சொர்க்கத்திலே முடிவானது சொர்க்கம் என்றே முடிவானது
இந்த galaxyயில் நடுநாயகமாக அலையடித்துக் கொண்டிருக்கும் பாற்கடல் ஓரத்தில் வழக்கம் போல நாரதர் காற்று வாங்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். இந்த முறை அவர் சோக கீதம் எதுவும் வாசிக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார். அவ்வப்போது லேசாக குதித்து காலால் ஒரு சிப்பியையோ சங்கையோ ஒன்றும் இல்லாவிட்டால் மணலையோ உதைத்துக்கொண்டு இருந்தார். கூடவே கொசுறாக ஒரு இனம் பிரிக்க முடியாத ஸ்வரத்தில் உருத்தெரியாத மொழியில் ஏதோ ஒரு பாட்டை வேறு முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது உய்யலாலா, ஏலேலோ ஐலேசா என்பது போன்ற BGM வேறு.
மகிழ்ச்சிக்கு என்ன குறைவு? அவருக்கு தான் MV வின் அருள், Mrs.MV யின் கடைக்கண் பார்வை எல்லாமே அவ்வப்போது கிடைத்து வருகிறதே. இப்போது கூட, லார்ட் ஷிவா தன்னை அவசரமாக பார்க்க விரும்புவதாக அவருடைய அந்தரங்க காரியதரிசியான திரு. நந்தி அவர்கள் வந்து சொல்லிவிட்டு போனாரே. அங்கு தான் இப்போது நம் ஆஸ்தான நாயகன் நாரதர் கிளம்பிக்கொண்டு இருக்கிறார்.
இப்படியாக பள்ளிகொண்ட பெருமானைப் பற்றி பெரிதாக கவலைப் படாமல் பாற்கடலில் பாரபட்சமின்றி விளையாடி சிவபெருமான் அவசரமாகக் கூப்பிட்டனுப்பிய மீட்டிங்கிற்கு அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக வந்து சேர்ந்தார் நாரதர்.
"வா வா, நாரதா, என்னதிது? நான் எவ்வளவு அவசரமாக உன்னைக் கூப்பிட்டு அனுப்பினேன். நீ என்னடாவென்றால் இவ்வளவு மெதுவாக வருகிறாயே? உனக்காக மற்ற எல்லோரும் காத்திருக்கிறோம் பார். ஹ்ம்ம்....சரி நந்தி தேவரே, மீட்டிங் தொடங்கட்டும்".
"ஐயனே! எம்பெருமானே!! ஏடுகொண்டலவாடா!!! ஐ மீன், ஆலகால விடமுண்டோனே.... தாங்கள் என்னை அவசரமாக அழைத்த காரணம் என்னவோ?", என்று ஓங்கி சொல்லிவிட்டு அடித்தொண்டையில் மெதுவாக, "ஹ்ம்ம்....எதுகை மோனையில பேசறதுன்னா யோசிச்சு பேசணும். இப்படியா சொதப்பறது?" என்று தன்னைத்தானே வைதுகொண்டார்.
"நாரதா... Mr.யமன் மூன்று மாதத்திற்கு லாங் செர்வீஸ் லீவுக்கு applyஐ செய்திருக்கார். உனக்கே தெரியுமே அவருடைய போஸ்ட் ஒரு நாள் கூட காலியாக வைக்க முடியாது. அதனால், அவர் லீவில் போகும் அந்த மூன்று மாதங்களும் உன்னை அந்த செக்ஷனுக்கு டிரான்ஸ்பார் செய்கிறேன். இன்றிலிருந்து சித்ரகுப்தரின் ரெஜிஸ்டரில் அப்ரூவிங் அதாரிடியும் உமக்கே வழங்கப்படுகின்றது. இது கிடைத்தற்கரிய கௌரவம் என்பது உமக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இந்தப் பணியை செவ்வனே செய்து எம்மை மகிழ்விப்பாயாக. வாழ்க உமது திருப்பணி!!! வளமுண்டாகட்டும்!!!!"
"ஆ ஆ.......சிவபெருமானே!!! இப்படி என்னை சோதித்துவிட்டீரே!!! எனக்கெதற்கு இப்படிப் பட்ட பதவிகளும் பட்டங்களும். நான் என் பாட்டில் தம்பூராவும் சப்பலா கட்டையுமாக எந்தக் கவலையும் இல்லாது உலா வந்து கொண்டிருந்தேனே. இப்படியே இருந்து விடுகிறேன். என்னை விட்டு விடுங்களேன்", பரிதாபமாகக் கெஞ்சினார் நாரதர்.
"என்ன நாரதா இப்படி சொல்லிவிட்டாய்? ஏற்கனவே நீ பிரம்மச்சாரியானதால் உனக்குக் குழந்தை, குட்டி, குடும்பம் என்ற கவலை எதுவும் இல்லாமல் தானே இருந்துவருகிறாய். இதில் உனக்கு இந்த ஈரேழு பதினாலு லோகங்களுக்கும் விருப்பம் போல சுற்றிவர unlimited பெர்மிட் அண்ட் பாஸ் இருக்கு. ஆனால் அதற்காக எப்போதுமே அதே போல கவலை எதுவும் இல்லாமல் பொறுப்பு ஒன்றுமே ஏற்காமல் காலம் முழுதும் இருக்க முடியுமா? இது, மூன்று மாத போஸ்டிங் தானே. நிரந்தரமாகவா உன்னை அங்கே டிரான்ஸ்பார் செய்கிறோம். தவிர, நான் உனக்காக மகா விஷ்ணுவிடம் ரொம்ப கேட்டு அவரும் உன்னை இங்கே செகோண்ட்மேன்ட்டுக்கு ஒப்புக்கொண்டு அனுப்பி இருக்கிறார். நீயானால், இப்படி யோசிக்கிறாய்!!!" சிவபெருமான் அவருடைய வாசாலாவகங்களை எல்லாம் உபயோகப்படுத்தி நாரதரை கவர முயன்றார்.
நந்தி தேவர் தான் முன்னால் வந்து, நாரதரை தோளில் அணைத்து அப்படியே வெளியில் நகர்த்திக் கூட்டி கொண்டு வந்து, "இதெற்கெல்லாம் மன சஞ்சலபடாதீர்கள் நாரதரே!!! உங்களால் திறம் பட சமாளிக்க முடியும். கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசனை செய்து பாருங்கள், நீங்களே புரிந்து கொள்வீர்கள்", என்று சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த நாரதர், இப்போது "சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ, டிரான்ச்பாரும் செகோண்ட்மேண்டும் தான் வாழ்க்கை என்றால் தாங்காது நீதீ....", என்று பாடத்தொடங்கி இருந்தார்.
அவரை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்த நந்தி தேவரோ சிவபெருமான் முன்பு வணங்கி விட்டு, "எம்பெருமானே, நீர் முக்காலமும் உணர்ந்தவர் தான். ஆனாலும் நாரதருக்கு இந்த பதவி கொடுத்த காரணத்தை நான் அறியலாமா? கலகக்காரரும் இதுவரை எந்த பொறுப்பான பதவியையும் வகித்து அறியாதவரும் ஆன நாரதரை இந்தப் பதவிக்கு அனுப்பி இருப்பது என்ன காரணம்? அதுவோ எப்போதுமே பிசியான ஒரு இடம். மனிதர்களின் நியாய அநியாயங்கள் பாவ புண்ணியங்கள் தராசில் நிறுத்துப் பார்க்கும் இடம். இங்கே ஒரு ஸ்திர புத்தி இருப்பவர்கள் தானே செல்ல வேண்டும். தயவு செய்து எனக்கு விளக்குங்கள் பெருமானே", என்று வினவினார்.
