நாணங்களும் எதற்காக? 2
“ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ||
மதுராபுரி சாதனா மிருது வதனா மதுசூதனா (இக…)
ப்ளுடூத்தில் இசைத்த சிங்கபிரானின் குரல் நெய்யில் துவளும் சூடான அல்வாவைப் போல் துவண்டது.
காதில் ‘ஸ்வாஹதம் இல்லை. ஸ்வாகதம். ஹதம்னா அழிக்கறதுன்னு அர்த்தம். ஸ்வாகதம்னா நல்வரவு, வெல்கம்னு அர்த்தம். புரியறதா, இப்ப சரியா பாடுங்கோ’ என்றாள் அம்மா கல்யாணி.
சின்மயி நீண்ட வருடங்களுக்குப் பின் முனைந்து பாட்டு கேட்கிறாள். அதுவும் சிங்கபிரான் பாடியவற்றை மட்டும்.
நாதம் ம்யூஸிகாவின் ஆல்பங்களில் ஏற்கனவே இருக்கும் பாடல்களை இசைக் கோர்வையுடன் இணைப்பதைத் தவிர, சில பாடல்களின் இடையே தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதப்பட்டு
இணைக்கப் பட்டிருந்த கவிதை அல்லது பாடல் வரிகள் ஒரிஜினல் பாடலின் அர்த்தத்தையும் உணர்வுகளையும் மேம்படுத்திக் காட்டியது.
அவற்றை எழுதியது யார் என்று தேடிப்பார்க்க, மீண்டும் சிங்கபிரான் என்றது கூகுள். சின்மயிக்கு சிங்கபிரானை சங்கீதம் முழுமையாக ஆட்கொண்டிருப்பது புரிந்தது.
‘அம்மா மட்டும் இருந்திருந்தா அப்டியே பூரிச்சுப் போயிருப்பா’
கடினமானதொரு பரீட்சையை எழுதப் போகும் மாணவி, அதற்காகத் தன்னைத் தயார் செய்துகொள்வது போல் அவனைப் பற்றிய செய்திகளை, அவன் பாடிய பாடல்களை மனதில் உருப்போட்டாள்.
நன்கு படித்திருந்தாலுமே, ‘எக்ஸாம் ஈஸியா இருக்குமா, பதில் தெரிஞ்சாலும் என்னால எழுதி முடிக்க முடியுமா, பாதி பரீட்சையில் பேனால இன்க் தீர்ந்து போனா என்ன செய்வது, நான் பாஸாயிடுவேனா, நல்ல மார்க் வருமா’ போன்றதான யோசனைகளுடன் அவனை சந்திப்பதை ஏதோ முக்கியமான பரீட்சையாகவே எண்ணிக் கவலைப்பட்டாள்.
அக்கா அகிலாவிடம் பேசுகையில் ‘ச்சிங்காவைப் பார்த்தேன்’ என்று சொல்லும் உந்துதலை ஏனோ ஒத்திப் போட்டாள்.
வார இறுதி, மழை, தீபாவளி என அவன் தன்னைத் தேடி வராததற்கான நேர்மறைக் காரணங்களைத் தினம் ஒன்றாக அடுக்கித் தன்னையே சமாதானித்தாள்.
வாரம், பத்து நாளாகியும் சிங்கபிரான் வரவில்லை என்றதும் சின்மயியின் பொறுமை குறைந்து அவளது கற்பனைக் கழுதை கண்டபடி உதைத்தது.
‘ஏதோ, ரொம்ப நாள் கழிச்சு பார்த்த வேகத்துல அன்னிக்கு என்னைக் கூப்பிட்டான் போல’
‘அவன் வரலைன்னா அப்ப நடந்ததெல்லாம் அவன் இன்னும் மறக்கலைன்னுதானே அர்த்தம்?’
‘எப்டி மறப்பான்?’ என்றது மனசாட்சி.
‘ஏன், ச்சிங்கா வராததுக்கு வேற காரணம் கூட இருக்கலாமே?’
‘அவன் இப்ப பெரிய்ய ஆள்… இத்தனை ஃபேமஸான சிங்கர்… இப்ப அவன் ஸ்டேட்டஸே தனி. அத்தனை ரசிகர்கள் இருக்கா. அவன் ஏன் என்னைப் பார்க்க ஏன் வரான்?’
