• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 15 - FINALE 1

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
75
398
83
Chennai
நாணங்களும் எதற்காக? 15


சின்மயியும் சிங்கபிரானும் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்க, மஞ்சளும் சுண்ணமும் கலந்து சிவந்திருந்த நீரில் வேப்பிலையும் கரித்துண்டும் சாதமும் போட்டு வைத்திருக்க,
மூன்று விளக்குத் திரிகளை ஏற்றிய பாலாமணி, ‘கண்ணைச் சுட…‌முழியைச் சுட… என்று முனகியபடி அவர்கள் இருவரையும் சுற்றி திரிகளை ஒன்றொன்றாக அந்த நீரில் போட்டு திருஷ்டி கழித்தார்.

‘அந்த இடத்துல‌யே உட்காராம சட்டுனு எழுந்து போய் காலை அலம்பி விபூதி இட்டுக்கணும்’ என‌ முன்பே அவர்‌ சொன்னதை‌ச் செய்தனர்.

“சீக்கிரம்‌ சாப்ட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ சின்மயி. ரெண்டு, மூணு நாளைக்கு ஹாஸ்பிடல், க்ளீனிக் எதுவும் வேண்டாம். உடம்பையும் மனசையும் போட்டு அலட்டாம அமைதியா‌ இரு. புரியறதா… ஏதாவதுன்னா ஒரு குரல் குடுடா சிங்கம்”

“நான் பார்த்துக்கறேம்மா” என்ற சிங்கபிரான், கதவுகளைப் பூட்டி, தனி வீடு என்பதால் வார்னிங் அலாரம் செட்‌ செய்துவிட்டு, மனைவியுடன் மாடி‌ ஏறினான்.

அறையின்‌ ஒரு மூலையில் தாழ்மையான உயரத்தில் குஷன்களுடன் கூடிய‌ வசதியான, வட்ட‌ வடிவமான சிறிய‌ சோஃபாவில் (Cuddle Seat) சின்மயியை அமர்த்திய சிங்கபிரான், முதல் வேலையாக இருவரது அலைபேசிகளையும் அமைதியாக்கி, விளக்கை மென்மையாக்கி, அவளருகில் சென்று அமர்ந்தான்.

“புல்புல்…” என விரிந்த கரங்களுக்குள் தயங்காது பொருந்தினாள்.

“காம் டவுன் புல்புல்” என்ற சிங்கபிரான், அவளே பேசும் வரை எதுவும் கேட்கவில்லை. மாலையில் அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர் சுனிதா, சின்மயி தலை சுற்றி அமர்ந்துவிட, அவளது ரத்த‌ அழுத்தம் ஏகத்துக்குக் குறைந்துவிட்டதாகச் சொன்னதைக் கேட்டதோடு சரி. அந்தப் பெண்ணுக்குக் காரணம் தெரியவில்லை.

இவன் “நான் இங்கதான் புல்புல் இருக்கேன், நீ தூங்கு” எனவும், ஏதோ அதற்கான கடவுச்சொல்லைக் கேட்டது போல் சின்மயிக்கு உடனடி உறக்கம். ஏழு மணி போல் சலைன் ஏறுவது முடிந்த பின்னர் எழுப்பி, மருத்துவரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.

வழக்கமாக மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மாலையில் க்ளீனிக் செல்பவள் தானும் வராது, தகவலும் தராததில் பாலாமணி மகனை அழைக்க, அவரிடம் விவரம் சொல்லி
“ ரெண்டு பேரும் சேர்ந்து வந்துடுவோம் மா” என்றான்.

“ச்சிங்கா…”

“ம்…”

“ஸாரி”

“எதுக்கு?”

“...”

“நீ பேசினாதான் புல்புல் எனக்குத் தெரியும். எங்கிட்ட சொல்றதுக்கு என்னடீ?”

“ச்சிங்கா, இன்னிக்கு மத்யானம்…

இன்று‌ மதியம் புறநோயாளிகள் பகுதியில் இரண்டு மூன்று‌ பேரே, அதுவும் தடுப்பூசிக்காக மட்டுமே மீதமிருந்த சமயம். குழந்தைகளுக்கான அவசரப் பிரிவிலிருந்து உடனடியாக வரும்படி சின்மயியை இன்டர்காமில் அழைத்தனர்.

வேக்ஸினேஷன் மட்டும் என்பதால், செவிலியைக் கவனிக்கச் சொல்லிவிட்டு ஓடினாள்.

பதினைந்து வயதுப் பெண். அம்மா யாருடனோ சென்றுவிட, தந்தை தூக்கு மாட்டிக்கொண்டார். ஒரே பெண். அதிக வசதி கிடையாது. பொறுப்பேற்க விரும்பாத சொந்தபந்தங்கள் விலகி விட, தனியே இருந்த பெண்ணை அவ்வப்போது விசாரித்து, கவனித்துக்கொண்டது அக்கம்பக்கத்தினர்தான். கல்வியும் நின்றுவிட்டது.

இரண்டு மாதங்கள் வரை தாக்குப்பிடித்த பெண், தனிமையும் இழப்பும். துயரமும் நெருக்க, அழுத்தம் தாளாது, காய்கறி அரியும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறாள்.

வரிசை வீடுகளில் அடுத்தடுத்து வசித்ததால், மாலையில் வெகுநேரம் வரை கதவு திறக்கவில்லை என்றதும் இரவு உணவுடன் வந்து பார்த்த அடுத்த வீட்டுப் பெண்ணும் அவள் கணவரும்தான், ரத்தக் குளத்தில் துள்ளத் துடிக்கக் கிடந்த பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தனர். இரண்டு மருத்துவர்கள்‌, நாலைந்து செவிலிகள்‌ என, நவீன மருத்துவக் கருவிகள் சேர்ந்து எத்தனை முயன்றும் உயிர் பிரிந்துவிட்டது.

சிகிச்சை அளிக்கும் வரை அதே கவனமாகத் தற்கொலை முயற்சிக்கான காரணம் கூட அறியாதிருந்த சின்மயி, அந்தப் பெண் இறந்த பின், விவரம் தெரிந்த பிறகு, பழைய நினைவுகளின் தாக்கத்தில் படபடத்துப் போய்த் தள்ளாடவும், உடன் இருந்த சுனிதா பிபி‌ யை பரிசோதித்து ட்ரீட் செய்திருக்கிறார். சிங்கபிரானுக்கு தகவல் தெரிவித்ததும் அவர்தான்.

