• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 8

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
432
9
43
india

தோற்ற மயக்கங்கள் 8


ITC மௌர்யாவின் Nutmeg என்ற கலைப்பொருள் விற்பனையகத்தின் கண்ணாடிச் சுவர்களூடே தெரிந்தவற்றை ஆவலுடன் பார்த்தபடி, மெதுவே நடந்த அமுதா அம்மாவிடம் எதையோ கேட்க எண்ணித் திரும்ப, வாயில் கதவை நோக்கி வேக நடையில் சென்ற பெற்றோரிடம் ஓடினாள்.

“மாம்… அந்த சாவனீர் (souvenir) ஷாப்ல…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், வேகமா வா அம்மு” என அபர்ணா மறுக்க, ஆதரவு தேடித் தந்தையைப் பார்த்த அம்மு, தீவிர யோசனையில் இறுகி இருந்தவனைக் கண்டு அமைதியாகி உடன் சென்றாள்.

“இந்தாளை என்ன செய்யறேன்னு பாரு… அன்னைக்கே சொன்னேன், அப்பா பொறந்த நாளைக்கு இந்தப் பொம்பளையை இவுருதான் கூப்பிட்டு இருக்கணும்னு. எங்கப்பா கேட்டாதானே, மாப்பிள்ளை பெரிய மஹான்னு நினைப்பு அவருக்க…”

கோபத்தில் முகம் சிவக்க, தாழ்ந்த குரலில் சபித்தபடி, அல்பாவும் ஐயாரப்பனும் பேசிக்கொண்டிருந்த மதுசாலையை நோக்கித் திரும்பிய அன்புநேசனின் இடது கையை அழுந்தப் பற்றித் தன்னோடு கோர்த்துக்கொண்ட அபர்ணா, வழியில் அடையாளம் கண்டு வணங்கியவர்கள், யார் எனத் தெரிந்தும் பரிச்சயம் இல்லாததால் இவர்கள் இருவரும் கை கோர்த்தபடி செல்வதைக் கண்டு ஒரு சின்ன சிரிப்புடன் கடந்தவர்கள், பிறர் அறியாது தங்களுக்குள் ஏழு நட்சத்திரத்தில் கிசுகிசுத்த ஹோட்டல் சிப்பந்திகள் என எல்லோருக்கும் இலவசப் புன்னகையை வாரி வழங்கியபடி, கிட்டத்தட்ட அன்புநேசனைத் தள்ளிக் கொண்டு வாயிலை நோக்கி நகர்ந்தாள்.

‘இருபது வருடங்களாகியும் ரொமான்ஸ் குறையாத காதல் ஜோடி’ என எவனாவது ஃபோட்டோ எடுத்துப் போட்டு, அது பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகலாம். ஆகட்டுமே, நாடறிந்த காதலர்கள் இல்லையா நாங்க?’

“விட்றீ என்னை, இன்னிக்கு அந்தாளை…” என மீண்டும் தொடங்கியவனை,

“நேசா, அவங்க நம்மை பார்க்கறதுக்கு முன்னால வெளில போயிடலாம். இங்க வெச்சு எந்தப் பிரச்சனையும் வேணாம். எலெக்ஷன் வர சமயம் வேற, பேசாம வாங்க” என்றதில் சிறிது அடங்கினான்.

விமானநிலையம் நோக்கிச் செல்கையில் எதையோ சொல்ல வந்தவனை, வண்டியை ஓட்டிய குமாரைக் கண் காட்டிய அபர்ணா ‘பேசுவோம். வெயிட் பண்ணலாம். தானே வெளில வரும்’ என மொபைலில் எழுதிக்காட்டி அழித்தாள்.

பொதுவெளியில் இந்த அளவிற்குத் தன் பேச்சைக் கேட்டதே, அன்புநேசன் அடைந்த அதிர்ச்சியின் அளவைச் சொன்னது.

