• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும்‌ எதற்காக? 5

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
60
227
83
Chennai
நாணங்களும்‌ எதற்காக? 5


“நீ ஏன் புல்புல் இப்டி பண்ற… இங்க இருக்கற ஸ்டூடியோக்கு வரதுக்கு என்ன… டாக்டர்… அதுலயும் குழந்தை டாக்டர் வேற. லீவ் போட வேண்டாம். ஒரு ஞாயித்துக் கிழமை கூடவா உன்னால வெளில வர முடியாது?”

“அதுக்கில்ல ச்சிங்கா… அவசரம்னு‌ நாலஞ்சு தரம் ஹாஸ்பிடல் கூட போய் இருக்கேன்தான். அதுக்கே அப்பா ஏதானும் சொல்லு…”

“...”

சற்றுத் தள்ளி இருந்த தெரு விளக்கு, கடக்கும் வாகனங்களின் வெளிச்சத்தைத் தாண்டி விரவி இருந்த இருளில் கைகளைக் கட்டிக்கொண்டு தன் எதிரே நின்று முறைப்பவனைப் பார்த்தவளின் பேச்சு நின்றது.

க்ளீனிக்குக்கும் அவளது‌ வீட்டுக்கும் நடுவில், சாலை ஓரத்தில் சிங்கபிரானின்‌ கார்‌ நின்றிருக்க, சின்மயியின் ஸ்கூட்டர் பின்னால் நின்றது. காரின் அருகில் இருவரும்‌ நின்றிருந்தனர்.

அவளே “ச்சிங்கா…”

“ஞாயித்திக் கிழமை நாதம் ம்யூஸிகாவோட 12வது ஆனிவர்ஸரி புல்புல்… எல்லாரோட ஃபேமிலியும் வரும். நீ வராம எப்டி?”

“?!?!”

“நாங்க பாடின கவர், ட்ராக், ஆல்பம், புது ஆல்பத்தோட ஆரம்பம், ஓபன் மைக்னு இட் வில் பீ‌ ஃபன் புல்புல். க்விஸ் உண்டு, ஸ்நாக்ஸ், லஞ்ச், ஈவினிங் டீ எல்லாம் அங்கேயே”

“...”

“முதல் தரம் நீ நம்ம ஸ்டூடியோக்கு வரும்போது அதிகம் பேர் இல்லாம அமைதியா இருக்கணும்னு நினைச்சேன். எங்க, மேடம்தான் 24*7 பிஸியா இருக்கீங்களே…”

“ச்சிங்…கா!”

“சும்மா‌ குழந்தை ங்கா… சொல்ற மாதிரி ச்சிங்கான்னு‌ சொல்லி டபாய்க்காம, சன்டே அன்னிக்கு‌ நீ வர. பீரியட்”

சின்மயி‌ எதுவும் சொல்லாது தன்‌ கை கடிகாரத்தைப் பார்க்க…

“லேட்‌ ஆனா ஆகட்டும். நானே கொண்டு‌ போய் உங்கப்பா‌ கிட்ட‌ விடறேன், போதுமா… உன்னெல்லாம் திருத்தவே‌ முடியாதுடீ”

தனது‌ முயற்சியை, திறமையை, உழைப்பை, வெற்றியை, சாதனையைத்‌ தன்னிடம்‌ பகிர, தன்னோடு கொண்டாட விரும்பும் சிங்கபிரானின் ஆசையும்‌ ஆவலும் சின்மயியை‌ அசைத்தது.

“சரி…‌வரேன்‌ ச்சிங்கா…‌ அப்பாட்ட அநாவசியமா பொய்‌ சொல்ல‌ வேண்டாமேன்னு‌ பார்த்தேன்….”

“ஏன் பொய்‌ சொல்லணும்? சிங்கபிரானை பார்க்கப் போறேன்னு‌ சொல்லிட்டே வா. ம்… நான் வேணா வந்து பிக் அப் பண்ணிக்கவா?”

“ப்ச்…‌இப்ப வேண்டாம்”

“புல்புல்…”

“ம்…”

“நான்… என்… சங்கடமா இருக்கா‌ புல்புல், நான் கட்டாயப்‌ படுத்தறேன்னு தோண்றதா?”

எக்கி‌ சிங்கபிரானின் முடியைக்‌ கொத்தாய் கையில் பிடித்தலள் “உளறின… சர்ஜிகல்‌ கத்திரி கோலால ஒரே வெட்டா‌ வெட்டி உட்ருவேன்”

சத்தமாகச் சிரித்த‌ சிங்கபிரான்‌ “பார்றா, சின்மயி‌ பாப்பா சவுண்ட்‌லாம்‌‌ குடுக்குதே”

“போடா…சரி, அட்ரஸும்‌ லொகேஷனும் அனுப்பு‌ ச்சிங்கா”

“ஃபர்ஸட்‌‌ நீ‌ நேரா‌ வீட்டுக்கு வா. அம்மாவோட‌ சேர்ந்து‌ போகலாம்”

“டன்”

ஞாயிறு‌ வரை சிங்கபிரான் பேசியதை‌ உருட்டிய சின்மயி, ஒவ்வொரு முறையும்‌ அவன்‌ சொன்ன அந்த ‘நீ வராம‌ எப்படி‌’ யைத்‌ தாண்டத்‌ தயங்கி, முடியாது, அதிலேயே சிக்கித் தவித்தாள்.

இவன்‌‌ வேற‌ ‘பார்க்கும்போதெல்லாம் போறபோக்குல‌ எதையாவது சொல்லி என்னைக் குழப்பி விடறான்…‌ அப்புறம்‌ பாத்தா சாதாரணமா பேசறான்…‌தெரிஞ்சு சொல்றானா, இயல்பா‌ பேசறானான்னே‌ புரியலையே”

சின்மயி, சிங்கபிரான் நல்லவனா, கெட்டவனா‌ என்ற‌ ஆராய்ச்சியில் இருக்க, அவனது‌ கேள்வியில் திக்கித்து விழித்தவளின் முக பாவனையை நினைத்து நினைத்துச் சிரித்தான் அவன்.