"நந்தி தேவரே, நாரதருக்கு எந்த முன் அனுபவமும் இல்லாமல் இருந்தாலும் நான் அவரை அங்கே அனுப்பிய காரணம் என்ன தெரியுமா? பெரியதாக ஒன்றும் இல்லை, இந்த மாங்கனி விஷயத்தில் விளையாடி என்னுடைய இரு மகன்களுக்கும் நடுவில் சண்டை மூட்டினார் அல்லவா? அப்போதிருந்தே இவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று நிறைவேற்றிக்கொண்டேன்", என்று கூலாக சொன்னார்.
"ஹ்ம்ம்...எனக்கென்னவோ நீங்கள் நாரதருக்கு பாடம் கற்பிக்க வேண்டி இப்படி அனுப்பப் போய் கடைசியில் நாரதர் நம் எல்லோருக்கும் ஒரு பெரிய ஆப்பு வைக்கப் போகிறார் என்றே தோன்றுகிறது", என்று சுனாமி அறிவிப்பு போல சோகமாக சொன்னார் நந்தி.
"நந்தி, டோன்ட் பீ எ தத்தி. தேர் இஸ் நோதிங் டு வொர்ரி", என்று சொல்லிவிட்டு பார்வதியை தேடி சென்றார் சிவபெருமான்.
******************************************
நாரதர் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு கைலாசத்தை விட்டு வெளியே வந்தார். அவருக்கு இருந்த மனநிலையில் வைகுண்டத்திற்கும் செல்ல தோன்றவில்லை. இந்த MV இப்படி கை விட்டு கழட்டி விட்டு விட்டாரே என்று இருந்தது.
ஏதோ யோசனையில் நடந்து வந்ததில் அவர் கால்கள் அவரை அறியாமலேயே எமலோகத்திற்கு அழைத்து வந்திருந்தது. அதோ தூரத்தில் உயரமான மதில் சுவர் தெரிகிறதே. மதில் சுவரில் பெரிய பெரிய எருமை தலைகளுடன் கூடிய விளக்குக் கம்பங்கள் இருக்கின்றனவே.
சட்...எருமை தலை!!! இதெல்லாம் ஒரு decorative lamp என்று எமனுக்கு எப்படி தோன்றியது?
இப்படி எரிச்சலோடு நினைத்துக்கொண்டு தொலைவிலேயே கால்கள் நின்றுவிட, மீண்டும் நடக்க முடியாத படி பரிதாபமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அப்போது பக்கத்தில் ஏதோ பாட்டு சப்தம் கேட்க மெல்ல திரும்பிப்பார்த்தால் அங்கே ரம்பை, ஊர்வசி, மேனகா, திலோத்தமை நால்வரும் cat walk நடந்து வந்து கையில் இருந்த தாமரை மலரை ஒய்யாரமாக ஒரு முறை சுழற்றி பின் களுக்கி சிரித்தனர்.
நாரதருக்கு இருந்த கடுப்பில் அவர் சிவபெருமானிடமிருந்து நெற்றிக்கண்ணை கடன் வாங்கி இவர்களை எரிக்கலாமா இல்லை MVயிடமிருந்து சக்கராயுதத்தை கடன் வாங்கி இவர்களை """சும்மா சுத்தி சுத்தி அடிக்கலாமா""" என்று யோசித்தார்.
இது எதையும் அவர் தீர்மானித்து அவர் செயல்படுத்துமுன் நான்கு "கன்னிகளும்!!!" அங்கேயே ஒரு நடனம் ஆடத்தொடங்கினர். மாயாஜாலமாக நடந்து வரும்போது போட்டிருந்த உடைகள் கண்மூடி திறக்கும் முன் மாறி இப்போது நடனம் ஆடும் போது வாஜி வாஜி பாடலுக்கு ஸ்ரேயா போட்டிருந்ததை விட எக்குத்தப்பாக ஒரு உடையை மாட்டிக்கொண்டு வந்து ஆடிக்கொண்டிருந்தனர்.
நாரதரின் முகம் இப்போது அவர் நெற்றியில் வைத்திருந்த kumkumமை விட சிவந்து போய் (சிவப்பிற்கு காரணம் வெட்கம் அல்ல, கோவம்), "ஸ்டாப் தி மியூசிக்" என்று கர்ஜித்தார். சட்டென்று ஸ்டீரியோ சத்தம் நின்று ஆட்டமும் நின்றது.
"ஹ்ம்ம்...அடுத்து வரப்போவது நல்ல ஸ்டெப், நான் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தேன். எனக்கு ஆடணும்...ப்ளீஸ்...ப்ளீஸ்..." கொஞ்சலோடு கெஞ்சினாள் ரம்பை.
"மீ டூ...அடுத்து வரபோற ஸ்டெப்பில் இடுப்பை இப்படி உடைத்து கழுத்தை இப்படி திருப்பி உங்களை ஒரு லுக் விடலாம்னு இருந்தேன்...ப்ளீஸ் ரீகன்சிடர்...", என்று சல்லாபமாய் சபலித்தது… ஊர்வசி.
மேனகாவும் திலோத்தமையும் வேறேதாவது சொல்லி நாரதரின் BPயை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு ரேஞ்சுக்கு கொண்டு செல்லுமுன் நாரதர் அவசரமாக கண்ணை மூடிக்கொண்டு,
"இதென்ன கண்ணராவி? முதலில் நீங்கள் நால்வரும் உங்கள் மேலாடையை ஒழுங்காக மேலேயே முழுக்க மூடி போட்டுக்கொள்ளுங்கள். சகிக்கவில்லை", என்றார்.
நால்வரும் மீண்டும் டிரஸ் சேன்ஜ் செய்து கொண்டு பார்க்க பதவிசாக வந்து நின்றனர். நாரதரும் பயமின்றி மூடின விரல்களை பிரித்து கண்ணை திறந்து அவர்களை பார்த்தார்.
இப்போது மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது நாரதருக்கு.
"கட்டை பிரம்மச்சாரியான என் முன்னால் இப்படி வந்து நடனம் ஆட உங்களுக்கு என்ன தைரியம் இருக்கவேண்டும்? இதோ பிடியுங்கள் சாபம். நீங்கள் நால்வரும் பூலோகத்தில் மானிடர்களாக பிறந்து முறையே ஜிகினா ஸ்ரீ, ஜல் ஜல் ஜமாலா, நளின ஸ்ரீ, கம் கம் கமா என்ற பெயர்களில் பிறவி எடுப்பீர்கள். அதுவும் நடிகைகளாக பிறந்து உங்கள் விருப்பம் இல்லாமலேயே உங்கள் மீது எந்த தவறும் இல்லாமலேயே மீடியாவின் கண்களில் எப்போதுமே பட்டுக்கொண்டு இருப்பீர்கள். அவர்கள் வாயில் விழுந்து, அதன் மூலம் பேனா மையில் விழுந்து, அங்கிருந்து தவழ்ந்து வந்து வெப்சைட்டுகளில் விழுந்து... இப்போது செய்த மகா பாவத்தை போக்கிக் கொள்ளுவீர்கள். அதன் பிறகே மீண்டும் மேலோகம் வருவீர்கள். கேட்ச் யுவர் சாபம். ஹியர் இட் கம்ஸ்...", என்று முதல் ஸ்டன்ட்டை தொடங்கி வைத்தார்.
