• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 11

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
51
184
53
Chennai
குறுநகை போதுமடி! 11


நீத்தார் கடன் முழுவதுமாக முடியும் வரை காவேரி அங்கிருக்க, கர்ம காரியங்களுக்கு வருதாகச் சொல்லி, மறுநாள் காலை சாரநாதன் தாய், மனைவி மற்றும் மகளுடன் ஊர் திரும்பி இருந்தான்.

கபிலனும் சியாமளாவும் ஒரே வீட்டில் இருந்ததற்கு வருத்தப்பட்டு, விசனப்பட்டு, வம்பின் பால் ஈர்க்கப்பட்ட ஊரார், சாரநாதனிடமும் செண்பாவிடமும் நேராகவும் மறைமுகமாகவும் விசாரித்தனர்.

அதிலும் “ஏன்த்தா, எந்நேரமானா என்ன, ஆத்திரம் அவசரத்துக்கு ஒதவாத அக்கம்பக்கம் என்னத்துக்குங்கறேன்? ஒரு கொரல்… என்னையோ உங்கண்ணனையோ கூப்பிட்டாக்கா ஒத்த கொரல்ல ஓடி வந்துறப் போறோம்” என்ற
பிரகதாவின் குரலில் வழிந்த விஷமம்!

சாரநாதன் தவறு செய்துவிட்டோமோ என்ற சஞ்சலத்தோடு சியாமளாவைக் கவனிக்க, அவள் குந்தவையோடு எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

*********************

அந்த வார இறுதியில் கபிலன் மதுரைக்குச் சென்றுவிட, சியாமளா மாலைத் தேநீர் சமயத்தில் நலம் மருத்துவமனைக்கு வந்திருந்தாள். புதிதாக வந்திருந்தவர்களை விசாரித்தாள்.

முட்டி வலி மற்றும் எடை குறைப்பு சிகிச்சைக்கென வந்திருந்த, நாற்பதை நெருங்கும் பிரபலமான பின்னணிப் பாடகி “எனக்கு பர்ஸனலா டயட் சார்ட் வேணும். ஆனா, உபயோகமா, கைவிடாம, தொடர்ந்து செய்யற மாதிரி இருக்கணும். பிகாஸ், நிறைய பேர் கிட்ட கன்ஸல்ட் பண்ணி டயட் பண்ணத் தொடங்கி ஒரு வாரம் பத்து நாள்லயே, ட்ராவலோ, ஏதாவது விசேஷமோ ஒன்னும் இல்லைன்னா, சீட் டே (Cheat day)ன்ற பேர்ல நிறுத்திடுவேன்” என்றாள்.

சிரித்த சியாமளா “ஷ்யூர் மேம். நான் ஃப்ரீதான். இப்பவே பேசலாம்”

அவள் தங்கி இருந்த குடிலுக்கே சென்று விரிவான உரையாடலுக்குப் பின், சில யோசனைகளும் அவளுக்கேற்ற உணவுப் பட்டியலும் தந்துவிட்டு வெளியில் வர, கிரிதரன் நின்றிருந்தான்.

“என்ன ஸார், இந்த நேரத்துல இங்க.. இன்னிக்கு உங்க ட்யூட்டியா?”

“ம்.. உங்களைப் பார்க்கதான்”

“என்னையோ, எதுக்காக்கும்?”

“ப்ளீஸ் சியாமளா”

கிரிதரனுடன் சில அடிகள் இணைந்து நடந்த சியாமளா மருத்துவமனையின் முன் கட்டிடத்திற்குப் பக்கவாட்டில் இருந்த பெரிய நாவல் மரத்தின் கீழ் நின்றாள். அங்கு நின்றால் வாயில், குடில்கள், உணவுக்கூடம், என எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

அந்நேத்தில் பெரிதாக நடமாட்டம் இல்லையெனினும், ட்யூட்டியில் இருக்கும் அனுபமா, செவிலியர் மற்றும் உதவியாளர்கள் தவறாது பார்வையில் படும்படியான இடம். அவள் அங்கு நின்ற காரணமும் அதுவே.

சியாமளா “சொல்லுங்க ஸார்”

கிரிதரன் தயக்கத்துடன் ‘இந்த இடத்திலா?’ என்பது போல் சுற்றும் முற்றும் பார்த்தான். இப்போது விட்டால், இதுபோல் கபிலன் ஊரில் இல்லாது, அதிக வேலையோ, பரபரப்போ இல்லாது, ஆள் நடமாட்டம் அதிகமின்றி, சியாமளாவுடன் தனித்துப் பேசும் சந்தர்ப்பம் மீண்டும் அமையுமோ, அமையாதோ?

காஸ்மெடிக் தொழிற்சாலை முழுவீச்சில் இயங்கத் தொடங்கியதில் இருந்து சியாமளா இங்கு வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும், ஒரு ஹாயோடு சரி. ஏதேனும் மீட்டிங் எனில் எல்லோரும் இருக்கின்றனர். மற்றபடி இங்கு வருபவள் அவளது அலுவலைப் பார்த்துவிட்டுத் தேவையெனில் நேரே கபிலனிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிடுகிறாள்.

