குறுநகை போதுமடி! 8
வெள்ளியோடு வெள்ளி, முற்று முழுதான எட்டு நாள்களுக்குப் பின் இன்றுதான் கபிலன் சிறுமலைக்குத் திரும்பி இருந்தான். பொழுது புலரும் நேரமே அவனது வீட்டு வாசலில் கார் வந்து நின்றிருந்தது. செண்பாவால் செவ்வாய், வெள்ளியில் அவன் வீட்டுக்கும் முறைவாசல் செய்யவென நியமிக்கப்பட்ட செல்வி வந்து அவனது வருகையை அறிவித்தாள்.
சாரநாதன் மகனை அழைக்க அலைபேசியை எடுக்க, கபிலனிடமிருந்து ‘வந்துட்டேன். தூங்கப்போறேன். எழுப்ப வேண்டாம்’ என்ற தகவல் வந்திருந்தது.
“அப்புவை தொந்திரவு செய்ய வேணாம். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்’ என்ற சாரநாதன் முருங்கைக்காய் பறிப்பதைப் பார்க்கச் சென்றுவிட்டான்.
ஆனால், தூங்குவதாகச் சொன்ன கபிலன் தலை வரை போர்த்தியபடி, வராத உறக்கத்தோடு மல்லுக்கட்டினான்.
அசந்த உடலும் அயர்ந்த மனமும் உறங்கக் கெஞ்சியும் தூக்கம் வருவேனா என்றது.
கடந்த ஒரு வாரத்தில் எத்தனை அலைச்சல், டென்ஷன், பதட்டம், அழுகை, அலட்சியம், விலகல் என விதவிதமான உணர்வுகள், காட்சிகள்!
இங்கிருந்து புறப்பட்டதில் இருந்து கிரிதரன், சுபாஷ் இருவருக்கும் செய்ய வேண்டியவற்றைப் பணித்து, அவ்வப்போது அம்மாவிடம் பேசி, தைரியம் சொலலிக்கொண்டே போனதில் ஜெயச்சந்திரனை அனுமதித்திருந்த மருத்துவமனையே வந்திருந்தது.
ஜெயச்சந்திரன் ஐசியூவில் இருக்க, வாசலிலேயே நின்றிருத்த ஆதி, கபிலனைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டு கலங்க, அவனை சமாதானித்து,
“அம்மா எங்கடா?”
“ரூம் எடுத்திருக்கோம்ணா” என அழைத்துச் செல்ல, அங்கே…
ஜெயச்சந்திரனின் தந்தை காலமாகி இருக்க, அவனது அம்மா, அக்கா, அவனது முதல் மனைவி க்றிஸ்டியின தாய், இதுவரை கபிலன் பார்த்திராத இன்னும் ஒரு மத்திம வயது ஜோடி , ஒரு இளம்பெண் என அந்த அறை முழுதும் நிரம்பி இருக்க, ஜன்னலுக்கு அருகே நின்றபடி , கபிலனை ஒத்த வயதுடைய ஒரு இளைஞனுடன், நின்றிருந்தாள் நிலா.
தன்னைத் துளைக்கும் பார்வைகளைக் கண்டு கொள்ளாது, நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி “கபிலா...” என்று அழுத அம்மா மாளவிகாவின் அருகே சென்று கையைப் பிடித்து அழுத்தினான்.
“நத்திங் மா. நிலாப்பா வில் பீ பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இப்ப சரியானதும் நம்ம ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போய் ரிலாக்ஸ்டா லைஃப்ஸ்டைல் சேஞ்ச்சுக்கு ட்ரீட் பண்ணிக்கலாம். நீ பீஸ்ஃபுல்லா இரும்மா” என்றவன்,
“நீ எப்ப வந்த நிலா?”
தன் அருகில் நின்றவனை, தன் பாட்டிகளைப் பார்த்தவள், மெதுவே “நேத்து மதியம்”
ஃபோனிலும் நேரிலும் தன்னிடம் ஆர்வத்துடன் கதை பேசும் நிலா, சமீபமாக, என்ன என்றால் என்ன என்றதோடு நிறுத்திக் கொள்வது கபிலனுக்குத் தெரியும்தான். இந்த புகாரை ஜெயச்சந்திரனே சொன்னான்.
ஆனாலும், நேரில் பார்த்தே எட்டு மாதங்களுக்கு மேலான நிலையில், கபிலன் நிலாவிடமிருந்து இத்தனை விலகலை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
“நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேம்மா” என்றவன், ஆதியோடு நேரே கேன்டீனுக்கு சென்றான்.
இரண்டு டீ சொன்னவன் “என்னடா ஆதி பிரச்சனை, இவங்கல்லாம் எப்ப வந்தாங்க. அந்த ஆன்ட்டியும் அங்கிளும் யாரு, முக்கியமா அந்தப் பையன்...”
கண்ட காட்சியில் கபிலனிடம் ஒரு அனுமானம் இருக்க, ஆதித்தன் அதையே வழி மொழிந்தான்.
நிலா, கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் அனலிஸ்டாக இருக்கிறாள்.
“நான் ஒருத்தி இங்க இருக்கையில எம் பேத்தி ஏன் ஹாஸ்டலுக்குப் போகணும்?” என்ற ஜெயச்சந்திரனின் அம்மா, நிலாவைத் தன்னோடே இருத்திக் கொண்டார். வயதுப் பெண்ணும் வயதான பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதில், ஜெயச்சந்திரன் இங்கே நிம்மதியாக இருந்தான்.
ஆனால், அவனது அம்மா க்றிஸ்டியின் குடும்பத்தோடு ஒட்டி உறவாடுவதை தொடர்ந்தார். வீட்டு விசேஷங்களுக்குச் சென்று வந்தனர்.
