• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 16 - FINALE 2 & EPILOGUE

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
76
434
83
Chennai
நாணங்களும் எதற்காக? 16


சனிக்கிழமை காலையில் மருத்துவமனைக்குக் கிளம்பாது சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்து, நொடிக்கொரு முறை மொபைலைத்‌ திறந்து பார்த்தபடி‌ பட்டர் பீன்ஸை உரித்தவளைப் பார்த்த பாலாமணி,

“ஏதாவது‌ முக்கியமான கால்க்காக வெய்ட் பண்றயா சின்மயி, அது‌ வந்தப்புறம்‌ நீ போனா போறுமா?”

“ம்…‌இல்ல மாமி, நான் இன்னிக்குப் போகலை”

“நல்லதா போச்சு. (சமையல்) மாமி வந்ததும் பர்ஃபி பண்ணி ஒரு ஈடு‌ சிராய் பக்கோடா புழியச் சொல்றேன். சிங்கத்துக்கு புடிக்கும்”

பாலாமணி சொன்ன விதத்தில் “சிங்கத்துக்கு சிராய் பக்கோடாவா?” என்ற சின்மயி, கலீரெனச் சிரித்தாள்.

“ரெண்டு நாளைக்கப்புறம் இன்னிக்குதான்டீ உன் முகத்துல‌ சிரிப்பே வந்திருக்கு”

மாமி வந்து விட, டப்பாவை ஃப்ரிட்ஜில் வைத்தவளிடம்‌ “நீ‌ போய்‌ நிதானமா எண்ணெய்‌ தேய்ச்சுக்‌ குளி சின்மயி. நான் பார்த்துக்கறேன்”‌ எனவும்‌ மேலே தங்கள் அறைக்கு வந்துவிட்டாள்.

இன்று மாலை நான்கு மணி போல் சிங்கபிரானும் இசைக்குழுவும் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்ப வருகின்றனர். வழக்கமாக நேரே ஸ்டூடியோவிற்கு சென்று இசைக்கருவிகளை பத்திரப் படுத்திய பிறகே வீட்டுக்கு வருவான் என்றார் பாலாமணி.

நேற்றில் இருந்தே ஏர்போர்ட் போகும் ஆசை வந்திருக்க, வருடக் கணக்காக இதுபோல் நிகழ்ச்சிக்குப்‌ போய்த் திரும்புபவனை வழக்கமாக‌ எதிர்கொள்பவரிடம் எப்படிச் சொல்வது, தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார் என்று தயங்கினாள்.

தலை துவட்டி, குட்டி க்ளிப்பில்‌ முடியை அடக்கிக் கீழே ஸ்வாமி அறைக்குச் சென்று, நமஸ்கரித்தாள்.

‘ரெண்டு, ரெண்டரைக்கு கிளம்பினாதான் டயத்துக்கு போக முடியும்’

‘கேப் புக் பண்ணிதான் போகணும்… எதுக்கு அநாவசிய செலவுன்னு மாமி கேட்டா…?’

இங்கிருந்து ஏர்போர்ட் செல்ல எத்தனை பணம் என்று பார்த்தாள்.

சமையல் செய்யும்‌ மாமி வேலை முடிந்து சென்றதும் மாமியாரும் மருமகளும் உண்டனர். யோசனையில் மூழ்கி இருந்த சின்மயிக்கு பாலாமணியின் பேச்சில் கவனமின்றிப் போக, மூன்றாம் முறை அழைத்தவரின் குரல் உயரவும், திடுக்கிட்டு “ஸாரி மாமி, என்ன மாமி?”

“எங்க யோசனை சின்மயி,
கார்த்தால இருந்தே நீ சரியில்லை. உங்கப்பா ஏதானும்…”

“அதெல்லாம் இல்ல மாமி”

“வேறென்ன?”

“...”

“சும்மா சொல்லு. உடம்புக்கு ஒன்னுமில்லையே… நல்ல வேளையா சிங்கமும் இன்னிக்கு வந்துடறான்”

சிங்கபிரானின் வருகை குறித்து அவரே பேசவும், சற்றே தயங்கிய சின்மயி, “நாம ரெண்டு பேரும் ஏர்போர்ட் போகலாமா மாமி?”

கணத்திற்கும் குறைவான நேரத்தில் “இதுக்கா‌ இத்தனை யோசனை, இரு…” என்றவர், வாரம் இரண்டு முறை கார்களை சுத்தம் செய்து, சிங்கபிரான் ஊரில் இல்லாத சமயங்களில் தேவையெனில் பாலாமணிக்கென வண்டி ஓட்ட வரும் நஞ்சப்பாவை அழைத்து “ஒன்னரை மணிக்கு‌ வா” என்றார்.

‘கமுக்கமா போய்ட்டு வராமல் கார், டிரைவர் எல்லாம்…‌இதுல ச்சிங்கா வேற ‘ஏன் வந்தன்னு‌‌ கேட்டா…அதிகப்பிரசங்கி வேலை செய்யறேனோ?’

சின்மயியின் சங்கடமான பார்வையைக் கண்டு சிரித்தவர் “இதுல என்னடீ இருக்கு… எல்லாருக்கும் தோண்றதுதான். நீ போய் ரெடி ஆயிட்டு வா”

புறப்படும் நேரம் நெருங்கியும் பாலாமணி அமர்ந்தே இருக்க, சின்மயி “ட்ரெஸ் மாத்திக்கலையா மாமி?”

“இதுக்கெல்லாம் யாராவது மாமியாரைக் கூட்டிண்டு போவாளா, நீ போயிட்டு வா”

“அப்டி எல்லாம் எதுவும் இல்ல மாமி. அவ்வளவு தூரம் தனியா போகணும். நாம ரெண்டு பேரும் போகலாம்” என சின்மயி எத்தனையோ சொல்லியும் பாலாமணி வர மறுத்து விட்டார்.

“நீ சரின்னாலும், ஏன் வந்தேன்னு எம்புள்ளை கேட்பானே”

“மாமி..”

“குஷியா போய்ட்டு வாடீ. நீங்க வர நேரமாகும். நான் சமைச்சு வைக்கறேன்”

******************

பெங்களூர் போக்குவரத்து நெரிசல்தான் எனினும், மதிய நேரம் என்பதால், பரவாயில்லையாக இருந்தது. சின்மயிக்கு அதுவே நத்தை ஊர்வதைப் போல் தோன்றியது.

இதற்கு முன் அவன் வெளியூர்/ நாடு‌ சென்று வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், பார்க்கும் ஆவல் இருந்தாலும், அடுத்த அறையிலிருந்து வருவதைப் போன்ற இயல்புடன் இருந்தவளுக்கு இன்றைய தன் வேகமும் பரபரப்பும் கண்டு சிரிப்பு வந்தது.

*********************

நாதம்‌ மியூஸிகா இசைக் குழுவினர் தங்கள் உடமைகளை, இசைக்கருவிகளை சேகரித்துக்கொண்டு, இமிக்ரேஷன் முடிந்து ஒவ்வொருவராக வெளியில் வர, ஒப்பந்தப்படி, நிகழ்ச்சி அமைப்பாளர்கள், கலைஞர்களுக்கு மூன்று வண்டிகளும், இசைக் கருவிகளுக்கு ட்ரக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

குழுவைச்‌ சேர்ந்தவர்கள் இருவர், மூவராக வெளியே வருவதைப் பார்த்தபடி, கவனம் ஈர்க்காது ஒரு‌ தூணருகே நின்றிருந்தவள், கிருஷ்ணன் மேனனும் அவனது மனைவியும் குழந்தைகளுடன் வருவதைப் பார்த்தாள். சற்றுப் பொறுத்துக் கடைசியாக கேசவும் ஜோயலும்‌ வெளியே வந்து சின்மயியைக் கடந்து சென்று காத்து நின்றனர்.