இன்னும் தனக்குத் தெரிந்தவற்றைக் கணவனிடம் சொன்னால், எப்படி எடுத்துக்கொள்வான் என்று புரியாததால், அபர்ணா யோசனையில் ஆழ்ந்தாள்.

அன்புநேசன் “இறங்குடீ” எனப் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்டதில் கவனம் குலைய, கார் விமான நிலையத்தின் விஐபி வாயிலுக்கு வந்து நிற்பதைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கே போக்குவரத்து குறைவு என்பதால், அமைதியாக இருந்தது.

வெப் செக் இன் செய்திருந்ததோடு, விஐபி வழி என்பதால், செக்யூரிடிக்கு போவதற்கு இன்னும் நேரம்
இருந்ததில், அபர்ணாவே “பார்க் பண்ணிக்கோங்க குமார். அவர் கால் பண்ணுவார்” என வண்டியை அனுப்பியதை அன்புநேசன் உணரவில்லை.

தெளிவின்மையும் சிந்தனையுமாக இருந்த கணவனைத் தனியே விட்டுச் செல்கிறோமோ என்ற குற்றவுணர்வு எழுந்தது. கூடவே, இங்கேயே இருந்தாலும் தன்னிடம் எதை, எது வரை சொல்வான், எப்போது ‘உனக்கு என்ன தெரியும், தேவை இல்லாத விஷயத்துல தலையிடாத. சம்மன் இல்லாம ஆஜர் ஆகாத’ எனத் தள்ளி நிறுத்துவான் என்பது அவனுக்கே தெரியாது.

“நல்லா எக்ஸாம் எழுது அம்மு. கேர்ஃபுலா போய்ட்டு வா. லீவ் விட்டதும் உன் ஃப்ரெண்ட்ஸை வேணா நம்ம வீட்டுக்குக் கூப்பிடு. நீ தனியா வெளிய போக வேண்டாம். ஓகே வாடா?”

“எப்ப டாடி ஊருக்கு வருவீங்க?”

“வின்டர் செஷன் முடிஞ்சதும் வந்துடுவேன் டா பட்டு”

சற்று முன் தன்னிடம் “இறங்குடீ’ எனச் சீறியவன் மகளிடம் கொஞ்சிக் கொண்டிப்பதைக் கண்டு அபர்ணா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அன்புநேசன் “சரி, உள்ள போங்க. அப்பு…” என்று திரும்ப அங்கே நின்ற காரைக் காணோம். அந்த இடமே வெறிச்சோடி இருக்க, பனிக்காற்று எலும்பு வரை ஊடுருவியது.

“வண்டி எங்க?”

“டயம் இருக்கேன்னு நான்தான்…”

“டயம் இருந்தா… என்ன நடக்குதுன்னு புரியாம நானே மண்டையப் பிச்சுக்கறேன்… உம் பின்னாலயே வர இதென்ன ஹனிமூன்னு நெனச்சியா?”

அவனது பேச்சில் மனம் சுளித்த அபர்ணா சட்டென மகளைத் திரும்பிப் பார்க்க, சற்று முன் அம்மாவுடன் கை கோர்த்து நடந்த தந்தை திடீரெனத் திட்டியதும், அவன் உதிர்த்த ஹனிமூன் என்ற வார்த்தையும் கண்ட அமுதா பெற்றோர் இருவரையும் மாறி மாறிப் பார்க்க, அபர்ணா குமாரை அழைத்துவிட்டாள்.

மூன்று தூண்கள் முன்புதான் நின்றிருந்தவன், ஆளில்லாத இடத்தில், காரை ரிவர்ஸ் செய்தபடி இரண்டே நிமிடங்களில் வந்து விட்டான்.

“போலாம் அம்மு” என ஏர்போர்ட்டினுள் செல்லத் திரும்பிய அபர்ணா, மனம் கேட்காது, கணவனை மிக நெருங்கி “யாரையும், யாரையும் நம்ப வேண்டாம். ப்ளீஸ்” என்று அவன் காதில் அழுத்தமாகச் சொல்லிப் போனாள்.

