• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 14

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
88
354
53
Chennai
குறுநகை போதுமடி! 14

பூலோக வைகுண்டமும் தென் துவாரகையுமான குருவாயூர். குருவாதபுரீசனின் நிர்மால்ய தரிஸனம் கிடைத்த பரவசத்தோடு அம்பலத்தில் இருந்து வெளியேறியவர்கள் ஒருபுறம், தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்தவர்கள் ஒருபுறம் என அதிகாலை நான்கு மணிக்கே அத்தனை கூட்டம்.

தை மாதத்தின் அடர் பனியும் குளிர்காற்றும் மேல் சட்டையில்லா வெற்றுடம்பில் ஊசியாய் இறங்கியதில் உடல் சிலிர்த்த கபிலன், சற்றே கூச்சத்துடன் மேலே அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை இடது கையால் இழுத்துப் போர்த்திக்கொண்டான்.

கபிலனின் வலது கை walking crutches ஸில் நுழைந்திருக்க, வலது காலை சற்றே தாங்கி நடந்தவனின் முன்னே சியாமளாவும் பின்னே மாளவிகாவும் வரிசையில் நின்றிருந்தனர்.

அவனது அசைவை உணர்ந்த சியாமளா திரும்பி, கண்களாலேயே என்னவென்று கேட்க, கபிலன் சின்ன சிரிப்புடன் ‘குளிருது’ என வாயசைத்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான்.

இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வரிசையில் நின்றனர். தரிசனம் முடிய ஐந்தரை மணியானது.

சர விளக்குகளின் சாந்நித்யத்தில் கையில் வெண்ணையுடன் நின்ற குழந்தைக்குதான் எத்தனை ஆகர்ஷண சக்தி!

மயிற்பீலியும் அரைஞாண் கொடியும் குட்டியானதொரு நீல நிறப் பட்டுமாய் நின்ற உன்னி கிருஷ்ணன், யுக யுகங்களாய் வரும் நம்பிக்கையல்லவா?

தரிசனம் முடிந்து வெளியேறுகையில், கருவறையில் இருந்து வெளியே வந்த வயதான ஒரு நம்பூதிரி சியாமளாவிடம் சந்தனத்தோடு, நிர்மால்யத் துளசியைத் தந்து “க்ஷேமமாய் இருக்கட்டே” என்றதில், அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது.

எல்லோரும் கோவிலின் கிழக்கு வாசலருகே (நடபுரா) இருந்த பெரிய மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு அதிகாலை முதலே சிறிதும் பெரிதுமான கூட்டத்துடன் ஆங்காங்கே திருமணங்கள் நடக்கத் தொடங்கி இருந்தது.

அனைவரும் சியாமளாவின் அண்ணன் நவீன் தன் கஸின்கள் இருவரோடும் கோவில் புரோகிதர் ஒருவரோடும் காத்திருந்த சிறிய அங்கணத்திற்குச் சென்றனர்.

நடுவில் கனமான, ஆளுயர மலையாளக் குத்துவிளக்கொன்று ஏற்றப்பட்டிருந்தது.

கபிலன் ஒரு புறம் சிவப்பும் மறுபுறம் பச்சையுமாக மயில்கண் கரையிட்ட பட்டுவேஷ்டி, அங்கவஸ்திரத்திலும்…

சியாமளா ஏலக்காய் பச்சையில் நடுவில் சிவப்போடிய பட்டுப் பச்சை பார்டரில் கெட்டிக் கரையிட்ட பட்டுப் புடவையும் அதற்குப் பொருத்தமான எளிமையான நகைகளிலும் இருந்தனர்.

இருவரையும் சன்னதியை நோக்கி நிறுத்திய அந்த நம்பூதிரி, அவசியமான சில மந்திரங்களை ஓத, சாரநாதன் கொடுத்த மாங்கல்யம் கோர்த்த தாலிக்கயிற்றை சியாமளாவின் கழுத்தில் பூட்டிய கபிலன், அவளது ஏழு வருடக் காதலை, காத்திருப்பை தெய்வ சாட்சியாக அங்கீகரித்தான்.

துளசி மாலைகளை மாற்றிக்கொண்டு, இருவரும் நிலவிளக்கை மூன்று முறை சுற்றி வர, 1,250 ரூபாய்களில் திருமணம் இனிதே முடிந்தது.

சுனந்தா நாத்தனார் முடிச்சிட்ட குந்தவைக்கு பட்டுப்புடவையும் ஜாவளி எனப்படும் தங்கத்தினாலான காது வளையங்களையும் கொடுத்தார்.

புதுமணத் தம்பதிகளுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்பதால் குருவாதீசபுரி அரசனை முஹூர்த்தத்திற்கு முன்னரே தரிசித்து விட்டனர்.

கோவிலுக்கு சற்றுத் தொலைவில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு ஸ்டார் ஹோட்டலில் இரண்டு வகை இனிப்புடன் காலை உணவு ஏற்பாடாகி இருந்தது.

பத்தரை மணிபோல் குருவாயூர் முனிஸிபாலிடி ரெஜிஸ்த்திரார் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்தனர். சிறுமலையில் அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை வரவேற்பு வைத்திருந்தனர்.

“அப்பு, அடுத்த புதன் கிழமை வந்து கூட்டிட்டுப் போறேன்” என்ற சாரநாதன், நீலவேணி, செண்பா, குந்தவை, செழியன், வள்ளி, சின்னு, அவள் கணவன், குழந்தைகள் மற்றும் விஜய்யுடன் சிறுமலையை நோக்கிக் கிளம்பினான்.

