• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 4

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
30
92
53
Chennai
குறுநகை போதுமடி! 4


ரு, வெளிர் நீல கட்டங்களை
வெள்ளை மற்றும் வெந்தயக் கலர் கோடுகள் பிரித்துக் காட்டிய டெனிம் ஷர்ட்டும் க்ரே நிற ஜீன்ஸும் அணிந்து கண்ணாடியில் புன்னகைத்துப் பார்த்த கபிலனிடம் சிறு பிள்ளைக்கான கிளர்ச்சி (excitement).

நினைவறிந்த நாள் முதல், அம்மா மாளவிகா - ஜெயச்சந்திரன் திருமணம், ஓரிரு சில நெருங்கிய நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நீங்கலாக, நிச்சயம், திருமணம் போன்ற எந்த விழாக்களுக்கும் சென்றிராதவனிடம் மெலிதான பரபரப்பும் படபடப்பும் இருந்தது.

உறவு, அக்கம்பக்கம், நண்பர்கள் தொழில் தொடர்பாளர்கள் என மதுரை வீட்டிற்கு ஆண்டுதோறும் கல்யாண சீஸனில் கை நிறையப் பத்திரிக்கைகள் வரத்தான் செய்தன. இதேபோல் சிறுமலையிலும் வந்திருக்கும்தான்.

ஆனாலும் இன்றுவரை ஏனோ, மாளவிகாவும் சரி, சாரநாதனும் சரி கபிலனை எங்கும், எதற்கும் அழைத்துச் சென்றதில்லை.
நிலா கூட சிலசமயம் பிடிவாதமாகக் கிளம்பி விடுவள். ஆதியின் அடம் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆனால், கபிலன் மட்டும் எப்போதும் வீட்டில்தான்.

‘க்ளையன்ட் கல்யாணம்’

‘நமக்கே அவங்களை இப்பதான் பழக்கம். எத்தனை பேர் போறது?’

‘நீ படி கபிலா, நாங்க வந்துடுவோம்”

“நீயும் நிலாவும் ஜாலியா டீவி பார்த்துக்கிட்டு இருங்க. நாங்க ஆதியைக் கூட்டிட்டுப் போயிடறோம்”

சில நேரம், பளபளப்பாக, புதிதாக உடுத்திக்கொண்டு, தயாராகி அவர்கள் புறப்படுகையில், சென்ற முறை அவர்கள் சாப்பிட்டதாகச் சொன்ன விருந்து மெனுவை நினைக்கையில் கபிலனுக்கும் ஆசையாகத்தான் இருக்கும். ஆனாலும், அதை அவன் வெளிக் காட்டியதே இல்லை.

அப்பா சாரநாதனைப் பொறுத்தவரை, வார இறுதியில், ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர்க்க முடியாத விழாவாக இருந்தால், அன்று அவனைப் பார்க்க வர முடியாதென்று முன்னதாகவே தெரிவித்து விடுவான். ஒருக்கால் விழாவே மதுரையில் எனில், அதில் கலந்துகொண்ட பிறகு மகனை வந்து பார்ப்பதுதான் அவனது வழக்கமாக இருந்திருக்கிறது.

கபிலனுக்குமே “ஒரு காது குத்து இருக்குது அப்பு. அப்பா அங்க போய்ட்டு உன்னை வந்து பாக்கறேன்” என்னும் தந்தையிடம் ஏனோ ‘நானும் வரட்டுமாப்பா?’ என்றோ, ‘என்னை ஏம்ப்பா கூட்டிட்டுப் போகலை?’ என்றோ உரிமையோடு கேட்கத் தோன்றியதே இல்லை. ஒதுக்கம் பழகி, ஒதுங்கப் பழகி விட்டான்.

கபிலன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிறுமலைக்குச் சென்றதே
திருவனந்தபுரத்திற்குப் படிக்கச் செல்வதற்கு சிறிது நாள்களுக்கு முன்புதான். அதனால் உள்ளூர் மக்களோ, விழாக்களோ அவனுக்குப் பரிச்சயம் இல்லை.