மனைவியும் மகளும் உள்ளே சென்று மறைந்த பின்னும் வண்டியில் ஏறாது நின்றவனிடம் இருந்ததெல்லாம் ஒரே கேள்விதான்.

‘ஐயாரப்பனும் அல்பா லால்வானியும் சந்திச்சுப் பேசறது அப்பாக்குத் தெரியாமலா இருக்கும்?’

********************

திருவள்ளூர் போகும் நெடுஞ்சாலையில், யூ டர்ன் எடுத்து வலப்புறம் பிரிந்த சற்றே குறுகலான கிராமத்து ரஸ்தாவில் நுழைந்த வேகன் ஆர், நெல் வயல்களுக்கிடையே இருந்த அந்தச் சிறிய மாரியம்மன் கோவிலின் எதிரே இருந்த வேப்ப மரத்தின் கீழ் நின்றது. காரிலிருந்து இறங்கும் முன் அணிந்திருந்த பர்தாவைக் கழற்றி, சுற்றும் முற்றும் பார்த்தபடி இறங்கிய பெண், கோவிலுக்குள் நுழைந்து, தூணில் சாய்ந்து, சன்னதியை நோக்கி அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில், கிராமத்து சாலையின் உள்புறத்தில் இருந்து, ஐந்து வயதுப் பெண் மற்றும் நாலு வயது ஆண் குழந்தைகளுடன் நடந்து வந்த ஒருவனும் அதே கோவிலுக்குள் நுழைந்து, வெளியே இருந்த பலி பீடத்தின் அருகே பதிக்கப்பட்டிருந்த ஆளுயர சூலத்தில் எலுமிச்சை மாலையைப் போட்டுவிட்டு, மண்டபத்தில் அமர. மக்கள் இருவரும் கோவிலைச் சுற்றி விளையாடத் தொடங்கினர்.

கோவில் சன்னதி பூட்டிக் கிடக்க, திறந்திருந்த வெளி மண்டபத்தில், நிழலுக்காகப் படுத்திருந்த இரண்டு நாய்களில் ஒன்று, தங்கள் மதியத் தூக்கத்தையும் ஏகாந்தத்தையும் கெடுத்த மனிதப் பதர்களைத் தலைதூக்கிப் பார்த்து ‘லொல்ழ்ழ்ள்’ என சோம்பேறித்தனமான, நீண்டதொரு குரைப்பில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு, மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர்ந்தது.

“மேம்”

ஆடவனின் அழைப்பில், உள்நோக்கி அமர்ந்திருந்த அந்தப் பெண், அபர்ணா,

“சொல்லு சாரங்கன்”

“ஏற்கனவே சொன்னதுதான் கா. அந்த அல்பா லால்வானிக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் என்ஜிஓ ல வேலை. இதுதான்னு இல்லாம, அவங்க கை காட்டற கம்பெனியோ தனிப்பட்ட ஆளோ, அங்க போய் அவங்க தர்ற வேலையை சாமர்த்தியமா செஞ்சு முடிக்கணும்.

“அப்போ அந்த என்ஜிஓ வேலை?”

“அது ஒரு கண் துடைப்புக்காக. அல்பாவோட மெயின் வேலை லாபியிங்தான் (lobbying)”

“யாருக்கு, எதுக்கு? இதனால என்ன அவளுக்கு என்ன லாபம்? அந்த அல்பாவை தூண்டி விட்டது யாரு? இதுல ஐயாரப்பனோட பங்கு என்ன?”

சாரங்கன் நீண்ட சில நொடிகள் பிரமிப்புடன் அபர்ணாவைப் பார்த்தான்.

“என்னாச்சு சாரங்கன்?”

