• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 3

Annapurani

New member
Mar 27, 2025
18
0
3
3.




இரண்டு நாட்களாக கடற்கரையில் பார்த்தவனின் பேச்சினால் மனமெல்லாம் ஒருவித குழப்பமாகவே இருந்தாள் அபி. அவளால் தன் வேலையில் ஈடுபடவே முடியவில்லை. அதே குழப்பத்தோடு வீடு வந்தாள்.

"இந்த பையன் நல்லா படிச்சுட்டு யூஎஸ்ல டாக்டரா இருக்கான். வயசு இருபத்தி ஒம்போது. கைநிறைய சம்பளம். ஒரே பையன். கூட பொறந்தவங்க யாருமில்ல. இங்க நிறைய சொத்து இருக்கு."

"ஓ அப்டியா?"

"இந்த பையன் இந்தியாலதான் இருக்கான். இவன் ஒரு போலீஸ் ஆஃபீசர்! வயசு முப்பது. அந்த பையன் மாதிரியே இவனும் ஒரே பையன். ஏராளமா சொத்து இருக்கு!"

"ம்!"

தரகர் காட்டிய போட்டோக்களையும் அவர் கூறிய விவரங்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் இந்துமதி. அபிநயாவின் அம்மா!

"வா! வா! வா! அபி! பாரு! உனக்கு யாரப் பிடிக்கிதுன்னு பாத்து சொல்லு. நான் காப்பி போட்டுக் கொண்டு வரேன்."

இன்முகத்தோடு வரவேற்று அவளை அங்கேயே அமர வைத்தாள் சாருமதி. அபியின் சித்தி! சொன்னது போல் காபியைப் போட்டுக் கொண்டு வந்து அவளிடம் ஒன்றையும் தன் தமக்கையிடம் ஒன்றையும் தரகரிடம் ஒன்றையும் தந்துவிட்டு தானும் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள்.

அபி அம்மாவின் வார்த்தைக்காக போட்டோக்களை சுவாரசியமே இல்லாமல் பார்த்தாள். ஒவ்வொன்றாக பார்த்து வரும்போது தான் இரண்டு நாட்கள் முன்பு கடற்கரையில் கண்ட தன் கனவு நாயகனின் போட்டோ வந்ததும் மனம் துள்ள அவனைப் பற்றிய விவரங்களை சுவாரசியமில்லமால் கேட்பது போல கேட்டாள்.

"அடடா! இந்த போட்டோவ இந்த லிஸ்ட்லேந்து எடுக்க மறந்துட்டேனே!" என்று கூறியபடி அதை தரகர் அப்புறப்படுத்த முயன்றார்.

"ஏன் அங்கிள்? இவருக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சா?" வேண்டுமென்றே கேட்டாள்.

"அதெல்லாம் இல்லமா! இவருக்கு படிக்காத பொண்ணுதான் வேணுமாம்! உங்களுக்கு சேராதே!"

"ஏன் அங்கிள்? இவரு படிக்காதவரா?"

"அதெல்லாம் இல்லமா! இவரு எஞ்சினியர். எம்டெக் படிச்சவருதான். அதுவும் பிட்ஸ் பிலானியில படிச்சவரு. கோல்ட் மெடலிஸ்ட். அதுக்கப்புறமும் எம் பி ஏ படிச்சி மூழ்கப்போற கம்பெனிய விலைக்கு வாங்கி அத வெற்றிகரமா நடத்திக் காட்டிகிட்டு இருக்கற திறமசாலி. அவங்கம்மாவும் அப்பாவும் காலேஜ் ஃப்ரொஃபஸர்கள்தான்."

"இவ்ளோ படிச்சவங்க ஏன் அங்கிள் படிக்காத பொண்ணு பாக்கறாங்க? அவங்க வீட்ல கூப்ட்டு படிக்க வெக்க போறாங்களா?"

"நல்லா கேட்டமா! அவங்க அப்பாவும் அம்மாவும் அந்தம்மாவோட படிப்பினால பிரிஞ்சுட்டாங்க. அது மாதிரி தானும் பிரிஞ்சுடக் கூடாதுன்னு அந்த தம்பி நெனக்கிறார். அதான்."

