• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 14 - PREFINAL EPISODE

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
73
369
83
Chennai
நாணங்களும் எதற்காக? 14


சிங்கபிரான் குடும்பத்தினர் அவர்களது குலதெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று செல்வ முத்துக்குமார ஸ்வாமியை தரிசித்து வந்தனர். கேசவ் மட்டும் உடன் சென்றிருந்தான்.

கோல்டிக்கு மூன்று வயது என்பதால் முதல் முடி இறக்கி இருக்க, ஒரே அழுகை. குழந்தை சின்மயியிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள். சிங்கபிரானும் சின்மயியும் கோல்டியை கெஞ்சிக் கொஞ்சி சமாதானம்‌ செய்தபடி வர, ஜனனியும் ரவியும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து நல்ல‌ உறக்கம்.

கேசவ் “புதுக் கல்யாணம் யாருக்குன்னே தெரியலையே”

“அப்பப்ப சொல்லுடா கேசவ். மறந்துடப் போறேன்” என்ற சிங்கபிரானின் முகத்தை ஆராய்ந்த சின்மயி, அவன் கண்களைச் சிமிட்டவும் சங்கோஜத்துடன் வெளியே பார்க்க…

“யூ ஆர் ப்ளஷ்ஷிங் புல்புல், என்னடீ வெக்கமெல்லாம் படற?”

சிங்கபிரான் அவள் காதருகில் குனிந்து சுடச்சுட பேசியதில் சின்மயிக்குள் வெம்மை பரவியது.

‘இவன் காத்து பட்டாலே எரிய நான் என்ன கணப்பா இல்ல அடுப்பா?’

சின்மயிக்கு சிங்கபிரானின் அண்மை ஒரே சமயத்தில் வெகு இயற்கையாக, அதற்கு மாறாகத் தன் இயல்பு தொலைவது போலவும் இருந்தது.

அன்றிரவு ‘கொஞ்ச நாள் ஸ்நேகிக்கலாம் ச்சிங்கா’ என்றதும் சிரித்தவன்…

“கொஞ்ச நாள் இல்ல புல்புல், நாம எப்போதுமே ஃப்ரெண்ட்ஸ்தான்”

“...”

இன்னும் அவன் அணைப்பிலேயே இருந்தவளின் பார்வையில் “அது தனி, இது தனி.‌ குழப்பிக்காதடீ”

“ச்சிங்கா…”

“ரிலாக்ஸ் புல்புல். ஒன்னும் பிரச்சனை இல்ல. டேக் யுவர் டைம் டா”

சின்மயி சிறிது குற்றவுணர்வும் தயக்கமுமாக அவனை ஏறிட…

“இப்டி எல்லாம் பார்த்தேன்னா, நடக்கற‌ எதுக்கும் நான் கேரன்ட்டி இல்ல புல்புல்”

அதன்பிறகு, ஒரே தம்ளரில் பால் குடித்தனர். ஒற்றை ஆப்பிளை மாறி மாறிக் கடித்தனர். மெயிலில் வந்திருந்த திருமண புகைப்படங்களைப் பார்த்தனர்.

“புல்லூ, மேக் அப் அதிகம் இல்லாம, வின்டேஜ் கல்யாணப் பொண்ணு மாதிரி எப்டி இருக்க தெரியுமா. யூ லுக் ராவிஷிங் (ravishing)!”

சின்ன வயதில் இருந்து அவளது உடையை, அவளுக்கு அது பொருந்துவதை எத்தனையோ தரம், அவனாகவும், இவள் கேட்டும் பாராட்டி இருக்கிறான்தான். சின்மயிக்கு இன்று ஏனோ குறுகுறுத்தது.

அவளுக்குக் கண்கள் சொருகவும் “தூங்கு புல்புல்”

மீண்டும் ஒரு முறை அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்து நாடியை அவள் தலைமீது வைத்து அழுத்தினான்.

“ச்சிங்கா…”

“ஹக், கிஸ்லாம் இப்ப ஃப்ரெண்ட்ஷிப்ல சேர்த்தாச்சு புல்புல்”

“அடப்பாவி!”

“குட்நைட் புல்புல்”

சிங்கபிரான் சின்மயி‌யின் தயக்கத்தை எளிதாகக் கையாண்டான். அவள்‌ சொன்னதற்காக அவன்‌ விலகவோ விலக்கவோ இல்லை. முன்பை விட
இயல்பான‌ தொடுகை அதிகரித்திருந்தது.

இன்று மதியம் ஹரி வீட்டு விருந்துக்குச் சென்றபோது பத்மினி கூட “உங்களைப் பாத்தா கல்யாணமாகி அஞ்சு நாள்தான் ஆன மாதிரி இல்ல. அஞ்சாறு வருஷம் ஆனாப்போல இருக்கு” என்றாள்.

கோல்டியை உடன் அழைத்துச் சென்றிருக்க, ஹரியின் மகளும் கோல்டியும் சின்மயியின் மேல் தங்கள் உரிமையை நிலை நாட்ட‌ சண்டையிட, இருவரையும் அவளிடமிருந்து விலக்கி
“அது என் புல்புல்” என்றான்.

