• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 1

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
54
195
83
Chennai
நாணங்களும் எதற்காக? 1

வம்பர் மாத வடகிழக்குப் பருவமழை கடன் வாங்கி வெளுத்ததில் தென்னகமே மிதக்க, பெங்களூர் சிறிது கூடுதலாகவே நடுங்கியது. மழை, வார இறுதி எல்லாம் சேர, தெருக்கள் வெறிச்சோடி இருந்தது.

பசுமையான, பழமையான, பணக்கார பங்களாக்களும் நடுநடுவே ஓரிரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளும் சூழ்ந்த‌ ஜெயநகர். நேரம் இரவு ஒன்பதை நெருங்கியது.

அந்தப் பகுதியில் வட்ட வடிவமாக இருந்த அம்ரபாலி ஷாப்பிங் ஆர்கேட்- ல் இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்க, வலப்புற நுழைவாயிலில் வந்து நின்ற‌து நெருங்க‌க் கோடி ரூபாய்களை விழுங்கி இருந்த அந்த BMW X5 கருநீல நிற கார்.

காரிலிருந்து‌ இறங்கும் முன்பே விரித்த‌ குடையும் பனித்த சடையும், அந்த மழை இரவிலும் குளிர் கண்ணாடியுமாக எதிரே தெரிந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தவனின் பின்னால் இருந்து ஒரு குரல்

“இங்கதான்டா ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல, போ. திறந்திருக்கா?”

“மழையைத் தவிர ஒன்னும் தெரியல. It’s raining cats and dogs. நீ‌ கார்லயே இரு கேசவ்.‌ வண்டியத் தூக்கிடப்‌போறான்” என்றவன், தோளில் சாய்த்(ந்)திருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தையுடன் மழையில் பாய்ந்து, முதல் மாடியை நோக்கி ஓடினான்.

அந்தச் சிறிய க்ளீனிக்கை ஒரு புறம் மகப்பேறு மருத்துவரும் இன்னொரு புறம் குழந்தை நல மருத்துவரும் இரண்டாகப் பிரித்துக் கொண்டிருந்தனர்.
ம.பே.‌ம பக்கம் முன்பே விளக்குகள் அணைக்கப் பட்டிருக்க, குழந்தை டாக்டர் தன் ரெயின் கோட்டை அணிந்தபடி, ரிஸப்ஷன் பெண்ணிடம் “மெயின் ஸ்விட்ச் ஆஃப் மாடி” என்றதில்‌ துளியும்‌ கன்னட வாசனை இல்லை.

வேக எட்டுடன்
அருகில் நெருங்கிய காலடி ஓசையில் நிமிர்ந்தவளிடம் “ஸாரி மேம், கோல்டிக்கு ஈவினிங்ல இருந்து சடனா ஃபீவர்…”

டாக்டர்‌ கை கடிகாரத்தைப் பார்க்க, டோக்கன் பெண் புகைந்தாள்.

“ப்ளீஸ் மேம்…”

“இட்’ஸ் ஓகே, கம் இன்”

மீண்டும் விளக்குகள் ஒளிர, குழந்தையைப் பரிசோதனை மேஜையில் கிடத்தச்‌ சொல்லிக்‌ கையுறை அணிந்தவள் குழந்தையிடம் கவனமானாள்.

“காட்.. 104. ஹெவி‌‌ கன்ஜஷன் இருக்கு. வைரல்தான். ஒரு‌ இன்ஜெக்ஷன் போடறேன்.‌ நெபுலைஸ்‌ பண்ணனும்”

பிள்ளை “டாடி, டாடி” எனச்‌ சிணுங்கி அழ, அந்த‌ டா(தா)டி யாருடனோ அலைபேசிக் கொண்டிருந்தான்.