கேரளா வந்த பிறகு, தன் தாயின் இறப்புக்கு வந்து போகச் சொன்ன மாளவிகா, அவளது அண்ணன் மகளின் திருமணத்திற்குச் செல்வதாகத் தகவல் மட்டும் தெரிவித்தாள். ஜெயச்சந்திரனின் பக்க விழாக்களுக்கும் இதேதான். தாய்மாமன் வீட்டு விசேஷத்திற்கே அழைத்துச் செல்லாதபோது,
நாத்தனார் மகன்களின் திருமணம் எம்மாத்திரம்?

ஆனால் ஹாஸ்டல் முகவரிக்கு தவறாது அழைப்பை மட்டும் அனுப்பி வைத்தனர்.

நிலா வயதுக்கு வந்த ஒரு நிகழ்வின் அனுபவமே போதுமானதாக இருக்க, அங்கே சென்று காட்சி மற்றும் பேசு பொருளாக நில்லாத வகையில் கபிலனுக்குமே நிம்மதிதான்.

சின்னுவின் திருமணத்திற்கு அழைத்த செழியனிடம் இருந்த அழுத்தம் கூட தந்தை சாரநாதனிடம் இல்லை.

ஒருவேளை “சின்னுவை கட்டிக்கிறியாப்பு?” என்றதை கபிலன் மறுத்ததால் கூட இருக்கலாம்.

எப்படியும், அந்த நேரம் நடந்த நேஷனல் லீக் போட்டிகளுக்கென கபிலன் ஹைதராபாத் சென்றிருந்தான்.

ஆனால் பின்பு சாரநாதனே “அப்பு, சின்னு அவளோட தாய் மாமனோட மகனை லவ் பண்ணி கட்டிக்கிட்டதுல, செழியன், வள்ளி, கல்யாணத்துல தொடங்கின பகை தீர்ந்துருச்சுடா.அதுல அவங்களுக்கு அம்புட்டு சந்தோஷம்டாப்பு. நல்ல வேளை, நான் ஒன்னியக் கேட்ட பொறவுதான் செழியன்ட்ட பேசணும்ணு இருந்ததே நல்லதாப் போச்சு. இல்லைன்னா மொகம் பார்க்கவே சங்கட்டமா போயிருக்குமப்பு” என்று தன் ஆசுவாஸத்தைச் சொன்னான்.

இதோ, இன்று வாழ்க்கையில் முதல்முறையாக, To, Dr. கபிலன் சாரநாதன் BAMS என்று அவனது பெயர் எழுதப்பட்ட மேஜர் நவீனின் நிச்சயதார்த்தப் பத்திரிக்கை அவனிடம். அவனது ப்ரொஃபஸர் நாராயணனே அழைத்த பிறகு, போகாமல் இருப்பது எப்படி?

நிச்சயத்திற்குப் பரிசு கொடுக்க வேண்டுமா, என்ன கொடுப்பது என்று குழம்பி, பின் கூகுளித்து ஒரு லெதர் வேலட்டும் பெல்ட்டும் வாங்கி, கிஃப்ட் பேக் செய்து வந்தான்.

நிச்சயதார்த்தம் நடக்கும் மினி ஹாலின் தரிப்பிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு சிறிது
தயக்கத்துடன் உள்ளே சென்றான். கண்ணில் பட்டவரை அவனைத் தவிர கல்லூரியில் இருந்து யாருமே வரவில்லை அல்லது யாரையுமே அழைத்திருக்கவில்லை எனப் புரிந்தது.

மொத்தமே ஐம்பது, அறுபது தலைகள்தான் இருக்கும். மூன்று வரிசையாக இருந்த நாற்காலிகளின் பின்னே நின்று பரிச்சயமான முகங்களைத் தேடினான்.

சியாமளாவிடம் முகம் திருப்பிவிட்டு, இப்போது கனஜோராகக் தயாராகி வந்து நிற்பது அவஸ்தையாக இருந்தது.

‘நிச்சயமாக ஏதாவது சொல்லுவாள்’

மேடையில் சீர்வரிசைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஒரு சிலரைத் தவிர (‘பொண்ணு வீட்டுக்காரங்க போல’), மற்ற அனைவரும் சளசளத்துக் கொண்டிருந்தனர்.

பட்டும், கெம்பும், பச்சையும், வைரமும் எளிமையான ஆடம்பரத்தில் சரசரத்து, ஜொலித்தது.