‘இந்த‌ புல்புலுக்கு நான் போட்ட‌ பிட்டு அர்த்தமாச்சான்னே தெரியலை… நேரடியா‌ எதையாவது‌ சொல்லலாம்னா, டென்ஷன்ல என்கூட‌ பேசறதையே‌ நிறுத்தினாலும் நான் ஆச்சரியப்பட‌ மாட்டேன்,... இவளே இப்டி பேய் முழி முழிக்கறா…‌ இதுக்கு நடுவுல அவ‌ அப்பா‌ வேற‌… ரொம்பக் கஷ்டம்டா சிங்கம்‘

********************

மரங்கள் குறைந்து மக்கள் அதிகரித்ததில் பெங்களூர் தகித்தது.

முதல் நாள் இரவு ‘சொல்ல மறந்துட்டேன், ஸாரி. கலர் கோட் பர்பிள்/வயலட் என சிங்கபிரானிடம் இருந்து மெஸேஜ் வர, க்ளீனிக்கில் இருந்து வந்து, சமைத்து, சாப்பிட்டு, இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருந்த உடைகளைக் குடைந்ததில் கிடைத்ததென்னவோ இதுவரை உடுத்தாத இன்டிகோ வயலெட்டில்‌ பவளமல்லிகளை எட்ட எட்ட ஹேன்ட் பெயின்ட்டிங்‌ செய்த மல்மல் காட்டன் புடவை தான். நல்ல வேளையாக புடவைக்கு ஃபால், ஓரம் தைத்து, ப்ளவுஸும் தயாராக இருந்தது.

‘ஸாரியா…?’

சின்மயியிடம் மொத்தமாகவே ஏழு புடவைகள் இருக்க, அதில் மூன்று உடுத்தாதது.

‘இந்தச் ச்சிங்கா இஷ்டத்துக்கு பண்றான்… முன்னாலயே சொல்லி இருந்தா ஒரு குர்த்தியை வாங்கி இருப்பேன். இப்ப ஹாஸ்பிடலுக்கு போறேன்னு பொய்யும் சொல்ல முடியாது…’

ஞாயிறு காலையில் சீக்கிரமே‌ எழுந்து சமைத்தவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்த பரசுராம், புடவையில் தயாராகி வெளியில் வந்த சின்மயி‌யைக் கேள்வியாக நோக்க,

மொட்டையாக “ஒரு‌ மீட்டிங். வர லேட் ஆகும்” என்றவள், அதற்கு மேல் நிற்காது‌ கிளம்பி விட்டாள்.

சிங்கபிரான்‌ வீட்டுக்குச் சென்றவளை கேசவ்தான் வரவேற்றான்.

“ஹாய் … வா, வா, உட்கார். ‘பெரிம்மா, சின்மயி வந்தாச்சு’ என கூவிக் கொண்டே உள்ளே சென்றான்.

ஒன்பதரை மணிக்கு இவளை வரச்சொன்ன சிங்கபிரான், ஷார்ட்ஸும்‌ கையில்லாத சட்டையும் அணிந்து “அம்மா, காஃபி” என்றபடி சாவகாசமாக இறங்கி வந்தவன், சின்மயியைக்‌ கண்டு கடைசி படியில்‌ அப்படியே நின்றுவிட்டான்.

பின் வேகமாக அருகில் வந்து கை பிடித்து எழுப்பியவன், அவளை ஒரு முறை சுற்றி வந்து “புடவையா… என்னடீ புல்புல் இது, திடீர்னு இவ்ளோ பெருசாயிட்ட…”‌ எனக்‌ கண்ணைச்‌ சிமிட்ட, முகம் சிவந்த சின்மயி‌
“போடா” என்று‌ சிங்கபிரானை பிடித்துத் தள்ளினாள்.

அவர்களைப்‌ பார்த்துக் கொண்டே உள்ளே வந்த பாலாமணி “என்னடா‌ சிங்கம் இது, இப்டி சொல்ற… புடவைல‌ சின்மயி எவ்ளோ அழகா‌ இருக்கா…”

சிங்கபிரான் “நானும் அதைத்தானேம்மா‌‌ சொன்னேன்”

கிண்டலாகத் தொண்டையைக் கனைத்தபடி நால்வருக்கும் காஃபியுடன்‌ வந்த‌ கேசவ் “சிங்கம் போட்ட சேம்‌ சைட் கோல்” எனவும் சின்மயி‌ பக்கெனச்‌ சிரித்தாள்.

சிங்கபிரான் “ ஏய்… இவன்‌ சொன்னதெல்லாம் ஒரு காமெடின்னு‌ சிரிப்பியா நீ?”

கேசவ் “எரியுதே… புகையுதே… அருகிலே‌ வா…” என்று‌ பாட…

சிங்கபிரான் “புல்புல்க்கு பூஸ்ட் கலந்தயாம்மா?”

கேசவ் “அந்த ஆர்டரைதான்‌ கெஸட்லயே பாஸ் பண்ணியாச்சே” எனவும் சிரித்ததில் சின்மயிக்குப் புரையேறிவிட்டது.

“அவளை கொஞ்சம் நிம்மதியா விடுங்கோ, சொல்றேன். மணி பத்தரை. ரெண்டு பேரும்‌ போய் அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆயிட்டு இங்க வரணும், போங்கடா‌ சீக்கிரம்” என்று விரட்டிய பாலாமணி

“நானும்‌ புடவை மாத்திண்டு வரேன் சின்மயி” என உள்ளே சென்றார்.

அத்தனை‌ பிரபலமானவன் அம்மாவிடம் சகஜமாகத் திட்டு வாங்குவதும், கேசவின்‌ இயல்பான கேலியும் பாலாமணியின்‌ உரிமையான அதட்டலும் உடன் சூடான பூஸ்ட்டும் சின்மயிக்கு இதமாக உள்ளிறங்கியது. அதையும்‌ மீறி வேகமாக இறங்கி, அகத்தில் ஒளிந்தது எதுவெனில், சிங்கபிரானின் பார்வையில்‌ இருந்த வியப்பும் ரசனையும் மெச்சுதலும் இன்னும் ஏதோ ஒன்றும்.

