• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

திருவரங்கம் - பாகம் - 4

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
67
15
8
chennai
வரலாற்றுப்பின்னணியில் திருவரங்கம்

i) இப்பெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள்

ii) தர்மவர்மா, கிள்ளிவளவன் ஆகியோரின் காலம் சரிவர
அறியமுடியவில்லை.

iii) கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின்
ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.

கி.பி. 953 முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு, இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு கற்பூரம், பட்டுத்திரி, நூல், வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 51 பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.
ஏறத்தாழ 400 சோழர் கல்வெட்டுகள் உண்டு.

கி.பி. 1060-1063 இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம்
பிரகாரத்தின் திருமதிலை கட்டினான். எனவே அது இராசமகேந்திரன் திருவீதி
என்றே வழங்கப்பட்டுள்ளது.

கி.பி.1020-1137 இது இராமானுஜரின் காலமாகும். இவரின் அரிய
சேவைகளை கோயிலொழுகு என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.

கி.பி. 1120-1170 முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமா
னுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்தான். இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் தங்கியிருந்தார்.

கி.பி.1178-1218 மூன்றாம் குலோத்துங்க சோழன். இவன் காலத்தில்
இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.

கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

கி.பி.1216-1238 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக்
கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.

கி.பி.1234-1262 ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம்
உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.

கி.பி.1251-1268 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர
பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான்.
திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.
பொற்கருட வாகனம் வழங்கினான். இவன் கடக அரசை (கட்டாக், ஒரிசா)
போரில் வென்று கைப்பற்றிய பொன்னில் திருவரங்கனுக்கு மரகதமாலை,
பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன
வழங்கினான். இவன் காவிரி நதியில் தெப்ப உற்சவத்தின் போது இரண்டு
படகுகள் கட்டினான். அதில் ஒன்றில் தனது பட்டத்து யானையை இறக்கித் தானும் அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் ஏராளமான
அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும், கோவிலுக்கு
வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் நிரப்பி தன்னுடைய படகில் நீர்
மட்டத்தின் வரையில் இன்னொரு படகின் நீர்மட்டம் வரும் வரை தானம்
வழங்கினான். அப்பொருட்களை இத்திருக் கோவிலுக்கு வழங்கினான்.

கி.பி.1263-1297 ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு
எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார்.
இத்திருக்கோவிலில் உள்ள பேரழகு பொருந்திய வேணு கோபால
கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும். கி.பி.1268-1308 மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலம். இவன்
காலத்தில் இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ
இங்கு வந்து இத்தலம்பற்றியும் இதைச் சுற்றியுள்ள செழிப்பைப் பற்றியும்
வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார்.

கி.பி. 1311 முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.
இக்கோவிலில் கொள்ளையிட்டான்.

கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட
எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும்,
ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை
முன்னேறவிடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர்.
பாண்டியர்களும்., ஒய்சாளர்களும் முடக்கப்பட்டதாலும் சோழவரசு இந்திய
வரைபடத்தில் கொஞ்சம் கூட இடம்பிடிக்க முடியாது இருந்த இந்த
காலக்கட்டத்தில் வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து
இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த
அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப்
பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து
வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப்
பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து
வைத்தனர். கி.பி. 1371 வரை திருப்பதியிலேயே இருந்தன. இவ்விதம்
திருவரங்கத்திலிருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் நடந்த
நிகழ்ச்சிகளை தொகுத்து மே. ஸ்ரீ வேணுகோபாலன் என்பார் எழுதியுள்ள
“திருவரங்கன் உலா” என்னும் நூல் தெளிவாகவும் விரிவாகவும் வரலாற்று
நாவல் போன்று சிலாகித்துப் பேசுகிறது. இந்நாவலில் வரும் குலசேகரன், பிள்ளை லோகச்சார்யர் போன்றோரின் பணிகள் எந்நாளும் நினைவு
கூறத் தக்கதாகும்.

கி.பி. 1371 விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய
விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து
இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும்,
பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது. கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண்ணேபோல் காத்து வந்தனர்.