மகனிடம் “ஜாக்கிரதைடா!” என்ற மாளவிகா, சியாமளாவின் கன்னம் தடவி “சந்தோஷமா இருங்க” என, ஜெயச்சந்திரன் இருவரையும் மதுரைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துப் புறப்பட, ஆதி வண்டியைக் கிளப்பினான்.

திருமணத்திற்கென வந்திருந்த நாராயணனின் சகோதரர்கள் குடும்பத்தினர் அங்கிருந்தே விடைபெற்றுக்கொள்ள, மணமக்கள் இருவரும் நாராயணன், சுனந்தா, நவீன், அவன் மனைவி குழைந்தைகளோடு கொல்லங்கோடே சென்றனர்.

சுனந்தாவும் நவீனின் மனைவியும் ஆரத்தி எடுத்து வரவேற்று, பாலும் பழமும் கொடுத்தனர்.

ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த கபிலனுக்கு, நவீனின் குழந்தைகளிடமிருந்து தன் க்ரட்சஸைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாக இருந்தது. மதிய உணவை வெளியில் சொல்லி இருந்தனர்.

மதிய உணவுக்கு முன் அக்கம் பக்கத்தவர் ஒரு இருபது, இருபத்தைந்து பேர் இருக்கும். வந்து கல்யாணம் விசாரித்து, பரிசளித்து, விருந்து உண்டு சென்றனர்.

புதிய இடமாக இருந்தும், மதிய உணவிற்குப் பின் நாராயணன் காட்டிய அறையில் படுத்த கபிலன் உடனடி உறக்கத்துக்குள் சென்றான்.

*********************

ரியர் வ்யூ மிரரில் தெரிந்த மாளவிகாவைப் பார்த்த ஆதித்தன், காரை மெதுவே ஓரங்கட்டி நிறுத்தியதில் கண்விழித்த ஜெயச்சந்திரன், “என்னடா, எதுக்கு ஸ்டாப் பண்ணின?”

ஒரு சத்தமில்லை, விக்கலில்லை, விசும்பலில்லை, முகம் சிவந்து கண்ணீர் மட்டும் வழிய, கார் நின்றதைக் கூட உணராது, இலக்கற்று வெளியே பார்த்தபடி வந்த மாளவிகாவைக் கண் காட்டிய ஆதி ‘அம்மாவைப் பாருங்க பா’ என ஜாடை காட்டினான்.

இறங்கி, பின்னிருக்கையில் மனைவியின் அருகே அமர்ந்த ஜெயச்சந்திரன் “மாலு” எனத் தொட்டதில் திடுக்கிட்டுத் திரும்பியவள், புடவைத் தலைப்பால் அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

எதுவும் கேளாது, தோளில் தட்டியவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட, கடகடவெனத் தொண்டையில் சரித்துக்கொண்டாள்.

அவார்ட் ஃபிலிம் காட்சி போல் நீடித்த அமைதியும் அழுகையும் ஆதியின் பொறுமையை சோதித்ததில் “ஏம்ப்பா, அம்மா ஏன் அழறாங்கன்னு கேட்காம, அழறதுக்கு ஹெல்ப் செஞ்சா என்ன அர்த்தம்?”

“டேய்!”

“ஏம்மா, கபிலன் அண்ணாக்கு கல்யாணம் ஆனதுக்கா அழற?”

“அடப் போடா” என்ற மாளவிகா, கண்ணீருடன் சிரித்தவள் “ஐ’ம் ஆல்ரைட். கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன், வேற ஒன்னுமில்ல” என்றாள் பொதுவாக.

“மா, ஷ்யூர்?”

“நிஜமாதான்டா, வண்டியை எடு”

ஆதி காரைக் கிளப்ப “நீங்க போய் முன்னால உக்காருங்க, அவன் தூங்கிடப் போறான்”

“சுத்தம்… ஏறினதுமே தூங்கினவர் எனக்குக் காவலா, ரொம்பத்தான். சரி சரி, என்னை முறைக்காம வாழ்க்கைல முன்னுக்கு வாங்கப் பா”

மாளவிகா “வாய்டா உனக்கு”

ஆதி “வக்கீல் மா நான்” என்றதில் சிரித்தபடி முன்னே சென்று ஏறிக்கொண்ட ஜெயச்சந்திரனுக்கு, மனைவிக்குத் தனிமையும் அமைதியும் தேவைப்படுவது புரிந்தது.

வண்டி புறப்பட, கண்களை மூடிக்கொண்ட மாளவிகாவை கலவையான உணர்வுகள் ஆக்கிரமித்திருந்தன.

எல்லோருக்குள்ளும் மிகப் பெரிய ஜமீன் அரண்மனை உண்டு. அதில் அவரவர் பிறந்து வளர்ந்த சூழல், அனுபவங்கள், சுபாவம், பொருளாதாரம் , நட்பு வட்டம், உறவுச் சிக்கல்கள், படித்த பள்ளி, வாங்கிய மதிப்பெண், காதல், பருவ மாற்றம், அது குறித்தான உணர்வுகள், அதைக் கையாண்ட விதம், தன் தோற்றம் மற்றும் திறமை குறித்தான உயர்வு, தாழ்வு மனப்பான்மை என பூட்டப்பட்ட, திறக்க விரும்பாத, கூடாத விதவிதமான அறைகளும் உண்டு.

