7.
வெள்ளிக்கிழமை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என இந்துமதியும் சாருமதியும் வீட்டில் எல்லாம் தயார் செய்ய, அபியோ வேலை நேரம் போக மிச்ச நேரத்திலெல்லாம் சுவாரசியமாய் பழைய கருப்பு வெள்ளை தமிழ்த் திரைப்படங்களின் சிடியை வாங்கி வந்தும் தன் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தும் பார்த்துக் கொண்டிருந்தாள்!
"என்ன அபி இது? ஃப்ரைடே உன்ன பொண்ணு பாக்க வராங்க! நீ என்னடான்னா இப்டி பழைய படத்த பாத்துகிட்டு உக்காந்திருக்கியே!"
"ம்ச்... என்னம்மா.... டிஸ்டப் பண்ணாதீங்கமா...."
"எழுந்திரும்மா.... பார்லர் போய் ஃபேசியல் பண்ணிட்டு வா... அப்பதான் பொண்ணு பாக்க வரச்ச முகம் நல்லா பளிச்சினு இருக்கும்... போ அபி!" சித்தி சாருமதி கூறினாள்!
"ஹ்க்கும்.... வேணாம் சித்தி.... இப்டியே நல்லாதான் இருக்கு.... அது மட்டுமில்ல... அப்பதான் நேச்சுரலா இருக்கும்...."
"என்ன சொல்றாக்கா இவ...."
இந்துமதி ஹரியின் நிபந்தனைகளையும் அபியின் முடிவையும் சொல்ல,
"என்னக்கா இது...."
"சித்தி! ரொம்ப டென்ஷனாகாதீங்க.... ஜஸ்ட் ஒன் மன்த்.... அப்றம் அனைத்து உண்மையும் எல்லாரிடமும் விளம்பப்படும்!"
"எனக்கென்னமோ நீங்க செய்யறது சரீன்னு படல..."
"சித்தி! ரிலாக்ஸ்..... எல்லாம் அவன் செயல்!"
"அவன் செயல் இல்லடீ..... உன் கலாட்டா..." என்றாள் சித்தி!
"ஓ... இஸ்... இட்... தேங்க்யூ...." என்று சிரித்தாள் மகள்!
சாருமதி கலக்கமாய் தன் தமக்கையைப் பார்க்க, இந்துமதி, தன் தங்கையிடம்,
"எல்லாம் சரியா நடக்கும்! நீ ஒண்ணும் கவலப்படாதடீ!"
"ஹூம்... எல்லா வீட்லயும் மகள் பண்ற கலாட்டாவ நெனச்சி அம்மாங்கதான் கவலப்படுவாங்க.... இங்க என்னடான்னா நீயும் மாமாவும் இவ பண்ற கூத்துக்கு ஜால்ரா தட்றீங்க.... நல்ல குடும்பம்டா சாமீ...." என்றபடியே நகர்ந்தாள்!
"மாம்.... சித்தி ரொம்ப டென்ஷனாவறாங்க.... போய் அவங்கள கவனிங்க.... நா இந்தப் படத்த பாக்கணும்...." என்றுவிட்டு படத்தில் மூழ்கினாள்.
"ஆனா எதுக்குடீ இப்படி அரதப் பழசான படங்கள பாத்துகிட்டிருக்க...." என்று இந்துமதி வினவ,
"ச்சும்மா...." என்று கூறி குறும்பாய் சிரித்தாள் மகள்!
மகள் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் இந்து!
புதன்கிழமையும் வியாழக்கிழமையும் வேலை முடிந்து ஷாப்பிங் போகிறேன் என்று விட்டு இரவு நேரம் கழித்தே வீடு வந்தாள் அபி!
வெள்ளியன்று, நீங்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று அம்மாவையும் சித்தியையும் தன் செல்லத் தடையுத்தரவால் தடுத்து நிறுத்திவிட்டு, அழகு நிலையப் பெண்ணை மட்டும் உடனழைத்துக் கொண்டாள்!
"அவங்க வந்து என்ன கூப்பிடும் போது நா வெளிய வரேன்...." என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள் அபி!
