• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 3

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
56
206
83
Chennai
நாணங்களும் எதற்காக? 3

நி
ன்று‌ நிதானித்து அடர்ந்து பெய்த மழையை வெறித்தபடி காரில் அமர்ந்திருந்த சிங்கபிரான், ஏதோ வசதியான படுக்கையில்‌ படுத்திருப்பது போல் ஒரு பக்கமாகத் திரும்பிக்‌ கை, கால்களை குறுக்கியபடி ஆழ்ந்து உறங்கிய சின்மயியைப் பார்த்தான்.

இருவருமே மிக மெலிதாக நனைந்து விட்டதில் உடை நப்பாக இருந்தது. சின்மயி‌ குளிரில் சிலிர்த்து ஒடுங்குவதைக் கண்டு, ஏதேனும் போர்த்தத் தேடிக் கிடைக்காமல், சத்தமின்றி ஹீட்டரை ஆன் செய்தான்.

முகம், தோள் எனக் கூந்தல்‌‌ வழிய உறங்கியவளைக் காண, சிங்கபிரானுக்கு‌ கையில் அம்மா‌ கல்யாணியின் புடவை ஒன்றுடன் தன்‌ வீட்டிற்கு வந்து உறங்கும் சின்ன வயது‌ சின்மயியாகவே தெரிந்தாள்.

அவள் முகத்தில் விழுந்த‌ முடிக்கற்றையை ஒதுக்க எண்ணிக் கை நீட்டியவன், பின் வாங்கினான். தூங்கட்டும்!

எத்தனை அழுகை! வருடக் கணக்கில் மனதில் அடைந்திருந்த துக்கத்தை வெளியேற்றிய களைப்பும் ஆசுவாஸமும் சேர, சின்மயி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

‘நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா ச்சிங்கா?’

ஆளரவம் இல்லாத அத்துவானக் காட்டில் வருடங்கள் சென்று சந்தித்தவனின் அருகே நிச்சிந்தையாக உறங்குபவளைக் காண உள்ளுக்குள் என்னவோ செய்தது. நெஞ்சை‌ நீவிக்கொண்டான்.‌ ‘என்னிடம்தான் எத்தனை நம்பிக்கை‌ அவளுக்கு!’

‘தப்பு பண்ணிட்டேன் புல்புல்… டீச்சர்‌ செத்து போனது‌ தெரிஞ்ச அப்புறமாவது நான் உன்னைத் தேடி வந்துருக்கணும்’

சின்மயியின் தந்தை பரசுராமை நினைத்தால் எப்போதையும் விட உள்ளே அதிகம் எரிந்தது. டிராகன் கூட நெருப்பைதான் கக்கும். பரசுராம் வார்த்தை என்ற பெயரில் திராவகத்தையே கக்குவார்.

‘வார் என்ன வார்… கேடு கெட்டக் கபோதிக்கு மரியாதை வேற… அவனுக்கெல்லாம் நேரம். இத்தனைக்கு அப்புறமும் அந்தாளை வீட்ல வெச்சு சமைச்சு போட்டு…‌இன்னும் அவன் வாய்க்கு பயப்படற‌ இவளைச் சொல்லணும்… அயோக்கிய ராஸ்கல்… சந்தேகப் பேய்!’

சிங்கபிரானின் சிந்தனை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் காட்டழகிய சிங்கருக்கும் சரிபாதி தொலைவில்‌ இருந்த அந்த வீட்டிற்குச் சென்றது. அது சின்மயியின் பரம்பரை வீடு. இரட்டை வீடு.

சுற்றுச் சுவர், திண்ணை, முற்றம், தோட்டம் எனப் பெரிய வீடு. இருந்த இடத்தை‌ வீணாக்காது, சிறிதும் பெரிதுமான போர்ஷன்களாக்கி வாடகைக்கு விட்டிருந்தனர். மொத்தம் ஆறு‌ குடும்பங்கள். மூன்றில் அவர்களது குடும்பமே இருந்தனர்.

கீழே பரசுராமின் பெற்றோர், பரசுராம், அவரது தம்பி இருக்க, மாடியில் திருச்சியில் கல்லூரிப் பேராசிரியராக இருந்த அவரது அண்ணன் குடும்பம் இருந்தது.

எல்லாருக்கும் மூத்தவள், பரசுவின் அக்கா, திருமணமாகி திருச்சி ஆண்டார் வீதியில் இருந்தாள்.

வீட்டின் பின்பக்கத்தில் இருந்த இரண்டு போர்ஷன்களில் யார் யாரோ இருக்க, ஒட்டினாற் போன்ற (இரட்டை) வீட்டில்தான் முன்பு
சிங்கபிரான் இருந்தான்.

