• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 11

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
65
268
83
Chennai
தோற்ற மயக்கங்கள் 11


“ப்ரலய பயோதி ஜலே த்ருதவாநஸி வேதம்விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம் |கேஸவ த்ருத-மீந-ஸரீர ஜய ஜகதீஸ ஹரே ||”

ஜெயதேவர் எழுதிய கீதகோவிந்தத்தில் தசாவதாரத்தை ஓரிரு அடிகளில் எளிதாக விவரிக்கும் முக்கியமான அஷ்டபதி. அபர்ணாவின் குரலில் பகவானின் பத்து அவதாரங்களும் உயிரும் உருவகமும் பெற்றனர்.

கடைசியாக ‘வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா வடி வேலவா’ என்ற காவடிச்சிந்தும் மங்களமும் பாடி நிறைவு செய்ய, பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த கோட் அணிந்த கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் அதிராது, அசங்காது அளவாகக் கைகளைத் தட்டினர்.

அந்த சர்வதேச பண்பாடு மற்றும் கலாச்சார, நல்லிணக்கப் பரிமாற்ற மாநாட்டில் அபர்ணாவிற்கு ஒதுக்கப்பட்ட ஒருமணி நேரம் முடிந்ததும் அடுத்து வந்த சீனத்தின் டிராகன் நடனமும், பாரம்பரிய எத்தியோப்பிய வாத்திய இசையும் முடிந்து, மூன்று நாள்கள் நடந்த மாநாட்டில், அபர்ணா உள்பட பங்கேற்ற இருபத்தியோரு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடையும் நினைவுப்பரிசும் வழங்கிய பிறகே அங்கிருந்து அவளால் கிளம்ப முடிந்தது.

கணேசனுக்கு கால் செய்ய, கார் தனி நுழைவாயிலுக்கு வந்து நின்றது.

அவளது நிகழ்வுக்கான கெஸ்ட் பாஸ் இருந்தும் தனியாகத்தான் வந்திருந்தாள். அபர்ணாவின் பாட்டு பிடித்தமோ இல்லையோ, அவளுக்காகவும் இதுபோன்ற முக்கிய அரசு நிகழ்வுகள் தரும் கவன ஈர்ப்புக்காகவுமே உடன் வரும் அன்புநேசன் இன்று வரவில்லை.

அன்று இவள் படம் போட்டுக் காட்டிய உண்மைகளின் தாக்கத்தில் மூழ்கி இருந்தவன், அடுத்த நாள் வந்து விழுந்த விளம்பரங்களைப் பார்த்து யோசனையானான்.

அபர்ணா “என்னதான் சிட்டிங் எம்பின்னாலும், நீங்க, உங்கப்பா ரெண்டு பேருமே எதிர்க்கட்சில இருக்கீங்க. அப்புறம் ஏன் உங்க கிட்ட வராங்க?”

“குட் அப்பு, நல்ல கேள்வி. சரியான சந்தேகமும் கூட. முக்கியமான பதவிகள் எல்லாம் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்க கிட்டதான் இருக்கும். ஆனா, கட்சிகளைக் கடந்த சில பொறுப்புகள், எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கும் கிடைக்கும். உதாரணமா, நான் இப்ப இந்தியன் அதெலெடிக் ஃபெடரேஷனோட கன்வீனர்கள்ல ஒருத்தரா இருக்கறா மாதிரி”

“ஓ…”

“இன்னும் குறிப்பா சொல்லணும்னா, இப்ப ஒரு மசோதா நிறைவேறணும்னா எதிர்க்கட்சி எம்பிக்களும் சேர்ந்துதானே ஓட்டுப்போடணும்?”

அபர்ணா தெளிவில்லாது “புரியறது…”

சத்தமாகச் சிரித்த அன்புநேசன்
“என்ன பல்பு மங்கலா எரியுது, புத்தூ”

“நான் ஒண்ணும் புத்தூ இல்ல”

“ஆமாமா… நீ புத்தூ இல்ல மெத்து.. ” என கையை நீட்டி அவள் இடுப்பில் கிள்ளி அபர்ணாவைத் திகைக்கவிட்டு, எதுவுமே நடவாததுபோல் தன் போக்கில் பேச்சைத் தொடர்ந்தான்.

