குறுநகை போதுமடி 5
ஒன்றை அல்லது ஒருவரை விரும்புவதற்குக் காரணங்கள் ஏதேனும் இருந்தே ஆக வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒற்றைப் பார்வையில் ஈர்ப்பு வருமா என்றால் வரும். ஒரு பொருளின் மீது வரும் பிடித்தத்திற்கும் அதைத் தன் உடமையாக, உரிமையாகத் தன் வசப்படுத்திக்கொள்ளும் ஆவல் அல்லது வேட்கைக்குமே ஒரு பார்வை போதும். இந்த இயற்கை உணர்வுதான் கத்தரிக்காய் முதல் காதல் வரை பிடித்தம் வரக் காரணமாகிறது.
‘Liking’ என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘suitable’ அதாவது நேர்வான, பொருத்தமான, விருப்பமான, பிடித்தமுள்ள தனக்கு ஏற்புடையதான ஒன்று என்று பொருள். முதல் பார்வையிலேயே கபிலனால் ஈர்க்கப்பட்ட சியாமளா உணர்ந்ததும் இதைத்தான்.
சியாமளா கபிலனை முதலில் பார்த்தது திருவனந்தபுரம் பழவங்காடி மஹாகணபதி கோவிலில்.
B.Sc டயட் & நியூட்ரீஷியன் (ஹானர்ஸ்) நாலு வருடப் படிப்பின் மூன்றாவது வருடத் துவக்கம். கல்லூரி திறப்பதற்கு முதல்நாளே சியாமளாவும் அவளது ரூம்/ க்ளாஸ் மேட்டும் நெருங்கிய தோழியுமான நித்யா நாயரும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தனர். வந்ததுமே அறையை சரி செய்து, பொருட்களை அடுக்கியவர்கள், பிசு பிசுத்த மழையைப் பொருட்படுத்தாது வெளியில் சுற்றச் சென்றனர்.
முதலில் கோவிலுக்குப் போக எண்ணி, ராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் புகழ்பெற்ற பழவங்காடி பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். சனிக்கிழமை என்றாலுமே வழக்கத்தை விட அன்று கூட்டம் சிறிது குறைவுதான்.
பிள்ளையாரை தரிசித்த பின், ஆளுக்கொரு தேங்காயை வாங்கி ஈடு காய் போட்டுக் கிளம்பும் நேரம், வெளியே மழை வலுத்திருந்தது.
தோழிகள் இருவரும் ஒரு ஓரமாக நின்று போவோர், வருவோரை வேடிக்கை பார்த்து, கமென்ட் சொல்லிச் சிரித்தபடி நின்றனர்.
மேலே போர்த்திய அங்கவஸ்திரம் மற்றும் வேட்டியில், கணபதியின் சிற்பங்களை வேடிக்கை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த இரு ஆண்களின் மேல் யதேச்சையாய் பார்வையைப் பதித்த சியாமளா ‘அட, இதென்ன சீனியர், ஜூனியர் மாதிரி!’ என வியக்க, நித்யாவும் அதையே இவளிடம் சொன்னாள்.
பார்த்ததுமே, தந்தையும் மகனும் என்று தெரியுமளவு அப்படி ஒரு உருவ ஒற்றுமை. வயது ஒன்றைத் தவிர, உற்றுப் பார்த்தால் மட்டுமே வித்தியாசங்கள் தெரியலாம்.
அவர்கள் இருவரும் பேசியபடி நகர்வதைக் கவனித்த சியாமளாவிற்கு, தந்தையிடம் பேசுகையில் பளிச்சிட்ட மகனின் கண்கள் வியப்பைத் தந்தது.
சியாமளா, அவளது அண்ணன் இருவருமே பெற்றோர்களுக்கு நெருக்கம்தான். சிரிப்பு, மெல்லிய கேலி எல்லாம் உண்டுதான். ஆனாலும், தந்தையின் அண்மையில், இருவரும் பேசியபடி நகர்கையில், அந்த இனைஞனிடம் இருந்த லயிப்பு ஏனோ, சியாமளாவை ஈர்த்தது.
நித்யா “சியாம், மழ கொறஞ்சு, போவாம்” என, இருவரும் வெளியில் வந்தபோது, தந்தையும் மகனும் தேங்காய் உடைக்க வரிசையில் காத்திருப்பது தெரிந்தது.
அரை மணி நேரம் போல் கடந்திருக்கும். எதிர்புறச் சாலையில் மக், தண்ணீர் பாட்டில், எழுது பொருள்கள், கை துடைக்கும் டவல்கள், நகவெட்டி, ஹேர் க்ளிப், பழைய புத்தகக் கடையில் இருந்து சில புத்தகங்கள், பழங்கள் என வாங்கிக்கொண்டு இருவரும் வர, அதே பிள்ளையார் கோவிலின் எதிர்ப்பக்கம் இருந்த பரபரப்பான டீக்கடை ஒன்றில், சியாமளா மீண்டும் அவர்களைக் கண்டாள்.
இப்போது தந்தை வெள்ளைச் சட்டையில் இருக்க, ராயல் நீலத்தில் டீஷர்ட் அணிந்திருந்த மகனின் கூடுதல் உயரம் புலப்பட்டது.
அந்த முனையிலேயே ஊபர் ஆட்டோவிற்குக் காத்திருக்கையில், கையில் டீ கிளாஸுடன் தந்தை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் நனைந்த மயிர்க் கற்றைகள் அவனது நெற்றியில், காதருகில் படிந்து ஒட்டியிருக்க, புதிதாய் விழுந்த தூறலை ஒரு கண்ணைச் சுருக்கியபடி நிமிர்ந்து பார்த்து, கையிலிருந்த டீயை அவசரமாக வாயில் சரித்துக் கொள்கையில் அவனது தொண்டைக் குழி…
“சியாம், ஆட்டோ வந்நு” என இழுத்துச் சென்றாள் நித்யா.
இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பின், ஒரு வெள்ளி மாலையில் சியாமளா, நித்யா, இன்னும் ஐவர் என ஏழு பேர் குழுவாக சினிமாவிற்குச் செல்கையில் அந்த ஃப்ளெக்ஸ் போர்டை பார்த்தாள். அது ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்கானது.
ஆறேழு கால்பந்தாட்ட வீரர்கள் விதவிதமான போஸ்களில் இருக்க, வலப்புற ஓரத்தில் தெரிந்த முகம் எங்கோ பார்த்ததுபோல், மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது. எத்தனை யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.
சியாமளாவின் வீட்டில் நால்வருக்குமே கிரிக்கெட் பிடிக்கும். அதற்காக வெறியெல்லாம் கிடையாது. நேரமிருப்பின் முழு மேட்ச் அல்லது கடைசி நாலைந்து ஓவர், ஹைலைட்ஸ், ஸ்கோர் மட்டும் தெரிந்துகொள்வது என்பதிலேயே திருப்தி அடைந்துவிடுவர்.முன்பு நவீன் மட்டும் ஸ்போர்ட்ஸ் சேனலை அதிகம் பார்த்து அம்மா சுனந்தாவிடம் திட்டு வாங்கிக்கொள்வான். அவன் ஒரு தீவிர ஃபுட்பால் ரசிகனும் கூட.
சுவாரஸ்யமான படத்தை தோழிகளுடன் அனுபவித்துப் பார்த்தாலுமே, சியாமளாவின் மண்டையைக் குடைந்தது அந்த முகம். திரும்பி வருகையில் போட்டியின் நாள், இடம் பற்றிய விவரங்களைப் பார்க்க விரும்பியவளை, நண்பிகள் நால்வர் ஆட்டோவின் நடுவில் போட்டு நசுக்கினர்.
இரவு இணையத்தில் தேட…
‘வாவ் சந்தோஷ் ட்ராஃபில விளையாடறானா!’
‘செமி ஃபைனல்ஸா?’
‘கபிலன் சாரநாதன்.. ம், பேர் செமையா இருக்கு!’
அடுத்த சனிக்கிழமை கொச்சியில் அரையிறுதிப் போட்டி என்பதைத் தவிர, சியாமளாவிற்கு கபிலனைப் பற்றிய பொதுவான விவரங்கள் மட்டுமே கிடைத்தது.
‘ஆயுர்வேதிக் டாக்டராமே! இங்கதான் படிக்கறானாம்’
அதுவரை ஒரு வகுப்பைக் கூட கட் அடித்திராத, அவசியமின்றித் தனித்து எங்கும் பயணித்திராத, கூட்டத்தைத் தவிர்க்கும் சியாமளா ஏதோ ஒரு உந்துதலில், ஆன்லைனில் மேட்ச்சுக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, மதியம் இரண்டு மணிக்குப் போட்டி நடக்கவிருக்க, இருநூற்று சொச்சம் கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் கொச்சியை நோக்கிக் காலை நேரப் பேருந்தில் பயணித்தாள்.
தந்தையிடம் அனுமதி கேட்க, “அவசியம்னு தோணினா போ. பீ கேர்ஃபுல்” என்றார்.
அம்மா “தனியாவா போற, நித்யா கூட உன்னோட வரலையா?”
“நித்யா நேத்தே கோட்டயத்துக்குப் போய்ட்டாம்மா” என்ற
சியாமளாவிற்கு, நித்யாவைத் தன்னுடன் வரக் கேட்கும் எண்ணமே எழவில்லை என்பதே நிஜம்.
பார்க்கப் பார்க்க விளையாட்டையும் விளையாடியவனையும் பிடித்தது. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
கடைசி உதையில் காற்றில் பறந்தவனைக் கண்டு வயிற்றில் ஏதோ செய்ய கண்களை இறுக மூடிக்கொண்டவளின் செவிகளில் ஒருமித்த கரகோஷத்தால் அதிர்ந்த அந்த விளையாட்டு அரங்கம் முழுவதும் கபிலனின் பெயர் எதிரொலிப்பதைக் கேட்டது.
கடந்த பத்து நாட்களாக, சிறு பொறியாக விழிவழி நுழைந்த கபிலனின் தோற்றமும் சிரிப்பும் பெயரும் இடைவிடாது தனக்குள் வியாபிப்பதைப் போல் உணர்ந்த சியாமளா, செய்வதறியாது திகைத்துதான் போனாள்.
பத்தொம்போது வயது நிறையாத சிறு பெண்தான் என்றாலுமே, அவள் வளர்ந்த சூழல், அவளது நேரிடல் (exposure)...
அப்பாவின் “சியாம், உன் மரியாதை உன் கைலதான் இருக்கு…’
அம்மாவின் ‘நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருந்துட்டு, நாலு வருஷம் போனது தெரியாம திரும்பி வரணும்…’
பெற்றோர் பார்க்கும் பெண்ணை சந்திக்கப்போகும் நாளுக்காக நாட்டின் எல்லையில் காத்திருக்கும் அண்ணா நவீன்…
அடிக்கொரு முறை ‘யு ஆர் லுக்கிங் லாஸ்ட் சியாம். எந்தொரு ஆஸ்யம் (யோசனை)?’ எனக் கேட்கும் நித்யா நாயர்…
விடைகளை வரையறுக்க முடியாத வினாக்களுடன் தன்னுடனே, தனக்குள் போராடி, கபிலனை மீண்டும் நேரில் பார்க்கும் ஆவலில் ‘இந்த ஒரு தரம் மாத்திரம்’ என்று தீர்மானித்த பிறகுதான் இங்கே வந்தாள்.