ஜெயச்சந்திரனை மறுமணம் செய்துகொண்டு, திரும்ப முடியாத பாதையில் பயணித்த பின், புதிய பந்தத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவளுக்கு, அந்தந்த கணத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுப்பதும், அதிக சேதாரமில்லாது கரை சேர முயற்சிப்பதுமே முன்னுரிமை பெற்றது.

இன்றியமையாத சூழல்களில்(!) தன் முடிவுகளை அனுசரிக்க வேண்டிய இடத்தில் மகன் கபிலனை நிறுத்திய தருணங்களைத் தன் குற்றவுணர்வைக் கொன்றுதான் கடந்திருக்கறாள்.

வாரம் முழுதும் தன்னிடம் இருக்கும் மகன், வாரத்தில் ஒருநாள் ஏழெட்டு மணி நேரத்தை தகப்பனுடன் செலவழிக்க ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதைக் கண்டு எத்தனையோ நாள் மாளவிகா பொறாமைப் பட்டிருக்கிறாள்.

தந்தை சாரநாதனுக்கு சாதகமான படிப்பைத் தேர்ந்தெடுத்தது, உள்ளூரில் அன்றி, ஒன்பது வருடங்கள் வேற்று மாநிலத்தில் படிக்கச் சென்றது, சாரநாதனின் ஊரிலேயே தொழிலை அமைத்துக்கொண்டது என கபிலனின் ஒவ்வொரு முடிவுகளிலும் மகன் தன்னை விட்டு விலகிச் செல்வதாக எண்ணி மருகி இருக்கிறாள். மாளவிகாவின் உயர் ரத்த அழுத்தத்தற்குக் காரணமும் அதுவே.

மகன் குறித்த எல்லாமும் உடனுக்குடன் தனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவனது அருகில் இருக்கவென, கபிலனிடம் வேலை கேட்டு கணேஷை அனுப்பினாள்.

கபிலனுக்கு ஏற்பாட்டுத் திருமணம் செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களும் சமூகப் பார்வையும் தெரிந்தாலும், எங்கே, திருமண விஷயத்திலும் கபிலன் தந்தையின் பேச்சைக் கேட்டுவிடுவானோ என்ற பயத்தில் தீவிரமாகப் பெண் பார்த்தாள். திருமணமும் தகையாது, கபிலனும் பிடிகொடுக்காது நழுவினான்.

நேரிலும் வராது கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னதில், துணிந்து பெண் பார்க்க ஏற்பாடு செய்ததில், இன்னும் தன் மேலுள்ள கோபம் குறையவில்லை என நினைத்த மாளவிகாவிற்கு, கபிலன் ஹாஸ்பிடலுக்கு வரவில்லை என்பதும், இரண்டு நாள் முழுவதும் அணைத்து வைக்கப்பட்ட மொபைலும் ரத்த அழுத்தத்தைக் கூட்டியதில், தலை சுற்ற, நாக்கின் அடியில் மாத்திரை கொடுத்து, பிரஷரை இறக்கினர்.

அடுத்த இரண்டே நாள்களில் கபிலன் மீதான ஜெயச்சந்திரன் வீட்டினரின் அலட்சியம், நிலா, ஆதி என, வீடும் பள்ளியும் தந்த சூழலின் அழுத்தம் தாளாது, பதின்ம வயதில் தன்னை வறுத்திக் கொண்ட கபிலன், முப்பத்தி இரண்டு வயதில் மீண்டும் அதையே செய்ததில், குறுகுறுப்பும் பரிதவிப்புமாகச் சென்றவள், மகனும் சியாமளாவும் இருந்த நிலை கண்டு பிரமித்தாள்.

அருகில் இருந்த ஜெயச்சந்திரனிடமும் இரண்டு நிமிடங்களில் அங்கே வந்து நின்ற சாரநாதனிடமும் கூட அதே வியப்பையும் திகைப்பையும் கண்டவளின் கண்களில் நீரும் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் நிம்மதியும் பரவியது. தன்னையறியாது அல்லது தன்னை மீறி, சாரநாதனைப் பார்த்த மாளவிகாவால், சின்னச் சிரிப்புடன் கண்களை மூடித் திறந்தவனிடமும் அதே உணர்வுகளைப் படிக்க முடிந்தது.

கபிலன் உறங்கி எழக் காத்திருந்தனர். அவனாக எழும் வரை சியாமளா கொஞ்சமும் அசையவில்லை.

வரவேற்ற நாராயணன், கபிலனுக்கு நடந்த அறுவை சிகிச்சை, அதற்கான கவனங்கள் பற்றிக் கூறிவிட்டு, மகளின் காதலை பேசத் தயங்க, ஜெயச்சந்திரன் “அவங்களே சொல்லட்டும் ஸார், ஃப்ரீயா விடுங்க” என்றான்.

ஒரு வழியாகக் கண் விழித்த கபிலன், சியாமளாவின் கையை விடாது, படு இயல்பாகப் பெற்றோரை எதிர்கொள்ள, சங்கடப்பட்ட சியாமளா நெளிந்தாள்.

“ஏனப்பு இப்டி செஞ்ச, யாரு கிட்ட கோபமோ அங்கனயே காட்டாம, உன்னை நீயே வருத்திக்கிட்டு… ஏனப்பு, உன்னைக் காங்காம, வெளிய சொல்லித் தேடவும் முடியாம… சியாமளா பொண்ணோட ஃபோன் வர வரைக்கு பதறிப் போச்சுடா. சரி, நீ இருக்குற இடம் தெரிஞ்சு போச்சுன்னதும் நிம்மதியா மூச்சு விடல, பின்னாலயே இது… ஏன்டா.. ஏன்டா இப்புடி?”