ஓஹோ! இதான் மேட்டரா? தப்பாச்சே! எப்பவுமே படிப்பால பிரச்சனை தீருமே ஒழிய வராது என் மக்கு ஹீரோ! என்று செல்லமாகத் திட்டிக் கொண்டாள். அவங்கப்பாவோட ஈகோதான் பிரச்சனைன்னு இவருக்கு சொல்லணுமே! இல்லன்னா என் மண்ட வெடிச்சிடுமே! என்று வேறு நினைத்துக் கொண்டாள் அபி!

அபியும் அவளுடைய குடும்பமும் மதுரையில் வசிக்கிறார்கள்! அவளுக்கு இப்போது சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது! புது வேலையில் சேருவதற்காக சென்னையிலிருக்கும் தன் சித்தி வீட்டுக்கு தன் குடும்பத்துடன் வந்திருக்கிறாள்!

இங்கே சித்தி வீட்டிலிருந்தபடி அபி வேலைக்குப் போக ஏற்பாடு செய்துவிட்டு அவளுடைய பெற்றோர் இன்னும் சில தினங்களில் மதுரை சென்றுவிடுவார்கள்!

வந்த இடத்தில் இந்துவின் தங்கை தன் தமக்கை மகளுக்கு ஏற்றார்ப் போல மாப்பிள்ளை பார்க்கலாம் என்று கல்யாணத் தரகரையும் வரவழைத்துவிட்டாள்! தங்கை நல்ல காரியத்தை தொடங்கி வைக்க, சரி, தன் மகளும் வேலையில் அமர்ந்து விட்டாளே! இனி அடுத்ததாக திருமணம்தானே என்று இந்துவும் தன் தங்கையின் ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டுவிட்டாள்.

சென்னை வந்ததும் முதல் வேலையாக புதிய வேலையில் சேர்வதற்கு முன்பாக தனக்கு முன்னாலேயே சென்னையில் வேலையில் சேர்ந்துள்ள தன் பழைய தோழிகளை தேடிச் சென்று அவர்களுடன் அரட்டை அடிப்பதைத்தான் கடந்த சில நாட்களாக செய்து கொண்டிருந்தாள் அபி! அப்போதுதான் ஹரியைப் பார்த்து தன் மனதை அவனிடம் பறி கொடுத்தாள்!

"ஓ! அப்ப அது வேணாம். நீ வேற பாரு அபிம்மா!" என்றாள் இந்து. தன் தாயின் குரலில் நடப்புக்கு வந்தவள்,

"சரிம்மா!" என்று வாயால் சொன்னாலும் யாரும் அறியாமல் ஹரியின் ஃபோட்டோவுக்கு பின்னால் குறிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை குறித்துக் கொண்டுவிட்டு அந்த ஃபோட்டோவை டேபிளின் மேல் வைத்தாள்!

பிறகு வேறொருவரின் ஃபோட்டோவை கையில் எடுத்து அந்த மாப்பிள்ளையைப் பற்றியும் விவரங்கள் கேட்டுக் கொண்டாள்! இதே போலவே பல மாப்பிள்ளைகளின் ஃபோட்டோக்களைப் பார்த்து விவரங்கள் கேட்டுக் கொண்டாள்.

"ஏன் அங்கிள்! எல்லா ஃபோட்டோ பின்னாலயும் மொபைல் நம்பர் இருக்கே! இதென்ன அந்தந்த மாப்பிள்ளையோட நம்பரா!?"

"நல்லா கேட்ட பாப்பா நீ! மாப்பிள்ள நம்பர குடுப்பாங்களா? அதெல்லாம் அவங்க அப்பா, அம்மா இல்லன்னா அவங்க வீட்டு பெரியவங்க நம்பர்ம்மா!" என்றார் தரகர்!

ஐய! அது எங்களுக்குத் தெரியாதா? போடற வேஷத்த ஒழுங்கா போட வேணாம்! அதுக்குத்தான்யா கேட்டேன்! என் டுபுக்கு! என்று மனதுக்குள் அந்த தரகரை கலாய்த்துவிட்டு வெளியில் சமத்துப் பெண்ணாக அமர்ந்திருந்தாள்.