‘அந்தக் குழந்தைக்கு… அதான் அந்த பேபியோ கோல்டியோ… அதுக்கு நான் குடுத்த மருந்துல உடம்பு சரியாகலையோ?’
குழந்தை என்ற வார்த்தை மெதுவே உள்ளிறங்க, சின்மயி பேபியைத் தாண்டி பேபியின் அம்மாவை யோசிக்கத் தொடங்கினாள்.
‘கோல்டிக்கு அவன் டாடின்னா, கோல்டியோட மம்மிக்கு அவன் என்ன உறவு?’ என பாலச்சந்தரை போல் கேள்வி கேட்டாள்.
அந்த உறவும் உறவின் பெயரும் சுளீரென உரைத்ததில், சட்டென உள்ளே உற்பத்தியான கேள்விகள் அனைத்தும் ஓய்ந்து அமைதியானாள். மீண்ட பின்…
‘அப்டீன்னா ச்சிங்காக்கு கல்யாணம் ஆயிடுத்தா?’
‘இதென்ன கேள்வி, உனக்கே அபத்தமா இல்ல?’
‘ரெண்டு வயசுக் குழந்தை டேடின்னு கூப்பிடறது. அத்தனை ஜுரத்திலும் அம்மாவைக் கேக்காம அவங்கிட்ட ஒட்டிண்டு இருக்கு. அவனும் பதறிப் போய் பூவாட்டமா ஹேண்டில் பண்றான்… இன்னுமா உனக்கு சந்தேகம்?’
‘சிங்கபிரான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஏதானும் சட்டம் இருக்கான்ன… அவனுக்கும் வயசாறதே’
‘சரி, அப்படியே அவனுக்குக் கல்யாணம் ஆகி இருந்தா… என்னைப் பார்க்க வரக்கூடாதா… ஏன், எங்கிட்டப் பேசினா ஆகாதா… அவனை என்ன முழுங்கவா போறேன்… அட்லீஸ்ட் ஒரு ஃபோன்… அதான் அவன் பேண்ட்லயை அத்தனை பொண்கள் இருக்காளே…?’
‘ஏன், நீதான் பேசறது?’
‘அவன் நம்பர்தான் எங்கிட்ட இல்லை, நெட்ல தேடினாலே க்ளீனிக் பேரும் நம்பரும் கிடைக்கும். இவ்வளவு ஏன், நான் குடுத்த ப்ரிஸ்கிரிப்ஷன்ல கூட நம்பர் இருக்கே’
இதே யோசனையுடன் சுற்றியவளின் முகத்தைக் கூர்ந்த தந்தையிடம் இருந்து முக பாவனையை மறைக்கும் அவஸ்தை வேறு.
தினமும் சிங்கபிரானை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியவள், மெதுவே அவன் இனி வரமாட்டான், எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை என்று உருப்போட்டாள்.
அதையும் மீறி, நெஞ்சமும் நேத்திரங்களும் அவனைத் தேடிச் சலித்ததுதான் நிஜம்.
*******************
“சிங்கமொன்று புறப்பட்டதே ஆனா எங்கதான்னு புரியலையே…”
கஹோன் (Cajon) பாக்ஸின் மீது அமர்ந்து அதில் தாளம் போட்டபடி தன் இஷ்டத்திற்கு வார்த்தைகளை மாற்றிப் பாடிய கேசவின் மேல் தன் கையில் இருந்த சீப்பை விட்டெறிந்தான் சிங்கபிரான்.
“புத்தனுக்கே கோவம் வந்தா பூமி தாங்குமா,
சிடுக்கெடுத்து சீவாட்டி சொட்டை வருமம்மா…”
பக்கெனச் சிரித்த சிங்கபிரான் “ஏன்டா, ஏன்?”
“நீ சரியே இல்லடா சிங்கம். உன் நடவடிக்கைல ஏதோ மாற்றம் இருக்கு. அடிக்கடி பால்கனி, மொட்டைமாடின்னு அங்கங்க நின்னு ஆகாசத்தப் பாக்கற. நீயே சிரிச்சுக்கறயேன்னு பார்த்தா, உடனே பெருமூச்சு விடற. இப்ப டூர் போன இடத்துல தனிய்ய்யா ஷாப்பிங் போய் எதையோ வாங்கி கிஃப்ட் ராப் பண்ணி வெச்சிருக்க. இதெல்லாம் எதோட அறிகுறி தெரியுமா?” - கேசவ்.