“அந்தப் பொண்ணு எப்படி ஃபீல் பண்ணி இருப்பான்னு எனக்குத்‌ தெரியும் ச்சிங்கா… இதனாலதானோ என்னவோ‌ ஸ்ரீரங்கத்துல இருந்த‌வரை கீதா பெரியம்மா என்னைத் தனியா விட்டதே கிடையாது. படிக்கும்போது கூட பக்கத்துல இருப்பா. ஆனா, சில சமயம் அதையெல்லாம்‌‌ மீறி…”

“டேய் புல்புல்… நினைக்கவே
பயமா இருக்குடீ, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்”

சிங்கபிரான் கேன்யூலா போட்ட இடத்தில் பிளாஸ்டர் இட்டிருந்த சின்மயியின் மணிக்கட்டைப் பிடித்து அழுத்தியதில், “ஆ… வலிக்கறது சிங்கா”

“ஸாரி,ஸாரி, ஸாரிடா… டென்ஷன் ஆயிட்டேன்”

“அதான்‌‌ ஒன்னும் ஆகலையே”

“ஏய்… அடிச்சேன்னு வை… பாவம், மயக்கம் போட்டு‌ சரியாகி‌ வந்திருக்கன்னு பாத்தா… இஷ்டத்துக்கு பேசுவியா நீ?”

“...”

“தப்புதான். உன்னைப் பார்க்க வராம இருந்தது தப்புதான். அதுக்காக…என்னை நீ யோசிக்கவே இல்லையா புல்புல்… நான் என்ன‌டீ செஞ்சேன்?”

“...”

“அப்பவே எனக்குத் தெரிஞ்சிருந்தா உடனே வந்திருக்க மாட்டேனா புல்புல்?”

“நல்லவேளை நீ அப்ப வரலை‌ ச்சிங்கா. உன் டீச்சர் போன கோபத்துல எங்கப்பாவோட அடிதடில இறங்கினாலும் இறங்கி இருப்ப”

“நிச்சயமா… ஆனா, அது நீங்க மூணு பேரும் செஞ்சிருக்க வேண்டியதுடீ. அஃப்கோர்ஸ், அதனாலல்லாம் அந்தாள் திருந்தி இருக்க மாட்டார். அட்லீஸ்ட், உங்க மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்”

“...”

“அன்னிக்கே நான் அவர்கிட்ட அடி வாங்கிண்டு அமைதியா நின்னதுக்குக் காரணம், அந்த மாதிரி நேரத்துல நீ நம்ம‌ வீட்டுக்குள்ள இருந்ததுதான்”

“ச்சிங்கா…”

“...”

“என்ன புல்புல் பேசாம இருக்க… அதுசரி, நான் உங்கப்பாவை எதாவது சொன்னாதான் உனக்கு புடிக்கலையே”

“அப்டி இல்ல‌ச்சிங்கா…“

“வேற எப்டி…”

எதையோ சொல்ல வந்தவன், சுதாரித்து வேறு பேசினான்.

“சரி விடு. தூக்கம் வரதா?”

“நன்னா தூங்கிட்டேன்‌ ச்சிங்கா. உனக்கு இப்ப வேலை இருக்கா?”

“நத்திங். நாளைக்குதான்‌ பேக்கிங் ஆரம்பிக்கணும். இன்னும் ஃபுல் பேண்டுக்கும் ஆர்டர் பண்ண ட்ரெஸ் வரலை. ஜோயல்கிட்ட சொல்லணும். நாம கொஞ்சம்‌ ஷாப்பிங் போகலாம். இப்ப ஒன்லி புல்புல்” என்றுவாறு எழுந்து நின்றான்.

“எங்க போற ச்சிங்கா. இட்’ஸ் நைஸ் ஹியர்.‌ இங்கயே இருக்கலாமே”

“எனக்குப் பசிக்கறது. கீழ போய் ஏதாவது சாப்பிட கொண்டு வரேன்”

“நான்‌ வரட்டுமா?”

“டாக்டர் உன்னை ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்கார். கம்முனு இரு”

சிங்கபிரான் சமையலறை விளக்கைப் போட்டுப் பாத்திரங்களை உருட்டியதில், பாலாமணி வந்துவிட்டார்.

“என்னடா சிங்கம்?”

“சாப்ட ஏதாவது வேணும்மா”

“பிரட்தான் இருக்கு. புதுசுதான்”

“குட்”

“சின்மயி ஏதாவது சொன்னாளா?”

“ம்ஹ்ம்”

ஹாஸ்பிடலில் நடந்ததைக் கூறியபடி, பிரட்டில் பீநட் பட்டர், மாங்காய் தொக்கு என்று தடவியவன், இரண்டு கப் பூஸ்ட் சகிதம் மேலே வந்தான்.

அடக்கப்பட்ட ஒளியில், பெங்களூர் குளிரில் அந்தச் சிறிய இருக்கையில் இருவரும் உரசியபடி பேசிச் சிரிக்க, சிங்கபிரானுக்கு பூஸ்ட்டே போதை தந்தது.

“புல்புல்.‌ உனக்கு ஒன்னு காட்டட்டுமா?” என்றவன், எழுந்துபோய், அன்றொரு நாள் சின்மயி பார்த்த பொருள்களை, ஓவியத்தை எடுத்து வந்தான்.

“மத்த பசங்கள்லாம் எப்டின்னு எனக்குத் தெரியாது. எனக்கு வேற ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லாம இல்லை. ஆனாலும் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் புல்புல். அதுலயும் நினைச்சா உன்னைப் பார்க்க முடியாதபடி பிரச்சனை வேற.
அட் தி என்ட் ஆஃப் தி டே அன்னிக்கு நடந்ததை உன்கிட்ட சொல்லணும் போல இருக்கும்”

“...”

“செகண்ட் இயர் காலேஜ் ஃபெஸ்ட் சாரங்ல பாடின உடனே வேற காலேஜ் பொண்ணு ஒருத்தி ஓடி வந்து ப்ரபோஸ் பண்ணினதும் எனக்…”

“ஐயாக்கு ஒரே புளகாங்கிதமோ?” என்ற சின்மயி முழங்கையால் சிங்கபிரானை இடித்தாள். அவன் அவளை உருத்ததில் சின்மயி முகத்தைத் திருப்பிக் கொள்ள, சிரித்தவன்,

“ஏன், கூடாதா?”