அந்த வீட்டின் முற்றம்‌ வைத்த நடுக் கூடம், ‌சின்மயி வீட்டினரின் ஸ்வாமி பிறை ஒன்றைத் தவிர, எல்லோரும் புழங்கும் பொது இடமாக இருந்தது.‌ எல்லா வீடுகளுக்கும் அந்தக் கூடத்திலிருந்துதான் வாசல் இருந்தது.

பின் பக்க போர்ஷன்களில் மொத்தமே ஒரு சிறிய சமையலறை, ஓரளவு பெரிய முன் அறை ஒன்று மட்டும்தான்.

சிங்கபிரான் குடும்பம் இருந்த பகுதிதான் சற்று பெரியது. தனி குளியலறை, ஓய்வறை வசதியும் உண்டு.

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதிகளில் இது போன்ற ஒண்டுக் குடித்தன வீடுகள், ஸ்டோர் எனப்படும் லைன் வீடுகள் வெகு பிரசித்தம்.

முன்பு இங்கு‌ குடிபுக அந்தஸ்து வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். அரசாங்க, வங்கி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தில் நிலபுலன் வீடு, வாசல் என‌ இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கென இது போன்ற சந்தடி நிறைந்த பாதுகாப்பான‌ வீடுகளில் வாடகைக்கு இருப்பது சகஜம்.

பரசுராமின் தம்பிக்கு எல்ஐசியில் உத்தியோகம். வீட்டு வாடகை அவரது பெற்றோரைச் சார்ந்தது. வீட்டை‌ப் பெரியவர்கள் நிர்வகிக்க, மகன்கள் மாதம் இவ்வளவு எனப் பணம் கொடுத்தனர்.

இதில் பரசுராமிற்கு உத்யோகம் என எதுவும் இல்லை. காரணம்…
அவரிடம் வணக்கம், இணக்கம் இரண்டும் சுத்தமாகக் கிடையாது. பதிலாக அளவிட இயலாத அகந்தையும் இறுமாப்பும் கொட்டிக் கிடந்தது. தன் தோற்றம், குடும்பம் குறித்த தற்பெருமையும் ஏராளம்.

இத்தனைக்கும் படிக்காதவர் இல்லை. பிஎஸ்ஸி புள்ளியியல் (Statistics) படித்தவர். தேசிய வங்கியில் கிடைத்த வேலையைத் திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ராஜிநாமா செய்துவிட்டார்.

கேட்டதற்கு…

“ஒருத்தர் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்க எனக்கு இஷ்டமில்லை. என் புத்திசாலித்தனத்துக்கு மாசம் இவ்வளவுன்னு அளவு வைக்க அவன் யாரு?””

“இதுல பொம்பளை மேனேஜர் வேற… குதி உயர செருப்பும் டம்பப் பையுமா பொய்க்கால் குதிரை மாதிரி டக்டக்குனு நடந்தா ஆச்சா ?”

சிரிப்பு என்ற பெயரில் உதட்டை ஒரு மாதிரி வளைத்தபடி… “இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்னு வேலைக்கு வரதுகளோ.. எவன், எதைப் பார்த்து வேலை குடுத்தானோ”

“என்னைக் கேள்வி கேட்க அவ யாருங்கறேன்?”

பரசுராம் வீட்டினர் செய்த முதல் மற்றும்‌முக்கியமான தவறு, அவரது கௌரவத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் வேலை இல்லாததை சம்பந்திகளுக்கு மறைத்து , புதுப் பெண்ணின் எதிரே அவரைக் கண்டிக்காது முட்டுக் கொடுத்ததுதான்.

பெற்றோரிடம் பணம் இருக்க, உணவு மற்றும் இருப்பிடம் குறித்த கவலை இல்லாது போக, சொந்த வீட்டிலேயே புது மாப்பிள்ளையாக வலம் வந்தார்.

அடுத்த ஆறு மாதங்களில் பரசுராமின் தம்பிக்கும் திருமணமாகி விட, வீட்டினர் புது உறவுகளிடம் பரசுராமின் உத்தியோகம் பற்றிய கேள்வியை சமாளிப்பதை ஒரு கலையாகவே கற்றுத் தேர்ந்தனர். எத்தனை எத்தனை பதில்களடா?!

‘கை வசம் ரெண்டு வேலை‌ இருக்கு. ஒன்னாந் தேதிக்குள்ள முடிவு பண்ணிப் போகணும்’

‘ஜம்ஷட்பூர் டாடால வேலை ஆகியிருக்கு. கல்யாணி பாஷை தெரியாத ஊர்ல தனியா எப்படி சமாளிப்போ… அதான் யோசனையா இருக்கு’

‘இங்கேயே பார்க்கலாம்னா இவன் படிப்புக்கு ஏத்த வேலையும் சம்பளமும் கிடைக்கணுமே… இந்தக் கணக்கை எழுத ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்னத்துக்குன்னு கேட்கறானாம். அவனை விட அதிகம் படிச்சிருந்தா எப்படி ஒத்துப்பான், நீயே சொல்லு’

“டெல்லி, பாம்பேன்னு கூப்படறா… இவனும் போகத் தயார்தான். ஆனாலும், இப்டி வீடு, வாசல், மக்க மனுஷாளோட இல்லாம, அங்க போய்க் குளுர்ல‌ திண்டாடுவானேன்?”