“பேயா, ப்ரெக்னன்ஸியா… அதையும் நீயே சொல்லு. ஆளைப்பாரு”
சிங்கபிரான் பேக் செய்த பொருள்களைப் பார்த்த கேசவ் “நிஜமாவே கர்ப்பம்தான் போல. ஆனா, யாருன்னு தெரியலையே…”
பையை மாட்டிக்கொண்டு புறப்பட்ட சிங்கபிரான், திரும்ப கேசவிடம் வந்து “போய்ட்டு வந்து நானே சொல்றேன். அதுவரைக்கும் அம்மா கிட்ட எதையும் உளறிடாத. பேசாம ஜெட்லாக் போக குப்புற அடிச்சுத் தூங்கு”
“அடிச்சுக் கேட்டாலும் சொல்லக்கூடாது, அப்டிதானே?”
“கல்பூரம்டா நீ”
“வெற்றியோட திரும்பி வாண்ணா… ஜெயம் உண்டாகட்டும்”
“நான் என்ன போருக்கா போறேன். அது சரி, யார் அந்த ஜெயம்?”
கையெடுத்துக் கும்பிட்ட கேசவ் “ஜருகண்டி ப்ரோ”
சிங்கபிரானுக்கு தன் படபடப்பை, ஆவலை நினைத்து வியப்பாக, சிரிப்பாக, சிறிது வெட்கமாகக் கூட இருந்தது.
‘ஒரு சின்ன வயசு சிநேகிதியைப் பார்க்க, அதுவும் புல்புல்லை பார்க்க இத்தனை பதட்டமும் பரபரப்பும் ஏன்?’
‘டீன் ஏஜ்ல அவளோட பேசி, விளையாடி, ஊரைச் சுத்தினபோது கூட பயப்படாம இயல்பா இருந்த எனக்கு இது என்ன புதுசா?’
மறுநாளே சின்மயியை சந்திக்க நினைத்தவனை கோல்டிக்கு முடி இறக்க குடும்பத்தோடு திருப்பதி, திருச்சி என கோவில் கோவிலாகப் போனது, தீபாவளி, ஒரு வார இடைவெளியில் பாரிஸ் மற்றும் ஆர்ம்ஸ்டர்டாமில் இருந்த இசை நிகழ்ச்சிகள், அதற்கான ஒத்திகை, ஏற்பாடு, பயணம் என இன்று அதிகாலைதான் அவனது குழுவினர் பெங்களூர் திரும்பி இருந்தனர்.
இருபத்திநாலு நாள்களாகப் பொறுத்திருந்தவன், இதோ, அதே அம்ரபாலி ஆர்க்கேடில் சின்மயிக்காகக் காத்திருக்கிறான். அவளது க்ளினிக்கில் விளக்கு எரிவதும், இரண்டு மருத்துவர்களுமே இருப்பதும், பார்வை நேரம் முடியும் நேரத்திலும் சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருப்பதும் தெரிந்தது.
சுற்றிலும் இருந்த கல்லில் இருட்டான இடத்தில் அவளது ஸ்கூட்டருக்கு எதிரே அமர்ந்து வேடிக்கை பார்த்தான். இன்று மழை இல்லாததால் அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
உலகமே இளமையாக மாறிவிட்டது போன்று தோற்றமளித்தது.
உடை, உணவு, பேச்சு, மொழி, வாழ்வியல் நம்பிக்கைகள் என கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில்தான் எவ்வளவு மாற்றம்?
வயதான தாத்தாக்கள் அரைநிஜாருடன் ரொட்டியும் முட்டையும் வாங்க, பாட்டிகள் குர்த்தியுடன் நாய்களைப் பிடித்துக்கொண்டு நின்றனர்.
ஸ்பெகட்டியும் ஸ்லீவ்லெஸ்ஸும் , ஷார்ட் டாப்பும் அணிந்த பெண்கள், குளிருக்கு இதமாக ஸ்வெட் ஷர்ட், ஹுடி அணிந்து உடன் வந்த ஆண்களின் மேல் உராய்ந்து உஷ்ணத்தை உற்பத்தி செய்தனர்.
