• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 6

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
43
152
53
Chennai
குறுநகை போதுமடி! 6


நீள் செவ்வக வடிவிலான ஆளோடி போன்ற அந்த அறையில் நல்ல காற்றும் வெளிச்சமும் இருந்தது. அதன் ஒரு மூலையில் சமையல் சாமான்களைப் பாதுகாக்கும் அறை ஒன்றும் இருந்தது. குளிர்சாதன வசதி, கேஸ் அடுப்புகள், மிக்ஸி, கிரைண்டர் போன்ற நவீன இயந்திரங்கள் அனைத்தும் இருந்தன. காய்கறி குப்பைகள், சமைக்கும்போது சிதறும் பொருட்களை உடனுக்குடன் சுத்தம் செய்தனர்.

மதிய உணவுக்கான சமையல் முடியும் தருவாயில் இருக்க, சியாமளா பொரியல், கூட்டு, ரசம் போன்றவற்றை சிறிய தேக்கரண்டியில் எடுத்து ருசி பார்த்தாள்.

மனித உடலில் கபம், வாதம், பித்தம் என்ற கூறுகளில் எதன் ஆதிக்கம் அதிகமோ, நோயும் சிகிச்சையும் கூட அதன் அடிப்படையில்தான். நம் பாரம்பரிய சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தத்துவமே உணவே மருந்து என்பதுதான்.

சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களைக் கையில் வைத்திருந்த சியாமளா யார் யாருக்கு என்ன உணவு, எப்படி வழங்கப்படுகிறது எனக் கேட்டாள்.

“சுண்டல், கடலை, முளைகட்டின பயறு, தயிர் எல்லாம் ஆரோக்கியமானதுதான். ஆனா, அதை வாத உடல் வாகு இருக்கறவங்களுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. மூட்டு வலி, வீக்கம்னு தினசரி இயங்கவே சிரமப்படறவங்களுக்கு இது நல்லதில்லையே டாக்டர் அனுபமா”

“ம்..”

“சரோஜாம்மா, வாதத்துக்கும், கபத்துக்கும் பூண்டு நல்லது. ஆனா, பித்த உடம்புக்கு நெஞ்சு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கு. பூண்டு போட்டு ரெண்டு ஐட்டம், போடாம ஒன்னு, ரெண்டு ஐட்டம் செய்யலாமே”

“சரிங்கம்மா”

“வெள்ளரிக்கா, சுரைக்கா, கொத்தவரங்கா, பாகற்காய், கோஸ், கேரட் கொத்தமல்லி, புதினா, மிளகு பொடி, வறுத்த வெந்தயப் பொடி, அரை உப்பு போட்டு, எலுமிச்சம்பழம் புழிஞ்சு சாலட் செஞ்சு வைங்க. உடல் பருமனுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.”

ஒருமுறை அனுபமாவை திரும்பிப் பார்த்த சரோஜாவின் தலை மிக மெதுவாய் ஆடியது.

“ஓகே, இப்ப நாம டைனிங் ஹால் போகலாமா?”

பின் தொடர்ந்த இருவருக்கும்
தன் இயல்பில் கேள்விகளும் தீர்வுகளுமாக முன்னேறிய சியாமளாவின் வேகம், அவர்களை குற்றம் சாட்டுவதுபோல் தோன்றியது.

‘நலம்’ மருத்துவமனைக்கு வந்து தங்கி சிகிச்சை பெறுபவர்களில் அநேகரின் நோக்கமே தங்களது பரபரப்பான தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, அமைதியான இயற்கைச் சூழலில் ஒரு வாழ்க்கை முறை மாற்றம்தான்.

இவர்களில் உயிருக்கு ஆபத்தான நோயாளிகள் என எவரும் கிடையாது. அதிலுமே, தீவிர முடக்குவாதம் தாக்கியவர்களைக் கூட, மஸாஜ், எண்ணெய்க் குளியல், என வெயிலில் நடக்க வைத்துவிடுவர்.

ஒரு குடிலில் மூன்று வசதியான பெரிய தங்கும் அறைகளும், நடுவே தொலைக்காட்சியுடன் கூடிய பொதுவான முன்னறையும் உண்டு.

தண்ணீர், பானங்கள் மற்றும் நறுக்கிய பழங்களைத் தவிர, அறைக்குள் வேறு உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை. பொதுவான உணவுக்கூடம் உண்டு. அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கே முன்னுரிமை. அவர்களோடு உதவியாளர்கள் எவரேனும் இருந்தால், கட்டணம் செலுத்தி உண்ணலாம். முன் கூட்டியே சொல்ல வேண்டும். ஆனால், அவர்களுக்கும் அதே பத்திய உணவுதான்.