“...”

“அந்தப் பொண்ணு கைய விடுடா, நீ இங்க வாம்மா” என்ற மாளவிகா கபிலனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற சியாமளாவைத் தன்னருகே இழுத்து நிறுத்திக்கொண்டவள், மகனிடம்,

“இது எத்தனை நாளா?”

கபிலன் “அவ ஏழு வருஷமா, நான் இன்னிக்குதான்”

சாரநாதன் சிரித்துவிட, ஜெயச்சந்திரன் “அடப்பாவி!”

செழியன் “டேய், இந்தப் புள்ளையவாடா ஏழு வருஷம் சுத்தல்ல வுட்ட?”

மாளவிகா “நீ இந்தப் பொண்ணுக்குத் துணையா, ரெண்டு நாள் தனியா இருக்க ஒத்துக்கிட்டபோதே நான் சுதாரிச்சிருக்கணும்டா. உன்னை நம்பி பொண்ணெல்லாம் வேற பார்த்து…”

கபிலனின் முகம் இறுகி விட, அம்மா, அப்பா இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

சாரநாதன் “என்னப்பு அப்படிப் பாக்குற?”

“ஒன்னுமில்லப்பா”

கபிலன் மறுப்பாகத் தலையசைக்க, சியாமளாவோ ‘இதென்ன இவா எல்லாரும் இவ்ளோ ஈஸியா இருக்கா? அத்தனை பரந்த சிந்தனையா, இல்ல, ஒரு பெரிய பிரச்சனை விட்டதுன்னு அலட்சியமா?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள்.

இன்னும் இரண்டு மருத்துவர்களுடனும் ஒரு செவிலியுடனும் வந்த டாக்டர் நாராயணன் “எப்டி இருக்க கபிலன்?” என்றவர், “பெயின் கில்லர் போட நேரமாச்சு. அப்புறமா பேசலாம்” என்றவர், அந்த நர்ஸ் ஊசி மூலம் மருந்துகளை கேன்யூலாவில் ஏற்றுவதை சரி பார்த்தார். பின் பொதுவாக,

“எல்லாரும் வீட்டுக்கு வாங்கோ, பேசலாம். அழைச்சுண்டு வா ஷாம்ளா” என்றதை, சுனந்தாவும் வழி மொழிந்த பின் இருவரும் கிளம்பினர்.

***********************

திருமணத்திற்கென டெம்போ ட்ராவலர் ஒன்றை அமர்த்திக் கொண்டு வந்திருந்ததால், எல்லோரும் திருமணத்தை அசை போட்டுக்கொண்டே வந்தனர்.

கபிலன் காதல் வயப்பட்டதும், தன் குடும்பப் பின்னணி, சூழல் எல்லாவற்றையும் விடுத்து, ஏழு வருடங்களாகக் காத்திருந்த சியாமளா அவனுக்காக இங்கே வந்து இருந்ததும், இந்தத் திருமணம் குறித்து சியாமளா வீட்டினரின் எண்ணம், விருப்பு, வெறுப்பு எதுவாயினும் சம்மதித்தபின் எதையும் வெளிக்காட்டாது, அவளது பெற்றோர், அண்ணன், மற்ற உறவினர்கள் எல்லோருமே மாப்பிள்ளை மற்றும் சம்பந்திக்கான மரியாதை குறையாது நடத்திய விதத்தையும் பேசித் தீர்த்தனர்.

அது மட்டுமின்றி, கபிலனின் மூன்றுவார மருத்துவமனை வாசத்தின்போது நாராயணனும் சுனந்தாவும் செய்த உதவிகளுக்கு அளவே இல்லை எனலாம்.

முதல் ஒரு வாரம் சாரநாதன் உடன் இருக்க, அடுத்த வாரம் ஆதியும், அதன்பின் மாளவிகாவும் இருந்தனர். டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வரச் சென்ற சாரநாதனுடன் சிறுமலை செல்ல கபிலன் , மாளவிகா இருவருமே மறுத்துவிட்டனர்.

சாரநாதன் “கபிலன் கிடைச்சதும் தாலக்கடை மாரியம்மனுக்குப் பொங்கல் வெக்கிறதா வேண்டிட்டு இருக்கேன்…”

மாளவிகா “இப்போதைக்கு என்கூட மதுரைக்கே வரட்டும். கல்யாணத்துக்கு நாலஞ்சு நாள் முன்னால வந்து கூட்டிட்டு போங்க” என்றாள்.

சாரநாதன் மகன் தன்னோடு வர மறுத்ததில் எழுந்த வருத்தத்தை மறைத்துக்கொண்டு ஊர் திரும்பினான்.

“அப்பா, இந்த ஃபோட்டோவைப் பாரேன்” என்று தந்தையை உலுக்கிய குந்தவை “என்னப்பா நீயே சிரிக்கிற?”

“உங்கண்ணனை நினைச்சுதான்டா சிரிக்கிறேன். ஏழு வருஷம் அந்தப் பொண்ணை அலைய விட்டவன், கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெச்சுக்கலாம்ப்பான்னு சொன்னபோது நீ அவன் முகத்தைப் பார்த்திருக்கணும்டா நுங்கம்மா”

சிரித்த குந்தவை பின், “அந்தக் கல்யாண பேச்சு வந்ததும்தான் அண்ணி (சியாமளா) கிளம்பிப் போயிட்டாங்க போலப்பா” என்றாள் வருத்தத்துடன்.