பதினெட்டு பேர் கொண்ட குழுவில் சிங்கபிரானைத் தவிர, அனைவரும் வெளியில் வந்திருக்க, அவர்களிடம்‌ விசாரிப்பதா, சிங்கபிரானுக்கே அழைக்கலாமா, அல்லது அமைதியாகக் காத்திருக்கலாமா என்று இங்கி, பிங்கி போடுவதற்குள் சின்மயியைக் பார்த்துவிட்ட கேசவ், கையசைத்தபடி‍ இவளை நோக்கி‌வர, வேறு வழியின்றி முன்னே நடந்தாள்.

ஜோயல் “ஹாய் சின்மயி” என்று புன்னகைக்க, கேசவ் “ஹாய்… அண்ணாக்கு சர்ப்ரைஸ் குடுக்க வந்தயா… அடடா… அவன் விசால ஏதோ பிராப்ளம். வர இன்னும் ரெண்டு நாளாகுமே”

இன்ஸ்டன்ட்டாக சூழ்ந்த ஏமாற்றத்தில் முகம் மாறிய சின்மயி, ஜோயலும் கேசவும் செய்து கொண்ட சைகையைக் கவனிக்காது, தன்னை சமாளித்துக் கொண்டு “ஃப்ளைட்ல போர்ட் பண்ணிட்டேன்னு மெஸேஜ் வந்துதே கேசவ்”

“...”

ஜோயல் “சரி, ப்ளைட் லேண்டட்னு தகவல் அனுப்பினானா?”

சிங்கபிரான் தகவலை பாலாமணிக்கு அனுப்பி இருக்க, தன் மொபைலைப் பார்த்து “ம்…இல்ல” என்றவளின் குரல் வெகுவாக இறங்கி இருந்தது.

கேசவ் “அதான் சின்மயி, அவன் ஃப்ளைட் ஏறின அப்புறம்தான் டிபோர்ட் பண்ணினா ”

“சும்மாதானே சொல்ற கேசவ்… வரலைன்னா நேத்திக்கே ச்சிங்கா சொல்லி இருப்பானே?”

“பொய்யா… நானா…?”

“கேசவ்னா பொய்ன்னு டிக்ஷனரிலயே போட்டாச்சு. அவளை ஏன்டா டென்ஷன் பண்ற… நீயுமாடா ஜோ?” என்ற குரல் அருகில் வர, விரைந்து சின்மயியை நெருங்கிய சிங்கபிரான், அவளைத் தோளோடு அணைத்து
“ரிலாக்ஸ் புல்புல், ஐ’ம் வெரி மச் ஹியர்”

கேசவும் ஜோயலும் இணைந்து கனைக்க, “போங்கடா” என்ற, சிங்கபிரான் “எதுல வந்த புல்புல்?”

“கார்ல… நஞ்சப்பாவோட”

கேசவ் “கிரேட், வாண்ணா, போகலாம்”

சிங்கபிரான் “கொன்னுடுவேன். கரடி வேலை பார்க்காம ஸ்டூடியோக்கு போய்ட்டு போ. இவனை இழுத்துட்டுப் போடா ஜோ”

ஜோயல் “நாளைக்கு‌ ஈவினிங் ஷார்ப் செவன் ஓ க்ளாக் சிங்கம். நீயும்தான் சின்மயி, சிங்கம் சொல்லுவான். ஸீ யூ” என்றபடி கேசவுடன் ட்ரக்கரை நோக்கி நடந்தான்.

அவளுடன் கைகளைப் பிணைத்துக் கொண்டவன் “நிஜம்மா எதிர்பார்க்கவே இல்லடீ… இத்தனை வருஷத்துல ஏத்தி விடவோ, ரிஸீவ் பண்ணவோ யாருமே வந்ததில்லை புல்புல். நோ வருத்தம். ஆனா, நான் இப்ப ரொம்ப ஹேப்பி”

நஞ்சப்பாவிற்கு அழைத்து வரச்சொல்லிவிட்டு, ஹட்டி காஃபியில்‌ ஃபில்டர் காஃபி வாங்கிக்கொண்டு கிரானைட் மேடையில் அமர்ந்து கொண்டனர். குளிர் காற்று பிய்த்துக்கொண்டு போனது. வேகமாக இருள் கவியத் தொடங்க, விளக்குகள்‌ ஒளிர்ந்தன. பாலாமணிக்கு அழைத்துப் பேசினர். சின்மயி வேடிக்கை பார்த்தாள்.

“என்ன புல்புல்?”

“எத்தனை பரபரப்பு… ஏர்போர்ட், ஹாஸ்பிடல், ரயில்வே ஸ்டேஷன், பெரிய பெரிய கோவில்கள், எல்லாமே உள்ளுக்குள்ள தனித்தனி‌ உலகம். இல்ல, ச்சிங்கா..”

“எக்ஸ்யூஸ் மீ ஸார், நீங்க சிங்கபிரான்தானே?” என்று இரண்டு‌ இளைஞர்கள்‌ வந்து கை குலுக்கினர். ஆண்களும் பெண்களுமாக மேலும்‌ நாலைந்து பேர் வந்து‌ செல்ஃபி‌ எடுத்தனர்.‌ அறுபதுகளின் மத்தியில் இருந்த ஒரு மாமி “ரொம்ப நன்னா பாடறேடா குழந்தே” என‌ சிங்கபிரானின் கன்னம் வழித்து முத்தமிட்டுச்‌ சென்றார்.

நஞ்சப்பா வர, கார் சாவியைக் வாங்கிக்கொண்ட சிங்கபிரான், “ஏசி‌ பஸ்ல ஹோகுபிடி குரு” என்று தாராளமாகப் பணம் கொடுத்தான்.

“ஏன்‌ ச்சிங்கா?”

“அவனோட அமைதி‌ ஊர்வலம் போகவா என்னைப்‌ பார்க்க வந்த?”

“...”

மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு ரோட் ட்ரிப் சென்றது, கான்ஸர்ட், பரசுராம் ஹோமுக்குச் சென்றது என தினமும் பேசிய விஷயங்கள்தான் எனினும் இருவரும் விடாது பேசிக்கொண்டே ட்ராஃபிக்கில் நீ………ந்தி வீடு‌ வருகையில் ஒன்பது மணி. இரவு உணவிற்குப் பின்‌ பெட்டியைப் பிரித்தவன் “அம்மா, நீ கேட்ட அந்த ஊர் ஹேசல் நட் சாக்லேட். பாதாம், முந்திரி, பிஸ்தா மிக்ஸ், க்ரான்பெர்ரி”

“...ம்மா, இது புல்புலுக்கு” என்றவன் காட்டியது, 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட நீலமும் பச்சையும் மஞ்சளும் வெள்ளி நிறமும் பளீரிட்ட ஓபல் (Opal) கல் பென்டன்ட்டுடன் கூடிய செயினும் தோடும் மோதிரமும்.

“அழகா இருக்குடா சிங்கம்”

“என்ன புல்புல்?”

“எக்ஸ்க்ளூஸிவா இருக்கு ச்சிங்கா…”

“அவ்ளதாம்மா. இந்த தரம் டயமே இல்லை. செமயா தூக்கம் வரது”

பாலாமணி “போய்ப் படு டா. ஜெட்லாக் வேற” என்றதுமே சிங்கபிரான் பெட்டிகளுடன் மேலே சென்றுவிட்டான்.