சியாமளா உணவுக்கூடத்திற்குள் நுழைந்தது சரியாக பயனாளர்களின் மதிய உணவு நேரத்தில்.

நீண்டதொரு சலவைக்கல் மேடையில் தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் வரிசையாக உணவுப் பாத்திரங்கள் பஃபே முறையில் வைக்கப்பட்டிருந்தது. அவரவர்களுக்குத் தேவையான, பிடித்த உணவை எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே போடப்பட்டிருந்த வட்டமான மேஜைகளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.

சரோஜா அங்கே இருந்த தன் சக சமையலறை பணியாளர்களோடு சேர்ந்து கொள்ள, அனுபமா சமையல்கலையில் பட்டயம் பெற்ற சங்கரை அறிமுகம் செய்வித்தாள்.

உணவு நேரம் முடியும் வரை அங்கேயே நின்று, நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்த சியாமளா, அலைபேசியில் அழைப்பு வரவும் , அனுபமாவிடம் ஒரு அனுமதி கோரலுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

பேசி முடித்து மீண்டும் உள்ளே செல்ல, அனுபமா அங்கே இல்லை. சங்கரிடம் ஏதோ விவரங்கள் கேட்டு, உணவு அட்டவணையில் சில மாற்றங்கள் சொன்னாள்.

கபிலனிடமிருந்து அழைப்பு வர “என் ரூமுக்கு வா” என வைத்து விட்டான்.

கதவைத் தட்டிவிட்டு அனுமதிக்கு நிற்க “உள்ள போ” என பின்னிருந்து குரல் கேட்டது.

சியாமளாவிற்கு நாற்காலியை கை காட்டி, தன் இருக்கையில் அமர்ந்தவன், எடுத்தவுடன் “அனுபமாவோட உனக்கு என்ன பிரச்சனை?”

“அனுபமாவோட எனக்கு என்ன…” என்றவளின் பார்வை கூர்மையானது.

‘ஒரு இருபது நிமிஷம் இருக்குமா, அதுக்குள்ள புகார் பெட்டிஷன், அதுக்கொரு பஞ்சாயத்து வேற… இவன…’

“ஹலோ, ஆன்ஸர் மீ. அனுபமா கிட்ட நீ என்ன…”

குறுக்கிட்ட சியாமளா “அனுபமா பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீங்க எனக்குக் கொடுத்த வேலைக்கு ரிப்போர்ட் வேணும்னா சொல்லுங்கோ, தரேன்”

கபிலன் முறைக்கவும் “கபீஷ், ஒன்னு செய்யலாம். கால் அனுபமா. அவளோட கேஸை அவளே சொல்லட்டும். நான் பதில் சொல்றேன். அப்புறம் நீங்க நாட்டாமை பண்ணலாம்”

“ஊஃப்…. கிச்சன், டைனிங் ஹால் பத்தி உன் ரிப்போர்ட்டை சொல்லு”

“சுத்தமா, ஹைஜீனிக்காதான் இருக்கு. நல்ல வெளிச்சமும் காத்துமா இருக்கற கிச்சனுக்கு இத்தனை எக்ஸாஸ்ட் ஃபேன் தேவையே கிடையாது. நடுவுல கொஞ்சம் ஓபன் ஸ்பேஸ் இருக்கறதால அடுப்புக்கு மேல நல்ல சிம்னியா ஒண்ணு இன்ஸ்டால் செஞ்சாலே போதும்”

“ம்”

“பத்தியம்னாலும் சமையல் நல்ல டேஸ்ட்டாவே இருக்கு. அது ப்ராப்ளம் நம்பர் ஒன்”

“???”

“ப்ராப்ளம் நம்பர் 2, பஃப்பே சிஸ்டம்”

“ஏன், அதுக்கென்ன, அவங்க பேஷன்ட் மாதிரி ஃபீல் பண்ணாம இருக்கதான் அந்த ஐடியாவே”

“சந்தேகமில்லாம அந்த டைனிங் ஹால் ஐடியா ஈஸ் வெரி குட். ஒரு ரெஸ்ட்டாரன்ட்டோட ஆம்பியன்ஸ் (சூழல்) தர்றது. ஆனா, கல்யாண ரிஸப்ஷன், பார்ட்டி மாதிரியான பஃப்பே சிஸ்டம்தான் இடிக்கறது”

“எப்படி?”

“இப்ப வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டுத் தாளிச்ச சுண்டல், காய்கறி சாலட், தயிர் பச்சடி இது மூணுல உங்களோட ஃபர்ஸ்ட் சாய்ஸ் எது?”