‘Subtle yet striking’ என்பதற்கு ஏற்ப, அந்தக் கூடமெங்கும் பதட்டமில்லாத பரபரப்பும், இனம்புரியாத ஈர்ப்பும் விரவி இருக்க, கபிலனுக்கு அந்தச் சூழலே புதிதாக, வித்தியாசமாக இருந்தது.

‘உம்புள்ளை ஆனந்த் எப்டியாக்கும் இருக்கான்?’

‘உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம், கூட்டு, அவியல் எல்லாமே இன்ஸடன்ட் பாட்ல (Instant pot) சேய்ஞ்சுக்கறான்’

‘இந்த வருஷம் நியூஜெர்ஸில ரொம்ப ஸ்னோவாமே?’

‘டிஃபன் கழிச்சோ, சேவையும் காஷி அல்வாவும் பிரமாதம் போ’

‘டிஸம்பர்ல சீஸன்ல கச்சேரி எதுக்கும் போனாயான்ன?’

‘பொண்ணு பாலக்காடு இல்லை. நார்த் ஆற்காடாம்’

‘நம்ம நவீன் டாக்டர். பக்ஷே, பொண்ணு எம்.ஏ தானாம்’

‘கல்யாணத்துக்குப் பொண்ணை வெச்சுண்டு நவீனுக்கு இப்ப என்ன அவசரமோ?’

வித்தியாசமான தமிழும், விதவிதமான வம்பும், ஒவ்வொரு வரிக்கும் ‘ஏய்ய் மற்றும் ஓ…’ போட்டதும் சேர, கபிலனுக்கு ‘காமேஸ்வரன், திரிபுவின்’ நினைவு.

மேடையின் ஒரு பக்கத்தில் இருந்த அறையிலிருந்து வெளிப்பட்ட நாராயணன் கபிலனைப் பார்த்து விட, “வா” என்பதாகத் தலையசைத்து, முன்னே வரச் சொல்லிக் கை காட்டினார்.

கபிலன் நாற்காலிகளின் நடுவே செல்லாமல், தூணுக்கு அந்தப்புறமாக நகர்ந்து மேடையை நோக்கி நடக்க, வழியில் இரண்டு யுவதிகள் மற்றும் ஸ்டைலான ஒரு இளைஞனுடன் பேசியடி சியாமளா நின்றிருந்தாள்.

வழக்கமான ஜீன்ஸ், ஸ்கர்ட், மிடி, டாப், குர்த்தி என்றில்லாமல், சிவப்பில் இருபுறமும் கரும்பச்சைக் கரையிட்ட பட்டுப் புடவை, அதே பச்சைப் பட்டில் ரவிக்கை, அதற்கேற்ற நகைகளோடு கலகலத்தவளைக் கண்டு அசந்து போய் ஒரு கணம் அங்கேயே நின்றவன், அந்த இளைஞன் சியாமளாவின் தோளில் கை போட்டபடி செல்ஃபி எடுக்கவும், சட்டென சுதாரித்து மேலே நடந்தான்.

‘ஸ்டெடி கபிலா’

நாராயணன், சுனந்தா, நவீன் மூவருமே வரவேற்று முதல் வரிசையில் அமரச் சொல்ல, கூச்சமாக உணர்ந்தவன் “நான் ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க ஸார்”

நவீன் “நத்திங் டூயிங். கபிலன் சாரநாதன் வருவார்னு சொன்னதும் உங்களை பார்க்க ஒரு கூட்டமே வெய்ட் பண்றது. கம், கம், கம்” என அழைத்துச் சென்று, தன் வருங்கால மனைவியிடம் தொடங்கி, ப்ளே ஸ்கூல் முதல் பிஹெச்டி வரை பயிலும் பல வயதுள்ள குட்டி, சிறிய, மற்றும் இளையவர்களிடம் கபிலனை அறிமுகம் செய்து வைத்தான்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் அளவு மற்ற விளையாட்டு வீரர்கள் அத்தனை பிரபலம் இல்லை. ஒலிம்பிக்ஸில், ஏஷியாடில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரு வாரத்திற்குக் கொண்டாடுவதோடு அடுத்த போட்டியின்போதுதான் நமக்கு அவர்களது நினைவே வரும்.

