5.
அந்த வார இறுதியில் நந்தினி தன் வீட்டுக்கு பாண்டியனையும் இந்துமதியையும் அழைத்தாள்! நந்தினி கொடுத்திருந்த விலாசத்திற்கு இருவரும் வந்தனர். நந்தினியும் அவளுடைய தோழி ஒருவளும் வாய்நிறைய வரவேற்றனர்.
"வாங்க! வாங்க! வாங்க சம்மந்தி! வாங்க இந்து! உள்ள வாங்க!"
இருவருக்கும் பழச்சாறு தந்து இன்முகத்துடன் உபசரித்தாள் நந்தினி.
"இவ என் பெஸ்ட் ஃப்ரண்ட் ஆனந்தி. என் கூட வேல பாக்கறா. என்னோட கஷ்டத்தில எனக்கு தோள் குடுக்கற நல்ல தோழி!"
இருவரும் அந்த தோழிக்கு வணக்கம் தெரிவித்தனர். அவளும் பதிலுக்கு வணக்கம் கூறினாள்.
"உங்களப் பத்தி நந்தினி சொன்னா! ரொம்ப சந்தோஷம். உங்க டாட்டர் அபிநயா! சிம்ப்ளி சூப்பர்ப்! ஹரியோட மனக்கவலை எல்லாம் சீக்கிரமே சரியாய்டும்கிற நம்பிக்கை வந்துடுச்சு! ரொம்ப சந்தோஷம்."
ஆனந்தி பழச்சாறு கொடுத்து உபசரித்தாள்.
சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் ஆனந்தி நந்தினியைப் பார்த்து,
"நந்து! நீ இவங்கள மாடிக்கு கூட்டிட்டுப் போய் பேசிண்டிரு! நான் இங்க சமையலைப் பாத்துக்கறேன்!" என்று கூறிவிட்டு சமையலறைக்குள் போனாள். நந்தினி ஆனந்தியைப் பார்த்து தலையசைத்துவிட்டு, இவர்கள் பக்கம் திரும்பி,
"வாங்க!" என்று இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றாள். இருவரையும் அங்கிருந்த ஹாலில் சோபாவில் அமர வைத்தாள். தானும் அவர்கள் முன் அமர்ந்தாள். ஒரு நிமிடம் கண் மூடி அமைதியாக இருந்தாள்.
"உங்க ரெண்டு பேரையும் என் வீட்டுக்கு கூப்பிட்டதுக்கு முக்கிய காரணம், என்னோட இந்த நிலைமைக்கு என்ன காரணம்னு உங்க கிட்ட சொல்றதுக்குதான்!" என்றாள்.
பாண்டியனும் இந்துமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
"கல்யாணத்துக்கு முன்னாலயே என்னைப்பத்தி உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சி.... ஏன்னா நீங்க பொண்ணப் பெத்தவங்க.... உங்க சொந்தங்கள் உங்ககிட்ட நிறைய கேள்வி கேப்பாங்க... உங்க மனசிலயே பல கேள்வி வரலாம்.... அதான்!" என்று கூறினாள்.
அவள் கண்கள் கலங்குவது இருவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள். பேசப் பேச அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டே இருந்தது.
“நான் என் கல்யாணத்துக்கு முன்னால எம்எஸ்ஸி முடிச்சிருந்தேன். என் கணவர்தான் என்ன மேல படிக்க வெச்சார். எம்எட், எம்ஃபில் பண்ணிட்டு காலேஜ்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். நானும் என் கணவரும் இதே அடையார்லதான் எங்க கல்யாண வாழ்க்கையத் தொடங்கினோம்.
வீட்ல பெரியவங்க பாத்து வெச்சக் கல்யாணம்தான். ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் அவ்ளோ விரும்பினோம். எல்லாரும் காதல் கல்யாணம்னு நெனக்கிற அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ அன்பா, அன்யோன்யமா வாழ்ந்தோம். கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சுதான் எங்களுக்கு ஹரி பிறந்தான். எல்லார் கண்ணும் படும்படி அற்புதமான வாழ்க்கை. அவர் கொஞ்சம் பிடிவாதக்காரர்னாலும் நிறைய விட்டுக் குடுக்கவும் செய்வார்.
ஹரி டென்த் படிக்கும்போது எங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. மூளைல கட்டி. கண்டிப்பா ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா உடம்பு குணமாக அம்பது பர்சன்ட் சான்ஸ்தான் இருக்குன்னும் சொன்னாங்க. அதுக்காக ஆபரேஷன் பண்ணாம விடமுடியுமா? ஆபரேஷனுக்காக ரெண்டு பேருமே லோன் எடுத்தோம். ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சு எங்க மாமியார் உடம்பு ஓரளவு தேறி நடமாட ஆரம்பிச்சாங்க. ஆனா அப்ப திடீர்னு என் கணவருக்கு வேலை போய்டுச்சு. அவர் வீட்ல இருக்க ஆரம்பிச்சார்.