“ம்… சுண்டல்தான்”

“அதேதான். அளவில்லாம எதை வேணா எடுத்துக்கலாம்னா, தன் உடல் வாகுக்கு எது நல்லதுன்னா யோசிப்பாங்க, வாய்க்கு ருசியானதைதானே சாப்பிடத் தோணும்?”

“ம்..…கரெக்ட், இப்ப நான் என்ன செய்யணுங்கற?”

“பெருசா ஒண்ணும் இல்லை. முதல்ல இந்த கிராமத்து சூழல்ல சாப்பிடறதுக்கு வாழை இலையை யூஸ் பண்ணலாமே. ஹெல்த்தி, தட்டு, கப்புனு மூணு வேளையும் தேய்க்கற வேலை, நேரம், கூலி எல்லாமே மிச்சம். சிட்டில இருந்து வர்றவங்களுக்கு வித்தியாசமான ஃபீல் குடுக்கும்”

“அந்த குப்பையை எல்லாம் என்ன செய்யறது?”

“ஏன், பண்ணை வெச்சு விவசாயம் செய்யற உங்களால மக்கும் குப்பையை (compost) உரமா மாத்த முடியாதா?”

“காட்!”

சியாமளா “நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல அவர் எதுக்கு?” என கண்ணைச் சிமிட்ட, அவளைத் தாண்டி நேர்ப் பார்வை பார்த்த கபிலன்

“சரி, அப்பாகிட்ட பேசறேன். வேற?”

“காட்டேஜ்ல தங்கி இருக்கறவங்க பேரு, ரூம் நம்பர், அவங்களுக்கு என்ன ட்ரீட்மென்ட்னு ஒரு லிஸ்ட்டை டைனிங் ஹால்ல பார்த்தேன். அதுலயே அவங்களுக்கான உணவு என்ன, எதை, எவ்வளவு சாப்பிடலாம்னு கொஞ்சம் டீடெயிலா அப்டேட் செய்யணும்”

“...”

“எல்லாம் சாப்பிடலாம்னாலுமே கூட அளவான கிண்ணங்கள்ல கலோரிய கணக்கு பண்ணி பரிமாறினா நல்லது. விருப்பம் இருக்கறவங்க, இன்னொரு தரம் கேட்டு வாங்கிக்கலாம். அதை அனுமதிக்கக் கூடாதவங்களுக்கு மறுக்கவும் செய்யலாம். அதோட அவங்க உடல் வாகுக்கு ஒவ்வாத சாப்பாடை, எக்ஸ்ட்ராவா சாப்பிடறதைத் தவிர்க்கலாம் அண்ட், யூ நோ பெட்டர். ஆஃப்டர் ஆல், இது ஹாஸ்பிடல். இங்க ஹாஸ்பிடாலிடிக்கு (விருந்தோம்பல்) வேலை இல்லை.”

முறுவலித்த கபிலன் “ஓகே, ஓகே. டன். ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ. எதை மாத்தணுமோ மாத்திடு”

“நானா, அப்ப உங்க அனுபமா?”

“ஏய்!”

“சியாமளான்னுதான் ஒரு தரம் சொல்றது”

“...”

எழுந்தவள் “நான் இப்ப தோட்டத்துக்கு போறேன். டு ஸ்டார்ட் வித் என்னென்ன ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் தயாரிக்கலாம், அதுக்கு தேவையான ஐட்டம்ஸ்னு ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்கோ, பேசலாம்”

அன்றும் இலவச மருத்துவத்திற்கான நாள் என்பதால், வெளியே இன்னும் கூட்டம் இருக்கவே, கபிலனும் எழுந்தான்.

கதவருகே சென்றவள் “நான் அனுபமா கிட்ட கப, வாத, பித்த உடல் வாகுக்கு ஏத்த மாதிரி சாப்பாடு குடுக்கணும்னு மாத்திரம்தான் சொன்னேன். அவங்க வேலையை எங்கிட்ட கொடுத்தா, தப்பா நினைக்கப் போறாங்க…”

“...”

“ஒகே, பை”

“நீ லஞ்ச் சாப்பிட்டியா?”

நீண்ட சில நொடிகள் கபிலனையே பார்த்த சியாமளா சட்டென தன் இரு விரல்களில் இதயத்தைக் காட்டிப் புன்னகைத்து வெளியேறினாள்.

*******************

மொபைலில் மகனை அழைத்த சாரநாதன் “ஏம்ப்பு, நாமதான் இலை, குப்பை, சத்தை எல்லாம் உரமா மாத்தன்னே தோட்டத்துல உரக்குழி (Manure pit) வெச்சிருக்கோமே. அந்தப் பொண்ணு சொன்னது நல்ல ஐடியாப்பு. பொறவென்ன யோசனை உனக்கு?”

