• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 12

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
70
338
83
Chennai
நாணங்களும் எதற்காக? 12

சின்மயி க்ளீனிக்கில் இருந்து புறப்பட்டுக் கீழே வர, பெங்களூரே ஜில்லிட்டுக் கிடந்தது. இன்று ஹாஸ்பிடலிலும் சரி, இங்கும் சரி ஏகப்பட்ட கூட்டம்.

சீஸனுக்கு நாலு புது வைரஸ், புதுப் புது விதமான சளி, போக்குவரத்து மாசு, வெளிக் காற்றில் பயணம், உணவு, இட, நேர மாற்றங்கள், பெற்றோர்களின் அவசரம், அவசியம் என குழந்தைகள் படும் அவஸ்தைகளை சொல்லி மாளாது!

இன்று மட்டுமே சளியில் மூச்சுத் திணறிய ஏழெட்டு குழந்தைகளுக்கு நெபுலஸேஷன் செய்தாள். இதில் இவள் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை தரும் பெற்றோர் வேறு.

தன் ஸ்கூட்டரை நோக்கி நடக்கையில் புதிதாக வந்திருந்த பாம்பே சாட் கடையில் பானி பூரிக்குக் காத்திருந்தவர்களைத் தாண்டுகையில் சூடான பட்டாணி மசாலா, வெங்காயம், கொத்தமல்லி மணக்கும் ரகடா பேட்டீஸ் பசியைத் தூண்டியது.
‘ சாப்பிட்டால்தான் என்ன?’

வேண்டாம். காத்திருந்து, டோக்கன் வாங்கித் தனியாக சாப்பிடப் பொறுமையும் மனமும் இல்லை.

சின்மயியைப் பொறுத்தவரை, சாட், ஐஸ் க்ரீம் போன்றவற்றை நட்புகளுடன் கொண்டாட்டமாக ரசித்து உண்ண வேண்டும். கடமைக்கு வாங்கி விழுங்குவதில் அவளுக்கு உடன்பாடில்லை.

நேரமும் பத்தாகி ஆகிவிட்டது. ஹரியின்‌ வீடு, அவள் இருந்த வீட்டை விட சற்றுத் தொலைவு.
பரசுராம் தான் பிடித்த பிடியில் இருந்து இறங்க மறுத்ததில், சின்மயி ஹரியின் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது.‌

சின்மயி இங்கு வந்ததில் உண்மையாக சந்தோஷப்படும் ஒரே ஆள் ஹரியின் மகள்தான்.

சின்மயிக்கு இதில் விருப்பமா‌ என்றால் நிச்சயம் இல்லை.
அப்பா இல்லையெனில் அடுத்தது அண்ணன் நான்தான்‌ என்று அழைத்து‌ வந்துவிட்ட ஹரிக்கு, மனைவி பத்மினியிடம் அபார நம்பிக்கை இருந்தது.

பத்மினி ‘இது‌ எங்கள்‌ வீடு.‌ இங்கு நீ‌ ஒரு விருந்தாளி. உன்‌ இருப்பு‌‌ எங்களுக்கு அதிகப்படி. நாங்கள் உன்னை அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்பதை நேரடியாகச்‌ சொல்லாமல், சின்னச் சின்ன விஷயத்திலும் வலியுறுத்தினாள்.‌

சின்மயிக்கு தன்னை இப்படி அந்நியமாகத் தள்ளி நிறுத்துவதற்கு பதில், வீட்டோடு சேர்ந்த வேலைகளைச் சுமத்தினால் கூடப் பரவாயில்லை போல் இருந்தது. அதுவே அங்கிருந்து விரைவில் வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணத்தை உறுதி செய்தது.

காலிங் பெல்லை அழுத்தும்போதே, சின்மயிக்குள் கதவைத் திறப்பவரின் முகம் எப்படி, மூட் எப்படி என்ற கேள்வி வந்துவிடும்.

சின்மயியிடம் ‘இதுதான் உன் எல்லை’ என்று அவர்கள் போட்ட கோட்டைத் தாண்டி விட்ட அவஸ்தை. அவர்களின் சுதந்திரத்தில் குறுக்கிட்ட உணர்வு.

“நீ இருக்கறதாலதான் வீக் என்ட்ல எங்கேயும் போகலை” - பத்மினி.

‘நான் என்ன, வரமாட்டேன்னா சொன்னேன்?’

‘என்னை உடன் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை என்பதை இதைவிட நேராகச் சொல்ல முடியுமா என்ன?’

சராசரியான ஒரு‌ வீட்டிற்குச் சில அடிப்படை பழக்கங்களும் நேரத்தைக் கடைபிடித்தலும் மிக அவசியம். சர்வ சுதந்திரத்துடன் தனிக்குடித்தனம் செய்வது சிறப்புதான். ஆனால், பெற்றோர் ஆன பிறகான கட்டற்ற சுதந்திரம், வீட்டுக்கோ, அவர்களின் பிள்ளைகளுக்கோ நன்மை பயக்காது.