சின்மயியின் மாமா, மாமி, பெரியம்மா, பெரியப்பா நால்வரும் இருக்க, பரசுராமைக் காணவில்லை.

ஹரி‌ ”அப்பாவை நான் வான்னே‌ சொல்லலை ‌சின்மயி. எதையாவது‌ பேசி இருக்கற சந்தோஷத்தைக்‌ கெடுத்துடுவார். எதுக்கு வீணா?”

சின்மயிக்கு வருத்தமாக இருந்தாலும், அவரைத் தாரை வார்த்துக் கொடுக்கச் சொன்னபோது நிகழ்ந்த‌ வாக்குவாதம்‌ நினைவிற்கு வர, அமைதியானாள்.

****************

என்ன பேச்சு… எத்தனை நிஷ்டூரம்?

ஒரு அப்பா இத்தனை அலட்சியமாக, சுயநலமாக, பொறுப்பற்று விட்டேற்றியாக இருக்க முடியுமா என்றால்… பரசுராம் முழுதாக எதிரே நின்றார்.

“இன்னும் எனக்கு ஹோம் புக் பண்ணல. பெத்த அப்பனை ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் ரோட்ல அலைய விட்டு, அப்படி என்ன‌ அவசரம் கல்யாணத்துக்கு… அதுவும் அவனோட?”

பவானி “என்ன அவசரம்னா… சின்மயிக்கு இருபத்தேழு வயசு முடியப் போறது. அவனோட என்ன‌, அவனோட… சிங்கபிரானை விட நல்ல வரனை‌த் தேடிப் புடிக்கறதை இத்தனை நாளா யாரு தடுத்தா?”

“தெரிஞ்ச குடும்பம், நல்ல‌ பையன். ஃபேமஸா இருக்கான். நிறைய சம்பாதிக்கறான். தானா அமையறது. அப்பாவா நின்னு தாரை வார்த்துக் குடுத்தா கௌரவமா இருக்கும். இல்லைன்னா என்னவோ செய்யட்டும்” என்று கத்தினாள்.

“சரி, அத்தனை அக்கறை இருக்கற அண்ணாவா இருந்தா, அமெரிக்கா போறதைத் தள்ளிப் போட வேண்டியதுதானே?” - பரசுராம்

“என்னை‌ செட்டில் பண்ணிட்டு‌ எங்க வேணா போகட்டும், யாரை‌வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும்”

பவானி “ஏன், பெத்தவருக்கு எந்தக் கடமையும்‌ இல்லையா? அடுத்த வாரம் கல்யாணம். சிங்கம்தான் அத்தனை ஏற்பாடும் செய்யறான். இது வரைக்கும் அவளுக்கு ஒரு குந்துமணி தங்கம் கூட வாங்கலை. எத்தனையோ சிரமப் படறவா கூட பொண்ணு கல்யாணம்னா கடன் வாங்கியாவது கல்யாணம் பண்ணுவா… அம்மாவோட நகையைக் குடுக்கச் சொல்லு ஹரி. என்ன செய்ய முடியும்னு‌ பார்ப்போம்”

பரசுராம் எதற்கும் மசியாது முரண்டினார். கடைசியாக ஹரி

“பணத்தைப் புரட்ட எங்களுக்கும் அவகாசம் வேண்டாமா? யார் வந்தாலும் வரலைன்னாலும் சிங்கம் சின்மயியைக் கல்யாணம் பண்ணிப்பான். எதுக்கும் ஒத்து வரலைன்னா, நான் பணமும் தர மாட்டேன். இந்த வீட்டோட அக்ரிமென்ட்டை கேன்ஸல் பண்ணி அட்வான்ஸைத் திருப்பி வாங்கிடுவேன்‌”

பரசுராம் “என்னை ஏமாத்திட்டான்னு ஒருத்தர் விடாம கேஸ் போடுவேன்”

“போடட்டும். அதுக்கும் பணம் வேணும். போட்டாலும் செல்லாது. எங்களுக்கு பணம் குடுக்க சம்மதம்னு ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கையெழுத்து போட்டது மறந்து போச்சோ?”

“என்னடா, நீ மிரட்டினா, நான் பயந்துடுவேனா?”

சின்மயி “போறும் ஹரி. பவா வா, போகலாம்” என்றாள் நொந்து போய்.

ஹரி பெரியப்பாவிடம் பேசியதில் மறுநாள் மாலை தானே கால் செய்த பரசுராம் ‘தாரை வார்த்துத் தர சம்மதம்’ என்றார்.

ஹோமுக்கு மூவரும் பணம் தந்திருக்க, மாதா மாதம் பணம் கட்டும் பொறுப்பை ஹரி ஏற்றுக் கொண்டான். கைச் செலவுக்குத் தான் பணம் தருவதாகச் சொன்ன சின்மயி, ஒரு வருடத்திற்கான தொகை என ஒரு லட்சம் ரூபாயை உடனடியாக அவரது வங்கிக்கணக்கில் சேர்த்தாள். அடுத்த மாத இறுதியில் பெங்களூரிலேயே இருக்கும் ஹோமுக்கு சென்று விடுவார்.