“சின்மயி, பாலை உறை ஊத்திட்டு நீயும் போ. அவன் கேட்டா, புது பாட்டில் பாலை எடுத்துக்கோ”

“ம்”

“சின்மயி”

“சொல்லுங்கோ மாமி”

“உரிமை எடுத்துக்க தயங்கக் கூடாதுடீ சின்மயி. சிங்கம் எல்லாத்துலயும் உனக்கும் எனக்கும் = போட வேண்டிய அவசியமில்லை, புரியறதா, ரொம்ப யோசிக்காத”

“மாமி…”

“போடீ” என்றவர், ஒரு சாக்லெட்டைப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டார்.

சின்மயி மேலே வந்தபோது சிங்கபிரான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஜெட்லாகினால் உறங்குகிறான் என்று தெரிந்தும் ஏனோ சிறிது ஏமாற்றமாக இருந்தது.

உடை மாற்றி வந்தவள், விளக்கை அணைத்தபின் ஒரு நொடிக்கும் கீழாக அவுட்லைன் போல் இருட்டில் ஒளிர்ந்த வெளிச்சத்தில் சிங்கபிரானைப் பார்க்க, அவனது இருப்பே அவளை நிறைக்கும் உணர்வு.

சின்மயி தனக்குள் பல தீர்மானங்களை எழுதி அழித்து மீண்டும் எழுதினாள்.

‘உங்கிட்டப் பேசவோ நெருங்கவோ இப்டி யோசிப்பேன், தயங்குவேன்னு நினைச்சதே கிடையாதுடா ச்சிங்கா. நானே
எனக்கு புதுசா இருக்கேன், தெரியுமா?”

********************

ஆழ் நீலத்தில் ப்ளெயின் மொடால் சில்க்‌ புடவையும் அதே நிறத்தில்‌ முழங்கை வரை நீண்ட பாந்தினி ரவிக்கையும் அணிந்து, கண்ணாடியில் பார்த்த சின்மயி, சிங்கபிரான் “ரெடியா புல்புல்?” என்று குரல் கொடுக்கவும், அவசரமாகப் பொட்டு வைத்துக்கொண்டு கையில் சீப்பும் விரிந்த தலையுமாகக் கீழே சென்றாள்.

ஞாயிறு எனினும், மாலை ஐந்து மணி போல் வந்த அவசர அழைப்பில் மருத்துவமனைக்குச் சென்று, சற்று முன்தான் திரும்பி இருந்தாள்.

“எத்தனை நேரம் புல்புல்?”

சின்மயி முறைக்க, பாலாமணி “ஏன்டா, பதினோரு நிமிஷத்துல குளிச்சு, புடவைய வேற கட்டிண்டு வந்திருக்கா. நீ என்னடான்னா எத்தனை நேரம்ங்கற?”

“மாமியார், நீ கேட்க வேண்டிய கேள்விம்மா இது”

“அடப் போடா… சின்மயி, நான் பின்னி விடறேன் வா ” என சீப்புக்குக் கை நீட்டிய பாலாமணி இன்னும் உடை மாற்றாமல் இருக்க, சின்மயி

“நீங்க போய் கிளம்புங்கோ மாமி, ஏற்கனவே லேட்” என…

சிங்கபிரான் “அம்மா வரலையாம்”

“ஏன், என்னாச்சு மாமி?”

இன்று இவர்களுக்கு ஜோயல் வீட்டில் டின்னர் தருகின்றனர். மேனனும் குடும்பத்துடன்‌ வருகிறான்.‌ பாலாமணி கடைசி நிமிடத்தில் வர மறுத்தார்.

“மறந்துட்டயா, இன்னிக்கு ஏகாதசிடீ சின்மயி. டின்னருக்கு வந்துட்டு சாப்பிடாததுக்கு காரணம் சொல்லியே களைச்சுப் போயிடுவேன். நீங்க போய் என்ஜாய் பண்ணிட்டு நிதானமா வாங்கோ. டேபிள் மேல பூ இருக்கு பாரு, வெச்சுக்கோ”

சிங்கபிரான் முன்பே மெர்ஸிடிஸை எடுத்து புறப்படத் தயாராக நிறுத்தி இருந்தான். பாலாமணி கதவை சாத்தியதும், காரில்‌ ஏறப்போன சின்மயியை மிக நெருங்கியதில் கார் மீது சாயப் போனவளை வலக் கையால் தன்னிடம் இழுத்த சிங்கபிரான்,

“யாருடீ உனக்கு ப்ளவுஸ் தச்சது? உன்னையே மிஷின்ல வுட்ட மாதிரி” என்றபடி அவள் தோளில் தொடங்கி ரவிக்கையின் விளிம்பு‌ முடியும் இறக்கத்தின் வழி ஒற்றை விரலால் கீழிறங்க… அவன் கையைப் பிடித்தவள், பேசவே திணறினாள்.

“ஏய்… வாசல்ல வெச்சு… என்..னடா?”

“யாரு பாக்கறா இங்க.‌ அம்மாவும் ஓடிடில மலையாள‌ க்ரைம் சினிமாவை கன்டின்யூ பண்ணப் போயாச்சு.‌ நீ ஆடாம நில்லுடீ”

“ ச்சிங்கா டயம்…”

“ஆகட்டும்”

வீட்டுக் கதவு மீண்டும் திறக்கும்‌ சத்தம் கேட்டு‌ சரேலென‌ விலகிய சிங்கபிரான் “உக்காரு‌ புல்புல்” என‌ சத்தமாகக் கூறியபடி கார் கதவைத் திறந்தான்.

பாலாமணி “சிங்கம், கிஃப்ட்டை மறந்துட்ட” என்று குரல் கொடுக்க, போய் வாங்கி வந்தான்.

மோட்டாரைஸ்ட் கதவு தானாகத் திறக்க, கார் கோரமங்கலாவை நோக்கிச் சென்றது.

சிங்கபிரான் எதையோ கேட்க, சின்மயி இன்னும் அவனது நெருக்கம் தந்த தாக்கத்திலிருந்து வெளி வராது அமைதியாக வந்தாள்.

கார் நின்றதும் அவள் பக்கம்‌ வந்து “இறங்கு புல்புல்” என்ற சிங்கபிரான் அவள் கையில் தட்டினான். படபடப்பு அடங்காத சின்மயி கவனமின்றித் திருதிருக்க,

“டாக்டர் மேடம், அது வெறும் டெஸ்ட் ஊசிதான்”என
உரத்துச் சிரித்தான்.

விக்ரம் ஜோயலின் வீடு, ஓபன் டெர்ரஸுடன் கூடிய மூன்று பெட்ரூம் ஃப்ளாட். ஒரு தளத்தில் இரண்டு வீடுகள் மட்டுமே. மொத்தமே ஆறு வீடுகள்தான். இரண்டாவது மாடி எனினும், கிட்டத்தட்ட தனி வீடு போலவே இருந்தது.‌ கிருஷ்ணன் மேனன் குடும்பம் முன்னரே வந்திருந்தனர்.

சின்மயிக்கு ஜோயலின் குட்டிப் பையன் பொக்கே கொடுத்து வரவேற்றான். ‌நேரே டெரஸுக்கு அழைத்துச் சென்றனர்.

சிங்கபிரான், ஜோயல், மேனன், மூவருமே அடுத்தவர் மனைவியரை மேடம், சிஸ்டர் என்றெல்லாம் பசப்பாது, இயல்பாகப் பெயர் சொல்லியே அழைத்தனர்.

சின்மயி, சிங்கபிரானின் பால்யகால‌ நட்பு அவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

கிருஷ்ணன் “சின்மயி, நிங்கள் எங்க கூட ஹாஸ்டல் ரூம்ல மாத்ரம் இல்லா. அவ்வளவுதான். சில சமயம் சிங்கம் ரொம்ப புலம்பினா‌ சின்மயானந்தான்னு விளிச்சுக் கேலி‌ செய்வோம்… நிங்கள் அறியுமோ?”