இனி அடுத்ததாக ஹரியின் ஃபோட்டோவின் பின்னாலிருக்கும் அவனுடைய அம்மாவின், அநேகமாக அது அவங்கம்மா நம்பராதான் இருக்கும், அந்த எண்ணுக்கு அழைத்துப் பேச வேண்டும் என்று நினைத்தாள்.

"என்ன ரகளை இங்க?" என்று கேட்டபடியே தன் முறுக்கு மீசையை இன்னும் கொஞ்சம் முறுக்கியபடி உள்ளே வந்தார் பாண்டியன். அபியின் அப்பா!

தரகர் எழுந்து கைகட்டி நின்று வணக்கம் சொன்னார்.

"எல்லாம் உங்க பொண்ணுக்காகதான்." என்றாள் இந்து.

"சரி! சரி! நான் பாத்துக்கறேன். நீ போய் காபி கொண்டா!" என்று மனைவியை அனுப்பிவிட்டு மகளருகில் அமர்ந்தார்.
தரகரை அமரும்படி கூறினார். தரகரும் அமர்ந்தார்.

"அப்பா! இங்க கேளுங்கப்பா!" என்று தன் அப்பாவிடம் செல்லம் கொஞ்சினாள் மகள்.

"நீ சொல்லுடா!"

மகள் வீட்டில் நடந்ததை கூறினாள்.

பாண்டியன் தரகரிடம், "எல்லாத்தையும் வெச்சுட்டுப் போங்க. மக கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு தகவல் சொல்றேன் என்றார் பாண்டியன்.

"சரிங்க சார்." என்று கூறி கிளம்பினார் தரகர்.

வெளியே போய்விட்டு வந்த அலுப்புதீர குளித்து உடைமாற்றி டிபன் சாப்பிட்டு முடித்தனர்.

அந்த எண்ணுக்கு கால் செய்து சாதாரணமாகப் பேசி, அது ஹரியின் அன்னையின் நம்பர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் அபி!

பின்னர் தன் தந்தையிடம் வந்து தன்னுடைய மனதிலிருப்பதைச் சொல்ல, அவரோ,

"அட என்னம்மா இது? இது சரிப்படாதுமா! உன் வாழ்க்கையோட என்னால விளையாட முடியாதும்மா! இது ரிஸ்க்கு!" என்று மறுத்தார்!

"அப்பா! எதுலதான் ரிஸ்க் இல்ல! இது சாதாரண மேட்டர்! நீங்க எனக்கு ஒத்துழைச்சா போதும்! ப்ளீஸ்ப்பா!"

"ம்ச்! என்னம்மா நீ? அதுக்குன்னு இப்டியா?"


"அப்பா!"

"அப்டி அந்த மாப்பிள்ளைக்கு இத புரிய வெச்சே ஆகணுமா? அவனும் படிச்சவன்தானே?"

"எனக்கு அவர ரொம்ப பிடிச்சி போச்சுப்பா!" என்றாள் தன் மனதை மறைக்காமல்!

"என்னம்மா..... ம்ச்......." என்று சலித்தவர், சிறிது நிமிட யோசனைக்குப்பின்,

"சரி! நா அந்தம்மாவ பாத்து பேசறேன்! ஆனா சரியா வரலன்னா நீ விட்டுடணும்! ஒத்துக்கறியா?"

எதையுமே யோசிக்காமல்,

"ஒத்துக்கறேன்ப்பா! இது சரி வரலன்னா நீங்க என்ன சொன்னாலும் நா கேக்கறேன்!" என்று உறுதி கொடுத்தாள்.

அவரும் தன் மனைவியிடம் இதைக் கூற, முதலில் மறுத்தவள், மகளின் பிடிவாத குணமறிந்து பின்னர் ஒப்புக் கொண்டாள்!

மகளின் ஆசைப்படி ஹரியின் அன்னையை சந்திக்க முடிவு செய்தனர்!



தொடரும்....