****

எல்லோரும் சிங்கபிரானை பாடச் சொல்லிக் கேட்டதில் அவன் ‘பிரம்மம் ஒகடே’ வைப் பாடியதில் சின்மயி தன்னை மீட்டுக் கொண்டாள்.

பெரியம்மா “அற்புதம் டா சிங்கம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. கல்யாணி இருந்து பார்க்காம போய்ட்டா”

சின்மயி அவன் ஸ்டூடியோவில் இருக்கும் கல்யாணியின் புகைப்படத்தைப் பற்றிச் சொன்னாள்.

விருந்து நன்றாகவே நடந்தது. எல்லா நிகழ்வுகளிலும் பத்மினி அத்தனை உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டதே அதிசயம்தான்.

வயதுப் பிள்ளைகளைத் தனியே விட்டு நீண்ட நாள் இருந்து விட்ட பவானி மதியம் கொல்கத்தா கிளம்புகையில் “சின்மயி, அப்பாவை நினைச்சு உன் நிம்மதியைக் கெடுத்துக்காத. இணக்கம் இல்லாம தனிச்சு நிக்கறது அவர்தான். மனசுல தணதணப்பை வளர்த்துக்க வேண்டிய அவசியமே கிடையாது. சந்தோஷமா இரு. அவர் (பாஸ்கர்) வந்தப்புறம் பார்க்கலாம்” என்றாள்.

பெரியப்பா “சின்மயி, வயசாகியும் பரசுக்கு குடும்பம், குழந்தைகளோட அருமை தெரியலை. உடம்புல ரத்தம் செத்தா புரியும். அப்ப யாரும் பக்கத்துல கூட வர மாட்டா. எங்களையே பாரு…

“உன் அண்ணா ரெண்டு பேரும் அமெரிக்கால. பிரசவம், பேபி சிட்டிங்னு போனோம். இப்ப எல்லாரும்‌ பெருசாயாச்சு. எங்களுக்கும் வயசாயாச்சு. அத்தனை செஞ்சும் இப்ப மெடிகல் இன்ஷ்யூரன்ஸை காரணம் காட்டி அண்ட விடறதில்லை. ஆனா என்ன, வசதியான ஹோம்ல இருக்கோம்.

“...”

“அதுல தப்போ தரக்குறைவோ எதுவும் இல்லை. நம்ம வயசு மக்கள். சின்ன வயசுல விட்டுப்போன கொண்டாட்டங்கள், விரதங்கள், வாக்கிங்னு இதுவும் நன்னாதான் இருக்கு. நமக்கு நாமே என்டர்டெயின்மென்ட். உனக்குத் தெரியுமா, உன் பெரியம்மாவும் நானும் இப்ப வேலன்டைன்’ஸ் டே கூட செலிபரேட் பண்றோம். இத்தனை ஏன், இப்ப பசங்களுமே இந்தியா வந்தா அங்கதான் வந்து தங்கறா”

“...”

“பரசுவும் போகட்டும். நாலு பேரரைப் பார்த்தாவது தன் இழப்பு என்னன்னு புரிஞ்சுக்கட்டும்”

“...”

பெரியம்மா கீதா “சின்மயி, சிங்கபிரான் நல்ல பையன். அப்பவே நீன்னா அத்தனை இஷ்டம் அவனுக்கு. பாலாமணியும் அப்படித்தான். தங்கமா பார்த்துப்பா. சௌக்கியமா இருடீ குழந்தை” என்றனர்.

சித்தப்பாவும், சித்தியும் கல்யாணம் முடிந்ததுமே கிளம்பி இருந்தனர். ரவியும்‌ ஜனனியும் அன்றிரவே கனடா‌ சென்றனர்.

மறுநாள் காலை பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்த சிங்கபிரானிடம், சின்மயி “இப்ப என்ன ச்சிங்கா, நீ ஆஸ்திரேலியா போக இன்னும் ரெண்டு வாரம் இருக்கே”

“நீயும்தான் புல்புல் வர, போய்க் கிளம்பு. அரைமணில புறப்படணும்”

“என் ட்ரெஸ்…”

“ரெடியா இருக்கு பாரு”

“ச்சிங்கா…”

“ம்”

“எங்க போறோம்?”

“ஹனிமூன்”

“#₹@&#!?”

“என்ன, சத்தத்தையே காணும்?”

“இப்ப ஏன் ச்சிங்கா… உனக்கு வேற ரிஹர்ஸல்லாம் இருக்கு”

“அதுக்குதான்‌ போறோம்”

“!?!?”

“ஹனிமூனுக்குப் போயும் சும்மாதானே இருக்கப் போறேன். அங்க‌ வந்து பாடிக்கறேன்”

“...”

“பாலா‌ மாமி‌ய தனியா விட்டுட்டு…”

“ஏன், உங்கப்பாவையும்‌ வரச் சொல்லேன்”

“...”