“சான்ஸே இல்லைக்கா, அந்த மாதிரி இடத்துல இருந்தும், இத்தனை வருஷம் ஆகியும், உன் சுயத்தை இழக்காம, எதுலயும் இன்ஃப்ளூயன்ஸ் ஆகாம நீ இருக்கறதே எனக்கு ஆச்சர்யமா இருக்குக்கா. இத்தனை இன்டெலிஜென்ஸும் இன்னொஸென்ஸும் கூடவே அக்கறையும்… வேற லெவல் போ”

“அடப் போடா! ஐயாரப்பன் எது செஞ்சாலும் கடைசில வல்லடி இவருக்குதான். எத்தனை வருஷமா பாக்கறேன். என்ன ஒன்னு, நீ சொல்றதெல்லாம் வெச்சுப் பார்த்தா, இந்த தரம் ரொம்பப் பெரிய லெவலா இருக்குமோன்னு பயமா இருக்கு”

“சந்தேகமே வேண்டாம் கா. சர்வதேசத் தரம் வாய்ந்த கார்ப்பொரேட் வல்லடி”

“சாரங்கா, இப்ப என்ன பண்றது?”

“வெய்ட் பண்ணி, நடக்கறதை வேடிக்கை பார்க்கறதைத் தவிர நமக்கு வேற வழியில்லை”

“என்னட, இப்டி சொல்ற?”

“வேற எப்படிக் கா சொல்லச் சொல்ற, இதை அன்பு சார்ட்ட சொல்லச் சொன்னேனே, சொன்னியா?”

“ம்ஹும், டென்ஷன் ஆகி, உனக்கேன் இதுன்னு திட்டி, என்னால எதையும் தெரிஞ்சுக்க முடியாதபடி, எனக்கு ஆக்ஸஸே இல்லாம செஞ்சுடுவார்”

“அப்ப விடு, அவரே பார்த்துக்கட்டும்”

“பாவம் டா அவர்”

சாரங்கன் “பார்றா, கட்டாயக் கல்யாணத்துக்கே இத்தனை லவ்வா?” எனச் சிரித்தான்.

“சாரங்கா…”

“ஒகே, ஓகே. நான் இருக்கேன். உன்னையும் ஒரு டெரர் பீஸுன்னு நம்பற ராகவன் இருக்கான். பார்த்துக்க மாட்டோமா?”

சாரங்கன் சொன்ன விதத்தில் அபர்ணாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.

சாரங்கன் “ஜோக்ஸ் அபார்ட், நான் சொன்னதுக்கான ஆதாரமெல்லாம் இந்த Flash cardல இருக்கு. இதுக்கு பேக் அப் எங்கிட்ட மட்டும்தான் இருக்கு. வேற எங்கேயும் ஸ்டோரேஜ் கிடையாது. நீயா சொன்னாலே ஒழிய, லீக் ஆக வாய்ப்பே இல்லை” என்றவன் காகிதத்தில் மடித்த விபூதிப் பொட்டலம் போன்ற ஒன்றைத் தூண் மறைவில் வைக்க, அபர்ணா மின்னல் வேகத்தில் அதை எடுத்துக்கொண்டாள்.

“அமுதா கிட்ட பேசினியாக்கா?”

“ம்…, இந்த ரகளைல எப்ப என்ன பூதம் வருமோ தெரியலை. அதுல அவ இங்க இருக்க வேண்டாம்னு பரீட்சை முடிஞ்ச கையோட யு எஸ் அனுப்பிட்டேன். அவ அங்க ஜாலியாதான் இருக்கா. நான்தான் பசங்க ரெண்டு பேரும் இல்லாம தனியா இருக்கேன். அதை விடு, தேங்க் யூ டா சாரங்கா. நீ மட்டும் இல்…”

“ஓட் ஆஃப் தேங்ஸ்லாம் அப்புறம். முதல்ல யாரும் பார்க்கறதுக்கு முன்னால கிளம்பற வழியைப் பாருக்கா. முரளி அவன் அம்மாவைக் கேட்டு அழுதான்னா, திருவள்ளூரே கூடிடும்”

“ஒகே, டேக் கேர்” என்றவள், இது குட்டீஸ்க்கு” என ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

******************

அன்புநேசன் அபர்ணாவை துரத்திப் பிடிவாதமாகத் திருமணத்தை நிச்சயித்ததில் இருந்தே, ஐயாரப்பனுக்கு இந்த சம்பந்தத்தில் துளியும் விருப்பம் இல்லாததோடு அதை எதிர்க்கவும், திருமணத்தை நிறுத்தவும் இறுதிவரை முயற்சித்தான்.