பொறுமை குறைந்த சியாமளா கால் மாற்றி நிற்க, கிரிதரன் தொண்டையைச் செருமி, உருப்போட்ட தோரணையில் வார்த்தைகளைக் கோர்த்தான்.

செவிகளை அவனிடம் ஈந்தவளின் பார்வை வட்டத்தில் மருத்துவமனையின் அலுவலக அறையிலிருந்து வராந்தாவிற்கு வந்து எட்டி எட்டிப் பார்த்துவிட்டுச் சென்ற கணேஷ் விழுந்தான்.

சில நிமிடங்களில் வாயிலில் சாரநாதனின் ஃபார்ச்சூனர் வந்து நிற்க, சியாமளா “அங்கிள் வந்தாச்சு. பை ஸார்” என விடைபெற்றவள், காரில் ஏறி செண்பா, குந்தவையுடன் ஷாப்பிங் செய்ய திண்டுக்கல்லுக்குச் சென்றாள்.

********************

நாலைந்து நாள்களாக சற்றே வேகம் குறைந்து தூறலும் சாரலுமாக இருந்த வானிலை மாறி, திங்களன்று விடிகாலை மூணரை நாலு மணி முதலே இடி, மின்னலுடன் சீராக மழை பெய்யத் தொடங்கி இருந்தது.

சீக்கிரமே எழுந்து தயாராகி, பாலை எடுத்துச் செல்ல வந்த சியாமளாவை, செண்பா “காலைக்கு பூரி கிழங்கு செய்யப்போறேன். மதியம் மிளகு குழம்பு, புடலங்காய் கூட்டு, வாழைப்பூ துவட்டல்தான். நீயும் இங்கேயே சாப்பிடுத்தா” என்றதில், எந்த வேலையும் இல்லாது போக, தோட்டத்திற்குக் கிளம்பிய சாரநாதனுடன் ஒன்பது மணிக்கே காஸ்மெடிக் ஃபேக்டரிக்கு வந்து விட்டாள்.

நலம் காஸ்மெடிக் தொழிற்சாலையின் முன் கூடம் இப்போது பக்காவான அலுவலகமாக இருந்தாலும், பித்தளைச் சங்கிலியும் பூண்களும் போட்ட தேக்குமர ஊஞ்சல், அழுத்தமான செப்பு, வெங்கல மற்றும் மாக்கல் பாத்திரங்கள், உருளிகள், முகவாயுடன் கூடிய எண்ணெய்க் கிண்ணங்கள் என பாரதத்தின் பாரம்பர்யத்தையும் ஆயுர்வேதத்தின் தொன்மையையும் அழகியலையும் வெளிப்படுத்தும் பின்னணியில் இவர்களது அழகு சாதனங்களின் போஸ்டர்கள், தயாரிப்புக் காணொலிகள் ஓடும் பெரியதொரு LED திரை, இவற்றின் பயன்பாட்டுச் சாதனங்கள் என நவீனமாகவும் இருந்தது.

மிகுத்துப் பெய்த மழையில் மணி பத்தரையைத் தாண்டியும் மொத்தமே மூன்று பேர்தான் வேலைக்கு வந்திருக்க, இயந்திரங்களைத் துடைத்து சுத்தம் செய்யப் பணித்தவள், கணினியில், தன் அடுத்த இலக்கான, பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எண்ணெய், பொடி, க்ரீம் வகைகளைத் தயாரிப்பதற்கான ஆய்வுத் தரவுகளை சேகரித்து, ஆராய்ந்து எழுதும் வேலையைத் தொடர்ந்தாள்.

பகலிலும் சூழ்ந்திருந்த இருளில், விளம்பரப் போஸ்டர் ஒன்றின் கீழே ஒளிர்ந்த அமர்த்தலான ஒரு விளக்கைத் தவிர, கணினித் திரையின் வெளிச்சம் மட்டுமே.

சற்றே குட்டையான நிலைப்படியுடன் கூடிய கிராமத்து வாசலை அடைத்து நின்று காவலித்தது மழை.

வேலையில் ஆழ்ந்திருந்த சியாமளா, வாயிலில் நிழல் தண்டுவதை உணர்ந்து நிமிர, முடி, முகம், உடை எங்கும் தண்ணீர்த் துளிகள் தெளித்திருக்க, அழுத்தமான காலடிகளோடு உள்ளே வந்த கபிலன், எதிரே இருந்த நாற்காலியை சத்தமாக இழுத்து அமர்ந்து, எழுந்து நின்றவளை உட்கரச்சொல்லி கை அமர்த்தினான்.

மூன்று நாட்களுக்குப் பின் அவனைப் பார்த்ததில் முகம் மலர்ந்த சியாமளா,

“எப்பவாக்கும் வந்தேள், வழியெல்லாம் மழையோ?”

“...”

“ஹாஸ்பிடல் போய்ட்டா வரேள்?”

“...”