வீட்டினர் தன் தவறை நியாயப் படுத்தி, சரியாகி விடும் எனச் சிம்பு வைத்துக் கட்டியதில் பரசுராம் சவடாலையும் சோம்பேறித் தனத்தையும் சொத்து போல் பாவிக்கத் தொடங்கினார்.

அதன் பிறகும் எல்ஐஸி உள்பட எத்தனையோ நல்ல நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்தும் பொருந்தி இராது, ஓரிரு மாதங்களில் வேலையை உதறினார்.

கல்யாணம் முடிந்து சீமந்தமே வரவிருந்தும் இவர் வேலைக்குச் சென்ற பாடில்லை என்றதில், கல்யாணியின் பெற்றோரும் அண்ணனும் வந்து நியாயம் கேட்க, ஏழரைச் சனி, பதினொராம் இடத்தில் கேது, தாமச வேளை, தசா‌புக்தி என இவரது சோம்பேறித் தனத்திற்கு தங்களைக் கூட்டு சேர்த்ததில் மகிழ்ந்த கிரகங்கள் அடுத்தடுத்து இரண்டு சந்தானப் பிராப்தியை அருளினர்.

திருமணமான இரண்டரை வருடங்களில் பிறந்துவிட்ட(!) பவானியும் ஹரியும் பரசுராமால் வீட்டுக் கணக்கில் இருப்பு (inventory) வைக்கப்பட, அடுக்களையில் உடன் புழங்கும் ஓரகத்திகள் அடிக்கடி பதம் பார்த்ததில் கல்யாணி சுவாதீனமாகப் பிள்ளைகளுக்குப் பால் எடுக்கக் கட சங்கடப்பட்டாள்.

உறவினர்கள் கூடும்போதெல்லாம் பேசுபொருளான பரசுராமை பெற்றோரும் அண்ணன், தம்பியும் அறிவுறுத்த, கல்யாணி மன்றாட, எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் இலவச ஆலோசனை தத்ததில் பரசுராமின் பிடிவாதம் இன்னும் இறுகியதுதான் மிச்சம்.

போதாக் குறைக்கு இடைப்பட்ட நாள்களில் பழைய பங்களா போல் வெறுமே இருந்த பரசுராமை வழக்கமான அவரது கல்யாண‌ குணங்களைத் தவிர, மூன்று சீட்டும் சந்தேகமும் பிடித்துக் கொண்டது.

அண்ணனுக்கும் தம்பிக்கும் இரண்டிரண்டு குழந்தைகள். எல்லோரும் திருச்சியில் இருந்த தரமான பள்ளியில் படிக்க, அதே பள்ளியில் பவானியை‌ சேர்க்கையில் அதுவரை முனகலும் முணுமுணுப்புமாக இருந்த ஓர்ப்படிகள் இருவரும் தங்களுக்குக் கீழ்ப்படியில் இருக்கும் கல்யாணியின் குழந்தைகளுக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும் என‌ போர்க்கொடி தூக்கினர்.

பெற்றோர்களால் மனைவிகளுக்குச் செவி சாய்த்த‌ பிள்ளைகளைக் கரைக்க முடியாது போக, பரசுராமின் வீம்பினால் கல்யாணி தன் நகைகளில் பாதியை இழந்தாள்.

பள்ளிக்கு ஒரு முறை கட்டணம் கட்டினால் போதாதே! தீபாவளி, பொங்கல் போல் வருடத்திற்கு இரண்டு முறை கட்ட வேண்டுமே!

அது தவிர, சீருடை, புத்தகங்கள், போக வர ஆட்டோ, சில நேரம் ஆசை, சில நேரம் அவசியம், மருத்துவம் என செலவுகள் எகிற, மீண்டும் மீண்டும் மற்றவரிடம் கையேந்த‌ விரும்பாத கல்யாணி, தான் பாட்டு வகுப்பு தொடங்கப் போவதாகச் சொன்னாள்.

மாமியார் “நீ நன்னா பாடற. ஃபிடில் வாசிக்கற. வாஸ்தவம்தான். ஆனா கத்த வித்தையை ஏன் காசுக்கு விக்கணும்… அதுக்கு இப்ப என்ன அவசியம்?”

“...”