“உண்மைல பிரிட்டன், அமெரிக்கா மாதிரி ரெண்டே ரெண்டு கட்சிகள் மட்டுமே பிரதானமாஇருக்கற நாடுகள்ல, வேலை ஆகணும்னா ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளைத்தான் அதிகமா நெருங்குவாங்க”

“...”

“நீ ஒரு விஷயம் யோசிச்சு இருக்கியா அப்பு, இப்ப நான் ஒரு எதிர்க்கட்சி எம்பி. எனக்கு எந்த அதிகாரமோ, செல்வாக்கோ இல்லைன்னா, எங்கிட்ட வந்து இங்க ரோடு வேணும், தண்ணி வேணும், இங்க மகளிர் கல்லூரி வேணும், கிராமத்து ஹைஸ்கூல் மேல் நிலைப்பள்ளியாக அப்ரூவல் வேணும், மருத்துவ வசதி வேணும்னு வராங்களே அது எப்படி?”

“...”

“நீ சொல்ற படி பார்த்தா, எல்லா தொகுதிலயும் ஆளும்கட்சியோட எம்பியும் எம்எல்ஏவும் மட்டும்தான் இருக்க முடியும். அது ராஜா காலத்து ஆட்சி மாதிரி ஒருபக்கமா ஆகிடாதா? அது டெமாக்ரெஸியா (ஜனநாயகம்)?”

“...”

“எந்தப் பக்கத்துல இருந்தாலும் பதவில இருங்கறவங்களோட வேலை, பொறுப்பு எல்லாம் சமம்தான். எந்தப் பாகுபாடும் இல்லாம தொகுதிக்காக நல்லது செய்யற எத்தனையோ எம்எல்ஏக்களும் எம்பிக்களும் இருக்காங்க”

அபர்ணாவின் முகத்தில் தெரிந்த கேலியில் / கேள்வியில், அன்புநேசன் ஆத்திரத்துடன் “என்னைப் பொறுத்தவரை நான் அப்டிதான் இருக்கேன், இருப்பேன். என்னை சுத்தி இருக்கறவங்களைப் பத்தி…. நோ கமெண்ட்ஸ். அது என் கைலயும் இல்ல, கவலையும் இல்ல”

“...”

எழுந்து செல்லப் போனவனின் கையைப் பிடித்தவள் “நீங்க கேலி செஞ்சா நான் சிரிக்கணும்… நான் எப்பவாவது எதாவது சொல்லிட்டா…”

“ஏன், தேவை இல்லாம நான் மாட்டினது, ஜெயில்ல இருந்ததெல்லாம் உனக்கு விளையாட்டாடீ?”

“ம்ப்ச்… ஸாரி” என காதைப் பிடித்துக்கொண்டாள்.

“நேசான்னு சொல்லு”

“இப்பவா…”

“சொல்லு… இல்லைன்னா சொல்ல வைப்பேன்” என அபர்ணாவைத் தன்னிடம் இழுக்க…

“நேசா… ப்ளீஸ்…”

“தட்’ஸ் பெட்டர்” என்றவன், அமைதியாக மீண்டும் அந்த விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்கினான்.

கூடவே பார்த்த அபர்ணா, அவன் ஸ்க்ரோல் செய்யப் போக “வெய்ட், வெய்ட்” என்று தடுத்தாள்.

“இப்ப என்னடீ யுரேகா?”

“இது ஒரு சர்ரகேட் விளம்பரம் (Surrogate advertising)”

“அப்படீன்னா?”

“இப்ப ஆரோக்யம், வயது வரம்பு, அதீத நுகர்வு மாதிரியான பல காரணங்கள்னால பல நாடுகள்ல ஆல்கஹாலை நேரடியா விளம்பரம் செய்யத் தடை இருக்கு. நம்ம ஊர்ல இதுக்கு இன்னுமே கடுமையான சட்டங்கள் இருக்கு. அதுக்காக பிரபலமான மது பானங்கள் (liquor) தயாரிக்கற நிறுவனங்கள் எல்லாம் அவா விளம்பரம் பண்றதையோ, விக்கறதையோ நிறுத்திட்டாளா என்ன?”

“ம்…”

“ரம் பாட்டிலையோ, விஸ்கி பாட்டிலையோ நேரடியா காட்டாம நட்பு, கொண்டாட்டம், சோடா, மினரல் வாட்டர், சிடின்னு மறைமுகமா விளம்பரம் பண்றாதானே?”