சிறுவயதில் உடை மட்டுமின்றி வளையல், பொட்டு, தோடு, கொலுசு, ரிப்பன், ஆத்திக்கால் பின்னல் என சின்னச் சின்ன விஷயங்களையும் ஓடிப் போய் சிங்கபிரானிடம் காட்டி இருக்கிறாள். அவனும்‌ ’புல்புல்க்கு சூப்பரா இருக்கே’ , ‘அதுக்குள்ள ரெடியா நீ, சமத்துக்‌குட்டி’ எனத் தவறாது பாராட்டுவான்.

ரிப்பனின் முடிச்சு‌ அவிழ்ந்து, தானே சரி செய்யும் முயற்சியில் அது படிமுடிச்சாகி விடும்.

‘இந்தப் பயத்தங்கா முடிச்சை என்னால அவுக்க (அவிழ்க்க) முடியாது… ஒரு நாளாவது பின்னலை பிரிச்சுக்காம திரும்பி வரயா நீ’ என்னும் கல்யாணியின் திட்டுக்கு பயந்தே, அவளைத் திட்டாத சிங்கபிரானிடம்தான்‌ போய் நிற்பாள்.

பாலாமணியோ சிங்கபிரானோ பொறுமையாக அவிழ்த்து விடுவர். ஒருமுறை ரவியின் உதவியாக முடிச்சு இன்னுமே இறுகி விட, எதுவும் செய்ய முடியாமல் சிங்கபிரான் ரிப்பனை‌ கத்தரித்தே விட்டான்.

அதேபோல், அவளது ஃப்ராக்கில் இருக்கும் நாடா அவிழ்ந்து தொங்கினால் அவனுக்குப் பிடிக்காது.

‘ஒருவேளை, ச்சிங்கா, அப்ப மாதிரி சாதாரணமாவோ, விளையாட்டாவோ‌ சொன்னதை நான்தான் வேறுமாதிரி கற்பனை பண்ணிக்கறேனோ… ஆனா, அவன் பார்வை…?’

பட்டென முதுகில்‌ அடிவிழ… சின்மயி திடுக்கிட்டு நிமிர, சிங்கபிரான்தான். விமானம் பறப்பது போல்‌ கையை ஓட்டி

‘புல்புல், எங்க ஃப்ளையிங்?” என்றவன் சின்மயியின் பார்வையில்,

“எப்டி, மேட்சிங்கா இருக்குல்ல?” என்று‌ கண்ணைச் சிமிட்ட, திணறியவளை

“ஹலோ மிஸ்டர் சிங்கபிரான், எல்லாரையும் யூனிஃபார்ம்ல வரச் சொல்லிட்டு இங்க என்னடா தனியா படம் ஓட்டற?” என்றபடி அதே நிற டீ ஷர்ட்டில் வந்த கேசவ் காப்பாற்றினான்.

‘போடா கரடி’

ஜெயநகரிலிருந்து பசவங்குடி போகும் வழியில் அமைதியான ஒரு பகுதியில் இருந்த அந்தக் கட்டிடம் புதிதாகவும் சற்றே வித்தியாசமாகவும் இருந்தது. பெயர்ப் பலகையில் ஆங்கில எழுத்துகள் N,M இரண்டையும் கோர்த்து இசைக் குறியீடாகப் பொறித்திருந்தது.

படியேறி, சிட் அவுட்டைத் தாண்டி நுழைந்ததும் வரவேற்பு அறை போல் ஒன்றும் அதற்கு இரண்டு புறமும் இரண்டு அறைகளும் இருந்தன.‌ நல்ல விஸ்தாரமான பெரிய அறைகள்.

நாதம் மியூஸிகாவின் பல் வேறு நிகழ்ச்சிகள், விருதுகள் வாங்கும், பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்கள், சான்றிதழ்கள் என சரியான இடங்களில் தொங்கியது.

அதே‌போல், ஒரே இடத்தில்‌ குவித்து வைக்காமல் சின்னச் சின்ன மரக் கூண்டுகளும் ஸ்டாண்டுகளும்‌ அமைத்து‌ நினைவுப் பரிசுகளும் கேடயங்களும் ட்ராஃபிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. பின்னால், அந்த‌ அறைகளை ஒட்டி, அந்த மூன்று அறைகளின் நீளத்திற்கு‌ப் பெரிய்யதாய் ஒரு கூடம்‌ இருந்தது. அங்குதான் ஒரு பக்கம் இசைக்கருவிகளை அமைத்து ஓபன்‌ மைக் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு‌ செய்திருந்தனர். வந்தவர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அங்கேயே எதிர்ப்புறத்தில் உணவு கவுன்ட்டர்களை அமைத்திருந்தனர்.

இவர்கள் போனபோது அநேகர் வந்திருந்தனர். கலைஞர்களில் மணமாகாத இளைஞர், இளைஞிகளின் பெற்றோர்‌ அல்லது சகோதர, சகோதரிகளும், ஏனையோரின் கணவன்மார்கள், மனைவியர் மற்றும்‌ ஐந்து வயதுக்கு மிகாத‌ ஏழெட்டு குழந்தைகள் என‌ முப்பத்தைந்து பேர் வரை இருக்கலாம்.

இசைக்குழுவை நிறுவிய மூவரில்‌ ஒருவனும் குழுவின் பாடகனுமான சிங்கபிரான் மீது வந்திருந்த இளையவர்களுக்கு‌ மிகப் பெரிய மயக்கம் இருப்பது புரிந்தது.

ரூபாய் நோட்டுகளிலும் உடல் பாகங்களிலும் ஆட்டோகிராஃப் வாங்குவதும்‌ செல்ஃபி எடுப்பதுமாக இருந்தவர்களை சின்மயி வேடிக்கை பார்த்தாள்.