சிங்கபிரான் இவர்கள் அடையாளம் கண்டுவிடாமல் இருக்கத்தான் விரித்த சடையுடன் கண்ணாடி, தொப்பி சகிதம் இருட்டில் அமர்ந்திருக்கிறான்.
பிரபலமான பாடகன், அதிலும் எண்ணற்ற இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகன், கர்நாடக இசையின் ஜீவன் குறையாது, திரைப்பாடல்களையும் ராக் இசையையும் சரியான விகிதத்தில் ஒன்றிணைத்து இளமைத் துடிப்பானதொரு குழுவினருடன் இசைத்து, அந்த அதிர்வை (vibe) விசிறிகள் கொண்டாடுவது நிச்சயம் வரம்தான். பெருமைதான்.
வேண்டி விரும்பிய இந்த இடத்தைப் பிடிக்க அவனும் அவன் குழுவினரும் எந்தனை உழைத்திருக்கிறார்கள்!
அரங்கைக் கட்டிப் போடும் இசையும், ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதும், கையொப்பங்களும் சுயமிகளும்… சந்தேகமின்றி நிச்சயம் போதைதான்.
ஆனாலும் எந்தநேரமும் எந்த இடத்திலும் எல்லா மனநிலையிலும் மகிழ்ச்சியாக, வரவேற்பாக இருப்பதில்தான் சிக்கலே. அதுவும் தனக்கு அத்தனை நெருக்கமான, ஸ்பெஷலான புல்புல்லை இத்தனை வருடங்களுக்குப் பின் சந்திக்கும்போது எந்தக் குறுக்கீடையும் சிங்கபிரான் விரும்பவில்லை. மணி பார்க்க, ஒன்பது முப்பத்தைந்து.
‘அவ இனி வீட்டுக்குப் போய், சாப்பிட்டு…. வீடு எத்தனை தொலைவோ? அங்கே யார் யார் இருக்கிறார்களோ? அவளோட அப்பா? அண்ணா? அக்கா?’
‘ஒருக்கால்… ஒருக்…கால் புல்புல்லுக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ… மை காட்!’
‘ஆனா, நேம் போர்டுல சின்மயி பரசுராம்னு அவ அப்பா பேர்தானே இருக்கு?”
‘அதனால… பூமராடா நீ?’
‘இல்லையே, அவ வயசுக்கு எம்டி படிச்சு முடிச்சே ஒரு வருஷத்துக்குள்ளதானே இருக்கணும். அதுக்குள்ள கல்யாணமா?’
‘சரி, கல்யாணமே ஆகி இருக்கட்டுமே…அதனால இப்ப என்ன…?’
‘கல்யாணம் ஆனா அவ என்கூடப் பேசக் கூடாதா இல்ல, பேச மாட்டாளா… அதையும்தான் பார்க்கறேன்…’
‘அவன் பேசக்கூடாதுன்னா?’
‘அப்புறம் எப்டி டாக்டர் வேலை பார்க்கறது?’
‘மடையா… அவ வைத்தியம் பாக்கறது கூட குட்டீஸ்க்குதான்’
‘ஆமால்ல…என் கூடப் பேசறதுனால புல்புல்க்கு பிரச்சனை வரும்னா நான் அவளை வற்புறுத்த மாட்டேன்’
மனம் போன போக்கில் போனவன், அசைவை உணர்ந்து நிமிர… அவள்தான்!
வந்து நின்ற காரில் ஏறிய சக மருத்துவருக்குக் கையசைத்துவிட்டு அவளது இருசக்கர வாகனத்தை நோக்கி , சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்தாள்
கீழே குதித்து இரண்டே எட்டுகளில் அவளருகே விரைந்த சிங்கபிரான் “யாரைத் தேடற புல்புல்?”