பத்மினியின் தினசரி நியதிகளில் அவள் அம்மாவின் தாக்கம் அதிகம் இருப்பதில் தவறில்லை. ஆனால், அங்கு வழமை என்பது இல்லாமல் இருப்பதே நியதியாக இருந்தது.

பத்மினி ஒரே பெண் என்பதால், அவள் கருத்தரித்ததுமே, அவளது தந்தை விருப்ப ஓய்வு பெற, பெங்களூரில் அவர்களது ஃப்ளாட்டுக்கு எதிர்‌ ஃப்ளாட்டை வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர்.

மகள் வீட்டில் அவர்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள்‌ என்பதை விட, பத்மினியும்‌ ஹரியும் அவர்களை உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதே நிஜம். வேலை செய்பவர்களுக்கு உரிமை உண்டுதானே?

டிகாக்ஷன் முதல் டின்னர் வரை அவர்களை எதிர்பார்த்தால், யார் எதை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள்தானே தீர்மானிப்பர்?

“உன் பசி எப்படி இருக்கு சின்மயி… தப்பா நினைச்சுக்காத… சாதம் வைக்கறதுக்காக கேக்கறேன்”

‘சின்மயி, நீ எத்தனை இட்லி சாப்பிடுவ… நாலுது தனியா ஹாட்பேக்ல வெச்சுடவா?”

“சின்மயி, உனக்கு மூணு சப்பாத்தி போறுமான்னு அம்மா கேட்டா”

பத்மினி மற்றும் அவளது அம்மாவின் கேள்விகள் இவை. கேட்பவர்களுக்குத் தயக்கம், கூச்சம் எதுவும் தேவை இல்லை… ஆனால், பதில் சொல்பவர்களுக்கு?

‘எனக்கு‌ ஆறு தோசையும் டஜன் இட்லியும் வேணும்னா சொல்ல முடியும்?”

அவர்கள் இயல்பாக, ப்ராக்டிகலாக கூடக் கேட்கலாம். பத்மினி சின்மயியிடம் கேட்டபோது ஹரி கூட அங்குதான் இருந்தான். ஆனால்‌ சின்மயிக்குதான் வெட்கமாக இருந்தது.

‘என்னைத் தனியா‌ விட்டா போறும். நான் நிம்மதியா இருப்பேன்’ என்று கூவ வேண்டும் போல் தோன்றியது. ஆனால், அதைத் தைரியமாக முன்னெடுக்க அவளது பின்னணியும்‌ வளர்ப்பும் ஏன், சிந்தனையும் கூடத் தடையாக இருந்தது.

‘படிச்சு, என் தேவைக்கு சம்பாதிக்கற‌ நான், பெண் சுதந்திரம்லாம்‌ பேசாம, ஏன்‌ அப்பா, அண்ணான்னு கட்டுப்பட்டு இருக்கேன்?
தனிச்சு நிக்க‌ எனக்கு‌ தைரியம் இல்லையா? அது தப்புன்னு நினைக்கறேனா? நான் கோழையா, பூமரா, பழைய பஞ்சாங்கமா?

‘அடுத்து என்னன்னு தெரியாம இப்படியே இன்னும் எத்தனை நாள்?’

சின்மயிக்கு அறுபத்தி நாலு வயதில் பிடிவாதமாய் தனியே இருந்து திண்டாடும் தந்தை சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாரோ என்ற கவலை வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்தது.

‘பேரன், பேத்தின்னு சகஜமா சந்தோஷமா இருந்தாத்தான் என்ன? எதைக் கட்டிண்டு போகப் போறார்?’

அடுத்த மூன்று‌நாள் தசராவும் வார இறுதியும்‌ சேர, நீண்ட விடுமுறை. சென்ற முறை‌ சின்மயி எமர்ஜென்ஸி ட்யூட்டியில்‌ இருந்ததால், இந்த முறை அவள் ஃப்ரீதான். அது வேறு என்ன செய்வதென புரியவில்லை.

மூன்று நிமிடங்களில் மனம் போன போக்கில் சிந்தித்தவள், ஹெல்மெட்டை அணிந்து ஸ்கூட்டரை கிளப்புகையில் சிங்கபிரான் அழைத்தான்.

அவனது ஹலோவுடன் ஏகப்பட்ட குரல்கள் ஒலித்தது.

“ சொல்லு ச்சிங்கா…‌இன்னுமா ஸ்டூடியோல இருக்க”

“ம்… ரிஹர்ஸல் நடக்கறது. உனக்கு நினைவு இருக்கா புல்புல், தசரா அன்னிக்கு‌ மைசூர் பேலஸ்ல‌ கான்ஸர்ட்... நாளைக்கு ஈவினிங் புறப்படணும். அம்மாவும் வரா. பீ ரெடி”

“ச்சிங்கா…”

“நோ ஆனா, ஆவன்னா.‌ யூ ஆர் கமிங்.‌ பை”

அவள் மறுக்க இடம் கொடாது துண்டித்துவிட்டான்.