தன் மகள் வயிற்றுப் பேத்தியைப் பார்க்கவென வந்த க்றிஸ்டியின் அம்மா, நிலாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். முதலில் மறுத்த நிலா, தன் தாயைப் பற்றிய கதைகள், அம்மம்மாவின் பாசம், தங்கம், செல்லம், கண்ணு போன்ற இனிமையான விளிப்புகள், தன் வயதையொத்த மாமா வசந்தராஜாவின் மகள் லீமாவின் நட்பு என, நாளடைவில் அவர்களுடன் நெருங்கினாள்.
இதை அறிந்த ஜெயச்சந்திரன், “பார்த்து, அளவோட பழகுடா” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
ஒரு வருடம் முன்பு ஆன்சைட் சென்று வந்திருந்த லீமாவின் அண்ணன் கெவின், மூன்றாம் முறை நிலாவை சந்தித்தபோதே தன் காதலைச் சொன்னான்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு நிலா. உனக்கும் என்னைப் பிடிச்சிருந்தா, நம்ம கல்யாணம் முடியற வரை ஆன்சைட் ப்ராஜெக்ட் எதுவும் எடுக்க மாட்டேன். நீ வேலையை அங்க மாத்திக்கிட்டாலும், விட்டாலும் எனக்கு ஓகேதான். யோசிச்சு, யெஸ்ஸுனு சீக்கிரம் சொல்லிடும்மா” என, நிலாவிடம் ப்ரபோஸ் செய்த கையோடு, அதைத் தன் பெற்றோர்களிடமும் சொல்ல, விஷயமறிந்த க்றிஸ்டியின் அம்மா, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
அத்தை மகள்தான். முறைதான். தாராளமாகக் காதலிக்கலாம், கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கொரு முறை இருப்பதை மறந்து, இந்தத் திருமணத்திற்கு ஜெயச்சந்திரன் சம்மதிக்க மாட்டான் என அவர்களாகவே தீர்மானித்து, சிறிது சிறிதாக நிலாவை சரிக்கட்டி, பாட்டிகளாகக் கலந்து பேசிக் கல்யாணம் வரை சென்றுவிட்டனர்.
மாமன் மகன், ஆன்சைட், அமெரிக்க வாழ்க்கை, காதல், என ஒரு பக்கம் களையான கெவின் கட்டி இழுக்க, என்னதான் தந்தைவழிப் பாட்டியின் பேராதரவு இருந்தபோதிலும் இன்னொரு புறம் தந்தையின் மனதை அறிந்த நிலா கவலைப்பட்டுக் குழம்பி நின்றாள்.
“நான் சொல்லி உங்கப்பா கேக்காம இருப்பானா?” என, பேத்திக்கு அபயமளித்தார் ஜெயச்சந்திரனின் தாய்.
“இப்ப நாங்கதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. எங்க முறைப்படி சர்ச்லதான் கல்யாணம். நாங்க எங்க திருச்சபைல பதிவு பண்ணி நோட்டீஸும் போட்டாச்சு” என்றான் கெவினின் தந்தை வசந்தராஜா.
மகனின் மனதும், மாளவிகாவுடனான திருமணமும் இன்றைய நிம்மதியான வாழ்வும் க்றிஸ்டியின் இறப்புக்கு நியாயம் செய்யவில்லை என இன்றுவரை நம்பியதில், ஜெயச்சந்திரனின் தாயும் தமக்கையும் அந்தத் திருமண ஏற்பாட்டிற்கு ஆதரவளித்தனர்.
அடுத்த புதன் கிழமை திருமணம் என்ற நிலையில், சரியாக எட்டு நாள்களுக்கு முன் எல்லோரும் திடீரென கிளம்பி வந்து, அவனது மகளின் திருமணப் பத்திரிகையை அவனிடமே கொடுக்க, அதிர்ச்சியில் ஜெயச்சந்திரனுக்குப் பேச்சே வரவில்லை.
அவனது உறவினர்களில் ஓரிருவர் காரணமின்றி வாட்ஸ்ஆப்பில் வாழ்த்து தெரிவித்தது ஏனென்று இப்போது புரிந்தது. அவர்களுக்குக் கூடத் தெரிந்த விஷயத்தைத் தனக்குக் கசிய விடாது, என்னவென்று நிதானித்து எதிர்வினையாற்ற அவகாசம் கொடாது, நெருக்கடியில் நிறுத்தி இருந்தனர்.
நிலா கேம்பஸில் செலக்ட் ஆகி வேலையில் சேர்ந்த ஆறாம் மாதத்தில் இருந்தே மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராக இருந்தவனிடம் “இப்ப வேணாம், ரெண்டு வருஷம் போகட்டும், GATE எழுதறேன், CAT எழுதறேன்”
என்றவள், இப்போது கேட்டைப் (cat- பூனை) போல் கேட்டைத் தாண்டிக் குதித்திருந்தாள்.
தன் அம்மாவும் அக்காவுமே தன்னைத் தள்ளி நிறுத்தி, க்றிஸ்டி வீட்டினருக்கு ஆதரவாக அத்தனை ஏற்பாடுகளிலும் உடன் நின்றிருக்க, தனக்கானதை நடத்திக்கொள்ளும் சுயநலம், அல்லது பெரியவர்களின் போதனையும் ஆதரவும் தந்த பலம், காதல் தந்த திடம், கேக் மேல் வைக்கட்பட்ட செர்ரிப் பழம் போல் அவளது உத்தியோகமும் சம்பாத்தியமும் தந்த தன்னம்பிக்கை என எல்லாமாகச் சேர்ந்து அழுத்தமும், அலட்சியமுமாக நின்ற மகளிடம், என்னவென்று கேட்பது?
