குறுநகை போதுமடி! 17
கோடைக்காலத்தில் விளையும் மாங்காய், மாம்பழம், மல்லிகைப் பூவைப் போலத்தான் முருங்கைக்காயும். அதுவும் இந்த வருடம் பேய் விளைச்சல். அம்மா நீலவேணியிடம் சொன்னால் ‘பின்னால பாரு, கருப்பா என்னவோ இருக்கு!’ என திசை திருப்புவாள். கண் படக் கூடாதாம்!
பறிக்க, காயவைக்க, சலிக்க, பொடிக்க, பேக் செய்ய என நாள்கள் பரபரப்பாக நகர்கிறது. இன்று கூடுதலாக ஸ்டாக் செக்கிங்கும் இரண்டு லோடு மூலிகைப் பொடிகளை ஏற்றி அனுப்புவதும் சேர்ந்து கொள்ள, வேலை சக்கையாய்ப் பிழிந்தெடுத்தது.
இதுபோன்ற நாள்களில் சாரநாதனை செழியனின் நினைவு பிடித்து ஆட்டுகிறது. ‘யாரிடமும் வாய்விட்டுப் புலம்பக் கூட முடியாது,
வில்லன் வேலை பார்த்துட்டு இப்ப வெசனப்பட்டு என்ன பலன்?’
இதில் இன்று ஒரு அட்டைப் பெட்டி கணக்கில் வராது போக, ஏற்றிய மொத்த சரக்கையும் கீழே இறக்கி மீண்டும் எண்ணி ஏற்றினர். சாரநாதனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சதீஷ் ‘இதெல்லாம் செழியன் ஸாரே பார்த்துக்குவார் ஸார்” என்றதில், மேலும் மனம் உளைந்ததுதான் மிச்சம்.
வேலை முடிந்ததுமே, கோடை வெயிலுக்கு இதமாக மாலையில் திடீரென மழை பெய்ததில் சீக்கிரமே வீடு திரும்பிய சாரநாதன், ஏழு மணிக்கெல்லாம் இட்லி, மல்லி சட்னியுடன் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டான்.
சாரநாதன், தான் ஆவேசப்பட்டு விஜய்யை அடித்ததோடு, செழியனிடம் அப்படிப் பேசியது எத்தனை பெரிய தவறென்பதை, செழியன் தன் வீட்டு வாசலைத் தாண்டும் முன்னரே உணர்ந்தாலும், அதை எப்படி சரி செய்வதென்றுதான் புரியவில்லை.
உடனடியாக செழியனிடம் சென்று மன்னிப்புக் கோர விடாது அவனது ‘அகம்’ அடம் பிடித்தது. அஞ்சு கல் தொலைவா என்ன, அடுத்த வீடுதானே? ஒருவரை ஒருவர் ஏசுவதும் பேசுவதும், அழுவதும் தெளிவின்றிக் கேட்டது.
சாமான்களை உருட்டுவதும் இழுப்பதும் வாசலில் வண்டி வந்து நின்றதும் கிளம்பியதும் என அங்கு நடப்பது அனைத்தையும் அவனால் உணர முடிந்தது.
குந்தவை எங்கே என்ற சியாமளாவும் கபிலனும் சற்று நேரத்தில் புறப்பட்டு விட, கபிலனின் பார்வை இனம்புரியாது மனதில் இடறியது.
“அவசரப்பட்டு வார்த்தையை வுட்டுட்டியே தம்பி… சாகக் கெடந்த எங்கக்கா கிட்ட நான் பாத்துக்கறேன்னு சொல்லி செழியனை நான்தான் நம்ம வீட்டுக்கு கூட்டியாந்தேன். நம்மையே அண்டி இருந்தவேன், அந்தப் பொண்ணு வள்ளியுமே இவிய்ங்க என்ன சொல்றது, நாம என்ன செய்யுறதுன்னு இல்லாதைக்கு அனுசரிச்சு போனா. கைச் செலவுக்கு கூட காசு இருக்கான்னு தெரியல… எங்க போய், என்ன செய்வான், வெள்ளந்தியான பய…” என்று புலம்பிய நீலவேணிக்கு, சாரநாதனிடம் பதில்தான் இல்லை.
“நான் போய் பார்த்துட்டு வரேன் டா” என்று எழுந்தவரை “நான் செஞ்ச தப்பை நான்தாம்மா சரி செய்யணும். நீ போக வேணாம்” என்று தடுத்துவிட்டான்.