ரேகா என்ற கோரஸ் பாடகியின் சகோதரி ரித்திமா, சிங்கபிரானின் பெயரைக் கையில் டாட்டூ குத்திக் கொண்டு இருந்ததைக் காட்டி‌ செல்ஃபி எடுத்துக்கொள்ள…

சின்மயியிடம் “பாட்டு புடிச்சிருந்தா‌ ஒன்னுக்குப் பத்து தரம் கேக்கலாம். காலம் முழுக்க இவன் பேரை சுமந்துண்டு… இதென்ன முட்டாள்தனம்” என்று முணுமுணுத்த பாலாமணி நோகாது தலையில் அடித்துக்கொண்டார்.

முதலில் ஜுஸும் சமோஸாவும் கொடுத்த பின், விக்ரம் ஜோயல் எல்லோரையும் வரவேற்றுப் பேசி, நண்பர்களின் கல்லூரி நாள்களை, தங்கள் குழுவின் தொடக்கத்தை, அவர்களது ஆரம்ப காலத் தடுமாற்றங்களை, சொதப்பல்களை அழகான , எளிமையான ஆங்கிலத்தில், நகைச்சுவையாக விவரித்தான்.

அவர்கள் பாடிய கவர்கள், ட்ராக்குகள், ஆல்பங்கள் என பின்னே இருந்த திரையில் விரிய, அவற்றைப் பாடிய‌ குழுவைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பாடும்போது அவ்வப்போது சிங்கபிரானைப் பார்த்தனர்.

கிருஷ்ணன் மேனன் கடைசி வரை அசையாது சின்த்தசைஸர்‌ கீபோர்டில் அமர்ந்திருந்தான்.‌ கேசவ்‌ பிஸியாக இருந்தான்.

முதலில் நாணிக்கோணினாலும் நிறைய பேர் நன்றாகவே பாடினர். சிலர்‌ வாய்ப்புக்கென பாடியது நன்றாகவே தெரிந்தது.

ஒருபுறம் நிகழ்ச்சிகள் தொடர, இரண்டு மணியளவில் உணவு பரிமாறப்பட்டது.

உணவிற்குப்‌பின் சிங்கபிரான் அடுத்து வரப்போகும் ஆல்பத்தின் பாடலைப்‌ பாடுவதற்கென மைக் முன்னே சென்று‌ நிற்க, சட்டென அமைதி சூழ்ந்தது.

புல்லாங்குழலில் தொடங்கிய இசை, வயலின், மிருதங்கம், கீ போர்ட், கிடார் என எல்லாம் இணைந்து ஆனந்தபைரவியின் ஆங்கில இணையான‌ டோரியன் மோட் (The Dorian Mode) நோட்டுகளை இசைக்க, அதிலிருந்து யாரோ மெதுவே சாக்ஸஃபோன் மட்டும் வாசிக்க பின், சிங்கபிரானின் குரல் ஒலித்தது.

‘எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு
மெட்டுப்‌போடு…’

இடையிசையாக முற்று முழுதான மூன்று நிமிடங்கள் அத்தனை கருவிகளும் ஆனந்தபைரவி‌ ராகத்தை இழைத்த பின்,

‘சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா? = கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ!

பலுகே பங்கார மாயேனா
பிலிசின பலுக வேமி
கலலோ நீ நாம ஸ்மரண, மறவே சக்கனி சாமீ’ என இசையை அவன் இணைத்த விதம் குழந்தைகளைக் கூடக் கட்டிப் போட்டது.

சிங்கபிரான் பாடி‌ முடித்ததும் இசைக் குழுவைச் சேர்ந்த ஸ்ரேயா என்ற‌ பெண்ணும், வந்திருந்த விருந்தினர்களில் ஒரு பெண்ணும் ஓடி வந்து‌ அவனை அணைத்துக்கொள்ள, சின்மயியின் பார்வையை சந்தித்த‌வனுக்கு முதன்முறையாக அதுபோன்ற பாராட்டு சற்றே கூச்சத்தைத் தந்தது.

மாலை நான்கு மணிக்கு‌ டீ/காஃபியும், அனைவருக்கும் நாதம் மியூஸிகாவின் லோகோ பதித்த காஃபி மக்கும் பரிசாகக்‌ கொடுக்க, பணியாளர்களுடன் குழுவினர் இருந்து சுத்தம் செய்தபின் ஐந்தரை மணிக்குக்‌‌ கூட்டம் கலைந்தது.

கிருஷ்ணன் குட்டியும் விக்ரம் ஜோயலும், சிங்கபிரானின்‌ காதில்‌ “என்னடா, நீயே சொல்லிடுவியா இல்ல, நாங்க‌ சொல்லட்டுமா?” என்று கிசுகிசுத்து விட்டுச்‌ சென்றனர்.

சிங்கபிரான் பாலாமணியிடம் “அம்மா, நீ கேசவோட கிளம்பு”

அவர் “வா சின்மயி, போலாம்”

கேசவ் “அவ‌ வருவா. நீ வா‌ பெரியம்மா, நாம டேட்டிங் போகலாம்”

“டேய்…”

சிங்கபிரான் “அவன் கிடக்கான் மா. நான் புல்புலுக்கு ஸ்டூடியோவை காட்டிட்டு‌ பின்னாலயே வரேன். நீ போ. கேசவ், அம்மாவை ட்ராப் பண்ணிட்டு வா”

அவர்கள் கிளம்பியதும் சின்மயியை மேல் தளத்திற்கு அழைத்துச் செல்ல, பிரமித்தாள்.

நுழைந்ததும் காத்திருப்பு அறையும், கேமராக்கள், ட்ராலிகள், மைக், ஸ்பீக்கர்கள் போன்றவற்றைப் பாதுகாக்க ஒரு அறையும் இருந்தது.