தீவிர கால்பந்து ரசிகர்களாக இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்தின் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவனை, அத்தனை பிரபல்யம் இல்லாதவனை செலிபிரிட்டியாக கொண்டாட முடியும்.

நவீன் அறிமுகம் செய்தவர்களில் சியாமளாவுடன் பேசிய இளைஞனும் இளைஞிகளும் கூட இருக்க, சியாமளாவைக் காணவில்லை.

நிச்சயதார்த்த நிகழ்வுகள் தொடங்கிவிட, மணமகனின் சகோதரி, நாத்தனார் என்ற முறையில் பெண்ணுக்கு சந்தனம், குங்குமம் கொடுப்பது, மாலை, நெக்லஸ் எல்லாம் அணிவிப்பது, பெற்றோர் ஏவிய வேலைகளைச் செய்வது, இடையிடையே உறவினர்களுடன் சிரித்துப் பேசுவது என சியாமளா படுபிஸியாக இருந்தாள்.

விழாவோடு சியாமளாவையும் சேர்ந்தே ரசித்த கபிலன், ‘அவ அண்ணனோட எங்கேஜ்மென்ட். அவ அங்கதானே இருக்கணும். நான் என்ன அவளை மட்டுமா பார்த்தேன்?’ என அவ்வப்போது தனக்கே சமாதானம் சொல்லிக்கொண்டு தன் பார்வையைத் தொடர்ந்தான்.

நவீனை வாழ்த்தி, பரிசளித்து, நன்றி சொல்லி, திருப்தியாக உண்டுவிட்டு அங்கிருந்து புறப்படும் வரை சியாமளா கபிலனின் பக்கத்திலேயே வரவில்லை.

அறைக்கு வந்து, உடைமாற்றி, அப்பா, அம்மாவிடம் அலைபேசி, படுக்கையில் படுத்த
பின்பும் விழாவும் சியாமளாவின் தோற்றமும் இருப்பும், இரண்டரை மணி நேரம் போல் அவளைப் பார்வையால் தொடர்ந்ததும் தந்த பரவசம் குறையாதிருக்க, அனுபவத்தை அசை போட்டவன் விருட்டென எழுந்து அமர்ந்தான்.

‘எப்போதும் ‘பக்கத்துல பார்க்கணும்’ சொல்றவ இன்னிக்கு கிட்டயே வராததோட, ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசலை?’

அந்த நாகரிக யுவனும், சியாமளாவை அணைத்தபடி அவன் எடுத்த செல்ஃபியும், அவர்களின் கலகலத்த சிரிப்பும் பேச்சும், கபிலனின் அன்றைய உற்சாகத்தில் ஊசிமுனையாய் இறங்கியது.

‘உன்னைப் பார்க்க வந்தவ கிட்ட முதல்ல நீ ஒழுங்கா பேசினியா?’

‘அவ கூப்பிட்டா வரமாட்டேன்னது நீதானேடா?’

‘அவ வீட்டு விசேஷம். பிஸியா இருந்துருப்பா’

‘அதுக்குன்னு என்னை பார்த்திருக்கவே மாட்டாளா என்ன?’

‘அதெப்படி அவ பேசாம இருக்கலாம்?’

‘உனக்குதான் அவ பேசறதும், நெருங்க முயற்சி பண்றதும் அவஸ்தையா இருக்குல்ல. அப்புறம் ஏன் அவ பேசணும்னு எதிர்பாக்கற?’

சியாமளாவிடம் தனக்கிருந்த எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் எண்ணித் தன் எண்ணம் போகும் போக்கில் கலவரமடைந்த கபிலன், தன் மனவெழுச்சியை சிரமப்பட்டுத் தற்காலிகமாக அடக்கினாலும்,
சியாமளா அவனைக் கண்டு கொள்ளாததில் வெகுவாக சுணங்கித்தான் போனான்.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனை ட்யூட்டி முடிந்து, உண்டு, உறங்கச் செல்லும் முன் இரவு பதினோரு மணிக்கு மேல் அழைத்தார் நாராயணன்.