“...ப்ப்பா…. சான்ஸே இல்லடீ அப்புக்குட்டீ… என்னா போடு போடற, நீ சீரியஸா பேசும்போது உன்னை அறியாம வர என் பழைய அப்புவோட பாஷை, ஆக்ஸென்ட் எல்லாம்… ஐ மிஸ் தட் இன்னோஸன்ட் அபர்ணா, தெரியுமா… ரொம்ப மாறிப் போய்ட்டடீ”

“...”

தன் இயல்பிலிருந்து மாறவேண்டும் என அவளுக்கு மட்டும் வேண்டுதலா என்ன?

“என்ன செஞ்சாலும் சரியா சாப்புடறது இல்ல. எங்க கூட சரியா பேசிப் பழகறது இல்ல. யாராவது சொந்தபந்தம் வந்தா ஒதுங்கியே நிக்கிறது… படிப்பு, குழந்தைன்னு வந்தவங்க கேள்வி கேட்டா அவங்களுக்கு புரியறாப்போல பதில் சொல்லணும். அதைவிட்டுட்டு எனக்குதான் பேசத்தெரியும்னு அவங்க வீட்டு பாஷையும், அதிலயும் பாதிக்கு மேல நுனி நாக்குல இங்கிலீஷும் பேசினா எப்படி?”

“ஏன், நீ படிக்கலையா, உங்க அப்பா படிக்கலையா, உங்க அம்மாவே பெரிய டாக்டர்… ஒரத்தநாடு பெரியம்மா கிட்டயும், எங்க மாமியார் கிட்டயும் போய் உன் சாமர்த்தியத்தைக் காட்டினா?”

துளசியும் புருஷோத்தமனும் பாட்டு, படிப்பு, பழக்கத்தில் பேட்டி எடுக்க வரும் செய்தியாளர்களை நாசூக்கும் நளினமுமாகக் கையாளும் பாங்கு என தாங்கள் பார்க்காத மருமகள் என்றாலும், தங்கள் அந்தஸ்திற்கு ஏற்ப நடந்துகொள்ளும் அபர்ணாவைப் பற்றிப் பெருமையுடன் மெச்சுதலாக எண்ணி இருக்க, ஐயாரப்பனின் வார்த்தைகளை, அவனது முன்னிலையில் அபர்ணாவின் காதுபட அப்படியே இங்கு வந்து கொட்டினாள் பொன்னி.

ஐயாரப்பனின் வீட்டிற்கு வந்த அவனது அம்மா, தன் மகள் இருக்க வேண்டிய இடம் இது என்று தீர்மானமாக நம்பியதில்,
“அண்ணி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என்னதான் காதல், கருமம்னாலும் நம்ம வீட்டுக்குன்னு ஒரு வழக்கம் இருக்குல்ல… பெரிய மனுஷங்க… ஏவுறத செய்ய எல்லாத்துக்கும் ஆள் இருக்குதான். ஆனா, வந்தவங்களை கவனிச்சு, என்னான்னு கேட்டு, சாப்பாடு பரிமாற உங்க கூட நிக்க வேணாமா?”

துளசி “இல்லண்ணி… அவ அசைவமெல்லாம் பார்த்தே பழக்கம் இல்லாத பொண்ணு…”

“என்னவோ போங்க. அதான் காதலிச்சு புடிவாதமா நம்ம தம்பியைக் கட்டிக்கிட்டு வந்தாச்சுல்ல. பழகிக்க வேண்டியதுதான். இதே இடத்துல எம்பொண்ணு இருந்தா இப்புடியா நடப்பா?”

“அவகிட்ட நான் சொல்றேன் அண்ணி. சின்னப் பொண்ணுதானே, போகப் போகப் பழகிடுவா” என அன்று மருமகளுக்குப் பரிந்து பேசிய துளசி இப்போது எப்படி மாறிவிட்டார் அல்லது மாற்றி விட்டார்கள்?

காதலும் கல்யாணமும் கணவனின் குடும்பமும் தன் மனம்போல், தன் விருப்பமாக இருந்திருந்தால் எப்படியோ, எல்லாமே திடும்மென திணிக்கப்பட்டதில் மெதுவே சுதாரித்து நின்றவளை வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் வேஷம் போட நிர்ப்பந்தித்ததில் அபர்ணா வெகுவாகத் தடுமாறித்தான் போனாள்.