அன்று‌ பத்து நிமிடத்தில் தேவையான ஆவணங்களை மட்டும் எடுத்து வரச் சொன்னவன், இவள் ஹரியுடன் போவதாக முடிவானதும் அப்போதைக்கு எதுவும் பேசாமல் சென்றவன், இரண்டு நாளைக்குப்‌ பேசவே இல்லை. சின்மயிதான் அவனைப் போய் பார்த்து சமாதானம்‌ செய்தாள்.

“ஏதாவது பிரச்சனைன்னா கிளம்பி வந்துடணும், புரியறதா, புல்புல்?”

கிட்டத்தட்ட சத்தியம்தான் வாங்கிக்கொண்டான். இப்போது மைசூர் தசரா.

மைசூர் அரண்மனையின் அலங்காரங்களையும் தசரா கொண்டாட்டங்களையும் சின்மயி படத்தில், செய்தியில்தான் பார்த்திருக்கிறாள். நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு.

இதுவரை சிங்கபிரானை சந்திக்கச் சென்றதெல்லாம் அவளது வேலை நேரத்தில். நாள் கணக்கில் எங்கும் சென்றது இல்லை. இரவு தங்கியதில்லை. யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ஒரேமுறை உள்ளூர் நிகழ்ச்சிக்குப் போனதற்கே வெளியில் நின்றது போக, இப்போது வெளியூருக்கு… அதுவும் ராத்தங்க வேண்டுமெனில்…

ஹரி, பத்மினி என வரிசையாய் கையெழுத்து வாங்க வேண்டும். அவளது அம்மாவின் கேள்விகளுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும். கொல்கத்தா செய்தி மையத்திற்கு தகவல் போனதும், அங்கிருந்து இலவச ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும். ஆனால், போனால் இரண்டு நாள் நிம்மதியாக சுவாஸிக்கலாம்…

சின்மயி அழைப்பு மணியை அழுத்த… திறந்தது பவானி!

‘இப்ப என்ன?’

‘வா பவானி”

“என்னடீ சின்மயி, இத்தனை நேரம்?”

“க்ளீனிக்ல செம கூட்டம். எங்க ஸ்ரீயும் ஆதியும்…?”

“ரெண்டு, மூணு நாள்தானே… மேனேஜ் பண்ணிப்பா. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேன். சேஃப்தான்”

சின்மயி குளித்து, உடைமாற்றி, அரிசி உப்புமாவில் கை‌ வைத்தபோது மணி பத்து ஐம்பது.

எல்லோரும் ஹால் சோஃபாவில் காத்திருந்தனர்.

‘எனக்காகவா வெயிட்டிங்… என்ன சம்பவம்னு‌ தெரியலையே!’

நரியும் வெளியில் வந்தது…

ஹரி இரண்டு வருடம் ஆன்சைட் செல்லப் போகிறான். அநேகமாக பத்மினிக்கும் ரீலொகேஷன்‌ கிடைத்து விடும்.

ஆறு மாத அட்வான்ஸ் இருப்பதால், இப்போதைக்கு பரசுராம் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தனர்.

ஹரி‌ மாதாமாதம் அவருக்குக் கொடுக்கும் பணம் மூன்று வேளை உணவு, காஃபி, இதர செலவுகள் எல்லாவற்றுக்கும் நிச்சயம் போதாது. ஆனால் யாரும் அது பற்றி அப்போது பேசவில்லை.

இன்று வரை காஃபி என்ன, வெந்நீர் கூடப் போடாதவருக்குத் தன் நிலை புரியாது அடம் பிடித்தார். இந்த ஒரு மாதத்தில் ஹரி அவரைப் போய்ப் பார்த்தானா, அவரோடு பேசினானா என்றும் தெரியவில்லை.

ஒரு மாதத் தனிமையில் அவர் என்ன செய்கிறார், எங்கே என்ன சாப்பிடுகிறார், எப்படி இருக்கிறார்… எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ளாததில் சின்மயிக்குக்‌ குற்றவுணர்வு மிகுந்தது.

ஆன்சைட் ஆஃபரை ஏற்றுக்கொள்ள ஹரி முடிவு செய்து விட்டதால், இப்போது பரசுராம் இருக்கும் வீட்டை என்ன செய்வது, பரசுராமை என்ன செய்வது என்று முடிவு செய்யவே இந்த உச்சி மாநாடு.

‘நான்… நான் என்ன செய்யணும்… எங்க போறது?

‘குடும்பம் சிதறியது என்று செய்தியில் வருவது போல்…’ சின்மயிக்குத் தொண்டை அடைத்தது.

பவானி “இந்த வீட்டை என்ன பண்ணப் போற ஹரி?”

“என்ன, சாமானைக் குறைச்சு, ஒரு ரூம்ல் போட்டு பூட்டி, இரண்டு பெட்ரூம்‌ வீடா வாடகைக்கு விட வேண்டியதுதான்”

“அதான் சரி. அநாவசியமா பூட்டிக் கிடப்பானேன்?”