ஊசி போடும்‌ முன் சிறிய மிக்கி மவுஸ் பொம்மையைக் கையில்‌ கொடுக்க, சோர்விலும் சிரித்தாள்‌ குழந்தை.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் “இப்ப கடை திறந்து இருக்குமான்னு தெரியலை. இந்த‌ மெடிஸினைக் குடுங்க’ என அவளிடம் இருந்த மாதிரிகளைத்‌ தந்தாள்.

“திரும்ப வரணுமா டாக்டர்?”

“தேவை இல்லை. சாதாரண வைரல்தான். ஜுரம் நின்னாலும் ஃபுல் கோர்ஸ் மருந்து குடுக்கணும். அப்பதான் இன்ஃபெக்ஷன் போகும். ஜுரம்‌ வந்தா நார்மல் வாட்டர்ல துடைச்சு‌ விடுங்க”

பணத்தை ஜி‌ பே‌ செய்து, மகளைத் தூக்கிக் கொண்டு “தேங்க் யூ டாக்டர்” என்றவன்‌ டாக்டரை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற, உடனிருந்த அந்தப்‌ பெண் பூட்டைக் கையில் எடுத்து விட்டாள்.

முன்னே செல்பவன் காரில் ஏறுவதையே யோசனையுடன் பார்த்தபடி கீழிறங்கினாள் அந்த டாக்டர்.

காரில் ஏறி‌ அமர்ந்த‌வன், திடும்மென “கேசவ், ஒரு நிமிஷம் கோல்டியப் புடி” எனக் குழந்தையைக் கொடுத்து விட்டுக் கதவைத்‌ திறந்து மழையில் நனைந்தபடி‌ அந்தப்‌ பெண்ணை‌ நோக்கி ஓடினான்.

“புல்புல்” என்று கத்தியவனின்‌ குரல் மழையோசையில் கரைய, அவள்‌ தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்துத் தண்ணீர்‌ சாலையில் கலந்தாள்.

அவன் கண்ணில்‌ விழும் மழையைக் கையால் தடுத்தபடி, அண்ணார்ந்து‌ பார்க்க,
Dr.சின்மயி பரசுராம்‌ MD (Paediatrics) என்ற பெயர்ப் பலகை‌ தெரிந்தது.

கையில் கிடைத்தவளை‌த் (மீண்டும்) தவற விட்ட வருத்தமும், க்ளீனிக் இங்கன்னா தினமும் இங்கதானே‌ வருவா’ என்ற‌ ஆறுதலுமாக, பௌர்ணமி நிலவில் கடற்கரையில் நடப்பவன் போல் மழையில் நடந்து வந்தவனை முறைத்தான் கேசவ்.

“இப்ப ஏன்டா நனைஞ்ச, கார்‌ ஃபுல்லா ஈரம்”

“ம்ப்ச்…‌அமைதியா வாடா”

கேசவ் “அதை உன் கோல்டி கிட்ட‌ சொல்லு”

குழந்தை “டாடி” எனத் தாவ,

பின் சீட்டில் கிடத்திப் பிடித்தபடி அருகே அமர்ந்து கொண்டவனுக்கு உடல் சிலிர்த்து உதறியது நிச்சயம்‌ குளிரினால் அல்ல.

அந்தக்‌ கச்சிதமான பங்களாவின்‌ போர்ட்டிகோவில்‌ கார்‌ வந்து‌ நின்றதையோ, கேசவ் குழந்தையுடன் உள்ளே சென்றதையோ உணராது காரிலேயே இருந்தவனைக் கலைக்க ஹாரனை ஒலித்து உலுக்கிய கேசவ்

“டேய், பரவசமா, சமாதியா… உள்ள வாடா, பசிக்குது”

காரிலிருந்து இறங்கப் போனவனின்‌ காலில், குழந்தையின்‌ கையிலிருந்து கீழே விழுந்திருந்த மிக்கிமவுஸ்‌ பொம்மை‌ இடற, அதைக்‌ கையில் எடுத்தவன் ‘ஸீ யூ சூன்‌ புல்புல்’ என முணுமுணுத்துக் கொண்டே உள்ளே‌ சென்றான்.