சியாமளா மேலும் எதையோ கேட்க வர, தடுத்த கபிலன்,

“ஃபேக்டரில யாரும் இருந்தா கூப்பிட்டு வீட்டுக்கு போகச் சொல்லு”

“இல்ல, மெஷினெல்லாம் க்ளீன் பண்ண சொல்…”

“ஆஸ்க் தெம் டு கெட் லாஸ்ட்”

“ப்ச்.. ஏன்?” என்றபடி அங்கிருந்த
திவ்யலக்ஷ்மியின் மொபைலுக்கு அழைத்த சியாமளா “வீட்டுக்குக் கிளம்புங்கம்மா, நாளைக்குப் பாத்துக்கலாம். டெலிவரி வேன்ல போயிடுங்க. டிரைவர்ட்ட சொல்லி இருக்கேன்”

சியாமளா சைட் கேட் கதவு வழியாகக் குடைகளுடன் மழையில் வெளியேறிய மூவரையும் பின் கதவருகே நின்று வேடிக்கை பார்த்தாள்.

இத்தனை பெரிய தோட்டத்தின் ஒரு பகுதியில் கணிசமான பரப்பில் இருந்த ஃபேக்டரியில் இப்போது இருவர் மட்டும்.

‘அன்னிக்கும் மழ, இன்னிக்கும் மழ, இல்ல?’

‘மது போல பெய்த மழையே
மனசாகே அழகாய் நனையே
இணையாய ஷலபம் போலே
இணையாய ஷலபம் போலே
நீயும் ஞானும்…’

சியாமளாவின் மனதில் கபிலனும் அவளும் ஜோடிப் பட்டாம்பூச்சிகளாய் தேன்மழையில் நனைந்து இழைய, கபிலன் குறுக்கே பாய்ந்தான்.

“கிரிதரன் என்ன சொன்னான்?”

ஆழ்ந்து, அமைதியாக ஒலித்த கபிலனின் கேள்வியில், ,சூழலின் மோனத்தில் திளைத்திருந்தவளின் இதம் தொலைந்து விட, சியாமளா தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“ஏன், கணேஷைக் கேட்டிருக்கலாமே?”

முன் தினமே இது குறித்து அம்மா மாளவிகாவுடன் கடும் வாக்குவாதம் நடந்திருக்க, சியாமளாவின் கேள்வியில் மேலும் முகம் இறுகியவன்,

“யாரை என்ன கேட்கணும்னு எனக்குத் தெரியும்”

“சரி, கிரிதரனையே கேக்கறது?”

“நீ நேராவே பதில் சொல்ல மாட்டியா?”

“நீங்க நேராவே கேள்வி கேட்க மாட்டேளா?”

“...”

சியாமளா கணினியில் தன் வேலையைத் தொடர்வதை சில நீண்ட நிமிடங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்தவன், ஒரு வேகத்துடன் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழ, சியாமளா
தணிந்தாள்.

“அட, உக்காருங்கோ பாஸ்! இப்ப என்ன, கிரிதரன் என்ன சொன்னார்னு உங்களுக்குத் தெரியணும், அவ்ளோதானே?”

“...”

“அவருக்கு இருபத்தி ஒம்போது வயசாம். ஒரே பையனாம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் காலேஜ் ப்ரொஃபஸராம். எல்லாமே இவர் இஷ்டம்தானாம். எம்.டி படிச்சும் ஒரு லட்சியத்துக்காக பொள்ளாச்சிய விட்டு இந்தக் கிராமத்துக்கு வந்து சேவை செய்யறாராம்…”

“...”

“என்னை ரொம்பப் பிடிச்சிருக்காம். நான் அழகா இருக்கேனாம், என் புத்திசாலித்தனம், முடிவெடுக்கற வேகம், எல்லார் கூடவும் சகஜமா சிரிச்சுப் பேசற…”

“தேர் யூ ஆர். நீ சகஜமா பேசறதாலதான் அவன் உன் பேரைச் சொல்றதும் உங்கிட்ட இப்டி கடலை வறுக்கறதுமா இருக்கான்…”

“வாட் ரப்பிஷ்! சரி, கடலை வறுக்கறது மீன்ஸ்?”

“ம்… ஃப்ளர்ட் பண்றது. ஏன், அந்தப் பய செய்யறது எதுவும் உனக்குத் தெரியாதா?”

“...”

“உன் கிட்ட மனசுவிட்டுப் பேசிட்டானாம், நான் உங்க அப்பா கிட்ட பேசி, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு அவனோட காதலை வாழ வைக்கணுமாம்”

“அடப்பாவி!”

“நீ அப்பாவி பாரு”

Out of the blue என்று சொல்வதைப் போல எதிர்பாராத நேரத்தில் வந்து நின்ற கபிலன், எதிர்பார்க்காத விஷயத்தை, சற்றும் எதிர்பாராத விதத்தில் பேசியதில் முதலில் திகைத்து விழித்த சியாமளா, சட்டென சுதாரித்துத் தன் இயல்புக்கு மீண்டாள்.