இவ என்ன கூத்து பண்ணப் போறாளோ என்று சாருமதி தவிக்க, இன்னிக்கு மாப்ள பையன் ஒரு வழியாகப் போறான் என்று நினைத்தபடி இந்துமதி நகர்ந்தாள்!
பாண்டியனும் தன் மகள் செய்யப் போகும் அட்டகாசத்தால் மாப்பிளைப் பையன் எனக்குத் திருமணமே வேண்டாம் என்று ஓடப்போகிறான் என்றே பயந்தார்! ஆனால், அதையும் தன் மகள் சரி செய்து விடுவாள் என்று துளி நம்பிக்கையும் இருக்கத்தான் செய்தது!
சாருமதிக்கு ஒரே ஒரு பையன்தான்! அவனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறான்! அவள் கணவனும் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார்! அதனால் அபியைத் தொந்திரவு செய்ய அந்த வீட்டில் யாருமில்லை!
எதிர்பார்ப்பு கொஞ்சம் படபடப்பு கொஞ்சம் மகிழ்ச்சி நிறைய என்று ஏதோ ஒரு குழம்பிய மனநிலையில் அபியை பெண் பார்க்க வந்தான் ஹரி!
சம்பிரதாயமான வரவேற்புகள் முடிந்ததும் பெண்ணை அழைத்து வரச் சொன்னாள் நந்தினி!
இந்துமதியும் சாருமதியும் சென்று அபியின் அறைக் கதவைத் தட்ட, கதவைத் திறந்தவளைக் கண்டு இருவரும் திகைத்தனர்!
"அக்கா! என்னக்கா இது?!" என்று அழுதுவிடுபவள் போலக் கேட்ட சாருமதியைப் பார்த்து சிரித்தாள் அபி!
"சித்தி.... நோ வொரீஸ்....." என்று கூறிய அபி,
"என்னமா? எல்லாம் ஓகேயா?"
"பெர்ஃபக்ட்! ஆனா நீ இங்க்லீஷ் நிறைய யூஸ் பண்றமா!!" என்று எச்சரித்தாள்!
"நா பாத்துக்கறேம்மா!" என்று கூறி குறும்பாய் கண்ணடித்தபடியே அன்ன நடை போட்டு நடக்கத் தொடங்கினாள் அபிநயா! இந்துமதி மகளின் கையைப் பிடித்துக் கொள்ள, தன் தலையில் அடித்துக் கொண்டபடியே சாருமதி அவர்களைப் பின் தொடர்ந்தாள்!
தலை குனிந்து அன்னநடை போட்டு மெதுவாய் வந்த அபியைப் பார்த்ததும் நந்தினிக்கு பொத்துக் கொண்டு சிரிப்பு வந்தது! மிகவும் சிரமப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்!
ப்பா! இந்த பொண்ணு ஜகஜ்ஜால கில்லாடிதான்! செத்தாண்டா சேகரு! டேய் ஹரி! நீ காலிடா! என்று தன் மனதில் நினைத்துக் கொண்டாள்! தன் மகனைத் திரும்பிப் பார்த்தாள்! அவனோ அபியை பார்த்து திகைத்தானா அல்லது அதிர்ந்தானா என்று புரியாமல் ஒரு தினுசில் முகத்தை வைத்திருந்தான்!
"மாப்ள! இவ தான் என் பொண்ணு! அபிநயா!" என்று பாண்டியன் அபியை ஹரிக்கு அறிமுகம் செய்ய, அவர் கூறியது எதுவும் அவன் காதில் விழவேயில்லை!
அவளை தலை முதல் கால் வரை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தான்!
