மனம் துள்ளியது. அருகில் ஒரு வயதான ஆனால் கம்பீரமாக வரும் பெண்மணியைப் பார்த்ததும் அவர் அவனுயை தாயார் என்று புரிந்து கொண்டாள்.
இருவரும் நடந்து வந்து கடலைப் பார்த்த மாதிரி மணலில் அமர்ந்ததும் அபி மெதுவாய் வந்து அவர்களுக்கு அருகில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள். அவளுடன் வந்த அவளுடைய இரு தோழிகளும் நாங்கள் கடலில் ஆடிவிட்டு வருகிறோம் என்று கூறிச் சென்றனர். நான் உங்க பேகை எல்லாம் பாத்துக்கறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு ஹரியை சைட் அடிக்கத் தொடங்கினாள். அப்போது அவனுடைய அம்மாவின் கண்களில் கண்ணீரைக் கண்டாள். அவனுடைய முகத்திலும் சோகம் அப்பிக் கிடப்பது தெரிந்தது. அவனும் அவனுடைய அம்மாவும் பேசுவதை அபி கவனமாகக் கேட்டாள். அவள் அவனைப்பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள். அவனுடைய அம்மாவின் கண்ணீரைப் பார்த்தவள், இன்னும் கவனமாகக் கேட்கத் துவங்கினாள்.
அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டவள் மனதில் மிகவும் சங்கடத்தை உணர்ந்தாள். ப்ளஸ் டூ படிக்கும் வரை அப்பாவின் மேல் கால் போட்டுக் கொண்டு தூங்குவானாமே! எவ்வளவு செல்லமாக வளர்ந்தவன். ப்ளஸ் டூவில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கிறான். ஆனால் அப்பாவின் பாராட்டுக்காக எவ்வளவு ஏங்கியிருப்பான். பாவம்! எவ்வளவு இளகின மனசு அவனுக்கு? சின்னக் குழந்தை மாதிரி அழுதானே! வெளில மத்தவங்க முன்னாடி கோட்டு சூட்டு டை எல்லாம் போட்டுகிட்டு ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னெஸ் மேனா இருக்கான். ஆனா நெஜத்தில இன்னும் வளராத சின்னக் குழந்தைதான். பாவம் எப்டி அழுதான், என்று நினைத்து மிகவும் வருந்தினாள். அதுவும் அவன் தன் அன்னையின் மடியில் கவிழ்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவதைப் பார்த்ததும் அபிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவன் கண்ணீரைத் துடைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனைத் தன் நெஞ்சோடு அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்த வேண்டும் என்று அவள் மனம் பரபரத்தது. ஆனால் அவன் தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று சொன்னதைக் கேட்டதும் அவளுடைய மனம் பின் வாங்கியது. எதையும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தாள். அவர்கள் பேசி முடித்து அமைதியாகவும் அபியின் தோழிகள் வரவும் சரியாக இருந்தது.
தாயும் மகனும் காரை நோக்கி நடந்தனர்.
தொடரும்....