‘எங்கேஜ்மென்ட்டுக்காக இந்த வாரம் ஃபுல்லா ஸார் வீவுல இருக்காரே, இந்நேரத்துல என்ன?’

நாராயணன் சிறிது தயக்கத்தோடே பேசுவதாக கபிலனுக்குத் தோன்றியது.

“கபிலன், உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும் ஸார்”

“நாளைக்கு நவீன் ஊருக்குக் கிளம்பறான். இஃப் யூ டோன்ட் மைன்ட் உன்னால நவீனை கேலிகட் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ண முடியுமா?”

“ஷ்யூர் ஸார், எப்ப கிளம்பணும்னு சொல்லுங்க”

“எர்லி மார்னிங் அஞ்சு, அஞ்சேகாலுக்குள்ள புறப்படணும்”

“டன் ஸார்”

கபிலன் சரியாக நாலு ஐம்பதுக்குப் போக, நவீன் தயாராகி நின்றான்.

நாராயணன் வலது காலில் சிறிய கட்டுடன் இருந்தார்.

“என்ன ஸார் ஆச்சு?”

“நேத்து ஈவினிங் புழக்கடை படில ஸ்லிப் ஆயிட்டேன். ஏர் லைன் க்ராக்”

நவீனையும் பெற்றோரையும் கோழிக்கோடு வரை அழைத்துச் சென்று, கோட்டக்கல் திரும்பினான். திரும்பி வருகையில் நாராயணன் கபிலனின் ஊர், பின்னணி குறித்துக் கேட்டார். அவனும் எதைச் சொல்ல முடியுமோ அதைப் பகிர்ந்து கொண்டான்.

“அப்பா ஹெர்பல் ஃபார்ம், ஃபேக்டரி வெச்சுருக்கார், நீ ஆயூர்வேத டாக்டர். நல்ல காம்போ டா”

“நீ ஃப்யூச்சரை யோசிச்சுப் படிச்சிருக்காய். இவரும் நவீனும் டாக்டர்ஸ். இந்த ஷாமளிதான்… நல்ல மார்க் இருந்தும் ‘என்னால தடித் தடி புஸ்த்தகமா வருஷக் கணக்கா படிக்க முடியாது. வேணும்னா டயட் & நியூட்ரிஷன் படிக்கறேன்’ ன்னு அதைப் படிச்சா. பின்னே, அதையே ஆயுர்வேதால படிச்சா. இப்ப திரும்பவும் ஆயுர்வேதா குக்கிங்னு ஏதோ கோர்ஸ் இருக்காமே, அதைப் படிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கறா. படிச்ச வரைக்கும் மதி. பேசாம கல்யாணம் பண்ணிக்கோன்னா, எம் மேல சைல்ட் மேரேஜ் ஆக்ட்ல கேஸ் போடுவளாம். இதுக்கு அவ அப்பாவும் அண்ணாவும் சப்போர்ட்டு. நீயே சொல்லு, இருபத்தோரு வயசு முடிஞ்சாச்சு. இன்னும் குழந்தையா அவ?”

சுனந்தா மகள் செய்யும் அட்டூழியங்கள் பற்றித் தன் போக்கில் புலம்பி கபிலனைப் பஞ்சாயத்துக்கு அழைக்க, தலையைத் தலையை ஆட்டி வைத்தான். மருத்துவம் படிக்காததற்கு சியாமளா சொன்ன காரணங்களில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘சோம்பேறி!’

நாராயணன் “கபிலன், சியாமளிக்கு இந்த ஊர்லயே படிக்கற மாதிரி ஏதாவது நல்ல கோர்ஸ் சொல்லேன். எனக்கு அவளை ஹாஸ்டலுக்கு அனுப்ப இஷ்டமில்லை. ஐ மிஸ் ஹர் எ லாட் யூ நோ”

“பொண்ணை இப்டி செல்லங் கொஞ்சினா, கல்யாணங் கழிச்சு அனுப்பறது எப்படி?” என நொடித்தார் சுனந்தா.

கபிலன் “நான் என்ன ஸார் சொல்றது, உங்களுக்குத் தெரியாததா?”