அபிநயா பக்கா கிராமத்துப் பெண்ணாக மாறியிருந்தாள்! கண்டாங்கிச் சேலை கட்டியிருந்தாள்! தலையில் எண்ணையை தொடாமல் எண்ணையைக் கொட்டி படிய வாரி நேர் வகிடு எடுத்து பின்னலிட்டிருந்தாள்! அந்தப் பின்னலின் நுனியில் சிவப்பு ரிப்பன் வைத்து கட்டிய குஞ்சலம் வேறு! பின்னலுக்கு மேல் நிறைய கனகாம்பரமும் மல்லியும் தவணமும் வைத்துக் கட்டியிருந்த கதம்ப மலர்ச்சரத்தைச் சூடியிருந்தாள்! நெற்றியில் ஐம்பது பைசா நாணயம் அளவுக்கு பெரிய குங்குமப் பொட்டு இட்டிருந்தாள்! அதற்கு சற்று மேலே சிறிய விபூதிக் கீற்று! கட்டியிருப்பதோ நீல நிறப் பட்டுப்புடவை! அதே நிறத்தில் ரவிக்கை! ஆனால் அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத விதமாய் கைகளில் பச்சையும் சிவப்புமாய் கண்ணாடி வளையல்கள் குலுங்கியது! கழுத்தில் காசு மாலையும் ரெட்டைவடம் சங்கிலியும் மினுமினுத்தது! காலில் பட்டைக் கொலுசு! கொலுசு முழுதும் சலங்கை! அவள் நடந்து வர, அவளுடைய ஒவ்வொரு அடிக்கும் ஜல் ஜல் என்று கொலுசின் ஒலி வீடு முழுதும் நிறைந்தது! அவளுடைய அம்மா சாதாரணமாக சேலை கட்டியிருக்க இவளோ பழைய பாட்டி போல சேலை கட்டியிருப்பதைப் பார்த்தவனுக்கு மனதில் குழப்பம் வந்தது!
என்ன இது? அன்னிக்கு ஹோட்டல்ல மாடனா ட்ரஸ் பண்ணியிருந்தா! இப்ப என்னடான்னா, இப்டி இருக்கா? என்று மனதில் நினைத்துக் கொண்டான்!
"ஹரி! என்னடா இப்டி பாக்கற?" என்று கிசுகிசுப்பாகத் தன் மகனின் கையைத் தட்டினாள் நந்தினி!
"ம்.... ம்மா.... இவ....." அதற்கு மேல் பேசத் தெரியாமல் திணறினான்!
"இவ..." என்று எடுத்துக் கொடுத்தாள் நந்தினி!
"இவ ஏம்மா இப்டி இருக்கா..."
"என்ன உளர்ற...." மகனை அதட்டினாள்!
"சாரி... ஐ மீன்.... ஏன் இப்டி ட்ரஸ் பண்ணிருக்கா...."
"நானும் உன் கூடதானே வந்திருக்கேன்! இரு விசாரிக்கலாம்!" என்று மகனிடம் கிசுகிசுத்துவிட்டு,
"ம்.... வந்து.... ஏன் பொண்ணு கிரமாத்து பாட்டி மாதிரி கண்டாங்கி சேல கட்டியிருக்கு?" என்று கேட்டாள்.
"இது என்ன இப்டி கேட்டு போட்டீங்க.... எங்கூருல இப்டிதான் எங்க அப்பத்தா கட்டும்.... பொண்ணு பாக்க வாரவக முன்னால... இப்டிதான் நிக்கோணும்னு எங்க அப்பத்தா சொல்லிருக்காங்க...." என்று இழுத்துக் கூறி சிரித்தாள் அபி!
நந்தினி எதையோ கேட்கத் தொடங்க, அவளை முந்திக் கொண்டு அபி பேசினாள்!
"இங்கன பாருங்க... நா என்னிய பத்தி முச்சூடும் முன்னாலயே சொல்லி போடறேன்.... நா ஆறாங் க்ளாஸ் பெயிலு.... எனுக்கு இங்கிலீசு வராது.... கிராமத்தில எங்கப்பத்தா கிட்டதேன் வளந்தேன்... அதனால சோறாக்குவேன்... வீட்டு வேல செய்வேன்... வேற எதும் செய்யோணுமின்னா... சொல்லித் தந்தா கேட்டுக்குவேன்....." என்று கொஞ்சும் குரலில் அதைவிட தில்லானா மோகனாம்பாள் மனோரமா ஆச்சி போல கொஞ்சும் மதுரைத் தமிழில் அவள் படபடவென பட்டாசாய் பேசியதைக் கேட்ட ஹரி திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்!
"என்னது.... ஆறாங்க்ளாஸ் ஃபெயிலா.... ம்மா.... இவ... ப்ளஸ் டூன்னு சொன்னீங்களேம்மா...."