அவனுக்குக் கிடைத்த பாராட்டில், காரணமின்றிப் பெருமிதம் அடைந்தவள் உடனேயே மனம் சோர்ந்தாள்.
‘இப்ப நான் போய் அவனைப் பார்த்து என்னாகப் போறது?’
கொண்டாட்டத்தின் நடுவே இருந்த வீரர்களின் ரசிகர்கள், விசிறிகள் இருந்தாலும், அவர்களது குடும்பத்தினர் வந்து உற்சாகமூட்டுவதும் அருகில் நெருங்கி அணைத்துக் கொள்வதுமாக இருக்க, சியாமளாவிற்கு சக வீரர்கள், அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தன்னை நெருங்கிய ரசிகர்களிடம் கை குலுக்கிய அன்றைய ஆட்ட நாயகனான கபிலனிடம் ஏதோ ஒரு விலகல் இருப்பதாகத் தோன்றியது.
இந்த எண்ணம் உதித்த நொடியே அவனை நோக்கி நகர்ந்திருந்தாள். அமைதியாக நின்றவளை தள்ளு முள்ளில் இருந்து காக்க எண்ணி ‘ஆட்டோகிராஃப் வேணுமா?’ என கபிலன் தானே முன் வந்து பேசியதும், அவளது பதிலுக்கு அவன் புன்னகைத்ததும் ரிபீட் மோடில் ஓடியதில், அடுத்தடுத்து கபிலன் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் சியாமளா ஆஜர்.
அவனது பூட்டப்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டா ஐடிகளில் அவனைப் பின் தொடர்ந்து, வேறு பெயரில் நட்பாகி, இவளது நான்கு வருடப் படிப்பு முடிந்து, அவனுக்காக, அவனது கல்லூரியிலேயே ஒரு பட்டயப் படிப்பில் சேர்ந்து, ஆளைத் தேட, கபிலனைக் காணவில்லை, அவன் போட்டிகளில் விளையாடியே ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.
ஆறு மாதப் படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால், தந்தையின் நேரடி வழிப்படுத்துதலில் கபிலன்!
‘ஐ லவ் யூ’ என்ற சம்பிரதாயமான வாக்கியத்தில் இல்லை எனினும், அவன் மீதான தன் விருப்பம், ஈடுபாடு எல்லாம் நன்றாகத் தெரிந்த கபிலன் தன்னைத் தவிர்ப்பது ஏன் என்றுதான் சியாமளாவிற்குப் புரியவில்லை. அதற்காகத் தன் முயற்சியைக் கை விட்டுத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் அவள் தயாரில்லை.
அநாவசியமாக அவனை நேரில் சென்று சந்திக்காதவள், கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடாததோடு, கபிலனிடம் தன் மனதை வெவ்வேறு விதத்தில் விளையாட்டுப் போல் வெளிப்படுத்தத் தயங்கியதும் இல்லை.
தன் சீண்டல், கேலி, கேள்விகளுக்குப் பளிச்சிடும் கபிலனின் கண்களின் ரசிப்பும், அடக்கப்பட்ட சிரிப்பும் வெளிப்படுவது கண நேரமேயானாலும் சியாமளாவைப் பொறுத்தவரை மகத்தான நம்பிக்கை தரும் தருணங்கள்.
அதிலும், தான் அவனுடன் ஒருநாள் பேசாது விலகி நின்றது அவனை அத்தனை பாதித்ததில் சியாமளா குத்தாட்டம் போடாத குறைதான். இதற்கும் கபிலன் ‘என்னைத் தேடினாயா?’ என்ற அவளது கேள்விக்கு கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை.
கோட்டக்கல்லிலேயே இருந்த வேறோரு ஆயுர்வேதக் கல்லூரியில் காஸ்மெட்டாலஜி படித்த சியாமளா, பெற்றோரின் அனுமதியோடு, தகுந்த காரணத்துடன் அவனை சந்தித்தும், அவர்கள் எதிரிலும் அத்தனை இயல்பாக உரையாடியவளைக் கண்டு, அவர்கள் எதிரே தன்னிடம் எப்போது என்ன சொல்வாளோ என கபிலனுக்குதான் ஓரே திகிலாக இருக்கும்.
கபிலன் அவர்கள் வீட்டிற்குச் சென்றது மொத்தமே இரண்டு அல்லது மூன்று முறைதான். தன் மென்டரின் மகள், ஸ்லோகம், பஜனை என்றிருக்கும் சுனந்தா, அவர்களது வீடு, வழமை, இதன் நடுவே சியாமளா செய்யும் ரகளையில் தன்னை ஏதேனும் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் என்ற பயம் அவனுக்கு.
கபிலனின் படிப்பு முடிய இன்னும் நாலைந்து மாதங்களே மீதமிருந்த நிலையில், நாராயணன் வீட்டினர் எதிர்பார்த்தபடி
நவீன் ஃபார்வர்ட் ஏரியாவிலிருந்து கஸோலிக்கு மாற்றலாகி வர, ஒருவழியாகத் திருமண நாளை நிச்சயித்தனர்.