செண்பா “அவங்க லவ் பண்றாங்கன்னு நமக்கு என்ன ஜோசியமா தெரியும். படிச்ச, பக்குவமான புள்ளைங்கன்னு நம்பினோம்?”

“...”

இரண்டு மாதங்களாகியும் தன்னுடன் முகம் கொடுத்துப் பேசாத கணவனை சமாதானித்து சமரசம் செய்யும் முயற்சியில் இருந்த செண்பாவின் முகம், மற்றவரது அமைதியில் வாடியது.

அதோடு கூட, அம்மா, அப்பா இருவரின் இரண்டாவது குடும்பமும் சேர்ந்து நின்று, யாருக்கும் எந்த ஒரு மனத்தாங்கலோ, மரியாதைக் குறைவோ வர முடியாத இடத்தில், விதத்தில் நடந்த திருமணம், அன்று சொன்னவற்றை எல்லாம் கபிலன் எத்தனை யோசித்திருக்கிறான் என்று புரிந்தது.

என் மகளுக்காகதானே பேசினேன் என்ற வீராப்பு ஒருபுறம் இருந்தாலும், அம்மா காவேரியுடன் சேர்ந்து தான் வீசிய, அநாவசியமான, அதிகப்படியான வார்த்தைகளில் வெகுவாகக் காயப்பட்ட கபிலன், யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டே போனதில் உண்மையாகவே வருந்தியவளுக்கு, வார்த்தைகளில் மன்னிப்பை வேண்டி, திருமண நிகழ்வுகளில் அதிகப்படியாக ஈடுபடக் கூச்சமாக இருந்தது.

முஹூர்த்தத்திற்கு நான்கு நாள்களுக்கு முன் வந்த கபிலனை நீலவேணி சொன்னதுபோல் ஆலம் சுற்றி திருஷ்டி கழித்து வரவேற்று, மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து சாரநாதனின் வேண்டுதலை நிறைவேற்றியவள், உள்ளூர் சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்து, பிள்ளையாருக்கு 108 ஈடு காய் போட்டுக் கபிலனுக்குக் குணமாக வேண்டும் என்ற தன் நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினாள்.

செண்பாவின் வார்த்தைகளில்
“எங்கூட எப்பவுமே கம்மியா பேசுற கபிலன் கூட இத்தனைக்குப் பொறவும் அவசியத்துக்குப் பேசுறான். இந்த மாமாதான் இன்னும் முறுக்கிக்கிட்டுத் திரியுறாக”

கபிலன் நலம் விசாரித்து விட்டு விலகி நின்று விடலாம். ஆனால், கபிலன் இங்கு வந்து போகத் தொடங்கிய நாளாய், கூடவே இருந்து தன்னைப் புரிந்து கொண்டாளென நினைத்த மனைவி நிறம் மாறிய ஏமாற்றத்தை சாரநாதனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை என அவளுக்குப் புரியவில்லை.

மகளிடம் “நான் அவனைக் கேட்டு அவங்க வீட்ல பேசி இருக்கணும்டா நுங்கு. கபிலன் வேணாம்னதாலதான் அவங்களோட சுயரூபம் தெரிஞ்சது. எல்லாம் நல்லதுக்குதான் விடு” என்ற சாரநாதன், மீண்டும் நினைவுகளில் ஆழ்ந்தான்.

ஆபரேஷன் முடிந்த மூன்றாவது நாள் காலை, சாரநாதனின் உதவியோடு, வாக்கரைப் பிடித்துக்கொண்டு, கபிலன் தானே ஓய்வறை சென்று வந்தான்.

கபிலனைக் காண சியாமளா காலை, மாலை இரண்டு வேளையும் வந்து சென்றாள். அடுத்த நாள் அவள் கிளம்பியதுமே கபிலன் “அப்பா, கல்யாணத்தை சீக்கிரமே வெச்சுக்கலாம்ப்பா” எனவும் சாரநாதன் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தான்.

கட்டு பிரிக்க வேண்டும். ப்ரொஸீஜர் செய்த இடம், தசை நாரை எடுத்த தொடைப்பகுதி இரண்டும் ஆற வேண்டும். இன்றுதான் தானே எழுந்து பாத்ரூம் சென்றிருக்கிறான். இதில் கல்யாணத்தைப் பற்றிப் பேசினால், அந்தப் பெண், அவளது பெற்றோர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

“அப்பு, ஒரு வாரம் போகட்டும்டா, அவங்கப்பாட்ட பேசறேன்”

“அப்பா…”

“சொல்லப்பு”

“கல்யாணத்தை குருவாயூர் கோவில்ல வெச்சுக்கலாம்ப்பா”

“ஏனப்பு, நம்ம பக்கமும் இல்லாம, அவங்க மாதிரியும் இல்லாதைக்கு…”

“அதாம்ப்பா நல்லது. யார் வீட்டு முறைப்படி செய்யறதுன்ற குழப்பம் இல்லாம, கோர்ட் மேரேஜ் மாதிரியும் இல்லாம, கோவில்ல நடந்தா எல்லாரும் வரக்கூடிய பொது இடமாவும் இருக்கும். யாருக்கும் சங்கடமில்லாம போகும். அரை மணில கல்யாணமே முடிஞ்சுடுமாம். கூகுள் பண்ணிப் பாருப்பா”

“உனக்கு யாரப்பு சொன்னது?”

“அவதான்”

“எவதான்… பேரைச் சொல்லிப் பழகுடா”

“...”

“சரி, நான் டாக்டர் ஸார் கிட்ட பேசறேன். அவங்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல”

சியாமளா தன் பெறோர்களிடம் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்தாள்.