மழைத்துளி பனிச்சாரலாகும் கணம், வருடத்தின் முதல் மண்வாசனை, பள்ளிக்கு விடுமுறை தந்த அடர் மழை, எதிர்பாராது வீட்டு வாசல் வழியே செல்லும் யானை, நீண்ட நேர மின்தடைக்குப் பின் புழுக்கத்தைப் போக்கும் ஃபேன் காற்று, ஆமை வேகத்தில் நகரும் வரிசையில் தொட்டுச் சிரிக்கும் கைக் குழந்தை, நல்ல வைகாசி வெயிலில் நடந்த பின் கிட்டும் நிழலும் மண்பானைத் தண்ணீரும் என இருவருமே மற்றவரைப் பார்த்ததில் வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷத் தருணங்களின் இளைப்பாறலை உணர்ந்தாலும் அவர்களிடம் ஏனோ அளவான புன்னகையே வெளிப்பட்டது.
சிங்கபிரான் மீண்டும் “புல்புல்?” என, சின்மயியின் கண்கள் அவள் விதித்த கட்டுப்பாட்டை மீறித் தளும்பி விட்டது.
ஒரு கணம் இரண்டு கைகளால் தன் முகத்தைப் பொத்திக் கொண்ட சிங்கபிரான், சட்டென சுதாரித்து “என்னைப் பார்த்ததுக்கா புல்புல் அழற?”
“ச்சிங்கா…”
கண்ணீருடன் சிரித்தவளைத் தொட விழைந்தவன், சின்மயி அநிச்சை செயலாகச் சற்றே பின்வாங்கவும் “ஸாரி” எனத் தடுமாறினான்.
சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் “இல்ல… இங்க வேண்டாம்” என்றாள்.
“எப்டி இருக்க புல்புல்…நோ நோ, டாக்டர் சின்மயி?”
“ம்… ராக் ஸ்டார் சிங்கபிரான் அளவுக்கு இல்லன்னாலும்… ஓக்கே”
சற்றே உரக்கச் சிரித்தவன் “இந்தா, இது உனக்கு” என ஒரு பையை நீட்டினான்.
“என்னது?”
அதன் உள்ளிருந்து ஒரு தம்ளர் அளவிலான ஸ்டீல் ஃப்ளாஸ்க்கை எடுத்தவன் “இதை இப்ப குடி, மீதிய அப்புறமா பிரிச்சுப் பாரு”
“...”
“புல்புல், இந்த வெதர்ல சில்லுனு இருந்தா பரவாயில்லையா?” என்பதற்குள் பாதியைக் குடித்திருந்தவளின் முகம் மீண்டும் அழுகையைக் காட்டியது.
தன் கைகளைக் கட்டிக்கொண்டு “ஏய்… ச்சில்… ரிலாக்ஸ்” என்றவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க, மணி பத்து ஐந்து.
“நேரமாச்சு புல்புல். உங்கூட நிறைய பேசணும், கேட்கணும். உன் நம்பர் சொல்லு”
சின்மயி தன் விரலால் மொபைலை அன்லாக் செய்து அவனிடம் தந்தாள்.
“எப்ப பார்க்கலாம், நாளைக்கு?”
யோசித்தவள் “நான் டென் டு ஃபோர் *****ஹாஸ்பிடல்ல இருப்பேன்… வெயிட்… நாளைக்கு அங்க ஓபி (OP- Out Patients) கிடையாது. நான் லீவ் போட்டு ராகிகுட்டா அனுமார் கோவில்ல வெய்ட் பண்றேன். ஓகே வா?”
“டைம்?”
“9.30?”
“டன்”
ஹெல்மெட் அணிந்து வண்டியில் அமர்ந்த சின்மயி சட்டென முகம் கசங்கினாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “புல்புல், நீ ஓகேதானே, நான் ட்ராப் பண்ணவா? என்றபடி அவள் இடது முழங்கையைப் பிடித்தான்.
“போயிடுவேன் ச்சிங்கா. ஸீ யூ டுமாரோ”
***************
ஐந்தாறு முறை பெல் அடித்த பிறகே பரசுராம் கதவைத் திறக்க, உள்ளே வந்த சின்மயி, முதல் வேலையாக மாற்று சாவியைத் தன் கைப்பையில் எடுத்துப் போட்டாள்.
“ஒம்போது மணிக்கு முடியற க்ளீனிக்ல இருந்து ஸ்கூட்டர்ல வர்றதுக்கு இத்தனை நேரமா… மணி பத்தே முக்கால்”
“...”