செழியன் வெளியேறும் அளவு பிரச்சனை பெரிதாகும் என்று எதிர்பாராத காவேரியும் செண்பாவும் திடீர் மௌனிகளாகி இருந்தனர். குந்தவை அழுகையும் அமைதியுமாக நீலவேணியிடம் தஞ்சமடைந்திருந்தாள்.
ஒன்பதேகால் மணிக்கு கதவைத் தட்டி செழியன் வீட்டு சாவியைக் கொடுத்த வள்ளியின் அண்ணன் “ஏண்ணே இப்டி, மாப்ளை ஒங்களை அண்ணனா கூட இல்ல, அப்பா மாதிரி நெனைச்சாரண்ணே” என்றதில் சாரநாதன் கலங்கித்தான் போனான்.
கையில் இருந்த சாவியை திருப்பித் திருப்பிப் பார்த்தான். பதினேழு வருடங்களுக்கு முன், பிபி எகிறி, நெஞ்சை அடைத்து, படபடத்துப்போய் நான்கு நாள்கள் மருத்துவமனையில் இருந்த சாரநாதன் செய்தவை இரண்டு.
ஒன்று, மகன் கபிலனிடம் தனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், தன் தாய், தமக்கை, மனைவி, மகளுக்குப் பாதுகாப்பாக இருப்பேன் என்ற உறுதிமொழி கேட்டது.
இரண்டாவது, செழியனைக் குடியமர்த்திய சிறிய வீட்டை அவன் பெயருக்கே பத்திரப்பதிவு செய்தது. இந்த விஷயம் சாரநாதனைத் தவிர, நீலவேணிக்கும் செழியனுக்கும் மட்டுமே தெரியும்.
இதுவரை அந்தஸ்து பேதம் பற்றிப் சாரநாதன் எதுவும் பேசியதில்லை. எதையும் வேண்டும் என்றும் செய்யவில்லை. செழியனைப் பற்றி ஏழை உறவினன், என்னிடம் வேலை செய்பவன் என்றெல்லாம் அவன் யோசித்ததே இல்லை. இதுநாள் வரை பணம், அந்தஸ்து என எதுவும் சாரநாதனின் சிந்தையில் குறுக்கிட்டதே இல்லை. சொல்லப்போனால் கபிலனைப் பிரிந்த பின் பிறந்த சின்னுவை குந்தவையை விட அதிகம் கொண்டாடி இருக்கிறான்.
எதிர்பாராத நேரத்தில், சற்றும் எதிர்பாராது விஜய், அக்கா சின்னுவுடன் வந்து தன் மகளைப் பெண் கேட்டு நின்றதும், இவன் வீட்டுக்குள் நுழைந்தபோதே செண்பாவும் காவேரியும் அவர்களின் தகுதி, தராதரம் குறித்துப் பேசத் தொடங்கி இருந்ததும் சேர, ‘என் மகளுக்கு இணையா நீ?’ என்ற எண்ணம் தூண்டப்பட, குதறி விட்டான்.
அதற்காகத் தன் சொல்லுக்கும் செயலுக்கும் மனைவியும் தமக்கையும்தான் காரணம் என அவர்கள் மீது பழி போட சாரநாதன் நினைக்கவில்லை. என்றுமே நிதானத்தைக் கடைபிடிப்பவனின் மனம் மகள் என்று வந்ததும் குரங்காக மாறிவிட்டது.
இதுவரை அமைதி காத்ததே அதிகம் என்பது போல், காவேரி “இருந்தாலும் ஒனக்கு இம்புட்டு கோவம் ஆகாது தம்பி. நீ கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாம். மவேன் செஞ்ச தப்புக்கு செழியன் என்ன செய்வான் பாவம். இன்னும் ஊருக்குத் தெரிஞ்சா நாலு பேரு நாலு விதமா உன்னைத்தானே தம்பி குறை சொல்லுவாங்க” என பிரச்சனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சாரநாதனை முழு குற்றவாளியாக்கி, சிந்தாது சிதறாது டபுள் ஹாஃப் பாயில்ட் போட்டவளைப் பார்த்து செண்பாவே அயர்ந்துதான் போனாள்.
சிறுமலையின் சிறியதொரு மலைக்கிராமத்தில் ரகசியம் எல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம். அதிலும், செழியன் ஒரே நாளில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வீட்டைக் காலி செய்து போனதும், வள்ளியின் அண்ணன் குடும்பத்தின் புகார் புலம்பலுமாக செய்தி பரவியதில் சாரநாதன், செழியனின் உழைப்பை உறிஞ்சி விட்டு உறவை உதறி விட்டதாக ஊர் பேசியது.