அவர்கள் சோகமாக மறைய, அங்கே வந்து சேர்ந்தார் தேவேந்திரன். "நாரதரே, வாட்ஸ் ராங்? கம் கம், லெட்ஸ் கோ இன்", என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றார்.
வெளியே தான் எருமை தலை decorated lamp (!!!) என்றால் உள்ளே வந்து பார்த்தால் நிலைமை இன்னும் கர்ண கடூரமாக இருந்தது. நாரதரின் முக பாவத்தை வைத்தே அவருக்கு இங்கே எதுவும் பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்ட தேவேந்திரன்,
"நாரதரே, இங்கே உள்ள ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். அதை மறக்க வேண்டாம். சரியா? இப்படி முகத்தை முழ நீளம் தூக்கி வைத்திருக்காமல் சற்று சிரித்த படி வாரும்", என்று சொல்லி அழைத்து சென்றார்.
**************************************************
"உங்களால் திறம் பட சமாளிக்க முடியும். கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசனை செய்து பாருங்கள், நீங்களே புரிந்து கொள்வீர்கள்"..." நீங்களே புரிந்து கொள்வீர்கள்"..."நீங்களே புரிந்து கொள்வீர்கள்", நந்தி தேவரின் குரல் மீண்டும் மீண்டும் நாரதரின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"வாருங்கள் மகரிஷி! தங்களை இங்கே வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எமதர்ம பிரபு லாங் செர்வீஸ் லீவில் சென்றிருக்கும் இந்த நேரத்தில் வேலையில் எந்த தடங்கலும் வந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சியது பொய்த்துப்போனது முனிவரே! தாங்கள் இங்கே வர ஒப்புக்கொண்டு சம்மதித்ததும் எனது மனம் சொல்லொண்ணா நிம்மதியை அடைந்தது", என்று சமத்காரமாக கூறி நாரதரை வரவேற்றார் சித்திரகுப்தர்.
சற்று முன் எமலோகத்தின் வாசற்படிக்கு அருகில் நாரதர் நான்கு கன்னிகளுக்கும் விடுத்த சாபத்தை உடனடியாக சுட சுட பல்வேறு திசைகளிலிருந்தும் SMS மூலம் அறிந்து கொண்டார் சித்திரகுப்தர்.
வாசலில் நடந்ததை பார்த்து காவலர்களும்; பாதிக்கப்பட்டதால் நான்கு கன்னிகளும்; அவர்களை அனுப்பியதால் தேவேந்திரனும்; இதை எல்லாம் ஞான திருஷ்டியில் பார்த்ததால் சிவபெருமானும்; தன்னுடைய பரமபக்தனுடைய நிலையை காக்கும் பொருட்டு மகாவிஷ்ணுவும்; சக முனிவரது சோதனையான நிலையை எண்ணி பரிதாபப் பட்டு மற்ற டாப் லெவல் முனிவர்களும் என்று BBC, CNN, PTI ரேஞ்சுக்கு சித்திரகுப்தரை நோக்கி இந்த செய்தி படையெடுத்தது.
செய்தியின் தாக்கம் தாங்க முடியாது (அதாவது செய்தியால் அதிர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை; இத்தனை பேரிடமிருந்து ஒரே நேரத்தில் செய்தி வந்ததால் வந்த தாக்கம் தான்), சித்திரகுப்தர் அவரது iphone'ஐ சைலென்ட் மோடில் மாற்றி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சித்திரகுப்தரின் வரவேற்பிற்கு நாரதர் புன்னகை புரிந்து மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் ஒரே நொடியில் ‘நான் நரசிம்மராவின் குருவாக்கும்’ என்பது போல முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டார் மகரிஷி.
க்ஷணத்துக்கு க்ஷணம் மாறும் நாரதரின் முகபாவத்தைக் கண்ட சித்திரகுப்தர், இப்போது என்ன காரணத்திற்கு எரிச்சல் படுகிறார் என்று திகைத்தார். இதேதடா வம்பாக போயிற்று? புதிதாக கல்யாணம் செய்துகொண்ட புருஷன் பெண்டாட்டி மாதிரி இனி நான் இவருடைய ஒவ்வொரு முகபாவத்திற்கும் அர்த்தம் கண்டுபிடித்துக் கொண்டு இருக்க வேண்டும் போலிருக்கிறதே, என்று யோசித்தார்.
பேசாமல் கணக்கு எழுதும் வேலைக்கு ஒரு கால் கடிதாசி கொடுத்துவிட்டு Body language interpreter ஆக சேர்ந்துவிடலாமா என்றும் யோசனை ஓடியது.
இவரது சிந்தனையின் போக்கை தேவேந்திரன் துல்லியமாக உணர்ந்தார். அதாவது சந்திரமுகியில் ரஜினி கேட்பாரே, அது போல! எச்சரிக்கையாக சுட்டு விரலை காட்டி மிரட்டும் குரலில், "சித்திரகுப்தரே, அப்படி மட்டும் நினைக்கவேண்டாம். கொஞ்சமாவது பொறுப்பிருக்கிறதா உமக்கு? ஏற்கனவே எமதர்மர் லீவில் சென்றிருக்கும் இந்த நேரத்தில் உமக்கு கால் கடிதாசி கொடுக்கும் எண்ணம் வரலாமா?"
"புதிதாக வந்த சூபெர்வைசர் நீ எதிர்பார்த்த படி இல்லையென்றால் உடனே ரெசிக்னஷன் கொடுக்கலாமா? அனுசரித்துபோவது தானே நல்லது? பூலோகத்தில் இருக்கும் ரிசெஷன் இங்கேயும் வர வெகு நாட்கள் ஆகாது. அதனால் இருக்கும் வேலையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள பார்ப்பாயா? ரெசிக்நேஷனை பற்றி யோசிக்கிறாயே!", என்றெல்லாம் உசுப்பேற்றிவிட சித்திரகுப்தரும் பிடரியை சிலுப்பிக் கொண்டு வருவது வரட்டும் என்று நம் மகரிஷியை எதிர் கொள்ள தயாரானார்.
சுற்றிலும் கடுப்பாக பார்த்த நாரதர், "சித்திரகுப்தரே! இங்கே ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது? திரைச்சீலை, விநிஷியன் ப்ளைன்ட்ஸ் எல்லாவற்றையும் திறந்து விடுங்கள். புதுக் காற்றும் புத்தொளியும் இந்த எமலோகத்தில் பட்டொளி வீசி பரவட்டும்.
சிறிது நேரத்தில் அங்கே ஒரே ஒளி வெள்ளம் பொங்கி பெருக்கெடுத்து வீச, நாரதர் சுற்றிலும் பெருமையாக பார்த்தார். "எங்கே இருக்கின்றன திரைச்சீலைகளும், விநிஷியன் ப்ளைண்டுகளும்? என் கண்ணுக்கு தெரியவில்லையே? ஆனால், இத்தனை வெளிச்சம் வந்த பிறகு தான் நன்றாக இருக்கிறது. இப்போது தான் எனக்கு எல்லார் முகங்களும் தெளிவாக தெரிகின்றன.
சித்திரகுப்தரே நீர் ஏன் இவ்வளவு கவலையாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்?" என்று மேலும் உற்சாகமாக குசலம் விசாரித்தார்.
