• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

திவ்ய தேசங்கள் - ஒரு முன்னுரை

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
401
0
43
india
தமிழ் நாட்டு வைணவ சம்பிரதாயத்தில், பகவான் நாராயணனின் பல்வேறு அர்ச்சாவதார மூர்த்திகள் (சிலை ரூபங்கள்) எழுந்தருளியுள்ள குறிப்பிட்ட சில கோவில்கள் திவ்ய தேசங்கள் எனச் சிறப்புப் பெற்றவை ஆகும்.

அதிலும் குறிப்பாக இக்கோவில்கள், வைணவ ஆழ்வார்களால் அத்தலங்களில் உறையும் இறைவனைச் சிறப்பித்துத் தமிழில் பாடப்பெற்ற கோவில்கள் ஆகும். வைணவர்களால் தமிழ் வேதம் என்று கொண்டாடப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்ததில் இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆழ்வார்களின் காலம் கி.பி.6 முதல் 10ஆம் நூற்றாண்டு என்று ஆராய்ச்சியாளர் சொல்வதை ஏற்றால், இந்தக் கோயில்கள் அத்தனையும் தொன்மை வாய்ந்த கோயில்கள் என்பது தெளிவு.





'கோவில்' என்றாலே அது முதலில் குறிப்பது ஸ்ரீரங்கம்தான் என்று வைணவர்களால் கொண்டாடப் படும் திருவரங்கம் தொடங்கி மொத்தம் 105 திவ்யதேசக் கோயில்கள் இந்தியாவில் உள்ளன.

ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத, வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.

திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.

  • சோழநாட்டு திவ்ய தேசங்கள் - 40
  • நடுநாட்டு திவ்ய தேசங்கள் - 2
  • தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் - 22
  • வடநாட்டு திவ்ய தேசங்கள் - 11 (வட நாடு 9: இன்றைய ஆந்திரம் 2 = 11)
  • மலைநாட்டு திவ்ய தேசங்கள் - 13
  • பாண்டியநாட்டு திவ்ய தேசங்கள் - 18
  • நில உலகில் காணமுடியாத திவ்ய தேசங்கள் - 2
என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.


இந்த 108 திவ்ய தேசங்களில் 106னைச் சேவித்தவர்களை அவர்கள்
இப்பூவுலகில் வாழவேண்டிய காலக்கட்டாயம் முடிவுற்றதும் எம்பெருமானே
இரண்டு திவ்யதேசங்கட்கும் அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது
தலையாய வைணவக் கொள்கையாகும்.

12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும்
மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு
பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர்
ஆழ்வாரானார். மீதி பதினொரு ஆழ்வார்களும் கீழ்க்கண்டவாறு
மங்களாசாசனம் செய்துள்ளனர்.



இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள
விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும்.
மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர
விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும்.

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 2. விமலாக்குருதி விமானம்
3. சுத்தஸ்த்வ விமானம் 4. தாரக விமானம்
5. சுகநாக்ருதி விமானம் 6. வைதிக விமானம்
7. உத்பலா விமானம் 8. சௌந்தர்ய விமானம்
9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம்
11. சஞ்சீவி விக்ரஹ விமானம் 12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம் 14. ஸ்ரீகர விமானம்
15. ரம்ய விமானம் 16. முகுந்த விமானம்

17. விஜய கோடி விமானம் 18. சிம்மாக்கர விமானம்

19. தப்த காஞ்சன விமானம் 20. ஹேமகூட விமானம்

என்பனவாகும். இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில்
அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும், ப்ராண வாக்ருதி
விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள
விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப்போகிறது. இந்த
விமானங்களைச் சேவித்த மாத்திரத்திலேயே பாவ நாசம் உண்டாகிற
தென்பதும், இதன் அடிப்படையிலேயே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்
என்னும் பழமொழி உண்டாயிற்றெனவும் ஆன்றோர் மொழிவர்.



இந்த 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று
நிலைகளில் பக்தர்கட்கு காட்சியளிக்கிறார். அவைகள் நின்ற திருக்கோலம்,
அமர்ந்த திருக்கோலம், சயன (கிடந்த) திருக்கோலம்.

அதாவது, பரம்பொருள் ஸ்ரீவிஷ்ணு அமர்ந்த திருக்கோலத்தில் சகல
உலகங்களையும், அவ்வுலக இயக்கக் காரணிகளான தேவர்களையும்,
அதிதேவதைகளையும் படைக்க எண்ணிய மாத்திரத்தில் எழுந்து நின்றார்.
அவ்வளவிலேயே அனைத்தும் படைக்கப்பட்டு விட்டன. இவ்வியக்கம்
தொடர்ந்து முறைவழுவாது செயல்பட அறிதுயில் திருக்கோலத்தில் சயனித்து
அனைத்தையும் நிர்வகித்துக்கொண்டே அறிதுயிலில் உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான்
எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும். நின்றது 67

இதில்,

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 39
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 12
தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 14
வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 2

இதேபோல் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள ஸ்தலங்களில்
எண்ணிக்கை 17.

இதில்

கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 13
மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 3
தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் இல்லை
வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 1
இதேபோல் சயனத்திருக்கோல ஸ்தலங்கள் 24



இதில்,

கிழக்கு நோக்கி நோக்கிய சயனம் 18
மேற்கு நோக்கி நோக்கிய சயனம் 3
தெற்கு நோக்கி நோக்கிய சயனம் 3
வடக்கு நோக்கி நோக்கிய சயனம் இல்லை.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

அவைகள்

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம்
உண்டு. அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு
திருநீர்மலை, திருக்கோட்டியூர், மதுரை கூடலழகர், திருவல்லிக்கேணி
போன்றவைகளைக் கூறலாம்.

பொதுவாக திசையைக் குறிக்குமிடத்து அவைகள் மூலவர் நோக்கியுள்ள
திசையினையே குறிப்பதாகும். மூலவர் எந்தெந்த ஸ்தலத்தில் எந்த திசை
நோக்கியுள்ளாரோ அவ்வண்ணமே மேற்கண்ட கணக்கீடு கூறப்பட்டுள்ளது.

அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாள் ஒரு கரத்தை மேல்
நோக்கி (அருளும் முகத்தான்) வைத்துள்ளதற்கு அபயஹஸ்தம் என்று பெயர். மற்றொரு கரத்தை கீழ்நோக்கி வைத்திருப்பதற்கு தன்னடிக் கீழ் சரணடைந்து உய்யுங்கள் என்பது பொருள்.
 

Author: SudhaSri
Article Title: திவ்ய தேசங்கள் - ஒரு முன்னுரை
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.