• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 13 - FINALE

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
67
336
83
Chennai
தோற்ற மயக்கங்கள் 13

நீண்ட பிரயாணமும் நிகழ்வுகளின் பதட்டமும் தட்பவெப்ப மாற்றமும் பதிமூன்று மணி நேர கால முரணும் சேர, அபர்ணா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அன்புநேசனின் இயல்புக்கு மாறாக அவளிடம் ‘எப்ப, எப்டி, ஏன் வந்த?’ போன்ற சம்பிரதாயக் கேள்விகள் கூடக் கேட்காது
அறைக்கு வந்ததும் “அப்பூ…” என இறுக அணைத்துக் கொண்டவன், அவள் காதுக்குள் “எல்லாத்தையும் ஊருக்குப் போய் பேசிக்கலாம்” என்றிருந்தான்.

“அப்பு, ஏதாவது ஆர்டர் பண்ணவா?”

“வேண்டாம்” என்றவள் கொண்டு வந்திருந்த பூரியும் தக்காளி தொக்கும் கேசரியும் அமிர்தமாக உள்ளிறங்கியது.

உண்ணும்போதே அவளை மீண்டும் அணைத்துக்கொள்ள “என்ன?”

“இது இந்த சாப்பாட்டுக்காக. இன்னும் ஒருவாரம் இங்க இருந்தேன், என் நாக்கை தனியா அடக்கம் பண்ண வேண்டியதா இருக்கும்”

‘அடங்கற நாக்கா அது?’ என்பதுபோல் கிண்டலாகச் சிரித்தவள், அங்கேயே , அப்படியே சொக்கினாள்.

அன்புநேசன் உறக்கம் வராது விழித்திருந்தான். திரைகளினூடே அறையினுள் கசிந்த புற உலகின் மெல்லிய ஒளி பரப்பி இருந்த அசட்டு வெளிச்சம் சிறிது எரிச்சலைத் தந்தது.

ஒரு மாலைக்குள் எத்தனை நிகழ்வுகள்!

சற்றும் எதிர்பாராத சூழலில் தன்னைக் கண்டவனின்

‘இவ எப்டி இங்க?’

‘முந்தாநாள் விசாகப்பட்டினத்துல கச்சேரி என்னாச்சு?’

‘எதிர காமினி வேற இருக்கா’

என கேள்வியும் அதிர்ச்சியுமாய் திகைத்தவனை தன் கைகளின் அழுத்தத்தில் தணித்த அபர்ணா, எதிரே இருந்தவளிடம்

“ஹாய் காமினி… லுக்கிங் கார்ஜியஸ் ஆஸ் எவர்… பை தி பை, ஐ’ம் அபர்ணா… அபர்ணா அன்புநேசன்” என, கார்ஜியஸ் காமினி, காற்றுப் போன காமினியாகி “யா… ஐ நோ” என்றாள்.

அபர்ணாவைப் பார்த்ததுமே அவள் யாரென்று காமினிக்குத் தெரிந்திருந்ததை அவள் முகமாறுதல் சொன்னது. ஆயினும், தேர்ந்த நடிகையாக ஓரிரு விநாடிகளிலேயே தன் பாவத்தை மாற்றிக்கொண்டாள்.

“திஸ் ஈஸ் ஏ ரியல் சர்ப்ரைஸ் டியர்” என்ற அபர்ணா, எழுந்து காமினியின் அருகே சென்று “ப்ளீஸ்..” என்றவள், அவர்கள் இருவரும், மூவரும் என செல்ஃபி எடுத்தவள், மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து அன்புநேசனும் காமினியும் கைகளைப் பற்றி இருந்ததைப் போன்றே அவள் கைகளைப் பற்றி, “நேசா, ஒரு பிக் ப்ளீஸ்” என்றாள்.

அந்தச் சூழலிலும் இவன் கேட்டாலே லேசில் நேசா எனாதவள், அடிக்கொரு நேசா போட்டதில் அன்புநேசனுக்கு உள்ளூர அப்படி ஒரு சிரிப்பு.

புதிதாக ஆள் வரவும், அருகே வந்த வெயிட்டரிடம், அபர்ணா தனக்கொரு கோல்ட் காஃபியும் பொதுவில் ஒரு வெஜ் சாலடும் ஆர்டர் செய்ய, காஃபி என்ற பெயரில் ஐஸ்க்ரீமும் வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கும் வந்தது.

காமினி ஆர்டர் செய்திருந்த உணவு முதலில் வரவும் “யூ ப்ளீஸ் கேரி ஆன்” என்றான் அன்புநேசன்.

அபர்ணாவிற்கு ஏதோ கால் வர, வித விதமாக ‘ம்’ கொட்டினாள். முடிவாக “ஒன் செக்” என மொபைலை எதிரே பிடித்து எதையோ தட்டியவள் மீண்டும் ஒரு “ம்” முடன் அழைப்பைத் துண்டித்தாள்.

மூவரும் எழுந்து கை குலுக்கி, இணைந்த ஒரு செல்ஃபியுடன் விடை பெற்றனர்.

பிரபல சமூக வலைத்தளங்களில் அன்புநேசனின் தனிப்பட்ட பக்கங்களிலும், அவனது கட்சி சார்ந்த தளங்களிலும், அபர்ணாவின் பர்ஸனல் அக்கவுன்ட்டிலும் இவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் படங்களை, ‘யதேச்சையான சந்திப்பு’ , ‘எ சடன் சர்ப்ரைஸ்’, ‘ஆன் ஈவன்ட்ஃபுல் ஈவினிங்’ போன்ற கேப்ஷன்களுடன்
அபர்ணா தன் டீம் மூலம் வெளியிட வைத்திருந்தாள்.