"ஹும்ம்…ஏது திரைச்சீலையும் விநிஷியன் ப்ளைண்டுகளும்? ஸ்போர்ட்ஸ் ஃபீல்டுகளில் இருக்கிற மாதிரி சுற்றிலும் இத்தனை பவர் லைட்டு வைத்துதானே இவ்வளவு வெளிச்சம் வரவைத்திருக்கிறோம். கிரீன் ஹவுஸ் காஸ் எமிஷன் என்று சிவபெருமான் எங்களை காய்ச்சாமல் இருக்கவேண்டும். இதில் நான் கவலையாக இருக்கிறேன் என்று மட்டும் உங்களுக்கு தெளிவாக தெரிகிறதாக்கும். பின்னே உங்களோடு கும்மி அடிக்கவா முடியும்?" என்று அலுத்துக் கொண்டு வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் நாரதருக்கு அவருடைய இருக்கையை காட்டினார்.
இருக்கையில் உட்கார்ந்து கொண்ட நாரதர், சித்திரகுப்தர் அவருடைய ஆசனத்தில் அமரும் வரை பொறுமையாக காத்திருந்தார். இதற்குள் வந்த வேலை சுமூகமாக நிறைவேறியதில் நிம்மதியான தேவேந்திரன், "முக்காலமும் உணர்ந்த மகரிஷியே, நான் கிளம்புகிறேன். நீங்கள் பாட்டிற்கு என்னுடைய அரசவை நாட்டிய பேரொளிகளுக்கு சாபம் கொடுத்து பூலோகத்திற்கு அனுப்பிவிட்டீர்கள். இப்போது அவர்கள் போஸ்ட்டிற்கு நான் டேம்போரரி பெண்களை போடவேண்டும். அதற்கு ஒரு விளம்பரம் கொடுக்கும் வேலை வேறு இருக்கிறது. ஆகவே, நான் சீக்கிரம் விடை பெற்று கொள்கிறேன்", என்று கூறி அவர்கள் எல்லோரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டார்.
"முனி ஸ்ரேஷ்டரே!!! தங்களிடம் ஒரு விண்ணப்பம்", என்றார் சித்திரகுப்தர்.
"சொல்லுங்கள்", என்று ஊக்குவித்தார்,
இந்த சொர்க்கம் நரகம் ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் பற்றி தான் ஒரு சின்ன பிரச்சினை. நீங்கள் அதை கொஞ்சம் சரி பார்த்து ரிக்கார்டுகளை நேர்படுத்த வேண்டும்", என்றார்.
"அப்படி என்ன இம்பாலன்ஸ் சித்திரகுப்தரே?"
"கவலை படும் படி பெரிதாக ஒன்றும் இல்லை முனி ஸ்ரேஷ்டரே! ஒரு சில நபர்கள் இங்கே வெகு காலமாக ஒரே இடத்தில் இருக்கின்றனர். ஒரு சிலர் சொர்க்கம்/நரகம் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ என்று ஒரு ஐயமும் இருக்கிறது. நீங்கள் எதற்கும் ஒரு ரிவியூ செய்துவிட்டீர்களேயானால் என் மனதில் உள்ள ஐயப்பாடு நீங்கிவிடும்", என்று வினயமாக சொன்னார்.
"அதற்கென்ன!!! பேஷாக செய்தால் போச்சு", நாரதரின் உற்சாகம் நிமிட்டு நிமிட்டு கூடிக் கொண்டே போனதில் அவர் முகமே இப்போது டீலக்ஸ் பேஷியல் செய்து கொண்டு வந்த பருவப்பெண்ணை போல ஒளிர்ந்தது.
***************************************
"ஹ்ம்ம்....கிங்கரர்களே, டேட்டா பேசில் உள்ள முதல் ஆளை அழைத்து வாருங்கள்", என்று கன கம்பீரமாக சொல்லிவிட்டு உள்ளே வந்த நபரை நாரதருக்கு அறிமுகப் படுத்தினார் சித்திர குப்தர்.
"பிரபோ! இவன் பெயர் ஆல் இன் ஆல் அழகு ராஜா!!! இவன் பெற்றோர் இவனுக்கு வைத்த பெயர் புதுக் கவிதை பண்ணாயிரம்!!!", என்று அறிவிக்க;
"இரண்டுமே வினோதமான பெயர்கள். இவனது பாவ புண்ணிய கணக்கு வழக்கை கூறுவாயாக", என்று கேட்டார்,
"பிரபோ...", சித்திர குப்தர் பாவ புண்ணியத்தை டெபிட் கிரெடிட் பாலன்ஸ் சொல்வதற்குள் ஆல் இன் ஆல் அழகு ராஜா இடையில் புகுந்தார், "ஹாய் மச்சி.....", என்று.
நாரதரும் சித்திரகுப்தரும் அதிர்ந்து போய் பார்க்க அவர்கள் அதிர்ச்சியில் விளைந்த மௌனத்தை தனக்கு சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்ட AIAAR(ஆல் இன் ஆல் அழகு ராஜா), "என்னை பற்றி நானே சொல்லி விடுகிறேன். எனக்கு எப்போதுமே அது தான் வழக்கம். நான் தனி ஒருவனாக வியர்வை சிந்தி சமூதாய முன்னேற்றத்திற்காக பாடு பட்டிருக்கிறேன். அதனால் தான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன்", என்றான்.
நாரதர் திரும்பி சித்திர குப்தரை பார்க்க, சித்திர குப்தர் வாழ்கையே வெறுத்துப் போன போஸில், "மீதியையும் நீயே சொல்லிடு, என்ன என்ன கஷ்டங்கள் பட்டாய் என்று", என்று சொல்லி கன்னத்தில் கை வைத்து அரை கண் மூடிய நிலையில் உட்கார்ந்துவிட்டார்.
நம் AIAAR இதற்க்கெல்லாம் தயாராகவே வந்ததால், "நான் தமிழ் சினிமாவில் வேலை செய்தேன். அங்கே தான் சமூதாய முன்னேற்றத்திற்காக பாடு பட்டேன்", என்றான்.
நாரதர் குளிர்ந்துபோய், "அடடா, அப்படியா? இந்த திருவிளையாடல், திருநீல கண்டர், கந்தன் கருணை போன்ற பக்தி படங்கள் எல்லாம் தயாரிக்கிறார்களே!!! அது போல நீயும் ஏதாவது பக்திப் புரட்சி செய்தாயா, மகனே? மகிழ்ந்தோம், மகிழ்ந்தோம்!!!"
"ஐயனே, நான் செய்தது வேறு புரட்சி. நானே படம் தயாரித்து, இயக்கி, அந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், டைரெக்ஷன், தயாரிப்பில் உதவி, தேநீரில் உதவி...ம்ம்...வந்து....பாடல்கள், இசை, பாடினவர், கேட்டவர், பாடலுக்கு ஆடினவர், எடிட்டிங், கட்டிங், பேஸ்டிங்...ம்ம்ம்...வ...வ...வந்து...ஹீரோ, ஹீரோயின், வில்லன், வில்லி, காமெடியன்...எல்லாமே நான் தான்", என்றான்.
நாரதர் அசந்து போய், "ஆஹா.....உனக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று இப்போது தான் புரிகிறது", என்றார் மெச்சுதலாக.
"இதென்ன பெரிய விந்தை? நான் எழுதிய ஒரு பாட்டை பாடுகிறேன் கேளுங்கள்", என்று சொல்லி,
"அன்பே ரீட்டா..... உன் கையில் என்ன ஸ்வீட்டா.....
தீபாவளிக்கு புதுப் பட்டா...... நமக்கு பிடித்தது சப்போட்டா......"
"நன்றாக இருக்கிறதா? இன்னொன்றும் சொல்கிறேன்.......