சாப்பிடுவதற்கு வாழை இலையை உபயோகிப்பது குறித்து அவனே நினைத்திருக்கிறான். ஆனால், அங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்கள் பலரின் நாகரீகமும் நாசூக்கும், அவர்களுக்கு கிராமத்து சூழலில் அமைந்த இந்த மருத்துவமனையை ரொம்பவும் நாட்டுத்தனமாக, கட்டுப்பெட்டியாகக் காட்டி விடுமோ என்ற எண்ணம் அதைச் செயல்படுத்த விடவில்லை. அதையே இப்போது சியாமளா சொல்லவும், செய்ய முடிவு செய்துவிட்டாலும் அதை உடனடியாக அவளிடம் ஒத்துக்கொள்ள மனம்தான் வரவில்லை. காரணம்… அவனுக்கே வெளிச்சம்!

அவன் மறுத்தால் விடுகிற ஆளா அவள்? கபிலன் தந்தையிடம் பேசும் முன்பே, சாரநாதனை தோட்டத்தில் பார்த்தவள் அவனிடமே நேரிடையாகக் கேட்டுவிட்டாள். இப்போது தந்தை சியாமளாவிற்குத் தட்டிய ஜால்ராவில் “செஞ்சுடலாம்ப்பா” என்றவனின் மனம் சலனத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஈரெட்டாய்த் தவித்தது.

********************

தண்ணீர் விழும் சத்தம் சிறிதும் இன்றி , அடர்த்தியாகப் பெய்த மழையை வேடிக்கை பார்த்தபடி உள்புறம் திண்ணை போல் இருந்த இடத்தில் அமர்ந்திருந்தாள், சியாமளா.

வேலை எதுவுமின்றி நாள் முழுவதும் காத்திருந்த பெண்களை நாலு மணிபோல் வீட்டுக்கு அனுப்பியவளுக்கு, தான் எங்கே போவதென்று புரியவில்லை.

நேற்று வந்த உடன் முதல்நாள், கிராமம், வேறு வழியில்லை என்பதால் கபிலனின் வீட்டில் தங்கிய வரை சரிதான். அவனது உறவுகள் அனைவரும் அவளிடம் நன்றாகத்தான் பழகினர்.

‘என்னத்தா சாப்பிடுற, செண்பா, சியாமளா பொண்ணுக்கு தயிர் வைக்க மறந்துராதத்தா ’ என்ற நீலவேணி பாட்டி…

சியாமளா என்னவோ அவர்களுடனே தங்கப்போவது போல் ‘டிகாஷன் காப்பியெல்லாம் நம்ம வீட்ல கிடையாதும்மா. டீ இல்லாட்டி கருப்பட்டி காபி, சுக்கு மல்லி காபிதான் இருக்கு. மாமாவ (சாரநாதன்) திண்டுக்கல்ல இருந்து வாங்கிட்டு வரச் சொல்லுறேன். கொஞ்சமா ப்ரூ காபி இருக்கு. போடட்டா?’ என்ற செண்பகா ஆன்ட்டி…

அசைவ உணவைக் காட்டித் தன்னை பயமுறுத்த நினைத்த கபிலனிடம், தனக்காக வக்காலத்து வாங்கிய காவேரி ஆன்ட்டீ (பாட்டி?)…

உறவினர் வீடுகளில் கூட இதுபோல் தங்கிப் பழக்கம் இல்லாத சியாமளா சங்கடமாக உணர்ந்தாள். வேறு இடம் பார்த்துக்கொண்டு போகவோ, நல்ல ஹோட்டலில் தங்கவோ வசதியில்லாத ஊர்.

சியாமளா இந்த ரீதியில் சிந்திப்பது தெரிந்தாலே சண்டையிடும் அளவு ஒரே நாளில் நெருங்கிய நட்பு பாராட்டும் குந்தவை…

அனைத்தையும் விட, மகனின் ப்ரொஃபஸரின் மகள், ஹாஸ்பிடல் மற்றும் ஃபேக்டரி வேலைக்கு வந்திருக்கும் பெண் என்பதால் கிடைக்கும் இந்த அன்பும் மரியாதையும் கவனிப்பும்… தான் இங்கு வந்த நோக்கமும், தனக்கும் கபிலனுக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமும் அவர்களுக்குத் தெரிய வந்தால்?!

வித்தியாசம் பாராது வெள்ளந்தியாகப் பழகுபவர்களை ஒன்றும் தெரியாததுபோல் ஏமாற்றுகிறோமோ என்ற குற்றவுணர்வு எழுந்தது.