திருமணம் சென்னையில் நடக்க, கோட்டக்கல்லில் திருமண வரவேற்பு நடந்தது.
திருமண வரவேற்புக்கு கல்லூரி முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ஒருவர் விடாது வந்திருந்தனர்.
மணமகள் முதல் நிச்சயத்தில் கபிலனை பார்த்திருந்த இளைஞர்கள் வரை அவனிடம் நின்று பேசியது கல்லூரி ஆசிரியர்களோடு, நாராயணன் அழைத்திருந்த சில மாணவர்களுமே, அமைதியான கபிலன் நாராயணனின் குடும்பத்தினரோடு சகஜமாக உறவாடுவதில் வியந்தனர்.
நிச்சயத்தில் பேசாது விலகி நின்றவள், இப்போது தன் உறவுகளோடு இணைந்தும் தனியாகவும் வரவேற்று, சிலரிடம் அறிமுகப்படுத்திப் பேசிச் சிரித்த சியாமளா, தன்னிடம் காட்டிய நெருக்கத்தில் உயர்ந்த புருவங்களை, சுழிந்த உதடுகளை, கண்கள் காட்டிய ஜாடைகளை உணர்ந்த கபிலன் தன்னை சமன்படுத்திக்கொண்டு இயல்பாகக் காட்டிக்கொள்ள வெகுவாகத் திண்டாடிப் போனான்.
பலரும் ஆட்டோகிராஃப் கேட்க, கையெழுத்திட்ட கபிலனின் அருகில் நின்ற சியாமளாவின் முக ஒளிர்வைக் கண்ட சுனந்தாவிற்கு சற்றே சுருக்கென்றது.
**********************
மகவின் முகம் பார்த்துப் பசியும் பிணியும் அறியும் தாய்க்கு பிரியத்தின் பிரகாசத்தை அடையாளம் காண முடியாதா என்ன?
படித்துப் பண்பட்டதன் அடையாளமாய், உடனே மகளிடம் பாயாது, கல்யாணப் பரபரப்புகள் அனைத்தும் அடங்கி, மகனையும் மருமகளையும் சாம்பார்பொடி, உறுகாய் சகிதம் கஸோலிக்கு அனுப்பி வைத்த பிறகே சுனந்தா கணவரிடம் தன் அச்சத்தை, ஐயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நாராயணன் “ஷாம்ளா கிட்ட அவசரப்பட்டு எதையாவது கேட்டு வைக்காத. அதைவிட, கபிலன் ரொம்ப பொறுப்பான, நல்ல பையன். நான் பாத்துக்கறேன்” என அப்போதைக்கு மனைவியை அடக்கிவிட்டார்.
கபிலனின் கடைசி செமஸ்டருக்கு ஓரிரு வாரங்களே இருந்த நிலையில், சியாமளாவும் தன் படிப்பில் பிஸியாக இருந்ததில், இருவரும் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எப்போதாவது மொபைலில் வந்த அவளது தகவல்களுக்கு கபிலன் சரிவர பதிலளித்தான் இல்லை.
தேர்வுகள் முடிந்து, ஹாஸ்டலை காலி செய்துகொண்டு ஊருக்குத் திரும்பும் முன், நாராயணன் கபிலனை வீட்டுக்கு அழைத்தார். அங்கும் சியாமளா இல்லாததில் அவளைப் பார்க்காமலே புறப்பட்டான்.
ஒன்பது வருட இடைவெளிக்குப் பின், சிறு பிள்ளை போல் மதுரையில் அம்மா மாளவிகாவின் வீட்டில் போய் இருக்க இப்போது கூச்சமாக இருந்தது.
கடந்த சில வருடங்களில் ஓரிண்டு நாள்கள் மட்டுமே தங்கி விருந்தாடிய தந்தையின் வீட்டிற்கு உரிமையுடன் செல்லத் தயங்கினான்.
பேசாமல் சென்னை, பெங்களூர் என ஆயுஷ் மருத்துவமனை எதிலாவது வேலைக்குச் சென்று விடும் யோசனை வர, கூடவே
தந்தைக்கு உதவ எண்ணி, லட்சக்கணக்கில் அவர் செலவு செய்ய, படித்துவிட்டு அப்படிச் செல்வது சரியா என பலவிதமான குழப்பத்தில் இருந்தவனுக்கு
சுனந்தா “ஷாமளிக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிடனும். எங்க ஃபேமிலிக்குத் தகுந்தா மாதிரி, அவளுக்கு ஏத்தாப்போல நல்ல வரனா அமையணும்” என ஆழம் பார்ப்பது போல் பேசியது கபிலனுக்கு அந்த நேரம் உறைக்கவே இல்லை.
தந்தை சாரநாதன் ‘எங்கேயும் போகக்கூடாது’ என்றதோடு மருத்துவமனை கட்ட இடமும் பணமும் முதலீடு செய்து, கட்டுமானமும் தொங்கிவிட்டது.
வங்கவங்கியில் கடன் வாங்கும் முன், அது வரை கால்பந்தாட்டத்தில் தான் சம்பாதித்த சிலபல லட்சங்களை உபயோகிக்கச் சொன்ன கபிலனை அறவே மறுத்து, அதோடு கூடுதலாகப் பணம் போட்டு திண்டுக்கல் நகரின் மையத்தில் இடத்தை வாங்கிப் போட்டதோடு,
“அப்பு, பின்னால நாம இங்கிட்டு உம்பேர்ல ஒரு ஃபுட்பால் அகாடமி தொடங்கணும்டா!” எனவும், தனக்கான பொறுப்புகள் கூடுவதை கபிலன் உணர்ந்தான்.