‘அடடா, என் ஹீரோ பொறாமைல பொசுங்கறதைப் பார்க்கவே சும்மா ச்சில்லுனு இருக்கே!’

“‘இப்ப என்ன, அதான் அவரே எல்லாத்தையும் சொல்லிட்டாரே?”

“பெரிய்ய்ய்ய அவர். இது ஒரு சின்ன கிராமத்து ஹாஸ்பிடல்…”

“ஸோ?”

“கேர்ஃபுலா இருன்னு சொல்ல வந்தேன். ஏதாவது பிரச்சனைன்னா உங்கப்பா என் சட்டையைத்தான் புடிப்பார்”

“அப்போ, நாம ரெண்டு பேரும் ரெண்டு நாள் ஒரே வீட்ல தனியா இருந்ததுல, சிறுமலையே செதஞ்சுக் கிடக்காமே, அதுக்கு யார் சட்டையைப் புடிப்பார்?”

“...”

“இப்ப கூடத் தனியாத்தான் இருக்கோம்”

“...”

“கம் டு த பாயின்ட் மிஸ்டர் கால்பந்து கபிலன்”

“ம்ப்ச்… அதுவும் இதுவும் ஒண்ணா?”

“அப்போ அது ஸ்பெஷலா கபீஷ்?”

“கடவுளே.. நான் என்ன சொல்றேன், நீ…
என்ன பேசற…?

“சியாமளா… எங்க, சொல்லுங்கோ, சி..யா..ம..ளா?”

“ஏய்ய்ய்…!”

கபிலன் ஆத்திரம் மீதூற, மேஜையில் ஓங்கிக் குத்தினான்.

சியாமளா எழுந்து கபிலனின் அருகில் வந்து நின்று, மழை நேரம் என்பதால் கையோடு ஃப்ளாஸ்க்கில் கொண்டு வந்த காஃபியை ஒரு கப்பில் ஊற்றி அவனெதிரே வைத்தாள்.

“ரிலாக்ஸ்… குடிங்கோ”

நிமிர்ந்தவனின் கண்ணெல்லாம் சிவந்திருக்க, “ஏன், கைல குடுக்க மாட்டியோ?”

கோப்பையை எடுத்து அவன் கையில் கொடுத்தவள், அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள்.

சியாமளாவிற்கு கபிலன் எதற்காகவோ உள்ளுக்குள் அலைப்புறுவது தெரிந்தது.

‘இப்ப என்ன புதுசா?’

கபிலனின் இடத்தில் நின்று வாழ்க்கையைக் கற்பனை செய்வதே கடினமாக இருக்கையில், வருடக் கணக்கிலான அவனது உணர்வுப் போராட்டங்களைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதா என்ன?

சியாமளாவிற்கு கபிலனின் சிறு வயது குறித்து எதுவும் தெரியாது. இங்கு வந்த பின் அவனைப் பார்த்து, கேட்டு, புரிந்து கொண்ட வரை, பெற்றோர்களின் இரண்டு குடும்பங்களையும் அவரவர்களின் வழமை மாறாது, மாற்றாது, அங்கங்கே, அவ்வப்போது, அவரவருக்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுத்து வந்திருக்கிறான் என்று அனுமானித்தாள்.

இப்போது முதிர்ச்சி வந்த பிறகு வேண்டுமானால் இது சாத்தியம். சிறுவயதில்?

தன் மீது அன்பும் அக்கறையும் கொண்ட பெற்றோர் எதற்காகப் பிரிந்தனர் என்பதே புரியாத நிலையில், தன் நினைவு தெரிந்து அவர்களது திருமணத்தை ஏற்பது சுலபமில்லையே?

பெற்றோர்கள் இருவரும் நிலமையைப் புரிய வைக்கிறேன் என்ற பெயரில், மகனிடம் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். எக்காலத்திலும் போரும் புரட்சியும் குழந்தைகளுக்கானது அல்ல என்பதே நிதர்சனம்.

அது சரி, அவரவரது நியாயம், சூழல், அவரவரது வாழ்க்கை. ஒரு தாயாக குழந்தையை முன்னிறுத்தவில்லை என்று குற்றம் சொன்னால், பெண்களின் மறுமணமே தவறு என்ற பழமை வாதம்தான் மிஞ்சும்.

‘பாவம், என் கபீஷ் எத்தனை அழுத்தத்தை, ஏமாற்றத்தை, ஏக்கத்தை அனுபவிச்சானோ?’

ஸ்டீல் கோப்பையின்
‘டொக்’ கில் சியாமளா தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தபோது எழுந்து நின்றிருந்த கபிலன் முற்றிலும் இயல்பாகி இருந்தான்.

அது புரியாத சியாமளா

“என்னாச்சு, ஏதாவது பிரச்சனையா கபீஷ்?”

“யாருக்கு?”

“...”

“ம்…ஹா… ன்…”

கையை அவள் முகத்தருகே நீட்டி ஆட்டியவன் “ஹலோ மேடம், அந்த ஓரமா படுத்து கனவு காணுங்க”

“...”