“இங்க இன்னும் ரெண்டு பேர் இருக்கா. உன்னைப் பார்த்து அவாளும் எதையாவது பண்றேன்னு கிளம்பி நின்னா…”

“எனக்கு அவசியப் படறதுமா”

“இன்னும் மூணு நாள்ல‌ நவராத்ரி ஆரம்பிக்கறது. போய் வேலையைப்‌ பாரு, போ”

‘உங்க புள்ளை‌ வேலைக்குப் போகல.‌ என்னால ஓர்ப்படிகள் கிட்ட பேச்சு கேக்க முடியல. எங்கப்பாவும்தான் எத்தனை‌ செய்வார்’ என்று மனதில் இருந்ததைப் பேச முடியாத கல்யாணி அசையாது நின்றாள்‌.

மீண்டும் ஏதோ‌ சொல்ல‌ யத்தனித்த மனைவியை அடக்கிய மாமனார்,

“வர விஜயதசமில இருந்து‌ சொல்லிக் கொடுக்க ஆரம்பி கல்யாணி. நானும் கோவில்ல, லைப்ரரிலனு எனக்குத் தெரிஞ்சவா கிட்ட சொல்லி‌ வைக்கறேன்” என்றார்.

இரண்டே நாளில் அவளது தந்தை ஹார்மோனியத்தைக் கொண்டு வந்து கொடுக்க, பரசுராம் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.

ஆனால், கல்யாணியின் முன்னெடுப்பை ஆதரித்த அவனது‌ தந்தையும் சகோதரர்களும் “உதவி பண்ணாட்டாலும் உபத்திரவம் பண்ணாம இரு” என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி விட்டனர்.

“ரோஷக்காரிதான் போ” என்றார் மாமியார்.

கடைசியில் தனிமையில்‌ எகிறியவனை
“இப்ப டெர்ம் ஃபீஸ் கட்டணும். நவராத்ரி, தீபாவளி‌ வரது. குழந்தைகளுக்காவது ட்ரெஸ் வாங்கணும். இதுக்கெல்லாம்
நான் போய் யாரையும் கேட்க மாட்டேன்.‌ ஒன்னு நீங்க‌ செய்ங்கோ, இல்ல என்னை‌ செய்ய விடுங்கோ” எனத் தட்டிக் கொட்டி சரிக்கட்டினாள்.

“உன் பாட்டு க்ளாஸ்ல வரப்போற… (வந்தா) பணம் நீ சொல்ற செலவுக்குப் போறுமா!”

“வரது வரட்டும். குறைஞ்சது முயற்சி‌ பண்ணின திருப்தியாவது கிடைக்குமே. நம்ம பங்குன்னு இருக்குமில்லையா?”

அவளது ‘நம்ம’ என்ற வார்த்தையில் அப்போதைக்கு அடங்கிய பரசுராம் அதற்கு மேல் மறுக்கவில்லை.

கல்யாணி டீச்சரின் சங்கீத வகுப்புகள் கன ஜோராகத் தொடங்கி நடந்தது. கணிசமான அளவில் மாணவர்கள்‌ சேர்ந்தனர்.

நலங்கு, காது குத்துகளில் கௌரிகல்யாணம் பாடிக்கொண்டிருந்த கல்யாணி, உள்ளூர் கோவில்களில் கச்சேரி செய்யுமளவு வளர, பரசுராமின் பொறாமையும் அர்த்தமில்லாத ஐயங்களும் கூடவே வளர்ந்தன.

*****************

உலகின் முதல் தரமான சூதாட்டம் திருமணம்.‌ காதல், ஏற்பாடு, கட்டாயம், திடீர் என எந்த வகையான திருமணமும் இதற்கு விதி விலக்கல்ல.

ஜாதகம், படிப்பு, பணம், சொத்து, உத்தியோகம், குலம், குடும்பம், தோற்றம், நிறம் என எக்கச்சக்க அம்சங்களின்‌ பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணச் சதுரங்கத்தில் பணயமாக‌ வைக்கப்படுவது வாழ்க்கை. அதில் ஹிட் ஆர் மிஸ் பரிசு… இணையின் குணம்.

கல்யாணியின் பெற்றோர்கள் வைத்திருந்த சரிபார்ப்புப் பட்டியலின் படி அமைந்த பரசுராம்… பெண்கள் மீதான கீழ் நோக்குப் பார்வை, மனைவிதானே என்ற அலட்சியம், சுயநலம், வெளிப்படும் கடைந்தெடுத்த வார்த்தைகள், வேலையின்மை, என குணக்குன்றுதான்.

ஐந்தடி உயரம். களையான சிரித்த முகம், நிறம், அழகு, அமெரிக்கையான குணம், மென்மையான பேச்சு,
எஸ்ஆர்ஸியில்‌ ஹோம் சயின்ஸ் பட்டம், பாட்டு, ஸ்லோகம், முக்கியமாகக்‌ கீழ்ப்படிதல் என கல்யாணி‌ போன்ற பெண் அடுத்த வீட்டுக்காரியாக அமைந்தால் கூட அதிர்ஷ்டம்தான்.