தன் தங்கை இருக்க வேண்டிய இடத்திற்கு வந்தவள் என்ற எண்ணமோ , அபர்ணாவின் படிப்பு, பாட்டு, அழகு இவற்றில் ஒன்றோ அல்லது அனைத்துமோ, அவள் வேறு இனம் என்ற காரணமோ… ஏதோ ஒன்று… ஐயாரப்பன் அபர்ணாவை அறவே வெறுத்தான்.

அது மட்டுமின்றி, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற மச்சான் அன்பு, அங்கேயே ஏதாவது ஒரு வேலைக்கு சேராமல், இங்கே வந்து ஏதேனும் பெரிய கம்பெனிகளில் ஒன்றில் இணைந்து கொண்டோ, புதிதாக ஒரு கம்பெனியைத் தொடங்கவோ செய்யாது,
தன் கல்லூரி நாள்களில் தொடங்கிய ஸ்போர்ட்ஸ் அகாடெமி உண்டு, தான் உண்டு என ஒதுங்கிக் கொள்வான் என்றும் இல்லாது, காதல், கல்யாணம் என செய்திகளில் பரபரத்தான்.

பெரிய படிப்பு, அரசியல் பின்புலம் என எதுவும் இல்லாத ஐயாரப்பனின் பலம், புருஷோத்தமனின் இனம் மற்றும் அதே தேசிய கட்சியைச் சார்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய உறவினன் என்பதும் ஏக்கரா கணக்கிலான அவனது நன்செய் நிலங்களும் மட்டுமே.

ஆனால், எதிராளி தடுக்கில் பாய்ந்தால் கோலத்தில் பாயும் அளவு தஞ்சை மாவட்டத்தின் அகட, விகடம் அத்தனையும் அவனிடம் இருந்தது.

ஏற்கனவே, தங்கையைக் கொடுத்து தன் அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக்கொள்ள நினைத்தது பிசுபிசுத்துப் போக, மாமனாரின் அரசியல் வாரிசாகும் ஐய்யாரப்பனின் கனவையும்

‘தீவிர அரசியலில் குதிக்கும் மத்திய மந்திரியின் மகன்’ என்ற ஒரே அறிவிப்பில் தகர்த்தான் அன்புநேசன்.

அரசியலின் அரிச்சுவடி கூடத் தெரியாத அபர்ணாவிற்கு கணவனின் அரசியல் பிரவேசம் சுத்தமாகப் பிடிக்கவில்லைதான். ஆனால், அவள் சொன்னால் கேட்பவனா அன்புநேசன்?

அரசியல், சினிமா போன்ற மக்களுடன் நேரடித் தொடர்புடைய துறைகளில், அப்பாவின் ஆளுமையில், வழி காட்டலில் பொது வாழ்க்கையில் நுழையும் வாய்ப்பு வேண்டுமானால் சுலபமாகக் கிடைக்கலாம். ஆனால், அதில் நிலைத்து நிற்பதும், வெற்றி பெறுவதும் அவரவரது ஆற்றலையும் ‘அ’ னா விலாசத்தையும் பொறுத்தது.

அரசியல் பின்புலம் மற்றும் மத்திய அமைச்சரின் மகன் என்பதால் கிடைத்த உடனடி வரவேற்பும், அங்கீகாரமும் அளித்த உற்சாகத்தோடு நீரோட்டத்தில் கலந்தான் அன்புநேசன்.

தேசம் எதுவாக இருப்பினும், அரசியல் களத்தில் விளையாட, ஒரு கேள்விக்கு ஐந்து பதிலும், வரிகளுக்கு இடையே படிக்கும் சூக்ஷுமமும், தவறை சரியெனச் சாதிக்கும் குயுக்தியும், ஒரு கருத்தைத் திரிக்கவும் தெறிக்கவும் விடும் திறமையும் அவசியம்.