கபிலன் இன்று அவன் சுபாவத்தை மீறித் தன்னை வெளிப்படுத்தியதன் பெருமை கிரிதரனையே சாரும். இனி அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூடப் பெயராது எனப் புரிந்தது.

புலம்பினால் செவி மடுக்கலாம். கலங்கினால் ஆறுதல் தரலாம். கடமம் போல் தனக்குள்ளே ஒடுங்கி, இறுகி நிற்பவனை என்ன செய்ய?

“நான் வரேன்” என்ற கபிலன், உள்பக்கத் திண்ணைத் தூணில் சாய்ந்தபடி சற்று நேரம் மழையை வேடிக்கை பார்த்தான்.

மழை நிற்கும் அறிகுறியே இல்லை எனும்போது, இங்கு தனியே அமர்ந்து என்ன செய்வது. பசிக்க வேறு செய்தது.
‘பேசாம இவனோட வீட்டுக்கே போயிடலாமா?’ என்று இங்கி பிங்கி பாங்கி போட்ட
சியாமளாவிடம் திரும்பிய கபிலன் “இங்க வா” என தலையசைத்தான்.

********************

சாரநாதன், செண்பா, குந்தவை மூவரும் கர்ம காரியங்களுக்குச் சென்றிருக்க, நீலவேணி இங்கேதான் இருந்தார். செழியனும் வள்ளியும் துணைக்கு இருக்க, கபிலன் தினமும் வந்து பார்த்துச் சென்றான்.

இரவு எட்டுமணி. கார்த்திகை மாதத்து மழை, மலைக்குளிர், முன்பனி என சில்லிட்டுக் கிடந்தது சிறுமலை. வெறுமே மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு கபிலன் உள்ளே வந்தான்.

சாமி பிறையருகே குளிருக்கு இதமாகக் கம்பளிக்குள் சுருண்டு சுவரில் சாய்ந்திருந்த நீலவேணி, “அப்பத்தா” என்ற விளிப்புடன் வந்த பேரனைக் கண்டதும் புதுத் தெம்புடன்
“வா ராசா” என நிமிர்ந்து உட்கார்ந்தார். கபிலன் எதிரே முற்றத்துத் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

இன்று லோட் ஏற்றும் வேலை தாமதமானதில் செழியன் இன்னும் தோட்டத்தில்தான் இருக்கிறான் என்று கபிலனுக்குத் தெரியும். சமையலறையில் இருந்து கடாயில் கரண்டி படும் ஓசையும், மசாலா வாசனையும் வந்தது.

“என்ன அப்பத்தா , தனியா உக்காந்திருக்க, எல்லாரும் எங்க?”

கேள்வி கேட்ட கபிலனின் பார்வையோடு சேர்ந்து (சோர்ந்து?) மனமும் சலித்தது. பின்னே?

சியாமளாவுடன் அன்று ஃபேக்டரியில் பேசியதுதான். அதன்பிறகு மோதிக்கொள்ளும் தொலைவில் பார்த்தால் கூட கண்டு கொள்ளாமல் போகிறாள். இதோ, இந்த இரண்டரை நாள்களில் செழியனும் வள்ளியும் வீட்டில் இருந்தும் அப்பத்தாவைப் பார்க்கும் சாக்கில் இதோடு எட்டு, பத்து முறையாவது வந்திருப்பான்.

ஹாஸ்பிடலில், அலுவலகத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்பவள், வீட்டுக்கு வந்தால் கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டுகிறாள்.

‘பெரிய்ய மேதாவியாட்டம் நீ பேசின பேச்சுக்கு, அவ இன்னும் இந்த வீட்ல இருக்கறதே அதிகம்டா!’

சமையலறையை நோக்கி
“ஏத்தா, அப்புக்கு குடிக்க ஏதாச்சும் சூடா கொண்டா” என்ற நீலவேணி, கபிலனிடம்

"ஆசுபத்திரி சோலியெல்லாம் முடிஞ்சுச்சாப்பு?” என்றவரது பேச்சு யாருமின்றி தனித்து இருந்ததாலோ என்னவோ, எங்கெங்கோ சுற்றியது.

“நீ பொறந்தப்போ வம்சத்துக்கு ஆம்பளப்புள்ள வந்தாச்சுன்னு அம்புட்டு சந்தோசம் எனக்கு. உன்னை வீட்டுக்குக் கூட்டியாந்து தொட்டில் போட்ட அன்னைக்கு நல்லதா ஆறு வெள்ளாட்டை அடிச்சு ஊருக்கே விருந்து வெச்சேன். எல்லாம் நல்லாத்தான் போச்சு. ஹும்…எந்தப் பாவி கண்ணு பட்டுச்சோ, பொறவு என்னன்னவோ ஆகிப் போச்சு. உன்னை மாலையும் கழுத்துமா பாத்துட்டா நான் கிளம்ப வேண்டியதுதான் ராசா”

கபிலன் “இப்ப ஏன் அப்பத்தா அதெல்லாம், மூட்டு வலி எப்படி இருக்கு, தைலம் தடவி ஒத்தடம் குடுக்கச் சொன்னேனே, குடுத்தியா?”