கசிந்த முதல் படத்திற்கும் அடுத்தடுத்த படங்களுக்குமான குறுகிய கால இடைவெளியும் உடைகளும் ஒன்று போன்ற பின்னணியும் நிகழ்வின் தொடர்ச்சியைச் சொல்ல, இதயங்களும் ஸ்மைலிகளும் குவிந்த வண்ணமிருந்தன.

நடிகைதான் என்றாலுமே, பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த, இன்டஸ்ட்ரியில் தனக்கென தனி மரியாதையைப் பெற்ற காமினி பட்டாச்சார்யாவை இதற்கு சம்மதிக்க வைக்க நிறைய நிர்ப்பந்தித்திருக்க வேண்டும்.

‘முழுமையுறாத இலக்கின் விளைவு என்ன என்ற குழப்பம் அவளிடம் தெரிந்ததோ?’

‘உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத கவலை?’

காமினி, தன்னிடம் வைக்கப்பட்ட கோரிக்கை, அகாடமிக்கான ஸ்பான்ஸர் பணம் என யோசித்தவனுக்கு, இதில் தன் தந்தைக்கு என்ன லாபம், அரசாங்கத்துடன் சம்பந்தமே இல்லாத ஐயாரப்பனுக்கான ஆதாயம் என்ன என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

திடீரென ஏதோ தோன்ற, பரபரத்தவன், அந்த மருந்து நிறுவனம் முதல் முதலில் இந்தியாவில் காலூன்றியது எப்போது என்று பார்க்க….

‘ஓ, ஷக்ஸ்!’

தொன்னூறுகளின் மத்தியில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு புருஷோத்தமன் அவர்கள், சில மாதங்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பில் இருந்தபோது மூன்று பெரிய பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதைப் புட்டுப் புட்டு வைத்தது கூகுள்.

‘சரிதான், அப்போ இது சன்மானம் இல்ல, ஓய்வூதியம்!’

‘பதவில இல்லாதபோது இவருக்கு ஏன் இந்த வேலை?’

‘அவன் கேட்டது மட்டும் நடந்துட்டா, என்ன தர்றதா சொன்னானோ?’

‘இதுல ஐயாரப்பனுக்கு எத்தனை பங்கு?’

இருபது வருடங்களாக அரசியலிலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அன்புநேசன் கட்சி நடத்துவதில் உள்ள சிரமங்கள், நெளிவுசுளிவுகள், நன்கொடை, கட்சி நிதி என நடைமுறைச் சிக்கல்கள் எதுவும் புரியாதவனோ, அவற்றைக் கையாளாதவனோ அல்ல. அவனைப் பொறுத்தவரை, தனக்கிருக்கும் வசதிகளால் , இவற்றைப் பொருட்படுத்தாதவன். சில வருடங்களுக்கு முன்பு ஐயாரப்பனால் சூழ்ச்சியில் சிக்கும் வரை, தன் தந்தையும் தன்னைப் போலவே என நம்பியவன்.

இன்றும் அவனது தொகுதி மக்களிடம் இவரிடம் சொன்னால் வேலை நடக்கும், கேட்டால், கேட்ட உடன் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்றவன். குறிப்பாக, நியாயமான மருத்துவ உதவிகளை விரைந்து செய்பவன்.

காமினியை நினைக்க, கூடவே ‘ஐயோ பாவம், ஐயாரப்பன், அல்ப அல்பா எங்க, காமினி எங்க? ஜஸ்ட் மிஸ்டு மாமோய்!’ என்று எண்ணியவனுக்குப் பெருஞ்சிரிப்பு. அபர்ணாவை எழுப்பிச் சொல்ல நினைத்தவன், அவள் அசைய மாட்டாள் என்று புரியவும், விட்டுவிட்டான். மறுநாள் மாலையே நாடு திரும்ப வேண்டுமே!

செல் ஒலிக்க, அம்முவின் வீடியோகால். மகளைக் கண்டதும் முகம் மலர்ந்தான்.

எடுத்ததுமே “இன்ஸ்டால பார்த்தேன் டாடீ, அம்மாவும் நீங்களும் காமினியை மீட் பண்ணீங்களா, நிஜம்மாவா டாடீ? ஐ லவ் ஹர் வாய்ஸ்”

“ஆமான்டா”

“என்னையும் நியூஸீலாண்ட் கூப்ட்டு போயிருக்கலாம்ல,”

“இது அஃபீஷியல் ட்ரிப் டா அம்மு, நாம நாலு பேரும் வரலாம். அண்ட், காமினி… அவங்களை மீட் பண்ணினது ஷியர் கோ இன்ஸிடன்ட் டா. எங்களுக்குமே சர்ப்ரைஸ்தான்”

“ஓகே டாடீ, அங்க என்ன ஸ்பெஷல்?”

“செம்மறி ஆடு நிறைய மேயுது. ரெண்டு வாங்கிட்டு வரவா?”

கலகலவெனச் சிரித்தவள் “போங்க டாடீ” என, மகளின் மாறாத குழந்தைத் தனத்தை ரசித்தபடி “குட்நைட் டா அம்மு. அப்பாக்கு தூக்கம் வருது. அம்மா பாக்கறியா, எப்டி தூங்கறான்னு பாரு” என அபர்ணாவைக் காட்டி பை சொன்னான்.