“நான் கான்ஸர்ட் போகும்போதெல்லாம் உன்‌ பாலா‌ மாமி தனியாத்தான் இருக்கா”

“அது…”

“ஹனிமூனுக்குக் கூட்டமா போனா வரலாறு என்னை மன்னிக்காது புல்புல்”

இந்த சிங்கபிரானை எதிர் கொள்ள இயலாது தவித்தவள்

“ச்சிங்கா…”

“போடீன்னா...‌”

“அட்லீஸ்ட் எங்க போறோம்னாவது சொல்லேன்”

“ரெண்டு இடம். உன்னோட ஆசைக்கு ஒன்னு, என்னோட ஆசைக்கு ஒன்னு”

***********************

சிங்கபிரானும் சின்மயியும் மதியம் மூன்று மணிக்கு ஜபல்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கி, ஒரு டூரிஸ்ட் டாக்ஸியில் பாந்தவ்கர்‌ (Bandhavgarh) தேசியப் பூங்காவை நோக்கிப் பயணித்தனர்.

சின்ன வயதில் திருச்சியில் ஒருமுறை ஜெமினி சர்க்கஸ் வந்தது. சின்மயியின் சித்தப்பா, வீட்டில் இருந்த குழந்தைகள், பெண்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றார். சர்க்கஸில் பறவைகள், நாய், குரங்கு, யானை, புலி, கரடி, ஒட்டகம் என விலங்குகளும் இருந்த சமயம் அது.

ஐந்தாவது படித்த சின்மயி “இந்த அனிமல்ஸை பார்க்கவே பாவமா இருக்கு ச்சிங்கா. அவன் சாட்டையால அடிச்சு பயமுறுத்தறான் பாரு. அது மட்டும் திருப்பி அடிச்சா என்னாகும்? எனக்கு டிஸ்கவரி சேனல்ல வர மாதிரி சிங்கம், புலியை எல்லாம் காட்ல போய், அதோட இடத்துல பார்க்கணும் ச்சிங்கா”

“காட்டுலயா… நமக்கு வழி தெரியாதே” என்றான் ரவிசோமன். இதோ, இருவரும் இன்று மத்தியப் பிரதேசத்தின் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள புலிகள் காப்பகத்தில் (Tiger Reserve).

இரவு ஏழரை மணிக்கு அடக்கப்பட்ட ஒளியில் இருந்த டென்ட் ரிஸார்ட்டுக்குச் சென்று, முகம் கழுவி, இரவு உணவிற்கென ரெஸ்ட்டாரென்டை நோக்கி நடந்தனர்.

வழியில் நிறைய திறந்தவெளி ஜீப்களும் வேன்களும் நின்றன. புலி பக்கத்தில் இல்லை என்றாலும், அடிக்கொன்றாக வைக்கப்பட்டிருந்த புலியின் படங்களும் காட்டின் நிசப்தமும் இருளும் சோடியம் வேபர் விளக்கின் மாசு படியாத கரிய வானமும் எந்நேரமும் புலி பாய்ந்து விடுவதான அச்சத்தைத்‌ தோற்றுவித்தது.

இவர்களுக்கு கைடாக வந்த ராஜு போர்ஸே “புலி இங்க கூட வரலாம் சாப்” என்று பயமுறுத்தினான்.

“அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் இங்க வந்துடுங்க சாப். மெயின் கேட்ல என்ட்ரி போட்டு‌ பேட்ச் பேட்சா உள்ள அனுப்புவாங்க. காலை‌வேளைலதான்‌ தண்ணி குடிக்க வர்ற‌
புலி‌ நடமாட்டம் அதிகம் இருக்கும். சைட்டிங்க்கு கியாரண்டி கிடையாது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா‌ கிடைக்கும்” என்றவன் பேசிய உடைந்த ஆங்கிலம் ஹிந்தியாகவே ஒலித்தது.

சீக்கிரமே உறங்கி, நாலரைக்கே அலாரம் வைத்து எழுந்தனர். தண்ணீர் சில்லென்று இருந்ததில் பல் தேய்ப்பதற்கே பல் கிட்டித்துப்‌ போக, ஓய்வறையிலிருந்து வந்த சின்மயி “திரும்பி‌‌ வந்து குளிச்சுக்கலாம் ச்சிங்கா” என்றவளே பிறகு,

“புலி வாசனையை வெச்சுதான் இரை தேடுமாம் ச்சிங்கா. குளிக்காம போனா மேல பாய்ஞ்சுடாது?”

உரக்கச் சிரித்த‌ சிங்கபிரான் “முதல்ல புலி தெரியறதான்னு பார்ப்போம் புல்புல். என்னவோ, மரத்துக்கு மரம் புலிய கட்டிப் போட்டு வெச்சிருக்கற மாதிரி…”

மெலிதான பனிப்புகை படர்ந்த இருள் பிரியாத அதிகாலை நேரம். திறந்த வெளி ஜீப் பயணம். கானகத்தில் நவம்பர் மாத முதல் வாரத்தின் வடக்கத்திக் குளிர் எலும்பு வரை ஊடுருவியது.