நாராயணன் “கபிலன் ஓரளவு நன்னா நடக்க ஆறுல இருந்து எட்டு வாரம் ஆகும் ஸார். தை கடைசில கல்யாணத்தை வெச்சுக்கலாம். நான் பார்த்து ஏற்பாடு பண்ணிடறேன். தேதி முடிவானாதான் எம் புள்ளை நவீனால வர முடியும்” என, சுனந்தா சங்கடஹர சதுர்த்திக்கென செய்திருந்த மோதகமும் காஃபியும் கொடுத்தார்.

இதோ, கல்யாணமே இன்று முடிந்துவிட்டது.

*******************

வீட்டினுள் நுழைந்தவர்களைப் பார்த்த காவேரி “கலியாணம் நல்லபடியா நடந்துச்சா?” என்ற கேள்வியோடு ஒதுங்கிக் கொண்டாள். அதற்கும் வாய்தா வாங்காத அவளின் வாயே காரணம்.

சாரநாதன் மட்டுமின்றி, இந்தத் திருமணம் பற்றித் தெரிந்ததும் சியாமளாவின் இனம், சாமர்த்திய குணம், பணக்காரப் பையனுக்குத் தூண்டில் போட்டுத் துரத்திப் பிடித்து விட்டாள்’ என்று தொடங்கவுமே பேத்தி குந்தவை அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள்.

நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற சாரநாதன் வந்து அழைத்துச் சென்றான்.
தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற ஊருக்கு வந்த கபிலன், பிடிவாதமாய் தன் வீட்டில்தான் தங்கிக் கொண்டான்.

ஆனால், திருமணத்திற்குத் தங்கள் வீட்டில்(!) பூஜை செய்து விட்டுதான் புறப்பட வேண்டும் என்ற நீலவேணியின் பிடிவாதத்தால், வீட்டுக்கு வந்தவனை விடாது, காவேரி மீண்டும் உசுப்பேற்றினாள்.

எல்லோரும் புறப்படத் தயாராகி நிற்க, வேன் வந்து வெளியில் நின்றது. காவேரியுமே சன்னக் கரையிட்ட பட்டுசேலையும் ரெட்டை வட சங்கிலியுமாகப் புறப்பட்டுதான் நின்றாள்.

ஆனாலும், மருமகனைக் கண்டதுமே வாய் நிற்காது போக, நீலவேணியிடம் “நல்ல அழுத்தமான ஆளுதாம்மா உம்பேராண்டி. அவேன் ஆத்தாளோட ஆழ்மை அப்படியே வந்திருக்கு. ஐயர் ஊட்டுப் புள்ளையை காதலிச்சு, நம்ம வீட்லயே கொண்டு வந்து விட்டு, நம்மளையே கறி, மீன் இல்லாம காய்கறி திங்க வெச்சான் பாரு. இது புரியாம இந்த செண்பா வேற தேங்காப் பாலும் ரசஞ்சோறுமா…”

சாமி பிறைக்கு நமஸ்கரித்து, அப்பத்தாவிடம் துன்னூறு பூசிக்கொண்ட கபிலன், பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சாரநாதனிடம், காவேரியின் புறம் கை காட்டி “அப்பா, அவங்க நம்ம கூட வர வேணாம். நான் வண்டில இருக்கேன், சொல்லிட்டு வாங்க” என்றவன் “நுங்கு ரெடியா, வா போகலாம்” எனத் தங்கையை இழுத்துக்கொண்டு போயே போய்விட்டான்.

“போனா போயேன், எனக்கென்ன” என்று விறைப்பும் முறுக்குமாக நின்ற மகளை நீலவேணி சமாதானம் செய்ய முற்பட, செண்பா கையைப் பிசைய, “வள்ளி, புள்ளைங்களோட போய் வண்டில ஏறும்மா. செழியா, மறுக்கா ஒரு முறை சாமானை எண்ணுடா. விஜய், இதைக் கொண்டுபோய் வண்டில ஏத்து” என மளமளவென உத்திரவு போட்ட சாரநாதன்,

“அதான் அப்புவே சொல்லிட்டான்ல, வர்றவங்க வந்து வண்டில ஏறுங்க. அவங்களோட இருக்கணும்னா இங்கனயே இருந்துக்கோங்க” என்றபடி வெளியேற, வேறு வழியின்றி காவேரியைத் தவிர, ஏனையோர் தொடர்ந்தனர்.

இன்று…

காவேரி “என்னடீ செண்பா, நீயும் பேசாத போற?”

சாரநாதன் “நுங்கம்மா, எல்லாருக்கும் டீ, காஃபி எதுவும் போடச்சொல்லு” என்றவாறு புழக்கடைக்குச் செல்ல, செண்பா

“கல்யாணமெல்லாம் சூப்பரா நடந்துச்சு றா. நீ கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா குருவாயூர் கோவிலை பார்த்திருக்கலாம். எங்க…” என்றதற்கு சின்னு சத்தமாகச் சிரித்ததில் காவேரி கொதிப்படைந்தது.

காவேரி மாத்திரமா, கபிலனுக்கும் சியாமளாவிற்கும் திருமணம் என்றதும், ஊரே பேசத்தான் செய்தது. அதைச் சரிக்கட்டி, இந்தத் திருமணத்தை சாதாரணமாக்கவென்றே வரவேற்பும் விருந்தும் ஏற்பாடு செய்திருக்கிறான்.