“ம்ப்ச்.. நீ என்ன சொன்ன?”

“ஒண்ணும் சொல்லலை. பாடறதுக்காகவும், ஓரளவு‌ பிரபலமா இருக்கறதுக்காகவும் ப்ரபோஸ் பண்ற எல்லாப் பொண்களையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? “

“ஃபைனல் இயர் படிக்கும்போது சென்னைல பிருந்தாவனின்னு ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட ஆர்ட் எக்ஸிபிஷனுக்குப்‌ போனேன். விதவிதமா பிரமாதமா இருந்தது. இது மாதிரி ஒரு பெயின்ட்டிங் பண்ணச் சொல்லணும்னு அன்னிக்கே முடிவு பண்ணினேன். வேலை கிடைச்சு ஒரு வருஷம் ஆனதும். அவங்களை கமிஷன் பண்ணி இந்த பெயின்ட்டிங்கை பண்ணச் சொன்னேன். ரொம்ப அழகா இருக்குல்ல?”

“வெரி நைஸ் ச்சிங்கா. நாம ரெண்டு பேரும் தத்ரூபமா இருக்கோம். ஆனா, இதை ஏன் ச உள்ளயே வச்சிருக்க?”

“அது… இதுல‌ ரெண்டு பேருக்குமே சின்ன வயசு முகம்தான். சத்தியமா அப்ப ஃப்ரெண்ட்ஸா நினைச்சுதான் வரையச் சொன்னேன். ஆனா, இது என் கைக்கு வர ஒரு வருஷமாச்சு. அப்பதான் புல்புல் நீ சொன்ன தத்ரூபம் எனக்கு உரைச்சது”

“...”

“ ஒரு ஆசைல, உந்துதல்ல உனக்குத் தெரியாம உன்னை பெயின்ட் செஞ்சுட்டேன். ஆனா, அதுக்கு அப்புறம்தான் ஏதோ ஒரு மொமென்ட்ல உன்னைப் பத்தி ஃப்ரெண்ட்ஷிப்பைத் தாண்டி நான் யோசிக்கறதே எனக்குப் புரிஞ்சது”

“...”

“சின்ன வயசு ஃபோட்டோ இருக்கறது வேற புல்புல். அது ஞாபகார்த்தமா வெச்சுக்கறது. ஆனா, ஓவியம்ங்கறது ஒரு கொண்டாட்டம். செலப்ரேஷன். அதோட அது ரொம்பப் பர்ஸனல். ராதா‌- கிருஷ்ணரோட உறவு வெறும் ஃப்ரெண்ட்ஷிப் கிடையாது இல்லையா புல்புல்?”

“...”

“என்னப் போலவே இந்த‌ பெயின்ட்டிங்கும் வெறும்‌ சிநேகத்தை மட்டும்‌ சொல்லலைன்னு தெரிஞ்சது. அதான், உன் சம்மதம் இல்லாம இதை யாருக்கும் காட்டக்‌கூடாதுன்னு உள்ளயே இருக்கு”

“ம்…‌ ஒரு நாள் உனக்கு ஜுரமா இருந்தபோது நான் பார்த்தேன் ச்சிங்கா”

“ஓ, அப்ப ஏன் புல்புல் நீ என்னைக் கேட்கலை?”

“...”

சின்மயியின் முகத்தைப் பற்றி நிமிர்த்தியவன் “சொல்லுடீ”

“தெரியலடா… ஃப்ரெண்டா இருங்கறது ஈஸி ச்சிங்கா. என் நிலமைல…”

“புல்ஷிட். என்ன‌ பெரிய நிலமை…இடியட்”

“...”

“...”

“ச்சிங்கா…”

“...”

“நாளைக்கே இதை எங்கயாவது மாட்டலாம்”

“ தேவையில்ல. அது பாட்டு உள்ளயே இருக்கட்டும்”

சிங்கபிரானின் கழுத்துச் சங்கிலியைத் தேடி வெளியில் எடுத்த சின்மயி, அந்த‌ கூழாங்கல் டாலரை‌ வலது கை‌ பெருவிரலால் வருடினாள்.

“கோபமாடா, எனக்கு முதல்நாள் பார்த்தபோதே தெரியும் ச்சிங்கா. ஆனாலும்…”

“எனக்குப் புரியாம இல்ல புல்புல். ஆனா… ம்ப்ச்.. விடு. ஒரு சந்தேகம்டீ”

“கேளு”

“நீ என்னை அண்ணான்னு…”

“நான்சென்ஸ். ஃப்ரெண்ட்டா உங்கிட்ட என்ன வேணா‌ பேச முடிஞ்சுது ச்சிங்கா. இன் ஃபேக்ட், ஒரு ஆம்பளை பையன்கிட்ட பேசறேன்னே எனக்குத்‌ தோணினதில்லை, தெரியுமா?”

“அதே ச்சிங்காதான்டீ நான். இப்பவும் எப்பவும் எங்கிட்ட நீ என்ன வேணா பேசலாம்… (சிறிது இடைவெளி விட்டு) செய்யலாம்” என்று கண்ணைச் சிமிட்டினான்.

“ம்… இருந்தாலும்…”

சின்மயி எதிர்பாராத கணத்தில் அவள் முகத்தைத் திருப்பி இதழில் அழுத்தமாகப் பதிந்து விலகியவன்…

“நீ சரிப்பட்டு வர மாட்டடீ. இப்ப என்ன, நீ ஃப்ரெண்டாவே இருந்துக்கோ. நான் ஹஸ்பண்டா இருந்துட்டுப் போறேன்”

********************

மறுநாள் காலையில் சிங்கபிரான் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்க, சஞ்சய் தேசாய்
சின்மயியை அழைத்து நலம் விசாரித்தான்.

மதியம் சிங்கபிரானும் சின்மயியும் ஷாப்பிங் சென்றனர். அவன் அழைத்துச் சென்ற கடைகளையும், அங்கிருந்த விலையையும் பார்த்த சின்மயிக்குத் தலைசுற்றியது.
பழக்கமில்லை, வசதி இல்லை என்று மறுத்தவளை “கிழவியாடீ நீ?” என்ற கேலியோடு வற்புறுத்தி எம்பிராய்டரி ஜீன்ஸும் கட்டம் போட்ட டெனிம் ஷர்ட்டும் வாங்கிக் கொடுத்தான்.