****************

அன்புநேசன் ஒரு பழைய பேட்டியில் தன் விருப்பமான நடிகை என காமினி பட்டாச்சார்யாவை குறிப்பிட்ட ஒற்றை வரியை அகழ்வாராய்ந்து, எப்போதோ ஒருமுறை இருவரும்
மற்றவரின் இருப்பை அறியாது ஷார்ஜாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பார்வையாளராகச் சென்றது, இப்போது நியூஸிலாந்தில் எடுத்த புகைப்படங்களின் போஸ்ட்மார்ட்டம், என்ன நடந்திருக்கக் கூடும் என்ற அனுமானங்கள், அபிப்பிராயங்கள் (கெட்ட வார்த்தைகளின் சுரங்கம்!), அந்தக் கற்பனை சம்பவங்களின் அனாட்டமி, அபர்ணாவின் முற்றுகையும் வெற்றியும் என இணையமே அல்லோலகல்லோப்பட்டது.

அதைத் தவிர, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி எத்தனை AI படங்கள், காணொலிகள்?

அதிலும், யாரோ ஒரு ரசனைக்காரன் குந்தவையும் நந்தினியும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில் அவர்கள் உடலில் அபர்ணா, காமினியின் முகத்தைப் பொருத்தி ‘சோழதேசம் எனதே… இல்லையில்லை அன்புநேசன் எனதே’ என வெளியிட்டிருந்த வீடியோ , லட்சங்களில் லைக்ஸை அள்ளியிருந்தது. அதைப் பார்த்து அபர்ணாவே ரசித்துச் சிரிக்க, அவனோ கொலைவெறியானான்.

அபர்ணா “நான் ஒன்னு கேட்கவா?”

“ம்”

“அந்த கம்பெனி போட்ட ப்ளான்ல இந்த விஷயம் இவ்வளவு வைரல் ஆகி இருக்கு, ஓகே. ஆனா, ஸாரி… உங்கப்பாவைப் பத்தி எதுவுமே வெளில வரலையே, அது எப்படி? அத்தனை ரகசியமாவா…”

“...”

முறைத்தவனிடம் “ம்ப்ச்… ஸாரி…”

அன்புநேசன் “ஒரு ரகசியமும் இல்ல. உன்னால கண்டுபுடிக்க முடிஞ்சதை மீடியா காரனால கண்டுபுடிக்க முடியாதா?”

“...”

“நம்ம நாட்டுல எத்தனை அரசியல்வாதி… அதுல அநேகம் பேருக்கு கட்டாயம் இதுபோல செகண்ட் சேனல் இருக்குன்னே வெச்சுக்க. அதைக்கூட விடு, இந்தக் காமினி விவகாரம் மாதிரி எத்தனை எத்தனை செட் அப்போ, யாருக்குத் தெரியும்?”

“!!!”

“ஒரு பரபரப்பான பின்னணியோ, சம்பவமோ இல்லாம, ஆதாயம் எதுவும் இல்லாம இதை வெளில விடறதுல மீடியாக்கு என்ன லாபம், அப்பு?”

“...”

“ஒரு சினிமா நடிகர், நடிகைன்னா அது ஒரு சுவாரஸ்யமான கிசுகிசுவா போகும். இதுவே அரசியல்வாதி கைல அதிகாரம் இருக்கும்போது, பரபரப்புக்காக எதையாவது எழுதி சொந்த செலவுலயே சூடு வெச்சுப்பாங்களா என்ன? அப்படியே யாரைப் பத்தியாவது, ஏதாவது நியூஸ் வெளில வந்தா அது யாராவது ஒரு சாதாரண ஆள் ஆர்வக்கோளாறுல செஞ்ச வேலையாத்தான் இருக்கும். இப்ப செல்ஃபோன், காமிரா, சோஷியல் மீடியா எல்லாம் எல்லார் கைலயும் இருக்கறதால இது இன்னுமே ஈஸியா, ஆதாரத்தோட வெளில வருது”

“....”

“அப்பு…”

“ம்?”

“ஸாரிடீ”

“இது எதுக்கு?”

“பொதுவா எந்த பேட்டில யாரைக் கேட்டாலும், ஃபேவரைட் நடிகர் பேரைக் கூட சொல்லுவாங்க. ஆனா யாருமே நடிகைகள் பேரை சொல்ல மாட்டாங்க. நான் ஏதோ, உண்மையா, வித்தியாசமா, மனசுல பட்டதை சொல்றதா நினைச்சு சொன்னது, இப்டி மிராண்டா வார்னிங் மாதிரி எனக்கே எதிரா வந்து நிக்குது”

“ம்ப்ச்… லீவ் இட் நேசா”

இரண்டு நாள்கள் பயணத்தில் கழிய, அபர்ணாவும் அன்புநேசனும் டெல்லி வந்து , ஒருநாள் முழுவதும் தூங்கி ஜெட்லாகை கழித்தனர். அன்புநேசன் சம்பந்தப்பட்ட அமைச்சரகத்துக்கும், தன் எம்பி அலுவலகத்திற்கும் சென்று வந்தான்.

எதிர்ப்பட்ட அநேகரது முகங்களில் ‘பயபுள்ள, காமினியோட ஜல்ஸாதான் போல!’ என்ற வரி சந்தேகமாக, கேள்வியாகத் தெரிந்தது. தமிழகத்தின் வேறொரு கட்சியைச் சேர்ந்த வில்லங்கமான மூத்த எம்பி ஒருவர் எதிர்ப்பட, மரியாதை நிமித்தம் புன்னகைத்தவனிடம் “ம்… காமினியை… எப்படிப்பா?” என கண்ணைச் சிமிட்டியவருக்கு பதில் சொல்லாது நகர்ந்து விட்டான்.