ஏழு மாதக் குழந்தையில் இருந்து நாலு வயது வரை மகளைத் தனியே வளர்த்தவன், இன்றளவும் மாளவிகா நிலாவை சற்றே கடுமையாகக் கண்டித்தாலோ, அவள் மீது புகார் சொன்னாலோ, உடனே மகளுக்குப் பரிந்து கொண்டு வரும் ஜெயச்சந்திரன், நடப்பது எதுவும் மனதில் பதியாது அலங்க மலங்க விழித்தான்.
கணவனின் நிலை மனதை வருத்த, மாளவிகா “ஏன் நிலா, இப்படி செஞ்ச? இதுதான் என் விருப்பம்னு முன்னாலயே எங்கள்ட்ட சொல்லி இருக்கலாமே?”
“...”
“எல்லாத்தையும் நீயே முடிவு செஞ்சு பத்திரிகை வரை அடிச்சு, அடுத்த வாரம் கல்யாணம்னு இப்ப வந்து சொல்லுறது உனக்கே நியாயமா படுதா நிலா?
ஏன், எங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லையா, இல்லைன்னா நீ நெருங்கிப் பேச முடியாத அளவு உனக்கு உங்கப்பா கிட்ட பயமா?”
“...”
“பதில் சொல்லுடீ”
“இல்ல மம்மி, அது…. க்றிஸ்டிமா ரிலேஷன்னா அப்பாக்கு பிடிக்காது, ஒத்துக்க மாட்டார்னு…”
“அதனால அப்பா கிட்ட சொல்லாம, அப்பாவோட சம்மதத்தைக் கேக்காமலே கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆயிட்ட, அப்டிதானே?”
ஜெயச்சந்திரனின் அம்மா “என்னடீ என்னவோ சுமந்து பெத்தவளாட்டம் கேட்டுக்கிட்டே போற? அவங்கப்பனையே பெத்த ஆத்தாக்காரி நான், எம் பேத்தி கல்யாணத்தை முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லையா? பேச வந்துட்டா…” என வழக்கத்தை விடவே கீழான வார்த்தைகளை விட, ஆதி
“வாய மூடறீங்களா?” என்று கத்த, மாளவிகாவின் வளர்ப்பு சரியில்லை என அதற்கொரு பஞ்சாயத்து போனது.
தன் மாமியார், தன் கணவனின் மாமியார் என வயதானவர்கள், அடுத்த வாரம் திருமணம் என மகளுடன் வந்து நிற்கும் மாப்பிள்ளைப் பையன், அவனது பெற்றோர், தங்கை, ஜெயச்சந்திரனின் அக்கா…
ரத்த சொந்தங்களை வெளியேற்றவா முடியும்?
பெற்றவர்களே பகையாகி நின்றதில் அன்று முழுவதும் உரசலும் உறுமலுமாகவே கழிய, மாளவிகா இரவு உணவை வெளியில் இருந்து வரவழைத்தாள்.
இரவில் பொட்டுத் தூக்கம் இல்லாது கிடந்தும் நடந்தும் அலைப்புற்ற ஜெயச்சந்திரன், காலை காஃபிக்கு பின் வியர்வை பெருக, தொண்டை அடைத்து மூச்சு விடத் திணறியவன், ஓய்வறைக்கு சென்று ஓங்கரித்தபடி வாந்தி எடுத்தான். அங்கேயே மயங்கிச் சரிய, சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.
******************
ஜெயச்சந்திரனின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்திருக்க, கபிலன் மருத்துவரின் எதிரே அமர்ந்திருந்தான். அவர் ஆதியைக் கேள்வியாகப் பார்க்க
ஆதி “என் அண்ணா டாக்டர்”
“நான் கபிலன். சொல்லுங்க டாக்டர்”
கையில் இருந்த இஸிஜி, ப்ளட், எக்கோ கார்டியோகிராம், ரத்தநாளங்களின் செயல்பாடு, ரத்த அழுத்தம் போன்ற பலவிதமான அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை பார்த்த டாக்டர்,
“முதல்ல ரிலாக்ஸ். உங்க அப்பாக்கு ஹார்ட் அட்டாக் இல்லை. ஆங்ஸைட்டி அல்லது பேனிக் அட்டாக் (Anxiety/Panic Attack)”
“ஏதோ ஒரு கடும் அதிர்ச்சி தரும் செய்தி அல்லது சம்பவத்தால தூண்டப்பட்டு இருக்கணும். ஏன்னா, இந்த அட்டாக் வந்தா வரும் பாதிப்புகள் எல்லாம் அதோட இயல்பைத் தாண்டின அளவுல இருந்ததுனால எங்களால ஒரு முடிவுக்கு வர முடியலை. நௌவ் ஹி ஈஸ் ஸ்டேபிள். செடேஷன்ல தூங்கறார். அவர் எழுந்ததும் ரூமுக்கு மாத்திடுவோம். ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும்”
“தேங்க் யூ டாக்டர்…ஒரு விஷயம்…” என்று கபிலன் தயங்கினான்.
“சும்மா கேளுங்க”
“என் தங்கைக்கு வர புதன்கிழமை சென்னைல கல்யாணம். அவரால ட்ராவல் பண்ண முடியுமா?”
“சாதாரணமா எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. எதுக்கும் திங்கள் வரை பார்த்துட்டு சொல்றேன். அவருக்கு ஹோப் குடுக்க வேண்டாம்” என்ற மருத்துவர்,
“இஃப் ஐ’ம் ரைட், அட்டாக் வர அந்தக் கல்யாணம்தான் காரணமோ?”
கபிலன் தலையசைத்தான்.