அதுவும் பரசுராம் போன்ற கணவனை பிறந்த‌ வீட்டிலும். புகுந்த‌ வீட்டிலும் யார் என்ன பேசினாலும் ஏசினாலும் அழாது எதிர்கொள்ளும் திடம், சூடு, சுரணை, கேட்கும் திறன்‌ எல்லாம் இல்லாதது போன்ற‌ நாசூக்கு…

மன்னி, ஓரகத்திகள்‌ என யார் எதை வாங்கினாலும் பாராட்டுபவள், சில நேரம் கண் படுமெனத் தனக்குக் காட்டவில்லை என்று தெரிந்தாலும் அவள்‌ முகம் மாறாது. நாளடைவில் குழந்தைகளுக்கு வாங்குவதில் தெரிந்த வெளிப்படையான வித்தியாசங்களை, முகம் மாறாது, மனதில் ஏதாவது நினைக்கிறாளா என்றே சந்தேகம் வருமளவு இதுதான் நிதர்சனம் என்று ஏற்றது போல் கல்யாணியின் ப்ரஸன்ன வதனம் மட்டும் மாறியதே இல்லை.

வேலை‌ வெட்டி எதுவுமில்லாத, நிஷ்டூரமான, பகட்டும் பசப்பும் ஜம்பமுமான கணவனின்‌ சுயரூபம் தெரிந்தும் இரவில் நெருங்குபவனை மறுக்காது எதிர்கொள்ளும்‌ சகிப்புத்தன்மை…

மறுதலிப்பை ஏற்பவரா பரசுராம்? கூட்டுக் குடும்பம், குடித்தனக்காரர்களுக்கு‌ எதிரே இரவு வேளையில் குரலை உயர்த்திக் கத்தி விட்டால் என்ற பயம் கல்யாணிக்கு.

அப்படி அவள் முதுகை காட்டிய சந்தர்ப்பங்களும் உண்டுதான். மறுநாள் பரசுராமின் மனைவி மீதான அதிகாரமும் அதட்டலுமே அவர்களுக்கிடையே உள்ள பிணக்கை பிறருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

இதனிடையில் ஒரு அபார்ஷன் வேறு…

“என்னத்தைச் சொல்ல…, விஸ்வாமித்ரன் தபஸாட்டமா வேலை வெட்டி இல்லாம அவன் சேர்த்து வெச்ச சக்தி இவளைப் பார்த்தாலே பத்திக்கறது போ” - நாத்தனார்.

“இப்படி இருக்கற புருஷனுக்கே மூணா… இன்னும் அவன்‌ இருக்கறபடி இருந்துட்டா?” அவள் ஓர்ப்படியின் அம்மா இவள் காதுபடவே சொன்னது.

சில நேரம் கூச்சமும் கோபமுமாய் தன்னையே நொந்து கொள்பவளுக்கும் இளமையும் ஆசையும் உணர்ச்சிகளும் உண்டே?

இத்தனை சிரமங்களை மீறி, அந்தத் திருமணத்தில் கல்யாணிக்குக் கிடைத்த ஆறுதலாக அவள் நினைத்தது அவள் குழந்தைகளை மட்டுமே.

கோபித்துக் கொண்டு பிறத்தகம் செல்ல கல்யாணியின் பெற்றோர் ஒன்றும் செல்வந்தர்கள் இல்லை. அதுமட்டுமின்றி உறவாடும், அவசியத்திற்கு ஆதரிக்கும் அண்ணன் குடும்பத்தை தொந்தரவு செய்யவும் அவள் நினைக்கவில்லை.

அவள் மட்டும் என்றால் கூட சரி…அவளை நம்பி இன்னும் மூன்று உயிர் இருக்கிறதே?

பாட்டு மாமி, பாட்டு டீச்சர் என்ற பெயரும், கோவில், கடைகள் என வெளியில் செல்கையில் சிறு சிறு கச்சேரிகளின் மூலம் பரிச்சயமான‌ அவளது முகம், மாலையில் பாட்டு, பகலில் பெண்களுக்கான பிரத்யேக திருப்புகழ் வகுப்புகளின் மூலம் ஓரளவு சீராக வரத் தொடங்கிய வருமானம் என மனைவியின் பிரபலமும் வளர்ச்சியும் பரசுராமிடம் பெருமிதத்திற்கு பதில் பொறாமையைத் தூண்டியது.

“மோகினி அவதாரத்தன்னிக்கு (ஸ்ரீரங்கம்) கோவில்ல கல்யாணியோட கச்சேரி இருக்கு. பிரமாதமா பாடுவான்னு ஒரு மாமி சொல்றதைக் கேட்டேன்” எனப் பெருமைப்பட்ட தன் அம்மாவிடமே பரசுராம் வள்ளென விழுந்தான்.