தட்டி பார்த்தேன் டப்பா டப்பா பாட்டி வந்தால் என்னோட தப்பா
போட்டிருப்பது பழைய ஜிப்பா டாட்டா சொன்னாள் அழகு பாப்பா
இது நல்லா இருக்கா? இது போல இன்னும் ஆயிரம் ஆயிரம் பாட்டுக்கள் எழுதி இருக்கேன். அதனால் தான் எனக்கு புதுக் கவிதை பண்ணாயிரம் என்று பேரு", என்று பீற்றிக் கொண்டான்.
நாரதரோ கடுப்பாக சித்திரகுப்தரை பார்த்து, "இதென்ன கொடுமை? இவன் பாடுவதெல்லாம் ஒரு பாட்டா? நீரும் அவன் சமூதாய சேவை செய்தான், இடியாப்பம் செய்தான் என்று கதை விடுகிறீர்!!! இப்படி இருந்தால் சொர்க்கம் நரகம் இம்பாலன்ஸ் ஆகாமல் என்ன செய்யும்? இவனைக் கொண்டு தள்ளுங்கள் எண்ணெய் கொப்பறைக்குள்", என்று ஆணையிட்டார்.
"ஆஆஆ..........கபீம் குபாம் ஐ மீன்....கும்பீ பாகம்!!!", என்று அலறிக் கொண்டே சென்றான் AIAAR.
"சித்திர குப்தர், முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லும். இப்போது வந்து விட்டு போன ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதிரியான ஆட்களை எப்படி சொர்க்கத்துக்குள் விட்டார் உங்கள் எமதர்மர்?"
"மகரிஷி, இவன் எங்கள் எமதர்மரிடமும் இப்படி தான் சமூதாயம், சீர்திருத்தம், தனியொருவனாக வியர்வை சிந்தி என்றெல்லாம் பீலா விட்டான். இவன் இங்கே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அன்று இங்கே ஏகப்பட்ட கூட்டம். நின்று நிதானித்து இவன் பாவ புண்ணியங்களை அலச முடியவில்லை. இவன் சொன்னதை நம்பி அங்கே அனுப்பிவிட்டார். இப்போது தான் உண்மை தெரிகிறது", என்று வினயமாக கூறினார் சித்திரகுப்தர்.
"சரி சரி அடுத்தது யாரு, அவரைக் கூட்டி வாருங்கள்", என்று கூறி விட்டு பின்னால் திரும்பி காவலாளியிடம், "கான்டீன்ல சொல்லி ஒரு ஸ்ட்ராங் டீயும் கொஞ்சம் காரட் கேக்கும் கொண்டு வர சொல்லுங்க. இந்த கேஸ் விசாரிக்க ஆரம்பித்ததில் தலை வலி வருகிற மாதிரி இருக்கு", என்று சொல்லி கூடவே ஒரு டப்பா அமிர்தாஞ்சனமும் எடுத்து வர சொன்னார்.
அதற்குள் லெட்ஜெர் புக்கில் இருந்து பார்த்து அடுத்த ஆளை வர வைத்திருந்தார் சித்திர குப்தர்.
"முனி ஸ்ரேஷ்டரே, இப்போது வரப் போகிறவன் ஒரு அரசியல்வாதி. முன்பு எமதர்மனிடம் தன்னுடைய பாவ புண்ணிய கணக்கு விசாரணையின் போது இவன் சமுதாய விழிப்புணர்வுக்காக பாராட்டு பெற்று சொர்கத்திற்கு அனுப்பப் பட்டான்", ஒபெனிங் சீனில் க்ளோஸ் அப் ஷாட் கொடுத்தது மாதிரி ஒரு பில்ட் அப் கொடுத்து கூட்டி வரப்பட்டார் அந்த அரசியல்வாதி.
"இருமுறை சிறை சென்ற, எதிரிகளை வென்று களையெடுத்த, வீர பராக்கிரம கேசரி, ஜில்லா ஜக்கு வருகிறார்.....வருகிறார்......"
"சித்திர குப்தரே இதென்னதிது? இப்படி எல்லாம் ஒரு மானிடன் உள்ளே நுழைவதை அறிவிக்கிறீர்?"
"எல்லாம் என் பிராராப்த காலம் முனி ஸ்ரேஷ்டரே!!! சும்மா வாய்யா என்று கூப்பிட்டால் இந்த அரசியல்வாதி வரமாட்டேன் என்கிறான். அவன் மந்திரி சபை கூட்டத்திற்கு முன்னாலும் அரசியல் கட்சி கூட்டத்திற்கு முன்னாலும் இப்படி தான் அவனை மக்கள் அழைப்பார்களாம். அதே போல அழைத்தால் தான் வருவான். அவனது பட்டங்களில் ஒன்றை குறைத்தாலும் இருக்கிற இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கிறான். ரொம்ப தொல்லை பிடித்த ஆள்".
"ஹே மானிடனே!!! உன்னை பற்றி கூறுவாயாக...உனக்கு இப்படிப் பட்ட பட்டப் பெயர்கள் எப்படி வந்தன? யார் கொடுத்தனர்?"
"குரு...இந்த பட்டப்பெயர் எல்லாம் மக்களாக பார்த்துக் கொடுக்கறது தான். முதல் பட்டப்பேரு...இரு முறை சிறை சென்ற...நான் என்னோட வீட்டுல இருந்தா கட்சித் தலைவர் தொல்லை தாங்க முடியலை, கண்ட நேரத்துல போன் செய்யறாரு என்று பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுல போய் ராத்திரி தூங்கப் போவேன். அதை தப்பா புரிஞ்சுகிட்டு நான் ஏதோ புரட்சி எல்லாம் செய்து சிறை போயிட்டு வந்த மாதிரி மக்கள் நினைச்சிட்டாங்க. சரி போகுது விடு என்று நானும் விட்டுட்டேன்".
"அடுத்த பட்ட பெயரு...எதிரிகளை வென்று களையெடுத்த...ஒரு முறை எங்க வீட்டு தோட்டத்துல எக்கச்சக்கமா எலி வளை கட்டிடிச்சு....எலிகளுக்கு பயந்து எந்த தோட்டக்காரனும் எங்க வீட்டு தோட்டத்துல களை பிடுங்க வரமாட்டேன் என்று சொல்லிட்டான். நான் மட்டும் தைரியமா என் பெண்டாட்டியின் மசால் வடை இருக்கும் துணிச்சலில் தோட்டத்துல இறங்கி எல்லா எலியையும் மசால் வடை வச்சு பிடிச்சு பிறகு எல்லா களையையும் எடுத்தேன்".
இதற்குள் நாரதருக்கு சிங்கிள் டீ பிளஸ் காரட் கேக் அண்ட் அமிர்தாஞ்சனம் வந்திருக்க, கேக்கை வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டு தைலத்தை நெற்றிப் பொட்டில் தேய்த்து விட்டு கொண்டு டீயை குடித்தவாறே மீதி கதையை கேட்டார்.
"மூணாவது பட்டப் பேரு...வீர பராக்கிரம கேசரி...இந்த பட்டப் பெயர் மட்டும் என் அரசியல் சாதனைக்கு கொடுக்கப் பட்டது. எல்லோரும் கட்சி மீட்டிங்கிலோ எலக்ஷன் சமயத்திலோ அல்வா தானே கொடுப்பாங்க? நான் மட்டும் தான் முதல் முறையா, வித்தியாசமா கேசரி கொடுத்தேன். அதுனால அந்த பட்டப் பேரு....."
"கடைசியா ஜில்லா ஜக்கு....எங்க ஜில்லாவில Jug மார்க் போட்ட கட்சி தொடங்கினதால எனக்கு ஜில்லா ஜக்கு என்று பேரு வந்திடிச்சு".