“சும்மா சொல்லுடா”

“ஆயுர்வேதிக் ஹெர்பாலஜியும், காஸ்மெட்டாலஜியும் டிப்ளமா கோர்ஸ் இருக்கு ஸார். அதுக்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு”

சியாமளாவைப் பற்றிய பேச்சும் தகவல்களும் கபிலனுக்குள் சுவாரஸ்யமாக, இதமாக, இனிமையாக இறங்கியது.

இருப்பினும், சியாமளா, தனது சான்றிதழ்களைப் பெறுவதற்கும், ஹாஸ்டல் அறையைக் காலி செய்யவும் திருவனந்தபுரம் செனறிருப்பது தெரியாத கபிலனுக்கு போகும்போதும் சரி, வரும்போதும் சரி சியாமளாவைக் கண்ணிலேயே காணாததில் ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

‘வேணும்னே என்னைத் தவிர்க்கறாளோ?’

தன் குடும்பம், பெற்றோர், குறிப்பாக அம்மா, மற்றும் நிலாப்பா மீதான விமரிசனங்கள், கேலி, ஆர்வமாக நட்பு பாராட்டி, நெருங்கிய பெண்கள் தனது பின்னணி தெரிந்ததும் சாதாரண நட்பைக் கூட முறித்துக்கொண்டு விலகிச் சென்ற கசப்பான சிறு வயது அனுபவங்களால், ஆணோ, பெண்ணோ நட்புகளை ஒரு எல்லையில் நிறுத்தியே பழகிய கபிலன் இந்த ‘சியாமளா விளைவை (Shyamala effect)’ ஏற்கவோ, மறுக்கவோ இயலாது தனக்குள்ளேயே போராடினான்.

நாராயணனுக்கு கால் சரியில்லாததால், அவர் மேலும் ஒரு வாரத்திற்குத் தன் விடுப்பை நீட்டித்திருந்தார்.

மறுநாள் முதல் ஹாஸ்பிடல் டியூட்டி, பயிற்சி, படிப்பு என ஒருபுறம் இருக்க, தன் கவனத்தைத் திசை திருப்ப, வழக்கம்போல் காலை, மாலை, இரவு என கிடைத்த இடைவேளையில் எல்லாம் கால்பந்து விளையாடச் சென்றவன் ஓரளவு வெற்றியும் கண்டான்.

வியாழனன்று மாலை ஆறு மணி அளவில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நுழைந்து விளையாடத் தொடங்கியவன், உடன் விளையாடியவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் மணி ஒன்பதை நெருங்குவதை உணர்ந்து, வியர்வை வழிய அங்கிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தான். மூச்சு வாங்கியது.

துண்டை உருவி துடைத்துக் கொண்டான். அணிந்திருந்த சிவப்பு நிற கையில்லாத ஜெர்ஸி தொப்பமாக நனைந்து உடலோடு ஒட்டி இருந்தது. பாட்டில்களைத் திறந்து பார்க்க, தண்ணீர், எலெக்ட்ரோலைட் பானம் இரண்டுமே காலி. தாகித்தது.

“ஓ, ஷக்ஸ்!” என சலித்தவனிடம்

“யார் மேல கோபம்?” என்ற கேள்வியுடன் ஒரு தண்ணீர் பாட்டில் நீள, திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் எதிரே கைக்கு எட்டும் இடைவெளியில் சியாமளா!

அவளது அண்மையில், அவளது கேள்வியில் இருந்ததாகத் தோன்றிய உரிமையில், தண்ணீரைத் தந்த அக்கறையில், தன்னுடன் மீண்டும் அவள் பேசியதில் ஒரு நொடி, ஒரே நொடியில் பத்து நாளாக மாபாரமாகத் தன்னை அழுத்திய சுமை நீங்கி, உள்ளுக்குள் ச்சில்லென்று ஏதோ பொங்கிப் பரவிய உணர்வை,

“இந்த நேரத்துல இங்க என்ன செய்யுற?” என்ற கேள்வியில் மறைத்தான், கபிலன்.

“இதை நானாக்கும் கேழ்க்கணம். நாள் முச்சூடும் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு அப்டி என்ன விளையாட்டு?”

‘மொபைல் ஸ்விட்ச் ஆஃபா..?’