பிரதான வாயிலின் வெளியே அப்போதுதான் திறந்த கடையில் தேநீர் அருந்தியபடி வேடிக்கை பார்த்தர். பொழுது புலரும் வேளையில் அந்தப் பெரிய இரும்புக் கம்பிக் கதவுகளுக்குப் பின் பனித்திரையினூடே‌ ஊடுருவும் சூரிய ஒளியின் பின்னணியில், இரு மயில்கள்‌‌ துரத்தியபடி ஓட, மான் ஒன்று‌ மெதுவாகக் கடந்தது.

“ச்சிங்கா, ஜுராஸிக் பார்க் உள்ள போகப் போற மாதிரி எக்ஸைட்டடா இருக்குடா”

“யெஸ். இந்த சீனே ரொம்ப வினோதமா, eerie யா, ஆதிகாலத்து இந்தியா மாதிரி இருக்கு புல்புல். வழில யாராவது ரிஷி வந்தாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை”

வேனில் ஒரு டிரைவரும் கைடும் வந்தனர். இரண்டு மூன்று பாதைகளில் சென்ற வாகனங்கள் சந்தித்தபோது, புலியின் சமீபத்திய தடங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.

வழியில் கரடி, எண்ணற்ற மான்கள், குரங்குகள், நீல்காய், மயில்கள் தென்பட்டன. ஒரு மணிநேரம் போல் காட்டுக்குக் குறுக்கும் நெடுக்கும் ஓடியபின், குரங்குகளின் புர்புர் சத்தமும், மான்களின் நகர்வும் கேட்டது.

ராஜு போர்ஸே “புலி‌ அருகில் இருப்பதை குரங்கு மற்ற விலங்குகளுக்கு‌ எச்சரிக்கிறது” என்றான்.

ஆளரவமற்ற(!) வனத்தின் நடுவே ஜீப்பின் இன்ஜினை அணைத்து விட்டு, நால்வரும்‌ காத்திருந்தனர். அதேபோல் இன்னும் இரண்டு வண்டிகள் சத்தமின்றிப் பின்னால் வந்து நின்றன.

அதில் வேன் ஒன்றில் முழுவதும் வெளிநாட்டவர்கள். மூன்று நாள்களாக மூன்று வேளை சஃபாரிக்குப் போயும் இன்னும் புலி தென்படவில்லையாம்.

திடீரென உறுமல் சத்தம் வர, சின்மயிக்கு மயிர்க்கூச்செறிந்தது.

“ச்சிங்கா!” என்றது அவளுக்கே‌ கேட்கவில்லை. இடது பக்க மேட்டில் இருந்து இரண்டு குட்டிகள் தொடர இறங்கி வந்த‌ புலிதான் எத்தனை அழகு, பெரிது, கம்பீரம்?!

பார்த்த கணத்தில்‌ சிலிர்ப்பு ஓட, சிங்கபிரானின்‌ கையைத் தன்னோடு அணைத்து, அவன்‌ தோளில் சாய்ந்து கொண்டவளை அணைத்துக் கொண்ட சிங்கபிரான்

“டைகர் க்ராஸிங்‌ புல்புல்” என்று கிசுகிசுத்தான்.

அதுவரை எநிரே தெரிந்த புலிகளும்‌ அவர்களும்‌ மட்டுமே உலகில் இருக்க, அந்த டிரைவர் “ஃபோட்டோ, வீடியோ எடு ஸாப்” என்றதும்தான் அந்த‌‌ நினைவே வந்தது.

சின்மயி‌ “பெயின்டிங்ல இருக்கற மாதிரியே இருக்குல்ல?”

“இது நிஜம்டீ! வேணா டெஸ்ட் பண்றயா?”

புலிகள் பாதையைக் கடந்த பின்னும்‌ வண்டி நகரவில்லை.

“என்னாச்சு ராஜு?”

“ஆப் பஹுத் கிஸ்மத் வாலா ஹே சாப். வெரி‌ லக்கி ஸாப்.‌ D1 இறங்கி வருது பாருங்க”

D1 என்று‌ அழைக்கப்படும், 230-250 கிலோ எடையுள்ள திண்மையான ஆண் புலி‌ வலப்புறச்‌ சரிவில் இருந்து மேலே ஏறி‌ வந்து கொண்டிருந்தது.

யாரோ “ஷ்” என்றதில் சர்வ நிசப்தம். அனைவரின் விழிகள்‌ மட்டுமே அசைந்தன.

சிங்கபிரானும் சின்மயியும் இருந்த‌ ஜீப் முன்னே இருக்க, மிக அருகில்‌ வந்த புலி, இவர்களையே பார்ப்பது போல் வந்து, மேடேறிச்‌ சென்று‌விட்டது.

தலை மறைந்தபின் அந்தத் திசையிலிருந்து பலத்த‌தொரு உறுமல் மட்டும் கேட்டது.

அனைவரும் பயமாக, நிம்மதியாக, எதையோ சாதித்த உணர்வில் திளைத்தனர்.

D1 சில மாதங்களுக்கு முன் பூஜாரி என்ற மற்றொரு ஆண் புலியைக் கொன்று விட்டதாகவும், இப்போது இதுவே இங்கு ராஜாவாகத் திகழ்வதாகவும் ராஜு போர்ஸே தெரிவித்தான்.

சின்மயி, அதிர்ச்சியுடன் “கொலையா?” என்றாள்.