நந்தினி இதை எப்படி சமாளிப்பது என்று யோசிப்பதற்குள் அபியே பேசினாள்!
"அதுங்களா.... எங்கப்பாருதேன்... பொண்ணு ஆறாப்புதேன் படிச்சேன்னு சொல்லிகிட சங்கடப்பட்டுகிட்டு ப்ளோஸ் டூன்னு பொய் சொல்லி போட்டாரு..."
"ப்ளோஸ் டூவா... அப்டீன்னா...."
"ப்ளோஸ் டூ தெரியாது.... அதாங்க... பண்ணண்டாங் க்ளாஸ்...."
கடவுளே... ப்ளஸ் டூ வையா இப்டி கொல பண்ணிருக்கா.... இவ வாயால இன்னும் எத எத கொல பண்ணப் போறாளோ... என்று நினைத்துக் கொண்டான் ஹரி! அவள் இன்னும் பேசிக் கொண்டிருந்தாள்! ஆனால் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை!
"ஓ... ஆனா... உங்கள... ஒரு ஸ்டார் ஹோட்டல்ல பாத்தேனே... அன்னிக்கு வேற மாதிரி ட்ரஸ் பண்ணியிருந்தீங்களே...." அவளுடைய பேச்சில் குறுக்கிட்டு கேட்டே விட்டான்!
"நீங்க என்னிய பாத்தீங்களா? நா போட்டிருந்த உடுப்பு நல்லாயிருந்துச்சுங்களா... எங்க கூட்டாளி ரெண்டு பேரு... இங்கனதேன்... குடி வந்திருக்காவ..... அவளுகதேன்..... எனுக்கு... கொளா மாட்டி வுட்டு கூட்டிட்டு போனாளுவ....." என்று ஆரம்பித்து அன்று நடந்ததை மதுரைத் தமிழில் இவள் விளக்கோ விளக்கு என்று விளக்க, ஹரிக்கு வியர்த்து வழிந்தது! எச்சில் முழுங்கிக் கொண்டான்! கடவுளே! தேவதைன்னு சொன்னேன்! தேவதையாதான் இருக்கா! ஆனா இவ வாயக் கொஞ்சம் மூடினா நல்லாயிருக்கும்! என்று நினைத்துக் கொண்டான்!
"என்னடா ஓகேவா?"
"ம்மாம்... ஓகேதான்... ஆனா..."
"ஹேய்! நீ படிக்காதவதான் வேணும்னு சொன்னல்ல.... அப்றம் என்ன?"
"சொன்னேன்..... வந்து... இவ ஏம்மா... இப்டி வளவளன்னு...." இழுத்தான்!
"என்னடா இழுக்கற? வளவளன்னு பேசறாளா? மனசில வன்மம் இல்லாம இருக்காடா?"
"அது சரிதான்! ஆனா..."
"அன்னிக்கு ஃபோட்டோ பாத்து தேவதைன்னு புகழ்ந்த... இப்ப என்ன வந்திச்சு.. உன் தேவதைக்கு...."
"இவ இப்டி ஒரேடியா.... கிராமத்து தமிழ்ல... இவ பேசறது பாதி கூட புரியல மாம்!"
"டேய்! நீ கேட்ட மாதிரி படிக்காத பொண்ணு கிடைச்சிருக்கா! அது மட்டுமில்ல! கிராமத்து பொண்ணுக்குதான் பாசம்லாம் நிறைய இருக்குமாம்!" என்றாள்!
சரியாக எதைச் சொன்னால் மகன் மறுக்க மாட்டானோ அதைச் சொன்னதும் மகன் அமைதியாகிவிட்டான்!
அம்மா சொல்வதும் சரிதான்! இவள் படிக்காதவள்! அதனால் என்னை விட்டுப் பிரியும் எண்ணம் இவளுக்கு வரவே வராது என்று நினைத்துக் கொண்டான்!
ஆனால் படிக்காத மனைவியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப் போகிறோம் என்பது தெரிந்திருந்தால் இவன் இப்படி ஒரு பெண்ணைத் தேடியிருக்கவே மாட்டான்!
தொடரும்.....