‘அந்தப் பையனுக்கும் தைரியம்தான்’
‘இதுக்குதான் மொறைன்னாலுமே வயசுப் பசங்களை எல்லையில நிறுத்திப் பழகணுங்கறது’
‘நம்ம சாரநாதன்கிட்ட இல்லாத வசதியா, கட்டிக் கொடுத்து கை தூக்கி விட்டாதான் என்னவாம்?’
‘கைக்கு அடக்கமான மாப்பிள்ளை. மகளை பக்கத்துலயே வெச்சு பார்த்திருக்கலாம். ம்ப்ச்… என்ன செய்ய… பணக்கார புத்தி’
‘அத்தனை சவரணையா பார்த்த குடும்பத்தை இப்படி நட்டாத்துல வுட்டிருக்க வேணாம்’
‘ஏண்ணே, செழியன் எங்க இருக்காருன்னாவது தெரியுமா,
ஏதாச்சும் பேசினீங்களா?’
‘செழியண்ணே ஒங்களப் பத்தி ஒத்த வார்த்தை தப்பா பேசாதுண்ணே’
‘நீ இப்புடி செய்வேன்னு நான் நெனச்சு கூடப் பார்க்கல தம்பி”
‘மாமா, மாமான்னு உங்காலையே சுத்தி வந்தவனப் போய்…’
முகத்திற்கு முன்னும் பின்னுமாய் எத்தனை விசாரிப்புகள்… வக்கணைகள்… விமரிசனங்கள்…’
குற்றவுணர்வில் தகித்தவனுக்கு வீட்டினரின் அமைதியை விட ஊராரின் கேள்விகள் ஒருவிதத்தில் இதமாகக் கூட இருந்தது.
பால், தயிர், வரட்டி, முருங்கைக் காய் என வாங்கிச் செல்ல வரும் பெண்கள் சாதாரணமாக ஏதாவது சொன்னாலே பட்டென திருப்பித் தரும் காவேரி கூட இப்போது அமைதியை அனுசரித்தாள்.
அடுத்து வந்த நாள்களில் தன் நிழல்போல வேலை செய்தவனின் அருமை புரிய சாரநாதன் செழியனின் அண்மைக்கு ஏங்கினான்.
பொங்கல் முடிந்த பின், கபிலனின் திருமணத்திற்கு ஜவுளி, நகை எடுக்கும் சாக்கில் அனைவரும் மதுரை, கோவை என்று சுற்றப் போய் நான்கு நாள்கள் விஜய்யின் வீட்டில் தங்கிவிட்டு வந்தனர். வண்டியை எடுத்தால் அஞ்சு மணிநேரத்தில் செழியனின் வீட்டு வாசலுக்கே போய்விடலாம்தான்…
ஆனால்… இப்போது, தான் போய் அழைத்தவுடன் செழியன் திரும்ப வந்துவிட மாட்டான் என்றுதான் தோன்றியது. நாவினால் சுட்ட வடுவல்லவா?
தயக்கமும் யோசனையுமாக இரண்டு மாதங்கள் சென்றிருக்க, வள்ளியின் அண்ணன் மூலம் செழியன் வேலை தேடுவதை தெரிந்து கொண்ட சாரநாதன், கோவையில் தனக்குத் தெரிந்த, தன்னிடம் மூலிகைப் பதியன்கள் சில வாங்கும் தோட்டக்கலை வளர்ப்பு மற்றும் அமைப்பை பெரிய அளவில் தொழிலாகச் செய்யும் ஒரு நிறுவன உரிமையாளரிடம் பேசி, ‘யதேச்சையானதொரு’ சந்திப்பின் மூலம் செழியனுக்கு வேலை கிடைக்கச் செய்தான்.
சாரநாதனின் தொழில் தொடர்புகள் அனைத்தும் செழியனுக்குத் தெரியுமாதலால், இது சாரநாதனால்தான் என்பதும் புரிந்திருக்கும். இருந்தும், அவன் வாய்ப்பைத் தள்ளாது ஏற்றுக்கொண்டதே இவனுக்குப் போதுமானதாக இருந்தது.
நேரில் கண்டு சமாதானம் பேச, காலம் இன்னும் கனியாததோடு, விஜய், குந்தவையைப் பெண் கேட்ட விவகாரம் வேறு தீர்க்கப்படாது நடுவில் நிற்கிறதே…
குந்தவை வேறு திருமணப் பேச்சை எடுத்தாலே பிடி கொடுத்துப் பேச மறுக்கிறாள்.