‘நான் தனியில்லை. எனக்கும் உனக்கும் நடுவுல நிறைய பேர் இருக்காங்க’ என்று கபிலன் சொன்னது இதைத்தானோ?

காலையில்தான் தனக்கான அறை அல்லது வீடு தயாராகும் வரை அனுபமாவுடன் அறையைப் பகிர்ந்து கொள்ளக் கேட்கலாம் என சியாமளா நினைத்திருக்க, முதல்நாளே அவள் முறுக்கிக் கொண்டதில்.
இப்போதைக்கு கபிலன் வீடுதான்.

இந்த மழையில் வண்டி, வாகனம் எதுவுமின்றி எப்படிப் போவது? மதியம் கபிலனிடம் இங்கு போகிறேன் என்றதும் டாடா காட்டிவிட்டான். மதியம் சாப்பிட்ட ஹாஸ்பிடல் பத்திய உணவு இங்கு நடந்து வந்ததிலேயே செரித்திருந்தது.

மழை வலுக்கவும் மலைக்காற்றில் குளிர் மிகுந்தது. துப்பட்டாவைப் பிரித்துப் போர்த்திக்கொண்டாள். வேகமாகப் பரவும் இருளும் அந்தி நேர மழையும் தனிமையும் பசியும் சோர்வைத் தந்தது.

மொபைல் சிக்னல் கோடுகள் ஏதுமின்றி வட்டத்தைக் காட்டியது. சியாமளாவிற்கு மிகவும் பிடித்த SUDOKU வில் கூட மனம் பாவவில்லை. மின்னல் வெட்டவும் மின்சாரம் நின்றது. வாசல் கதவு திறந்திருக்க, அப்படியே விடவும் முழுதாக மூடவும் தைரியமின்றி ஒருக்களித்து வைத்தாள். ஜன்னல் வழியே வழிந்த இருட்டை வெறிக்க பயந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

******************

புறநோயாளிகளைப் பார்த்து முடித்த கபிலன், மற்ற மருத்துவர்கள் மூவருடன் மாலை ஐந்து மணி போல் தேநீர் வேளையில் உணவுக் கூடத்திற்குச் சென்றான்.

‘சியாமளாவை விசாரித்து விட்டேன். உன்னைக் குறை சொல்வது அவளது நோக்கமல்ல’ என விளக்கிய பின்பும் அனுபமாவின் முகம் இன்னும் சரியாகவில்லை.

இதற்கு மேல் ஒருவர் சார்பாக மற்றவரிடம் பேசுவது இரண்டு பக்கமுமே அநாவசிய கற்பனைகளுக்கு இடம் கொடுக்கும் என்பதால் கபிலன் அதை அத்தோடு விட்டுவிட்டான்.

தேநீர், கருப்பட்டி காபி, சூடான பானகம் மூன்றும் இருந்தது.

சிலர் அங்கேயே அமர்ந்து , ரஸ்க், பிஸ்கட்டுடன் தேநீர் அருந்த, மற்றோர் ஃப்ளாஸ்க்கில் டீயும், கையோடு கொண்டு வந்த டப்பாக்களில் பிஸ்கட்டும் எடுத்துச் செல்வதைக் கண்டான். கபிலனின் பார்வை போன திசையைக் கண்ட அனுபமாவின் முகம் மாறியது.

‘இங்கே என்றால் அதிகபட்சம் ஒன்று அல்லது ஒன்றேகால் கோப்பை பானமும், இரண்டு முதல் மூன்று பிஸ்கட்டுக்கு மேல் உட்கொள்வது கடினம். இதையே அறைக்கு எடுத்துச் சென்று உதவியாளருடன் சேர்ந்து பருகினால் கூட ஒருவருக்கான அளவு அதிகம்தான். இதில் முக்கால்வாசிப் பேராவது ஏழு - ஏழரை மணிக்கு இரவு உணவு நேரம், அதன் கையிருப்பு காலியாகும் வரை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறார்களா?’

என்னதான் நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி என்றாலுமே இனிப்பு, இனிப்புதானே? நல்லவேளை குடில்களுக்குள் உணவுக்கு அனுமதி இல்லை.