********************

பேத்திக்கு‌‌ பாலும் மருந்தும் கொடுத்து, மடியில் போட்டுத் தட்டிய பாலாமணி, அறவே வெறுக்கும் அரிசி உப்புமாவை அமைதியாக விழுங்கும் மகனைப்‌ பார்த்தவர், தங்கை மகனிடம் ஜாடையிலேயே ‘என்ன?’ என்று‌ கேட்க, கேசவ்‌ தெரியாது‌ என்பதாகத் தோளைக்‌ குலுக்கினான்.

தூங்கி விட்டதாக நினைத்த‌ குழந்தை இருமத் தொடங்கி, குடித்த‌ பால், மருந்து, கோழை என வெளியேற்றி, அம்மா‌ என்று ஸ்ருதி சேர்த்தாள். துடைத்து, உடை மாற்றியவர்,

“ரெண்டு பேரும் கனடால தனியா இருக்கறது போறாதா, சின்னக் குழந்தைய விட்டுட்டு இப்ப என்னத்துக்கு கூர்க். தேம்பித் தேம்பி அழறது பாரு. என் தங்கம்மா… அழாதடீ கண்ணா”

பாலாமணி வான்கூவரிலிருந்து இரண்டுமாத விடுப்பில் வந்திருக்கும்‌ இரண்டாவது மகனையும் மருமகளையும் அர்ச்சிக்கத் தொடங்கினார்.

வேலையை விட்டு விட்டு 24*7 குழந்தையுடன் வீட்டு வேலை அனைத்தையும் தனியே சமாளிக்கும் மனைவியை சமாதானப் படுத்தவென மூன்று நாள்களுக்கு கூர்க் சென்றிருக்கிறான். முந்தைய நாள் காலையில் அவர்கள் புறப்பட்டதில் இருந்து குழந்தையும் வேற்று முகமின்றி சமர்த்தாகத்தான் இருந்தாள். இன்று மாலையில் காய்ச்சல் வந்து காரியத்தைக் கெடுத்து விட்டது.

“விடேம்மா… என்ஜாய் பண்ணிட்டுதான் வரட்டுமே. சத்தம் போட்டு கோல்டிய பயமுறுத்தாத… நீ வாடா செல்லம்” எனத் தூக்கித் தோளில் சாய்த்தபடி நடக்கத் தொடங்கியவன், கேசவும்‌ பாலாமணியும் உள்ளே சென்று உறங்கிய பின்னும் குழந்தையைக்‌ கீழே இறக்கவில்லை.

அவன் மனம் முழுவதும் சின்மயிதான். முற்று முழுதாகப் பதினான்கு வருடங்களுக்குப் பின்… புல்புல்!

இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை மாற்றங்கள்?

இத்தனை சமூகவலைத் தளங்கள் இருந்தும் அவளோடு தொடர்பின்றிப் போனதும்…

நான்கு வருடங்களுக்கு முன் அவளைத் தேடிச் சென்றபோது கிடைத்த செய்தியும்…

தன்னைப் பார்த்து ஒரு‌நொடி‌ சுளிந்து இயல்பான அவளது புருவமும், குழந்தை டாடி என்றதில் சுருங்கிய அவள் கண்களுமே சின்மயி தன்னை அடையாளம் கண்டு கொண்டதற்குச் சான்று!

‘என்னைத் தெரிஞ்சும்‌ எங்கிட்டப் பேசாம‌ போயிடுவியா புல்புல் நீ?’

‘நேர்ல பார்த்த அப்புறமும் கூட எங்கிட்டப் பேசாம உன்னால இருக்க முடியுமா புல்புல்?’

‘நீ‌ பேச வேண்டியதுதானேடா?’

‘வெளில வந்து அவதானான்னு பேரை கன்ஃபர்ம் பண்ணிக்கற உனக்கு‌ அவ பேசலைன்னு குறை வேற…’

‘ஒருவேளை அவளுக்கு என்னை அடையாளம் தெரியலையோ என்னவோ?’