“உங்க முகம் ரொம்ப பரிச்சயமா இருக்கு”
“ஓ.., நான் ‘நலம் ஆயுஷ் கேர்னு’ சிறுமலைல ஒரு ஆயுர்வேதா ஹாஸ்பிடல் வெச்சிருக்கேன் டாக்டர்”
“டாக்டரா நீங்க… குட், வெரிகுட்”
ஆதி “அண்ணா ஃபுட்பால் ப்ளேயர் டாக்டர். கபிலன் சாரநாதன்”
“ அதான்.. அதேதான். யெஸ், ஐ ரிமெம்பர், ஐ ரிமெம்பர்” என்றவருடன் கை குலுக்கிவிட்டு அறைக்கு வர, அங்கு மாளவிகா மட்டும் தனியே இருந்தாள்.
நுழைந்ததுமே ஆதி மாளவிகாவிடம் “பயப்படாதம்மா, அப்பாக்கு ஹார்ட் அட்டாக் இல்லையாம். பதட்டத்துல வந்த படபடப்புதானாம். ஆனா, அவருக்கு மன உளைச்சல் இல்லாம பார்த்துக்கணும்”
ஆமோதித்த கபிலன் “எல்லாரும் எங்கம்மா?”
“சாப்பிடப் போயிருக்காங்க”
“நிலா?”
“அந்தப் பையன்தான் கையோட இழுத்துக்கிட்டுப் போயிட்டானே”
நிலாவிற்கும் அவள் தந்தைக்குமான நெருக்கத்தை நன்கு அறித்த கபிலனுக்கு, ஜெயச்சந்திரனின் இன்றைய நிலைக்குக் காரணம் தான்தான் எனத் தெரிந்தும், தனியே இருக்கும் மாளவிகாவுடன் நில்லாது அவள் வெளியில் சென்றதை அவனால் ஏற்கவே முடியவில்லை. தன் சுயத்தை, சுற்றத்தை மறக்கும் அளவுக்கு அப்படி என்ன காதல்?
“அவங்க ரொம்ப பேசிட்டாங்களாம்மா, நிலாவே ஏதாச்சும் சொல்லிட்டாளா?”
“ம்ப்ச்… என்னவோ போடா. நைட் ரெண்டு மணி இருக்கும். ‘என் அம்மா, அக்கா, பெத்த பொண்ணு எல்லாரும் சேர்ந்து முதுகுல குத்தினாப்போல இருக்குடீ’ ன்னார்டா. அவர் குரலே கலங்கி இருந்துச்சு. இதுபோல மனசு விட்டுப்போய் அவர் பேசி நான் பார்த்ததே இல்லடா கபிலா”
“ம்… கரெக்டா கல்யாணம் என்னிக்கு மா?”
ஆதி தன் மொபைல் வாட்ஸ்ஆப்பில் இருந்த திருமணப் பத்திரிகையைக் காட்ட, அதில் கவின் வெட்ஸ் நிலா ஜென்ஸி என்ற பெயரைப் பார்த்த கபிலன் “என்னம்மா இது?” என்றான்.
கபிலனுக்கு சமீபத்தில்தான் நிலாவின் தாய் க்றிஸ்டியின் இறப்புக்கான காரணம் தெரிய வந்தது.
எந்த காரணத்திற்காகத் தன் பெற்றோர் தந்த நெருக்கடி தாங்காது, க்றிஸ்டி தற்கொலை செய்து கொண்டாளோ, அந்த நோக்கத்தை சொல்லாமலே நிறைவேற்றியதுதான் ஜெயச்சந்திரனுக்கு அதீத பதட்டத்தை, இதயப் படபடப்பை, மூச்சுத் திணறலைத் தந்து, கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளி இருப்பது புரிந்தது.
ஒரு இளம் நர்ஸ் வந்து ஜெயச்சந்திரனை அறைக்கு மாற்றி விட்டதாகவும், தொந்தரவு செய்யாமல் போய் பார்க்கலாம் என்றும் தெரிவித்தாள்.
*********************
மறுநாள் மதியம் தன்னிடம் விடைபெற வந்தவர்களிடம், ஜெயச்சந்திரன் “எனக்கு இந்த சம்பந்தம் புடிக்குதோ, இல்லையோ, என் மக கல்யாணம் என்னோட கடமை. நிலா இங்க இருக்கட்டும். கல்யாணத்துக்கு முதல் நாள், எங்களோட அவ சென்னை வருவா. என்ன நிலா, இருப்பல்ல?”
தன் பாட்டியை, நிலாவின் பாட்டியை, பெற்றோர்களை முந்திக்கொண்டு, கெவின் “நிலா இங்க இருப்பா அங்கிள். டேக் கேர்” என்றான்.
‘என் மக என் வீட்ல இருக்க நீ யார்றா பர்மிஷன் குடுக்க’ என்று தோன்றினாலும், கெவினாக முன்வந்து பேசியது ஒரு விதத்தில் பெரும் நிம்மதியைத் தந்தது.
ஜெயச்சந்திரன் “மாலு, கல்யாணத்துக்கு என்னல்லாம் வாங்கணுமோ, நிலாக்கு என்ன வேணுமோ, அதையெல்லாம் அவளையே கூட்டிட்டுப் போய் வாங்கிடு”
அடுத்த இரண்டு நாள்கள் மருத்துவமனையில் ஜெயச்சந்திரனுடன் கபிலன் இருக்க, மாளவிகா, நிலா, ஆதி மூவரும் ஷாப்பிங் என்ற பெயரில் லட்சங்களில் செலவு செய்தனர்.
திங்கள் காலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து, செவ்வாயன்று முற்பகல் விமானத்தில் நிலாவின் திருமணத்திற்கென சென்னைக்குப் புறப்பட்டனர்.
ஜெயச்சந்திரனுக்கு தன் வீட்டிற்குச் சென்று தங்க விருப்பம் இல்லயாதலால், கபிலன் கூகுளில் தேடி ஒரு லக்ஸுரி சர்வீஸ்ட் அபார்ட்மென்ட்டைப் பிடித்திருந்தான்.