பின்னே, நடந்ததை நேரில் பார்த்ததுபோல் இதன் பின்னணியை ஏறக்குறையத் துல்லியமாக பதிவுகளுக்குக் கருத்திட்ட பொதுமக்களே கணித்திருக்க, எத்தனை பேருக்கு, என்னவென்று பதில் சொல்ல? அல்லது தன் நேர்மையை, கற்பை நிரூபிக்கத் தீக்குளிக்கத்தான் முடியுமா? அவன் மீது தவறில்லாத நிலையில், மனைவி அபர்ணாவே அவன் பக்கம் நிற்க, அதற்கான அவசியம்தான் என்ன? அப்படியே என்றாலும் அரசியல்வாதியை யார் நம்புவார்?

இருக்கவே இருக்கிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் என கடந்து போக முற்பட்டாலும் மனம் முரண்டியது.

சென்னை திரும்பி பத்து நாள்கள் வரை யாரையும் சந்திக்கவோ, பேசவோ பிடிக்காது வீட்டிலேயே அறிதுயிலில் இருந்தான். அவன் அங்கு நடந்தவை பற்றி அபர்ணாவுடன் கூடப் பேசவில்லை.

இரண்டு நாளில் அலுவலகத்திற்குப் புறப்பட்ட அபர்ணாவைத் தடுக்க “நிறைய வேலை பென்டிங் இருக்கு, ப்ளீஸ்” என அவள் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு “உன்னோட டிடெக்டிவ் டீமோட நீ எத்தையும் டிஸ்கஸ் பண்ண வேணாம், புரியுதா?” என்று எச்சரிக்கையுடனே அனுமதித்தவனை ஆழ்ந்து பார்த்துவிட்டுக் கிளம்பிச் சென்றாள்.

தந்தையிடம் சென்னை திரும்பி விட்டதாக அலைபேசியதோடு சரி. அன்புநேசனுக்கு தந்தைக்குத் தன்னை விட ஐயாரப்பனிடம் நெருக்கமும், நம்பிக்கையும் இருப்பதிலும், இந்த மருந்து நிறுவனத்தின் தேவைகளும் செயல்பாடுகளும் தெரிந்தே இதில் தன்னை அவர் சிக்க வைத்த ஆத்திரம் அடங்குவேனா என்றதிலும், பெற்றோரின் அலைபேசி அழைப்பைக் கூடத் தவிர்த்தான்.

அன்றிரவு பிரேக்கிங் நியூஸில் இந்தியத் தேர்தல் ஆணையம் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க, அபர்ணாவை அழைத்த புருஷோத்தமன், “ஃபோனை ஸ்பீக்கர்ல போடும்மா. ரெண்டு பேரும் நாளைக்கு வீட்டுக்கு வரீங்க” என்றார் கட்டளையாக.

*******************

மே மாத உச்சி வெயிலில், வாட்டும் அக்னி நக்ஷத்திரத்திற்கு ஈடான வெம்மையும் குறையாத கோபமுமாய் வந்த மகனையும், அவன் என்ன பேசுவானோ என்ற பரிதவிப்புடன் வந்த மருமகளையும் அலட்டிக் கொள்ளாது வரவேற்றார் புருஷோத்தமன்.

துளசி பேரன், பேத்தியைப் பற்றி விசாரித்தார். அருள்மொழி கடைசி செமஸ்டர் தேர்வுகள் முடிந்து காலையில்தான் வந்திருந்தான். அன்புநேசனுக்கு, தான் காமினியை சந்தித்தது குறித்து மகள் அமுதாவைப் போன்றே, மகனும் அலைபேசியில் தன்னுடன் இயல்பாகப் பேசி இருந்தாலுமே, தன் ஆறடியையும் தாண்டி உயர்ந்து நிற்கும் மகன் தன்னை நம்புவானா, உள்ளூர என்ன நினைப்பான் என்ற யோசனை ஓடியது.

ஆனால் வந்ததுமே Gen z மொழியில் “you slayed daddy” என அரை நொடி தந்தையை அணைத்துக் கொண்டவன், அபர்ணாவிடம் சென்று

“சம்பவம் பண்ணிட்டம்மா நீ. சான்ஸே இல்ல… என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கதர்றானுங்க தெரியுமா?” என்றவாறு, அவளைத் தூக்கிச் சுற்றி இருந்தான்.

“டேய், விடுடா” என்றவள் இறங்கி நின்று தடுமாற, பிடித்து நிறுத்திய அன்புநேசன், அபர்ணாவை முறைக்க…

“ஷி ஈஸ் மை மாம் டேடி, நோ பொறாமை”

அபர்ணா “அருள்…” என அதட்டினாள்.

“மா… உனக்குப் புடிச்சிருக்குதானே, அப்றம் என்னத்துக்கு இந்த சீன்? “

“...”

“பசிக்குது ஆத்தா. பூரி செஞ்சிருக்கியா, இட்லின்னா எனக்கு டிஃபனே வேணாம். வெல்ல தோசை கேட்டேனே?”

“முதல்ல போய்க் குளிச்சுட்டு வாடா”

அன்புநேசன் “நீங்களும் சாப்பிட வாங்க” என்ற அபர்ணாவிற்கு எதிர்வினையாற்றாது இருக்க…

‘அருளோட என்ன போட்டி… இம்சைடா இவரோட’ என எண்ணியதை அவளால் வெளியில் சொல்லவா முடியும்?

ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்த அருள், அம்மாவின் தோளில் கை போட்டு அணைத்தபடி கீழிறங்கிச் சென்றான்.

“எக்ஸாம் எப்டிடா போச்சு?”

“மா…, விட்டா கொஸ்டின் பேப்பர்லாம் கேப்ப போல?”