“எப்ப போட்டுப்பேன் இதை?”

வெளியில் லஞ்ச் சாப்பிட்டனர். சின்மயி திடீரென நினைவு வந்தவளாக சிங்கபிரானிடம்

“ஹாஸ்பிடல்ல இருந்து உனக்கு ஃபோன் செஞ்சது யாரு ச்சிங்கா?”

“உன் கூட இருந்த டாக்டர் சுனிதாதான். ஏன்?”

“உன் நம்பர் அவளுக்கு எப்படித் தெரியும் ச்சிங்கா? ஹாஸ்பிடல்ல இன்னும் நான் அட்ரஸ், எமர்ஜென்சி கான்டாக்ட் நம்பர்னு எதையுமே மாத்தலையே?”

“இதெல்லாம் ஒரு மேட்டரா புல்புல். சொன்ன வரைக்கும் நல்லதுன்னு விடுவியா…”

சில நிமிடங்களில் மீண்டும் அவளே “ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ல அப்பா நம்பரும், ஹரி நம்பரும்தான் இருக்கு…”

“...”

பதில் சொல்லாது கருமமே கண்ணாக ஃபோர்க்கால் பனீரை ரொட்டியில் சுருட்டி, வாயில் திணித்துக் கொண்டவனைப் பார்த்தவளுக்குப் புரிந்துவிட்டது. நேற்றிரவு கூட எதையோ சொல்ல வந்து, பிறகு பேச்சை மாற்றினானே?

“என்னாச்சு ச்சிங்கா?”

“ம்ப்ச்… விடுன்னா கேக்கறியா… அந்த டாக்டர் முதல்ல உங்கப்பாக்குதான் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்கா… அவர் “இப்ப நீ அவர் கூட இல்ல. உன் ஹஸ்பண்ட் நம்பர் அவருக்குத் தெரியாதுன்னு சொல்லி இருக்கார். அப்புறம் சென்னை போய் இருக்கற சஞ்சய் கிட்ட கேட்டு எனக்கு பேசி இருக்கா. அந்த மெனக்கெடலுக்கே தனியா தேங்க் பண்ணனும் புல்புல்”

“...”

“புல்புல்…”

“நீ ஏன் டா இப்ப ஊருக்கு போற?”

“அடுத்த‌ டூருக்கு முன்னால உனக்கு பாஸ்போர்ட் வாங்கணும் புல்புல். அப்ப நீ, என் கூட எங்கவேணா வரலாம்”

அம்மாவிற்கும் மனைவிக்கும் ஆயிரம் பத்திரம் சொன்னான்.

“அம்மா, ரொம்ப குளூர்றது. கார்த்திகை, மார்கழின்னு தினமும் தலைக்குக் குளிச்சு வீஸிங்கை வரவழைச்சுக்காத”

“இப்பதான் கூடவே டாக்டர் இருக்காளேடா”

“புல்புல், பேஷன்ட்டோட நிலையைப் பார்த்து அழுது, நீ உடம்பைக் கெடுத்துண்டா, உன்னை ஹாஸ்பிடலுக்கே போக விட மாட்டேன். உன்னை யாரு‌ குழந்தை டாக்டராகச் சொன்னது?”

பாலாமணி “அவன் கிடக்கான் சின்மயி. ஏன்டா சிங்கம், டாக்டரும் மனுஷாதானே. சின்மயி சின்னப் பொண்ணுதானேடா, தாங்கலை அவளுக்கு”

அவள் காதருகில் “சீக்கிரம் பெரிய பொண்ணாயிடு புல்புல்” என்று முணுமுணுத்தான்.‌

அத்தனை வருட நட்பு இருந்தாலும், தம்பதியாக ஒரு மாதமாக ஒரே வீட்டில் ஒன்றாக‌ வசிப்பதும், உறங்குவதும், உரசுவதும் பழகி இருந்ததில், சிங்கபிரான் ஆஸ்திரேலியா புறப்படும் நாளன்று சின்மயி‌ வெகுவாக சுணங்கிப் போனாள்.

”கொஞ்சம் சிரிச்சாதான் என்ன புல்புல்?”

“ச்சிங்கா…”

“வந்துடுவேன் புல்புல். ரெண்டே வாரம்தான்”

“ம்…”

“நான் ஒன்னு கேட்கவா?”

“ம்”

“ஒருக்கால் உனக்கு என்னைப் புடிக்காம…”

“விசிறிக்காம்பை எடுத்து வீறிப்புடுவேன் டா”

பக்கெனச் சிரித்த சிங்கபிரான் “புல்லூ… என்னை மிஸ் பண்ணு, ஃபீல் பண்ணு. பசலை படர்ந்திருக்கான்னு வீடியோல பாக்கறேன்”

“நீ சரியே இல்ல ச்சிங்கா”

“நன்றி பொண்டாட்டி. இளைச்சு மட்டும் போயிடாதடீ. எலும்பு குத்தும்”

“உன்னை… பெருமாளே”

சிங்கபிரானுக்கு, ஆண், பெண் பேதமில்லாத தங்கள் சிநேகத்தை, சிறுவயது‌ முதல் தன்னிடம் அவள் உணர்ந்த பாதுகாப்பை, நம்பிக்கையை ஒரு வித பிளேட்டோனிக் உறவாக நினைக்கும்‌ சின்மயி, தன்னைப் பிடித்திருந்தும், கணவன் மனைவியான பின்பும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் தயங்குவதும், நட்பின் நிலை மாறி விடுமோ என்ற அவளது கவலையும் புரிந்தது.

தான் கொஞ்சம் அழுத்தமாக நின்றாலே சின்மயி தனக்கு மறுக்க மாட்டாள் என்று சிங்கபிரானுக்குத் தெரியும். ஆனால், அவளது குழப்பங்கள் தெளிந்து, அவளே தன் தயக்கங்களை, நாணங்களைக் கடந்து, களைந்து தன்னிடம் வரவேண்டும் என்று விரும்பினான். நட்புக்கும்‌ காதலுக்கும் புரிதல்தானே அஸ்திவாரம்?