அதுவும் பல வேற்றுமைகளில் ஒற்றுமையைக் கொண்ட இந்தியாவில் அரசியல்வாதியாக இருப்பதற்குத் தனி சாமர்த்தியம் வேண்டும்.

தாயம் உருட்டியதுமே வென்ற சகுனியின் வேகமும் சூழ்ச்சியும் வேண்டும். கட்சி வித்தியாசமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அணியும் வெண்ணிறத்தைப் போல் வஞ்சகத்தை மறைக்கும், மறக்க வைக்கும் கவர்ச்சியான, நேர்மையான முகம் வேண்டும். மினிஸ்டர் ஒயிட்!

குறைந்தபட்சம், கூழைக் கும்பிடாவது போடத் தெரிய வேண்டும்.

கவர்ச்சியும் ஆளுமையும் மிக்க தோற்றம், சிறந்த கல்வி, செல்வாக்குள்ள, சீமான் வீட்டுப் பிள்ளைக்கான பிடிவாதம், கட்சித் தலலமை வரை எளிதாக அணுகக் கூடிய வாய்ப்பு அமையப் பெற்ற, படித்த இளைஞனுக்கே உரித்தான துடிப்பு, புதுமுகத்திற்கான நேர்மை முத்திரை என்றிருந்த அன்புநேசனிடம் என்றுமே இல்லாத ஒன்று - பொறுமை.

தொடக்க காலத்தில் உள்கட்சிக் கூட்டங்களில், செய்தியாளர் சந்திப்பில், மைக்கை நீட்டிக் கருத்துக் கேட்கையில், சில பொதுக் கூட்டங்களில், சட்டென வார்த்தையை விட்டு விடுவான். அரசியல் நெளிவு சுளிவு புரியாது, மனதில் பட்டதை பேசிவிடுவான். சொந்தக் செலவில் சூனியம் வைத்தது போல் பல சமயங்களில் அது கட்சிக்கும், தலைமைக்கும் ஏன், அவன் தந்தைக்குமே தலைவலியாக இருந்திருக்கிறது.

ஆனாலும், பழம் பெருமை பேசிய மூத்த தலைவர்களைக் கண்டு சோர்ந்திருந்த கட்சியினரை, குறிப்பாக இளைஞர்களை, படித்த சமூகத்தினரை அன்பு நேசனின் இளமைத் துடிப்பும், கட்சி வேறுபாடு இல்லாது அரசியல் ஊழல்களை, உளறல்களை , உண்மையான கருத்துகளை உடைத்துப் பேசும் தைரியமும் வெகுவாக ஈர்த்ததில், அன்புநேசன் கட்சியின் அடுத்த தலைமுறை தலைவனாக, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகப் கருதப்பட்டான்.

அருள்மொழி பிறந்த சமயம், அபர்ணா பிறந்த வீட்டில் இருக்கையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அழைத்து தமிழகத்தின் முக்கியத் தலைமைக்கு எதிரான ஆதாரத்தோடு முழங்கிய அன்புநேசனின் பிரபல்யமும் அவனுக்குக் கிடைத்த ஆதரவும் வரவேற்பும் உறுத்தியதில், ஐயாரப்பன் தன் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கினான்.

*******************

வக்கீலுக்கும் டாக்டருக்கும் பிறந்த பொன்னி எம் ஏ பொருளாதாரம் படித்தவள்.
பாரம்பரியமான அரசியல் குடும்பம், மத்திய மந்திரி புருஷோத்தமனின் மகள் என்ற அந்தஸ்து என்பதில் கிடைத்த முக்கியத்துவமே அவளுக்குப் போதுமானதாக இருக்க, அந்த வட்டத்தைத் தாண்டி, தன் தாயைப் போல் அல்லாது தொழில், அரசியல், சமூக சேவை, எழுத்து, பேச்சு என ஒரு தனித்துவத்தை, தன் முயற்சியை, சுய முன்னேற்றத்தை, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நோக்கி உழைக்கத் தயாராக இல்லாத பொன்னி, தேர்வு முடிந்த மறுவாரமே, ஐயாரப்பனின் மனைவியானாள்.