சூழலின் அவசியத்தில் தானே கனிந்திருக்க வேண்டியதை சொல்லால் அடித்துப் பழுக்க வைத்ததில் வெம்பி, வெதும்பியவளை அன்புநேசன் வேறு கேள்வி கேட்டுக் குடைந்தான்.

அவள் பரிமாற வந்தால் “ஏய், உனக்குதான் பழக்கம் இல்லல்ல, நீ ஏன் இதெல்லாம் செய்யுற?” என்று கையைப் பிடித்துத் தடுத்தான்.

“ஏன்டீ தீடீர்னு என்னமோ மாதிரி பேசுற, யாருக்கோ டப்பிங் பேசுறாப் போல இருக்கு….” என்று கேலி செய்தான்.

அன்புநேசனுக்கு இதன் பின்னணி தெரியாமல் இல்லை. ஆனால், எல்லா நேரமும் மனைவியின் அருகில் இருந்து அடைகாக்கவா முடியும்?

அபர்ணா சொல் பொறுக்க மாட்டாள் என்பதும், பொதுவாகவே அனைவரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்புபவள் என்பதும் புரிய, கண்டுகொள்ளாமல் விட்டால் சுதாரித்துக்கொள்வாள் என நினைத்து,

“அவங்க சொல்றதை எல்லாம் சும்மா விட்டுத் தள்ளாம இம்சைப் படாதடீ” என்றதோடு விட்டுவிட்டான். ஆனால்
அவளோ அவர்கள் சொன்னதை ஏதோ கட்டளைக் கல் போல் நினைத்து மாய்ந்தாள்.

“ஹலோ அபர்ணா மேடம், நான் கட்சி ஆஃபீஸ் போயிட்டு, அங்கிருந்து அகாடமிக்கு போய்ட்டு நைட்டுதான் வருவேன். டின்னர் வீட்லதான்” என்று அவளை உலுக்கியவன், அதற்குள் குளித்து, உடையணிந்து சட்டையின் கைகளை மடித்து விட்டபடி நிற்க,

“ஸாரி, சாப்பிட வாங்க…”

அறையை விட்டு வெளியேறும் முன், அபர்ணா

“அந்த ஸ்பான்ஸர்ஷிப் வேண்டாம், ஓகேவா?”

“லெட் மீ ஸீ… நீ உன் ஷெர்லக் ஹோம்ஸ் வேலையை எல்லாம் முட்டைகட்டி வெச்சிட்டு, உன் வேலையை மட்டும் பாரு, ஓகேவா?”

“?!?!”

இரவு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பியவனுக்கு தட்டில்
சப்பாத்தியை வைத்துவிட்டு, அவன் முகத்தையே பார்த்தவளிடம்

“எட்டு கோடிக்கு ஸ்பான்ஸர்ஷிப் கன்ஃபர்ம் பண்ணியாச்சு. நாளான்னிக்கு ஆட் ஷூட்டிங்”

அபர்ணா கவலையுடன் மௌனமாகிவிட, அன்புநேசன் தொகுதி மற்றும் அகாடமி வேலைகளில் பிஸியாகிப் போனான். பனிப்போர் தொடர்ந்ததில் இன்று கச்தேரிக்குக் கூட வரவில்லை.

கணவன் தன் பேச்சைக் கேளாது, ஸ்பான்ஸார்ஷிப்பை ஏற்றதில் அபர்ணாவிற்கு வருத்தம், பதற்றம்.

சூழலின் அழுத்தம், வணிக நிறுவனங்களின் நிதியுதவி வழமைதான் என்ற காரணம், இதனால் வரக்கூடிய விளைவுகளை எண்ணி சிறு கலக்கம், அரசியலின் உள்ளடிகள் தனக்கே இன்னும் சரியாகப் பிடிபடாத நிலையில், நேர்மை, பெருமை, அருமை என்பவளை பயமுறுத்த விரும்பாத அன்புநேசனுக்கு மனைவி தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் தந்த ஆதங்கம்.

நேரம் பார்க்க, மாலை நான்கு மணி என்றது மொபைல். இன்று ஏனோ கச்சேரி முடிந்து வரும்போதெல்லாம் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கும் பாட்டி, அம்மாவின் நினைவு. பிள்ளைகளும் இல்லாது வீட்டில் காத்திருக்கும் வெறுமை சோர்வைத் தர, கைப்பையில் அம்மா வீட்டு சாவியைத் தேட, இருந்தது. அங்கு போனால் என்ன? கொஞ்ச நேரம் அமைதியாக அசை போட விரும்பியது மனம். இவர்களது வீடு இருக்கும் திருவான்மியூருக்குப் பக்கத்தில்தானே பெஸன்ட் நகர்?