"சரியப்பா, நீ செய்த சமுதாய சீர்திருத்தம் தான் என்ன? அதை சொல்லு பார்க்கலாம்", என்று பாயிண்டை பிடித்தார் நாரதர்.
"ஏதாவது செய்யணும்னு தான் நினைத்தேன். அதுக்குள்ளே என்னை இங்க தூக்கிட்டு வந்துட்டாங்களே!!! நான் என்ன செய்வேன்???", என்று அவனது வழக்கமான பல்லவியை ராக தாள ஆலாபனையோடு சுருதி தப்பாமல் பிடித்தான்.
சித்திர குப்தர் இப்போது மெதுவாக நாரதருக்கு அருகில் வந்து, "மகா பிரபோ, என்ன ஆயிற்று? தலை வலிக்கிறதா? ஏன் இப்படி அரை பாட்டில் அமிர்தாஞ்சனத்தை உமது நெற்றிப் பொட்டில் காலி செய்து விட்டீர்?"
"சித்திர குப்தரே!!! தலை வலியா? எனக்கு மைக்ரைன் வந்து விட்டது. சீக்கிரம் இரண்டு codeine மாத்திரை சாப்பிட்டு விட்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் சரியாகும்", என்று வாழ்க்கையே வெறுத்துப் போன குரலில் சொல்லி நிறுத்த,
"தவ ஸ்ரேஷ்டரே!!! நீங்கள் இந்த ப்ரோஜெக்ட்டை முடித்துவிட்டு ஓய்வெடுக்க செல்லலாமே!!! வெகு நாட்களாக ஒத்திப் போடப்பட்ட ப்ராஜெக்ட் இது. இவனுக்கு ஒரு தீர்ப்பை சொல்லி விடுங்களேன்".
"சந்தேகம் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் தான்!!!"
"என்னது திரிசங்கு சொர்கமா???" ஏக காலத்தில் அலறினர் சித்திரகுப்தரும் ஜில்லா ஜக்கும். இல்லையே! இன்னொரு குரலும் கேட்டதே!! அட! நம்ம திரிசங்கு மகாராஜா!!! ஆனால் நிற்காமல் திரும்பி செல்கிறாரே!!! ஒரு வேளை பரம சிவனிடம் செல்கிறாரோ!!!
நாரதர் யாரையும் கவனிக்காமல் லேப்டாப்பில் இருந்த டேட்டாபசில் இருந்து கண்ணெடுக்காமல், "ஆமாம், திரிசங்கு சொர்க்கம் தான். சொர்க்கம் செல்லும் அளவு பெரிதாக அவன் ஒன்றும் புண்ணியம் செய்யவில்லை. அதே போல, நரக வேதனையை அனுபவிக்க வேண்டிய அளவு பாவமும் செய்யவில்லை. அதனால், அவனை சொர்கமும் நரகமும் அல்லாத ஒரு மூன்றாவது இடத்தில் கொண்டு தள்ளுங்கள்", என்று ஆணையிட்டார்.
பிறகு நாரதர் சித்திர குப்தரிடம் திரும்பி, "நீங்கள் சொன்ன ஒரு ஒரு கேசும் இப்படி பட்ட தலை வலியை கொடுக்கிற வகை தானா?", என்று கேட்டார்.
"இல்லையே, சும்மா சொன்னேன்", என்று சொல்வாரோ என்ற ஆசையில் நாரதர் கேட்க, நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருகிற மாதிரி மேலும் கீழும் ஆட்டி; பிறகு குறுக்கும் நெடுக்கும் ஆட்டி; மீண்டும் நீள் வட்டம், செங்கோணம், அறுங்கோணம் என்கிற எல்லா கோணத்திலும் தலையை உருட்டி ஆட்டினார் சித்திர குப்தர்".
"ஏதாவது ஒரு விதமாக தலையை உருட்ட முடியாதா? முதலில் உம்மை திரிசங்கு சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டும் போலிருக்கே"
"இல்லை பிரபோ இல்லை!!! கோபம் வேண்டாம்!!! இவர்கள் எல்லோருமே கொஞ்சம் பிரச்சினை ஆனவர்கள் தான். எந்த discrepancyயும் இல்லாதவர்களை நான் இங்கே வரவழைக்கவே இல்லையே! இவர்கள் எல்லோரும் தவறுதலாக சொர்க்கத்திற்கு சென்று விட்டார்களோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு எப்போதுமே உண்டு. அதனால் தான் உங்களை ரெவியூ செய்ய சொன்னேன். இன்னும் அதிகமில்லை, ஒரு ஐம்பதாயிரம் பேர் தான் இருக்கின்றனர். சீக்கிரம் முடித்து விடலாம்", என்று முதல் முறையாக சித்திர குப்தர் ரிவியூ செய்ய வேண்டிய ஆட்களின் எண்ணிக்கையை; ப்ராஜெக்ட்டின் விஸ்த்தீரணத்தை சொல்ல நாரதருக்கு மயக்கம் வராத குறை தான்.
சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்த நாரதர், "சித்திர குப்தரே, இந்த ப்ராஜெக்ட் பற்றி நான் யோசிக்கவேண்டும். நீங்கள் என்ன செய்யுங்கள், அந்த ஐம்பதாயிரம் பேருடைய biodata, பாவ புண்ணியங்களின் அக்கௌண்ட்ஸ் எல்லாவற்றையும் ஒரு டேட்டாபசில் போட்டு கொடுத்து விடுங்கள். நான் அதை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரிவ்யூ செய்து ஆன்லைன் அப்ரூவல் செய்துவிடுகிறேன். அதுவரை டேம்போரரியாக இந்த ஐம்பதாயிரம் பேரையும் திரிசங்கு சொர்க்கத்தில் தங்க வையுங்கள். திரிசங்கு மகாராஜாவிற்கு ஒன்றும் பெரிதாக பிரச்சினை இருக்காது. அவர் ஒருவருக்கு எதற்காக அவ்வளவு பெரிய உலகம்? நம்மிடமோ ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ்........அவர் புரிந்து கொள்வார். அவருக்கும் பேச்சுத்துணைக்கு ஆள் வந்தது போலிருக்கும்".
இப்போது சித்திரகுப்தருக்கு தலை வலி வருகிறார் போல இருந்தது.
இங்கே எமலோகத்தில் நாரதர், அதிரடி பாதி அமிர்தாஞ்சன் பாதி கலந்து செய்த நாரதன் நான் என்று உற்சாகமாக வருபவர்களை எல்லாம் நரகத்திற்கோ திரிசங்கு லோகத்திற்கோ டிரான்ஸ்பார் செய்துகொண்டிருக்க, சித்திரகுப்தருக்கு வயிற்றில் பய அமிலம் மற்ற நாளமில்லா சுரப்பிகளை விட அதிகமாக வேலை செய்து திகில்குப்தராக ஆகிக் கொண்டிருந்தார்.
அவர் கவலைக்கு முக்கிய காரணம், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக, எமதர்மர் இல்லாத நேரத்தில் controversial கேஸ்களை யமனின் சப்ஸ்டிடியூட்டாக வந்த நாரதரை வைத்துக் கொண்டு ஆராய்ந்து தனக்கு சாதகமாக முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போக, இந்த நாரதர் எல்லோரையும் திரிசங்கு லோகத்திற்கு டிரான்ஸ்பார் செய்து வீண் பிரச்சினையை கிளப்பி விடுகிறாரோ என்று தோன்றியது.