“காடேகுற ஒடம்புக்கு எம்புட்டு சவரட்சணை செய்யுறதப்பு. எனக்கென்ன இனிமேட்டு?”

அப்பத்தா மகள் காவேரியுடன், பேத்தி செண்பாவுடன், கொள்ளுப்பேத்தி குந்தவையுடன் என தனித் தனியே ஜோடி போட்டுக்கொண்டு நாள் ஒன்றுக்கு ஏழெட்டு சீரியல் பார்ப்பது தெரிந்த கபிலன்

“அப்போ நீ இனிமே சிறகடிக்க ஆசை சீரியல் கூட பாக்கப் போறதில்லையா அப்பத்தா?”

நீலவேணி “ஏதோ, அது ஒண்ணைத்தான் பாக்குறேன். இன்னிக்கு சனிக்கெழம பாரு, அதுவும் இல்லை” என்றவர்,

“ஏனப்பு பேச்சை மாத்துற, நான் சொல்லுறதை கேளு ராசா. அழவும் சிரிக்கவும் உனக்குன்னு ஒருத்தி வேணுமப்பு. இந்த அப்பத்தாளுக்கு ஓல வரும் முன்ன கல்யாணம் கட்டிக்கப்பு” என்றவர் உணர்ச்சி வசப்பட, கபிலன்

“கல்யாணம்தானே, பண்ணிக்கிட்டாப் போச்சு” என்றவன் கருப்பட்டி காஃபியின் மணத்தில் திரும்ப, சியாமளா தம்ளரை அவனெதிரே தரையில் வைத்தவள், நீலவேணிக்கும் எடுத்து வந்திருக்க, “என் ராசாத்தி” என்று சிலாகித்தார்.

தன் ‘ஏன், கைல குடுக்க முடியாதோ?’ நினைவிற்கு வர, அவளைப் பார்த்தான்.

“கொதிக்கற சூட்ல இருக்கப்பு, ஊதிக் குடி” என குழந்தைக்குச் சொல்வது போல் கபிலனிடம் சொன்ன நீலவேணி

“ஏன்த்தா, வள்ளி எங்க?”

“ஆன்ட்டிக்கு கொஞ்சம் சளியும் ஜூரமுமா இருக்கு பாட்டி. கிச்சன்லதான் இருக்காங்க” என்றபடி மீண்டும் சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.

“வள்ளி, ஏத்தா வள்ளி… மேலுக்கு சொகமில்லைன்னா, அங்குட்டு என்ன செய்யறவோ. நீ காபிய குடிச்சுட்டு போய் என்னன்னு பாரப்பு”

சமையலறைக்குச் சென்றவன், நல்ல பச்சை நிற குர்த்தி, முகம் கழுத்து எங்கும் வியர்வை பூத்திருக்க, முகத்தைச் சுற்றி அலங்காரச் சட்டமிட்டது போல் சிறு முடிகள் வியர்வையில் படிந்திருக்க, ஒரு பக்கம் சப்பாத்தியைத் தேய்த்தபடி, கல்லில் போட்ட ரொட்டி பாதி வெந்ததும், இடது கையில் பிடித்த தவாவில் இட்ட ரொட்டியை போட்டு, எடுத்த ரொட்டியை நேடியாகத் தீயில் போட்டு ஃபுல்காக்களாகச் சுட்டு எடுத்து, மிக லேசாக நெய் தடவி, அடுக்கி வைத்து என, தேர்ந்த ஜக்லிங் (Juggling) வித்தைக்காரனைப் போல் சுழன்ற சியாமளாவைப் பார்த்தபடி, நிலையிலேயே நின்றுவிட்டான்.

“வள்ளி ஆன்ட்டி, டாக்டர் வந்திருக்கார் பாருங்க” என்ற சியாமளாவின் குரலில்தான், வள்ளி அங்கேயே ஓரமாகப் படுத்திருப்பதைப் பார்த்தான்.

‘டாக்டரா??!’

“என்னாச்சு அத்த, வெளில வந்து ஃப்ரீயா படுக்கலாம்ல?”

“தொண்டைல சளி புண்ணா வலிக்குது தம்பி. உடம்பே சூடா, அனத்தலா இருக்கு. பாவம்,இந்தப் புள்ள ஒண்டியா வேலை செய்யுதா, அதான் இங்கிட்டே படுத்துட்டேன்”

“நான் போய் மருந்து கொண்டு வந்து தரேன். ரெண்டு நாள் சாப்பிடுங்க. நிறைய தண்ணி குடிங்க”

“இங்கயே சாப்பிடுங்க தம்பி” என்ற வள்ளியிடம் மறுக்க நினைத்து, பின் “சரிங்கத்த, மாமா வரட்டும்” என்று வெளியே சென்று, மருத்துவமனைக்குப் பேசி மருந்துகளைத் தருவித்தான்.