‘நலம்’ மருத்துவமனைக்கான அடித்தளம், கட்டுமானம், உள்கட்டமைப்பு எனத் தன்னை ஒரு மருத்துவனாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருந்த கபிலன், அடுத்து வந்த மாதங்களில் விளையாட வந்த வாய்ப்புகளைக் கூடத் தவிர்த்து விட்டான்.
ஏறத்தாழ ஏழு மாதங்களுக்குப் பின் கேரள அணியின் சார்பாக விளையாட கோவா சென்றவனின் கண்கள் அவனையும் அறியாது சியாமளாவைத் தேடியதில் சற்று தடுமாறித்தான் போனான்.
படிப்பு முடிந்து வந்த புதிதில் எங்கும், எதிலும் மனம் பொருந்தாது, அமைதியற்று இருந்தவனுக்கு, சியாமளாவின் தாய் சொன்னதின் அர்த்தம் மெல்ல மெல்ல உள்ளே இறங்கியது.
‘ஆன்ட்டீ எங்கிட்ட அப்படிப் பேசற அளவுக்கு, நான் என்ன செஞ்சேன்?’
‘ஒருவேளை சியாமளா எதையாச்சும் உளறி இருப்பாளோ?”
‘அவ கிட்ட இருந்து ஏன் ஒரு மெஸேஜ்… வேணாம், ஒத்த இமோஜியக் கூட காணும். ’
‘அவ போட்ட மெஸேஜுக்கெல்லாம் நீ பதில் போட்டுக் கிழிச்சுட்ட பாரு, பேசாதடா!’
‘ஒருக்கால், அவங்கம்மா எங்கிட்ட சந்தேகமா பேசினாப்போல அவ கிட்டயும் எதாவது கேட்டு இருப்பாங்களோ?’
சில நாள்கள் வரை தவிப்பாக உறுத்தியது, மெதுவே நெருடலாக மாறி மூலையில் பதுங்கியது.
கோவாவில் மட்டுமின்றி, அதன் பின்னே கபிலன் விளையாடிய போட்டிகள், அதிலும் அவை அனைத்தும் கேரளத்திலேயே நடந்தும் சியாமளா வரவில்லை.
சியாமளாவின் அலைபேசி எண், அவளது முகவரி, வீடு, அவள் படிக்கும் கல்லூரி, முக்கியமாக அவளின் மனது என அனைத்தையும் அறிந்திருந்த கபிலனிடம் இருந்தது அவளுக்கானத் தேடலே தவிர, நாடல் இல்லை.
அதேபோல், சியாமளாவே தன்னை நாடி வந்தால், தான் என்ன செய்வோம், எப்படி எதிர்வினையாற்றுவோம் என்ற யோசனையும் அவனிடத்தில் கிடையாது.
******************
சொந்த அத்தை மகன், மாமன் மகள் என சுலபமாக நிறைவேறக் கூடிய காதலுக்கே முட்டுக்கட்டை போடும் தேசத்தில், இனம், சூழல், வழமை என அனைத்திலும் முற்று முழுதாக மாறுபட்ட கபிலன் மட்டும் விதிவிலக்கா என்ன?
படிப்பு, பணம், மொழி, இனம் போன்ற வித்தியாசங்களைக் கடந்து, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர் காதலை எதிர்ப்பதில் காட்டும் ஒற்றுமை அளப்பரியது.
ஆம். கபிலன் எண்ணியது போலவே, சியாமளாவிற்கு வீட்டில் கெடுபிடிகள் அதிகரித்தது. இந்த விஷயத்தில் டாக்டர் நாராயணன், மனைவி சுனந்தாவை ஆதரிக்கவில்லை. அதே நேரம், எதிர்க்கவும் இல்லை. மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டார்.
கபிலன் சென்ற கையோடு, மகளின் படிப்பு முடியும் முன்னரே மகளுக்கு வரன் பார்க்கத் தொடங்கிய சுனந்தா, ஆன்லைன், ஆஃப்லைன் என ஒரு மேட்ரிமோனியையும் விடாது சலித்து, தினமும் பத்துப் பதினைந்து ஃபோட்டைக்களையும், வரன்களின் விவரங்களையும் பார்க்கச்சொல்லி சியாமளாவை நிர்ப்பந்தித்தார்.
“இப்பவே என்னம்மா அவசரம், எனக்கு ஜோலிக்குப் போகணும் கேட்டயா?”
“நீ கல்யாணத்தைப் பண்ணின்டு எங்க வேணா போ”
“இதென்னம்மா, அமேஸான்ல வாங்கற சாமானா… மாப்பிள்ளையை ஸ்வைப் (swipe) பண்ணித் தள்ளி செலக்ட் பண்றதுல எனக்கு சுத்தமா இஷ்டமில்லை”
“உனக்காகப் புள்ளையை வெச்சுண்டு நிக்க, அத்தையும் இல்லை மாமாவும் இல்லை. இப்போதைய ட்ரென்ட் இதுதான். இது வேண்டாம்னா நீயே யாரையாவது லவ் பண்ணினாதான் உண்டு. உனக்கு அப்படி எதுவும்…?”
அம்மா தன்னைக் கேட்டுவிட்டுக் கூர்ந்த விதத்தில், தன்னிடம் நேரடியாக யார் என்று கேட்காவிட்டாலும், சந்தேகப் படுகிறாள், அதனால்தான் இந்தக் காதல் காப்பு நடவடிக்கை என சியாமளா புரிந்துகொண்டாள்.