டைனிங் ஹாலில் இருந்து இருவரும் பேசிச் சிரிப்பதைக் கேட்ட அன்புநேசனுக்கு என்னதான் மகனும் மகளும் இயல்பாகப் பேசினாலும், அம்மாவிடம் இருக்கும் நெருக்கமும் உரிமையும் தன்னிடம் இல்லை என்று தோன்ற, இன்று ஏனோ உள்ளே ஏக்கமும் பொறாமையும் குமிழியிட்டது. மறுகணம் போட்டிக்கெனவே “அப்பூ” என்று கத்தியதில் வேகமாக மேலேறி வந்தாள்.

“என்ன?”

“...”

“சாப்பிடலாம், வாங்க”

கையை நீட்ட, பிடித்து எழுப்பினாள். அருள் கீழே உண்டு கொண்டிருக்க, அவனைப் போலவே தன் தோளில் கைபோட்டு அழுத்தியபடி வந்தவனை, அபர்ணா கெஞ்சலாகப் பார்த்தபடி இறங்க…

அருள் “அம்மா, இன்னொரு ஸ்வீட் தோசை”

அருள்மொழியோடு இது ஒரு பிரச்சனை. அபர்ணா வீட்டில் இருக்கும்போது காவேரி, துளசி என யார் பரிமாறினாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.

“நேசா… ப்ளீஸ்”

சட்டெனக் கையை எடுத்துவிட்டுக் “காரியம் ஆகணும்னா நேசாவா… போடீ” என்றான் முறைப்பும் சிரிப்புமாக.

“இதோ வரேன்டா” என ஓடினாள் அபர்ணா.

துளசி “அருளையும் அழைச்சிக்கிட்டு வந்திருக்கலாமே?”

அபர்ணா “வருவான் மா. நைட் டிராவல் பண்ணதுல தூங்கிட்டான்”

புருஷோத்தமன் “அன்பு, என்னடா கேட்டான் அந்த கம்பெனி சிஈஓ?”

அவரது கேள்விக்காக பாயக் காத்திருந்த அன்புநேசன்,

“வேறென்ன, என் மானம் மரியாதையத்தான்”

இரண்டு வாரங்களாக கணவன் அடக்கி வைத்த ஆக்ரோஷம் அனைத்தும் சீறிப் பாய்வதைக் கண்ட அபர்ணா, மூவரையும்
மிரட்சியாகப் பார்த்தாள்.

புருஷோத்தமன் ‘இதெல்லாம் எனக்கு ஜுஜுபி’ என்ற பாவனையுடன்,

“நீ இப்படி வீட்டுக்குள்ளயே கிடந்து மறுகி, டென்ஷனாகிக் கத்துற அளவுக்கு இப்ப என்னடா ஆகிப்போச்சு?”

அபர்ணா அயர்ந்து பார்க்க, அன்புநேசன் பல்லைக் கடித்தான்.

“இன்னும் என்னப்பா ஆகணும்? அங்க என்ன நடக்கும்னு தெரிஞ்சும் என்னை மாட்டி வெச்சுட்டுக் கவலையில்லாம கேள்வி கேக்கறீங்க… சோஷியல் மீடியா முழுக்க ரெண்டு, மூணு வாரமா நான் என்னமோ காஸனோவா மாதிரி, பொம்பளப் பொறுக்கி மாதிரி என்னைப் போட்டுப் பொளக்கறாங்க… தா**** … அம்மாவும், அப்புவும் இருக்காங்களேன்னு பார்க்கறேன்”

“டேய்… விட்றா…. அதான் எம் மருமக வந்து அத்தனை நேக்கா (knack) சாமர்த்தியமா அவன் போட்ட ப்ளானை அடிச்சு நொறுக்கிட்டாளே…”

“இருந்தாலும்…”

புருஷோத்தமன் “இதைக் கடந்து வரப்போறியா, இல்ல மதுரைய எரிக்கப் போறியா?”

“அப்பாஆஆ….!”

“நடந்ததைச் சொல்லாம சும்மா சும்மா கத்தாதடா. எலக்ஷன் தேதி வந்தாச்சு, தெரியும்தானே?”

“ம்…”

“துளசி, அன்புக்கு குடிக்க ஏதானும் கொண்டு வரச்சொல்லு”

துளசி கிச்சன் இன்டர்காமில் சொல்ல, சஞ்சீவ் தன்னால் ஆன முயற்சியாக அன்புநேசனின் சூட்டைத் தணிக்க நுங்குத் துண்டுகள் மிதக்கும் இளநீருடன் வந்தான்.

“எனக்கு வேணாம்”

“மொதல்ல குடி. அப்புறம் சண்டை போடு. எடுத்து அவன் கைல குடும்மா அபர்ணா”

“...”

“இப்ப சொல்லு”

“என்னத்தை சொல்றது… நம்ம ஊரை அடிச்சு உலைல போட நம்ம கிட்டயே அனுமதி கேக்கறான்”

“...”

“ரெண்டு விஷயம் கேட்டான். ஆனா அதுக்குள்ள இருநூறு விஷயம் இருக்கு. அவன் தயாரிக்கற GLP 1 வகை மருந்துக்கு இந்தியால நேரடி காப்புரிமை வேணுமாம்.

ரெண்டாவது, அவங்களோட அந்த GLP மருந்துகளோட ஆராய்ச்சிக்கு உதவியா நம்ம நாட்டுல இருக்கற மருத்துவ நிறுவனங்களையும், மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக் கழகங்களையும் சுலபமா அணுகற மாதிரி வசதி செஞ்சு தரணுமாம்”

துளசி “அடப்பாவி!”