“கணேசன், அம்மா வீட்டுக்குப் போங்க”

“மதியமே அன்பு ஸார் வீட்டுக்கு வந்தாச்சு மேடம்”

“சரி, வீட்டுக்கே போங்க”

அழுத்தமான கருநீல திரைச்சீலைகள் ஏப்ரல் மாத மாலை வெளிச்சத்தை படுக்கை அறைக்குள் வர விடாது இருட்டடிப்பு செய்திருக்க, கதவைத் திறந்த அபர்ணாவைத் தாக்கியது ஏசி குளிர். இருட்டுக்குக் கண்களைப் பழக்கிக் கணவனைத் தேட,
இடது கையை கண்களுக்கு மேல் வைத்தபடி மல்லார்ந்து படுத்திருந்தான்.

அபர்ணா சத்தம் காட்டாது மாற்று உடையுடன் ஓய்வறைக்குச் செல்ல,

“புடவைய மாத்த வேணாம்”

“தூங்கலையா?”

மெலிதான மேக் அப்பை கலைத்து, முகம் கழுவி படுக்கையில் வந்து சாய்ந்து அமர்ந்தவளின் புறம் திரும்பி அணைத்துக்கொண்டான்.

“கான்சர்ட் எப்டி போச்சு?”

“...”

“அப்பூ”

“...”

“சரி,, மை மிஸ்டேக்… ஸாரி, பேசுடீ”

“ம்…”

“புது புடவையா?”

“ம்…”

“நிறைய புதுசா கத்துக்கிட்டு பாடி இருக்க போல”

“யார் சொன்னா?”

“ஏன், எனக்கு பாடதான் தெரியாது. ஆனா, என் பொண்டாட்டி பாடற எல்லா பாட்டும் தெரியும்”

“ரொம்பத்தான்” என்று சிரித்தவள் தன் மீது சரித்துக்கொண்டான்.

“என்…ன…” என்றாலும் வாகாக அவன்மேல் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

இருவருமே சட்டென உறங்கி இருந்தனர். எத்தனை நேரமோ, தெரியாது… அன்புநேசனின் அலைபேசி அலறியதில் முதலில் விழித்ததென்னவோ அபர்ணாதான். மாமியார் துளசி பேசினார்.

“ஹலோ, அம்மா”

“அன்பு இருக்கானா?” என்றவரின் குரலில் இருந்த பதட்டத்தில் காதுக்கும் கழுத்துக்குமிடையே அலைபேசியை இடுக்கியபடி ஒரு கையால் கணவனை உலுக்கியவள், மறுகையால் தன் மொபைலில் வந்த மெஸேஜைத் திறந்து பார்க்க, ‘சாரங்கனா?’

“இருக்கார் மா. தூங்கறார்…”

“அவசரம்னு சொல்லி எழுப்பு”

“யாருடீ?” என்றபடி எழுந்தவன், அம்மா சொன்னதைக் கேட்டு அவசரமாகக் கிளம்பினான்.

“எங்கேங்க?”

“ம்… நீயும் வா, சொல்றேன்” என்றவன், ஓடிவந்த கணேசனைத் தவிர்த்துவிட்டுத் தானே வண்டியைக் கிளப்பினான்.

*******************

கார் நேரே ஐயாரப்பனின் வீட்டில் போய் நிற்க, அபர்ணா கேள்வியாகக் கணவனைப் பார்த்தாள். ஒன்றும் சொல்லாது உள்ளே சென்றவனைப் பின் தொடர்ந்தாள். வீட்டுக்குள்…

ஹாலுக்குள் நுழையும்போதே அன்புநேசன் “என்னம்மா, எதுக்கு அவசரமா இங்க வரச்சொன்ன?”

ஐயாரப்பனின் அம்மா தரையில் கால் நீட்டி அமர்ந்திருக்க, கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த துளசி தன் வயதை மறந்து சோஃபா நுனியில் உட்கார்ந்திருந்தார். அருகிலேயே இருந்த அக்கா பொன்னி அழுகையும் ஆங்காரமுமாகக் காணப்பட்டாள். அவளது மகள்கள் இருவரும் கூட பதட்டம் நிறைந்த முகத்துடன்தான் நின்றனர்.