அவள் கபிலன் மீதான தன் விருப்பத்தை மறைக்க நினைக்கவில்லை. இப்போதும் கூட ‘யார் அவன்?’ என்ற கேள்வி வந்திருந்தால், கபிலனின் பேரைச் சொல்லி இருப்பாள். அதிலும் அவனிடமிருந்து மெலிதான ஒரு கண்ணசைவு, ‘ம்’ என்ற ஒரு ஒப்புதல் சப்தம், ஒற்றை இதய வடிவ இமோஜி என ஏதாவது ஒன்று வந்திருந்தால் கூட, மற்ற விஷயங்களைப் போல் எதையும் பெற்றோர் கேட்பதற்கு முன் அவளே ஒப்பித்திருப்பாள். எங்கே?
நாலரை வருடப் பரிச்சயம் இருந்தும், அவளது தந்தையின் மாணவனாக வீடு வரை வந்து சென்ற பழக்கம் இருந்தும், கடைசியாக விடை பெற்றுச் செல்ல வந்தவன் அவளிடம் ஒரு வார்த்தை, ஒரு தகவல் என எதுவுமில்லாது சென்றிருக்க, எந்த அடிப்படையில் அவனது பேரைச் சொல்வாள்?
‘என் நேசத்தை ஏற்க வேண்டாம், அவன் விருப்பம், சூழல், சரி. அதற்காக, என் நட்பைக் கூட உதாசீனம் செய்வானா அவன்?’
அவ்வப்போது அலையாய் எழும் கோபம், ஆத்திரத்தில், வருத்தங்களில் அடித்து செல்லப்படும் கபிலன், அவை வடிந்தபின், மீண்டும் மனக்கரையில் ஒதுங்கி விடுகிறான்.
‘ஈஸ்வரா, என்ன அவஸ்தைடா இது?’
அவள் படித்த கல்லூரியிலேயே பகுதி நேர விரிவுரையாளராகச் செல்லத் தொடங்கினாள்.
அம்மாவின் சந்தேகம், வரன்களின் அணிவகுப்பு, அவளது வேலை, கபிலனின் பாராமுகம் என எல்லாம் ஒருமித்து நிற்க, ‘நான் உனக்கு அத்தனை இளப்பமா?’ என்ற ஈகோ மேலெழ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவனைத் தொடர்பு கொள்வதை சுத்தமாக நிறுத்தி விட்டாள்.
சியாமளா வழக்கம்போல் வேலைக்குச் செல்வதும், கல்லூரியில் நடந்தவற்றை சொல்வதுமாக தன் இயல்பில் இயங்க, வரன் பார்க்கத் தொடங்கியும் கபிலனைப் பற்றி அவள் எதுவும் சொல்லாததில், கண்ணெதிரே இருந்தவன் தொலைதூரம் சென்றதும் மகளின் மனம் மாறிவிட்டதென பெற்றோர் தவறாகப் புரிந்து கொண்டனர். விளைவு?
அன்று வெள்ளிக்கிழமை. காலையில் குளித்துத் தயாராகி, “அம்மை, டயமாச்சு. டிஃபன் வேண்டாம். டப்பா மட்டும் குடு” என்றவள், எப்போதும் அவளுக்கு முன் கிளம்பி விடும் தந்தை
பேப்பருடன் தரையில் கால்நீட்டி அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
சியாமளா “அப்பா” என அழைத்துக் காரணம் கேட்கும் முன், அவரே
“ஷாம்ளி, அம்மா சொன்னாளா, இன்னிக்கு நீ காலேஜுக்கு போக வேண்டாம்”
“ஏன், ஃபர்ஸ்ட் ஹவரே எனக்கு லெக்சர் இருக்குப்பா”
நாராயணன் பதமான வார்த்தைகளைத் தேட, கிச்சனில் இருந்து வேகமாய் வந்த சுனந்தா “உனக்கு பத்மினி அத்தையை நினைவிருக்கா, அதான்டீ, பூனால இருக்கற உங்கப்பாவோட சித்தி பொண்ணு, ரிஸர்வ் பேங்க்ல இருக்காளே … அவ இன்னிக்கு ஃபேமிலியோட இங்க வரா”
சியாமளா “வரட்டும். யார் வேணாம்னா, அதுக்கும் நான் காலேஜ் போறதுக்கும் என்னம்மா கனெக்ஷன்?”
“அவ புள்ளை ஹரீஷை நினைவிருக்கா உனக்கு, சிகாகோல இருக்கானே. அவனுக்கு உன்னைக் கொடுக்கணும்னு உங்கப்பாக்கு ஆசை. ஜாதகமும் சேர்ந்திருக்கு. பத்மினியே ஃபோன் சேய்ஞ்சு கேட்டா தெரியுமோ?”
சியாமளா எள்ளலாக “யாரு, அடிக்கற நோட்டெல்லாம் அவளோடது மாதிரி பேசுவோ, மனசுல ரிஸர்வ் பேங்க் கவர்னர்னு நினைப்பு, சரியான அலம்பல் கேஸ்னு சொல்லுவியே, அந்த பத்மினி அத்தையாம்மா?”
மனைவியை முறைத்த நாராயணன் “இதென்ன பேச்சு ஷாம்ளா, பத்மினி ஒரு மூணு மணி நேரம்தான் இங்க ஸ்டே பண்றா. லஞ்ச் இங்கதான். டேக் லீவ் அண்ட் ஸ்டே பேக். அம்மாக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு”
சியாமளா அதற்கு மேல் பெற்றோருடன் விவாதிக்க விருப்பமின்றி, விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
ஆனால், பத்மினியை விட அவள் புத்திரன் அதிகம் அலட்டியதில், நாராயணனே “சியாமளா கிட்ட இன்னிக்குதான் சொன்னோம். நவீன் கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்” என ஒரு மாதிரி என்ட் கார்ட் போட்டுவிட்டார்.