தங்களின் வருகையை அறிவிக்க, வசந்தராஜா தன் மனைவியுடன் வந்து திருமணப் புடவையையும் அதற்கேற்ப தலையில் அணியும் வேலைப்பாடுடன் கூடிய veil ஐயும், நகைகளையும் கொடுத்துச் சென்றனர். எல்லாம் முன்பே திட்டமிட்டு வாங்கப்பட்டது, அந்த ரவிக்கையின் கச்சிதத்தில் தெரிந்தது.
மறுநாள் காலை நேரடியாகத் திருமணம் நிகழும் திருச்சபைக்கு வந்துவிடுவதாக தெரிவித்தனர்.
காலை ஆறு மணிக்கே கெவின் ஏற்பாடு செய்திருந்த இரண்டு அழகு நிலையப் பெண்களின் கைவண்ணத்தில் பகலிலும் பிரகாசித்தது நிலா.
ஜெயச்சந்திரன் மற்றும் க்றிஸ்டியின் குடும்பத்தினர், இவர்களது வருகையை சற்றே பதட்டமும் சந்தேகமுமாக எதிர்பார்த்துக் காத்திருக்க, வசதியான கார் ஒன்றை அமர்த்திக்கொண்டு முன்னதாகவே தேவாலயத்திற்குச் சென்று சேர்ந்தனர்.
தேவனின் முன்னே அடர் நீலத்தில் த்ரீ பீஸ் சூட் அணிந்து காத்திருந்த கெவினிடம் ஜெயச்சந்திரன் மகளின் கைபிடித்துக் கொடுக்க, கத்தோலிக்கத் திருச்சபையின் பிஷப் தேவ வாசகங்களை ஓத, மணமக்கள் இருவரும் திருமண உறுதிமொழியை உரைத்தபின் மோதிரம் மாற்றிக்கொள்ள, திருமணம் இனிதே நிகழ்ந்தது.
அந்த தேவாலயத்தைச் சேர்ந்த சமூகக் கூடத்திலேயே மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மகள் திருமணம், கை நனைக்காது போகக் கூடாதென, உண்டு, விருந்து முடியும் வரை காத்திருந்தனர்.
இதில் திருமணத்திற்கு வந்திருந்த ஜெயச்சந்திரனின் தாய்வழி, தந்தைவழி சொந்தங்களில் பலரும் “உங்கம்மா கூப்பிட்டாங்கதான். ஆனா, அப்பாவும் இல்ல, வீட்டுக்கு ஆம்பள, மக கல்யாணம், நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேணாமா?” என்றதற்கு வேறு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.
புறப்படும் முன் ஜெயச்சந்திரன் கெவினிடமும் அவனது பெற்றோரிடமும் “பார்த்துக்கங்க. மதுரைக்கு வாங்க. நிலாவோட சீர் எல்லாம் ஈவினிங் கொண்டு வந்து குடுத்திடறோம்” என்றான்.
பேச்சு அங்கேயே நின்றிருந்தால் சுமுகமாப் போயிருக்கும். ஆனால், க்றிஸ்டியின் அம்மா
“ நீங்க எம்பொண்ணை எங்க பேச்சை மீறி உங்க பக்கம் இழுத்துக் கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி, உங்க பொண்ணை நான் எப்படி எம்பேரனுக்குக் கட்டி வெச்சேன்னு பார்த்தீங்களா, அதுவும், முறையா எம்பேத்திக்கு ஞானஸ்நானம் செஞ்சதுக்குப் பிறகு” எனவும், ஜெயச்சந்திரனின் அம்மாவும் அக்காவும் அதிர்ச்சியாகப் பார்க்க, ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல் அவன் அமைதியாக நின்றான்.
தன் பழிவாங்கல் நிறைவேறிய வெற்றிக்களிப்பில், தான் பேசுவது, ஜெயச்சந்திரனை மட்டுமின்றி, அவன் மகளையும் காயப்படுத்தும் என அந்த எழுபத்தி மூன்று வயதுப் பெண்மணிக்குப் புரியவில்லை, அப்படியே புரிந்தாலும் அதுபற்றி அவர் கவலைப்படவும் இல்லை.
அது வரை வாஞ்சையாகத் தெரிந்தவை எல்லாம் இப்போது வியூகமாகத் தெரிந்ததில், அழுகை மேலிட தந்தையை நெருங்கிய நிலா “அப்பா…”
“...”
“அப்பா, பயமா இருக்குப்பா”
ஒருவாரமாக மகள் மீது இருந்த ஜெயச்சந்திரனின் கோப, தாப, வருத்தமெல்லாம், நிலா ‘பயமா இருக்குப்பா’ என்று தன்னை நாடி வந்து கையைப் பிடித்த நொடியில் உதிர்ந்து விட்டது.
தொண்டையைச் செருமிக்கொண்ட ஜெயச்சந்திரன் “தைரியமா இருக்கணும் நிலா.
என்ன ஒன்னு, நீ கெவினை விரும்பறேன்னு முன்னாலயே எங்கிட்ட சொல்லி இருந்தா, இது இப்படிதான் நடக்கும்னு புரிய வெச்சிருப்பேன். நீ சின்னப் பொண்ணு இல்ல. உன் சம்மதம் இல்லாம அவங்க எதையும் செய்யலை”
“...”
“இப்ப என்ன, கிறிஸ்துவப் பொண்ணுன்னு தெரியாமலா உங்கம்மாவை நான் லவ் பண்ணினேன். அவ பேரே க்றிஸ்டி. அவளை நாங்க யாரும் எதுக்கும் கட்டாயப் படுத்தலை. இன்ஃபேக்ட், அவளுக்குப் பிடிக்கும்னு வாரவாரம் இன்ஃபேன்ட் ஜீஸஸ் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவேன். நான் சொல்லாமலே, என்னைப் புடிச்சதால, எனக்காக, உங்கம்மாவேதான் எங்க வீட்டுப் பழக்கத்தை ஏத்துக்கிட்டா”
“அப்பா…”
“கெவினோட சந்தோஷமா, உண்மையா இரு நிலா. உன் இடத்தை, திடத்தை சுயமரியாதையை, விட்டுக்கொடுக்காம இரு. எதுவும் தேவை, அவசரம்னா அப்பா இருக்கேன். புரியுதா?”