இல்லாத சட்டையில், பையில் மொபைலைத் தேடிய கபிலன், நெற்றியில் அறைந்து கொண்டான். மதியம் அவசரப் பிரிவில் டியூட்டி என்பதால், மொபைலை அணைத்து கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் பையில் வைத்தவன், அதை வைத்துவிட்டு, விளையாடத் தேவையானவற்றுடன் நேரே இங்கு வந்து விட்டான்.

“உனக்கெப்படித் தெரியும்?”

“உங்க அம்மாவும் அப்பாவும் கால் பண்ணி டயர்டாகி, கடைசில உங்க மென்டர், அதான் எங்கப்பாக்கு கால் பண்ணிட்டா. உங்க கூட படிக்கற பசங்க யாரும் உங்களை மத்யானத்துக்கு அப்புறம் பார்க்கலையாம். எனக்கு நீங்க இங்க இருக்கலாம்னு ஒரு ஹன்ச். அப்பாவால வர முடியலை. அதான் நானே வந்துட்டேன்”

“...”

சியாமளாவின் மொபைல் ஒலிக்க, கபிலனிடம் நீட்டினாள்.

“எங்கப்பாதான். நன்னா திட்டுவார், என்ஜாய்”

“என்ன கபிலன், ஏன் இப்டி?”

“ஸாரி ஸார்”

“சியாமளா மொபைல்ல இருந்து முதல்ல உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசு. நம்பர் தெரியுமா அனுப்பட்டுமா?”

“தெரியும் ஸார்”

“ஓகே டா, டேக் கேர்”

“ஸா…ர், எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ஸார்”

கபிலனின் குரலில் இருந்த தயக்கமும் குற்றவுணர்வும் புரிய, நாராயணன்

“இட்’ஸ் ஓகே கபிலன், நீ முதல்ல ஃபோன் பேசிட்டு, சியாமளியோட வீட்டுக்கு வா”

“இப்ப வேணாம் ஸார், நான் விளையாடிட்டு… குளி… ட்ரெஸ்..”

“பரவாயில்ல வாடா, நேரமாச்சு. சியாமளி தனியா வர வேண்டாம். துணைக்கு வா”

“சரி ஸார்”

சாரநாதனின் “என்னப்பு, இப்டி செஞ்சிட்ட, வார நாள்ல இந்நேரம் வரை விளையாடற அளவுக்கு என்னப்பு? ஏதாச்சும் மேட்ச் வருதா, வேற எதுவும் பிரசசனை இல்லேல்ல? நான் பயந்தே போய்ட்டேன்டா, இனி ஒரு முறை இதுபோல தவிக்க விட்றாதப்பு. எதுவும் சங்கடம்னா சொல்லு, அப்பா வரேன்” என சற்றே கவலையுடன் கூடிய கண்டிப்பைக் காட்ட,

புது எண்ணைக் கண்டு தயங்கி, மூன்றாவது முறைதான் அழைப்பை ஏற்ற மாளவிகா, “நான்தாம்மா கபிலன் பேசறேன்” என்றதுமே, காலை கட் செய்து விட்டு, வாட்ஸ்ஆப் வீடியோ காலில் அழைத்து விட்டாள்.

“ஏன்டா கபிலா இப்டி பண்ற, ஒரு வாரமா ரெண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டேன்ற, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வருது. உடம்பு சரியில்லையோன்னு பார்த்தா, இந்த இருட்டுல ஃபுட்பாலும் கையுமா நிக்கற. யார் நம்பர்ல இருந்தோ கால் போடற. அங்க எதுவும் பிரச்சனைன்னா இப்பவே கிளம்பி இங்க வந்து சேரு.
புரியுதா?”

தலையை ஆட்டியவனிடம் “இன்னும் சின்னப் புள்ளையாடா நீ?” என்று படபடத்தாள் மாளவிகா.

“ஸாரிம்மா, ரிலாக்ஸ் மா. ஏற்கனவே உனக்கு பிபி இருக்கு. கத்தாத மா”

மகனின் சமாதான முயற்சியில் சிறிதே மலையிறங்கிய மாளவிகா “டாக்டர்னு எங்கிட்டயே காட்றியாக்கும்?”