“தம்பி…” என்று அழுத பொன்னி, மகளிடம் “அதுங்கள வரச் சொல்லுடீ” என்றாள்.

வலப்பக்க அறைக்குப் போனதுமே, ஆறு வயதில் ஒரு ஆண் பிள்ளை திமுதிமுவென ஓடி வர, பின்னோடே நல்ல வாட்ட சாட்டமான பெண் ஒருத்தியும் வெளிக்கிட்டாள்.

அன்புநேசன் கேள்வியாக பொன்னியைப் பார்க்க, ஏதோ புரிந்தாற்போல் அபர்ணா அந்தப் பிள்ளையின் முகத்தை ஆராய்ந்தாள்.

அமைதியின் அழுத்தம் தாளாது, ஐயாரப்பனின் இளைய மகள் “மாமா, இவங்களுக்கு தஞ்சாவூராம். அப்பாவை… அப்பாவோட… எனத் தடுமாற, அன்புநேசன் “ஒண்ணுமில்லடா, நான் பேசிக்கறேன். அப்பு, அவங்களை மேல கூட்டிட்டுப் போ” என்றதை மறுத்தனர்.

“அம்மா கூடவே இருக்கோம் மாமா”

அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு அங்கே ஒரே அழுகையும் சண்டையும் கூச்சலும் சாபமுமாக இருந்தது.

அவள் சொல்லாமலேயே அவர்கள் யாரென அன்புநேசனுக்குப் புரிந்தது. டிஎன்ஏ பரிசோதனை எதுவும் இல்லாமலே அந்தச் சிறுவன் ஐயாரப்பனின் மகன் என்பது ஒரு பார்வையிலேயே விளங்கியது.

மூன்று வருடங்களாக சென்னை வாசமாம். ஐயாரப்பன் நாலைந்து மாதங்களாக வீட்டுப் பக்கமே வராததோடு, அவளின் தங்கை திருமணத்திற்குத் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராததில், நேரே இங்கேயே வந்திருந்தனர். இன்னும் மூன்றே நாள்களில் திருமணமாம்.

அந்தப் பெண் “மாமா இப்டி
எங்கிட்ட சொல்லாம எங்கேயுமே போக மாட்டாங்க, தம்பி. ஃபோனையும் எடுக்க மாட்டேங்கறாங்க” என்று அன்புநேசனை முறை வைத்து அழைக்க, அபர்ணாவிற்கு அந்தச் சூழலிலும் சிரிப்பு வந்தது.

‘அல்பாவுடன் அஜால் குஜாலாக பண்றவன், இப்போதைக்கு இவளைத் எங்க திரும்பிப் பார்க்கப் போறான்?’

முதலில் சிறிது சங்கடப்பட்ட ஐயாரப்பனின் அம்மா, நேரம் செல்லச் செல்ல ஒற்றை மகனின் ஆண் வாரிசை ஆர்வமும் ஆசையுமாகப் பார்த்தார்.

துளசியின் முகத்தில் வேதனை மண்டிக்கிடந்தது. மருமகளை, பேத்திகளைப் பார்க்க அவமானமாக இருந்தது போலும். தாயின் முகத்திலிருந்தே தந்தையைப் பற்றிய விவரம் முழுவதும் இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது அவருக்குத் தெரியும் என்பதை அன்புநேசன் புரிந்துகொண்டான். எத்தனை வயதானால் என்ன, கணவனின் கோணங்கித்தனம் புரியாமலா போகும்?

“எதுவா இருந்தாலும் அவர் வந்ததும் விசாரிங்கம்மா. இங்கல்லாம் வரக் கூடாது. இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, புரியுதா? முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்ற அன்பு, வேறு வழியின்றி கையில் இருந்த பணத்தை அந்தப் பெண்ணிடம் தந்து, கால் டாக்ஸியை வரவழைத்து அனுப்பி வைத்தான்.

“பாவம், ஆம்பளப்புள்ள, ராசா கணக்கா…” என்று இழுத்த ஐயாரப்பனின் அம்மாவிடம்,

“நீங்க வேணா அவங்களோட போய் இருங்க. உங்க மகன் வந்ததும் அனுப்பி வைக்கறேன்” என அன்புநேசன் வள்ளென விழுந்ததில், அவர் ஏன் வாயைத் திறக்கிறார்?