‘ராதர், புல்புல் என்னை இப்டி ஒரு‌ கெட்அப்ல நிச்சயமா எதிர்பார்த்திருக்க மாட்டா’

‘மீடியா முழுக்க இருக்கேன். ஒரு தரம் கூடவா என்னைப் பார்க்கலை?’

‘ஏது, உன்னைத் தெரியலைன்னா குத்தமா, கொஞ்சம் ஓவர்தான்டா’

‘அவ நிலமை‌ தெரியாம எதுவும் சொல்லாதடா’

பாலாமணி எழுந்து வந்து “அவளைப் படுக்கப் போட்டுப் போய்த் தூங்கு போ”

“அழுதா குரல் குடும்மா” என்றபடி‌ மாடி ஏறினான்.

சின்மயியை தன் ஞாபகங்களில் தேட வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. மறக்கவும் நினைக்கவும் அவசியம் இல்லாது, பார்க்காதபோதும் அவளது பெயரின் பொருள் போல் அவனின் உணர்வாக, பிரக்ஞையாக இருப்பவள்.

அழகும் ரசனையும் இனிமையும் நிறைந்த அனைத்துமே அவனுக்கு அவன் புல்புல்லோடு தொடர்புடையதுதான்.

ஆனால்‌ அது பின்னால் குடுமி போல் சிண்டுடன்‌ புல்புல் பறவையைப் போலவே தலையை ஆட்டி‌ ஆட்டி வாய் ஓயாது பேசும் அந்தக் குட்டி புல்புல்.

இன்று பார்த்த இந்த டாக்டர் சின்மயி… அழகி!‌ அதுவும் அந்தக் கண்ணு…

‘என்‌ குட்டி புல்புல்‌ இப்ப டாக்டராமே, பார்றா!’

‘அவ அப்பன், அந்தப் பரதேசி அவளை எப்படிப் படிக்க விட்டான்?’

‘நாளைக்கே அவளைப் போய்ப் பார்த்துடணும்’ என்ற முடிவோடு கழுத்துச் சங்கிலியை வருடியபடி மெல்ல உறங்கிப்போனான்.

*****************

கொட்டும் மழையில் வந்த சின்மயிக்கு கதவைத் திறந்த பரசுராமிடம் அக்கறையோ கவலையோ கரிசனமோ மருந்துக்கும் இல்லை. மாறாக, ஆராய்ச்சியுடன் மகளைக் கீழ்ப்பார்வையாகப் பார்த்தவர், அங்கு எதுவும் தென்படாததில், தன்‌ ஐ பேடில் பொய் ஊடகங்களின் புரட்டு வீடியோக்களைப் பார்க்கும் சமூகக் கடமையைத் தொடர்ந்தார்.

சின்மயி கசகசப்பைக் போக்கக் குளிரைப்‌ பொருட்படுத்தாது குளித்து விட்டு வந்து‌ சமையலறைக்குச் சென்றாள். காலையில் சமைத்தவை எதுவும் மீதமின்றி சுத்தமாகக் கழுவித் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. போகிறது, சாப்பாடு இல்லாவிட்டாலும் நல்லவேளை, சுமித்ரா வந்து‌ வேலை செய்து விட்டுச் சென்றிருக்கிறாள்.

சின்மயிக்கு பசித்தது. சமைக்க சோம்பலாக இருந்தது. அதைச் சொல்ல‌முடியாது. ஸ்விக்கியில் வரவழைக்கலாம். ஆனால், அதற்கு

‘ஒரு பொண்ணுக்கு‌ இத்தனை சோம்பேறித்தனம் உதவுமா…‌அதென்ன அப்படி ஒரு நாக்கு, இழுத்து வெச்சு அறுக்காம...’ என்று‌ தந்தையிடம் பேச்சு கேட்கத் தயாராக இருக்க வேண்டும்.