திரிசங்கு ராஜா வேறு எதுவும் சண்டைக்கு வராதிருக்க வேண்டும். அதை விட முக்கியமாக அவருக்கு அதை சிருஷ்டித்த விஷ்வாமித்திரர் வேறு கோபப்பட்டு சாபம் எதுவும் கொடுக்காமல் இருக்கவேண்டும். ஏண்டா இந்த பேச்சை எடுத்தோம் என்று வருத்தப்படும் படி ஆக்கி விட்டாரே இந்த நாரதர், என்று தலையில் கையை வைத்துக் கொண்டு கவலையில் தோய்ந்துகொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட அதே போல, தலையில் கை வைத்து கவலையில் தோய்த்தெடுத்து கண்டனக் குரல்களில் குளித்தெடுக்கப்பட்டார்,
திருநீலகண்டர். அவரை சுற்றிலும் மத்தளத்திற்கு இருபக்க இடியாக, திரிசங்கு மகாராஜா ஒருபக்கமும் விச்வாமித்திரர் ஒருபக்கமும் இடிக்க, அவர்களுக்கு அருகில் தவில் ஓசை போல நந்தி தேவர் நின்றுகொண்டு "நான் தான் முன்னேயே சொன்னேனே, நாரதர் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார் என்று" என்கிற மாதிரி பார்த்துக் கொண்டு இருந்தார்.
சரியாக அப்போது அங்கே மகாலக்ஷ்மி சகிதம் என்ட்ரி கொடுத்த மகா விஷ்ணு, "பரமசிவனே, என்ன இங்கே ஒரே கூச்சல்? இங்கே கைலாயத்தில் நடக்கிற அதிரிபுதிரியில் அங்கே வைகுண்டத்தில் என்னால் ஒரு வேலை கூட பார்க்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் சீக்கிரம் பைசல் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு போகவே நானே நேரடியாக வந்தேன்", என்று சொன்னார்.
நீல கண்டருக்கு கண்டபடி கடுப்பாகி, "எல்லாம் உங்கள் பரம பக்தன் செய்து வைத்திருக்கும் குளறுபடி தான். குழப்படியும் குளறுபடியும் தான் அவர் கூடப்பிறந்தாயிற்றே! சென்று சிறிது நேரத்திற்குள் அது எப்படி தான் இத்தனை பேருக்கும் தலைவலியை கொடுப்பாரோ தெரியவில்லை!! திடீரென இத்தனை நாளாக யாரும் யோசிக்காத திரிசங்கு லோகத்தைப் பற்றியெல்லாம் இவருக்கு எப்படி நினைவிருக்கிறது?", என்றார்.
"தாங்கள் இவ்வளவு எரிச்சல் படுகிற அளவு என்ன செய்தார் நாரதர மகரிஷி? எமலோகத்தில் என்ன கலகமூட்டினார்? இங்கே விஷ்வாமித்திர மஹரிஷியும் திரிசங்கு மகாராஜாவும் ஏன் இப்படி பதட்டமாக இருக்கிறார்கள்? அடடே, சித்திரகுப்தர் கூட பதட்டமாகத்தான் வருகிறார். என்ன விஷயம் சித்திரகுப்தரே!!! அல்லாவுதீனின் அற்புத விளக்கிலிருந்து புறப்பட்ட பூதம் போலவே இப்படி வெளுத்த முகபாவத்தோடு வருகிறீரே, என்னவாயிற்று?", கரிசனையாக கேட்டார் பரந்தாமன்.
திகில்குப்தர், டென்ஷன்குப்தராகி, "என்னவாயிற்று என்று இப்படி சாதாரணமாக கேட்டுவிட்டீரே MR .MV ...........!!!"
"என்ன செய்ய முடியும் சித்திர குப்தரே? இதை வேறு எந்த மாடுலேஷனில் கேட்டாலும் அத்தனை சுரத்தாக இருக்காது. அதனால் தான் நியூட்ரல் டோனில் கேட்டார், நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு புலம்ப வந்ததை...அ..அ..அதாவது சொல்லவந்ததை சொல்லி விடுங்கள்".
"எங்கள் எமலோகத்தில் நாரதர் செய்துகொண்டிருக்கும் கூத்தைப் பற்றி புகார் செய்யவே வந்தேன். எம லோகத்தில் ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் ஏற்பட்டதனால் நாரதரிடம் நான் ஒரு சிலரை ரிவியூ செய்யமுடியுமா என்று கேட்டேந்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர், ரிவியூ செய்து அவர்களை சொர்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவார் என்று நினைத்தேன். அவரானால், இப்படி திரிசங்கு லோகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்போது லேடஸ்டாக, பிரம்மாவிற்கு ஒரு மெமோ அனுப்பப் போவதாகவும் அதையே பெடிஷன்னாக தயாரித்து உங்களுக்கும் பரமசிவனுக்கும் கொடுக்கப்போவதாக நான் இங்கே வரப்போவதற்கு முன்னால் சொல்லிக் கொண்டிருந்தார்".
"போச்சுடா, இப்போது பிரம்மதேவரும் இங்கே முறையிட வரப்போகிறாரா? இங்கே ஆசனத்தில் அமர்ந்து இவர்கள் முறையீட்டை கேளுங்கள். சித்திர குப்தரே, நீர் சற்று விவரமாக சொல்லும், எதற்கு இந்த மெமோ, பெடிஷன் எல்லாம்?"
என்னது மெமோவா? பெடிஷனா? என்ன நடக்கிறது இங்கே? நான் சற்று காலாற நடைபயின்றவன், வாயிலில் உமது துவாரபாலகர்களை காணவில்லையே என்ன சமாசாரம் என்று கேட்டுவிட்டு போகலாம் என நினைத்து உள்ளே வந்தேன். இங்கே வந்தால், அவர்கள் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இஞ்சி டீ, முறுக்கு, பொறி கடலை சகிதம் உங்கள் வாக்குவாதத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். நீரானால், ஏதோ மெமோ, பெடிஷன் என்று புதிது புதிதாக சொல்லுகிறீர். யார் கொடுப்பது? எதற்காக கொடுக்கிறார்கள்?"
"ஐயனே நீங்கள் எமலோகத்திற்கு டெம்ப்ரரியாக அனுப்பி வைத்த நாரத முனிவர் தான் இப்படி எல்லாம் செய்வது", என்று தொடங்கி மீண்டும் ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் ஆலாபனையை ராக, பாவ, தாள, லய, சுருதி ஒன்றையும் மாற்றாமல் பாடி முடித்தார்.
"சரி அதற்கும் மெமோ, பெடிஷனுக்கும் என்ன சம்பந்தம்? பிரம்ம தேவன் மீது எதற்கு மெமோ?", ஒரு சேர கேட்டனர் காக்கும் கடவுளும் அழிக்கும் கடவுளும்.
"பிரம்ம தேவர் தானே படைத்தலுக்கு இன்சார்ஜ். இத்தனை உயிர்கள் தேவை என்கிற போது அவர் ஏன் இங்கே சொர்கத்திலிருந்து உயிர்களை எடுத்து அடுத்த பிறவிக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அவர் மீது மெமோ".
"என்னது? அப்படி எல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்று நாரதருக்கு தெரியாதா? அவரவர் விதிப் படி எத்தனை காலம் சொர்கமோ நரகமோ அனுபவித்துவிட்டு மீண்டும் பிறக்கும் விதி இருக்கும் உயிர்கள் தானே அடுத்த பிறவிக்கு பயன் படுத்திக் கொள்ள முடியும். இதில் பிரம்மதேவரின் தவறென்ன?", லா பாய்ன்டுகளை அள்ளி எடுத்து விட்டார் மகா விஷ்ணு.