ஜோயல் “என்ன, எங்களுக்கு பதிமூணு வயசு குட்டிப் பொண்ணு சின்மயியைதான் தெரியும். ஸிர்க்… ஸூம் பண்ணிப் பாத்தா… டாக்டர் சின்மயி. இப்ப, போன வருஷம் சிங்கம் உன்னைப் பார்த்துட்டு வந்த மறுநாள் வெறும் தண்ணியக் குடிச்சே ஹை ஆகி...”

சின்மயிக்கு “டேய் ஓவரா ஓட்டாதீங்கடா” என முகம் சிவந்து‌ சிரித்த சிங்கபிரான் ஓர் அழகான ஆச்சர்யம்.

இருவரையும் ஏகத்துக்கு கலாட்டா செய்து‌ சிரித்தனர். மேனனின் மனைவி, ஜோயலின் மனைவியைக் காட்டி, “சின்மயி, எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டுமே பையனா போச்சு. உங்க பொண்ணுக்காக நாங்க வெயிட்டிங்” என்றாள்.

பெண்களுடன் உள்ளே‌ சென்ற சின்மயி, அங்கிருந்து பார்க்க, சிங்கபிரான் நண்பர்களுடன் அத்தனை இயல்பாக இருந்தான்.

“ரொம்ப அழகா ஸாரி கட்டி இருக்க சின்மயி. உனக்குன்னே செஞ்ச மாதிரி இருக்கு. உன் சாய்ஸும் நல்லா இருக்கு” என்றனர்.

இந்த ஒரு வருடத்தில் சிங்கபிரானுக்குப் புடவை‌ அதிகப் பிடித்தம் என்பதை அறிந்ததாலோ என்னவோ, கல்யாணம் முடிவானதும் சின்மயி நிறையப் புடவைகள் வாங்கினாள். அவற்றில் இதுவும்‌ ஒன்று. இன்று கூட நேரமாகிவிட்டதில் ஒரு கோ-ஆர்ட் செட்டை எடுத்தவளைப் புடவை கட்டிக்கொள்ளச் சொன்னது அவன்தான்.

ஜோயல் “குட்டி, ஆ கிடார் எடுத்து வரு” என்று குரல் கொடுத்தான். இவர்கள் மூவரும் கிடாருடன் டெரஸ்ஸுக்கு செல்வதற்கு முன்பே சிங்கபிரான் பாடத் தொடங்கி இருந்தான்.

‘அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி’

இசைக்கருவிகள் எதுவுமின்றி, சூடான அல்வாவைப் போல் துவண்ட சிங்கபிரானின் குரல் உள்ளறையில் டீவியில் ஐக்கியமாகி இருந்த குழந்தைகளைக் கூட வெளியே அழைத்து வந்துவிட்டது. படபடவெனக் கை தட்டினர்.

“சிங்கம், நீ ஒரு மார்க்கமாதான்டா இருக்க” என்றான் மேனன்.

பிறகு ஆளாளுக்குப் பாட, நீண்டதொரு பாட்டுக் கச்சேரியே நடந்தது.‌ சின்மயியைப் பாடச் சொல்லும்போதே

“அன்னிக்கு போல ஸீரியஸ் மோடுக்கு போயிடாத சின்மயி. இன்னிக்கு நோ கிளாஸிகல். ஒன்லி சினிமா பாட்டு” என எச்சரித்தனர்.

“எனக்கு லேட்டஸ்ட்‌ பாட்டெல்லாம் அதிகம் தெரியாதே”

சிங்கபிரான் “சும்மா பெப்பியா ஏதானும் பாடு புல்புல்”

கிருஷ்ணன் மேனன் “சிங்கம், ரெண்டு பேரும் கூடி ஒரு டூயட் பாடலாமே…”

“பெஸ்ட் ஐடியா ஏட்டா. ஆஃடர் ஆல் இந்த பார்ட்டியே மேரேஜ் கழிஞ்சதுக்குதன்னே” என்றாள் அவன் மனைவி.

ஒன்று போல் புன்னகைத்த சின்மயியும் சிங்கபிரானும் நொடியும் தாமதிக்காது ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…’ எனத் தொடங்கிவிட்டனர். அந்தப் பாடல் அவர்கள் இருவருக்குமே மிகப் பிடித்தம்.

சின்மயி நண்பர்களிடம் “நான் ஒன்னு கேட்கலாமா?”

“கேளேன்” என்றனர்‌ கோரஸாக.

“உங்க மூணு பேருக்குள்ளயும் சண்டை வருமா?”

மூவரும் பக்கெனச் சிரித்தனர்.

“ வராம… சட்டையைக் கிழிச்சுக்கற அளவு, இதோட அவ்ளோதான்ற மாதிரி அடிச்சுப்போம். அதுவும்‌ ஆல்பம்க்கு மியூஸிக் கம்போஸ் பண்ணும்போது ஸ்டூடியோல தனியா வேற இருப்போமா… சில சமயம் சத்தம் வரலைன்னா செக்யூரிட்டி வந்து நாங்க உயிரோடதான் இருக்கமான்னு எட்டிப் பாத்துட்டு போவான்”

ஜோயலின் மனைவி “நீங்களும் ஃப்ரெண்ட்ஸ்தானே சின்மயி, உனக்கும் சிங்கத்துக்கும் சண்டை வருமா?”

சிங்கபிரான் சிரிப்புடன் சின்மயியைப் பார்த்திருக்க,

“இல்லை. எனக்குத் தெரிஞ்சு ச்சிங்கா என்னை எதுவுமே சொன்னதில்லை”

“கல்யாணம் ஆயாச்சுல்ல… இனிமே சொல்லுவான்”- மேனன்.

எழுந்த சிங்கபிரான் “சும்மா இருங்களேன் டா. எங்க, சண்டை வந்துடுமோன்னு அதுக்கும் சேர்த்து கவலைப் படுவா அவ” என்றவன், சின்மயி எழ கை நீட்டினான்.

சின்மயி “தேங்க் யூ‌ ஆல். நான் செமையா என்ஜாய் பண்ணினேன்” என்றாள் உண்மையாக .

தன்னை எடை போடுவார்களோ என்றக் கவலையின்றி அவர்களுடன் கலகலத்ததே அவளுக்கு இதமாக இருந்தது.

*****************

பாலாமணியும் நாகமணியும் அவர்களது ஒன்று விட்ட சகோதரனின் அறுபதாம் கல்யாணத்திற்கென அந்த வியாழக்கிழமையன்று சென்னை செல்லப்போவதாக பாலாமணி சொன்னார்.

சிங்கபிரான் “ஒன்னும் தேவையில்ல”

சின்மயி “யாரு மாமி அது, என்ன திடீர்னு?”

“உன் கல்யாணத்துக்கு வந்துட்டு கடைசியா போனாரே, நடராஜன்னு, சுமங்கலிப் பிரார்த்தனைக்குக்கூட அந்த மாமிக்குதானே புடவை கொடுத்தோம்…”

“ஓ…”

“சென்னைல ரெண்டு நாளைக்கொரு தரம் புதுசா புயல்னு சொல்றா. அங்க போய் மாட்டிக்காதம்மா”- சிங்கபிரான்.

“எத்தனையோ சிரமப்பட்டு முன்னுக்கு வந்திருக்கான் டா. புள்ளை துபாய்ல இருக்கான். கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா. என் மனசுல ஒரு எண்ணம் இருக்கு…”

சிங்கபிரான் “எனக்குதான் கல்யாணம் ஆயிடுத்தேம்மா”

கையில் இருந்த மொபைலால் அவனுக்கு ஒரு அடி போட்ட சின்மயி “ஓவரா ஆசைப்படாதடா, மாமி கேசவ்க்கு சொல்றான்னு நினைக்கறேன்” என்றதும் அம்மாவும் பிள்ளையும் சிரித்தனர்.