இதற்கும் அநேகமாக மாலையில் அவர்‌ போய் ஹோட்டலில் உண்டுவிட்டு வந்திருப்பார். ஒன்பது மணிக்கு மேல் வீடு வரும் மகளுக்கு எதுவும் வாங்கியும்‌ வைக்க‌மாட்டார். தனக்கு சமைக்கத் தெரியாது என்று‌ சொல்வதில் ஏனோ அத்தனை பெருமை.

கிச்சடி செய்யலாம் என அரசி, பருப்பை எடுத்தவளுக்கு ‘அப்பா‌க்கும் சேர்த்து சமைக்கணுமா வேண்டாமா?’ என்ற சந்தேகம்.

வேணும், வேண்டாம், சாப்பாடு ஆயிற்று இல்லை என எதுவும் சொல்லாது, இவள்‌ என்ன‌ செய்கிறாள் என‌ நோட்டம் விடுவார்.

இப்போது அவரைக் கேட்டாலும் அவருக்குத் தராவிட்டாலும், இருக்கட்டும் என அதிகம் சமைத்தாலும் திட்டு விழும்.

‘Daddy’s little Princess - யாருடா‌ கண்டு புடிச்சான்‌ இதை?’

‘என்னை வேணா அப்பாவின் அடிமைனு சொல்லலாம்’

இன்று இருக்கும் மனநிலையில் அவர் என்ன சொன்னாலும் புத்தியில்‌ பதியாது போல்‌ இருந்தது. எதையாவது விழுங்கிவிட்டு, அக்கடாவென அவனை அசைபோட விரும்பினாள்.

ஒரு தட்டில்‌ கிச்சடியைப் போட்டுத் தந்தையின் எதிரே இருந்த காஃபி டேபிளில் வைத்து “சாப்பிடு…” என்று சொல்வதற்குள்

“நாய்க்கு சோறு வெக்கறாப்போல நீ பாட்டு‌ வெச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்?”

“...”

“என்னடா, வயசானவன் வீட்ல‌ இருக்கானே, ஒரே மழையா இருக்கே… மத்யானம் என்ன‌ செஞ்சான், காஃபி குடிச்சானா, சாப்பிட என்ன வேணும்… ஹும்… ஒரு வார்த்தை… ஒரு பேச்சு…. ஒன்னு கிடையாது…”

“...”

“பதில் மட்டும்‌ பேசிடாத. முத்து உதுர்ந்துடப் போறது… சரியான ஊமைக் கோட்டான். டாக்டர்னு வெளில சொல்லிடாத…இதுக்கெல்லாம் எப்படித்தான் எம்பிபிஎஸ், எம்டின்னு டிகிரி‌ குடுத்தானோ”

ஒரு பக்கம் தன்போக்கில் வசை பாடியபடி, மளமளவெனத் தட்டையும் காலி செய்த பரசுராம் “பொண்கள்லாம் தட்டைப் பார்த்துப் பரிமாறக் கத்துக்கணும்…”

‘சிலருக்கு‌ இரட்டை‌ நாக்குனு சொல்லுவாளே, அப்பாக்கு ரெட்டை இல்லை… மல்டிபிள் நாக்கு, மல்டிபிள் வாய்’ என்று நினைத்தபடி கிச்சடியை எடுத்து வந்தாள்.

பரசுராம் வாஷ்பேஸினில் தட்டை அலம்பிக் கிச்சன் சிங்க்கில் கொண்டு வந்து போட்டார். இதுவே அவள் அண்ணா ஹரியின் மனைவி பத்மினியின் கைங்கர்யத்தினால்.

சின்மயி சமையல் அறையிலேயே தனக்கென சிறிதாக வாங்கிப் போட்டிருந்த மேஜை நாற்காலியில் அமர்ந்து
நிம்மதியாக உண்ணத் தொடங்கினாள்.