பொறுப்பை ஏற்பவர்களைத்தான் கேள்வி கேட்பர் என்பது புரியாத அல்லது‌ புரிந்துகொள்ள விரும்பாத பரசுராமிற்கு, மனைவி கல்யாணியிடம் தன் அண்ணன், தம்பிகள், குடித்தனக்காரர்கள், பிள்ளைகளை பாட்டு வகுப்பிற்கு அழைத்து வருபவர்கள் என யார் பேசினாலும் சந்தேகமும் பொச்சரிப்பும் மிகுந்தது.

அவளது உழைப்பே மானம் பல்லிளிக்காது இவனது
மரியாதையைக் காப்பாற்றத்தான் என்ற‌ புரிதலின்றி வார்த்தையில் வதைத்தான்.

மனைவியின் கையில் பணவோட்டம் இருப்பது தெரிந்தால், தன் அதிகாரத்தை நிலைநாட்டவென்றே அவளை நெருங்கினான்.

பவானிக்குப் பதினோரு வயது நிறையும் தருவாயில் கல்யாணி மீண்டும் கருத்தரித்தாள். சந்தேகம் வந்ததுமே தன் அம்மாவுடன் மருத்துவரிடம் சென்று பேச,

“மூணு மாசம் முடியற‌வரை தூங்கினீங்களா… இந்த ஸ்டேஜ்ல அபார்ஷன்லாம்‌ ரிஸ்க். நான் செய்ய மாட்டேன். மூணாவதுதானே… பேசாம பெத்துக்கோங்க” என்றார் அவர்.

பரசுராமின்‌ தம்பி மனைவி, மூத்தவளிடம் “அதுக்கென்ன, அடுத்தவா‌ காசுன்னா எத்தனை‌ வேணா பெத்துக்கலாம்”

கல்லூரியில் இருந்த மூத்தவரின் மகன்கள் இருவரும் விஷயம் தெரிந்து நமட்டுச் சிரிப்பு சிரித்ததோடு ‘பவர்ஃபுல் பரசுராம்’ என்றது பகிரங்க ரகசியமானது.

தயக்கமும் கலக்கமுமாக மென்று விழுங்கியபடி நின்ற கல்யாணியிடம் மாமியார் “ ஏன் இன்னும் நீ உக்காரலைன்னு கேட்டதுக்கு ரெண்டு மாசமா தள்ளித் தள்ளி வரதுன்ன… இப்ப பாரு…”

“...”

“பவானி திரண்டு குளிக்கற நேரத்துல என்னடீ இது கல்யாணி… ஏற்கனவே அண்ணாவும் தம்பியும் பொறுப்பா இல்லைன்னு பரசு மேல கோபமா இருக்கா. உன் ஓர்ப்படிகளைக் கேட்கவே வேண்டாம். நீ கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்…”

அழுதவளை “அசடு மாதிரி அழாதடீ. யாரு கண்டா… வர குழந்தை அதிர்ஷ்டத்தோட வரட்டுமே”

அந்தக் குழந்தைதான் சின்மயி.

*****************

இடைப்பட்ட வருடங்களில் பரசுராமின் பெற்றோர் காலமாகி இருக்க, பரசுராமின் தம்பி பதவி உயர்வில் மதுரைக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.

அவரது அண்ணன் மகன்களில் அமெரிக்காவிற்கு ஒருவனும் ஹைதராபாதிற்கு ஒருவனும் சென்றுவிட, தம்பதி மட்டும் அங்கேயே இருந்தனர்.

கூட்டுக்குடும்பம் சிதறியதில், பரசுராம் வழக்கம்போல் கவலையற்று இருக்க, கல்யாணி குழந்தைகளுடன் தத்தளித்தாள்.

ஆனால், இரண்டு பக்க உறவினர்களிடமும் ஃபீஸ் கட்ட கெஞ்சிப் பிச்சை எடுத்தாலும் பிள்ளைகள் மூவரும் நன்கு படித்தனர்.

கடவுளின் கருணையாக, பவானி எம்எஸ்ஸி பட்டம் வாங்கிய கையோடு, இந்திய கடற்படை அதிகாரியான தன் மகனுக்குக் கேட்டுத் திருமணம் செய்து கொண்டார், கல்யாணியின் அண்ணன்.

ஹரி இன்ஜினீயரிங் கடைசி வருடத்தில் இருக்க, சின்மயி ப்ளஸ் டூவில் இருந்தாள்.

முன்பு சிங்கபிரான் வீட்டினர் இருந்த போர்ஷனில் இப்போது திருச்சி‌அ கில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த பாலகிருஷ்ணனின் குடும்பம் குடி இருந்தது.

அவரது இரண்டு பெண்களும் கல்யாணியிடம் பாட்டு கற்றுக் கொண்டனர். ஒருநாள்‌ பாலகிருஷ்ணனே

“இவ்வளவு அற்புதமா பாடற நீங்க‌ ரேடியோல பாடலாமே, உங்களுக்கு சம்மதம்னா நான் ஏற்பாடு பண்றேன். ஒரு தரம் பாடினா, அப்புறம் ரெகுலரா சான்ஸ் கிடைக்கும். பணம்னு பெருசா வராது. ஆனா, ஆல் இந்தியா ரேடியோல பாடினா பெருமைதானே?” என்றார்.