சிங்கபிரான் “ஏன்?”

“தன்னோட இடத்துக்காகவும் தாராங்கற பெண் புலிக்காகவும் ஸாப்”

“புலிக்குக் கூட பெண்ணாசையும் மண்ணாசையும் இருக்குமா ச்சிங்கா?”

“ஒய் நாட் புல்புல்?”

சின்மயி “ஒரு‌ கொலை பண்ணிட்டு எத்தனை சுதந்திரமா நடமாடறது…‌ அதைப் பார்க்க இத்தனை பேர் காசு குடுத்து‌ வந்திருக்கோம்”

பாஷை வேறானாலும் சின்மயியின் கேள்வியைப் புரிந்து கொண்ட‌ ராஜு

“காட்டோட சட்டம் எல்லாம் வேற மேம் ஸாப். இங்க உயிரோட இருக்கறதுதான் முக்கியம். பறவை, மான், குரங்கு, கரடி, புலின்னு எல்லாத்துக்குமே சர்வைவல்தான் சவால். அதுக்காக கொலை உள்பட எதுவும் செய்யலாம். புலி பசிக்கு மானை அடிக்கறதை நாம எதுவும் சொல்றதில்லை. அது இயற்கை, உணவுச் சங்கிலின்னு கடந்து போயிடறோம்”

“...”

“ஆனா, இது‌வேற. சம பலமுள்ள ரெண்டு ஆண் புலிகளோட ஆக்ரோஷமான சண்டை. ஜீவ மரணப் போராட்டம். நைட் ஃபுல்லா நடந்த‌ சண்டைல ரெண்டும் உறுமின சத்தம் காடு முழுதும் எதிரொலிச்சது. மறுநாள் காலைல பூஜாரி உயிரோட இல்லை. இப்ப இவன்தான் இங்க ராஜா. இதான் ப்ராக்டிகல். அடிச்சா கோபம் வந்து திரும்ப அடிக்கறதுதானே இயல்பு, இயற்கை? நாமும் இதைத்தான் செஞ்சோம். சமீபமாதான் சட்டம்ங்கற பேர்ல கோபத்தை அடக்கப் பழகிட்டோம்”

சிங்கபிரான் “எக்ஸலென்ட் ராஜு. வெரி வெல் செட். மனிதர்கள்லயும் அதேதான். இங்க உடல் பலத்துக்கு பதிலா பண பலம். அதிகார பலம். பவர் இருக்கறவன் ஜெயிக்கறான்”

ஒரு சிறிய பாலத்தைக் கடந்து திருப்பத்தில் திரும்ப, அங்கிருந்த‌ நீர் நிலையில் அந்தப் பெண்புலியும் குட்டிகளும்‌ தண்ணீர் அருந்துவதைக் கண்டு மீண்டும் வண்டி நின்றது.

குட்டிகள் இரண்டும் அத்தனை அழகாக அள்ளிக் கொஞ்சலாம் போல இருந்தன.

சின்மயி “க்யூட்டா இருக்குல்ல ச்சிங்கா, ஒரு குட்டியைத் தூக்கிண்டு போய்ட்டா என்ன?”

சிங்கபிரான் சீரியஸாக “உனக்கு நோ புலிக்குட்டி புல்புல், ஒன்லி சிங்கக்குட்டி” என்றதில்‌ சின்மயி முகம் சிவந்து புலியின் பக்கம்‌ திரும்பிக்கொண்டாள்.

பின்னால் வந்து நின்ற ஜீப்பில் இருந்த ஒரு சிறுமி, குட்டிகளின் தந்தை எங்கே என்றது கேட்டது.

போர்ஸே “ஆண் புலி தன்னோட எல்லைல தனியாத்தான் சுத்தும். பல‌ பெண்புலிகளோட இடத்துக்குப் போகும். இந்த D1 மாதிரி சண்டை கூடப் போடும். ஆனா, குட்டியைக் குடுக்கறதோட சரி. வளர்க்கறது முழுக்க பெண் புலிகள்தான்”

சிங்கபிரான் “உங்கப்பா ஒரு புலி புல்புல்” என்றதில், அவள் எத்தனை முயன்றும் சின்மயியின் முகம் சுருங்கி விட்டது. அவன் இயல்பாகத்தான் சொன்னான். சொன்னது உண்மையும் கூட. இதற்கு முன்பும் அவரைப் பற்றிப் பேசி இருக்கிறான்தான். ஆனாலும், இப்போது ஏனோ வலித்தது. ஒரு நண்பனாக அவனது பேச்சைத் தனக்காக என்று‌ நினைத்தவளுக்குத் தன்னைக் காயப்படுத்துவது அவனது‌ நோக்கம் இல்லை‌ என்று புரிந்தாலுமே கணவனாக அவனது கிண்டல் ரசிக்கவில்லை.

வண்டி குலுங்கலுடன் நகர, தடுமாறியவளைப் பிடித்த சிங்கபிரான் “உள்ள நகர்ந்து வா புல்புல்” எனத் தன்னிடம் இழுத்தான்.

