• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

கெட்டிமேளம் கெட்டிமேளம்

S

siteadmin

Guest
கெட்டிமேளம் கெட்டிமேளம்

அர்ச்சனா ஆஃபிஸ் சென்று கல்யாண இன்விடேஷன் எல்லாம் கொடுத்து முடித்தாள். நாளையிலிருந்து பத்து நாள் லீவு.நிறைய வேலைகள் தலைக்கு மேல் கிடக்கின்றன. கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் கண்டிப்பாக ப்யூட்டி பார்லர் போகவேண்டும். ஃபேஷியல் செஞ்சுக்கணும்.என்னவோ கோல்ட் பேக்,
ஹெர்பல் பேக் எல்லாம் ஃப்ரண்ட்ஸ் ரெகமெண்ட் செய்தார்கள்.முகம் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். பளிச்சென்று இருக்க வேண்டாமா?

லஞ்ச் டயத்தில் தோழிகளுடன் அரட்டை.
நாளையில் இருந்து வீடு தானே.மனசாரப் பேசறதை எல்லாம் கேட்டு விடலாம்.

"ஏய்,ஆரம்பத்தில் ரொம்ப ஜாக்ரதையாக இருக்கணும்.எடுத்த எடுப்பில் கலகலன்னு பேசி அசட்டுப் பட்டம் வாங்கிக்காதே!"

"முதலிலேயே ரொம்ப விட்டுக் கொடுக்க வேண்டாம் என்ன.அப்புறம் உன்னுடைய தலையில் மிளகாய் அரைக்கப் படும்.என்ன புரிகிறதா?"

"உன்னுடைய தனி உரிமையையும் தன்மானத்தையும் நீ விட்டுக் கொடுத்து விடாதே ஆரம்பத்திலேயே.சரியா?"

"எப்பப் பாரு ஸல்வார் கமீஸ்,மாட் டிரஸ் வேண்டாம்.நடுநடுவே நல்ல புடவையும் கட்டிக் கொண்டு வலம் வரணும். இல்லை என்றால் உன் கிட்டே புடவையே இல்லை என்று நினைப்பார்கள் .என்ன?"

"எடுத்த எடுப்பிலேயே சமையலறை வேலை எல்லாம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம்.கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இடம் பிடிக்க வேண்டும்."

"முதலிலேயே உன்னுடைய நகை,நல்ல புடவை எல்லாம் காட்டித் தம்பட்டம் அடிக்காதே.அப்பப்ப ஏதாவது அகேஷன்ல எடுத்து ரிலீஸ் பண்ணி அசத்தணும்."

"எல்லாத்துக்கும் பணிஞ்சு போய்த் தலையைத் தலையை ஆட்டி வைக்காதே.கொஞ்சம் கெத்தாவும் இருக்கத் தெரியணும்."

"இவ்வளவு நாள் இருந்த வாழ்க்கை மாறப் போகிறது. அதற்கு ஏற்றாற் போல் உன்னை மாத்திக்கோ."

"சரி சரி.எல்லோரும் பேசறதைப் பாத்து பயப்படாதே.தைர்யமா இரு.எல்லோருக்கும் இதே கதி தானே ஒரு நாள்."

வகை வகையான அறிவுரைகள் செவிகளில் விழ நிஜமாகவே பயந்து தான் போனாள்.பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருந்தாள் கொஞ்ச நேரம்.பின்னர்
தைர்யத்தை மனதில் கூட்டிக் கொண்டு ஒரு வழியாக வீட்டிற்குக் கிளம்பினாள்.

அடுத்த வாரம் மூத்த மகனுக்குக் கல்யாணம். முதன்முறையாக மாமியாராகப்
போகும் கலக்கத்தில் இருந்த அர்ச்சனா வீடு சென்றதும் ப்யூட்டி பார்லருக்கு ஃபோன் செய்து தலையை டை பண்ணிக் கொள்ளவும் மற்றும் ஃபேஷியல் செய்து கொள்ளவும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டாள்.

கல்யாண ஃபோட்டோவில் மாமியாரும் தானே பளிச்சென்று இருக்க வேண்டும்.

அவளுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்கியது சமீபத்தில் மாமியாரான அவளுடைய ஆஃபிஸ் ஃப்ரண்ட்ஸ்.


புவனா சந்திரசேகரன்
 

Author: siteadmin
Article Title: கெட்டிமேளம் கெட்டிமேளம்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.