• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 6

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
30
92
53
Chennai
தோற்ற மயக்கங்கள் 6


புருஷோத்தமனின் டெல்லி வீட்டின் மாடியில் இருந்த அறை ஒன்றில் அமுதா தன் மொபைல் மற்றும் அக்கவுன்டன்ஸி புத்தகங்களுடன் ரஜாய்க்குள் ஐக்கியமாகி இருக்க, கீழே தோட்டத்தில் இருந்து ஆங்கிலமும் ஹிந்தியும் சளசளக்கும் சப்தம் கேட்டது.

வரவிருக்கும் தேர்தலில் ஆட்சியைப் பிடித்ததும் அமைச்சராகும் நிலையில் இருந்த கட்சியின் அதி முக்கியமான தலைவர்கள், நிர்வாகிகள், கட்சித் தலைமை என அறுபது பேர் வரை இருக்கும். சிலர் துணையுடனுடம், சிலர் தனியாகவும் வந்திருந்தனர்.

அரசியல்வாதிகள் பொதுக் கூட்டங்களில் மைக்குகளில் முழங்குவரே தவிர, இதுபோன்ற சந்திப்புகளில் எதிராளியை எடைபோடுவதும் வார்த்தைகளை எண்ணிப் பேசுவதுமாகத்தான் இருப்பர்.

தங்கள் துணையின் தகிடுதத்தங்களும் மனக் கணக்குகளும் தெரிந்தும், டெல்லியின் சீதோஷ்ணம், ஸ்மாக் (Smog) அதிகாலை யோகா, சுரைக்காய் ஜூஸின் பலன் என யாருக்கும் உப்பு சப்பில்லாத விஷயத்தை மசாலா சேர்த்து பேசத் தெரிந்த, தேர்ந்த கும்பல் ஒன்று உண்டு.

இதற்கு ஒத்துவராத சாதாரண இயல்புடைய மனைவி/ கணவர் எனில் கையில் ஜூஸ் கிளாஸோடு ஓரமாக அமர வேண்டியதுதான்.

மரங்கள் அடர்ந்த அந்த பகுதியல் ஃபிப்ரவரி மாதத்து இரவு நேரக் குளிர் ஒடுக்கியது. நடுவில் இரண்டு, மூன்று இடங்களில் குளிர் காய்வதற்கென தீ மூட்டி இருந்தனர்.

தேசம் முழுவதிலும் இருந்து வந்த வெவ்வேறு மொழிகள், கலாச்சாரம், உணவு வகைகள், குணாதிசயங்கள், பின்னணியைக் கொண்ட மெத்தப் படித்தவர்களைக் கொண்ட தேசியக்கட்சியில் அரசியல்வாதியாக இருப்பதற்கு மாநில அரசியலை விட பல மடங்கு சூட்சுமம் தேவை.

சமயச்சார்பு இல்லாத ஆன்மீகவாதியாக, ஜாதிகள் பேசாத, ஆனால், ஓட்டு வங்கி உள்ளவராக, இந்திய நாட்டின் குழப்பங்களை உலகத் தொலைக்காட்சிகளில் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் பேட்டி அளிக்கக் கூடியவராக, பல பாஷைகளில் கெட்டவார்த்தைகள் தெரிந்தாலும் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற கொள்கையுடன், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்பதால், யார் எதை எப்படிப் போட்டுக் கொடுப்பார்களோ என்ற எச்சரிக்கையுடன், மாநிலக் கட்சிகளின் இம்சையைப் பொறுத்துக்கொண்டு நட்பு வேடம் போடுவதை விட கம்பி மேல் நடந்துவிடலாம். குறளி வித்தைதான்.

மூத்த அரசியல்வாதிகள் இளையவர்களுக்கு வழிவிட்டு விலக வேண்டும் என்பது தலைமையின் எதிர்பார்ப்பாக இருந்தது.

எனவே, தங்களுக்கான வாய்ப்பைத் தேடும் அடுத்த கட்டத் தலைவர்களில், குறிப்பாக வாரிசுகளில் அன்பு நேசன் முக்கியமானவன்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தலாக மறைமுகமாகக் களமிறங்கிய ஐடி விங் இந்தமுறை படித்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் நேரடியாகவே பிரச்சாரத்தைத் தயார் செய்தனர்.

இதற்கென சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனி டிமாண்ட் இருந்தது. ஆனாலும், அது பெரும்பாலும் தேசிய அளவில் கட்சியின் பொது வெற்றிக்கும், பிரதம மந்திரி பதவியைக் குறி வைத்துமே தயாரிக்கப்பட்டிருந்தது.

வெற்றிக்கான சாத்தியங்களை ஆலோசித்த கட்சித் தலைமை “தேர்தல் வியூகத்தை ஒவ்வொரு மாநில அளவிலும் நீங்கள்தான் அமைக்க வேண்டும். சதா சர்வ காலமும் சமூக வளைதளங்களில் உலவும் இளைஞர்கள், நடுத்தர வயதினரைக் கவரும் வண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். கண்ணில் படப் பட கருத்தில் பதியும். இளைய சமுதாயத்துடன் இணையத்தில் இணைந்திருங்கள். ஆட்சி நமதே” என்றார்.