மனைவியின் பின்புலத்தையும் மாமனாரின் அரசியல் செல்வாக்கையும் நன்கு உணர்ந்த ஐயாரப்பனும், அவன் குடும்பத்தினரும் தங்க முட்டையிடும் பொன்னியை நன்றாகவே தாங்கினர்.

கணவன் ஐயாரப்பனையும் புகுந்த வீட்டினரின் ஆசையையும் எதிர்பார்ப்பையும் சற்றும் மதிக்காது, தன் விருப்பம் போல் திருமணம் செய்துகொண்ட தம்பி அன்புநேசன் ஒருபக்கம் என்றால், பார்க்க சாதுபோல், இருக்கும் அபர்ணாவின் அழகும் பாட்டும் பிரபலமும், சோம்பேறியான பொன்னிக்குப் பிடிக்கவில்லை.

அதிலும், அன்புநேசனின் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து விமரிசிப்பதும், மேடையில் பேசுவதும், அதற்கான ஊடக, மக்கள் எதிர்வினையும் பற்றி செய்தியாளர்கள் அபர்ணாவை கேள்வி கேட்பதும், இருவரும் தம்பதியாகப் பேட்டி கொடுப்பதுமாக இருக்க, சும்மா இருந்த பொன்னியிடம் தன் இளவரசி அந்தஸ்து கை விட்டுப் போன உணர்வை ஐயாரப்பன் ஊட்டி வளர்த்தான்.

மகன் அன்புநேசனைத் தன் அரசியல் வாரிசாக, எதிர்கால அரசியலில் தன் நீட்சியாக, தன் முகமாக, தனக்குப் பிரதியாகக் கருதிய மாமனார் புருஷோத்தமனின் கவனத்தைத் தன் மீது குவிக்கும் முயற்சியில் இறங்கிய ஐயாரப்பன் முதல் காயை தன் மனைவியின் மூலம் நகர்த்தினான்.

பிறந்த வீட்டில் பெண்களுக்கான உரிமையை, நாத்தனார் என்ற உறவின் மகிமையை, அவள் எவ்வளவு நல்லவளாக, வெள்ளந்தியாக, ஏமாளியாக இருக்கிறாள் என்பதை மனைவி பொன்னிக்கு ஐயாரப்பன் எடுத்துரைத்ததில் ,
குழந்தை அருள்மொழியுடன் புகுந்த வீட்டுக்குத் திரும்பிய அபர்ணாவின் மேல் சிறிதும் பெரிதுமானச் குற்றச்சாட்டுகளை வீசினாள்.

விரும்பாத, நம்பிக்கையில்லாத, சிந்தனையில் உதிக்காத விஷயங்கள் தொடர்ந்து காதில், கவனத்தில் பட்ட தாக்கத்தில், அன்பு நேசனின் அம்மா துளசியும் , அபர்ணாவின் மாமியாராக முழுமையாக உருமாற்றம் (Metamorphosis) அடைந்தார்.

தன் சொந்த ஊர் மற்றும் மாவட்ட மக்கள், தன் மகன் அன்புநேசனை ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக, வெளிநாட்டில் படித்த நாகரிகமான செல்லப்பிள்ளையாக, தன் கால் நிழலில் வளரும் வாரிசாகவே பார்ப்பதை உணர்ந்த புருஷோத்தமன், தன் தொகுதி மக்களின் ஆதரவுக்கும், ஜாதி ஓட்டுக்கள் சிதறாது இருப்பதற்கும் காரணமான மாப்பிள்ளை ஐயாரப்பனை முறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