கண்ணாடித் தடுப்பைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர். வெளியில் இருந்து சாதாரண கட்டிடமாகத் தெரிந்த அந்த பிரம்மாண்ட ஹாலின் உள்ளே, கருங்கல் சுவரும், ரயில் ஓடுகள் வரையப்பட்ட கூரையுமாக இன்டீரியர்‌ செய்யப்பட்டு, தற்சமயத்திற்கு நடுவில் இருந்த சரவிளக்கு முழுதாக ஒளிர்ந்தது.

மிக நவீனமான கருவிகளுடன் இருந்த அந்த சவுண்ட் ப்ரூஃப் ஹாலில் சின்மயி இதுவரை பார்த்திராத அளவிலான ராட்சஸ ட்ரம்ஸும், மிகப்பெரிய மானிட்டர் கீ போர்டுகளும் இருந்தன. தபேலா, சிதார்… எத்தனை வயலின், எத்தனை விதமான கிடார்! புல்லாங்குழல் மட்டுமே வெவ்வேறு அளவுகளில் வடிவங்களில் இருந்தது. நாரதர் மாட்டிக்கொண்டு திரியும் வீணையைப் போல் ஒன்றும் உருமி மேளமும் கூட‌ இருந்தன. சின்மயிக்கு இன்னும் பலவற்றின் பெயரே தெரியவில்லை.

அழைத்துச் சென்று அங்கிருந்த படங்களில் ஒன்றைக் காட்ட, அதில் கோவில் கச்சேரியில் பாடும் கல்யாணியும் அவருக்குப் பின்பாட்டுப் பாடும் சிங்கபிரானும் இருக்க,
சின்மயி‌ உணர்ச்சிவசத்தால் தடுமாறினாள்

“கூல் புல்புல்” என்றான். பிறகு அவனே “எனக்கு‌க் குரல் உடையறதுக்கு முன்னால பாடினது. உனக்கு அப்ப ஆறேழு வயசுதான் புல்புல் இருக்கும்”

“ம்”

ஒரு‌ கிடாரைக் கையில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்த பார் ஸ்டூலில் அமர்ந்தவன், சின்மயிக்கு‌ அருகில் கை காட்டினான்.

ஸ்ருதி கூட்டி வெறுமே விரல்களால் தந்திரங்களை வருடியதே அந்தச் சூழலில் அத்தனை இதமாக இருந்தது.

“இப்ப பாடு புல்புல்”

“நா.. நானா… இப்ப வேண்டாம்”

“புல்..‌புல்… ப்ளீஸ்”

“திடீர்னு கேட்டா… என்ன பாடறது?”

“ஏதாவது…‌எங்கூட பாடறியா?”

“ம்…”

மோகனத்தில்‌ ஸ்வரம் பாடத் தொடங்கி, ஒரு ஸ்வர பேதத்தில் வாசந்தி ராகத்துக்கு மாறியவன், அதன் தொடர்ச்சியாக

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறயே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசடியே…..

சின்மயியைப்‌ பார்த்துத் தலையசைக்க, அவள் பாட்டைத் தொடர்ந்தாள்.

வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சிபுட்ட

வெரல வெச்சி அழுத்திய கழுத்துல

கொளுத்திய…

பாடுவதை நிறுத்திய சின்மயி அழத் தொடங்கினாள். அவன்‌ ஸ்வரம் பாடத் தொடங்கியதுமே பாட்டு‌‌ புரிந்து விட, அவனோடு இணைந்து பாடினாலும்

“பதினோரு வயசுப் பொண்ணு பாடற பாட்டா‌ இது… அதுல அந்த ராஸ்கலோட டூயட்‌ வேற..”

அப்பா பரசுராமின்‌ குரலும், தலை‌முடியைப் பிடித்து‌ இழுத்துக் கன்னத்தில் அறைந்ததும்… இப்போது போல்‌ வலித்தது.

இத்தனைக்கும் அவளுக்கு அதில் இருந்த வார்த்தைகளின்‌ அர்த்தம் புரியாத வயசு . அவனுக்குமே புரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

சிங்கபிரான் அவள் அருகில் சென்று மிக மெலிதாக அணைத்துக் கொண்டான்.

“பழசுல இருந்து வெளில வா புல்புல். அந்த சூழல்ல‌ NEET எழுதி பாஸ் பண்ணி, டாக்டரா‌ ஆயிருக்கேன்னா உனக்குள்ள எத்தனை திடமும் வைராக்யமும் இருந்திருக்கணும். இப்டி‌ சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு உன் சந்தோஷத்தை நீயே ஏன்டி கெடுத்துக்கற?”

“...”

“புல்புல்”

“ச்சிங்கா”

“ம்”

“பவானி‌ வரப்போறா”

“...”

“நான்‌ எங்கேயாவது போயிடவா‌ ச்சிங்கா?”

“நானும் வரேன்”

******************

கொல்கத்தா‌ கடற்படைத் தளத்தில் இருந்து மே மாத இறுதியில் கோடை‌ விடுமுறைக்கென பவானி தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன்‌ வந்திருந்தாள்.

மாமனார், மாமியாருடன்‌ அவசியத்திற்கும்‌‌ அளந்தும் ஐந்து நாள்களைக் கழித்துவிட்டு இங்கு வந்திருக்கிறாள். இரண்டு, மூன்று தினங்களில்‌ அவள் கணவன்‌ கிளம்பி விடுவான். பவானியும்‌ குழந்தைகளும் இன்னும் மூன்று வாரங்களுக்கு இங்குதான்.

பல குடும்பங்களில் மூத்த சகோதரி தாய்க்குக் கை கொடுக்கிறாள் அல்லது தாயின் இடத்தை இட்டு நிரப்புகிறாள். இதுவுமே சூழலைப்‌ பொறுத்ததுதான்.