விமானம் தரை இறங்க, நாதம் மியூஸிகா‌ இசைக் குழுவை மெல்பர்ன் நகரம் இதமாக வரவேற்றது.

*********************

பாலாமணிக்கு தங்கை இருந்தாலும், இரண்டும் மகன்களாகிப் போனதில் முழுநேரமும்‌ ஒரு பெண்ணோடு இருப்பது‌ இப்போதுதான்.

அதேபோல்‌ பெரிய குடும்பத்தில் பிறந்து, வீடு நிறையக் குடித்தனக்காரர்களுடன் வளர்ந்திருந்தாலுமே, அம்மா கல்யாணிக்குப்‌ பிறகு சின்மயி இப்போதுதான் அது போன்ற அக்கறையை, ஏன் அதைவிட அதிகமான சகஜ பாவத்தை பாலாமணியிடம் அனுபவித்தாள்.

மனிதர்களின் அண்மைக்கு, பர்ஸனலான பேச்சுத் துணைக்கு, என்ன குழம்பு என்று முடிவு செய்வதற்கு, தலைக்கு எண்ணெய்‌ வைத்து அழுத்தி வாரிக்கொண்டே தன் மனதில் இருப்பதைச் சொல்லுவதற்கு, ரவிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு நாற்பது வயதைத் தாண்டிய எல்லா அம்மாக்களுக்கும் யாராவது ஒருவர் வேண்டி இருக்கிறது.

“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை விட்டு அவன் ஊருக்குப் போறது இதான் முதல் தரம் இல்லையா சின்மயி… உனக்குப் பரவா இவ்லைன்னா என் கூட கீழயே படுத்துக்கோ” என்றதில் அவளுக்கும் சம்மதமே.

“உனக்கு புளிப் பொங்கல் புடிக்குமாடீ சின்மயி, இந்தப் பசங்களோட… வாய்க்கு உணக்கையா
நமக்குப் புடிச்சதைப் பண்ணவே முடியாது‌ தெரியுமோ?”

சின்மயிக்குப் பிடிக்கும் என்பதால் தினம் ஒரு துவையல் அரைத்தார்.

பாலாமணிக்கு பென்ஷன் தொடர்பாக வங்கியில் ஏதோ வேலை இருக்க, இருவரும் சென்று வந்தனர். இரண்டு முறை கோவிலுக்குப் போனார்கள். இடையில் கார்த்திகை பண்டிகை வர, தீபமேற்றிக் கொண்டாடினர்.

அன்று இரவு சின்மயி க்ளீளிக்கில் இருந்து வந்தபோது பாலாமணி சுருண்டு படுத்திருந்தார்.

“என்னாச்சு மாமி?”

“வேறென்ன, மெனோபாஸ்தான். அம்பத்தஞ்சு வயசாறது. ரெண்டு வருஷமா போட்டு இம்சை பண்றது. இதை நம்பி கோவில் குளத்துக்குப் போக முடியலை. எப்ப நிக்குமோ தெரியலை. நாகத்துக்கு நாப்பத்தி ரெண்டுலயே போய்டுத்து. வெளில சொல்லவே வெக்கமா இருக்குடீ சின்மயி”

“வர வரைக்கும் நல்லதுதான் மாமி. டாக்டர் கிட்டப் போகலையா?”

“முதல்லயே போயாச்சு. இப்படிதான் இருக்கும்னு சொல்லி மருந்து எழுக்தி கொடுத்தா”

இப்ப நான் கைனெக்‌ கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கறேன். ஒரு டீட்டெயில்ட் செக் அப் பண்ணிடலாம்” என்றவள், அந்த வாரமே அழைத்துச் சென்றாள்.

டாக்டர் சின்மயியின் மாமியாருக்கு இலவச மருத்துவமும் சிங்கபிரானின் அம்மாவிற்குத் தனி கவனிப்பும் கிடைத்ததில் பாலாமணிக்கு ஏகப் பெருமை.

அவருக்கும் மருமகளிடம் சில எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை. அதை நேரிடையாகச் சொல்லவும் செய்தார்.

“இன்னும் அம்மான்னு சொல்லாம மாமின்னா… என்னவோ போல இருக்குடீ சின்மயி. ஜனனியும் ஆன்ட்டீங்கறா. அவளாவது அசல். நீ அப்படியா…”

சின்மயிக்கு அவரது ஆதங்கம் புரிந்தாலும் பாலா மாமியாக மனதில் பதிந்து போனதை அவளால் சட்டென மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவளைத் தன் வீட்டுப் பெண்ணாக இணைத்துப் பேசியதில் நெகிழ்ந்தவள், அவரது ஆசையை நிறைவேற்ற உறுதி கொண்டாள்.

“ட்ரை பண்றேன் மாமி. ஸாரி” என்றாள்.

பாலாமணி மகனும் மருமகளும் நெருங்கி விட்டனரா என்று அறிய விரும்பினார். தனக்கும் சின்மயிக்குமான நட்பை, உரையாடலை, சின்னச் சின்ன சண்டைகளை, கோபதாபங்களைக் கவனித்து பாலாமணி ஏதேனும் கேட்பதையோ விமரிசிப்பதையோ அந்தச் சின்ன வயதிலேயே சிங்கபிரான் அனுமதித்ததில்லை.

அவர்கள் சிநேகத்தில் அந்த வயதில் ரகசியம், தவறு‌ என்று‌ எதுவும் இல்லைதான். இருப்பினும் இருவருமே தங்களுக்கிடையில் யாரையும் வர விட்டதில்லை. ரவியின் கோபமே அவனைக் கூட்டு சேர்த்துக் கொள்ளாததுதான்.

நேரடியாக அவர்களிடம் கேட்டால் பதில் வராது என்பதால், திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில் சிங்கபிரானின் பிரிவை சின்மயி எப்படிக் கையாளுகிறாள் என்று பாலாமணி கூர்ந்து கவனித்தார்.

ஆரம்பத்தில் இது புரியாது, சிங்கபிரான் வீடியோ காலில் அழைக்கையில் தனியே சென்று பேசினால்‌ அவரை ஒதுக்கியது போல் இருக்கும் என அவர் எதிரேயே பேசினாள்.