“ஃபாலோ மீ” என்றவன் நேரே தன் அறைக்குச் சென்றதுமே

“ஐ’ம் ஸாரி அனுபமா. புதுசா வந்தவங்க முதல்நாளே சுட்டிக் காட்டினா கோபம் வரும்தான். பிடிக்காதுதான். ஆனாலும், இந்த கிச்சன் டியூட்டியை உங்களுக்குக் கொடுத்து ஏழு மாசத்துக்கு மேல ஆகுது. அந்த ஜெனரல் வார்டையும் சேர்த்து மொத்தமே இருபத்தஞ்சு இன் பேஷன்ட்ஸ்தான். அதுவும் எல்லாத்துலயும் ஆள் இருந்தாதான்.அவங்க என்ன செய்யறாங்க, என்ன சாப்பிடறாங்கன்னு பார்க்கறது உங்க டியூட்டி இல்லையா?”

“...”

“பித்தம், சர்க்கரைன்னு சிகிச்சைக்கு வர்றவங்களுக்கு டீயும் பிஸ்கட்டும் மருந்தான்ன?”

அதே நாளில் இரண்டாவது முறையாக, அதிலும் சக மருத்துவர்களின் முன்னால் சிறுமையாக உணர்ந்த அனுபமாவிற்கு இதற்குக் காரணமான சியாமளாவின் மேல் எழுந்த அசாத்தியக் கோபம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

“என்ன ஸார் இது? இத்தனை நாள் எதுவும் சொல்லாம, புதுசா ஒருத்தங்க வந்த அன்னைக்கே குறை சொல்றதும், அதைக் கேட்டு நீங்க செக்கிங் பண்ண வர்றதும்…”

“ஏன், இதுக்கு முன்னால கிச்சன் பிரச்சனைக்காக நான் உங்களைக் கூப்பிட்டு வார்ன் செஞ்சதே இல்லையா?

“அப்பல்லாம் நீங்க என்னை மட்டும் தனியா கூப்பிட்டு விசாரிச்…”

“ஸ்டாப் இட் அனுபமா. யூ ஆர் ரைட். முன்னாலயே கடுமையா செக் பண்ணாததும் நடவடிக்கை எடுக்காததும் என்னோட தப்புதான். சித்தா டாக்டர். உணவு பத்தி நல்லா தெரிஞ்சவங்கன்னு நம்பி பொறுப்பைக் கொடுத்ததும் என் தப்புதான். வாரம் ஃபுல்லா சாப்பாட்டு மெனுவை ஃபிக்ஸ் பண்ற நான் இதையும் கவனிச்சிருக்கலாம். ஆனா, யாராவது கண்காணிச்சாதான் பொறுப்பா வேலை செய்வேன்றது என்ன மாதிரியான மன நிலை?”

“...”

“சும்மாவே நம்ம மக்களுக்கு ஆயுர்வேதா ஹாஸ்பிடல்னாலே யோகா, மஸாஜ் சென்ட்டர்ங்கற நினைப்புதான். இதுல டாக்டர்ஸ் நாமே அலட்சியமா இருந்தா நம்ம கீழ இருக்கற ஸ்டாஃப் எப்படி சின்ஸியரா இருப்பாங்க?”

நாற்காலியைப் பின் தள்ளி, வேகத்துடன் எழுந்த அனுபமா “என் மேல நம்பிக்கை இல்லைன்ன பிறகு என்னால இங்க வேலை பார்க்க முடியாது ஸார்”

அவள் பேசி முடிக்கும் முன்னரே கபிலன் “அதான் உங்க முடிவுன்னா யூ மே கோ”

அனுபமா “புதுசா வந்த யாரோ ஒரு பொண்ணுக்காக…”

பொறுமை இழந்த சுபாஷ் “ஷட் அப் அனுபமா. எல்லை மீறிப் பேசற.. கோளாறு செய்யறதும், ஏடாகூடமா பேசறதும், அடுத்த நாளே உங்கப்பாவோட வந்து மன்னிப்பு கேக்கறதும்… எத்தனை தடவை? போதும். முதல்ல நீ இடத்தை காலி பண்ணு”

அனுபமா தன் ஆத்திரத்தைக் கதவில் காட்டி வெளியேற, ஓரிரு நிமிட அமைதிக்குப் பின்

கபிலன் “நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு ஃபார்முக்குப் போறேன். கிரி, இன்னிக்கு நைட் டின்னரை நீங்க பாருங்க. நாளைக்கு பேசலாம்”

“டன்”

இரண்டு குடில்களைக் கூடத் தாண்டவில்லை, லேசாகத் தூறத் தொடங்கியது.

உடலில் எந்தக் கோளாறும் இல்லாது, குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட்டு, இப்போது பெற்றோராகும் ஆசை வந்ததில் அலுவல் அழுத்தங்களில் இருந்து தளர்த்திக் கொண்டு இளமைக்கு புத்துயிரூட்ட (to relax & rejuvenate) இங்கு வந்து சிகிச்சை பெறும் பின் முப்பதுகளில் இருக்கும் கார்ப்பரேட் தம்பதியிடம் பேசிக்கொண்டிருக்கையில் கபிலனின் மொபைல் சத்தமின்றி அதிர்ந்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று வெளியே வந்து அழைப்பை ஏற்க, இணைப்பில் செழியன்.