“என்னடா வீட்ல அப்பான்னு ஒருத்தன் இருக்கானே, வர லேட் ஆனா சொல்லணும்னு தோணனும். ம்ஹும்…எங்க… முட்ற மாடாட்டம் போறதும் வர்றதும்”
“ஊர் உலகத்துல என்னென்னவோ நடக்கறது. இதுல தானே இழுத்து விட்டுக்கக்கறதுதான் ஜாஸ்தி”
“...”
“நான்தான் பாக்கறேனே… எல்லாம் தான்தோனித்தனமா தெனவெடுத்து அலையறதுகள்”
“...”
சின்மயிக்கு சிங்கபிரானைப் பார்த்ததே நிறைவாக இருக்க, அவன் தந்த முன்னூறு மிலி ரோஸ்மில்க் உள்ளே சென்றிருக்க, சமையலறை பக்கமே போகாது, அறைக்குள் சென்று படாரென சத்தமாகக் கதவைச் சாத்தினாள்.
தந்தையின் நிஷ்டூரத்தில் எழுந்த எரிச்சல் ஒருபுறம் என்றால், இருக்கும் மனநிலையில்
‘ஆமா, ஊரைச் சுத்திட்டுதான் வரேன். அதுவும், உங்களுக்கு அறவே ஆகாத சிங்கபிரானோட’ என்று கத்தத் தோன்றியதை அடக்கிக்கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
‘எவ்வளவுதான் பொறுமையாக இருப்பது?’
‘க்ளினிக்கில் கூட்டம் அதிகமாக இருந்து வர தாமதமாகும் நாட்களில் எல்லாம் இதே பாட்டுத்தான்’
‘அத்தனை பயமா இருந்தா, அப்பாவா லக்ஷணமா ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறது’
‘கைல காசு கிடையாது, மனசுல அப்பாங்கற ஸ்தானத்துக்கான பொறுப்பும் கிடையாது. இதுல பாக்கற, கேக்கற எல்லார் கிட்டயும் எம் பொண்ணு டாக்டர்…எம்டி… அவளுக்குத் தகுந்த இடமா, நல்ல படிப்போட அமையணுமே… பையனும் டாக்டரா இருந்தா நல்லது… பெருமாள் என்ன நினைச்சுண்டு இருக்காரோன்னு ஜம்பமா ஒரு பதில்…’
‘அது கூட வேண்டாம். அதுவும் இவர் பாக்கற மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்… ஐயோ, காலம் கெட்டுக் கிடக்கே…வேளை கெட்ட வேளைல பொண்ணு தனியா வராளேங்கற அக்கறை இருந்தா, ராத்திரி துணைக்கு வந்து அழைச்சிண்டு வர்றது… ஏன், அந்த நாப்பத்தஞ்சு வயசு வந்தனா டாக்டரோட ஹஸ்பண்ட் தினம் பத்து கிலோமீட்டர் வரலை?’’
குளித்து உடைமாற்றி வந்தவளுக்கு அப்பா சாப்பிட்டாரோ இல்லையோ என்ற யோசனை வர,
‘அவர் என்னிக்காவது நீ சாப்ட்டியான்னு கேட்கறாரா, கவலைப்படறாரா? உன் வேலையைப் பாரு. எல்லாரும் இப்படிக் கீழ இறங்கிப் போய்ப் போய்தான் அவர் உச்சாணிக் கொம்புல ஏறி நிக்கறார்… ஏத்தி விட்ட பாட்டியைச் சொல்லணும்…’
குழல் விளக்கை அணைத்து, படிக்கும் விளக்கைப் போட்டு, தன் கைப்பைக்குள் திணித்திருந்த சிங்கபிரான் கொடுத்த பையை வெளியில் எடுத்துப் பிரித்தாள்.
கலர் கலராக ஜீரா மிட்டாய் இருந்த பாட்டில், வெளிநாட்டில் வாங்கிய எக்லெர்ஸ் சாக்லேட் டப்பா, தரமான இரண்டு க்ளட்சர்ஸ், குறைந்தது இருபதாயிரமாவது இருக்கும் பிராண்ட்டட் குளிர் கண்ணாடி மற்றும் குழந்தைகளுக்கான ஸ்டெதாஸ்கோப் (pediatric stethoscope) ஒன்று.