ஹரி “அதான்… அப்பாவை என்ன செய்யறது, எங்க அனுப்பறதுன்னு…”

சின்மயி எழுந்து நின்றாள்.

“பேசும்போதே பாதில எழுந்து எங்கடீ போற?” - பவானி.

“தூக்கம் வரது பவானி. நீ பேசிட்டு வா. நாளைக்கு லீவுதானே, கார்த்தால பார்க்கலாம்”

அறையை இருட்டாக்கித் தலையோடு கால் போர்த்திக் கொண்டவளுக்கு அழுகை வரவில்லை. எல்லாமும் எல்லாரும் இருந்தும் எதுவும் இல்லாத உணர்வு அழுத்தியது.

‘ஏன் இப்படி?’

‘அழக்கூடாது… எனக்கு இருபத்தேழு வயது, இன்னும் நான் குழந்தை இல்லை. நான் ஒரு டாக்டர். என்னிடம் தனித்து நிற்கத் தேவையான படிப்பும் வேலையும் இருக்கிறது. இந்த வயதில் வெளி நாட்டில் எல்லோரும் என்ன செய்கிறார்கள்?’

‘எல்லாரும் விரும்பும் மேற்கத்திய வாழ்க்கை நான் கேக்காமயே கிடைக்கறதெல்லாம்…’

‘இப்ப நான் என்ன செய்யணும்?’

‘ஹரியே வெளில போன்னு சொல்ற வரை இங்க இருக்கணுமா… இல்ல, இப்பவே வேற வீடோ, பிஜியோ பார்த்து போயிடணுமா?’

எப்போது உறங்கினாள் என்று சின்மயிக்கே தெரியாது.

மறுநாள் காலை பரசுராமைப் பார்க்க சின்மயியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

பரசுராம் சற்றே மெலிந்திருந்தார். ஆனால், அதே தீர்க்கமும் தெனாவெட்டுமாகத்தான் பேசினார்.

ஹரி வீசிய பந்தை பரசுராம் ஃப்ரன்ட் ஃபுட்டில் தடுத்து ஆடினார்.

“நான் கோயம்புத்தூர்ல இருக்கற ஒரு ரிடையர்மென்ட் ஹோம்ல பேசிட்டேன். அஞ்சு வருஷ‌ம் ஒத்தி (lease) பன்னண்டு லட்ச ரூபா. இங்க‌ பெங்களூர்லயேன்னா பதினஞ்சு லட்சம். ஆனா, மாசம் பதினஞ்சாயிரம் கட்டணும்”

பவானியும் ஹரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பத்மினி கழுத்தை‌ நொடித்தாள். சின்மயிக்கு அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து விட்டது.

பவானி “பார்க்காத வேலைக்கு‌ ரிடையர்மென்ட் ஹோமா?” என்று உரக்கவே முணுமுணுத்தாள்.

ஹரி “அத்தனை பணத்துக்கு எங்க போறது…?”

பரசுராம் “அது ஒரு ஆப்ஷன்தான். இல்ல, நீயோ ஊருக்குப் போற. நான் உன் வீட்ல வந்து இருக்கேன்”

பரசுராம் சொன்னதைக் கேட்ட பத்மினியின் நெஞ்சே நின்று விடும் போலானது.

ஹரி “யோசிக்கணும்…”

பரசுராம்‌ “இதுல யோசிக்க‌ என்ன இருக்கு? ஸ்ரீரங்கம் வீட்டை வித்து நீங்க எடுத்துண்ட பணத்தை‌ப் பத்தி இதுவரைக்கும் நான் ஒரு வாராத்தை கூட பேசலை. இப்ப எல்லாரும் படிச்சு, செட்டில் ஆயாச்சு. என் பணத்தை‌தானே திரும்பக் கேக்கறேன்?”

வெகு நாட்களாகவே, இந்தத் தருணத்தை எதிர்பார்த்தவர் போன்ற திடத்துடன் பேசியவரை மக்கள் மூவரும் அயர்ந்துதான் பார்த்தனர்.

பவானி “அப்ப சின்மயி கல்யாணத்துக்கு? படிப்புக்கு செலவழிச்சது போக இப்பவே அதுல பெருசா எதுவும் மிச்சம் இருக்காது”

“கல்யாணம் பண்ணிக்கணும்னா முதல்ல கண்டவனோட ஊரைச் சுத்தாம ஒழுக்கமா இருக்கணும்” - பரசுராம்.

பட்டென எழுந்த சின்மயி “ஹரி, எனக்குன்னு ஒதுக்கின பணத்துல மீதி இருக்கறதை… இருந்தா‌ அவர் கிட்ட குடுத்துடு. வேற என்ன செய்யணும்னு சொல்லு. என்னால ஏன்ன முடியும்னு பாக்கறேன்” என்றவள் திரும்பிப் பார்க்காது வெளியேறி இருந்தாள்.

பரசுராம் “அத்தனையும் திமிர்.‌ அவன் (சிங்கபிரான்) குடுக்கற ஆழ்மை” என்றது கேட்டது.