அடுத்த ஆச்சர்யமாக வனத்தின் நடுவே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த,
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு தலை ஆதிசேஷனில் சயனித்திருக்கும் 35- 40 அடி‌ நீளமுள்ள விஷ்ணு‌ சிலையைப் பார்த்தனர். பிரம்மாவும் சிவனும்‌ உடனிருக்க, மும்மூர்த்திகளாக இருந்தனர்.

அடர்ந்த காட்டில் வெட்ட வெளியில் அத்தனை பிரம்மாண்டமான சிலை முழுதும் பாசி படர்ந்து, இந்த பூமியைத் தாண்டி, பிரபஞ்சத்துக்கானதாய், மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்டதான (Ethereal) ஒருவித raw வான உணர்வைத் தந்தது.

அங்கே கைடுகளின் உதவியுடன்‌ இறங்கிச்சென்று பார்க்க முடிந்தது. சஃபாரி முடியும் நேரமாகி விட, ரிஸார்ட்டுக்குத் திரும்பினர்.

அறைக்குள் வந்ததுமே சின்மயியைப் பற்றி நிறுத்திய சிங்கபிரான் “ஸாரி”

“...”

“ப்ளீஸ், நான் வேணும்னு சொல்லலை. ஆனா, என்னால உங்கிட்ட யோசிச்சு யோசிச்சுப் பேச முடியாது புல்புல்”

“ஏய் ச்சிங்கா… நீ வேற‌ ஏன்டா?”

“கோபம் இல்லையே?’”

“ இல்ல”

“அப்ப கட்டிக்கோ”

“லவ்‍ என்பதைச் சொல்வதைப்‌ போல் காதல் என்பது சுலபமல்லதானே?

சின்மயிக்கு தாய்மொழியில் சிருங்காரம் அதிக‌ கூச்சத்தைத் தந்தது.

“ச்சிங்கா…”

இருவரும் குளித்து, உணவு உண்டதும் மீண்டும் டாக்ஸியில் பயணித்தனர்.

எங்கே போகிறோம் என்று கூடக் கேட்காமல், வண்டி நகரவுமே சின்மயி உறங்கிவிட்டாள். இருவரும் ஆறு மணிநேரப் பயணத்தை உறங்கியே கழித்தனர். இடத்தை அடைந்தபோது நன்கு இருட்டி இருந்தது.

சிங்கபிரான் அந்த நட்சத்திர ஹோட்டலின் ரிஸப்ஷனிஸ்ட்டிடம் ரூம் சாவியை வாங்கச் சென்றிருக்க, அங்கே நின்று சுற்றிப் பார்த்த சின்மயி, அதிர்ச்சி மேலிட, வேகமாக சிங்கபிரானின் அருகே சென்று நின்றாள்.

சாவியுடன் திரும்பியவன், சின்மயியின் மேல் மோதினான்.

“நீதானா, லக்கேஜ் எங்க?”

“என்ன ச்சிங்கா இது?”

“எது?”

“ம்ப்ச்… இங்க ஏன்?”

“ரொம்ப நாள் ஆசைடீ. உன்னைத் தவிர வேற யாரோட இங்க வரமுடியும், சொல்லு?”

கண்ணைச் சிமிட்டியவன் காட்டிய திசையில் சுவர் முழுதும் கோவில் கோபுரத்தின்‌, சிலைகளின் படமிருக்க, வெல்கம் டு‌ கஜுராஹோ என்று எழுதி இருந்தது.

அறைக்குள் இருந்தாலுமே திடீரென அந்த இடத்தில் சிங்கபிரானுடன் தனித்து இருப்பதே சின்மயிக்குக் குறுகுறுப்பைத் தந்தது.

“பசிக்கறது புல்புல், வா சாப்பிடப் போகலாம்”

“இங்கயே வரவழைச்சு சாப்பிடலாம் ச்சிங்கா”

இமைக்காது அவளையே பார்த்தவன், வாய்விட்டுச்‌ சிரித்தான்.

அவன் பார்வையும் சிரிப்பும் மிக மோசமாக சீண்டியதில், சின்மயி “என்ன சிரிப்பு?”

“மாதா‌ சின்மயானந்தமயி ஓவரா ஃபீல் பண்றீங்களோ?”

“ச்…சிங்ங்காஆ!”

“வா போகலாம்” என்ற சிங்கபிரான்

நகம் கடிக்கும் பெண்ணே
அடக்காத ஆசை..
நாகரீகம் பார்த்தால்
நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை

தங்கத்தாமரை மகளே… என விசிலடித்துக்கொண்டே தலை வாரினான்.

********************

இங்கும் காலையில் வண்டி வந்தபோது இருவரும் பிரேக்ஃபாஸ்ட்டில்‌ இருந்த‌னர். காலை உணவு காம்ப்ளிமென்ட்டரி‌ என்பதால் கூட்டமாக இருந்தது.

சின்மயிக்கு எல்லாரும்‌ தங்களையே‌ பார்ப்பது போல் இருந்தது.

“ஏன் ச்சிங்கா‌ இப்டி பண்ற?”