“சொல்லுங்க மாமா”

“கபிலா, சின்னு… சின்னுக்கு… என்றவனின் குரலில் அளவற்ற பதட்டமும் கவலையும்.

“மாமா, ஃபோன அத்தை கிட்ட குடுங்க”

பல பெண்கள் ஏக காலத்தில் பேசுவது கேட்டது. ஆனால் இவனிடம் பேசியது செண்பா.

“கபிலா, சின்னுக்கு திடீர்னு பனிக்குடம் உடைஞ்சு, மேல மேல வலி வந்திருச்சு. மழை வேற”

“அப்பா எங்க?”

“திண்டுக்கல் வரை போனவுகளை இன்னமும் காணோம்”

“ கவலைப்படாதீங்க, இதோ வரேன்”

ஐந்தே நிமிடங்களில் வீட்டில் இருந்தவன், சின்னு இருந்த நிலையில் கையில் நேரம் அதிகம் இல்லை, சுகப் பிரசவம்தான் என்பது உறுதியானது. இதுவே சிக்கலான கேஸாக இருந்தால் அதற்கான எந்த வசதியும் இங்கே இல்லை. ரிஸ்க் எடுக்கவும் முடியாது.

செழியனிடம் “சின்னுவைத் தூக்குங்க மாமா, ஹாஸ்பிடல் போலாம்”

வழியில் கிரிதரனை அழைத்து “எமர்ஜென்ஸி ரூம்ல லேபர் காட் ஃபிக்ஸ் பண்ணுங்க, க்விக். பீ ரெடி வித் ஃபார் எ நார்மல் டெலிவரி. மூணு நர்ஸை, முக்கியமா நந்தினி சிஸ்டரை வரச்சொல்லுங்க” என்று வரிசையாகக் கட்டளை பிறப்பித்தபடி காரைச் செலுத்தினான்.

இதற்கு முன்பும் இதுபோல் இரண்டு பிரசவங்கள் இங்கே நடந்திருக்கிறது. எல்லாமே அவசர நிலையில் நிகழ்ந்தவைதான். முதல்முறை எந்த வசதியும் இல்லாது இருக்க, பிறகுதான் பிரசவத்திற்கான பிரத்தியேகக் கட்டிலும், அது சார்ந்த உபகரணங்களும் வாங்கினான்.

இதோ, நாற்பதே நிமிடங்களில் ‘நலம்’ மருத்தவமனையில் வெற்றிகரமான மூன்றாவது பிரசவம்.

செழியன் கபிலனையும் கிரிதரனையும் கண்ணீர் மல்கக் கட்டிப் பிடித்துக்கொண்டான். கபிலனுக்குமே டென்ஷன்தான்.

நர்ஸ் நந்தினி புத்தம் புதிய பெண் குழந்தையை வெளியில் எடுத்து வர, சின்னுவின் மாமியார் வாங்கிக்கொண்டாள்.

மழை குறைந்தவுடன் ஆறாம் குடிலில் காலியாக இருந்த ஒரு அறைக்கு சின்னுவை மாற்றச் சொன்னான். இதற்குள் சாரநாதன் வந்திருந்தான்.

எப்போதும் கபிலனிடம் எகத்தாளமாகப் பேசும் சின்னு, இப்போது அவனைப் பார்க்கவே வெட்கப்பட, அவன் சத்தமாகச் சிரித்தது ஒரு ஆயுர்வேத அற்புதம்.

வள்ளி, செழியன் இருவரும் மருத்துவமனையில் இருக்க, ஏனையோர் வீடு திரும்பினர். செவிலியர், உதவியாளர்களின் சின்னுவை பொறுப்பில் விட்டுவிட்டு கிரிதரனும் கபிலனும் புறப்பட்டனர்.

இரண்டரை மணி நேரம் பரபரப்பாகக் கழிய, மருத்துவமனை ஜெனரேட்டரின் உபயத்தில் மின்சாரம் நின்றதே கபிலனுக்குத் தெரியவில்லை.
வெளியில் வர, தெருவிளக்குகள் கூட மூர்ச்சையாகி இருந்தது.

தன் வீட்டிற்குச் சென்று, கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்து நிதானமாகக் குளித்து, ஷார்ட்ஸையும் சட்டையும் அணிந்தவனுக்குப் பயங்கரமாகப் பசித்தது.