குடும்பம் நடத்தவும் லோன் அடைக்கறதுலயும் கொஞ்சம் ப்ரச்சனை வந்துச்சு. நான்தான் வேலைக்குப் போறேனே. சமாளிக்கலாம் அப்டீன்னு சொன்னதுக்கு நான் வேலைக்குப் போகலன்னு சொல்லிக் காட்டறியான்னு சண்டை போட ஆரம்பிச்சார். வேலைய விடுன்னு மாமியாரும் பிடுங்க ஆரம்பிச்சாங்க. தினமும் இத வெச்சுகிட்டு ஒரே சண்டைதான். இவளப் படிக்க வெக்காதன்னு சொன்னேனே! கேட்டியான்னு எங்க மாமியார் அவர்கிட்ட ஏத்தி விட்டுகிட்டே இருப்பாங்க. இவர் என்கூட சண்டை போட்டுகிட்டே இருப்பார்.
சரி. இன்னும் ஒரே வருஷம் வெய்ட் பண்ணுங்க. லோனும் முடிஞ்சுடும். அதுக்குள்ள உங்களுக்கு வேற வேலையும் கிடைச்சுடும்னு சொன்னேன். சரின்னு ஒத்துகிட்டார். ஒரு வருஷம் ஓடிப்போச்சு. எங்க மாமியார் போய் சேந்துட்டாங்க. ஆனா லோன் இன்னும் முடியல. இவருக்கு வேலை இன்னும் கிடைக்கல. ப்ரச்சனையும் முடியல.
ஒருநாள் எனக்கு வேலை கெடைச்சிருச்சு. நீ வேலைய விட்டுடுன்னு சொன்னாரு. சரின்னு ஒத்துகிட்டேன். மறுநாள் வேலை ராஜினாமா லெட்டர் ரெடி பண்ணி எடுத்துகிட்டு காலேஜுக்கு கிளம்பறப்ப இவர் பொய் சொல்றார்ன்னு தெரிஞ்சுகிட்டேன். ஏம்ப்பா இப்டி பொய் சொல்றீங்கன்னு கேட்டேன். அவ்ளோதான். நீ இல்லன்னா என்னால வாழவே முடியாதுன்னு நெனக்கிறியா? நீ இல்லாம வாழ்ந்து காட்றேன்னு கத்திட்டு பயங்கரமா கோவிச்சுகிட்டு வீட்டவிட்டு போய்ட்டார். எங்க போனார்னே தெரியல. தேடாத இடமில்ல. இன்னிக்கு வரைக்கும் கண்டுபிடிக்கவே முடியல. ஒடைஞ்சே போய்ட்டேன். என்னால தாங்கவே முடியல.
என்ன விட ஹரி ரொம்ப அப்செட் ஆய்ட்டான். சாதாரணமாவே அவன் கொஞ்சம் ரிசர்வ்டு டைப்தான். அதிக நண்பர்கள் கிடையாது. அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னுதான் இருப்பான். வீட்ல எங்க சண்டையப் பாத்து கொஞ்சம் ஒதுங்க ஆரம்பிச்சான். எங்க மாமியார் சொல்றத கேட்டு கேட்டு என் படிப்பாலதான் அப்பா நம்மள விட்டுட்டு போய்ட்டார்ன்னு அவன் மனசில ஆழமா பதிஞ்சிடுச்சு. அப்ப அவன் ப்ளஸ் டூ படிச்சுகிட்டு இருந்தான். நொந்து போய்ட்டான்.
அவன தேத்தறதுக்காக, நீ ப்ளஸ் டூல நல்ல மார்க் வாங்கினா அப்பா நம்ம கிட்ட திரும்ப வருவார்னு சொன்னேன். அது உண்மைன்னு நம்பி அவன் நல்லா படிச்சான். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தான். அவன் ரிசல்ட் வந்ததும் அவர் நிஜமாவே திரும்ப வருவார்னு நானும் நம்பினேன். ஆனா அவர்கிட்டேந்து ஒரு வாழ்த்து செய்தி கூட வரல. அதுக்கப்றம் அவன் நான் சொல்றத செஞ்சானே ஒழிய என்கிட்ட கூட ஒட்டாம தள்ளி நிக்க ஆரம்பிச்சான். என் கூட எங்கியும் வரத அவாய்ட் பண்ண ஆரம்பிச்சான். என் கிட்ட பேசறத நிறுத்தினான்.
எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. வருஷா வருஷம் அவரோட பிறந்த நாளுக்கும் ஹரியோட பிறந்த நாளுக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்ல அபிஷேகத்துக்கு குடுப்பேன். இது ஹரி பிறந்தப்ப ஆரமிச்ச பழக்கம். நிறுத்த மனசில்ல. அவன் பிறந்த நாளுக்கு கோவிலுக்கு அவன் வரமாட்டான். நான் மட்டும்தான் போவேன். ஆனா அவரோட பிறந்த நாள் அன்னிக்கு மட்டும் அவன் என் கூட கோவிலுக்கு வருவான். சாமி தரிசனம் பண்ணிட்டு கொஞ்ச நேரம் மண்ல உக்காந்து பழச நெனச்சு ரெண்டு பேரும் மனசு விட்டு அழுவோம். கிளம்பிடுவோம். இன்னும் எத்தன வருஷம் அழப் போறோமோ தெரியல.
ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் என்னிக்காவது ஒரு நாள் திரும்ப வருவார்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு!” என்று முடித்தாள்.
“சம்மந்தியம்மா! நீங்க தப்பா நெனக்கலன்னா....”
“புரியுது ஸார்! அவருக்கு தப்பான சகவாசம் கண்டிப்பா கிடையாது ஸார்! அவர் அன்னிக்கு என்கிட்ட சண்டை போட்டதே அதுக்குதான். ஒரு பொம்பள துணையில்லாம வாழ்ந்து காட்றேன்டீன்னு கத்திட்டுதான் அவர் வெளிய போனார். அவர் பிடிவாதக்காரர். அவருக்கு எந்த தப்பான சகவாசமும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்!”
“.........”
“ஒரு மனைவியா இது எனக்கு கிடைச்ச வெற்றி அதே நேரத்தில படு தோல்வி! ரெண்டுமே எனக்குதான்!” என்றவள் உடைந்து போய் அழுதாள்.
இந்து நந்தினியை தேற்ற முயன்றாள். பாண்டியன் தர்ம சங்கடமாக உணர்ந்தார். அப்போது மாடிக்கு வந்த ஆனந்தி நந்தினியின் தோளைத் தட்டிக்கொடுத்து, “எல்லாம் சீக்ரம் சரியாய்டும் நந்து! அழாத! சரி! இவங்கள கூட்டிகிட்டு வா! சமையல் ரெடி!” என்று ஆறுதலாய் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டாள்.
நந்தினி கண்ணைத் துடைத்துக் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
ஆனந்தியைக் காட்டி, “இவ மட்டும் இல்லன்னா என்னால இன்னிக்கு நிமிர்ந்து நின்னுருக்கவே முடியாது. இவதான் என்னத் தேத்தி இவ்ளோ தூரம் கொண்டு வந்தது.” என்றாள். இருவரும் ஆனந்தியை மரியாதையாய் வணங்கினர்.
“ஐயோ! என்ன நந்து இது. இவங்ககிட்ட ஒரேடியா என்னப்பத்தி பில்ட்அப் பண்ணிகிட்டு இருக்க. வாங்க ஸார். சாப்பிட வாங்க!!” என்று அழைத்தாள்.
அவர்கள் இருவரும் உணவு உண்ண, நந்தினியும் ஆனந்தியும் பார்த்துப் பார்த்து பரிமாறினர். அதன் பின் பாண்டியனிடம் சம்பிரதாயமாக ஒரு நாள் பெண் பார்க்கவென்று வந்து அன்றே நிச்சயம் செய்து அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குள் திருமணத்தை முடித்துவிடலாம் என்று கூறினாள். அவரும் ஒப்புக் கொண்டார். அதன்படி வரும் வெள்ளியன்று பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
“நான் ஹரி கிட்ட உங்க மகள் ப்ளஸ்டூ ஃபெயிலானவன்னு சொல்றேன்! ஆனா உங்க மக முகத்திலயே படிச்ச களை தாண்டவமாடுது! அவன் ஈஸியா கண்டு பிடிச்சிடுவானே!?” என்று சத்தமாகவே கூறி யோசனை செய்தாள். பின்னர் அவளே ஒரு முடிவுக்கு வந்தவளாய்க் கூறினாள்.
"சரி! இப்போதைக்கு சொல்வோம்! மத்தத அப்றம் பாத்துக்கலாம்!"
“சரிங்க சம்மந்தி!"
“ரொம்ப சந்தோஷம்! வெள்ளிக்கிழமை பாக்கலாம்.” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள்.
தொடரும்.....