"அது எனக்கும் புரிகிறது பிரபோ. நானும் சொல்லி பார்த்தேன். ஆனால், நாரதர் என்ன சொல்கிறார் தெரியுமா? விதிப் பயன் படி இன்னும் சொர்க்க காலம் முடிவடையாவிட்டாலும் அவர்களுக்கு பிறவி கொடுத்து பூலோகத்திற்கு அனுப்பி விட்டு, அங்கே இவர்களுக்கு ராஜ வாழ்கை அமைத்துக் கொடுப்பதாம். அதே போல, நரககாலம் பாக்கி இருப்பவர்களுக்கு பூலோகத்தில் சோதனைக்கு மேல் சோதனையாக கொடுத்து தள்ளுவதாம். இப்படியாக சொர்க்க நரகபாக்கியை அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடாதா என்று கேட்கிறார். இப்படி எல்லாம் புதுமையாக செய்தால் தான் ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் வராது என்று வேறு ஒரு ஐடியா சொல்கிறார். பிரபோ, இந்த ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் பிரச்சினையை தொடங்கியதென்னவோ நான் தான். ஆனால், இப்படி கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக ஒரு பிரச்சினையை தொடர்ந்து இத்தனை பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்கவே இல்லை. விஸ்வாமித்ரா மகரிஷி, நீங்கள் என் மேல் சாபம் எதுவும் கொடுத்து விடாதீர்கள். நான் உண்மையில் நிலைமை இவ்வளவு விபரீதம் ஆகும் என்று நினைக்கவே இல்லை", என்று பரிதாபமாக முறையிட்டார்.
இந்த முறை பரமசிவன், "என்னது? பாக்கியை அட்ஜஸ்ட் செய்வதா? இதென்ன, கத்தரிக்காய் வியாபாரமா? இதில் புதுமை வேறா? கலகப் பிரியன் இப்போது குழப்பப் பிரியன் ஆகிவிட்டான்".
"பரந்தாமா, நீங்கள் தான் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும். நாரதர் உமது பரம பக்தர் தானே!!!", சித்திர குப்தர் மீண்டும் மகா விஷ்ணுவிற்கு அப்ளிகேஷன் விடுக்க, துவாரபாலகர்கள், முறுக்கு, பொரிகடலையை முடித்துவிட்டு ஆளுக்கு ரெண்டு பிளேட் பேல் பூரியை கையில் எடுத்துக் கொண்டனர்.
விஷ்வாமித்திரரின் கோபம் மேலும் மேலும் பாரன்ஹீட், செல்சியஸ் எல்லாம் தாண்டி சென்று கொண்டிருந்தது. மூக்கு நுனி சிவந்து கொண்டிருந்தது. சாபம் கொடுத்து நீர் தெளிக்க கமண்டலம் குலுங்கிக் கொண்டிருந்தது.
சட்டென திரிசங்கு மகாராஜாவிற்கு ஒரு ஐடியா தோன்றியது. யுரேகா சொல்லி கத்தாத குறையாக, "எனக்கு ஒரு ஐடியா தோணுது. சொல்லட்டுமா?", என்று கேட்டுவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், "மகரிஷி, நீங்கள் பேசாமல் இன்னொரு திரிசங்கு லோகத்தை உண்டாக்கி விடுங்களேன். முதலில் ஏற்படுத்தினதை பார்ட் ஒன் என்று வைத்துக் கொள்வோம். இதை பார்ட் டூ என்று வைத்துக் கொள்ளலாம். யாருக்கும் பிரச்சினை இல்லை. நாரதர் பாட்டிற்கு இன்னும் நிறைய பேரை திரிசங்கு பார்ட் ஒன் லோகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கலாம். ரெசிடென்ஸ் இம்பாலன்ஸ் பிரச்சினையும் தீர்ந்து சித்திர குப்தரும் மகிழ்ந்து விடுவார். மெமோ, பெடிஷன் என்று எந்த தேவையும் எழும்பாததால் பிரம்ம தேவரும் சாந்தமாகிவிடுவார். இப்படி எல்லோருக்கும் உகந்ததாக ஒரு ஐடியா சொல்லி இருக்கிறேன் பார்த்தீர்களா?", என்று கேட்க, பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த துவாரபாலகர்களில் இருந்து அப்போது தான் உள்ளே வந்த நந்தி தேவர் வரை எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
பரமசிவனுக்கு, அப்போது தான் நந்தி தேவர் சொன்ன "ஆப்பு மேட்டர்" புரிந்தது. உடனடியாக எமதர்மராஜாவை லீவ் கான்செல் செய்து விட்டு வரும்படி ஒரு அவசரSMS அனுப்பினார்கள்.
இவர்களுக்கு முன்னாலேயே எமதர்மரின் அருமைகளையும் பெருமைகளையும் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்ட சித்திர குப்தர் ஏற்கனவே எமதர்ம ராஜாவிற்கு ஒரு பர்சனல் புறா அனுப்பி விஷயத்தை தெளிவு படுத்தி இருந்தமையால், எமன் சீக்கிரமே வந்து விட்டார்.
"வாருங்கள், வாருங்கள்", என்று எல்லோரும் கோலாகலமாக வரவேற்க எமதர்ம ராஜாவும் இத்தனை நாள் வேலை டென்ஷனில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பூரிப்பிலும் வாளிப்பிலும் மினுமினுப்பாக வந்து இறங்கினார். அவரோடு அவர் வந்து இறங்கிய எருமையும் அருமையாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மணப்பாறையில் இருந்து புது breed செய்து வாங்கினாராம்.
அவரை பார்த்த சந்தோஷத்தில் நாத்தழுதழுக்க சித்திரகுப்தர், "வாங்க பாஸ் வாங்க, எங்க வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன். நீங்க வந்ததில ரொம்ப சந்தோஷம்", என்றார்.
அதற்கு எமதர்மரும், "வந்துட்டேன் இல்ல, இனிமேல் கலக்கல் தான்!!!", என்று சொல்லி கண்ணடித்தார். சித்திரகுப்தர் பாசத்தையும் பயபக்தியையும் சம பங்காக கலந்து ஒரு போஸ் டிஸ்ப்ளே செய்து அதே போஸில் எமதர்மரை அவர்கள் லோகத்திற்கு அழைத்து சென்றார்.
விஷ்வாமித்திரரும் மூக்கு நுனி சிவப்பு குறைய, கமண்டலம் குலுக்கலை நிறுத்திக் கொள்ள, சாபத்தை தற்காலிகமாக விட்டொழித்து தியானத்திற்கு புறப்பட்டார்.
துவாரபாலகர்கள் மிச்சம் மீதி இல்லாமல் எல்லா நொறுக்கு தீனிகளையும் முடித்த திருப்தியில் ஏகாந்தமாக மீண்டும் வாயிற்காவல் டியூட்டிக்கு சென்றனர்.
பரமசிவனும் மகாவிஷ்ணுவும் இனிமேல் மறந்தும் நாரதருக்கு எந்த பொறுப்பையும் கொடுத்துவிடக் கூடாது என்று பாற்கடல் சாட்சியாக பிரதிக்ஞை எடுத்துக் கொண்டனர்.
*********************************************
அங்கே தம்பூரா சுருதி மீட்டிக் கொண்டு உல்லாசமாக மேகக் கூட்டத்திற்கு நடுவே உலாத்திக் கொண்டிருப்பது யார்?
அட, கொண்டையை பார்த்தால் நாரதர் போல தான் இருக்கிறது!!!
நடையில் தான் என்ன ஒரு துள்ளல்!!! முகத்தில் தான் எத்தனை தேஜஸ்!!!