மொபைல் வெளிச்சத்தில் ஃப்ரிட்ஜை ஆராய, மதியம் ‘சாப்பிட்டியா?’ என்றதற்கு சியாமளா செய்த சைகை நினைவு வந்தது. கூடவே சியாமளாவும்.

“மை காட்! அவளை எங்க காணும், இன்னும் தோட்டத்துலயேவா இருக்கா யாருமே கேட்கல, தேடலையா?’

‘நீ என்னடா பண்ண, இடியட்!”

‘இருட்டு, மழை வேற… முருகா! அவளை எப்டி மறந்தேன்?”

வீட்டைப் பூட்டாது கார் சாவியுடன் மழைக்குள் பாய்ந்தான்.

*****************

செக்யூரிட்டிகள் தடுத்தும், விதியை மீறி, காரை தோட்டத்துக்குள் செலுத்தி, இயன்ற வரை உள்ளே சென்று நிறுத்தி, ‘நலம் ஆயுர்வேதிக் காஸ்மெடிக்ஸ்’ கட்டிடத்தை நோக்கி விரைந்தான்.

தப்தப் என நீரில் அழுத்தமாக ஷூ பதிய யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டதில் சியாமளாவின் கொஞ்சநஞ்ச தைரியமும் போய், எதையெதையோ நினைத்தபடி பயத்தில் காது விறைத்து ஒடுங்கி அமர்ந்தவளை நெருங்கியது காலடியோசை.

சியாமளா யாரென்று பார்க்கக் கூடத் திராணியின்றி கண்ணை மூடிக்கொள்ள, தடாரெனக் கதவு திறக்கவும், எழுந்து நின்றவளுக்கு, கபிலனைக் கண்டதும் போட்டி போட்ட அழுகையையும் ஆத்திரத்தையும் மறைத்த ‘இருட்டே, உனக்கு நமஸ்காரம்!’

“ஸாரி, வெரி வெரி ஸாரி” என கபிலன் காதைப் பிடித்துக்கொண்டான்.

“...”

“யாருக்காவது கால் பண்ணி இருக்கலாம்ல?”

“...”

“அதான் ஸாரி சொல்லிட்டேன்ல, சரி, வா போகலாம்”

நனைந்தபடி வந்து காரில் ஏறினர். செக்யூரிட்டிகளின் பார்வையைப் பொருட்படுத்தாது வெளியே வந்து, வழியில் சின்னுவிற்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதைச் சொன்னான்.

“நீங்களா கபீஷ் பிரசவம் பார்த்தது?” எனப் பரவசமானாள்.

அவனது வீட்டு வாசலில் கார் நிற்க, சியாமளா “எனக்கு ரூமோ, வீடோ எப்ப கிடைக்கும்?”

கபிலன் வெகு நக்கலாக “ஏன், ஒரு நாள் கூட எங்க வீட்டைத் தாங்க முடியலையோ?”
 

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Saraswathi

New member
Jan 4, 2026
1
1
3
Chennai
கபிலன் , சியாமளாவுக்கு இடையில் கடக்க வேண்டியவர்கள் நிறைய பேர் தான். இன்னும் கபிலனின் அம்மா குடும்பம் பற்றி சியாமளாவுக்கு தெரியவில்லையா ?
 
  • Love
Reactions: VedhaVishal

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
43
152
53
Chennai
கபிலன் , சியாமளாவுக்கு இடையில் கடக்க வேண்டியவர்கள் நிறைய பேர் தான். இன்னும் கபிலனின் அம்மா குடும்பம் பற்றி சியாமளாவுக்கு தெரியவில்லையா ?
வரும்
 

kothaisuresh

Active member
Jun 19, 2024
149
12
28
Chennai
சூப்பர்👌👌👌👌, கபிலன் அம்மா பேமிலி பத்தி சியாமளாக்கு எப்போ தெரிய வரும்?
 
  • Love
Reactions: VedhaVishal
Jun 19, 2024
18
13
18
Trivandrum
😍😍😍

டேய் கபீஷ் , நீ இப்படி பாட்டு பாடி கூப்பிட்டு இருந்தா உன் வீட்டுக்கு வந்து இருப்பா...😏😏😉😉

 

saradhavasan

Member
Oct 3, 2024
78
10
18
சென்னை
அனுபமாவுக்கு இன்னும் சியாமளா பத்தி தெரியல..
ஆட்டோகிரப் வேனுமா ? கேட்டடவனையே சும்மா கிட்ட பார்க்கனும். எவ கவுத்த கதை தெரியாதே... பாவம்
 
  • Haha
Reactions: VedhaVishal