அதேபோல், பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதிப்பும் அளவுகோலுக்கு உட்பட்டதுதான். அது அந்தக் குழந்தைகள் சார்ந்திருக்கும் நிலைக்குத் தக மாறுகிறது.
தற்கொலையே என்றாலும், கல்யாணியின் மரணமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மூவருமே தாய் கல்யாணியின் நிழலிலும் பலத்திலும், கூட்டுக் குடும்பத்தின் ஆதரவிலும் வளர்ந்த குழந்தைகள்தான் என்றாலும். திருமணமாகி‌ அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்து, சீரான வாழ்க்கை‌ ஓட்டத்தில் பொருந்திப் போன பவானிக்கும் காம்பஸில்‌ தேர்வாகி பொறியியலின் கடைசி வருடத்தில் இருந்த ஹரிக்கும் தாயின் இழப்பு ஒரு விதம் எனில்,

பதின் பருவத்தில், பள்ளிப் படிப்பு கூட‌முடியாத நிலையில், அதிகம் பழகாத தந்தையின் மீதான பயமும் எச்சரிக்கையும் தாண்டி நெருக்கம் இல்லாத நிலையில், தாயின் வால் பிடித்து அலைந்த சின்மயியின் நிலை முற்றிலும் வேறாக இருந்தது.

மூவருக்குமே‌ தாயின்‌ மறைவும் இறந்த விதமும் அதிர்ச்சிதான், ஆத்திரம்தான். இதுதான், இவர்தான் காரணம் என்று தெரிந்தும், விசாரணைக்கென போலீஸ்‌ வந்து நிற்கையில் ஒரு அளவிற்கு மேல் அவரை வெளிப்படையாகத் திட்டவோ. சணடையிடவோ இயலாத நிலை.

பரசுராம் மற்றும் அண்ணன், தம்பி குடும்பத்தைத் தவிர
கண்ணெதிரே நடந்த சம்பவமும் தெரிந்த உண்மைகளும் கண்ணில் வழிந்த பயமுமாய் போலீஸின் முன்னே நின்ற மற்ற நான்கு குடித்தனக்காரர்கள்…

கல்யாணி இறந்ததற்கு முந்தைய தினம் அவசர அவசரமாக வீட்டைக் காலி‌செய்த பாலகிருஷ்ணன் குடும்பம் போலீஸாரால் சிறுகமணியிலிருந்து வரவழைக்கப்பட்டது…
அவரால் கல்யாணிக்குக் கிடைத்த ஆல் இந்தியா ரேடியோவில் பாடும் வாய்ப்பு பற்றிப் போலீஸ் துருவியது...

உள்ளூர் பிரபலமான கல்யாணியின் முடிவும் கணவர் பரசுராமனின் ஊரறிந்த கல்யாண குணங்களும்… மாய்ந்து மாய்ந்து ஸ்ரீரங்கம் பேசிய கதைகளில் முக்கியமான ஒன்றாகிப் போனது.

இயற்கை, கொலை, தற்கொலை என‌ மரணம் எத்தகைய தாயினும் பதிமூன்று‌நாள் காரியங்கள்‌ முடிந்து, ஒரு‌கை எண்ணெய் வைத்துக் குளித்தபின் உறவுகள்‌ ஊருக்குத் திரும்ப, அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்த பவானியும் கோவையில் படித்த‌ ஹரியும் கண் கலங்கியபடி‌ புறப்பட்டு விட, முசுடும்‌ அகந்தையுமான தந்தையுடன் இருக்க வேண்டிய‌ நிர்ப்பந்தம் சின்மயிக்கு.

பரசுராமின் அண்ணாவிற்கு தம்பியின் திருகுதாளங்களைப் பெரிதாகக் கண்டிக்காது, தன்னால் ஆனதைக் கொடுத்துவிட்டு‌ ஒதுங்கிக் கொண்ட குற்றவுணர்வோ‌ என்னவோ…

பெரியப்பா ”எல்லாத்தையும்‌ மறந்துட்டுப் படி சின்மயி, படிப்புதான் உன் கால்ல நிக்கற திடத்தைத் தரும். உங்கம்மாக்கு‌ பாட்டு மாதிரி உனக்குப் படிப்புன்னு நினைச்சுக்கோ. நீ நன்னா படிச்சு மேல வரணும். அப்பத்தான் கல்யாணிக்கு திருப்தியா இருக்கும்” என‌ சின்மயியின் சிந்தனையை அலைபாய விடாது, ஒருமுகப்படுத்தினார்.

பெரியம்மா அந்த வருடம் அவள் ப்ளஸ்‌டூ மற்றும் NEET பரீக்ஷை எழுதும் வரை தலை பின்னி, சமைத்துப் போட்டுப்‌ படிக்கும்போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டார். தனியே விடாது தன்னோடே படுக்க‌ வைத்துக் கொண்டார்.

எப்போதையும் விட எல்லை மீறிப் பேசினாலும் மனைவியின் இந்த முடிவை எதிர்பார்க்காத‌ பரசுராம் அந்தப் பதினைந்து நாளும் முகம் இறுக நின்றதோடு சரி. தன் இழப்பையோ, வருத்தத்தையோ அவர் வெளிக்காட்டவும்‌ இல்லை… அவரது துக்கத்தை‌ ஏந்துவாரும்‌ சீந்துவாரும் இல்லை. அவரே தன் ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து விரைவில் தன்னை மீட்டுக் கொண்டார்.

இவருக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று பிள்ளைகளைப் பெற்று, இரண்டு பக்க உறவுகளையும் அனுசரித்து, தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்துத் தன் குழந்தைகளுக்கு அரணாய் நின்றவளின் அருமை அவள் தன்னையே பலி கொடுத்தும் புரியவில்லையா… அல்லது புரியாததுபோல், வருத்தம் இல்லாதது போல் அலட்சியமாக நடிக்கிறாரா என்பது அந்தப் பரந்தாமனுக்கும் பரசுராமுக்குமே வெளிச்சம்.

சின்மயிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததுமே, தந்தையும் மகளும் தனிக்குடித்தனம் செய்யத் தொடங்க, பழைய பரசுராமன் மெதுமெதுவே வெளிப்படத் தொடங்கினார்.

பரசுராம் செய்த ஒரே நல்ல காரியம் ‘வீடு வித்த மொத்த‌ பணமும் எனக்குதான்’ என மல்லுக்கு நிற்காது, தன் கடன்கள் அடைந்தது போக மீதத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க சம்மதித்ததுதான்.