தற்சமயம் சியாமளா கர்ப்பமாக இருப்பது ஒன்றுதான் மகிழ்ச்சியான விஷயம். அவளுக்கு காஸ்மெடிக் ஃபேக்டரியில் மூலிகைகள் வறுபடும் வாசனை, அவை எண்ணெயில் காயும்போது எழும் புகை, அந்தக் கலவைகளின் மணம் எல்லாம் உமட்டுவதால் காலையில் செல்பவள், அன்றைய வேலையைச் சொல்லி, பொருட்களின் அளவைப் பிரித்து ஸ்டாக் ரிலீஸ் செய்து, வேலை தொடங்கியதும் வீடு திரும்பி விடுகிறாள். இப்போது ஃபேக்டரி, மீதி நாள் முழுவதும் குந்தவையின் கண்காணிப்பில்தான் இயங்குகிறது.
“மாமா, எம்புட்டு நேரமா ஃபோன் அடிக்குது… அதைக்கூட எடுக்காம அப்டி என்ன யோசனையோ… யாரோ தர்மராஜாம். பேசுங்க…”
செண்பா வந்து உலுக்கி அலைபேசியைக் கையில் கொடுக்கவும் திடுக்கிட்ட சாரநாதன், தன்னிச்சையாக “ஹலோ…”
“...”
“அப்படிங்களா, ராமநாதன் சொன்னாருங்களா… தேனியா…ஓ, கூடலூருங்களா… நல்லதுங்க… நீங்க வாட்ஸ்ஆப்ல விவரம் அனுப்புங்க. பார்த்துட்டு நானே திரும்ப கூப்புடுறேன்”
“யாரு மாமா ஃபோன்ல?”
“ம்ப்ச்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. கூடலூராம். முப்பது ஏக்கர்ல சொந்தமா திராட்சை தோட்டம் வெச்சிருக்காங்களாம். பையன் பிபிஏ படிச்சிருக்கானாம். அவங்கப்பாதான் பேசினாப்ல. நேர்ல பார்த்து பேசலாமான்னு கேக்குறாரு…”
“...”
“என்ன அம்மு, வரச் சொல்லவா?”
“...”
“என்னடீ?”
“மாமா…”
“ம்…”
“மாமா…” என்ற செண்பாவின் குரல் மிகத் தாழ்ந்து ஒலிக்கவும், சாரநாதன் சிரித்தான்.
“நீ பம்முறதப் பார்த்தா ஏதோ குண்டு போடப் போறா மாதிரியே இருக்குடீ அம்மு”
“...”
“சரி, சொல்லு”
“மேலுக்கு ஏதாச்சும் செய்யுதா மாமா, அதுக்குள்ள படுத்துட்டீங்க?”
“இதக் கேக்கவா அம்புட்டு தயங்கினவ?”
“...”
“இன்னைக்கு சரி வேலடியோவ். வயசாகுதுல்ல… இந்த செழியன் பய கூட இருந்திருந்திருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. பொறவு அதே யோசனையா வந்து படுத்துட்டேன்”
“... கால அமுக்கவா மாமா?”
“ம்…”
கால் விரல்களில் சொடுக்கெடுத்து இதமாகப் பிடித்து விடத்தொடங்கிய செண்பா “வயசை பத்தியெல்லாம் பேசாதீங்க மாமா. உங்க பலம் என்னன்னு எனக்குதான் தெரியும்”
கண்களை மூடியபடியே சிரித்த சாரநாதன் “அதுசரி, இன்னும் மூணு மாசத்துல பேரப்புள்ள பொறக்கப் போவுதுடீ”
“...”
“மாமா…”
“ம்…”
“வர வர குந்தவைய நெனைச்சா வெசனமா இருக்கு மாமா. அவகிட்ட பேசுங்களேன். நீங்க சொன்னா கேப்பா மாமா…”
“...”
செண்பா பேசப் பேசவே, சாரநாதன் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றிருந்தான்.
*********************
காரை நிறுத்திவிட்டு, சாவியைக் கூட எடுக்காது, வீட்டுக்குள் நுழைந்த கபிலன், சியாமளாவைத் தேட, சமையலறையில் டப்பாக்களைத் திறக்கும் சத்தம் கேட்டது. கூடவே பெருங்காய வாசனையும்.
“நான் வர்றதுக்குள்ள என்ன அவசரம், அதான் சமையல் வாசனையே ஆகலைல?” என்றபடி, குளியலறைக்குள் நுழைந்து மின்னல் வேகத்தில் குளித்து உடைமாற்றி, கிச்சனுக்குள் சென்றான்.