புருஷோத்தமன் “புரியற மாதிரி சொல்லுடா… முதல்ல GLP னா என்ன?”

அன்புநேசன் “என்னைக் கேட்டா… நான் என்ன டாக்டரா?”

துளசி “நான் சொல்றேன். GLP னா Glucagon-Like Peptide. இதுதான் உணவுக்குப் பிறகு நம்ம உடம்புல இயற்கையா சுரக்கற ஒரு ஹார்மோன். இதுதான் வயிறு ஃபுல் ஆயிடுச்சு. சாப்பிட்டது போதும்னு மூளைக்கு தகவல் கொடுத்து, ரத்தத்த்ல சர்க்கரையைக் கட்டுப் படுத்துது”

“...”

“இந்த GLP 1 மருந்தை எடுத்துக்கிட்டா பசியை மந்தமாக்கி, ஜீரண சக்தியோட நேரத்தைக் கூட்டி, ரத்தத்துல சர்க்கரையைக் குறைக்குது. அதனால உடல் எடை குறையும்”

“...”

“பெண்களோட PMOS (PCOD) அதாவது கருப்பைல வர சினை நீர்க்கட்டிகளுக்கும் இன்சுலின் குறைபாடுதான் காரணம்னு கண்டு புடிச்சு இருக்காங்க. அதுக்கும் இது உதவும்”

“...”

“ஒரு காலத்துல குண்டா இருக்கறவங்க, புஷ்டியா, பலமா இருப்பாங்கன்னு நினைச்சது போய், சமீபமா பல தீவிர நோய்களுக்கான மூல காரணம் உடல் எடை மற்றும் உடற்பருமன்தான்னு சொல்றாங்க. இந்த GLP 1 மருந்துகளை அதற்கான தீர்வா பார்க்கறாங்க”

அபர்ணா “அம்மா, அது பாதுகாப்பான மருந்தா, அதை யாராவது நிரூபிச்சு இருக்காங்களா?”

“சேஃப்னுதான் சொல்றாங்க”

புருஷோத்தமன் “மருந்தை விடு, அந்த கம்பெனிகாரனுக்கு என்ன வேணுமாம்?”

அபர்ணா “இந்தியாவோட காப்புரிமை கொள்கைகளும் சட்டங்களும் கடுமையானவை. குறிப்பா மருந்துகளுக்கான காப்புரிமை (Patent) வாங்கறது நம்ம நாட்டுல அத்தனை சுலபம் இல்லை”

“...”

IPR (Intellectual Property Rights) அதாவது இந்திய அறிவுசார் சொத்துரிமை சட்டப்படி, ஒரு பொருளோட தயாரிப்பு முறைக்குதான் காப்புரிமையே தவிர, அந்தப் பொருளுக்கு இல்லை. Process, not the product”

அன்புநேசன் காட்டமாக“ஆனா, அந்த சிஇஓ, அவங்க கம்பெனி மருந்துக்கு அப்படியே காப்புரிமை வழங்கி, அவங்க ஆராய்ச்சிக்கு நம்ம நாட்டு மக்களை சோதனை எலியாக்க சட்டம் கொண்டு வரச் சொல்றான். இதுக்கு நீங்க வேற சப்போர்ட்டு” என்றான் தந்தையிடம்.

“ஆத்திரப்படாத பொறுமையா யோசி அன்பு. அவனுக்குத் தேவையானதை அவன் கேட்டான். அவன் கேட்டதை செய்யறது உன் கைலயும் இல்லை. என் கைலயும் இல்லை. அது அவனுக்கும் தெரியும்”

“அதைத்தான் நானும் கேக்கறேன். நானோ எதிர்க்கட்சில இருக்கேன். என்னை ஏன்…?”

“ ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இதெல்லாமே பொது மக்களுக்குதான்டா. நமக்கில்ல. அரசியல் ஒரு மாயை. உள்ள எல்லாமும், எல்லாரும் ஒண்ணுதான். வெறும் தோற்ற மயக்கங்கள். நீ எதிர்க் கட்சிதான். ஆனா பத்து நாளா மீடியா முழுகாக நீதான். இதோ தேர்தல் வரப்போகுது. நாளைக்கே நீ மினிஸ்டரா கூட ஆகலாம்”

“...”

“அன்பு, அவன் ஒரு சர்வதேச வியாபாரி. கார்ப்பொரேட் கம்பெனிக் காரன் நம்ம ஊருக்கு வரதே காசு சம்பாதிக்கதானே?”

அபர்ணா “காசுக்காக என்ன வேணா செய்யலாமாப்பா? தனி மனுஷனோ, கம்பெனியோ ஒரு அடிப்படை ஒழுக்கம், நெறி, எதிக்ஸ் (ethics) வேண்டாமா?”

புருஷோத்தமன் “அப்படிப் பார்த்தா வியாபாரம், அரசியல் எதுவுமே செய்ய முடியாது. ஏன், நீ பாட்டு பாடறியே, பாடற பாட்டு பூரா சாமிப் பாட்டுதான். ஆனா, அங்க இல்லாத பாலிடிக்ஸா?”

“...”

“அபர்ணா, இந்தக் காலக்கட்டத்துல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா மாதிரி வளரும் நாடுகளுக்கு வியாபாரம் பண்ண வர்றதைத் தடுக்க முடியாது. நீயே யோசி, இந்தியால இப்ப எத்தனை ஐடி கம்பெனி, எத்தனை கார் கம்பெனி, எத்தனை செல்ஃபோன் கம்பெனி இருக்கு… அதனால எத்தனை பேருக்கு வேலை கிடைச்சு, பொருளாதாரம் உயர்ந்திருக்கு?”