ஹரியும் பத்மினியும் சின்மயிக்குப்‌ பின்னாலேயே வந்து விட்டனர். வரும் வழியிலேயே ஹாஸ்பிடல் கைனகாலஜிஸ்ட் அழைத்தார்.

“ஸாரி டு டிஸ்டர்ப்‌ யூ சின்மயி. ஒரு எமர்ஜென்ஸி சிஸேரியன்.‌ ஹை ரிஸ்க்‌ ப்ரெக்னென்ஸி. வர முடியுமா?”

“வரேன்‌ மேம்”

மளமளவென இரண்டு நாளைக்கான மற்றும் விழாவில் அணியக்கூடிய உடைகளை‌ ஒரு‌ பையில் திணித்தவள், இதர‌ பொருட்களுடன்‌ ஹாலுக்கு‌ வந்தாள்.

“நான் ஹாஸ்பிடல் போய்ட்டு, அப்படியே ச்சிங்காவோட மைசூர் போறேன். தஸரா அன்னிக்கு ராத்திரி பேலஸ்ல அவனோட கான்ஸர்ட் இருக்கு. அடுத்த நாள்தான் வருவேன். பாலா மாமியும் வரா” என்றாள் பொதுவில்.

நிமிட நேர அமைதிக்குப் பின், பவானி “நான் நாளைக்கு‌ கிளம்பிடுவேன் டீ‌ சின்மயி. நீ எங்கேயோ போறேங்கற…”

“இது‌ முன்னாடியே ப்ளான் பண்ணது பவானி”

ஹரி “சரி, டேக் கேர். பத்திரமா போய்ட்டு வா‌”

செருப்பில்‌ கால்‌ நுழைத்தவளிடம் பவானி “சிங்கபிரானை லவ் பண்றயா சின்மயி?”

சிரித்தவள்‌ “வரேன், பை” என்று‌ புறப்பட்டாள்.

அவளுக்கே தெளிவில்லாத போது ‌என்னவென்று‌ சொல்ல?

***********************

பொதுவாக‌ எல்லா பிரசவங்களிலும் குழந்தை மருத்துவர் உடன் இருப்பதில்லை. பிறந்த குழந்தையை‌ சுத்தம் செய்து, அதன் ஆரோக்கியத்தை சோதித்து‌ப் பசியாற்றுவதை‌ மகப்பேறு மருத்துவர், மிட்வைஃப்‌ எனப்படும் (Mdwifes) பிரசவத்திற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் அல்லது வழக்கமான நர்ஸுகளே பார்த்துக்கொள்வர்.

பிசிஜி முதலான தடுப்பூசிகளுக்கும் அதன் பிறகான பின்தொடர்தலுக்கும் மட்டுமே குழந்தை‌ மருத்துவர்களை பரிந்துரை‌ செய்வர்.

சிக்கலான பிரசவம், வயிற்றுப் பிள்ளைக்கு நலக்குறைவு, இரட்டை, அவசர நிலை சிஸேரியன் போன்றவைகளில்‌ ஏதேனும் ஒன்று இருந்தாலும், பிரசவ சமயத்தில்‌ கட்டாயமாகக் குழந்தை மருந்துவர் இருக்க‌வேண்டும்.

அன்று முப்பத்தாறு வயதுப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் என்பதோடு, பிரசவகால ரத்த அழுத்தம், கூடுதல் சர்க்கரை என ஏகப்பட்ட சிக்கல்கள். இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் வேறு இருந்தனர்.

இரண்டில் ஒரு குழந்தைக்கு IUGR எனப்படும் வளர்ச்சி‌க் குறைபாட்டில் தலையும் மற்ற அங்கங்களும் சமன் இல்லாது (Assymetri) இருந்ததில், குழந்தை பிழைத்துத் தொடர்வதில் இருந்த ஆபத்தின் தீவிரம் கருதி, சின்மயி உடன் இருந்தாள். இதனால் சரியாக இருக்கும் இன்னொரு குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

பிறந்த‌ குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) சிசுவுக்குத் தேவையானதை செய்து, நிலமை சீராகும் வரை இருந்துவிட்டு மருத்துவமனையில் இருந்து சின்மயி கிளம்புகையில் மாலை நான்கு மணி.

முதல் நாள் சந்தித்தபோது “ஊசின்னாலே ஓடிப்போற நீ எப்டி‌ புல்புல் டாக்டர் ஆன?” என்று சிங்கபிரான் கேட்டதுபோல்‌, இது போன்ற ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை‌ அளிக்கையில் சின்மயிக்கே தன்னைக் குறித்து ஆச்சரியம்தான்.

ஆரம்பத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வலியை, அதிலும் பிறவிக்‌ குறைபாடு‌ உள்ள‌ பிள்ளைகளைக் காண்கையில், மனதைப்‌ பிசையும். எத்தனையோ இரவுகள் தூக்கம் வராது தவித்திருக்கிறாள்.