வியர்வை பூத்த நெற்றியும் சோர்ந்த முகமுமாய்
மும்முரமாக சமையலறையில் எதையோ கிளறிக் கொண்டிருந்தவளைப் பின்னிருந்து அணைத்து…
“ஏய்… இன்னிக்கு ஆகஸ்ட் 15ஆ?”
“ஏது, ஏப்ரல் மாசத்துல சுதந்திர தினமா?”
“இல்ல… ஸீப்ரா, கோப்ராவா இருக்கியா… தேர் ஃபோர் டவுட் கமிங்…”
பின்னந்தலையால் அவன் நெஞ்சில் முட்டியவள் “ரொம்பக் கெட்ட பையனாயிட்ட கபீஷ்”
“ஆஹான்… “
அவள் முகத்தின் முன் பறந்த முடிகளை ஊதியவன், கடாயைக் காட்டி “, இதென்னடீ மாவு கட்டு போடறாப்போல…இதான் லஞ்ச்சா”
“யெஸ்… இது பேர் மோர்களி ஆர் கூழ். உப்பு, உரைப்பா புளிப்பா யம்மியா இருக்கும். எனக்கு சாப்பிடணும் போல இருக்கு”
“உங்கம்மா இங்க வந்து இருந்த ஒரு மாசமும் எதுவும் வேணாம்னு வாந்தி எடுத்த. இப்ப எனக்கு செய்யத் தெரியாத லிஸ்ட்டா பார்த்து சாப்பிடக் கேக்குற”
“எனக்கும் இதான் ஃபர்ஸ்ட் டைம்”
“முருகா… காப்பாத்துடா”
மாலையில் வந்த சாரநாதன் “அப்பு, மருமவளுக்கு வளைகாப்பு செய்யணும்” என இரண்டு, மூன்று தேதிகளைச் சொன்னான். கபிலன் அமைதியாக இருக்க,
“என்னம்மா சியாமளா, என்னைக்கு வெச்சுக்கலாம்னு நீங்க சொன்னா உங்கப்பா, அம்மா கிட்ட பேசிடுவேன்”
சுனந்தா, மாளவிகா இருவருமே வளைகாப்பு விழாவை அவரவர் பக்கமிருந்து நடத்துவது பற்றி சியாமளாவிடம் பேசி இருந்ததால் அவள் வெறுமே தலையசைத்தாள்.
‘எங்க நடந்தாலும் எங்கம்மா வந்துடுவா… மாளவிகா ஆன்ட்டி எப்டி… பாவம், ஒவ்வொரு தடவையும் இவாளை சமாளிக்கறதை நினைச்சே கபீஷ் டென்ஷன் ஆயிடறார்’
ஒவ்வொரு முறையும் தந்தை ஆவலுடன் முன்னெடுத்துக் கேட்பதும், அம்மாவின் பேரைச் சொல்லி தான் மறுப்பதும், கபிலனுக்கே உறுத்தியதில், வழக்கம்போல் அனைவருக்கும் சாதகமான முடிவு எது என்ற யோசனை ஓடியது.
அப்பத்தா நீலவேணிக்கும் வயோதிகம் படுத்துகிறது. தானே நடப்பேன் என்று பிடிவாதம் செய்து அங்கங்கே விழுந்து வைக்கிறார். எஞ்சி இருக்கும் நாள்களுக்குள் கபிலனின் குழந்தையைத் தூக்குவதும் குந்தவையின் திருமணத்தைக் கண்ணாரப் பார்ப்பதும்தான் அவருடைய தற்போதைய இலக்காக இருக்கிறது. சமீபத்திய ஃப்ளூ ஜுரத்திற்குப் பின் உடல் இன்னும் பலகீனமானதில் நிச்சயமாக அவரால் பயணம் செய்ய முடியாது.
விழாவை சிறுமலையிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று அம்மாவிடம் (மாளவிகா) எப்படிச் சொல்வது?
சுனந்தா “ஷாம்ளா, அவா செய்யறபடி செய்யட்டும். நீ இங்க டெலிவரிக்கு வரும்போது ஒம்போதாம் மாசம் என் ஆசைக்கு நான் ரெண்டு வளையல் போட்டு, பூச்சூட்டி வெச்சுப் பாடிக்கறேன்” என்றதை கபிலனிடம் ஒலிபரப்ப, முன்னிலும் முகம் சிறுத்தான்.