இடம் என்னவோ பெரிதுதான்… ஆனால், தற்கொலை நடந்த வீடு என்பதால் சல்லிசாகத்தான் விற்றனர்.

மைனர் பெண்ணான சின்மயிக்கு, ஹரி தன்னையே கார்டியனாக நியமித்துக் கொண்டான்.

ஹரி தன் புதிய‌ வேலை, அமெரிக்காவில் ஆன்சைட்‌ என்றிருந்தவன், உடன் வேலை பார்த்த பத்மினியுடன் காதல் என்றான்.

இவனது பின்னணி‌யை விசாரித்த அவளது பெற்றோர் “என் பொண்ணு உங்க அப்பாவோட ஒரே வீட்ல இருக்க மாட்டா. வீட்டை வாங்குவியோ, வாடகைக்குப் புடிப்பியோ… தனிக் குடித்தனத்துக்கு சம்மதிச்சா கல்யாணம்” என்றதற்கு தலையாட்டியதில் சூரபத்மனையே மிஞ்சினான் ஹரி.

பின்னே... காதலித்தவளே கன்டீஷன் போடுகையில், இவனது‌கதையைக்‌ கேட்டால் யார் பெண்ணைக் குடுப்பார்?

தான் வேலை பார்க்கும் பெங்களூரில் வீடு எடுத்து‌த் தங்கி இருப்பதால் , சின்மயியை அங்குள்ள கல்லூரியில் MD படிப்பில் சேரச் செய்தவன், அடுத்த ஏழே மாதங்களில் காதலித்து, திருமணம் முடித்து மனைவியுடன் தனியே சென்று விட்டான்.

சின்மயிக்கு எட்டுக் கண்ணும் விட்டெறியும் பத்மினியையும் சேர்த்து சமாளிக்கத் தேவையில்லை என்பதே ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. எதுவும் செய்யவில்லை என்றாலும், தயங்காது குறை சொல்பவள், வரப் போக இருந்தாலும்‌ தினசரி முட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லதல்லவா?

தடுப்பூசிகள் போடும் சின்மயி அத்தையிடம் “நீ வாங்கித் தர பொம்மைக்காகப் போனாப் போறதுன்னு சும்மா இருக்கேன்” என்னும் அளவு பத்மினியின் வாயையே மூடுமளவு பேசும் மூன்று வயது மாமியாராய் ஒரு மகள் இருக்கிறாள்.

கணவன், குழந்தைகள், ராணுவ வாழ்க்கையின்‌ தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும்‌ அது தந்த வசதிகள் என பவானியை இழுத்தது. இடையூறில்லாத‌ வளமையான‌ வாழ்க்கையும் ராணுவ அதிகாரியின் மனைவி என்ற‌ அந்தஸ்தும் அவனது பதவியும் தனியானதொரு மிடுக்கையும் தன்னம்பிக்கையையும் தந்தது.

‘இடுப்புல ரெண்டு காசு வந்தா அசப்புல ரெண்டு வார்த்தை வரும்’ என்பதை பவானி மெய்ப்பித்தாள். தந்தையுடன் பேசாதவள், அக்கறை என்ற‌ பெயரில் தூரத்து இடி முழக்கமாக‌ சின்மயியிடம் அதிகாரம் செலுத்த முற்பட்டாள். கல்யாணி‌ இறந்த புதிதில் சமைத்ததையும்‌ சாப்பிட்டதையும் தினசரி நடப்புகள் அனைத்தையும்‌ தெரிந்து கொள்ள எண்ணித் தன்னிடம் பேசுபவளை சமாளிக்க முடியாமல் திணறுவாள் சின்மயி.

“நேத்திக்கு‌ பார்ட்டி இருந்தது. மெனுவில் பனீர், ராஜ்மா, சோளே, பிரியாணி என அடுக்குபவள், இங்கு வரும் சமயங்களில்‌ ஒரு ரசம் கூட வைத்ததில்லை.

பவானிக்குத் திருமணமான இந்தப் பதினைந்து வருடங்களில், கல்யாணி இருந்தபோதும் சரி, அதற்குப் பின் சின்மயி தனியே இருந்தபோதும் சரி…

‘உனக்கு இப்ப லீவுதானேடீ, நேவல் ஸ்டேஷனுக்கு மும்பை வாயேன்…’

‘இப்ப அந்தமான்ல இருக்கோம். இது ஒரு சான்ஸ்னு ஒரு பத்து நாளைக்காவது வா சின்மயி…’

ம்… எங்கே? கணவன் பாஸ்கர்‌ அவளுக்கு மேல். என்னவோ பிறக்கும்போதே நேவி‌ யூனிஃபார்முடன் ஆஃபீஸராகப் பிறந்ததாக நினைப்பு.

தந்தைக்கு தங்கை கல்யாணியின் மீதிருந்த அன்பும் அக்கறையும்‌ மகனுக்கு‌ இல்லை.‌ மாறாக, அத்தையிடம் ஒருவித ஏளனமும்‌ ஆத்திரமும் இருந்தது.

ஆனால், ஆடு பகை, குட்டி உறவு என்பதைப் போல், அழகான, எம்எஸ்ஸி படித்த, பவானிதான்‌ பெண் என்றதும், மறுபேச்சு பேசாது திருமணம் செய்து கொண்டான்.

இங்கு வரும்போதெல்லாம்‌ ஏதோ போனால் போகிறது என்ற பாவனையுடன் இருப்பான். கணவனும் மனைவியும் எப்போதும் மிஸஸ் அண்ட் லெஃப்டினன்ட் கமாண்டராகவே இருப்பர்.

பரசுராமை கேட்கும் தைரியமோ, அவரிடம் பேசுமளவு உறவோ இல்லாததால், படுக்கையறை, குளியலறை எல்லாம் பவானி‌ குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, சின்மயி காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவாள்.