ரோஸ் மில்க் கில் தொடங்கி எல்லாமே சின்மயிக்கு விருப்பமானவை. அதிலும் சிறுவயதில் ஸ்டைலான கூலர்ஸ் அணிந்து கொள்ள அத்தனை ஆசை அவளுக்கு.
‘என் ச்சிங்கா எதையுமே மறக்கலை!’ என நினைத்தவளுக்குக் கண் கலங்கி விட்டது.
கூடவே, ‘இத்தனை காஸ்ட்லியான சாமானை நான் வாங்கிக்கறது சரியா?’ என்று அலைமாறினாள்.
‘அம்மா போனதுக்கு அப்புறம் எனக்குப் பிடிக்கும்னு யாரும் எதுவும் வாங்கித் தந்ததா நினைவில்லை. அக்கா, அண்ணாக்கெல்லாம்
எனக்கு என்ன பிடிக்கும்னே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அப்பா… கேக்கவே வேண்டாம். அவருக்கு அவரோட விருப்பு, வெறுப்புகள் மட்டுமே பிரதானம்…’
‘ம்ப்ச்… நான் யாருக்கு என்ன செய்யறேன், அடுத்தவாளைக் குறை சொல்ல. முதல் சம்பளத்துல எல்லாருக்கும் ட்ரெஸ் வாங்கிக் குடுத்திருக்கேன். குழந்தைகளுக்கு பொம்மை வாங்கித் தந்திருக்கேன்… வேறென்ன பெருசா…’
‘ஹரி பொண்ணுக்கு பர்த் டே வரது. பார்பி வேணும்னு கேட்டிருக்கா. வாங்கணும்’
கண்ணாடியை அணிந்து பார்த்து ’அழகாத்தான் இருக்கு’
எல்லாவற்றையும் எடுத்து பத்திரப் படுத்தியவள் எக்ஸைட்மென்ட்டில் தூக்கம் வராது தவித்தாள்.
மனதில் ‘இன்னும் அவனுக்குக் கல்யாணம் ஆச்சான்னு தெரியலையே’
**********************
வரப் ப்ரஸாதியான ராகிகுட்டா ஆஞ்சனேயர் ப்ரஸன்னமாக இருந்தார். செவ்வாய்க்கிழமை காலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.
தூக்கிப் போட்ட கொண்டையும், வெண்ணிற சிக்கன்காரி குர்த்தாவுமாக, மெர்ஸிடிஸ் எஸ்யூவியில் வந்து இறங்கியவனை சின்மயி இமைக்காது பார்த்தாள்.
இருவருக்குமே அனுமாரை விட அடுத்தவரின் அண்மையே முதன்மையாகத் தோன்றியதால் அவசர தரிசனத்துடன் கொடுத்த வடையை வாங்கிக்கொண்டு கீழே வந்துவிட்டனர்.
பாட்டில் க்ரீன் பாந்தினி சல்வாரில் தயங்கி நின்றவளுக்கு கார் கதவைத் திறந்த சிங்கபிரான் “ஏறு புல்புல்”
காரை நகர்த்தியவன் “எங்க போகலாம்னு சொல்லு”
சின்மயி “நான் இப்பதான் எட்டு மாசமா பெங்களூர். ஹாஸ்பிடல், க்ளினிக், வீடு, ஜெயநகர் 4த் பிளாக்… இது மட்டும்தான் எனக்குத் தெரியும். நீ எங்க கூட்டிண்டு போனாலும் எனக்கு ஓகே’
சடாரெனத் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தவன்
“ஷ்யூர்?”
“ம்ஹ்ம்”
பெங்களூர் போக்குவரத்தில் நீந்தியபடி பேசிக்கொண்டே அவலுஹள்ளியை நோக்கிச் சென்றனர்.
வழியெங்கும் சிங்கபிரான் தன் ராக்பேண்ட், அதன் ஆரம்ப நாள்கள், தற்போதைய வளர்ச்சி, பயணங்கள், குழுவினர் என விவரித்தவன், நடுவில் நிறுத்தி “ரொம்ப போரடிக்கறேனா புல்புல், வேற பேசலாமா?”
“கேட்டுண்டுதான் இருக்கேன், சொல்லு ச்சிங்கா”
பசுமையான, நடைபாதைகளும், மிதிவண்டித் தடங்களும் நிறைந்த அவலுஹள்ளி மாநிலக்காடு பெங்களூரின் சந்தடிகளுக்கு மாற்றாக அமைதியாக, அரவமின்றி இருந்தது.