எம்டி படிக்கும்போது இன்டர்ன்ஷிப்பில் தொடங்கி, இப்போது வரை மூன்று குழந்தைகளின் மரணத்தைப் பார்த்து ஏன்டா‌ மருத்துவர்‌ ஆனோம் என்று கூட வருந்தி இருக்கிறாள்.

சின்மயியின்‌ சூழலுக்கும் அவளது மனநிலைக்கும் நெருக்கமான நட்பு என‌ யாரும் இல்லை. கல்லூரி, வகுப்புத்‌ தோழமைகள் என்ற அளவில் பழகுவதோடு சரி. படிக்கும்போதாவது இது போன்ற நிகழ்வுகள் பற்றி சக மாணவர்களிடம் பேச முடிந்தது. இப்போது சுத்தம்.

வீட்டில்‌சொன்னால் ஆறுதலுக்குப் பதில் ‘உன்னை யாரு டாக்டருக்கு படிக்கச் சொன்னது?’ என்று இவளையே கேட்பார்கள்.

ஏதேதோ யோசித்தபடி மின்தூக்கியில் இருந்து‌ வெளியேறி, ஹாஸ்பிடல் வாயிலுக்கு வர, உள்ளே இருந்த மிதமான‌ ஏசியை விட, அதிகம் குளிர்ந்தது. நாலு மணிக்கே இருட்டாக இருந்தது. வெளியில் நடந்தவளின் மீது பொட்டென பலமாக‌ ஒரு கல் வந்து விழுந்தது.

சின்மயி அதன் சில்லிப்பை உணர்வதற்குள், படபடவென ஆலங்கட்டி மழை பொழியத் தொடங்கி, கனமான பனிக்கட்டிகள் தாக்கியதில், மீண்டும்‌ மருத்துவமனைக்குள் ஓடினாள். இவளைப் போன்றே, அங்கங்கே நின்ற, நடந்த சிலரும் கூரையைத்‌ தேடி ஒடினர். மழையில் நனைந்தது போலன்றி, கல்லடி பட்டு வலிக்கும் உணர்வு.

கதவருகே காத்திருந்த நிமிடங்களில், நிற்காது பெருமழையாகப் பெய்ய, தரையெங்கும் வெண்ணிறத்தில் ஆலங்கட்டிகள் குவிந்த வண்ணம் இருந்தன.

சற்று உள்பக்கமாக நகர்ந்து போட்டிருந்த ஸ்டோலால் முகத்தைத் துடைத்தவளின்
மிக அருகே கேட்ட “ஹலோ சின்மயி” என்ற அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்ப, டாக்டர் ப்ருத்வி நின்றிருந்தான்.

புதிதாகச் சேர்ந்த‌ குழந்தைகளுக்கான கார்டியலஜிஸ்ட்.‌ சர்ஜன். சேர்ந்த‌ ஒன்றரை‌ மாதத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரியும், ஸ்டென்ட்‌ ப்ரொஸீஜரும் செய்திருக்கிறான். முப்பதுகளின் மத்தியில் இருந்தவன், மருத்துவர்களுக்கே உரித்தான நேர்த்தியான உடையும் ‘நான் பெரிய படிப்ஸாக்கும் தோற்றமுமாய் நின்றிருந்தான்.

சின்மயியும்‌ குழந்தை மருத்துவர் என்பதால், புதிய வளாகத்தில் இருவருக்கும் எதிரெதிர் அறைகள். அவ்வப்போது‌ அவனைப் பார்த்திருந்தாலும், மருத்துவமனையின் இளம்‌ பெண் மருத்துவர்கள், மற்றும் நர்ஸ்களின் சமீபத்திய ஹீரோவான ப்ருத்வி நல்ல
பணக்காரன், ஒரு டாக்டராக இருந்துகொண்டு பப்புக்கு செல்கிறான், நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ், ஜாலியாக இருக்க விரும்புவதாலேயே‌ திருமணத்தைத் தவிர்க்கிறான்…‌ என்பது‌ போன்ற ஏராளமான‌ வதந்திகள் உலவுவதே இரண்டு நாள் முன்பு காலை நடந்த ஒரு அறுவை சிகிச்சையின்‌ போதுதான் சின்மயிக்குத் தெரியும்.

‘இவன் ஏன்‌ என்னைக்‌ கூப்பிடறான்?’

“ஹலோ ஸார்”

“இன்னும் இங்க‌ என்ன‌ செய்யறீங்க சின்மயி?”

க்ரிடிகல் சிஸேரியன். ட்வின்ஸ். அதுல ஒன்னு‌ IUGR. அதான் லேட்”

“ஓ… ஸேம் ஹியர்”

‘அவள் வெளியே‌ எட்டிப் பார்க்க, இப்போது ஆலங்கட்டிகள் விழுவது‌ நின்று, மழை கனத்துப் பெய்தது.

கவனித்த ப்ருத்வி‌ “இப்போதைக்கு‌ விடாது போல. காஃபி?”