மழைக்கு இதமாக இஞ்சியைத் தட்டிப் போட்ட டீயுடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

மழை, இருட்டு, க்ளீனிக்கை மூடும் அவசரம்‌ என சின்மயி முதலில்‌ அவனைக் கவனிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பிரிபிரியாய் விரிந்து தோளைத் தாண்டித் தொங்கிய தலைமுடியும், கருப்புக் கண்ணாடியும், காதுகளில் பளீரிட்ட எமரால்ட்‌ தோடுகளும்… சத்தியமாக அவனை அந்தத்‌ தோற்றத்தில் கற்பனை செய்யவில்லை என்பதோடு, குழந்தையைக் கவனிப்பதில் கவனம் செலுத்தினாள்.

தன்னையும் தன்‌ செயலையும் உறுத்தும் பரிச்சயமான அவன் பார்வையை உணர்ந்ததுமே, யாரென்று புரிந்துவிட்டது.

‘என் சிறு வயதின் ஆகப் பெரிய மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அவனது நட்பும் அவனோடான பொழுதுகளும்தானே’

‘இதோ, இந்த‌நொடி வரை நான் காண ஏங்கும், என்னைப் புரிந்த, எதிர்பார்ப்புகளற்ற என் தோழன்’

‘என்‌ நான்காவது‌ வயதில் எனக்குக் கிடைத்த, என்னைவிட ஆறு‌ வயது மூத்த என் boy bestie”

‘அப்படியும் சொல்ல முடியாது. அவனிடம் எனக்கு‌ ஆண், பெண் வேறுபாடோ, எதையும் சொல்லவும் கேட்கவும் தயக்கமோ இருந்ததே இல்லை. இவ்வளவு ஏன், அந்த‌ இளம் பிராயத்திலுமே என் அப்பா, அண்ணா, தாத்தாவிடம் நான் உணர்ந்த பால் வேற்றுமை எனக்கு அவனிடம் இம்மியும் தோன்றியது இல்லையே’

அவன்தான் என்று அடையாளம் கண்ட கணம் குஷியும் உற்சாகமும், வருத்தமும் வேதனையும் தளும்பியதுதான். இத்தனை வருடங்களாக அவனிடம் பகிர‌வும், அழுது ஆறுதல் தேடவும் நினைத்தவன் எதிரில் நின்றும், எத்தனையோ சொல்ல நினைத்தும் பேசத் தோன்றாமல், பேச முடியாமல் அவளைத் தடுத்தது எதுவெனத்‌ தெரியவில்லை.

‘ஒருக்கால், அவனது தோற்றமும் தோரணையும் அவன் வந்த‌ காரும் என்னை மருட்டி விட்டதோ?’

சின்மயிக்கு அவனாக ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே உடைந்திருப்பாள் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

மழையினூடே அவன் தன் பெயர்ப் பலகையைப் பார்த்ததும், குழந்தையைக் காரில்‌ இருத்திவிட்டுத் தன்னிடம் பேச ஓடி வந்ததும்…

‘அவனாவது என்னை மறக்கறதாவது… சான்ஸே இல்ல…’

‘அப்ப‌ இத்தனை வருஷமா அவன் ஏன் என்னைத்‌ தேடலை?”

‘தேடறதுன்னா… தெருத் தெருவா‌ போய் ஏலம் விட முடியுமான்ன?’

‘ஊரே இன்ஸ்டா, எஃப்பி, டம்ளர், டவரான்னு திரியறப்ப, நான் வெறும் இமெயில், வாட்ஸ்ஆப்புக்கே உத்திரவாதம்‌ கேட்டா எப்படி, எங்கேன்னு தேடுவான்?’

‘ஏன், நீதான்‌ அவனைத் தேடறது?’

‘...’

இதுவரை சமூக வலைத் தளங்களில்‌ யாரையும் தேடியிராத சின்மயி, இன்ஸ்டாவில் தொடங்கிய அக்கவுன்ட்‌டை மூன்றாம் நாளே மூடிவிட்ட சின்மயி, மெதுவே ஒவ்வொரு எழுத்தாக அவன் பெயரை கூகுளில் டைப் செய்து தேடினாள்.