பாலாமணி “அவன் சும்மா சொல்றான் சின்மயி, சின்னப் பொண்ணு. இருபத்தி ரெண்டு வயசுதான் ஆறது. எம். ஃபில் படிக்கறா. கேசவ்க்குன்னா சரியா இருக்கும். நாகமும் உன் சித்தப்பாவும் ஒத்துக்கணும் ”

“அம்மா… உம்புள்ளைக்கு பண்ணிக்காம, என்னை ஏன் இழுத்து விடறன்னு சொல்லப்போறா.. வம்புல மாட்டிக்காம எதோ செய். கார்ல போறயா?”

“அதெல்லாம் வேண்டாம். யானைக்குட்டியைக் கட்ட வேற இடம்‌ தேடணும்” என்றவர், தங்கையுடன் வந்தேபாரத்தில் புறப்பட்டுச் சென்றார். பாலாமணி சென்னை சென்று சேர்வதற்குள்ளேயே புயல் தீவிரமடைந்து தமிழகத்தில் மட்டுமின்றி காற்றில் அதிகரித்த ஈரப்பதத்தின் விளைவாக பெங்களூரிலிலும் மழை பெய்யத் தொடங்கியது.

சின்மயி பிற்பகலில் மழையில்‌ நனைந்தபடி வீடு வந்தபோது, சிங்கபிரான் அலுவலகம் சென்றிருந்தான். எதிர்பார்த்தது போலவே சமையல் மாமி மழையைக் காரணம் காட்டி விடுப்பு சொன்னார். காலையில் செய்த இரண்டு இட்லி மட்டுமே மீதமிருக்க, தனியே சாப்பிடவும் மனதில்லை.

இந்த ஒன்றரை மாதத்தில் இந்த வீட்டில் இதுபோல் தனியாக இருந்ததே இல்லை. இருளும் மழையும் சூழ்ந்ததில் சற்றே பெரிய அந்தத் தனி வீடு அச்சத்தைத் தந்தது. க்ளீனிக் போக முடியாததில் எல்லாக் கதவுகளையும் பூட்டி, உள்ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்த சின்மயிக்கு பேருறக்கம்.

அவள் எழுந்தபோது நேரம் ஐந்தரைதான் என்றாலும் முழுதாக இருட்டி இருக்க, நல்ல மழை. டீவியைப் போட, தமிழகமே மழைத் திரைக்குப் பின் ஒளிந்திருந்தது. பாலாமணியிடம் பேசினாள்.

பாலை அடுப்பில் வைத்து, விளக்கேற்றியவள், தனக்கு பூஸ்ட் கலந்து கொண்டாள். மதியமும் சாப்பிடவில்லை என்பதால் சாதம், ரசம், காங்கிரஸ் கறி என சமைத்து வெகு நேரத்திற்குப் பிறகே சிங்கபிரான் வந்து சேர்ந்தான்.

அப்பளம்‌ பொரிக்கையில்தான், இந்த வீட்டில் அவளும் சிங்கபிரானும் தனித்திருப்பதே உறைத்தது.

உண்டு முடித்தபின் மளமளவென பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிங்கபிரான் மேலே சென்றுவிட, இல்லாத வேலையைச் செய்ய சின்மயி அங்குமிங்கும் நடையாய் நடந்தாள்.

பாலாமணி எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறுக்கே வரவில்லைதான். சிங்கபிரான் ஒரு அலுவகத்தை நிர்வகிப்பவன், பாடகன், பிரபலமானவன் என்பதாலோ என்னவோ, நினைத்தால் தன் அறையிலோ, மாடியிலோ வேலை செய்தபடி, பாடியபடி, எதையாவது எழுதிய வண்ணம் தனிமையில் இருப்பவனை அவர்‌ அநாவசியமாகத் தொந்திரவு செய்வதில்லை. அவனுமே கணிசமான நேரம் அவருடன் செலவிடவும் மறப்பதில்லை. சின்மயி விஷயத்திலும் அவர் அப்படித்தான்.

சின்மயிக்கு இப்போது அவர் இல்லாதது குறுகுறுப்பாகவும், இருந்திருக்கலாம் என என்றும் ஒருசேரத் தோன்றியது. மேல் படியில் நின்று எட்டிப் பார்த்த சிங்கபிரான், இடுப்பில் கை வைத்தபடி நடு ஹாவில் நின்று முகத்தில் நவரசத்தையும் பிழிந்தவளைக் கண்டு சத்தமின்றிச் சிரித்தான்.

‘பார்த்தாலே உருகறா… ஒத்துக்க மட்டும் மாட்டா’

“புல்புல்‌, குடிக்க வாட்டர் கொண்டு‌ வா”

சிங்கபிரான் அலுவலக வேலையைத் தொடர, சின்மயியின் பொறுமை வேகமாகக் கரைந்தது.

“என்னாச்சு புல்புல், ஏன் ரெஸ்ட்லெஸா இருக்க? மழை, நல்லா குளூர்றது. பேசாம தூங்க வேண்டியதுதானே”

‘தினமும் ராத்திரி லேட்டா வர, ஈவினிங் முழுக்க வேஸ்ட்டா போறதுன்னு தூங்கவிடாம பேசியே இம்சை பண்ணுவான். இன்னிக்கு ஒம்போது மணிக்கே தூங்கச் சொல்றான்’

“எங்கிட்ட ஏதாவது சொன்னயா புல்புல்?”

“ம்ஹும்”

கணினியை மூடி வைத்துவிட்டு, கிடாருடன் வட்டவடிவ சோஃபாவில் சின்மயியின் அருகில் வந்து அமர்ந்து மீட்டியவன் பாடத் தொடங்கினான்.

து ஹோகா ஸரா பாகல்
துனே முஜ்கோ ஹே ச்சுனா

து தின் ஸா ஹே
மேய்ன் ராத் ஆனா தோனோ(ன்)
மில் ஜாயேன் ஷாமோன் கி தரா ஆ ஆ…

யே மோஹ் மோஹ் கே தாகே…

(எல்லாவற்றையும் நீ எப்படி அறிந்துகொண்டாய்—
நான் சொல்லாத விஷயங்களைக் கூட?

நீ சற்று பைத்தியக்காரியாகத்தான் இருக்க வேண்டும்,
என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக.

நீ பகலைப் போன்றவள்,
நான் இரவைப் போன்றவன்;
சந்தியாவைப் போல, நாம் இருவரும் ஒன்றிணைவோம்)

சின்மயிக்கு ஹிந்தி தெரியாது. பள்ளியிலும் தமிழ்தான். பெங்களூர் வந்த பிறகு பத்து வரை எண்களையும், சில அடிப்படை வார்த்தைகளையும் அறிந்துகொண்டாள்.

இப்போது சிங்கபிரான் பாடிய பாடலுக்கும் அவளுக்கு அர்த்தம் தெரியாது. சூழலும் குரலும் அந்தப் பாடலின் தொனியில் இழைந்த உருக்கமும் காதலும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் மென்சோகமும் சின்மயியை உலுக்கியது. அவன் முதுகில் தலை சாய்த்துக் கொண்டவளுக்கு அழுகை முட்டியது.

கிடாரை சுவற்றில் சாய்த்து நிறுத்திய சிங்கபிரான், அவளை முன்னே இழுத்து அணைத்துக்கொண்டான்.

“புல்லூ, என்னடா ?”

“ச்சிங்கா…நான்… நாம… தப்பில்லைதானே?”