வேலை முடிந்து வெளியில் வந்த சியாமளா, “நான் மாடிக்கு போறேன் பாட்டி, வள்ளி ஆன்ட்டீ, ஏதாவது வேணும்னா கால் மீ” என்று மச்சுப் படியேற, நீலவேணி “சாப்பிட்டு போத்தா”

“கைல எடுத்துனுட்டேன் பாட்டி” என்றவள், கபிலன் பார்க்கப் பார்க்கப் போயே போய்விட்டாள்.

‘நீ இருந்தா அந்த இடத்தையே சுத்தி வர்றவளை, இப்படி விலகி ஓட வெச்சுட்டியேடா’

****************

கபிலன் அங்கு வருவதே குறைந்துவிட்டது என்று தினமும் கோபத்தில் கத்திப் புலம்பிய அம்மாவை சமாதானம் செய்யவென, சொல்லாமல் கொள்ளாமல் வெள்ளியன்று மதியமே மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றவனுக்கு, மாளவிகா ஞாயிறன்று மதியம் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் தந்தாள்.

“மீனாக்ஷியைப் பார்த்தே நாளாகுதுடா” என்றவள், புதுப் பட்டுப்புடவை உடுத்திக் கிளம்ப, இணையான பளபளப்பில் ஜெயச்சந்திரனும் ஆதியும்.

மாளவிகா “கபிலா, இதைப் போட்டுகிட்டு வாடா” என புதுச் சட்டையைக் கொடுத்தாள்.

“என்னம்மா இன்னிக்கு, பர்த் டே, ஆனிவர்ஸரி எதுவும் இல்லையே”

“சும்மா போட்டு வாடா. ஏன் தீபாவளி, பொங்கல்னாதான் புதுசு போடறோமா என்ன?”

ஞாயிறு என்பதால் கோவிலில் கூட்டமான கூட்டம் இருக்க, பொற்றாமரைக் குளப் படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டனர்.

சிறிது நேரத்திலேயே இதே போல் பளபளப்பான தோற்றத்தில் நடுவே, குறுகுறுவெனப் பார்த்தபடி ஒரு இளம் பெண்ணுடன் ஆணும் பெண்ணுமாய் ஆறேழு பேர் வந்தனர்.

‘பொண்ணு டிகிரி முடிச்சிருக்காம். கிராமத்துல இருக்க சம்மதமாம். நல்ல வசதியான குடும்பம்…” என கிசுகிசுத்த மாளவிகா, அவர்களுடன் சம்பிரதாயமாகப் பேசத் தொடங்கினாள்.

ஜெயச்சந்திரன் கபிலனிடம் மன்னிப்பை யாசிக்கும் பார்வை பார்க்க, அவன் ஆதியை முறைத்தான்.

‘நீயாவது சொல்லக் கூடாதாடா?’

அவர்களில் மூத்தவராகத் தெரிந்தவர், பெண்ணின் தாய்மாமாவாம், ஜெயச்சந்திரனிடம் “மாப்பிள்ளை அமைதியா, பார்க்க உங்களை மாதிரியே இருக்காரு. எங்களுக்கு முழு சம்மதம். உங்க பையனோட விருப்பத்தைக் கேட்டு சொல்லுங்க” எனவும், வேறு வழியின்றி ஜெயச்சந்திரன் தலையை ஆட்டி வைத்தான்.

அதற்குள், அந்தப் பெண், தன் அருகில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, “எங்க பொண்ணு மாப்பிளைத் தம்பிகிட்ட ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்லுது” என்றனர்.

கபிலன் புகைவதை உணர்ந்த மாளவிகா “எம் புள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவம். நாங்க வீட்ல போய் சம்மதம் கேட்டு சொல்றோம். அப்புறம் ரெண்டு பேரும் தனியாவே போய் பேசலாமே” என சமாளிக்க, வீட்டுக்கு வந்தனர்.

“ஏம்மா இப்டி எல்லாரையும் எம்பாரஸ் பண்ற? எனக்கு கல்யாணம் வேணும்னா நானே கேக்கறேன். நோ மோர் ஷாக்கிங் சர்ப்பிரைஸஸ்” என்றவன், ஜெயச்சந்திரனைக் காயப்படுத்த விரும்பாது, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

மறுநாள் விடியும் முன்னே
புறப்பட்டவனிடம் அழுத மாளவிகாவை “ஃப்ரீயா விடும்மா, பாத்துக்கலாம்” எனத் தேற்றியவன் தன் உணர்வுகளைச் சமன் செய்யத்தான் திணறிப் போனான்.

தனக்காக வருடக் கணக்கில் ஒருத்தி காத்திருக்க, திடீரென ஒரு பெண்ணைப் பார்க்க நேர்த்ததில் குற்றவுணர்வு மிகுந்தது. துணிந்து முடிவெடுக்க இயலாது தடுமாறும் தன் மீதே ஆத்திரப்பட்டவனிடம் சமயம் பார்த்து கிரிதரன் வந்து, சியாமளாவைக் காதலிப்பதாகச் சொல்லவும், அவளிடம் நிறையவே பேசி விட்டான்.