நேசப் புருஷோத்தமன் “நிச்சயமா, இந்தமுறை அப்பாக்கும் எனக்கும் தேர்தல் பிரச்சாரத்தை முழுக்க, முழுக்க சோஷியல் மீடியால மேனேஜ் பண்ணப் போறது என் மனைவிதான்” எனவும், இத்தனை வருட அனுபவத்தில் அன்புநேசனின் அதிரடிகளுக்குப் பழகி இருந்த அபர்ணா, தன்னை நோக்கிப் பாய்ந்த பார்வைகளையும் பாராட்டுகளையும் புன்னகையுடன் கடந்தாள்.

இது போலக் கோர்த்து விடுவதும், முடிவுகளைத் திணிப்பதும் முதல் முறையா என்ன? அவளது சிறிய ஸ்டார்ட் அப்பைத் தொடங்க அவனுடன் போராடியதென்ன, இப்போது ‘எங்களது ஐடி விங் ஹெட்’ என்று பெருமையாய் கை காட்டுவதென்ன?

காதலோ கட்டாயமோ, எல்லாத் திருமணங்களையும் போன்றே பரவசமான, ஜரிகை வேய்ந்த, தித்திப்பான சில தருணங்கள் அன்பு நேசன், அபர்ணாவின் திருமணத்திலும் இருந்தது, இருக்கிறது.

திட்டமிட்டுப் பின்தொடர்ந்து, இக்கட்டான சூழலில், மனம் ஒப்பாது நடந்த திருமணம்தான். ஆனால், எந்தக் கணத்தில் என்று தெரியாது, அபர்ணா முற்று முழுதாக அன்புநேசனின் மனைவியாய் மாறிப்போனாள்.

கேப் டவுனில் இருந்த இருபது நாட்களும் தேன்நிலவு என்ற பதத்திற்குப் பெரிய எழுத்தில் பொருள் சொன்னது.

‘என் தலகாணி, பெட்ஷீட்டை எடுக்காதன்னு எத்தனை தரம் சொல்றது, மாறிப் போனா எனக்கு தூக்கம் வராது” என்று ஹேமாவோடு போட்ட சண்டை எல்லாம் அர்த்தமின்றித் தெரிந்தது.

அவள் மனதிலிருந்த அவளுக்கானவனின் பிம்பத்தில் அன்புநேசன் பொருந்திப்போனதாய் தோன்றியது.

அவள் சிறிது அசைந்தாலும் “எங்கடா போற?” என்று இறுக்கிய நேசனின் நெஞ்சும் தோளும் கதகதப்பும் இல்லாது தூங்கியதே மறந்து போனது.

மழை குறைந்து தூறும் பொழுதுகளில் பூமிப்பந்தின் ஏதோ ஒரு கோடியில், கடற்கரை மணலில் “அப்பு, எனக்காகப் ‘அன்பே சுகமா, உன் கோபங்கள் சுகமா ‘வை பாடுடீ”

அனுபல்லவியைப் பாடியதுமே “இதுக்கு மேல சோகமா இருக்கும், வேணாம்” என உணர்ச்சிவசப்பட்டவனை சற்று வியப்புடன் பார்த்தாள்.

“உன்னைப் பார்த்ததுமே, இப்படிதான் உன்னை லவ் பண்ணனும், உன்னைதான் கல்யாணம் பண்ணனும்னு நெனைச்சேன்”

‘நான் நெனைக்க வேண்டாமா?’

அவள் பார்வை புரிந்தவன் “அதுசரி, உன்கிட்ட கேட்டா சரின்னா சொல்லப் போற. அரசியல், பதவி, பணம், ஜாதின்னு பயந்து ஓடி இருப்ப. உன்னை உங்க மாமா பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கப் பார்த்தாங்கதானே?”

“...”

“ஏய், அப்பு, உனக்கும் அதான் இஷ்டமா, இப்பவும்…”

ஒற்றை விரலை அன்புநேசனின் உதடுகளில் வைத்து “உங்களோடவேதானே இருக்கேன், என்னைப் பார்த்தா அப்படியா தோண்றது?”

“ம்…ப்ச், ஸாரி”

“சரி”

அவனது பள்ளி கல்லூரி நாட்கள், தில்லைஸ்தானம் பண்ணை, அம்மா, அப்பா இருவரும் பிஸியாக இருக்க, அக்காவும் தம்பியும் ஆளுக்கு ஒரு பக்கம் தனிமையிலேயே கழித்தது, பாதுகாப்பு வளையத்திலிருந்து தப்பி வீட்டில் சொல்லாமல் நண்பர்களுடன் கேரளா டூர் போய் அப்பாவிடம் அறை வாங்கியது, பள்ளியில் இவனது ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸியைத் திருடிச் சென்ற பெண், கேம்பிரிட்ஜ் சென்று சமையல் கற்றுக்கொண்டது, சிறந்த தடகள வீரர்களை உருவாக்குவது, அரசியலில் கால் பதிக்க விரும்புவது என இன்னும் ஏராளமாகப் பகிர்ந்து கொண்டான்.