கி.பி.1538-1732 இது மதுரையிலும் தஞ்சையிலும் நாயக்க மரபினர்
அரசோச்சிய காலம். இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து வந்தனர். கி.பி. 1659-1682 சொக்க நாத நாயக்க மன்னர்
இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால்
தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார்.
கி.பி. 1016-1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு
மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார். இக்கோவிலின் பல
தூண்களில் நாயக்க மன்னர்கள் இறைவனைத் தொழுதவண்ணம் உள்ள
சிற்பங்களை இன்றும் காணலாம்.

கி.பி.1732-1800 நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின்
ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம்
சென்றது. ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும்இடையே நடந்த யுத்தத்தின் போது இத்தலத்திற்கு பாதிப்பு இல்லை.
ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்த சந்தா சாகிபு (கி.பி. 1752) பிரஞ்சுப்
படைகளுடன் திருவரங்கம் தீவிற்குள்ளும், கோவிலின் வெளிபிரகாரங்களிலும்
ஒளிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். கி.பி. 1759இல் கிரில்லன்
என்னும் படைத்தளபதி இக்கோவிலில் மறைந்துள்ள வீரர்களைத் தாக்கினான்.
ஆயினும் கோவிலுக்கு எவ்வித சேதமும் இல்லை.

கி.பி.1809-1947 கி.பி. 1809 இல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில்
ஆற்காடு நவாபின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் ஒருசில பகுதிகள் கிழக்கிந்தியக்
கம்பெனியின் கீழ்வந்தது. வேல்ஸ் என்னும் மாவட்ட ஆட்சித் தலைவனின்
கீழ்வந்தது, இத்திருக்கோவிலின் நிர்வாகம். இவர் 1803இல் திருவரங்கத்தின்
பலவரலாற்று நூல்களை ஒருங்கே கொண்டு வந்து தனி முழுநூலாக வெளியிட,
எழுதப் பணித்தார். பின்னர் அந்த நூலின் பிரதி ஒன்றை கோவில்
ஆட்சியாளர்கள் (ஸதானத்தார் அல்லது ஸ்தானிகர்) ஐவரின் முத்திரையுடன்
கோயிற் முன்பகுதியில் உள்ள ஒரு கருங்கற்பாறைக்கு கீழ் உள்ள சுரங்கத்தில்
வைத்துப் பேணிக் காத்தார்.

தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது
மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து
வந்தனர். 1875 இல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏழாம்
எட்வர்டு இத்திருக்கோவிலுக்கு ஒரு மிகப் பெரிய பொற்குவளையை
அளித்தார். அது இக்கோவிலின் கருவூலப் பொருட்களில் இன்றும் உள்ளது.

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோவில்களும், சமய
நிறுவனங்களும் புதிய சட்ட அமைப்பின் கீழ்வந்து நம்மவர்களாலேயே
நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

1966 இல் அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் இக்கோவிலுக்கு
தொழல் நுட்ப உதவி அளிக்க ஒரு நிபுணரை அனுப்பியது. 1968 இல் மேலும்
இருவரை அனுப்பியது.

இவ்வாறு இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகத் தோரனை வருக்கும்
பொதுவான செல்வமாகி விட்டார் நம் திருவரங்கச்செல்வர். இவ்வுரிமையை உறுதிசெய்வதுபோல் 1987இல் அரங்கனுக்கு
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரத்தை ஜீயர் ஸ்வாமிகள் அமைத்துக்
கொடுத்து விட்டார்.

ஆம் திருவரங்கத்து இன்னமுது, வைணவர்களுக்கு மட்டுமன்றி,
இந்துக்களுக்கு மட்டுமன்று, உலகத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு
தனிச் சொத்து. அதுதான் வைணவ சம்பிரதாயமும் ஆகும். அதனால் தான்
ஆண்டாளும் “வையத்து வாழ்வீர்காள்” என்று வையத்து மாந்தரையெல்லாம்
விளித்தார்.
 

Author: siteadmin
Article Title: திருவரங்கம் - பாகம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.