மதிய வேளையிலும் காற்றில் டிஸம்பர் மாதக் குளிர் விரவி இருந்தது.
காரை ஓரிடத்தில் பார்க் செய்த சிங்கபிரான் “புல்புல், உன் ஹேண்ட்பேக் வேணும்னா எடுத்துக்கோ” என்றவன் பின்னாலிருந்து ஒரு பையை எடுத்துக் கொண்டான்.
இருவரும் மெதுவே நடந்தனர். மரங்களின் நடுவே இலைகள் மூடி இருந்த புல்திடல்களுள் ஒன்றில் பையில் இருந்த பெட்ஷீட்டை விரித்தான்.
“புல்புல், சிட்”
“மாமி எப்டி இருக்கா ச்சிங்கா?”
“அம்மா ஈஸ் ஃபைன். சுகர், பிரஷர், முட்டிவலி… எல்லாத்தோடயும் சௌக்யமா இருக்கா”
சிங்கபிரான் தலைக்கு அடியில் கைகளைக் கோர்த்துக்கொண்டு வானத்தைப் பார்த்துப் படுத்து கண்களை மூடியபடி பேசினான்.
சின்மயி “ரவி?”
“ரவி கனடால இருக்கான். ஹி ஈஸ் மேரீட்”
“கோல்டி எப்படி இருக்கா?”
“அவளுக்கென்ன… ஏகப்பட்ட பேச்சு. விஷமம். டேடி, டேடின்னு என் பின்னாலயே சுத்துவா”
“...”
“என்னாச்சு புல்புல், திடீர்னு கொயட்டா இருக்க?”
“ம்… கோல்டியோட அம்மா?”
விருட்டென எழுந்து அமர்ந்து சின்மயியைக் கூர்ந்தவன் “ஜனனி ஈஸ் குட். ஷி ஈஸ் வெரி ஸ்வீட் தெரியுமோ?”
“ஓ…”
“என்ன, ஸ்ருதி இறங்கிடுத்து?”
“நத்திங். சிங்கர் இல்லையா, ஸ்ருதி பேதமெல்லாம் உனக்குதான் தெரியும்”
வெடித்துச் சிரித்தவன், அவள் தலையில் கை வைத்து ஆட்டினான்.
“புல்புல், கல்யாணம் ஆயிடுத்தா ச்சிங்கான்னு நேரடியா கேளேன். ஜனனி ரவியோட ஒய்ஃப். கோல்டி ரவியோட பொண்ணு. அவளாவே அவனை அப்பான்னும் என்னை டாடின்னும் சொல்றா.. அண்ட் ஐ லைக் இட்”
சின்மயி “ம்… ஸாரி, நான்…” எனத் தடுமாறினாள்.
“என் கிட்டப் பேச உனக்கு என்ன தயக்கம் புல்புல்?”
விழிநீரை மறைக்க சின்மயி வேறு பக்கம் பார்க்க, அவள் நாடியைப் பற்றித் தன்புறம் திருப்பினான்.
“நான் என்னிக்கும் உனக்கு அதே ச்சிங்காதான். காட் இட்?”
“...”
“ப்ச்… அழாதடீ”
“நீ ஏன் ச்சிங்கா என்னைப் பார்க்க வரலை?”
“வந்தேன். அஞ்சு வருஷம் முன்னால ஃபர்ஸ்ட் ஆல்பம் ரிலீஸ் பண்றதுக்கு முன்ன உன்னையும் டீச்சரையும் பார்க்கணும், டீச்சருக்கு நமஸ்காரம் பண்ணனும்னு வந்தேன்…”
“...”
“உன் வீடே காணாமப் போய் கல்யாண மண்டபமா மாறி இருந்தது”
“...”
“டீச்சர்.. டீச்சர் காலமாயிட்டதா எதிர் வீட்டு கோவிந்தன் டெயிலர் சொன்னார்”
“...”
“ஸாரிடா புல்புல்… என்னைப் பாரேன். ஏதாவது பேசுடீ”
முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விசித்து அழுத சின்மயி,
“அம்மா…அம்மா தற்கொலை பண்ணிண்டு செத்துப்போனா ச்சிங்கா”