“ம்…”
“நீ க்றிஸ்டியோட மகள்தான். ஆனா, முழுக்க, முழுக்க இந்த அப்பா வளர்த்த பொண்ணு. அதை நீ திடமா நின்னு நிரூபிச்சுக் காட்டு”
கடைசி வரியில் ‘உன் அம்மாவைப் போல் கோழையாகி விடாதே’ எனச் சொல்லாமல் சொல்லி, தான் ஒரு தேர்ந்த வக்கீல் என்பதை நிரூபித்தான்.
சம்பந்தியின் கொக்கரிப்பில், தவறு செய்துவிட்டோமோ என முதல் முறையாக, மகனின் பக்கம் நின்று யோசித்த ஜெயச்சந்திரனின் தாய்
“சந்திரா” என அழைக்க, “அப்புறமா பேசறேம்மா” என்று கிளம்பிவிட்டான்.
அவர்கள் வெளியில் வரக் காத்திருந்த கபிலன் காருடன் வந்து நிற்க, மௌனமாகத் தங்குமிடம் போய்ச் சேர்ந்தனர்.
வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வந்த கபிலனின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னை மன்னிச்சுடு கபிலா” என்ற ஜெயச்சந்திரனின் குரல் குற்றவுணர்வில் தவித்துத் தழதழத்தது.
“ப்ச்..இட்’ஸ் ஓகேப்பா, விடுங்க” என்றவன், அவனே அறியாது நிலாவை விலக்கியிருந்தான்.
ஜெயச்சந்திரன் மருத்துவமனையில் இருக்கும்போது, சென்னைக்குப் புறப்படும் முன் மாளவிகாவிடம் இரண்டு பாட்டிகளும் வைத்த முக்கியமான நிபந்தனை, கபிலன் இந்தத் திருமணத்திற்கு வரக்கூடாது என்பதுதான்.
“மொத கல்யாணத்துல பொறந்த பையன்னு ஏதோ சின்னவனா இருந்தப்ப கூடவே கூட்டிக்கிட்டுத் திரிஞ்ச வரைக்கும் சரி. இப்போ வளர்ந்து முழு ஆம்பளையா நிக்கறவனை எம் பொண்டாட்டியோட புள்ளைன்னு பெருமையா சொல்ல இதென்ன அமெரிக்காவா?” - க்றிஸ்டியின் தாய்.
“இத பாரு மாளவிகா, எம் பேத்தி நிலாவோட கல்யாணம், அவ விருப்பப்படி அவ மாமன் மகனோட நடக்கப்போகுது. அவங்க மக க்றிஸ்டி இருந்த இடத்துல இன்னொருத்தரை வெச்சுப் பாக்கறதே கஷ்டம்னா, உன் மூத்த புருசனோட புள்ளைய… சொல்லவே நல்லால்ல. அவனைக் கூட்டிக்கிட்டு அங்க வந்து நிக்காத” என்றிருந்தார் ஜெயச்சந்திரனின் அம்மா.
‘நான் இன்னும் எத்தனை வருஷம்தான் இந்தப் பேச்சைக் கேக்கணுமோ?’ என்று நொந்து போன மாளவிகாவிற்கு, வந்தது முதல் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்ட மகனிடம் இதை எப்படிச் சொல்ல என்று புரியவில்லை.
‘கடவுளே, என் புள்ளைய நான் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்!’
இடையில் ‘பேசாம நானே போகாம இருந்துட்டா?’ என்ற வேலைக்கு ஆகாத யோசனையும் வந்து சென்றது.
மகளின் திடீர்த் திருமணச் செய்தி தந்த பதட்டம் தாளாது ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீடு திரும்பிய கணவனிடம், அவனது உடல்நிலை கருதி இதைச் சொல்லவே பயமாக இருந்தது.
முன்பே அதிருப்தியில் இருப்பவன், என்ன சொல்லுவானோ? ஒருவேளை அவனே கபிலனை ‘வராதே’ என்றுவிட்டால், இனி கபிலன் மதுரைக்கு வருவதே கேள்விக்குறியாகிவிடும்.
காலையில் மணப்பெண் அலங்காரத்தில் தயாராகி வந்தவளிடம் கபிலன் “நிலா, இது உனக்கு என்னோட கிஃப்ட்” என லேட்டஸ்ட் மாடல் ஐ ஃபோன் ஒன்றைத் தந்தான்.
குர்த்தி, கைப்பை, கூலர்ஸ், பர்ஸ், மீனாக்ஷி கோவில் வாசல் கண்ணாடி வளையல் என கபிலன் வாங்கித் தரும் சின்னச் சின்னப் பொருள்களுக்குக் கூட அத்தனை மகிழும் நிலா, வெறும் ஒத்தை ‘தேங்ஸ்ணா’ வோடு நிறுத்திக்கொண்டாள்.
ஆதி கூட “எனக்கா, ஒன்னரை லட்ச ரூபா ஃபோனுக்கு இவ்ளோதான் ரியாக்ஷனா?” என்று கலாய்த்தான்.
சர்ச் வாசலில் கார் நின்றதும்,கபிலன் “விஷ் யூ ஏ ஹேப்பி மேரீட் லைஃப் நிலா” என கையைப் பற்றிக் குலுக்கினான்.
பின்னால் வந்த கார் வழி கேட்டு ஒலிப்பானை அலற விட, “சீக்கிரம் இறங்குங்க. ஆல் தி பெஸ்ட் நிலா. ஆதி, அப்பா கூடவே இரு. வெளில வரமுன்ன கால் பண்ணு”
“கல்யாணத்துக்கு வராம, நீ எங்கண்ணா போற?” - ஆதி.