நீண்ட விடுமுறை என்பதால், இனி அடுத்த மூன்று நாள்கள் ஹாஸ்பிடலில் இன்பேஷன்ட்டுகளும் ட்யூட்டி டாக்டர்களும் நர்ஸுகளும் மட்டுமே இருப்பர். ஏதேனும் எமர்ஜென்ஸி என்றால் மட்டுமே தேவையான மருத்துவரை அழைப்பார்கள்.

சின்மயிக்கு என்ன சொல்லி மறுப்பது என்று தெரியவில்லை. பக்கத்தில் நின்று மறுத்தால் அநாகரிகமாக இருக்கும் என்பதால் “ஒய் நாட்?” என்றாள்.

இருவரும் லிஃப்டில் ஏறி நான்காவது மாடியில் இருக்கும் கஃபேட்டரியாவிற்கு சென்றனர்.

ஒன்றிரண்டு இன்பேஷன்டுகளின் அட்டெண்டர்களைத் தவிர, யாரும் இல்லை.

இரண்டு காஃபிக்கு டோக்கன் வாங்கி, மேஜையில் தரச் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தனர். காஃபி வந்தது.

பிருத்வி “குட். எம்டி‌ முடிச்ச ஒரே‌ வருஷத்துல‌ நல்ல எக்ஸ்பீரியன்ஸ் அன்ட்‌ வெரி குட் நேம் ஆல் ஸோ… ரைட்?”

சின்மயி மையமாகச் சிரித்து வைத்தாள்.

‘என்னடா வேணும்‌ உனக்கு?’

ப்ருத்வி தன்‌ பின்னணி, முன்னணி பற்றி விளக்கினான். அம்மா ஒரு அம்பிகை, அப்பா ஒரு ஆண்டவன், தங்கை‌ ஒரு தேவதை, மரியாதையான குடும்பம், ராயலசீமாவில் தலைக்கட்டு என்றவன்,‌ அடுத்த வரியில் தலை கீழகாக் குதித்தான்.

“ஐ லைக்‌யூ‌ சின்மயி. உன் ஒர்க், ஹாஸ்பிடல்ல உனக்கு இருக்கற நல்ல‌ பேர், அஃப்கோர்ஸ், உன்னோட அழகு… எல்லாமே எனக்குப் புடிச்சிருக்கு சின்மயி”

“?!?!!”

“எப்படியும்‌ நாம யாரையாவது‌ கல்யாணம் பண்ணிக்கணும். உங்கப்பா நம்பர்‌ தாயேன், பேசறேன்”

“எதே,‌ அப்பா‌ நம்பரா… ?”

‘எங்கப்பா பரசுராம் பத்தி உனக்கு ஐடியா இல்ல மகனே... உங்க வீட்ல ஆல் ஏஞ்சல்ஸ்னா, இங்க ஒன்லி டெமன்ஸ்…’

‘அதை விட, யாரையும் பார்க்காத, பேசாதன்னு இன்னொருத்தன் இருக்கான்… இது புரியாம…’

“சின்மயி?”

‘அரையடி கேப்ல இருந்தும் பதில்‌ சொல்லாம இருக்கேன்னா, விடேன் டா’

‘பேசாம, நான் எங்கேஜ்ட்னு சொல்லிடவா?’

அவள் முகத்தின் எதிரே கையை ஆட்டிய ப்ருத்வி, இரண்டு‌ விரலால் அவள் புறங்கையைத் தட்ட… மேஜை மீது இருந்த சின்மயியின் அலைபேசி ஒலித்தது.

‘எடுத்துப் பேசு’ என்பதாகக் கையசைத்த ப்ருத்விக்கு, சிங்கபிரானின் ‘புல்புல், கன்னா‌பின்னானு‌ மழை பெய்யறது. நான் ஹாஸ்பிடலுக்கு‌ வெளிலதான் இருக்கேன். நீ வா, குடை கொண்டு வரேன்” என்றது தெளிவாகக் கேட்டது.

“டூ மினிட்ஸ் ச்சிங்கா” என்ற சின்மயி, “எக்ஸ்க்யூஸ் மீ ஸார், ஐ நீட்‌ டு கோ” என்றபடி உடனே எழுந்து விட, ப்ருத்வியும் உடன் வந்தான்.

ஹாஸ்பிடலின் வரவேற்புப் பகுதி காற்று வாங்க, சிங்கபிரான் சஞ்சய் தேசாயுடன் பேசியபடி நின்றான்.

லிஃப்டில் இருந்து இணைந்து வெளியில் வந்த இருவரையும் பார்த்த சிங்கபிரான், சின்மயியை நோக்கிக் கை நீட்ட, தன்னை அறியாது‌ வேகமாக அவனை நெருங்கியவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஹாய் ப்ருத்வி” என்ற சஞ்சய் தேசாய், சிங்கபிரானுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தான்.

ஹாஸ்பிடல் நடத்திய நாதம் மியூஸிகாவின் நிகழ்ச்சி நடந்த வாரம்தான் இங்கு வேலையில் சேர்ந்திருந்த பிருத்வி, சிங்கபிரானை அங்கே பார்த்து வியந்தவனுக்கு, சின்மயிக்காக அவன் காத்திருப்பதும், அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் எம் டி முன்பே அவள் கையைப் பிடித்ததும் தனக்காகத்தான் என்பது புரிந்தது.