கடந்த ஆறேழு வாரங்களாக, தொலைதொடர்பு மூலம் வழிநடத்திய கபிலன், மனைவியுடன் நேரில் வந்து பொறுப்பேற்க வேண்டி, சாரநாதனுடன் சேர்ந்து மருத்துவமனை மற்றும் காஸ்மெடிக் ஃபேக்டரியும் காத்திருந்தன.

**********************

கபிலன், ஃபில்டர் காஃபி மற்றும் சந்தன ஊதுபத்தியின் நறுமணத்தில் கண்விழித்தபோது வீடே பரபரப்பாக இருந்தது.

காஃபியும் வெங்காய பக்கோடாவும் தந்தனர்.

“கபிலன், ஆஸ் எ ட்ரெடிஷன், குளிச்சுட்டு இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கோங்கோ” என்ற நவீன் மஞ்சள், குங்குமம் தடவிய புது வேஷ்டி, சட்டையைக் கொடுத்தான்.

டாணென்று எட்டு மணிக்கெல்லாம் இலைபோட்டு கேசரி, இட்லி, தேங்காய் சட்னி வெங்காய சாம்பார், மிளகாய் பொடி, தயிர்சாதம் எனப் பரிமாறினர்.

இன்னும் மூன்று
நாள்களில் Trauma சர்ஜரியில் சிறப்பு பயிற்சி பெற, நவீன் தன் குடும்பத்தோடு ஒரு வருடத்துக்கு இங்கிலாந்து செல்வதால், அவர்களை வழியனுப்பவென நாராயணனும் சுனந்தாவும்
அன்றிரவே அவர்களுடன் டெல்லி புறப்படவிருந்தனர்.

கபிலனின் கால் இன்னும் பலம் பெறவேண்டிய நிலையில் “நாங்களும் இருக்க மாட்டோம். ஹனிமூன் போறதுக்கு பதிலா, இங்கேயே டைம் ஸ்பென்ட் பண்ணுங்கோ” என்றார் நாராயணன்.

சியாமளா காஃபி, டீ, இரவு உணவைத் தானே செய்து கொள்வதாகச் சொன்னதால், தினசரி வீட்டு வேலையில் உதவ ஒரு பெண் வந்து சென்றாலுமே, புதுமணத் தம்பதிகளுக்கு வேலை வைக்க விரும்பாத
சுனந்தா காலை, மதியம் இரண்டு வேளையும் உணவை டெலிவரி செய்ய ஒரு மாமியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாடகத்தில் காட்சிகள் மாறுவது போல், எல்லோரும் உடைமாற்றி, பெட்டிகளைக் கொண்டு வந்து முன்னறையில் அடுக்கினர்.

நிச்சயத்தில் பார்த்த நவீனின் மனைவி, ஆறு வருட ராணுவ வாழ்க்கை பண்படுத்தியதில் கணவனுக்கு இணையாகக் கம்பீரம் கூடித் தெரிந்தாள். பேச்சு வழக்கும் கூட நாசூக்கும் நாகரிகமுமாக மெருகேறி இருந்தது.

உணவின்போது கபிலனின் அருகில் அமர்ந்து உண்ட சியாமளா , அதன்பிறகு கண்ணுக்கே தட்டுப்படவில்லை.

சரியாக ஒன்பதரை மணிக்கு கேப் வந்து நிற்க, நால்வரும் குழந்தைகளுடன் புறப்படும் நேரம் சுனந்தாவுடன் வெளிவந்த சியாமளாவைக் கண்ட கபிலன் விசிலடிக்கும் ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

நவீனின் குழந்தைகள் இருவரும் அத்தனை சேட்டை செய்துவிட்டு “பை அத்தை, பை அத்திம்பேர்” என முத்தமிட்டதில் கபிலன் நெகிழ்ந்தான்.

மகளிடம் ஆயிரம் பத்திரமும், அறிவுரையும் சொல்லிக் கண் கலங்கினார் சுனந்தா.

நாராயணன் “அடுத்த செவ்வாய்க் கிழமை வந்துடுவோம். ஸ்டே ஸேஃப் அண்ட் டேக் கேர்” என, கபிலனோடு கை குலுக்கிய நவீன், காதில் “மச்சுப் படிக்கு எதிர் ரூமுக்கு போங்கோ” என்றான்.

“ஹேப்பியா இரு ஷிம்லா, டேக் கேர் ஆஃப் கபிலன். நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ. என்ஜாய்” என நவீன் தங்கையை இறுக அணைத்து விடுவித்தான். வண்டி புறப்பட்டது.

வாசல் கேட்டை நவீனே மூடிச் செல்ல, கபிலன் வீட்டு வாசலை பூட்டித் திரும்பும் முன் சியாமளாவைக் காணவில்லை.

ஹாலுக்கு வர, சியாமளா எங்கோ சிந்தனையாக ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

Fuchsia பிங்க்கில் செல்ஃப் ஜரி போட்ட வழவழ மைசூர் பட்டும், தளர்ந்த பின்னலில் ஜாதி மல்லியும், நெற்றியில் பொட்டும் சந்தனக் கீற்றும் துலங்க, அந்தக் கேரள அக்ரஹாரத்து வீட்டில், உண்மையாகவே ரவிவர்மனின் ஓவியம்போல்தான் இருந்தாள்.