“இருக்கட்டும் டா, அவங்க மதுரைக்கு வரும்போது வந்து பாக்கறேன். அதான் யூட்யூப் லைவ் டெலிகாஸ்ட் இருக்கே, அதுல பார்த்துக்கறேன்”
ஜெயச்சந்திரனின் காதில் மாளவிகா ஏதோ சொல்ல, அவன் “இது என்ன பைத்தியக்காரத்தனம?” என்றதே மாளவிகாவிற்கு அத்தனை ஆறுதலாக இருந்தது.
அதற்குள் அவனது அக்காவும், கெவினின் அம்மாவும், வந்து நிலாவுக்கு ஆரத்தி எடுத்து, எல்லோரையும் அழைத்துச் செல்ல வந்துவிட,
மாளவிகா, மகனிடம் தலையசைத்தவள், கணவரிடம் “போகலாங்க” என்றாள்.
தான் உள்ளே வராமல் விலகி நின்றதில், நிலாவின் மாறிய உடல்மொழியும் அம்மா மாளவிகாவின் கண்களில் தெரிந்த நிம்மதியும் கருத்தை விட்டு அகலாததில், கண்ணிரண்டும் கரித்துச் சிவந்து, எரிய, கபிலன் தூங்க முடியாது தவித்தான்.
‘எம் புள்ளை, எங்கண்ணா, அவன் கல்யாணத்துக்கு வராம எப்படி, என ஏன் யாரும் எனக்காகப் பேசவில்லை?’
கேள்விகளும் காட்சிகளும் மாறி மாறி சுழன்றதில் மணி பத்தாகி விட, ஹாஸ்பிடலுக்காவது போவோம் எனத் தயாராகி புறப்பட்டான். பசித்தது.
சமைக்கப் பொறுமையும் இல்லை தோதாகப் பொருள்களும் இல்லை.
‘பேசாம இட்லி செஞ்சு தரேன், எடுத்துட்டு போடான்னு அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாம்’
இங்கேயும் வீட்டுக்குச் செல்லலாம்தான். அப்பா தோட்டத்துக்குப் போய் இருப்பார். வலியச் சென்று உரிமையாக உணவைக் கேட்கப் பிடிக்கவுமில்லை, அது பழக்கமும் இல்லை.
பைக்கை எடுத்துக் கொண்டு ‘நலம்’ நாடிச் சென்றான். நேரே குடில்களுக்குப் போய் டிஸ்சார்ஜ் ஆகிச் சென்றவர் யார், புதிதாக வந்தவர் யார் என்று பார்த்து முடிவதற்குள் மதிய உணவு நேரம் வந்துவிடவே, உணவுக் கூடத்துக்குச் சென்றவன் பார்த்தது பார்த்தபடி நின்றான்.
*******************
கபிலன் மருத்துவமனை தொடர்பான வேலை, தகவல்களுக்கு தினமும் கிரிதரனிடம் பேசினான்தான். அவனே சியாமளா இப்போது காலை எட்டரையில் இருந்து சமையல் மற்றும் உணவுக் கூடத்திற்கு சரியாக உணவு வேளைகளில் வந்துவிடுவதாகச் சொன்னான்தான்.
பஃபே முறையிலேயே பதார்த்தங்களின் அருகே நின்றுகொண்டு கலோரி கணக்கு படியும், அவரவரது சிகிச்சைக்குத் தக்கவும், தரமான பிடியுடன் கூடிய எவர்சில்வர் அளவைகளில், குறிப்பிட்ட உணவுகளை, அளந்து, தொன்னைகளில் போட்டுக் கொண்டிருந்தாள் சியாமளா.
சாப்பிடுபவர்கள் எதுவும் சொல்லாது தனக்கானதைக் கேட்டு வாங்கி, மற்ற வகைகளைத் தாங்களே பரிமாறிக்கொண்டு அவளிடம் புன்னகைத்து அல்லது நன்றி சொல்லிச் சென்றனர்.
இடையில் புகாது வெளியில் வந்தவன், உணவுக்கூடத்தின் வாசலில் ஃபிஷ் பௌல் (fish bowl) எனப்படும் பெரிய அளவிளான கண்ணாடிக்கு குடுவையும் அருகில் சிறிய குறிப்பேடு மற்றும் ஒரு பேனாவும் இருக்க, அந்தக் குடுவையின் மேல் ஃபீட் பேக் என ஆங்கிலத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
அதற்குள் இருந்த சில காகத்த் துண்டுகளைக் கையோடு எடுத்துக்கொண்டு, கபிலன் தன் அலுவலக அறைக்குச் சென்றான்.
சற்று நேரத்தில் சாரநாதனிடமிருந்து அழைப்பு வந்தது.
“எங்கப்பு இருக்க?”
“ஹாஸ்பிடல்லதாம்ப்பா”
“காலைல ஏதாச்சும் சாப்ட்டியா?”
“அது…”
“முதல்ல நீ கிளம்பி வீட்டுக்கு வாப்பு”
“ம்… வரேன். ப்பா…”
“நீ வாடா. யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க. நான் இருக்கேன்ல”
பாதி வழியில் சியாமளா முன்னே நடந்து செல்வதைப் பார்த்தவன், இடப் பக்கத் தெருவில் திரும்பி சுற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். பின்னே?
கார் என்றால் கூடப் பரவாயில்லை. சியாமளாவை பைக்கில் ஏற்றினால், அடுத்த ஒரு வாரத்திற்கு சிறுமலையின் சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், கிசுகிசு, ஊர்வம்பு, காஃபி வித் கிழவி, கஞ்சி வித் குமரி… என எல்லாவற்றிலும் இவர்கள்தான் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.