“ஓகே சஞ்சய், வி டேக் லீவ். பை ப்ருத்வி” என்ற சிங்கபிரான், “லெட்’ஸ் கோ‌ புல்புல்” என்று சின்மயியின் தோளில்‌ கை போட்டதில் இருந்த உரிமையில், ப்ருத்வி தனக்கான செய்தியை உணர்ந்து கொண்டான்.

காரில்‌ ஏறியதுமே சின்மயி‌ “ச்சிங்கா.. அந்தப் ப்ருத்வி மழை.. காஃபி சாப்பிடலாம்னு கூப்பிட்டான். தவிர்க்க முடியாம அங்க போனா…”

“ப்ரபோஸ் பண்ணினானா?”

“ம்”

“இனிமே பக்கத்துல கூட வர மாட்டான்”

அவன் வீட்டிற்குச் சென்று பாலாமணியையும்‌ கேசவையும் அழைத்துக் கொண்டு மைசூரை நோக்கிப் பயணித்தனர்.

********************

பதினாலாம் நூற்றாண்டில்‌ கோலோச்சிய‌ விஜயநகரப்‌ பேரரசு மைசூரில் தொடங்கி வைத்த பத்து நாள்‌ வைபவம் தஸரா.‌ அதையே மைசூர் அரசர்களும் பின்பற்ற, அதே பிரம்மாண்டத்துடன் இன்றளவும்‌ நடக்கிறது.

மைசூர் நகரமே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அரண்மனை நூற்றாண்டுகளைக் கடந்தும், தன் பெருமை குன்றாது ஜ்வலித்தது.

750 kg தங்கத்தினால் ஆன அம்பாரியில் அன்னை சாமுண்டீஸ்வரி‌ ஊர்வலம் செல்வதும், யானைகளின் அணிவகுப்பும், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரியமான அரச குடும்பமும்… காணவே ஜெகஜ்ஜோதியாய் இருந்தது.

ஊர்வலங்களின் முடிவில், அம்பா விலாஸ் அரண்மனை வளாகத்தில், முக்கியமான விஐபிக்களின் எதிரே நாதம் மியூஸிகா குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சமஷ்டி சரணத்தில் ‘பாமர ஜன பாலினி’ என தொடங்கிய சிங்கபிரான், அதே சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த மைசூர் வாசுதேவாச்சாரின் ‘நின்னே நம்மி’யை எடுக்க அதில் அதே நோட்ஸில் இருக்கும் ஹங்கேரியன் கிராமிய இசையை ராக் இசையாகக் கலந்தனர்.

இறுதியில் ராக் இசையுடன் உரத்து ஒலித்த அயிகிரி நந்தினியில் அரங்கம் அதிர்ந்தது என்றால் குறைத்துச் சொல்வதாகிவிடும்.

அடுத்தடுத்து நிகழ்ச்சி இருந்தாலுமே, நாதம் மியூஸிகாவிற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கி இருந்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் குழுவினர் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திர ஹோட்டலுக்குத் திரும்பினர்.

இரவு உணவு முடிந்தபின், பாலாமணி படுத்துவிட, சிங்கபிரான், நிகழ்ச்சிக்காக குழுவினருடன்‌ ஒன்று போல் அணிந்த உடையை‌ மாற்றி சின்மயியுடன் சுற்றிப் பார்க்க வெளியேறினான்.

இரவு பன்னிரெண்டு மணிக்கும் உற்சாகம்‌ குறையாமல் கொண்டாடினர் மக்கள்.

மின்னும் விளக்குகளையும் மக்கள் நடமாட்டத்தையும் பார்க்கும்படியான தொலைவில்… அதே நேரம், வெளிச்சம் குறைந்த, கூட்டமில்லாத இடத்தில் நின்றபடி இருவரும் வேடிக்கை பார்த்தனர்.

சிங்கபிரான்‌ தன்னோடு பிணைத்த சின்மயியின்‌ கையை விடாது பற்றி இருந்தான்.

“புல்புல்”

“ம்”

“என்னன்னு சொல்லுடி”

“இப்ப‌ வேண்டாம் ச்சிங்கா” என்ற சின்மயி மெலிதாக அவன்‌ தோளில் தலைசாய்க்க, இனிமையாக அதிர்ந்த சிங்கபிரான் அசையாது நின்றான்.

“புல்புல், நான் சொல்றதைக்‌ கேட்பியா?”

“ம்”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் புல்புல்”

“...”

“ஏய், புல்லூ”

“பயமா இருக்கு ச்சிங்கா”

“என்னைப் பார்த்தா?”

என்ற சிங்கபிரான், சின்மயியின் முகவாயைப் பற்றி அமுக்க, புல்புல் பறவையைப் போன்றே திறந்த அவள் இதழில் குனிந்து முத்தமிட்டவன்,

“பயம் நல்லது”
​
 
  • Like
Reactions: vijaya mahesh