இவனிடம் இது ஒன்று…
குழந்தை உண்டானது தெரிந்ததில் இருந்து அவ்வப்போது அவன் முகத்தில் வந்து செல்லும் இறுக்கம்…
முன்பு வந்த சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள், செல்லச் சண்டைகள், ஓரிரு தீவிர வாக்குவாதங்கள் எல்லாம் அறவே நின்றுபோய், இப்போதெல்லாம் சியாமளா என்ன சொன்னாலும் தலையாட்டினான்.
மகளைப் பார்க்க வந்த சியாமளாவின் பெற்றோர், சில நாள்களுக்கு அவளைத் தங்களோடு அழைத்துச் செல்லக் கேட்க, கபிலனின் முகமாற்றத்தைக் கண்ட நாராயணனே “ஷாம்ளா, அம்மா கொஞ்ச நாள் இங்க இருந்து உன்னைப் பார்த்துக்கட்டும்” என்று சுனந்தாவை இங்கே விட்டுச் சென்றார்.
சியாமளாவை பிரசவத்திற்கு கொல்லங்கோடு அழைத்துச் செல்வது, அங்கு எந்த டாக்டரைப் பார்ப்பது போன்ற சுனந்தாவின் உரத்த சிந்தனைகளை கேட்க நேரும்போதெல்லாம் அதீத அமைதியாகி விடும் கபிலன்,
தனிமையில் ‘டெலிவரிக்கு நீ அங்கதான் போகணுமா, நார்மல் டெலவரின்னா நம்ம ஹாஸ்பிடல்லயே கூட பார்க்கலாம். உனக்கு பயமா இருந்தா திண்டுக்கல் இல்லைன்னா மதுரைக்கு போகலாம்’ என மனைவிக்கு வேப்பிலை அடிக்கத் தொடங்கி விடுவான்.
தந்தையோ தமையனோ சொல்லாமலே, கபிலன் தன்னைப் பிரிந்து இருப்பது குறித்தும், தன் பெற்றோர் செய்த தவறுகளை தானும் செய்து விடுவோமோ, குழந்தை வளர்ப்பில் தவறிவிடுவோமோ என்ற பயம் அவனிடம் இருப்பதையும் சியாமளா புரிந்து கொண்டாள்.
வெகு சில சமயங்களில் தன் கர்ப்பகால அவஸ்தைகள், அபிலாஷைகளைத் தாண்டி கபிலனைக் கையாள்வது அவளுக்குக் கடினமாக இருந்தது. எங்கே, அவனைத் தனியே விட்டுத் தான் மட்டும் சென்றால், உள்ளூர உடைந்துவிடுவானோ என்ற கவலை இருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் கருதி, சியாமளா இங்கேயே இருப்பதாகச் சொல்லவில்லை.
நல்லவேளையாக கபிலனின் கிண்டலும் சீண்டலும் குறையவில்லை என்பதால்,
விளையாட்டாகவே பதில் சொல்லிச் சிரிப்பாள்.
“என்னை விட்டுட்டு உங்க வீட்டுக்குப் போக ரெடி ஆயிட்டல்ல நீ?”
“உங்களுக்கும்தானே குழந்தை, நீங்களும் வாங்கோளேன். ஜோடியா டெலிவரிக்குப் போவோம் கேட்டேளா”
“அதான் சரி. ஹாஸ்பிடலை என்ன செய்யறது?”
“ஆறு மாசத்துக்கு லீவு விட்டுடலாம்”
“அடிப்பாவி!”
********************
மருமகளுடன் இருக்க விரும்பி மாளவிகா இங்கே வந்து தங்கிச் சென்ற மூன்று நாள்களும், கபிலனின் முகத்தில் அத்தனை வெளிச்சம். என்ன, சாரநாதன்தான் இங்கே வரமுடியாது திணறினான்.
வளைகாப்புவைப் பற்றி சாரநாதன் சொன்னதைக் கேட்ட மாளவிகா, சிறிது அமைதிக்குப் பின் “பரவால்ல கபிலா, இங்கேயே நடக்கட்டும். நான் அப்புறமா வந்து பாக்கறேன். அங்க நிலாக்கு பொண்ணு பொறந்திருக்கு. அவ கனடா போகப்போறா. அதுக்கு முன்னால ரெண்டு வாரம் நம்ம வீட்டுக்கு வரப்போறா” என்றாள்.
*****************
முருங்கைக் கொட்டாரத்தில் இருந்த சாரநாதன், காலடி ஓசை கேட்டுத் திரும்ப, கபிலன் வந்து கொண்டிருந்தான்.