அம்மாவின் இருப்பையும் நோக்கத்தையும் புரிந்துகொண்ட சிங்கபிரான், வேண்டுமென்றே வழக்கமான சாப்ட்டியா, தூங்கினியாவைக் கை விட்டு மிஸ் யூ, கிஸ் யூ, அவள் உடை, இடை எனவும் சின்மயி திருதிருவென விழிக்க, பாலாமணி திருப்தியுடன் சத்தம் காட்டாது வெளியேறினார்.

‘ஏன்‌ ச்சிங்கா இப்டி பண்ற?”

“வளரவே மாட்டியாடீ, அம்மா நம்மை ஆழம்‌ பாக்கறான்னு உனக்குப் புரியறதா இல்லையா‌ புல்புல்?”

“மாமிதானே…?”

“அப்ப‌ அம்மாகிட்ட போய் நான் உங்க புள்ளையை வெயிட்டிங்ல வெச்சிருக்கேன்னு சொல்லேன்”

“...”

“ஏதானும்னா உடனே ஐயோ பாவம் மோடுக்கு போயிட வேண்டியது. வீடியோ கால் பண்றதே உன்னைப் பார்க்கணும்னுதான். இனிமே தனியா வந்து பேசு புல்புல்”

“ம்…”

“சரி, இன்னிக்கு ஏன் புடவை?”

“கார்த்திகை”

“என்னை அனுப்பிட்டு ரெண்டு பேரும் ஒரே ஜாலி போல… என்ஜாய்” என்றவன், “ஃபோனை அம்மா கிட்ட குடு‌ புல்புல்” என பேலன்ஸ்‌ செய்தான்.

இடையில் ஒருநாள் நாகமணி‌ சித்தி‌ வந்தார். அவர் வருவதற்கு முன்பே பாலாமணி “சின்மயி, நாகம் உனக்குப் புதுசு இல்ல. ஆனா, பெரிய குடும்பத்துல இருந்து வம்பை நிறைய பார்த்ததுல டக்குனு ஏதானும் சொல்லிடுவோ. அப்படி ஏதாவதுன்னா அதை நினைச்சு‌ வருத்தப்படாத” என எச்சரித்தார்.

அவர்‌ சொன்னது போலவே, சின்மயியிடம் சிங்கபிரானைப் பற்றிக் கேட்டவருக்கு ச்சிங்கா என்று இவள் ஏதோ சொல்ல…

நாகமணி “நீங்க ரெண்டு பேரும் இன்னும் சின்னக் குழந்தையா சின்மயி? கல்யாணம் ஆயாச்சு. இன்னும் ச்சிங்கா, கிங்கான்னா நன்னாவா இருக்கு?” என்றுவிட, அதை எதிர்பாராத‌ சின்மயிக்கு கண்கள் தளும்பி விட்டது.

பாலாமணி “நாகம், அவா ரெண்டு பேரும் என்ன பேசணும், எப்படிக் கூப்பிடணும்னு நாம ஏன் சொல்லணும், நாம யார் சொல்றதுக்கு? நான் இருக்கற வரைக்கும் குழந்தையாவேதான் இருந்துட்டுப் போகட்டுமே. நாளைக்கு கேசவ்க்கு கல்யாணம் ஆனாலும் இதேதான் நாகம். நல்லவேளை சிங்கம் இங்கே இல்லை” என்றார் நறுக்கென.

கேசவ்‌ நாதம்‌ மியூஸிகா இசைக்குழுவில் இருப்பதில், இருவருக்குமான நிலைப்பாடுகளில், வித்தியாசங்களில் நாகமணிக்கு சிங்கபிரானிடம் மெலிதான‌ பொறாமை இருந்தது.

சன்மானத்திற்கும்‌ வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் புரியாது சமயத்தில் பாலாமணியிடமே புலம்புவார்.

தங்கையைப் பற்றித் தெரியும் ஆதலால், கேசவை இணைத்துக் கொண்டதில் பாலாமணிக்கே கூட அத்தனை விருப்பமில்லை. சிங்கபிரான் அமைதியாக இருக்கக் காரணம், கேசவின் இயல்பும் தன்மையும் திறமையும்தான்.

********************

வழக்கமான மருத்துவப் பணிகளையும் பாலாமணியுடன் கழியும் பொழுதுகளையும் மீறி, சிங்கபிரான் சின்மயியின் சிந்தையை ஆக்கிரமித்து இருந்தான். அவனின் இருப்பை, அண்மையைத் தேடினாள்.

நான்கு வயதிலிருந்து ஒன்பது வருடங்கள் இருவரும் பள்ளியில் இருக்கும் நேரமும் இரவில் உறங்கும் நேரமும் தவிர எந்த நேரமும் சிங்கபிரானுடன் இருந்திருக்கிறாள்.

பாட்டியோ, பவானியோ, அம்மா கல்யாணியோ ஹரியோ சிங்கபிரானின் போர்ஷனிலேயே தூங்கியவளைத் தூக்கிச் சென்ற நாள்கள் பல.
அநேக நேரம் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றபோதெல்லாம் போக மறுத்து, முரண்டி இருக்கிறாளே தவிர, தன் வீட்டிற்குள் சென்றதும் இயல்பாகி விடுவாள்.

இடையில் பிரிந்திருந்த வருடங்களில் பல முறை சிங்கபிரானை நினைத்திருக்கிறாள். குறிப்பாக, அம்மா கல்யாணியின் மறைவிற்குப் பின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனின் இல்லாமையை உணர்ந்து ஏங்கி இருக்கிறாள். அத்தனை ஏன், மீண்டும் இணைந்த இந்த ஒரு வருடத்தில் கூட எத்தனையோ முறை கான்ஸர்ட்டுக்கென வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறான். சிறிதான மிஸ்ஸிங் உணர்வு இருக்கும்தான். ஆனால், இப்போது போல் தவிப்பும் தத்தளிப்பும் இருந்ததில்லை.

தன் ஒவ்வோரு அசைவிலும் எதிர்பார்ப்பும் ஏக்கமும் வழியப்‌ பேசுபவன் சின்மயியை என்னவோ செய்தான். தன்‌னிடம்‌ விளைந்த மாற்றத்தை சின்மயி உணரும் நாளும் வந்தது.