“...”

“நம்ம நாட்ல, நாமே போட்ட திட்டமா இருந்தாக் கூட நூறு சதவீதம் சரியா இருக்கும்னு சொல்ல முடியாது. அதே போலதான் இதுவும். அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைன்னு போக வேண்டியதுதான்”

“...”

“அன்பு, நீ அந்த நடிகை விவகாரத்தை நினைச்சு விசனப்படத் தேவையில்ல. அது வெடிக்கற முன்னாடி உம்பொண்டாட்டி அதை அணைச்சுட்டா. அவன் கேட்டான். அதோட அது முடிஞ்சு போச்சு. இனி இந்த விஷயத்துல நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அடுத்த பரபரப்பான விஷயம் வந்ததுமே நம்ம ஜனங்க உன்னை மறந்துடுவாங்க”

“என் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக அவன் கிட்ட கை நீட்டி காசு வாங்கி இருக்கேனேப்பா… என் passion பா என் அகாடமி”

“யார்றா இவன்... அந்தக் கம்பெனி மட்டும்தான் உனக்கு ஸ்பான்ஸர் பண்றானா?”

“...”

“சொல்லப்போனா, இப்ப உன் அகாடமியை உலகம் முழுக்க தெரியும். அவன் ஸ்பான்ஸர் செஞ்ச எட்டுகோடி ரூபாய ரெண்டே நாள் விளம்பரம் பண்ணினதுலயே சம்பாதிச்சிருப்பான். உன் அகாடமி அத்தெலெட்ஸ் காமன்வெல்த் விளையாட்டுக்கு நிச்சயமா செலக்ட் ஆகிப் போவாங்க”

“...”

“ காமினி விவகாரத்துல உன் மனைவி உனக்கு பக்கபலமா நிக்கறதும், ஒரு அழகான நடிகையை போறபோக்குல நீ உதறித் தள்ளினதும் பெண்கள் மத்தில உன் இமேஜை எத்தனை உயர்த்தி இருக்குன்னு உனக்குப் புரியலைடா ”

புருஷோத்தமன் காமினி பேரை எடுத்ததில் அன்புநேசன் முகம் சுளிக்க, அபர்ணா தலையைக் குனிந்து கொண்டாள்.

துளசி “அந்தக் கம்பெனிக் காரன் அன்புவைக் கூப்பிட்டுக் கேட்டா?”

புருஷோத்தமன் “என்ன கேட்பான்? என்னையும்தான் கேட்டான். எனக்கு அவன் குடுத்த வேலையை என் அளவுல நான் செஞ்சேன். அவ்ளோதான் என்னால முடியும்”

“...”

“அவன் கேக்கற மாதிரி சட்டத்தை, ரூலை மாத்தறது நம்ம வேலை இல்லை. அதுக்குதான் தேசிய மருத்துவ ஆணையம் இருக்கு”

அபர்ணா “அப்ப ஏன் அவன் உங்களைக் கேட்டான்?”

சிரித்த புருஷோத்தமன் “ஸ்மார்ட்டான கேள்வி. கோவிலுக்குப் போன உடனே சாமியைப் பார்க்க முடியுமாம்மா? நடுவுல பிள்ளையார், நந்திகேஸ்வரர், சண்டீஸ்வரர்னு எத்தனை பேர் இருக்காங்க?”

“...”

“இதுதான் மா அரசியல். ஆட்சி மாறும், அரசாங்கம் மாறும், ஆனா, அரசியல் மாறாது”

அபர்ணாவிற்குப் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

தான் ஏமாற்றப்பட்ட உணர்வும் கோபமும் குழப்பமும் குறையாத அன்புநேசன் “சரி, நாங்க கிளம்பறோம்” என எழுந்து நின்றான்.

புருஷோத்தமன் “அன்பு, எதையானும் யோசிச்சு குழப்பிக்காம, அபர்ணாவையும் பசங்களையும் கூட்டிட்டு எங்கேயாவது போ. தெளிவாயிட்டு வா. எலக்ஷன் வருது. தொகுதிக்குப் போகணும், வேலை கிடக்கு”

மௌனமாகத் தலையசைத்தான். பின் “நிஜமாவே ஐயாரப்பனுக்கு ஸீட் வாங்கப் போறீங்களாப்பா?”

“நீ வேற. அவன் செய்யுற வேலைக்கு அவன் ஊர்லயே அவனுக்கு ஒத்த ஓட்டு கூட விழாது. சும்மா காது குளிர சொல்றதுதான். என் பேரைச் சொல்லி அவன் பண்றதே அவனுக்கு அதிகம்”

அபர்ணா மாமனாரை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்க்க, “என்னைக் கேட்டா, இன்னி தேதிக்கு கார்ப்பொரேட் கம்பெனியை, விளம்பர உலகத்தை, அரசியல்ல அடுத்து என்ன நடக்கும்கறதை சரியா கணிக்கற எம் மருமகளை எலக்ஷன்ல நிக்க வெச்சா Thumping majority’ ல ஜெயிச்சுடுவா. என்னம்மா, நிக்கறியா?”

அபர்ணாவின் திகைப்பு நீங்கும் முன்னரே “ஏன், ஊர்ல இருக்கறவனெல்லாம் அவ பேரைச் சொல்லவா, நோ சான்ஸ். ஏய், வாடீ போகலாம்” என்ற அன்புநேசன் அவளைக் கையோடு வெளியே இழுத்து வந்துவிட்டான்.