“இதை விட சரி‌ எதுவும் கிடையாது புல்புல்”

“...”

“புல்லும்மா…”

இரண்டு கைகளாலும் சிங்கபிரானின் தலை முடியைக்‌ கொத்தாகப் பற்றிய சின்மயி, தன் முகத்தை நிமிர்த்தி அவனை இழுத்து இதழில் அழுந்தப் பதிய, அவன் பேச்சு நின்றது.

வெளியில் பெருமழை பெய்ய,
‘சித்’ எனப்படும்‌ , அறிவான, பரம உணர்வான, ஆனந்தமாகிச் சின்மயமான சிங்கபிரான் அவளின் காப்பும் கவசமுமானான்.

***********************

சிங்கபிரான் எழ மனமின்றிக் கிடந்தவளைத் தன் புறம் திருப்பிப் பார்த்துச் சிரிக்க, “ம்ப்ச்…போடா” என்ற சின்மயியிடம்‌ தொடுவானத்தைத் தொட்டுவிட்ட நிறைவும் களைப்பும்.

“புல்புல்”

“ம்…”

சிங்கபிரான் சட்டென உரத்துச் சிரித்தான்.

“ஏன் ச்சிங்கா சிரிக்கற?”

“புல்லூ, உன் அச்சம், நாணம், வெக்கமெல்லாம் ஏன்னு இப்பதான்டீ புரியறது”

“...”

“சன்னதம் வந்தாப்போல என்ன வேகம் டா சாம்மீஈஈஈய்ய்…”

முற்றுகையும்‌ போரும் சமாதானமும் சமரசமும் சரித்திரமானது.

*****************

சிங்கபிரான் சின்மயியை வற்புறுத்தி கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து லைசன்ஸ் வாங்க வைத்தான். ரவியும்‌ ஜனனியும்‌ தொடர்ந்து அழைக்க, கோல்டி‌ அழவே செய்ததில், சின்மயிக்கு பாஸ்போர்ட், விசா ஏற்பாடு‌ செய்து மூவரும் கொட்டும் ஸ்னோவில் கனடா சென்று வந்தனர்.

இவர்கள்‌ புறப்படுகையில் கோல்டி டாடி, மம்மியுடன் வரத் தயாராக‌ இருந்தாள். அவள் அழுத அழுகையில்‌ பாலாமணி‌ மட்டும் கொஞ்ச நாள் அங்கு தங்கிவிட்டு வருவதாக முடிவு‌ செய்தனர். ஆனால், வந்த ஒரே மாதத்தில் பாலாமணியைத் திரும்ப அழைத்தனர்.

தங்களது வயதும் ஆசையும் ஆர்வமும் புரிந்த தம்பதியின் தடை போடாத உறவில், இயற்கையும் இளமையும் துணை நிற்க, சின்மயி அடுத்த மாதமே கருவுற்றாள்.

பாலாமணி நேர்த்திக் கடனை நினைவு கொள்ளவே நாற்பது பக்க நோட்டு வாங்கினார். புதிது புதிதான திருஷ்டி கழிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டார். சின்மயியின் வாய்க்கு ருசியாகக் கேட்டுக் கேட்டு சமைத்தார்.

“என்னையும் ஏதாவது கேளும்மா. பாதி ரைட்ஸ் என்னோடது” - சிங்கபிரான்.

சின்மயி தலையில்‌ அடித்துக்கொள்ள, பாலாமணி
“இருடா சிங்கம், அஞ்சாம் மாசம் உனக்கும் மருந்தும் விளக்கெண்ணெயும் தரேன்” என்று சிரித்தார்.

சின்மயி இரண்டு மாதங்களுக்கு‌ ஒருமுறை பரசுராமை போய் பார்த்து வந்தாள். சீமந்தத்திற்கு நாள் குறித்திருக்க, சிங்கபிரானும் உடன் சென்று தகவல் சொல்லி அழைத்தான். பாஸ்கரும் பவானியும் வந்திருந்தனர். பரசுராமும் வந்து சென்றார். கனடாவிலிருந்து ரவி மட்டும் வந்தான். விழா‌ எளிமையாக, சிறப்பாக நடந்தது.

பாலாமணியின் ஒ.வி சகோதரர் முந்தைய நாளே தன் மனைவி, மற்றும் மகளுடன் வந்தார். சென்னை போய் வந்ததில் இருந்து பாலாமணி புலம்பிய‌ புலம்பலில் சிங்கபிரான், கேசவிடம்‌ அந்தப் பெண்ணைக் காட்டி “புடிச்சிருந்தா சொல்லு. பேசுவோம்” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

கேசவ் “எனக்கு ஓகே ண்ணா. அம்மா…”

“சித்திய சரி கட்றது என் பொறுப்பு டா”

“அப்ப நான் போய் அவ கிட்ட பேசவா?”

“சித்தீ…”

“நான் போய் தாம்பூலப் பை போடறேன்”

“தட்’ஸ் பெட்டர்”

சின்மயி “சித்திட்ட என்ன ச்சிங்கா சொல்லுவ?”

“அப்ப என்ன தோண்றதோ அதுதான்”

நாகமணி “அண்ணா என்னை எதுவுமே கேக்கலைடா சிங்கம்.‌ உங்கம்மாதான் கிடந்து கலங்கறா. ஏன், கேசவ்க்கு வேற நல்ல வசதியான இடமா…”

சிங்கபிரான் “உன் இஷ்டம்தான் சித்தி. ஆனா, ரொம்ப டிலே பண்ணாத. பேண்டுல இருக்கற நான்ஸிங்கற கிறிஸ்டியன் பொண்ணுதான் உனக்கு மாட்டுப்பொண்ணா வருவோ. பரவாயில்லையா?”

“என்னடா சிங்கம் சொல்ற, நிஜமாவாடா, யாருடா அது?”

“வேணும்னா, நான்ஸி நாளைக்கு இங்க வரும்போது நீயே ரெண்டு பேரையும் கவனி சித்தி”

மறுநாள், சீமந்தம் முடிந்தபின் வந்த நாதம் மியூஸிகா‌ குழுவினர் விஸ்தாரமாகக் கச்சேரி நடத்தினர். வயலினிஸ்ட்டான நான்ஸியின் பக்கம் கேசவ் திரும்பினாலே‌ டென்ஷனான நாகமணி, அன்று‌மாலையே மகனின் திருமணத்தை அந்தப் பெண்ணுடன் முடிவு செய்து விட்டார்.

சின்மயி “நான்ஸி பாவம்‌ ச்சிங்கா”

சிங்கபிரான் “நோ வே புல்புல். நான் சொன்னது‌ வெளில தெரிஞ்சா நான்தான்டீ பாவமாயிவேன். அவ ஹஸ்பண்ட் ஒரு‌ ஜிம் ட்ரெயினர்”

“இது வேறயா, பெருமாளே!”

*********************

மசக்கை தொடங்கியதுமே சின்மயிக்கு‌ ஆன்ட்டிசெப்டிக், மருந்துகளின் வாசனையே ஆகாது போய்விட, காலையில் வீட்டிலும் பிறகு ஹாஸ்பிடலிலும் ஓங்கரித்து உமட்டி,‌வெளியேற்றியதில் தினசரி வேலைக்குப் போவதே அவஸ்தையாக இருந்தது. சில நாள்கள் “ச்சிங்கா, என்னை வந்து கூட்டிண்டு போயேன்” என போனதுமே அழைத்து விடுவாள்.

சிங்கபிரானுக்கு மும்பை, புனேவில் கான்ஸர்ட்டுகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அதுபோக, குழுவாக இருக்கையில்‌, அதி முக்கியமான காரணம் இருந்தால் தவிர,
பத்து மாதமும் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதோ, ரத்து செய்வதோ இயலாத காரியம்.