“வாப்பு, சியாமளா தனியாவா இருக்கா?”
“நுங்கு இருக்கா கூட. என்ன விஷயம்ப்பா , அவசரமா வரச்சொன்ன?”
“...”
“அப்பா”
“அப்பு, நாம செழியன் மாமா வீட்டுக்குப் போய் பத்திரிக்கை வெச்சிட்டு வரலாமா”
“...”
“என்னப்பு அப்புடிப் பாக்குற?”
“நிஜமாவாப்பா சொல்ற?”
“ம்ப்ச்… ஏன்டா, எனக்கென்ன செழியனோட வாய்க்கா தகராறா, என்னவோ சின்னப் பய பொண்ணக் குடு, பரிசம் போடறேன்னு வந்து நின்னதும் வந்த ஆத்திரத்துல…”
“அதை விடுப்பா… நாம எப்ப போகலாம்னு சொல்லு…”
“சனிக்கிழமை”
“சரிப்பா, வீட்டுக்குப் போகலாமா?”
“என் வண்டி இருக்குடா”
“நான் நடந்துதான்பா வந்தேன்”
இருவரும் தோட்டத்தின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்க, சாரநாதன் எதையோ சொல்ல வந்து, வந்து தயங்கினான்.
“என்னப்பா?”
“செழியன் விஷயத்துல அப்பாவைத் தப்பா நினைக்கிறியாப்பு?”
“...”
“அன்னைக்கு ஏன் அப்டி பேசினேன், எனக்குள்ள எந்த பிசாசு புகுந்துச்சுன்னு எனக்கே தெரியலப்பு. நுங்கம்மாக்கு நல்லா படிச்ச, வசதியான நல்ல இடமா அமையணும்னு ஆசை…”
“...”
“என்னப்பு, அப்புடிப் பாக்குற?”
“நத்திங் பா. நம்ம செழியன் மாமாதானே, சரிக்கட்டிக்கலாம்ப்பா”
“செழியனை எப்பவுமே நான் வேத்தாளா நெனைக்கலடா. அப்படி நெனச்சிருந்தா சின்னுவை கட்டிக்கச் சொல்லி ஒங்கிட்டக் கேட்டிரு…”
தன்போக்கில் பேசியபடி நடந்த சாரநாதன் கபிலனின் அன்றைய விளங்காத பார்வைக்கான அர்த்தம் புரிந்ததில் தடக்கென தடுமாறி மகனைப் பிடித்துக்கொண்டு நின்ற இடத்தில் நின்றுவிட்டான்.
“என்னாச்சுப்பா?”
“அப்பு…”
“சொல்லுப்பா”
“அப்பா தப்பு பண்ணிட்டேன்டா”
“...”
“அப்பு!”
“சொல்லுப்பா”
“எனக்கு நீ வேற, நுங்கம்மா வேற இல்லடா”
“தெரியும்ப்பா”
“அப்பாவை நம்புறதான?”
“நம்பாம… ஏம்ப்பா இப்டியெல்லாம் பேசுற?”
“...”
“அப்பு”
“ம்…”
“ஆனா, உனக்கு அந்த சியாமளா பொண்ணுதான்டா சரி. ஒன்னிய கட்டி வெச்சிருக்கா பாரு”
நீண்ட வருடங்களுக்குப் பின் கபிலன் தந்தையிடம் வாய்விட்டுச் சிரித்தான்.
பிறகு, “நான் ஒன்னு சொல்லுவேன், செய்வீங்களா?”
*****************
செழியன் குடும்பத்தினர் கோவை முல்லைநகரில் ஒரு வீட்டின் மாடி போர்ஷனில் குடி இருந்தனர். மாலை நேரம். கதவைத் திறந்த செழியன் பேச்சு வராது நிற்க, வள்ளி “வாங்க” என்றாள்.
வீடு நல்ல வசதியாக, காற்றோட்டமாக இருந்தது. ஆரம்பத் தடுமாற்றங்கள், அழுகை, ‘நீ ஏன் மாமா பேசலை, நான் தப்பா சொன்னா நீ சண்டை போட வேண்டியதுதானே, என்னை ஏன்டா தனியா விட்டு வந்த?’ போன்ற உணர்ச்சிகரமான கேள்விகளுக்குப் பின் கொண்டு சென்ற பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புடன் வளைகாப்பு பத்திரிக்கையைத் தரவும் செழியன் கபிலனின் முதுகில் ஓங்கி அடித்துக் கட்டிக்கொண்டான்.