********************

அன்புநேசனுக்கு தந்தை செய்த சமாதானங்களைத் தாண்டி, சமன்பட நேரம் பிடித்தது. அபர்ணாவும் அருள்மொழியும் இழைவதைப் பார்க்கப் பொறுக்காது மகளை வரச்சொல்லி அடுத்த வாரத்தில் டிக்கெட் வாங்கி அனுப்பினான்.

தந்தை தன்னை சிக்க வைத்துவிட்டார் என்ற எண்ணம், தவறு செய்பவர்கள் ஒருபுறம் சுகமாக இருக்க, காமினி விவகாரம் வைரலானது, அபர்ணாவை தந்தை பாராட்டியது, flash cardல் கண்ட காட்சிகள், தந்தையிடம் அவர் தன் தாய்க்குச் செய்யும் துரோகத்தைத் தட்டிக் கேட்க முடியாதது என அன்புநேசனின் மனதில் பலதும் ஓடியது.

முன்பொரு நாள் அபர்ணா சொன்னதுபோல், தான் ஹூமாயுன்தானோ என்று தோன்ற, கைகளாள் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

அருள்மொழி நண்பர்களுடன் கூர்க் சென்றிருக்க, வீட்டுக்குள் உலவியவன், தன் கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அபர்ணாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

கணினித் திரையில் வரவிருக்கும் தேர்தலில் அன்புநேசனுக்கான போஸ்டர் தயாராகி ஒளிர்ந்தது.

“அப்பு”

“டூ மினிட்ஸ்”

“...”

“சொல்லுங்க”

“அப்பு, நீ எப்டி, ஏன் நியூஸிலாண்ட் வந்த… ”

“இதே கேள்வியை எத்தனை தரம் கேட்பீங்க? எனக்கு என்னவோ உங்க பக்கத்துல இருக்கணும்னு தோணித்து. வைஸாக் கச்சேரியை முடிச்ச கையோட, அங்கிருந்தே ஆக்லாந்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். போன வருஷம் க்ரைஸ்ட்சர்ச்ல கச்சேரி பண்ணினதால விஸா ப்ராப்ளம் இல்லை”

“காமினி பத்தி உன் டீம் மூலமா ஏதாவது…”

“நத்திங். அந்த ஃப்ளாஷ் கார்டுக்கு அப்புறம் நீங்களேதான் எங்கிட்ட எல்லாம் சொல்றேளே”

அன்புநேசன் இமைக்காது அவளையே ஆழ்ந்து பார்த்தான். பாட்டும் படிப்புமாக அடக்கமான, அமைதியான பெண்ணாக இருந்த அபர்ணா காணாமல் போய், தன் இயல்பு மாறாது அதே சமயம், ஒரு தொழில் முனைவராக, அரசியல் குடும்பத்தின் மருமகளாக, அரசியல்வாதியின் மனைவியாக, அரசியலின் நெளிவுசுளிவுகளை, ஓட்டத்தைப் புரிந்தவளாகக் கனிந்து நின்ற அபர்ணா, அன்று லண்டன் கோவிலில் முதல் முறை பார்த்தது போலவே இன்றும் வசீகரித்தாள்.

அவன் பார்வை கூச்சத்தைத் தர, “என்…ன?”

“அப்பு, உன்னைத் துரத்தி, ஃபோர்ஸ் பண்ணி, கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட…”

அபர்ணா “ம்ப்ச்… இப்ப ஏன் அதெல்லாம்?”

“ பரவாயில்லை, சொல்லு”

“எல்லாப் பெண்களுமே, எந்த மாதிரிக் கல்யாணமா இருந்தாலும், தன் குழந்தைகள், குடும்பம், தனக்குப் புடிச்சா மாதிரி வீடு, சூழல்னு அமைச்சுக்கதான் முயற்சி செய்வா. அதை சண்டை போட்டும் செய்யலாம். சமாதானமா, அமைதியாவும் செய்யலாம். எனக்கு சண்டை போடப் புடிக்காது. அதோட…”

“அதோட?”

“உங்களுக்கு நிஜமாவே என்னைப் புடிச்சிருக்குன்னு புரிஞ்சுது”

“அப்டியா?”

“...”

“ஒருவேளை அன்னிக்கு நீ வரதுக்கு முன்னாலயே காமினியோட ஹனி ட்ராப்ல நான் விழுந்திருந்தேன்னா?”

நீண்ட வருடங்களுக்குப் பின் கலீரெனச் சிரித்த அபர்ணா “வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பே இல்ல. உண்மைல அன்னிக்கு நான் காப்பாத்தினது காமினியைத்தான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா, நீங்க அவளை பட்டுனு ஏதானும் சொல்லி, அது வைரலாகி இருக்கும்”

“எம்மேல அவ்வளவு நம்பிக்கையா அப்பு?”

“ம்…”

“எங்கப்பா, ஐயாரப்பனை எல்லாம் பார்த்த அப்புறமுமா?”

“ம்… கொஞ்சம் முரட்டுப் பீஸ்தான். ஆனாலும் ஓகே”

அபர்ணாவைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டவன் “நேசான்னு சொல்லுடீ”

“சொல்ல வைங்கோ” என்று ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினாள் அபர்ணா.
 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 13 - FINALE
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saroja

New member
Feb 22, 2026
18
9
3
Coimbatore
பரவாயில்லை நேசன்
சக்கடைக்குள்ள இருந்தும்
அபர்ணா மாதிரி
பொண்டாட்டி கிடைச்சதால
மணம் வீசுறான்
அன்பு நேசன் காதல்
உண்மையானதால அப்பு
ஒரு பெண்ணாக ஜெயிக்கிறா
அருமை
 
  • Love
Reactions: VedhaVishal