மீண்டும் அடுத்த மாதமே ‘கேஷுவல் மீட்’ என்ற பெயரில் ஒரு குடும்பத்தை ஹோட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்ய, சியாமளா திடமாய் மறுத்து விட்டாள்.
“எனக்கு இப்ப யாரையும் பார்க்க வேண்டாம்ப்பா. ப்ளீஸ்”
சிறிய இடைவெளிக்குப் பிறகு நாராயணன் “கபிலனோட இன்னும் கான்டாக்ட்ல இருக்கியா ஷாம்ளா?”
“இல்லப்பா”
“அப்புறம் என்ன?”
“...”
சுனந்தா “ஆனாலும் உனக்கு இத்தனை ஆழ்மை ஆகாதுடீ, நீங்க என்ன, விட்டா அந்தப் புள்ளைக்கே இவளைக் கல்யாணம்…”
“சுனந்தா, கொஞ்சம் பொறுமையாதான் இரேன். லுக் ஷாம்ளா, ப்ராக்டிகலா இது சரி வராது. வேற கல்ச்சர், வேற பேக்ரவுண்ட். சாப்பாட்ல இருந்து எல்லாம் வித்தியாசப்படும். கபிலன் நல்ல பையன்தான். ஆனா, அவன் தனி இல்லையே. நீயே யோசி”
‘வேற்று இனத்தைச் சேர்ந்த கபிலன் எனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டாம்’ என்பதைக் கதர்த் துண்டால் கரகரவெனத் துவட்டாது, டர்க்கி டவலால் மென்மையாக ஒற்றி எடுத்தார் தந்தை.
“கொஞ்ச நாள் போகட்டும்பா” என்று அந்தப் பேச்சுக்குத் ‘தொடரும்’ போட்ட சியாமளா, அடுத்த மாதமே ‘சேஷா ஆயுர்வேதா’ வில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து ஹைதராபாத் போவதாகச் சொன்னபோது, மகளின் முன்னேற்றம் கருதி, மகிழ்ச்சியாகவே ஏற்றனர்.
நல்லதொரு கம்யூனிடியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டைப் பார்த்து, அவசியமான சாமான்களை வாங்கி செட் செய்து கொடுத்தனர்.
***************
சியாமளா கபிலனைப் பார்த்தே இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் தேசியக் கால்பந்தாட்ட டோர்னமென்ட்டுக்கான விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் கபிலனின் முகம் தெரிந்தது.
பரபரவென செய்தியைத் தேடிப் படிக்க, கேரள அணியின் வீரர்கள் பட்டியலில் கபிலன் சாரநாதனின் பெயரும் இருந்தது.
‘ஓ, திரும்பவும் விளையாடறானா!’
போட்டி நடைபெறும் தேதிகளைப் பார்க்க, மீதம் இருந்தது ஃபைனல்ஸ்தான். அதுவும், இன்னும் இரண்டே நாள்களில். கபிலனை நேரில் காணும் ஆவல் பெருகியதில், ஃபிளைட்டுக்கும், மேட்ச்சுக்கும் அதிகப் பணம் கொடுத்து டிக்கெட்டை புக் செய்தாள்.
‘நானா போய் எதுவும் பேச மாட்டேன். சும்மா பார்த்துட்டு வந்துடுவேன்’
*****************
‘இந்தியக் கால்பந்தாட்டத்தின் மெக்கா’ எனப்படும் கொல்கத்தா. அந்த விளையாட்டின் இதயத் துடிப்பாய் விளங்கும் நகரம். ‘விவேகானந்தா யுகபாரதி கிரங்கன்’ அல்லது சால்ட் லேக் ஸ்டேடியம் நிறைந்து வழிந்தது.
மூன்று மணி நேரம் + எக்ஸ்ட்ரா டைம் இருபது நிமிடங்கள், கேரள அணி கொல்கத்தா அணியுடன் கடுமையாகப் போராடித் (tough fight) தோற்றது.
கால்பந்து விளையாட வயதும் வலிமையும் அதிகம் தேவை. அநேக இந்திய வீரர்கள் முப்பது வயதுக்கு முன் போட்டிகளில் இருந்து விலகி விடுவர்.
அன்று கபிலன் சாரநாதன் (29) தன் ஓய்வை அறிவிக்க, ஸ்டேடியம் முழுவதும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தனர்.
கபிலனுக்காக வந்துவிட்டு, அவனை சந்திக்காமல் போக மனமின்றி, வீரர்கள் வெளியே வரும் வழியில் சியாமளா அவனுக்காகக் காத்திருந்தாள்.
அவளைக் கண்டதும் ஒரு நொடி நகர மறந்து நின்றவன், அவனே வேகமாக அருகில் வந்ததை, சியாமளாவால் நம்பத்தான் முடியவில்லை.
“ஹேய், இங்க எப்டி…?” என்றவனிடம் ‘எனக்காக’ என்ற மகிழ்ச்சி வெளிப்பட்டதோ?
பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின், தானே அவனை நெருங்குவதும் நெருக்குவதும் சிறிது அவமானத்தைத் தர, தயங்கினாலும், இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது போகலாம் என்ற பயம் சியாமளாவைப் பேச உந்தியது.
“நான்… எனக்கு தீவிரமா மாப்பிள்ளை பாக்கறா”
கபிலன் “ம்… அப்பவே உங்கம்மா சொன்னாங்களே. இந்நேரம் உனக்குக் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைச்சேன்”
“...”