கபிலன் விரிந்த சிரிப்புடன் “ம்மாஆ… பை” என்று இணைப்பைத் துண்டித்து, தன் வழக்கம்போல் அலைபேசியை ஷார்ட்ஸ் பாக்கெட்டில் போடப் போக “ஹலோ, மிஸ்டர் ஃபுட்பால், அது என் மொபைல்” என்றாள் சியாமளா.

‘இவ கிட்டயே போய் மாட்றியேடா கபிலா, சூதானமா இருக்கணும்டா’

“ஸாரி… அண்ட் தேங்க் யூ”

“ஓ…வெல்கம், போலாமா?”

நாராயணன்தான் அழைத்தார் என்றாலுமே, சியாமளாவின் இயல்பில் கபிலன் கலவரமானான்.

இருவரும் வெளியில் வருகையில், கபிலன் “நான் போய் என் பைக்கை எடுத்துட்டு வரேன்”

“அது வரைக்கும் நான் இருட்டுல இங்கயே நிக்கவா, நீங்க என்னோடயே வாங்கோ”

‘இவளோட அந்த டிவிஎஸ் ஜூபிடர்லயா… ஒய் முருகா, ஒய்?’

“இல்லங்க, நான் எப்டி திரும்பி வர்றது? கொஞ்சம் வெய்ட் செஞ்சா…”

“என்னோட துணைக்கு வரச்சொன்னா, ராத்திரி பத்து மணிக்கு என்னை அம்போன்னு நடுத்தெருவுல…”

இரண்டு கைகளையும் உயர்த்திய கபிலன் “லெட்’ஸ் கோ”

தரிப்பிடத்தை நெருங்கும் முன்னரே, சியாமளா தன் ஸ்லிங் பேகில் இருந்த சாவியை அழுத்த, அங்கே நின்றிருந்த கார்களுள் ஒன்று திறந்ததின் அடையாளமாக ஓசை எழுப்பி, விளக்கெரிந்தது. அருகில் செல்ல, அன்று அவன் ஓட்டிய அதே வண்டிதான்.

காரைக் கண்ட நிம்மதியும், அதனூடே மெல்லிய ஏமாற்ற ரேகையும் தெரிந்த
கபிலனின் முகத்தைப் பார்த்த சியாமளா பக்கெனச் சிரிக்கவும், சுற்றும் முற்றும் பார்த்தவன் “என்ன சிரிப்பு?”

“நெக்ஸ்ட் டைம் டூ வீலர்ல வரேன்” என்று ஒரு கண்ணைச் சிமிட்டியவளுக்கு இருளிலும் கபிலனின் முகம் சிவப்பது தெரிய, அவளது கண்கள் ஒளிர்ந்தன.

காரில்…

கபிலனுக்கு இரவு பத்து மணிக்கு மேல் ஏசி காருக்குள், வியர்வை வாசனையோடு கையில்லாத ஜெர்ஸியும் ஷார்ட்ஸுமாய், ஒரு இளம் பெண்ணுடன் அருகில் அமர்ந்து பயணிப்பது சங்கடமாக, கிளர்ச்சியாக, குறுகுறுப்பாக இருந்தது.

சியாமளா வேறு இவனது அவஸ்தையை ரசித்து, கிண்டலாகச் சிரித்து இம்சையைக் கூட்டினாள்.

சியாமளா “நீங்க பெரிய பண்ணையாராமே?”

“…”

“நீங்க என்னை ஆயுர்வேதிக் காஸ்மெடாலஜி படிக்கச் சொல்லி…”

இடைமறித்தவன் “ஸார் கேட்டார், சொன்னேன்”

“ஓ…”

ஸ்கோடா ஸ்லேவியாவை அநாயசமாக ஓட்டியவளை அவதானித்த கபிலன், எவ்வளவு முயன்றும், அவனை மீறி

“நீயே நல்லாதானே ட்ரைவ் பண்ற, உங்க அண்ணா ஊருக்குப் போன அன்னைக்கு எங்க போன?” என்று கேட்டு விட்டான்.

வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்தும் வரை பதில் சொல்லாது வந்த சியாமளா,

“ரொம்பத் தேடினேளோ?”

“ஏய்ய்…” என விரலை உயர்த்தி பத்திரம் காட்டினாலும், முழுதாக இயல்புக்கு மீள கபிலனுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
 

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.