அன்று நடந்த ஃபவுன்டர்ஸ் டே கொண்டாட்ட தினத்தில், சமூகமும் குழந்தைகளும் என்ற தலைப்பில் சின்மயி சமர்ப்பித்த உளவியல் ஆராய்ச்சிக்‌ கட்டுரைக்கு இந்திய‌ மருத்துவக் கழகத்திலிருந்து (IMA) சான்றிதழும், மெடிகல் ஜர்னலில் பதிப்பும் பணப்பரிசும் வந்தது.‌ அதைக் கூட்டத்தில் அறிவித்து‌ப் பரிசளித்து வாழ்த்தினர். விளையாட்டுப்போல் IMA வால் அங்கீகரிக்கப்பட்ட அவளது மூன்றாவது‌ ஆராய்ச்சிக் கட்டுரை இது.

அத்தனை பேர் பாராட்டினாலும், காலையிலேயே, ஹாஸ்பிடலில் இருந்து அழைத்துச் சொன்னதில், பாலாமணி ஸ்வீட்டோடு காத்திருந்தாலும், ஹரி, பவானி, பத்மினி, ரவி என எல்லோரும் வாழ்த்தினாலும், சின்மயிக்கு ஏதோ குறைவது‌போல் இருந்தது.
தந்தைக்கு அழைத்துத் தன் சாதனையைப் பகிர்ந்து கொள்ளும்‌ துணிவு வரவில்லை.

சிட்னியின் பிரபலமான அரங்கில் மறுநாள் நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுகளில் இருந்த சிங்கபிரான், விஷயம்‌ தெரிந்ததுமே வாழ்த்துச் செய்தி‌யும் “ராத்திரி கால் பண்றேன்டா புல்லூ. பிஸி‌ நௌ” என வாய்ஸ் நோட்‌டும் அனுப்பினான்.

இரவு விழா முடிந்து சின்மயி வரவே பத்தரை மணியாகிவிட்டது. அவனிடமிருந்து அழைப்பு வந்ததுமே வெளியே ஓடியவளைப் பார்த்த பாலாமணிக்கு நெகிழ்வும் நிறைவும்.

“சூப்பர் டா புல்புல். அப்பவே குட்டி சின்மயி‌ செம படிப்ஸ்‌ல.‌.. கம், லெட் மீ ஹக் யூ பேபி” என கைகளை விரிக்க, சின்மயிக்குத்‌ தொண்டையை. அடைத்தது. அந்த அணைப்பை விரும்பி‌ ஏங்கினாள்.

“ச்சிங்கா…! என்றவளின் குரல் தடுமாறியதில், சிங்கபிரான் பேச்சை மாற்றினான்.

பழுத்த தக்காளி சிவப்பில் ஜார்ஜெட் சிக்கன்காரி புடவை அணிந்திருந்தவளிடம்

“இந்த புடவைலதான் ஹாஸ்பிடல் போனயா புல்புல்?”

“ம்”

“நான் அங்க இருக்கும்போது எப்பப்‌பாரு தலகாணி உறை மாதிரி ஒண்ணை மாட்டிக்கற. இப்ப என்னடான்னா தினமும் புடவைல காட்சி தர. நாட் ஃபேர் புல்புல். இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா… இனிமே வாரத்துல‌ ஏழு நாள் மட்டும் ஸாரி கட்டிக்கோ புல்புல்”

“ஏன், பேசாம மடிசார் கட்டிக்கறேனே… ஆளைப் பாரு…பாலா மாமியே சுரிதார்லயும்‌ நைட்டிலயும் சுத்தறா”

“ரொம்ப நல்லது. அதுல சிங்கிள் முடிச்சுதான்…”

“...”

சின்மயி சட்டென அலைபேசித் திரையை விட்டு நகர, சிங்கபிரான் வாய்விட்டுச் சிரித்தான்.

“ச்சிங்கா”

“ம்”

“நாளை மறுநாள் அப்பா வீட்டைக் காலி பண்ணிட்டு‌ ஹோமுக்குப் போகப் போறார். ஹரி என்னைப் போய் பார்க்க சொல்லி இருக்கான்”

“...”

“ச்சிங்கா…”

“போய்ட்டு வா. ஆனா, அங்க எது நடந்தாலும் அவர் என்ன சொன்னாலும் நீ அழவோ, வருத்தப்படவோ கூடாது. அர்த்தமாயிந்தா?”

“ம்ஹ்ம்”

ஸ்ரீரங்கம் வீட்டிலிருந்து வந்த வெங்கலப் பாத்திரங்கள், பித்தளையிலான ஊஞ்சல் சங்கிலி, தேக்கில் செய்த நாற்காலி என கனமான பழைய காலத்துப் பொருள்கள் இருந்தன.

பவானி “பாட்டியோட நல்ல கனமான வெங்கல உருளி, அம்மாவோட வெள்ளிக் குத்து விளக்கு ரெண்டு, எல்லாம் இருக்கணும்டீ சின்மயி. இப்ப‌ பித்தளை, வெங்கலமெல்லாம் இன் திங்” என்றாள்.

ஹரி “நீதான் வீட்டைக் காலி பண்ணிக் குடுக்கணும் சின்மயி. உனக்கு ஏதாவது சாமான் வேணும்னா எடுத்துக்கோ. மீதியை விலைக்கு போட்டாலும் சரி, வெளில போட்டாலும் சரி“ என்றிருந்தான்.

“கேஸ் சிலிண்டர்?”

“நான் சரண்டர் பண்ணிட்டுதான் அமெரிக்கா வந்தேன்”

“ஓ...” என்ற‌ சின்மயிக்கு வருத்தமாக இருந்தது. நடைமுறையில் அதுதான் சரி என்றாலும், ஒரு மனிதர், அதுவும் பெற்ற தந்தை வீட்டில் இருக்கையில் அடுப்பை உருவிக்கொண்டு போவதை அவளால் ஏற்கவே முடியவில்லை. இண்டக்ஷன் ஸ்டவ் இருக்கிறதுதான். ஆனாலும்?

வழக்கம்போல் ஹரியும் பவானியும் இல்லாது, தனியே மாட்டிக்கொண்ட சின்மயிக்கு கொஞ்சம் பயமாக, தயக்கமாக
இருந்தது.