சியாமளாவின் மனதில்
“ஷிம்லா, கபிலன் மாதிரி சூழல்ல இருக்கறவா வெளில எவ்வளவு ஸ்ட்ராங்கோ, எமோஷனலி உள்ள அத்தனை brittleஆ இருக்க வாய்ப்பு உண்டு. என் கணிப்புல அவனோட பேரன்ட்ஸோட பிரிவு, ரெண்டாவது கல்யாணம், இவன் சந்திச்சிருக்கக் கூடிய விமரிசனங்களால, நட்போ, உறவோ அத்தனை சுலபமா ஏத்துக்க மாட்டான். அதுலயும் காதல், கல்யாணம்னா பயமா கூட இருக்கும். அந்த இன்செக்யூரிடினாலதான் உன்னைப் பிடிச்சிருந்தும் இத்தனை நாள் தவிர்த்திருக்கான். நீயா அவனை எதையும் கேட்காதே. மனசிலாச்சா?” என நவீன் சொன்னதே ஓடியது.

“ஹலோ மேடம், கொஞ்சம் பூமிக்கு இறங்கி வர்றது” என்ற கபிலனின் குரலில் சியாமளா திடுக்கிட்டு, எழுந்து நின்றதில் கன்னபின்னாவென்று ஆடியது ஊஞ்சல்.

எத்தனையோ முறை ‘ரொம்ப நாள் லவ் பண்ணினவாளுக்கு ஃபர்ஸ்ட் நைட்ல புதுசா வெக்கப்பட என்ன இருக்கும்?’ என யோசித்திருக்கிறாள். ஆனாலும், சிறிது கூச்சமாகத்தான் இருந்தது.

‘அதுசரி, இங்க ஒன்சைட் லவ்வுன்னா’

கபிலன் தன்னை நோக்கி நடக்கத் தொடங்குவது தெரிய, அவன் அருகில் சென்று “அந்த ரூம்”

“ஆஹான்?”

“...”

“வெக்கமோ?”

“...”

கபிலன் “தொரத்தி தொரத்தி நீ லவ் பண்ணின வேகத்துக்கு, வெக்கம், பயமெல்லாம் நான்தான்டீ படணும்” எனவும் சியாமளா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஒரு வழியாக அறைக்குள் சென்றனர். அறை டிபிகலாக, மிதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் அமர்ந்த கபிலன் தன் வலது கையை நீட்ட,

சியாமளா “இல்ல, சர்ஜரி ஆகி அதிக நாள் ஆகலை…”

“ஸோ, கை குடுக்கறதுல என்ன?”

“...”

“பை தி வே, ஏழு வாரம் ஆயாச்சு. தேவையான ஸ்ட்ரெங்த் இருக்குனு டாக்டரே சொல்லிட்டார்”

“எந்த டாக்டர்?”

“உங்கப்பாதான்”

“குருவாயூரப்பா, அவர் கிட்டப் போய்…”

“அவர் பொண்ணுங்கற பயத்துல அவரே கூப்பிட்டு சொன்னதுதான். நீ என் கால்ல ஏறி டான்ஸ் ஆடாம இருந்தா சரிதான்”

“இருந்தாலும் கால்…”

“என்னால ஃபுட்பால்தான் விளையாட முடியாது. ஹேண்ட் பால், வாலி…”

சியாமளா கபிலனின் கையில் சூடான பால் தம்ளரை திணித்துப் பேச்சை நிறுத்தினாள். அதை ஓரம் வைத்துவிட்டு “இங்க வா”

எழுந்து நின்று “ஸாரி… ரொம்ப காக்க வெச்சுட்டேன், இல்ல?” என அணைத்துக் கொள்ள, இத்தனை வருடங்களில் முதல் முறை சியாமளா அழுது பார்த்தான்.

அழுகையை நிறுத்தவென அவள் இதழில் பதிந்தவன், அவளது உந்தியை உள்ளங்கையில் பற்றி “தொந்து” என முனகினான்.

தன் காலையும் காதலியையும் மிகக் கவனமாகக் கையாள, திடீரென பரவிய வெளிச்சத்தில் கண் கூசிய சியாமளா, “என்…ன?”

கபிலன் “பக்கத்துல பார்க்கணும்னு சொன்னேல்ல, நல்லா பாருடீ”

 
Last edited:

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 14
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Active member
Oct 3, 2024
103
28
28
சென்னை
போன வாரம் மனத வருநதிய பாகம். இந்த வாரம் மனதை நெகிழ்ச்சியான பாகம்.. மிகச்சிறப்பு
காவேரி போன்ற சில பேர்களின்.வாய் எதையும் எப்போதும் பேசுபவர்களுக்கு கடவுள்தான் காப்பாற்றனும்
இப்பவாது சாரநாதனுக்கு புத்தி வந்ததே..

புதுசம்பந்தி, சாயம் வெளுத்த கதையை அடுத்த எபிசோடு எதிர் பார்க்கலமா?
 

saradhavasan

Active member
Oct 3, 2024
103
28
28
சென்னை
எப்போதும் போல எல்லோரையும் சரிக்கட்ட வெறும் 1250 ருபாய் செலவுல தன் வாழ்கையின் முக்கியமான நிகழ்வு கல்யாணத்தைப் முடிச்சிட்டான். இந்த மாதிரியான உறவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
சுனந்தா, நாராயணன், நவீன கிரேட்
 

kothaisuresh

Active member
Jun 19, 2024
169
22
28
Chennai
அப்பா, அம்மா இரண்டு சைடு க்கும் கல்யாண செலவு வேண்டாம்ன 1,250ரூ செலவிலேயே கல்யணத்தை முடிச்சிண்டுட்டான். காவேரி வாய் குறையவே குறையாது போல.
சியாமளா பேமிலி👌👌👌👌👌
குந்தவை கல்யாணம் நின்னது
எப்படி?