சிங்கபிரான் “புல்புல், இப்போதைக்கு நீ ஹாஸ்பிடல் வேலையை விடு. ஈவினிங் க்ளீனிக் மட்டும் போ. குழந்தை பொறக்கற முன்னாடி க்ளீனிக் பத்தி யோசிக்கலாம்“ என்றதை சின்மயி வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டாள். இப்போது க்ளீனிக்கையும் கை மாற்றி விட்டிருந்தாள்.

எத்தனையோ இழப்புகளின், இன்னல்களின் நடுவிலும் படித்த படிப்பு, ஒரு பெண்ணுக்கு உத்யோகமும் சுய சம்பாத்தியமும் எத்தனை அவசியம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தாலும் சின்மயியிடம் இயற்கைக்கு மாற்று எதுவுமில்லையே?

எட்டாம் மாதத் தொடக்கத்தில் இருந்தே வீட்டில்தான் இருக்கிறாள். பகல் முழுதும் பாலாமணியுடன்தான்.

குறித்த கெடுவிற்கு மூன்று நாள்கள் பிந்திப் பிறந்தது சிங்கக்குட்டி. தனக்குப் பிடித்த ராகம் என்பதால் ரேவதி என்று பெயர் வைத்த சிங்கபிரான் அழைப்பதென்னவோ ‘சிலுக்கு.’

கான்ஸர்ட்டுகள், ஆல்பங்கள், ஸ்டார்ட் அப் வேலையைத் தாண்டி சிங்கபிரானை பிஸியாக வைத்திருந்தாள் மகள். பேத்தி பாலாமணியின் சுகரை குறைத்து பிபியை ஏற்றினாள்.

“அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கு. சிங்கமும் ரவியும் இத்தனை விஷமம் பண்ணினதா எனக்கு நினைவே இல்ல. கோல்டி கூட சமத்துதான்” என்றார் பாலாமணி.

ரவி “நானும் சிங்கமும் அத்தனை மக்காவா ம்மா இருந்தோம்?” என்றதில் சின்மயிக்கு ஏகச்சிரிப்பு.

குழந்தைக்குப் பத்து மாதங்களான நிலையில் வேலைக்குச் செல்ல விரும்பிய சின்மயி மீண்டும் கருத்தரித்தாள். கையில் கிட்டை வைத்துக்கொண்டு அதே வட்ட இருக்கையில்‌ அமர்ந்து புலம்பினாள்.

“என்னடா ச்சிங்கா… எப்டிடா…?”

“கடைசி கேள்விக்கு பதில் சொல்லவா புல்புல்?”

“கொன்னுடுவேன்டா…”

“எனக்காக தினமும் நீ சிலுக்கோட போட்டி போடறதோட விளைவுதான்டீ இது”

“ச்சிங்கா…”

“ம்”

“ச்சிங்காஆஆ”

“இப்ப சொல்லப்போறியா, இல்ல குட்டிய எழுப்பிவிடப் போறியா?”

“அம்மா கிட்ட எப்டிடா சொல்றது? என்ன நினைப்பா?”

“என்ன நினைப்பா… பையன் புருஷன் வேலையை கரெக்ட்டா‌ செய்யறான்னு… கிள்ளாத புல்புல். சிலுக்கு கடிக்கறா, நீ கிள்ற. தொப்புளை சுத்தி‌ ஊசி போட்டுக்கணும் நான்”

அதே நேரம் ரவியின் மனைவி‌ ஜனனியும் உண்டாகி இருக்க, இரண்டு‌ பேரன்களின் வரவில் பாலாமணி திணறினார்.

*********************

நான்கு வருடங்களுக்குப் பிறகு…

பரசுராம் இருந்த ரிடையர்மென்ட்‌ ஹோமில் இருந்து சின்மயிக்கு காலை ஆறரைக்கெல்லாம்‌ அழைப்பு வந்தது. அவருக்கு அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் மாரடைப்பு என்றதில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறினர்.

சின்மயியும்‌ சிங்கபிரானும் குழந்தைகளை பாலாமணியிடம் விட்டு விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

ஹரி க்ரீன் கார்ட் கிடைத்து கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகி இருக்க, பரசுராமிற்கான தொடர்புப் புள்ளி சின்மயிதான்.

தன்னுடன் வந்து இரண்டு நாளாவது தங்கும்படி அவள் எத்தனையோ முறை அழைத்தும் அவர் வரவில்லை. இத்தனைக்கும் பழசை மறந்து‌ அவளுக்காக பாலாமணி கூட அழைத்துவிட்டார்.

பரசுராமிடம் இருந்த மிகச் சிறிய மாற்றம், பார்க்கும்போதெல்லாம் சின்மயியின் மகனை மடியில் வைத்துக் கொள்வார். அதிகம் பேசவோ, கொஞ்சவோ மாட்டார். அதனாலேயே சின்மயி வாத்ஸல்யன் இல்லாமல் அவரைப் பார்க்கச் செல்வதில்லை.

சிங்கபிரான் “ஏன், என் சிலுக்கைத் தூக்க மாட்டாராமா?”

“இந்த அப்பாக்கே இத்தனை உருகற நீ, அவர் மட்டும் இருக்கறபடி இருந்தா என்னென்ன செய்வ?” என்று‌ வம்புக்காகவேனும் அவளிடம் மல்லுக்கு நிற்பான்.

“உனக்குத் தெரியாது ச்சிங்கா. அம்மா செத்துப் போனதுக்கு இவர்தான், இவரோட பேச்சுதான் காரணம்னு தெரிஞ்சாலும் எங்க, இவருக்கும் ஏதாவது ஆயிடுமோ, ஏதாவது பண்ணிண்டுடுவாரோன்னு நான் எத்தனனை பயத்திருக்கேன் தெரியுமா?”

“...”

“அம்மா போனபோது ஹரிக்கு படிப்பு முடியற சமயம். வேலையும் கிடைச்சாச்சு. பவானிக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளும் பொறந்தாச்சு. ஆறே மாசத்துல பழகின வீட்டை, ஊரை விட்டுப் புது ஊர், பெரிய படிப்பு, சமையல், வீட்டு வேலை… அப்பா துணைக்கு கூட இருக்கறதே ஆறுதலா இருக்கும். இத்தனைக்கும் நீ போனதுல‌ இருந்து அவரை அப்பான்னு சொல்றதையே விட்டவ நான்”

செல்லும் வழியில் ஹரிக்கும் பவானிக்கும் தெரிவித்தனர். இவர்கள்‌ போனபோது நல்ல நினைவுடன்தான் இருந்தார். அரை மணிக்கெல்லாம் இரண்டாவது முறையாக ஹார்ட் அட்டாக் வர, கண் முன்னேயே அவர் உயிர் பிரிந்தது.

சின்மயிக்கு அழுகையை விட துக்கம்‌ அழுத்தியது. எத்தனை நெருக்கமான உறவை, எவ்வளவு சிக்கலாக்கி விட்டார்?

“ச்சிங்கா…”

தயக்கமாகப் பார்த்தவளைத் தட்டிக்கொடுத்த சிங்கபிரான்,

“அஃப்கோர்ஸ், அவரை நம்ம வீட்டுக்குதான் அழைச்சுண்டு போகப் போறோம் புல்புல். பவானியும் பாஸ்கரும் கிளம்பிட்டேன்னு கால் பண்ணினா. ஹரி ஈஸ் ட்ரையிங் ஃபார் டிக்கெட்ஸ். தைரியமா இரு புல்புல். நீதான் பேப்பர்ல எல்லாம் சைன் பண்ணனும். வா, போகலாம்” என அழைத்துச் சென்றான்.