சியாமளா வாயாடும் வரை கபிலனிடம் இருந்த உரப்பு, அவள் காஃபி கொடுத்து, மென்மையாக என்னவென்று கேட்கவும், தளரத் தொடங்கியதில், அவளை அருகே அழைத்தான். வந்தாள்.

“என்ன?”

“நான் சொல்றதை கேப்பியா?”

“...”

“என் சூழல், என் குடும்பம், இந்த கிராமம், என் பிரச்சனை, நான்… இது எதுவுமே உனக்கு சரிப்பட்டு வராது”

“...”

“ப்ளீஸ் மா, நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்… நான் உனக்கு வேணாம் மா. உன் நல்லதுக்குதான் சொல்றேன். என்னை விட்டுப் போயிடுடீ, ப்ளீஸ்”

சட்டென்று கூர்மையான சியாமளா “நீங்க இது வரைக்கும் யாரையாவது டீ போட்டு பேசி இருக்கேளா?”

“...”

“அட்லீஸ்ட் குந்தவையை?”

“ம்ப்ச்…ப்ச்”

“அப்ப என்னை ஏன் டீ சொன்னேள்?”

“காட்! பேச்சை ட்விஸ்ட் பண்ணாத. உங்கப்பா என்னை விட எல்லா விதத்துலயும் பெட்டரான பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பார்”

“தேங்க் யூ டாக்டர் கபிலன். நீங்க சொல்றதை நிச்சயம் யோசிக்கறேன்”

“ட்ரை டு அன்டர்….”

கபிலன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் சியாமளா தொழிற்சாலை வாயிலைக் கடந்திருந்தாள். அந்தக் கணத்திலிருந்து மௌனம்தான்.

******************

புதன் கிழமை மாலை ஃபேக்டரியில் இருந்து சியாமளா வந்தபோது, எல்லோரும் ஊரில் இருந்து திரும்பி இருக்க, கபிலனும் அங்கேதான் இருந்தான். ஒரே கலகலப்பாக, சத்தமாக இருந்தது. குந்தவை அங்கு நடந்த எதையோ சொல்லி, யார் யாரை மாதிரியோ நடித்துக் காட்டிச் சிரித்தாள்.

நலம் விசாரித்த சியாமளா, பாதிப்படி ஏறுகையில், நீலவேணியிடம் சாரநாதன், “அம்மா, காவேரி அக்காவோட மூத்தாரோட சம்பந்தி வீட்ல…” எனத் தொடங்கியதை, முழுதாகக் கேட்க விருப்பமின்றி, தடதடவென மாடி ஏறினாள்.

அவர்கள் இனத்திலேயே வசதியான, படித்து, அதிகாரம் மிக்க அரசு உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் மகனுக்கும் மகளுக்கும் குந்தவையையும் கபிலனையும் பெண் கொடுத்து, பெண் எடுக்கக் கேட்டாராம். மகன், மகள் இருவருமே இஞ்ஜினீயர்களாம்.

குந்தவையை பார்த்ததுமே பிடித்துப் போய்விட, கபிலனும் பெண்ணும் நேரில் பார்த்து விட்டால், கார்த்திகை முடிவதற்குள் நிச்சயம் செய்து, தை பிறந்ததுமே தாலி கட்டி விடலாமாம்.

அடுத்து வந்த நாட்களில் அந்தப் பேச்சே சுழன்று வர, அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியும், குந்தவையின் கனவு படர்ந்த கண்களும் கபிலனின் மௌனமும் ஒருசேரத் தாக்கியதில், ஹாஸ்பிடலில் பிஸியாக இருந்த கபிலனுக்கு ‘அவசரம். செல்கிறேன்’ என்ற குறுந்தகவலை அனுப்பிய சியாமளா, செண்பாவிடம் தன் அறையின் சாவியைத் தந்து, வீட்டில் அனைவரிடமும் அதையே சொல்லிவிட்டு, சிறிய பையுடன் வெளியேறினாள்.
 

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Jun 19, 2024
26
22
18
Trivandrum
😍😍😍

சொல்லாம கொள்ளாம மதுரைக்கு போய் பொண்ணு பார்த்துட்டு வந்து இருக்கான்னு தெரிஞ்சா, காபியை கையில கொடுத்து இருக்க மாட்டா, இப்படி மூஞ்சில ஊத்தி இருப்பா...😏😏😜😜

FB_IMG_1686889942541 (1).jpg
 

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
51
184
53
Chennai
😍😍😍

சொல்லாம கொள்ளாம மதுரைக்கு போய் பொண்ணு பார்த்துட்டு வந்து இருக்கான்னு தெரிஞ்சா, காபியை கையில கொடுத்து இருக்க மாட்டா, இப்படி மூஞ்சில ஊத்தி இருப்பா...😏😏😜😜

View attachment 80
பக்குனு சிரிச்சுட்டேன்🤣🤣🤣
 
  • Haha
Reactions: Sindhu Narayanan