பரசுராமைத் தவிர, வீடே, ஏன், முறைவாசல் செய்த காமாட்சி வரை கல்யாணியை‌ உந்தினர்.

அண்ணா, மன்னி, வளர்ந்த குழந்தைகள், பிறர் முன் தன்னை பரந்த மனதுடையவராக‌க் காட்டிக் கொள்ள பரசுராம் வேண்டா‌ வெறுப்பாக சம்மதித்தார்.

அதற்கான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, முன்பே ரேடியோவில் வாசித்த அனுபவம் மிக்க பக்க வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து பாடி, நாலைந்து ஒத்திகைக்குப் பின், நிகழ்ச்சியை பதிவு செய்தனர்.

பரசுராமை துணைக்கு வரச்சொல்லிக் கேட்டதற்கு‌க் கொஞ்சமும் தயங்காது மறுத்துவிட்டார்.

பாலகிருஷ்ணன் கூடவே நின்று உதவினார். அவர் மூலம் மேலும் நாலைந்து மாணவர்களும் வகுப்பில் சேர்ந்தனர். ஆறு மாதம் சென்று மீண்டும் ரேடியோவில் பாட‌ வாய்ப்பு வந்தது.

இந்த முறை ரெக்கார்டிங் முடியவே மாலையாகி விட்டது. மழை பலத்துப் பெய்யவும், நேரமாகிவிட, வானொலி நிலையத்தின் காரில் டிராப்‌ செய்வதாகக் கூறினர். அதே வீட்டுக்கே‌ போவதால், பாலகிருஷ்ணனும் உடன் வந்தார்.

பரசுராமை நினைத்து பயந்தாலும், நேரமாவதை உணர்ந்த கல்யாணிக்கு‌ வேறு வழியுமில்லை.

திருமணமாகி புகுந்த‌ வீட்டில் ஒரு மகள் இருக்க, வயது வந்த மகன் இருக்க, அண்ணன், அவன் மனைவி, பாலகிருஷ்ணன் உள்பட ஏனைய குடித்தனக்காரர்கள் பார்க்க…

“நில்லுடீ… அஞ்சு பாட்டு பாட இத்தனை நேரமா? சான்ஸ் தரேன்னவனோட ஒண்ணா கார்ல வந்து இறங்கற…
பாட்டு பாடத்தான் போனயா இல்ல…”

இது வரை அவர் சந்தேகப் படுவதும் தூற்றுதலாகப் பேசுவதும் மற்றவருக்கு‌ அரசல்புரசலாகத் தெரியும். அவர்‌ அறைக்குள் கத்துவது கேட்டாலும், கல்யாணியின் முகத்திற்காக காது கேளாதது போல் சென்றுவிடுவர்.

“டேய் பரசு, என்னதிது, கல்யாணியப் போய்‌ கண்டபடி‌ பேசிண்டு… உள்ள போடா. நீயும் போம்மா… (மனைவியிடம்) ஏய், என்ன பாக்கற, அவளை உள்ள அழைச்சிண்டு போ. பாலருஷ்ணன் ஸார்… ஸாரி ஸார்… அவன் ஏதோ தெரியாம…” - அண்ணா.

உயர்த்தி விட்டதற்குக் கிடைத்த வெகுமதியில் உறைந்து நின்ற கணவரின் அருகே வந்த பாலகிருஷ்ணனின் மனைவி,

“எங்களுக்கு ஸாரி தேவை இல்லை மாமா. வேலை வெட்டிக்குப் போகாம, பொம்பளையாட்டம் வீட்டையே சுத்தி வந்து, திண்ணையைத் தேய்க்கறாரே‌ உங்க தம்பி‌, அவரைக் கட்டிக்கச் சொல்லுங்கோ உங்க ஸாரியை”

“...”

“கல்யாணி மாமிக்கு தம்பி மாதிரி அவர். ஏன், எனக்கு பேசத் தெரியாது? யாருக்கும் தெரியாம அப்பப்ப‌ அம்பதும் நூறுமா கடன் வாங்கும்போது நல்லவரா இருந்த‌வர் இப்ப‌ கெட்டவராயிட்டாரா?”

“...”

“அத்தனை அக்கறை இருக்கறவர் பொண்டாட்டிக்கு பாதுகாப்பா கூடவே போய் இருக்கணும்”

“...”