வீட்டில் மனைவிக்கும் வெளியில் கணவனுக்கும் மெது மெதுவே அழுத்தம் கூ(ட்)டியதில், பெரும்பாலும் கைக்குழந்தையுடன் அபர்ணா அறையில் முடங்க, பிரச்சனையின் அடிவேரைப் பிடித்துவிட்ட அன்புநேசன், மாமா ஐயாரப்பனுடன் நேருக்கு நேர் மோதியதில், மருமகனின் பக்கம் சாய்ந்த புருஷோத்தமன், மகனிடம்

“அன்பு, ஐயாரப்பனைப் பத்தி உனக்கே தெரியும். அவனோட சண்டை போடற முன்னால உங்கக்காவை யோசிடா. உங்கம்மாவோட சேர்ந்து அவளும் பேசறாதான். இதெல்லாம் அவனாலதான். இதுல அபர்ணாவும் அவஸ்தை படறா. பேசாம நீங்க ரெண்டு பேரும் தனியா போயிடுங்க. அப்பப்ப வரப் போக இருந்துக்கலாம். டெய்லி பஞ்சாயத்தாவது தீரும்” என நைச்சியமாகப் பேசி, மகனைத் தனிக் குடித்தனம் வைத்துவிட்டார்.

அன்புநேசன் பெற்றோர் மீதான மனத்தாங்கலுடன் சற்றே விலகி நிற்க, தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த பனிப்போர் வெளியில் கசிந்ததில், தங்களது உறவின் நெருக்கத்தைக் காட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த புருஷோத்தமன் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்க மகனுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தார்.

கட்சிக்கும் தனக்கும் காற்றாய் அலைந்து பேயாய்ப் பிரச்சாரம் செய்து, தன் முதல் தேர்தலிலேயே கணிசமான வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய பின்னரும் கூட,

‘சென்ட்ரல் மினிஸ்டரோட பையன். அவன் ஜெயிக்கிறதுல என்னப்பா அதிசயம்?’

‘நம்ம ஊர்ல Nepotism புதுசா என்ன?’

‘அப்பா ஆஸ்பத்திரி வெச்சிருந்தா புள்ளைங்க டாக்டருக்குத்தானேய்யா படிப்பாங்க, அதுல என்ன தப்புங்கறேன்?’

போன்ற விமரிசனங்களோடு, அன்புநேசனின் உழைப்பும் வெற்றியும் வாரிசு அரசியலின் விளைவாகவே பார்க்கப்பட்டதன் பின்னணியில் ஐயாரப்பனின் பங்கு பெரிது.

தனக்கு இடைஞ்சலாக இருந்த மைத்துனன் வில(க்)கிச் சென்றதில், மாமனார் புருஷோத்தமனின் கட்சி மற்றும் அரசியல் சார்ந்த, சாராத அனைத்து விவகாரங்களையும் கையாளும் அளவிற்கு நெருங்கிய ஐயாரப்பன் அவரது முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.

எந்தப் பதவியிலும் இல்லாமலே கட்சியிலும் குடும்பத்திலும் தன் ஆளுமையை, அந்தஸ்தை, ஆஸ்தியை விஸ்தரித்து, புருஷோத்தமனின் வலது கையாக (Man Friday) அவரது முழு நம்பிக்கையை பெற்று, இத்தனை வருடப் பொது வாழ்க்கையில் அவர் அனுபவித்திராத பல இன்பங்களைத் துய்க்க வைத்து, வாழ்க்கையின் வேறு பரிமாணங்களைக் காட்டி, அவருக்கே அரசியல் செய்யக் கற்றுக் கொடுத்து ஆசானான ஐயாரப்பன், இன்று, இப்போது இந்தக் கணத்தில் இருப்பது டெல்லியிலிருந்து சண்டிகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் பயணிக்கும் மெர்ஸிடிஸ் எஸ்யூவியில்.

ஐயாரப்பனே காரைச் செலுத்த, அவனுடன் பயணித்த இருவரில் ஒருவர் புருஷோத்தமன். இன்னொருவர்?

அல்பா லால்வானி.
 

Author: SudhaSri
Article Title: தோற்ற மயக்கங்கள் 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.