ஆம்புலன்ஸில் உடல் வர, காரில் பின்தொடர்ந்தனர். சின்மயிக்கு தந்தையை நினைக்க, நினைக்க ஆறவில்லை.

பரசுராமிற்கு எழுபது வயது முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. ஏதோ ஒரு அலட்சியமான, திமிரான தருணத்தில் வேலையை உதறியவரை ஆட்கொண்ட அகத்தால் தன் பொறுப்பைத் துறந்து, சுற்றி இருப்பவர்களிடம் தன்னைக்
கடினமானவராகக் காட்டிக்கொள்ளவே தடிப்பான வார்த்தைகளைப் பிரயோகித்து, தன் சந்தேகத்திற்கு மனைவியைப் பலிகொடுத்து, பிள்ளைகளின் அன்பை, அண்மையை இழந்து, வாழ்க்கையைத் தொலைத்தவர்.

பரசுராம் என்றாவது தன் குணத்தை, சொல்லை, செயலை மறு பரிசீலனை செய்திருப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

என்னதான் ஒரு வேகத்தில், பொறாமையில், உரிமையுணர்வில், அம்மா வை சந்தேகப்பட்டுப் பேசி இருந்தாலும், மூன்று பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான இனிமையான நினைவுகளும் பொழுதுகளும் இல்லாமலா போயிருக்கும்?

இத்தனை வருடத் தனிமையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கூடவா அம்மாவின் நினைவு வராமல் இருக்கும்? ஒரு முறை கூடவா நடந்தவற்றை எண்ணி வருந்தி இருக்க மாட்டார்?

“அழாத புல்புல். இந்தக் காலத்துக்கு வயசு அதிகம் ஆகலைன்னாலும், அதிகம் சிரமப்படாம போய்ட்டார். உங்களோட உறவும் இல்லாம, உடம்பும் படுத்தினா கஷ்டம் இல்லையா?”

“ச்சிங்கா, அப்பா நாங்க எல்லாரும் அவரைத் தனியா விட்டுட்டதா நினைச்சு இருப்பாரோ?”

“இருக்கலாம்”

“எப்பயாவது அவர் எங்களை மிஸ் பண்ணி இருப்பாரா ச்சிங்கா?”

“சான்ஸே இல்லைடா. உங்கப்பா மாதிரி ஆட்கள் உள்முக தரிசனத்துக்குத் தயாரா இருக்க மாட்டா. தன்னையே அலசிப் பார்க்க, introspect ‌பண்ண அவாளோட ஈகோ விடாது”

“...”

“எந்த ஈகோவால வாழ்க்கையை இழந்தாரோ, கடைசிவரை உங்களுக்குப் பணியாம திமிரா, நிமிர்வா அவரை உயிரோட, உயிர்ப்பா வாழவெச்சதும் அதே ஈகோதான். எல்லாருக்கும் இப்படி அமையுமான்னு எனக்குத் தெரியாது. அந்த விதத்துல ஹி ஈஸ் வெரி லக்கி. அகம் ப்ரம்மாஸ்மின்னா உங்கப்பாதான். ஆனா, இது வேற அகம்”

அவர் வாங்கி வந்த வரத்தாலோ அல்லது நீத்தார் கடனைத் தீர்க்கவோ, பரசுராம் தள்ளி நிறுத்திய அவரது பிள்ளைகள் ஒன்று கூடி அவருக்கான இறுதி மரியாதையை, ஈமச் சடங்குகளை வெகு சிறப்பாக நடத்தினர்.

**********************

சின்மயி இப்போது சற்றே மேம்பட்ட‌ வசதிகளுடன் தனியாகக்‌ க்ளீனிக் வைத்திருக்கிறாள். காலையில்‌ மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் இருப்பாள். தன் படிப்பையும்‌ ப்ராக்டீஸையும் போலவே, குடும்பத்தையும்‌ குழந்தைகளையும் முக்கியமாக நினைத்தவள், தன்னை அதிகம் வருத்திக்கொள்வதை சிங்கபிரானும் விரும்பவில்லை.

“சர்வீஸை விடாத புல்புல். அதே நேரம் எங்களுக்கும் நீ வேணும் டா. லியோவைப் பாரு, நீ வர வரைக்கும் கேட் கிட்டயே நிக்கறான்”

பாலாமணி‌ வருடத்தில் மூன்று மாதம் கனடா சென்று வந்தார். சின்மயியும் குழந்தைகளும் நாதம் மியூஸிகாவின் நிகழ்ச்சிகள் நடக்கும் அத்தனை நாடுகளையும் ஊர்களையும் பார்த்தனர்.

சிங்கபிரானும் சின்மயியும் இருக்கும் அந்த ஓவியம் இப்போது வீட்டின் முன்னறையில் இருக்கிறது. புதிதான வட்ட வடிவ சோஃபாவில் நால்வரும் நெருக்கியடித்து அமர்கின்றனர். பிள்ளைகளின் பாட்டும் படிப்பும்‌‌ அதில்தான்.

********************

நாதம் மியூஸிகாவின் இருபதாவது ஆண்டு விழாவிற்கான‌ ஆல்பம் ரிலீஸ் இன்று. பல நாள்‌ ஒத்திகைக்குப் பின் இன்று படப்பிடிப்பு.

கல் கட்டிடமும், ரயில் ஓடுகளும், ரோமன் லெட்டரில் எண்கள் இருந்த ரயில்வே கடிகாரமும் நீலமும் மஞ்சளும் பிங்கும் மாறி மாறி கலந்ததொரு வண்ணக் கலவையின் ஒளிப் பின்னணியில் புகை பரவ, முதலில் கருவிகளில்‌ லிடியன்‌ ஸ்கேலில் ராக் இசை அதிர்ந்ததைத் தொடர்ந்து மிஸ்ர யமன் ராகத்தின் ஆரோகண அவரோகணங்கள் வயலினில் இழைய… சிங்கபிரான்,

“ராதா சமேதா ராதா சமேதா கிருஷ்ணா

நந்த குமார நவநீத சோரா
பிருந்தா வன கோவிந்த முராரே” என்று பாடி நிறுத்த, மீண்டும்‌ ராக் இசைக்குத் தாவினர்.

‘நட்பெனும்‌ ஒரு அற்புதம்,
இதில்‌ ஆண் பெண்‌ பேதம்‌ கிடையாது;
விலகலும் விகல்பமும் கூடாது
புரிதலும் இணக்கமும் இல்லாது இங்கு
சினேகத்தின் தீபம் ஒளிராது’


எனக் குழுவினர்‌ அனைவரும் கோரஸாக ராக் இசைக்க, சிங்கபிரான் அதே மிஸ்ர யமன் ராகத்தில் அமைந்த

“மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - என்ற நட்புக்கும் சமாதானத்திற்குமான பாடலின் வரியைப் பாடி மீண்டும் ராதா சமேதாவை நிரவலோடு பாடி நிறுத்தினான்.

மொத்தம் பதினோரு நிமிடங்கள். “கட், லைட்ஸ் ஆஃப்” என்றதும் சின்மயியும் பாலாமணியும் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த குழந்தைகள் இருவரும் பலத்த கைதட்டல் சத்தத்தின் நடுவே தந்தையிடம் ஓடினர்.

சிங்கபிரான் அங்கிருந்தே சின்மயியை நோக்கிக் கண்களைச் சிமிட்டினான். சின்மயி அதில் நேசத்தைத் தாண்டிய சினேகத்தைக்‌ கண்டாள்.
 

Author: VedhaVishal
Article Title: நாணங்களும் எதற்காக? 16 - FINALE 2 & EPILOGUE
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.