சிங்கபிரான்

எழுதி க்ளிக்கிய மறுநொடி வந்து விழுந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என விக்கிபீடியா வரை விரவி இருந்தான்.அன்று விரிந்திரிந்த சடை பெரும்பாலும் அழகான, ஸ்டைலான கொண்டையாக இருந்தது.

அவனது அதிகாரபூர்வமான பக்கங்களில் ப்ளூ ஜீன்ஸ், ஒயிட் ஷர்ட்டில், காதில் தங்க வளையங்களுடன் அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், அள்ளி முடிந்த இன்ஃபினிடி‌ கொண்டையுமாக கீ போர்ட், கிடார், வயலின், ம்யூஸிக் மானிட்டர் முன் எனப் புகைப்படங்கள் கொட்டியது.

சிங்கபிரான், கிருஷ்ணன் மேனன், விக்ரம் ஜோயல் என்ற மூன்று இளைஞர்கள் இணைந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சென்னை ஐஐடியில் படிக்கும்போது ‘நாதம்‌ மியூஸிகா’ எனும் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ராக் பேண்டை(Rock band) நிறுவி இருந்தனர். இன்று அதில் ஆணும் பெண்ணுமாக பதினாறு பேர் இருக்கின்றனர். இதில்‌ மூன்று பேர் வடமாநிலத்தவர். அத்தனை பேரும் இன்ஜினீயர்கள். அதனால் எல்லோருக்கும் பொதுவான இடமாக பெங்களுரு.

குழுவின் சவுண்ட் இன்ஜினீயர் கேசவுடன் இவர்கள்‌ மூவரும் சேர்ந்து ஒரு சாஃட்வேர் சர்வீஸ் ஸ்டார்ட் அப்பும் நடத்துகின்றனர்.

இதுவரை கர்நாடக, இந்துஸ்தானி இசையை அடிப்படையாகக் கொண்ட பிரபலமான திரையிசைப் பாடல்களின் கவர், ட்ராக் மற்றும் ஏழு ஆல்பங்களை வெளியிட்டு இருந்தனர்.

கடந்த நான்கு வருடங்களாக இவர்களது இசைக்குழுவிற்கு உலகெங்கும் அமோக வரவேற்பு இருக்கிறது. யூட்யூப் வீடியோக்களின் பார்வையாளர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை‌ லட்சங்களில் இருந்தது.

அவசரமாக ஹெட்ஃபோனைத் தேடி எடுத்துப் போட்டுக்கொண்ட சின்மயி யாரோ ஆட்கொண்டது போன்ற வியப்புடன் மியூசிகாவின் ஒரு வீடியோவை பார்க்க, சிங்கபிரான் ‘பிபரே ராம ரஸம்’ என உருகினான்.

ஆனால், அந்த மிக மிருதுவான பாடலின் நடுவே அதே யமுனா‌ கல்யாணியை இசைக்கருவிகளில் வேகம் கூட்டி வாசித்து ராக் இசையின் அனுபவத்தைத் தந்து, மீண்டும் ராம ரஸத்தில்‌ இணைக்க, சின்மயிக்குப் புல்லரித்தது.

அவள் அம்மா கல்யாணியின்‌ குரல் காதில் ஒலித்தது.

‘ஒரு வேலை செஞ்சா‌ நறுவிசா செய்யணும். ஆலாபனை பண்ணும்போது சிரிக்கக் கூடாது. சிங்கத்தைப் பாரு, எப்டித் தயங்காம, வெக்கப்படாம ப்ராக்டீஸ் பண்றான்’

மற்றவர்கள் ‘சிங்கத்தைப் பாரு’ என்றதில் சிக்கி கெக்கெபெக்கே என்று சிரிப்பர்.