“கையால் ஆகாதவன்தான் கட்டினவளை சந்தேகப்படுவான். உன்னையெல்லாம் மதிச்சு குடித்தனம் பண்றா பாரு… அந்த மாமியைச் சொல்லணும். நானா இருந்தா தலைல கல்லைத் தூக்கிப் போட்டுப் போயிருப்பேன். நீங்க‌ வாங்கோ, உள்ள போகலாம்”

இதை சற்றும் எதிர்பாராத பரசுராம், வீட்டை விட்டு வெளியேறி விட, பாலகிருஷ்ணன் அன்றிரவே‌ சாமான்களுடன் அவரது சொந்த ஊரான சிறுகமணியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கே சென்றுவிட்டார்.

பரசுராம் இரவு மிகத் தாமதமாக வந்தபோதும் அமர்ந்த இடத்தை விட்டு அசையாத கல்யாணி மறுநாள் விடியும் நேரம் வீட்டில் இல்லை.
இரண்டு நாள்களுக்குப் பின் ஸ்ரீரங்கத்திற்கு இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் காவிரிக் கரையில் கல்யாணி சடலமாக மீட்கப்பட்டார்.

குடித்தனக்காரர்கள் எல்லோரும் காலி செய்துவிட, பரசுராமின் சகோதரர்கள் இருவரும் வீட்டை விற்க முடிவு செய்தனர்.

பரசுராமின் பங்காக வந்த பணத்தில் பெரும்பகுதி அவர் வாங்கி வைத்திருந்த கடனுக்கே போய்விட, கல்யாணியின் அண்ணாவும் ஹரியும் அவர் கையில் பணத்தைக் கொடுக்கக் கூடாதென சண்டையிட்டனர்.

பவானிக்கும் தனக்கும் குறிப்பிட்ட‌ தொகையை ஒதுக்கிக்கொண்ட ஹரி, பரசுராமின் கைச் செலவிற்கென மாதா மாதம் இவ்வளவு என இன்றுவரை அனுப்புகிறான்.‌ மீதமிருந்த பணம் நீட் எழுதித் தேர்வு பெற்றிருந்த சின்மயியின் படிப்புக்கும் கல்யாணத்திற்கும் என முடிவு செய்தனர்.

சின்மயிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. பவானியும் ஹரியும் பரசுராமுடன் பேசுவதை அறவே நிறுத்தி இருந்தனர். திருமணமாகாத பெண், துணை வேண்டும்… போன்ற இன்ன பிற காரணங்களால் சின்மயியை தந்தையுடன் தஞ்சாவூரில் வீடு பார்த்துக் குடியேறினர்.

ஹரி பெங்களூரில் இருந்ததால், சின்மயி எம் டி படிப்பை பெங்களூரில் கேட்க, கிடைத்தும் விட்டது.

என்ன ஒன்று, ஹரிக்குத் திருமணம் ஆனபின், அவன் மனைவி இவர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை.

இப்போது‌ பரசுராமின் குற்றவுணர்வுக்கு, அது தரும் கோபத்திற்கு, அவரது இயலாமைக்கு வடிகால் சின்மயி மட்டுமே.

*****************

சின்மயி சொன்னதைக் கற்பனை செய்த சிங்கபிரானுக்கே ஏராளமான கேள்விகளும் அடங்காத ஆத்திரமும் வர அன்றைய பவானி, ஹரி, சின்மயியை நினைக்க வருத்தமாக இருந்தது.

“Cynical, selfish bastard’ என மனதாரத் திட்டியவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.

ஏனோ மழைக் குளிரிலும் புழுக்கமாக இருந்தது. குர்த்தாவின் பொத்தான்களைத் தளர்த்திச் சாய்ந்து ஏதேதோ யோசித்தவாறே கண்ணயர்ந்தான்.

தூக்கம் கலைந்து எழுந்த சின்மயிக்கு, உறுத்திய கொண்டையை‌ அவிழ்த்து விட்டுத் தூங்கிய சிங்கபிரானைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“என்னடா ச்சிங்கா ஹேர் ஸ்டைல் இது… அந்நியன் மாதிரி!” என வாய்விட்டே கூறினாள்.

சிங்கபிரானைப் போல் தயங்காது, அவன் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவள், திறந்திருந்த குர்த்தி வழியே வெளியே சரிந்திருத்த அவன் கழுத்துச் சங்கிலியைப் பார்த்து உறைந்தாள்.

அந்தச் சங்கிலியில் பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலாக வந்த சிங்கபிரானுக்கு அவள் தந்த சாதாரண கூழாங்கல்லை. மேலும் வழவழப்பாக இழைத்து தங்க வளையத்தில் கோர்த்துச்‌ சங்கிலியில் போட்டிருந்தான்.

சின்மயிக்கு ஏனோ படபடப்பாக இருந்தது.
 
  • Like
Reactions: kothaisuresh

kothaisuresh

Active member
Jun 19, 2024
152
10
28
Chennai
கல்யாணி போனது க்கு இந்த பரசு போய் சேர்ந்திருக்கலாம்