“ஸாரி, நான் கிண்டல் செய்யலை”
“ஏன் கபீஷ், நான் சொல்றது புரியாத மாதிரியே பேசறேள்?”
தொண்டையை செருமிக்கொண்ட கபிலன் “நீ என் ப்ரொஃபஸோரட பொண்ணு. நமக்கு நடுவுல ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு. நிறைய பேர் இருக்காங்க. உங்கம்மா சொன்னா மாதிரி உங்க வீட்டுக்கு தகுந்த, உனக்கேத்த… ம்ப்ச், அதை விடு. நீ நினைக்கறது போல இது சுலபம் இல்லை மா”
‘அம்மா இவன் கிட்ட எதையோ பேசினதாலதான் எங்கிட்ட சொல்லாமலே போய்ட்டானா?’
தொடர்ந்த கபிலன் “அதோட, எனக்குமே வீட்ல மாமா பொண்ணை பேசறாங்க” என துணிந்து ஒரு பொய்யைச் சொன்னான்.
ஆறு வருடங்களாக அவனுக்காகக் காத்திருந்த சியாமளா, சற்றும் எதிர்பாராத வேகத்தில் கபிலனை நெருங்கி இறுக அணைத்து, ஒரு கணம் அவனையே உள்ளிழுப்பது போல் ஆழ்ந்து சுவாஸித்தவள், விருட்டென விலகி
“ஆல் தி பெஸ்ட் கபீஷ். உங்களால முடிஞ்சா இதை, என்னை மறந்துட்டு உங்க முறைப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கோ” என்றுவிட்டுத் திரும்பிப் பாராது நடந்துவிட்டாள்.
இன்று, இங்கே, இவன் வீட்டு முற்றத்தில் மீண்டும் சியாமளா…
******************
“என்னப்பு அப்படியே நிக்கிற, வந்து சாப்பிட உக்காரு. உன் சிநேகிதப் புள்ளை காத்திக்கிட்டு இருக்கு பாரு” என்ற தந்தையின் குரல் கபிலனின் செவியையே எட்டவில்லை.
“அண்ண்.. ணா” என அருகில் வந்து உலுக்கிய குந்தவை, கபிலனை சாப்பிட இழுத்துச் சென்றாள்.
சியாமளா, கபிலன், சாரநாதன், செழியன், குந்தவை, காவேரி என எல்லோரும் பந்தியில் அமர்ந்திருக்க, வள்ளியும் செண்பகாவும் இடியாப்பம், முறுகல் தோசை, தேங்காய்ப்பால், கொத்தமல்லி சட்னி என சுடச்சுடப் பறிமாறினர்.
அந்த வீட்டிற்கு எப்பொழுது வந்தாலும் அதிகம் பேசாத கபிலன், இது வேண்டும், அது சரியில்லை என எதுவும் சொல்லாது போட்டதை மட்டுமே உண்ணும் கபிலன் திடீரென,
“ஏன் அப்பத்தா, இன்னிக்கு வெறும் சட்னிதானா, இந்த தோசைக்கு சூடா கோழிக் குழம்பு வெச்சிருக்கலாம்ல?” என்றதில், வீடே திகைத்து நிற்க…
காவேரி “ஏன்டா மருமகனே, ஐயர் வூட்டுப் புள்ளையை சாப்பிடக் கூட்டிட்டு வந்துட்டு உனக்குக் கோழிக்குழம்பு கேக்குதோ? அந்தப் புள்ளை இங்க இருக்குற வரை நம்மூட்ல சைவந்தேன்” என ஒரே போடாகப் போட, சிரிப்பை அடக்கிய சியாமளா,
“எனக்காக உங்க பழக்கத்தை மாத்த வேண்டாம் ஆன்ட்டீ. எனக்குப் பரவாயில்ல”
“எம்புட்டுத் தன்மையா பேசுது பாரு” என காவேரியே வக்காலத்து வாங்கியதில், கபிலன் நாக்அவுட் (knockout) ஆனான்.
உணவு முடியும் நேரம், நான்கு வயது மகன் சகிதம் வந்த சின்னு, கர்ப்பமாக இருந்தாள். குறைந்தது ஏழு மாதமாவது இருக்கலாம்.
செண்பகா “இப்ப எப்படி இருக்கு சின்னு, தலை சுத்தல் பரவா இல்லையா, சாப்பிட்டாலே சரியாகும் வா” என வரவேற்றாள்.
சியாமளாவிற்கு “இதுதான் செழியன் மாமாவோட பொண்ணு சின்னு. டெலிவரிக்கு வந்திருக்கா. இது குட்டிக் குஞ்சான்” என குந்தவை அறிமுகம் செய்தாள்.
கை கழுவ பின்பக்கம் செல்கையில், கபிலனை வழிநடையில் நிறுத்திய சியாமளா “ஏன் கபீஷ், இதான் உங்க முறைப் பொண்ணா, கல்யாணம் பண்ணி, ரெண்டாவது குழந்தை கூட…”
ஏற்கனவே உணவு விஷயத்தில் பல்பு வாங்கிய கடுப்பில் இருந்த கபிலன், அவள் குரலில் இருந்த நக்கலில் ஆத்திரம் மேலிட “ஏய்…வேணாம்” என விரலை நீட்டியவன், ஆள் வரும் அரவம் கேட்டு வேகமாக வீட்டிற்குள் செல்ல, சியாமளாவின் சிரிப்பு விரிந்தது.

Last edited:
Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.