“எனக்குத் தெரியும்டா, நீதான் சொல்லல, ஆனா, சியாமளா சொல்லிச்சு” என்றான்.
வள்ளி டீயும் முறுக்கும் கொண்டு வந்து தந்தாள். கீழே பைக் வந்து நிற்கும் சத்தமும் தடதடவென மாடிப்படியில் யாரோ ஏறிவருவதும் கேட்க, இவர்களது பேச்சு நின்றது.
உள்ளே நுழைந்த விஜய்யின் பார்வையில் முதலில் பட்டது அம்மா வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த குந்தவைதான்.
*****************
கபிலனின் எண்ணப்படி வளைகாப்பு அடக்கமான விழாவாக நடந்தது.
சியாமளாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என ஏழெட்டு பேர் வந்திருந்தனர்.
சாரநாதனும் செண்பாவும் சியாமளாவிற்கு இரண்டு ஜோடி வளையல்கள், பட்டுப்புடவை என விழாவை சிறப்பாகவே நடத்தினர்.
செழியனும் வள்ளியும் வந்தது ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.
இதுவே ஒன்பதாம் மாதத் துவக்கம் என்பதால், சியாமளா விழாவிற்கு மறுநாள் பெற்றோருடன் கொல்லங்கோடு செல்லவிருந்தாள்.
இரவு…
“கபீஷ்…”
“ம்…”
“நம்ம கோந்தை எப்டி, யாரைப்போல இருக்கும்?”
“கோந்தை, ஆந்தைன்ன பாரு…”
“ம்ப்ச்… சரி பேபி, பாப்பா, குழந்தை… போதுமா, இப்ப சொல்லுங்கோ”
“தெரியலையே தொந்தூஸ்”
“நான் சின்ன வயசுல இருந்த மாதிரி இருக்குமா, இல்ல நீங்க குட்டியா இருந்தபோது இருந்த மாதிரி இருக்குமா?”
“ஏன்டீ படுத்துற?”
“உங்க குட்டி வயசு ஃபோட்டோ ஏதாவது காட்டுங்கோளேன். நானும் கேட்டுண்டே இருக்கேன்…”
“...”
“கபீஷா…”
பழசைக் கிளற கபிலனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நிறைமாதம் கர்ப்பமாக இருப்பவளை எண்ணி கோத்ரெஜ் அலமாரியின் உள்ளே இருந்த ஏதோ ஒரு லெதர் பையிலிருந்து ஒரு சிறிய ஆல்பத்தை எடுத்து சியாமளாவிடம் நீட்டினான்.
எல்லாமே கபிலனின் மூன்று வயதிற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கபிலனை சாரநாதன், மாளவிகா இருவரும் நடுவில் உயர்த்திப் பிடித்தபடி இருந்த படம் மிக அழகாக இருந்தது.
‘இதை ஃபோட்டோ ஃப்ரேம்ல வைக்கட்டுமா கபீஷ்?’ எனக் கேட்க வந்தவள், கபிலனின் முக இறுக்கம் பார்த்து வாயையும் ஆல்பத்தையும் மூடினாள்.
சாரநாதன், மாளவிகாவின் காலத்திற்குப் பின்னரும் கூட கபிலனால், பெற்றோரின் இணைந்த புகைப்படத்தை பகிரங்கமாய் வெளிக்காட்ட முடியாதென்ற உண்மை சியாமளாவின் முகத்தில் அறைந்தது.
*****************
சுனந்தா மகளுக்குப் பிடித்ததைக் கேட்டு சமைத்துப் போட்டார். நவீன் இந்தியா திரும்பி இருக்க, நாற்பது நாள் விடுமுறையில் குடும்பத்தோடு வந்திருந்தான்.
ஒன்பதாம் மாதப் பூச்சூட்டல் என்ற பெயரில் சியாமளாவின் வீட்டில் மீண்டும் ஒரு வளைகாப்பு நடத்தினர். கபிலன் மட்டும் வந்திருந்தான்.
ஜெயச்சந்திரனுடன் வந்த மாளவிகா, ஒரு சில்க் காட்டன் புடவையும் மீனாக்ஷி அம்மனிடம் வைத்து வாங்கப்பட்ட கண்ணாடி வளையல்களும் கொடுத்தாள்.
அதற்கு மறுநாள் போக மறுநாள் அதிகாலையில், ஒருபுறம் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்க, சியாமளாவிற்கும் கபிலனுக்கும் மாளவிகாவை உரித்து வைத்தாற்போல் பெண் குழந்தை பிறந்தது.

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 17 - PREFINAL
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.