சின்மயி ஓய்வறைகள், குளியலறைகள், கிணற்றடி, முற்றம், கூடம், தாழ்வாரம், மொட்டைமாடி, திண்ணை என எல்லாவற்றையும்‌ பகிர்ந்து பழகியவள்தான். ஆனால், அவளுக்கு முன்னே பிறந்து, திருமணம் ஆகும் வரை அதே வீட்டில்‌ இவளை விட‌ அதிக வருடங்களைக் கழித்த பவானிக்கும்‌ அதேதானே?

அந்த இடத்திலிருந்து சென்ற பெற்றோரே இப்படி எனில், ராணுவ குடியிருப்பில் பெரிய வீடுகளில் தனியறைக்குப் பழகிய குழந்தைகளை‌ என்‌ன சொல்வது?

பவானி காசு, பணத்தை எதிர்பார்ப்பது இல்லைதான். அவள் அடித்துக் கேட்டாலும் இக்கட டப்பு லேது. திருமணமாகிப் பதினாறு வருடங்கள் கடந்த பின்னும், தாய் இல்லாத நிலையிலும் பிறந்த வீடு தன்னை சீராட்ட வேண்டும் என்ற பவானியின் ஆசையும் நியாயமானதே. அறுபத்தி மூன்று வயதில் தந்தை திடகாத்திரராக, இளமையாகவே இருக்கிறார். செய்யலாம்தான். ஆனால்,
தங்கை ஏன் சீராட்ட வேண்டும்?

திருமணம் ஆகாது பிறந்த வீட்டிலேயே இருக்கும் தங்கைக்கே எந்தச் சீராட்டும் பாராட்டும் இல்லை என்பதை பவானியாகவே உணர்ந்தால்தான் உண்டு.

மற்றபடி, தேனாகப் பேசுவாள். கதை கதையாகச் சொல்லுவாள். வாயால் வடை என்ன, முறுக்கே சுற்றுவாள்.

பவானி வந்தால் ஹரியும் பத்மினியும் அடிக்கடி இங்கு வந்து விடுவர். வெகு சில சமயம் பவானியும் குழந்தைகளும் அங்கு செல்வர். இன்று வார இறுதி என்பதால் பத்மினியும் ஹரியும் இங்குதான். அவர்கள் மகள் குதித்துக் கொண்டிருக்கிறாள்.

தந்தை என்ற ஒருவர் அங்கே இருப்பதை அவர்களும் பொருட்படுத்துவதில்லை. அதேபோல், பரசுராமும் அவர்களின் வரவையும் இருப்பையும் மதிப்பதில்லை. தன் இடம், தன் இஷ்டம் என்ற புள்ளியில் இருந்து அவர் விலகுவதும் இல்லை. இடையில் சிக்கித் தவிப்பது சின்மயிதான்.

பவானியின் குழந்தைகளுக்கும் தாத்தா என்ற அபிமானம் கிடையாது எனில், தாத்தா அதற்கு மேல். பேப்பர், டீவி என அவர்கள் மோதிக் கொண்டு குழந்தைகள் பதிலுக்கு‌ பதில் பேசுவதை பவானி வேடிக்கை பார்ப்பதோடு சரி.

சின்மயிதான் சில நேரம், தந்தையை நினைத்துப் பரிதாபப் படுவாள். உண்மையாகவே‌ அவருக்கு பேரன் பேத்தி‌ மேல் கொஞ்சமும் அன்போ ஆசையோ‌ இல்லையா என்று ஆயாசப்படுவாள்.

இதோ, இப்போது கூட பவானியின் மகன் ரிமோட்டை தனக்குக் கீழே ஒளித்து வைத்திருக்கிறான். இது பவானிக்கும் தெரியும்.

‘அம்மா இருந்தபோதே கல்யாணமாகிப் பிறந்த பவானியின் குழந்தைகளுக்கே இந்தக் கதி எனில்… எனக்குக் குழந்தை பிறந்தால்…?’

‘ரொம்ப முக்கியம்’

“குழந்தைகளுக்கு ஒரு இடத்துக்குப் போனா எப்படி நடந்துக்கணும்னு தெரிய வேண்டாமா? அதுசரி, முதல்ல பெத்தவாளுக்குத் தெரிஞ்சாதானே… இதுல மிலிட்டரியாம்… டிஸிப்ளினாம்…”

தந்தையின் குரல் உரத்து ஒலித்ததில் தன்னை மீட்டுக்கொண்ட சின்மயி கலவரத்துடன் பார்க்க, பவானி

“எங்கப்பா எனக்கு சொல்லிக் குடுத்ததைத்தான் என்னால என் பசங்களுக்கு சொல்லித் தர முடியும்” என்றாள் அலட்சியமாக.

***********************

சின்மயி ஹாஸ்பிடல் சென்றிருக்க, விடுப்பில் இருந்த பத்மினி தன் வழக்கம் போல் ரீல்ஸ் பார்த்தபடி பவானியுடன் பேசிக்‌ கொண்டிருந்தாள். கடந்து போன ரீல்ஸில் கண்ட முகம் மிகப் பரிச்சயமாக இருப்பது போல் இருந்தது.‌

இசை, பாடல் சம்பந்தப்பட்ட‌ வீடியோக்களின் திரிகள் மீண்டும் மீண்டும் பகிரப்படுவதோடு, நாதம் ம்யூஸிகாவின் ஸ்டூடியோ உள்பட ஜெயநகரைச் சுற்றியே இருப்பதால், அல்காரிதம் செய்த வேலையில், சின்மயியுடன்‌ தொடர்பில் இருந்த சிங்கபிரானின் இசை ரீல்களும், BTS (Behind The Scenes) எனப்படும் திரைக்குப் பின் நடப்பவைகளும் பத்மினியின் ஃபீடில் வரத் தொடங்கி இருந்தது.

நாதம் ம்யூஸிகா ராக் பேண்டின் பன்னிரெண்டாவது ஆனிவர்ஸரியில் சிங்கபிரானும் சின்மயியும் அருகருகே நின்று பேசுவதை ரீல்ஸில் பார்த்த பத்மினி அப்போதைக்கு அதை மறந்து போனாள்.