“நீ வெளியே போ, இந்த சாமான்களை எல்லாம்‌ நான் எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டுவேன்’ என்று எப்படிச் சொல்வது? எத்தனை நியாயம் பேசினாலும் நிதர்ஸனம் அதுதானே?”

‘பெருமாளே, எப்போதும் என்னையே ஏன்டா மாட்டிவிடற?’

விடுப்பு எடுத்துக்கொண்டு வியாழனன்று காலையிலேயே புறப்பட்டுச் சென்றாள். அன்றைய உணவைக் கொண்டு போகலாமா என்று எழுந்த யோசனையை சின்மயி உடனடியாகக் கைவிட்டாள்.

முதலில், இந்தச் சூழலில் பாலாமணியிடம் ‘எங்கப்பாக்கு சாப்பாடு கொண்டு போறேன்’ என்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை. அதைவிட, பரசுராம் என்ன அதை அப்படியே ஏற்று, அகமகிழ்ந்து பூரித்துப் போகும் அப்பாவா?

போகும் வழியில் நல்ல கமலா ஆரஞ்சுப் பழங்களும் ஆப்பிளும் வாங்கினாள்.

காத்திருந்தது போல் கதவைத் திறந்த பரசுராம் அவளுக்கு வைத்திருந்த அதிர்ச்சியில் சின்மயியின் தயக்கங்களும் பயங்களும் வேறு அட்ரஸ் தேடி ஓடியே விட்டன.

அவருடைய துணிமணிகள், புத்தகங்கள், கட்டில், ஃப்ரிட்ஜ், இன்டக்ஷன் ஸ்டவ், சில தட்டு முட்டு சாமான்கள், தம்ளர், தட்டு, சொம்பு, பூஜைக்குத் தேவையானவை போன்ற அத்தியாவசியமான பாத்திரங்கள் எல்லாம் சீராக பேக் செய்யப்பட்டு அணிவகுத்து நிற்க,

சூ, மந்திரக்காளி! என மந்திரக்கோலை வீசி, வீட்டில் இருந்த அத்தனை பொருள்களையும் சப்ஜாடாகக் ‘காக்கா ஓஷ்’ செய்து‌ சின்மயியின் வேலையை சுலபமாக்கி‌ இருந்தார் பரசுராம்.

‘சாமானை என்ன பண்ணினார்னு இவர் கிட்ட எப்டி கேக்கறது… ஹரி கேட்டா என்ன சொல்றது?’

‘ரொம்பத்தான்‌ அக்கறை. அங்க வை’ என்ற நொடிப்புடன் பழத்தை‌ அங்கீகரித்தவரிடம்
தயக்கத்தை விடுத்து

“சாமான்லாம்…”

“நல்ல விலைக்கு வித்துட்டேன். எல்லாம் ஸ்ரீரங்கத்துல இருந்து வந்தது. கேக்க யாருக்கும் உரிமை கிடையாது. நீங்க வாங்கின ஃப்ரிட்ஜுக்கும்‌ வாஷிங் மிஷினுக்கும். கடைல‌போட்டா முன்னூறு ரூபா தருவனாம். அதான் ஓடற வரை ஓடட்டும்னு விட்டுட்டேன்”

சரியாகப் பதினோரு மணிக்கு சின்ன டெம்ப்போ வர, சாமான்களை ஏற்றினர். இன்னொரு பிளாக்கில் இருந்த வீட்டு உரிமையாளர் வந்து, வீட்டைப் பரிசோதித்து சாவி வாங்கிச் சென்றார். முன்பண விஷயங்களை ஹரி பார்த்துக்கொள்வான்.

பரசுராமோடு கீழே அமர்ந்து வம்படிக்கும் குழுவைச்‌ சேர்ந்த நண்பர்கள்‌ சிலர் வழியனுப்ப வந்தனர். அவர்களில் ஒருவர்

“நீங்க எல்லாரும் நல்ல இடத்துல செட்டில் ஆயிட்டு, அவரை இப்படி ஹோம்ல விடறது சரியாம்மா… நீ படிச்ச பொண்ணு, டாக்டர் வேற…” என்று கேட்டே விட்டார்.

சின்மயி புக் செய்த கேப் வர, தந்தை “நானே போயிடுவேன்” என்றதைக் கவனியாததுபோல்‌ ஏறிக்கொண்டாள்.

ஒன்னே கால் மணி நேரப் பயணத்திற்குப் பின், அமைதியான சூழலில்‌ அமைந்த அந்த ரிடையர்மென்ட் ஹோமுக்கு வந்தனர். ஒரு படுக்கை அறை, சிறிதான ஹால், இரண்டுக்கும் பொதுவாக உள்ளடங்கிய ஓய்வறை, அதன் ஒரு மூலையில் குட்டி கிச்சன் (Kitchenette) என வசதியாகவே இருந்தது.

சிறிது நேரத்தில் போன வண்டியிலேயே புறப்பட்டாள்.
“எதுன்னாலும் எப்ப வேணும்னாலும் ஃபோன் பண்ணுங்கோ” என்ற சின்மயிக்கு அழுகை வரும்போல் இருக்க, ஒரு அற்புத நிகழ்வாக, பரசுராம் மௌனமாகத் தலையசைத்தார்.

வண்டி புறப்படும் வரை நிற்காது, பரசுராம் உள்ளே சென்றுவிட, ‘ஒருவேளை அப்பாவும் உணர்ச்சி வசப்படறாரோ, நான் கூட வந்தது தப்போ’ என்று தோன்றியது. சின்மயிக்குள் அப்பாவின் உள் உணர்வுகள் அவருக்கே தெரியுமா என்ற கேள்வி எழுந்தது.

கேப் பிரதான சாலைக்கு வந்து, மாநகரப் போக்குவரத்தில் கலக்க, சட்டெனத் தான் ஆதியும் அடையாளமும் அற்றுப் போனதைப் போல் உணர்ந்த சின்மயி தன் அழுகையைக் கட்டுப்படுத்த விழையவில்லை.

‘Dropped Appa in home’ என்று ஹரிக்கும் பவானிக்கும் அனுப்பிய தகவலில் இருந்த நகைமுரண் சின்மயியை உறுத்தியது.

(அப்பாவை இல்லத்தில் இவிட்டேன்)
 

Author: VedhaVishal
Article Title: நாணங்களும் எதற்காக? 15 - FINALE 1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.