காவேரி “டாக்டர்னு பேரு, நீயே இந்நேரம் வரை வயித்தைக் காயப்போடறவென்” என்று திட்டியபடி வரவேற்றாள்.
நுழைந்ததுமே மீன் குழம்பு வாசம் ஊரைக் கூட்டியது. சாப்பாடு எடுத்து வைத்த செண்பா, “அப்பாக்கும் அண்ணனுக்கும் ஆம்லெட் போடு போ” என மகளை ஏவினாள்.
‘சியாமளா வீட்ல இருக்கும்போது நான் வெஜ்ஜா?’
காத்திருந்தும், கண்ணுக்கெட்டிய வரையில் சியாமளா தென்படவில்லை.
‘இங்கதானே வந்தா, எங்க போனா?’
செண்பா “அளையாம சாப்பிடு கபிலா”
பெண்கள் அனைவரும் தன்னை குறுகுறுப்பாகப் பார்ப்பது தெரிந்து, குனிந்த தலை நிமிராது தட்டைக் காலி செய்தான்.
கை கழுவப் புழக்கடைக்குச் செல்ல, குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டது. கூடவே யாரோ பாத்திரம் உருட்டும் சத்தம்.
சத்தம் கேட்கும் அளவிற்கு பக்கத்து வீட்டு சமையலறை அவ்வளவு அருகில் இல்லை.
இப்போது தாளிக்கும் ஓசையும், பெருங்காய வாசனையும் வர, சுற்றும் முற்றும் பார்த்தவன், தலை நிமிர, மாடியில் கொடியில் காய்ந்த உடைகள், சியாமளாவினுடையதைப் போல் இருந்தது.
உள்ளே வந்து “மாடில…” என்று தொடங்கியதுமே, செண்பா “அதை ஏன் கேக்கற போ, இந்த சியாமளா பொண்ணு செஞ்ச வேலைதான். உங்கப்பாவையே கேளு”
சாரநாதன் “நீ வந்த பிறகு பாத்துக்கலாம்னு சொல்லச் சொல்லக் கேக்காம, நீ போனதுமே, வீடு வேணும்னு புடிவாதமா சொல்லிடுச்சு. அதான் மாடில உனக்காக போட்ட ரூம்ல இருக்கட்டும்னு சொல்லிட்டேன். அதுக்கு சரியா அவங்கப்பா அனுப்பின சாமானும் வந்திட்டு. ஞாயித்துக்கிழம, நாள் நல்லா இருக்குன்னு சொல்லி அன்னைக்கே பாலைக் காச்சி, ஒரே நாள்ள மளமளன்னு செட்டில் ஆயிடுச்சு”
காவேரி “அந்தப் புள்ளை ரூம்பை எப்புடி வெச்சிருக்குன்னு போய்ப் பாரு மருமவனே. நானே ரெண்டு தரம் போய்ட்டு வந்துட்டேன்”
சாரநாதன் “போய்ப் பாரப்பு, அதான் மரியாதை”
கபிலன் “நுங்கம்மா எங்க?”
நீலவேணி “சின்னுக்குப் புள்ளை பொறந்துல இருந்து உந்தங்கச்சி எங்க இங்க இருக்கா?”
கபிலன் தயக்கத்துடன், வீட்டின் நடைகழியில் இருந்த மாடிப்படி ஏறி மேலே சென்றான்.
மொட்டை மாடியின் ஒரு பக்கம் முழுவதும் குளியலறையுடன் ஒரே அறையாகக் கட்டப்பட்டது. அறை வாசலில் ஸ்வஸ்திக் கோலம்.
கதவைத் தட்ட “வா குந்தவை” என்றாள் சியாமளா. மீண்டும் டொக்டொக். கதவைத் திறந்தவள் “பரவாயில்லையே, வாங்கோ”
காவேரி அத்தை சொன்னது போல் அறையை வெகு நேர்த்தியாக வைத்திருந்தாள். முருக்கைக்காய் சாம்பார் மணம் முகத்தில் வந்து மோதியது.
“உக்காருங்கோ” என்றவள், ஒற்றை கேஸ் அடுப்பில் கொதித்ததை அணைத்து மூடினாள்.
கபிலன் “நீ ஊருக்கே போய் இருப்பேன்னு நினைச்சேன்”
“ஏன்?”
“...”
“என்னைப் பார்த்ததும் வேற ரூட்ல பைக்கை விட்டது நீங்கதான்”
“!!!”
“எனக்கு உங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா உங்களைதான் கேட்பேன். ஓடிப் போக மாட்டேன்”
“...”
“பசிக்கறது. சாப்பிடலாமா?”
“நான் சாப்பிட்டாச்சு” என்றவன், திடீரென, சியாமளாவை நெருங்கி அவள் முகத்தின் அருகே வலது கையை நீட்டி “மீன் குழம்பு, வாசம் வருதா?”
“ம்… நல்லா இருக்கே”
“ஏய்…”
சிரித்தவள், ஒரு கிண்ணத்தில் சிறிது சாதம், நெய் சாம்பார் விட்டு அவனிடம் நீட்டினாள்.
“சமத்தா சாப்ட்டு போய், முதல் வேலையா ஷேவ் பண்ணுங்கோ. அழுக்கா இருக்கேள்”
வீடு திரும்பியவனின் கையில் மீன் வாசனையை மீறிய சாம்பாரின் மணம்.
நாலரை மணி தேநீர் நேரத்தில் உணவுக் கூடத்துக்கு ட்ரிம் செய்யப்பட்ட மீசையும் மழமழத்த கன்னங்களுடனும் வந்தவனைப் பார்த்துக் கண் சிமிட்டி, ஒரு பிஸ்கட்டை நீட்டிய சியாமளா,
“குட் பாய், இந்தா பிஸ்கோத்து”

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.