“யார்றீ இவ… இங்க வந்திருக்கற அத்தனை பேரும அதுக்குதான் வந்திருக்கா… தவிர, நீ நினைக்கற மாதிரி ஊரெல்லாம் அதே போல கிடையாது புல்புல்”

UNESCO பாரம்பரிய நினைவுச் சின்னமான கஜுராஹோவில் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கோவில்களில் காலப்போக்கில் சிதைந்ததும் அழிந்ததும் போக, இருபத்தைந்து கோவில்களே இப்போது மீதம் உள்ளன. இதில் இந்து மற்றும் சமணர்களின் கோவில்களும் அடக்கம்.

9 மற்றும் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில்களும் சிற்பங்களும் வாழ்வியலை, நடனக் கலையை, தேவலோகப்‌பெண்களை, காட்டு விலங்குகளை சித்தரிக்கிறது.

தற்போதுள்ள சிற்பங்களில், ஆண், பெண் உறவைக் குறிக்கும், புலன்களைத் தூண்டக் கூடிய‌ சிற்பங்கள்‌ வெறும் பத்து சதவீதமே. அதுவும்‌ ஆலயத்தின் வெளிச் சுற்றுச் சுவரில் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது.

“ப்யூட்டிஃபுல் கார்விங்ஸ், இல்ல புல்புல்?”

“ம்… ச்சிங்கா, ஒரு‌ க்யூரியாஸிடில கேக்கறேன்… இதை எல்லாம்‌ சிற்பமா‌ செய்யணும்னு‌ யார் சொல்லி‌ இருப்பா?”

“ரசனையான நம்ம ராஜாக்கள்ல‌ யாராவதுதான் இதை செய்யச் சொல்லி‌‌ இருக்கணும்”

“இப்பவே இதைப் பார்க்க‌ என்னவோ‌ போல‌ இருக்கே… அந்தக் காலத்துலயே எப்படி‌ இப்டி?”

“என்னவோ போலன்னா?”

“…”

“இது போல ஒரே இடத்துல‌ இல்லாட்டாலும், நம்ம ஊர்க் கோவில்கள்லயும்‌ இது போல சிலைகள் இருக்கு புல்புல். டாக்டர் நீ, உனக்குத் தெரியாததா?””

“...”

“அப்பல்லாம் குழந்தை இல்லாதவங்களை கோவில்‌ கோவிலா போகச் சொல்லுவா. சில கோவில்கள்ல ரெண்டு நாள் தங்கச்‌ சொல்லுவா. புஸ்த்தகம், மீடியாவெல்லாம் இல்லாத காலம். யார் கிட்டயும் கேட்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும், அவாளுக்குத் தெரியணுமே… அதுக்குதான் இதெல்லாம். அந்தக் காலத்து லைவ் மீடியா”

“ம்”

“உண்மைல ஸ்வாமி பேரால இது ஒரு ஒர்க் ஷாப்தான், இல்ல? பெரிய குடும்பத்துல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் நாலு நாள் தனியா வெளில போனாலே, பாதி தயக்கம் போயிடும். மீதி தானா நடக்கும்”

“பெருமாளே, எத்தனை பேச்சு… சரியான ஆராய்ச்சிமணி” என்ற‌ சின்மயி, சிங்கபிரானின்‌ முடியை இரண்டு கைகளாலும் பற்றி ஆட்டினாள்.

“உனக்குப் புரிஞ்சுதா இல்லையா‌ புல்புல்?”

“புரியாம‌ என்ன?’

“ஷ்யூர்?”

“சரி, என்ன புரிஞ்சுது?”

“சிங்கபிரான் ஒரு மோஸ்ஸ்சமான ஆளுன்னு”

“ஸோ பீ இட்”

இரண்டு நாள்கள் நிதானமாக சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து ஃப்ளைட்டில் டெல்லி வந்து, பெங்களூர் திரும்பினர்.

இரண்டு வார விடுப்பு முடிந்து சின்மயி மருத்துவமனைக்கும் சிங்கபிரான் தன் இசை மற்றும் அலுவலகப் பணிகளுக்கும் சென்றனர்.

ஹரி, பத்மினிக்கு டிக்கெட் வந்து, இரண்டே நாளில் சிலிக்கன் வேலிக்கு பறந்தனர்.

மேலும் ஒரு வாரம் கடந்திருக்க, சிங்கபிரான் ஆஸ்திரேலியா புறப்பட இரண்டு நாள்களே இருந்த நிலையில், மாலை ஐந்து மணிக்குத் தன் ஸ்டூடியோவில் இருந்தவனை மருத்துவமனையிலிருந்து அழைத்தனர்.

“மிஸ்டர் சிங்கபிரான்..‌ டாக்டர் சின்மயிக்கு லேசா மயக்கமா இருந்ததால, ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். நத்திங் சீரியஸ். பட், நீங்க உடனே வாங்க”


​
 

Author: VedhaVishal
Article Title: நாணங்களும் எதற்காக? 14 - PREFINAL EPISODE
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

S HEMA

Member
Mar 18, 2026
11
9
13
CHENNAI
What's this... ஒண்ணுமே நடக்கல.. அதுக்குள்ள மயக்கமா? உன் ஆள் மோஸ்ஸ்சமா இல்ல மா... Awesome ma