துளசியிடம் “அம்மா, உங்களை வீட்ல விடட்டுமா இல்ல எங்க கூட வரீங்களா?”

“இல்லடா அன்பு, நான் இன்னைக்கு இங்கேயே பொன்னி கூட இருக்கேன்”

ஐயாரப்பனின் தகிடுதத்தங்களை சாமர்த்தியம் எனக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிய அக்காவைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது.

“தைரியமா இருக்கா, பார்த்துக்கலாம்” என்றவன், தாயிடமும், மருமகளிடமும் பொன்னியின் மேல் கவனம் வைக்கும்படிக் கூறிவிட்டே அங்கிருந்து கிளம்பினான். அமைதியாக வீடு வந்தனர். பசித்தது, ஆனால் உண்ண மனமில்லை.

காத்திருந்த காவேரியை அனுப்பிய அபர்ணா ஃப்ரிட்ஜில் இருந்த கிர்ணிப்பழத்தை நறுக்கி சர்க்கரை தூவி எடுத்து வந்தாள்.

கைப்பைக்குள் இருந்த தன் மொபைலை எடுத்துப் பார்க்க, சாரங்கன் பலமுறை அழைத்திருந்தான்.

‘காட்! இப்ப என்னன்னு தெரியலையே… ஒரே நாள்ல எத்தனை?’

பழக்கிண்ணங்களைக் கொண்டுபோய் வைக்கும் சாக்கில் கீழ செல்லக் கிளம்பியவளிடம்…

“அப்பு, காஃபி போடேன். உத்தமபுருஷனும் புருஷோத்தமனும் செய்யுற வேலைல என் மண்டை காயுது”

“கொண்டு வரேன். டேக் எ ஷவர். ஃப்ரெஷ்ஷா இருக்கும்”

காஃபி மேக்கரில் பொடியைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி ஆன் செய்தபடி “சொல்லு சாரங்கா”

“ஆட் ஷூட்டிங்லாம் அமர்க்களமா நடக்கறதாமே?”

“ஏன்டா, நீ வேற?”

“சரி, ரெண்டு விஷயம். நான் உன் இ- மெயில்ல ஒரு டாக்குமென்ட் அனுப்பி இருக்கேன். முதல்ல அதைப் பாரு”

“ஓகே”

“அதைவிட முக்கியமா, ஓடிப்போய் ஒரு நேஷனல் இங்கிலீஷ் நியூஸ் சானலைப் போட்டுப் பாரு. அப்புறம் நான் சொல்ற வெப்சைட்டுக்குப் போய் அதுல எழுதி இருக்கறதைப் படி”

“என்னன்னு சொல்லேண்டா”

“அன்புடன் என்ஜாய் மாடி அபர்ணாக்கா”

“போடா”

“குட் நைட். நாளைக்கு பேசறேன் கா”

பாலை அடுப்பில் வைத்துவிட்டு இமெயிலைத் திறந்தாள்.

அந்த மருந்துக் கம்பெனி வடஅமெரிக்காவில் தங்கள் விற்பனையை அதிகரித்து, ஏகபோகமாகச் சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற வழக்கில் (Antitrust lawsuit) சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களை அனுப்பி இருந்தான்.

இருவருக்கும் காஃபியுடன் அறைக்குள் நுழையும் முன்பே பரபரப்பாக வெளியில் வந்த அன்புநேசன், “அப்பு, இங்க வந்து பாரேன்” என இழுத்துச் சென்றான்.

சுவரில் இருந்த திரை வரவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முதல் கட்ட உயர்குழுக் கூட்டம் நியூஸிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் நடக்கவிருப்பதாக செய்தி வாசித்தது.

அன்புநேசன் “இதைப் பாருடீ” என்று கணினித் திரையைக் காட்ட, விளையாட்டுத் துறை அமைச்சரகத்தின் அதிகாரபூர்வமான தளத்தில் அந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் செல்லும் மூன்று பிரதிநிதிகளில் அன்புநேசனின் பெயரும் இருந்தது.

நிகழவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அதற்கான கூட்டங்களுக்கும் ஸ்பான்ஸர் செய்யும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் பட்டியலில் அந்தப் பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது.

 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.