மீளமுடியாத சூழலில் சிக்க வைத்துத் தாலி கட்டியவனைப் போலன்றி, தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, அக்கா பொன்னியின் கணவன் ஐயாரப்பனின் சின்னத்தனத்தைப் பற்றி, என சின்னச் சின்ன இயல்பான விஷயங்களைக் கூடப் பகிர்ந்துகொண்டதில் அபர்ணாவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

அன்பு நேசனின் இயல்பான பேச்சும், உணவில், இருப்பில், பயணத்தில், அவளது சௌகர்யத்தை யோசித்ததும், உனக்குத் தெரியாத ரகசியங்கள் ஏதும் என்னிடம் இல்லை என்பதான பகிர்வும், உறவில் காட்டிய உரிமையும் மென்மையும், அவளது அழகைக் கணவன் ஆராதித்ததும் அபர்ணாவை ஈர்க்காவிட்டால்தான் அதிசயம்.

இளமையின் வேகமும் இயற்கையின் தேவையும் உந்தியதில் இருவரும் நெருங்க, அவனைப் பற்றிப் பகிர்ந்த கணவன் தன்னிடம் எதுவுமே கேட்கவில்லை என்பதை உணரவே அவளுக்கு நாள் பிடித்தது.

அபர்ணாவின் பிறந்த வீட்டிற்கும் அவளது புகுந்த வீட்டிற்குமான வித்தியாசம் வானுக்கும் மண்ணுக்கும், மலைக்கும் மடுவுக்கும் இடையில் இருந்த தூரத்தை விட அதிகம் இருந்தது.

பாட்டியின் பென்ஷன், பெற்றோரின் சம்பளம், அபர்ணாவின் கச்சேரிகளின் மூலம் வரும் பணம் என
வருமானத்திற்கும் வசதிக்கும் குறைவில்லாத, தாளம் தப்பாத சீரான கால அட்டவணையைக் கொண்ட வாழ்க்கை. வளமையால் சிலபல வசதிகளைச் செய்து கொண்டாலுமே செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்கும் நடுத்தரக் குடும்பம்.

அபர்ணாவின் கச்சேரி வாய்ப்புகளைக் கூட அவளது இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறுதான் ஏற்கச்செய்தனர். தான் ஒரு பிரபலம் என்னும் சிந்தனை அவளுக்கு வந்ததும் இல்லை, அதை அவள் அதிகம் பொருட்படுத்தியதும் இல்லை.

பெரும்பாலான மத்யமர்களின் குடும்பங்களைப் போன்றதுதான் அபர்ணாவுடையதும். அதிகக் கண்டிப்பு என்றில்லா விட்டாலும், கட்டுப்பாடு உண்டு அன்பும் அக்கறையும் சொல்லில் அன்றிச் செயலில் இருந்தது. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஐவரும் ஒன்றாகவே இருந்தனர். அபர்ணா வீட்டின் அவர்களை மட்டுமே முன்னிட்ட பணிகளும் பரபரப்பும் அமைதியில் தோய்ந்திருக்கும்.

இதற்கு முற்றிலும் மாறாக, பரம்பரை பணக்காரர், பாரம்பரியம் மிக்க ஒரு தேசியக் கட்சியின் முக்கியமான தலைவர், மத்திய தொழில்துறை அமைச்சர் புருஷோத்தமனின் வீடு, எந்நேரமும் பரபரப்பாக இருந்தது. இதில் அவர் டெல்லியில் இருக்கும் நாள்களே அதிகம் என்றாலுமே, அவரது தொகுதியில் இருந்தும், அவர் மூலமாக காரியம் சாதிக்க நினைப்பவர்களும் அவரது வீட்டின் முன் பகுதியில் இருந்த சிறிய அலுவலகக் கட்டிடத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.

மகப்பேறு மருத்துவரான மாமியார் துளசி ஒரு மிகப்பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனையில் மருத்துவராகவும், துணைத் தலைவராகவும் இருப்பதால், அவரும் பிஸிதான்.

அதுவும் புருஷோத்தமன் சென்னையில் இருந்தால், கேட்கவே வேண்டாம். அவருடைய நிகழ்ச்சி நிரலுக்கும் ஈடுகொடுக்க வேண்டும்.

பொன்னியும் ஐயாரப்பனும் சற்றுத் தள்ளி தனி வீட்டில் இருந்தாலும், பாதி நேரம் இங்குதான் இருந்தனர். அதிலும் பொன்னியை விட, அமைச்சரை சந்திக்க வருபவர்களை நெறி படுத்துகிறேன் என்ற சாக்கில் இங்கே வந்து நாட்டாமை செய்தான் ஐயாரப்பன்.
 

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Akila