அன்று அவன் கடைசியாக பாடிக் கேட்டபோது இருந்த பொதிப் பருவத்து உடைந்த குரல் இன்று மாறிப்போய் கம்பீரமும் இனிமையும் இழைவுமாய் இசைத்தது சிங்கபிரானின் குரல்.

அடுத்த வீடியோவில்,

ஓர் நவமி் அதில் நிலவெலாம்
புலர நினைவெல்லாம் மலரவே
உலகு புகழ்
வைபோகம் கொண்டாட…

ராம நாமம் ஒரு வேதமே
பாடலும்‌ அதைத் தொடர்ந்த இடையிசையும் (interlude) , அதைத் தொடர்ந்து

‘கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்’

என அதே ராகத்தில் அமைந்த
மாசறு பொன்னே வருக
பாட்டு, மீண்டும் இடையிசை,

‘தினம் நீ சூட்டிடு பாமாலை....
இது தான் வா..சனைப் பூமாலை’ என்ற முந்தைய பாடலின் வரிகளோடு முடிந்த ஆல்பத்தில் மாயாமாளவகௌளை ராகம் நின்று பேசியது.

முக்கியப் பாடகன் சிங்கபிரானாக இருப்பினும், இசைக் கருவிகளுக்குப் பின்னே இருந்தவர்களும், கோரஸ் பாடுபவர்களும் தேவையான இடத்தில் இணைந்து கொண்டனர். அவர்களின் திறமையும் முயற்சியும் ஒருங்கிணைப்பும் வியக்க‌ வைத்தது.

தனக்குத் தானே ‘Awesome’ என்றபடி பனித்திருந்த கண்களைத் துடைத்துக் கொண்ட சின்மயி பெருமிதமாக, மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

‘என் ச்சிங்கா!’

கூடவே ‘டாடி’ என்ற குழந்தையின் சிணுங்கலும், மகளை அவன் அரவணைத்த‌ விதமும் நினைவிலாடியது.

‘உடம்பு சரி இல்லாத‌ குழந்தையை‌ அம்மா இல்லாம‌ டாக்டர் கிட்ட தூக்கிண்டு வரணும்னா எத்தனை பொறுமையும், அட்டாச்மென்ட்டும் இருக்கணும்’

‘குழந்தையோட அம்மா‌ எங்க போயிருப்பா?’

சிங்கபிரானை டாடி என்ற குழந்தையின் அம்மா, அவனுக்கு என்ன உறவு என்ற யோசனைக்குள் போகவே சின்மயி‌ தயாரில்லை.

சிங்கபிரான்‌, அவனாகவே தன்னைத் தேடி வருவான் என்ற சின்மயியின் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை, ஆசையை மூன்று வாரங்களைத் தாண்டியும் வராது‌ நிராசையாக்கினான்
.​
 
Jun 19, 2024
15
23
18
Trivandrum
😍😍😍

ரெண்டு பேரும் childhoods friends ஆ? அவளுக்கு நாலு வயசு, அவளை விட ஆறு வயசு பெரியவன், அப்ப அவனுக்கு பத்து வயசு...

 
  • Love
Reactions: VedhaVishal

saroja

New member
Feb 22, 2026
12
6
3
Coimbatore
அம்மாடி அந்த ஆளு
அப்பனா
இந்த பிள்ளைக்கு
ரொம்ப பாவம்

சிங்கம் எங்க போச்சு
 
  • Love
Reactions: VedhaVishal
Jun 19, 2024
15
23
18
Trivandrum
😍😍😍

நாணங்களும் எதற்காகவா? 🤔🤔 அப்ப இந்த பாட்டு போட முடியாதா? 🙈🙈

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

 
  • Haha
Reactions: VedhaVishal

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
54
195
83
Chennai
😍😍😍

நாணங்களும் எதற்காகவா? 🤔🤔 அப்ப இந்த பாட்டு போட முடியாதா? 🙈🙈

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

இப்போதைக்கு இல்லை🤩
 
  • Sad
Reactions: Sindhu Narayanan