• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 4

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
58
215
83
Chennai
நாணங்களும் எதற்காக? 4


“இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று
ஓ..
தீண்டுதே மன்மத‌ வண்டு
ஓ…

க ம ப ம, ப ம க‌ க.................

க ம த, க ம த க ம த..........(ப...ம...)........


சட்டென ஸ்வரத்துக்குத் தாவிய சிங்கபிரானின் குரலில் இருந்த காதலும்‌ இரக்கமும் ஏக்கமும் கெஞ்சலும் குழைவும், அந்த இரவின் அமைதியில் அடக்கமாக உடன் இழைந்த கிடாரும் பந்துவராளியின் ரஸத்தை (mood) பஜ்ஜெனப் பரப்பியது.

“என்னமா பாடற, சிலிர்க்கறதுடா அண்ணா,‌ க்ளாஸ்! ப்பா… என்ன மாதிரி‌ ம்யூஸிக் இல்ல… செம ஃபீல். மேஸ்ட்ரோ‌ ஃபார் எ ரீஸன்” என்றான்‌ கேசவ்.

எதிரே இருந்த பெரிய திவானில் படுத்திருத்த பாலாமணி “அதே ஃபீலோட அவனை ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கச் சொல்லு”

“நான் எதுக்கு பெரியம்மா‌ நடுவுல?”

எழுந்து அமர்ந்து கொண்டவர் “பின்ன என்னடா, நான் பொண்ணைப் பார்க்கறேன்னாலும் வேண்டாங்கறான். லவ் பண்ற வயசும் போயாச்சு. ஊர் ஊரா உலகம் முழுக்க போறான். கூடவே பத்து குட்டிகளும் போறது. அந்தப் பொண்கள்ல யாரையாவது…”

கிடாரை கீழே வைத்த சிங்கபிரான் “...ம்மா… ஏம்மா இப்டி‌ பேசற… அவா எல்லாரும் என்னை‌, எங்களை நம்பி‌‌ வரா. அதுல அம்மா, அப்பா‌ அனுப்பற கேர்ள்ஸும் உண்டு. கல்யாணமாகி குழந்தையைப் புருஷன் கிட்ட‌ விட்டுட்டு வர‌‌ பெண்களும் இருக்கா. அத்தனை ஆர்வம் மியூஸிக்ல. ஒவ்வொருத்தரும் ஒரு விஷயத்துல பெஸ்ட், தெரியுமா?”

பாலாமணி‌ ”யார் இல்லைன்னா… என்னமோ, கூடவே கூட்டிண்டு சுத்தறயே… அதுல‌ ஒரு நல்ல‌ பொண்ணா பார்த்து…”

கேசவ் “பெரியம்மா, இந்த கௌரவமான ஃபேமிலி, குலம், கோத்திரம், ஜாதகம், படிச்ச, சிகப்பான, அழகான…இப்டி எல்லாம்‌ வேண்டாமா?”

சிங்கபிரான் “சும்மா இரேன்டா… அம்மா, இப்ப உனக்கு என்ன… ‌என் கூடவே சுத்தற‌ பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கனும், அவ்ளோதானே… செஞ்சிருவோம்.. விடு கவலைய”

கேசவ் “பெரியம்மா, இவன் பேசறதைப் பாத்தா, சிங்கம்‌ சிக்கிட்டாப் போல இருக்கே?”

பாலாமணி‌ ”நிஜமாவா சொல்ற… என்னடா இது சிங்கம், நான் ஏதோ ஆதங்கத்துல ஒரு பேச்சுக்கு சொன்னா…”

“மாத்தி மாத்திப் பேசாதம்மா” என்று சிரித்தான்.

சின்மயியுடன்‌ முதல்முறை வெளியில் சென்று வந்து நான்கு மாதங்களாகி விட்டது. பின்னும் இருவரது வேலையும்‌ பாதிக்காத அளவு இரண்டு, மூன்று முறை சந்தித்துவிட்டனர்.

இடையில் இவன் நிகழ்ச்சிகளுக்கென மும்பை, திருவனந்தபுரம், சிங்கப்பூர் என‌ப் பயணித்தும் விட்டான்.

அவளைப் பார்க்காத, பேசாத‌ பதினான்கு வருடங்களும் இப்போது அஞ்ஞாத வாசமாய்த் தோன்றியது.

அவளுடன் தொடர்பில் இல்லாத நாட்களின் எந்தக் கணத்தில் புல்புல் மீதான விருப்பம் அவனுக்குள் வேர் விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை.

சக மாணவிகள், இசையால் இணைந்தவர்கள், இவனது இசையால் ஈர்க்கப்பட்ட‌ ரசிகைகள், தொழில் நிமித்தமாகச் சந்திப்பவர்கள், அம்மாவும் சித்தியும் அவ்வப்போது‌ கொண்டு வரும் வரன்கள் என சிங்கபிரானைச் சுற்றிப் பெண்களுக்குப் பஞ்சமில்லைதான்.

இதில் காதலிப்பதாகச் சொன்னவர்களும் திருமணம் செய்யக் கேட்டவர்களும் தனிக் கணக்கு. சிங்கபிரானுக்கு இதுவரை யாரிடமும் எந்த விதமான ஈர்ப்போ ஆர்வமோ தோன்றியதில்லை.

“படிக்கலையா, அழகில்லையா, சம்பாதிக்கலையா… அப்புறம் என்னத்துக்குடா சிங்கம் கமிட் பண்ணிக்க‌ பயப்படற?”

“பயமா…அது சரி, நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொல்றேன்… புடிச்சா பண்ணிக்க மாட்டேனாம்மா?”

“என்னவோடா, உங்கப்பா போய் முப்பது வருஷமாச்சு. அப்ப‌ மூணு வயசு குழந்தை நீ. உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை. ரவி‌ அவர் முகத்தையை‌ பார்த்ததில்லை. அவன் கூட செட்டில் ஆயிட்டான்.‌ உன்னை நினைச்சாதான் கவலையா இருக்கு.

அம்மா பாலாமணியின்‌ ஆதங்கம் புரிந்தாலும் ‘ஏதோ ஒரு பொண்ணு, quantity one’ என்ற ரீதியில் திருமண வாழ்க்கைக்குள் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.

சின்மயியைக் கடைசியாகப் பார்த்தபோது அவளுக்குப் பதிமூன்று வயது. அன்று கோல்டிக்காக அவளது க்ளீனிக்கில் அவளைப் பார்க்கும் வரை சிங்கபிரானின் நினைவில் இருந்தது அந்தச் சிறுபெண் சின்மயிதான். எப்போதாவது ‘புல்புல் இப்ப வளர்ந்திருப்பா’ என யோசித்நிருக்கிறான்தான். அது தவிர, ஒருபோதும் அவளது உருவத்தைக் கற்பனை செய்ததில்லை.

ஆனால், இப்போது கண்ட நாள் முதலாய் அவளது உருவம், உயரம், நிறம், மணம் என்பதைத் தாண்டி அவனை இம்சிக்கிறாள். இந்த ஈர்ப்புக்குக் காரணம் அது அவனது புல்புல் என்பது மட்டுமே.

‘குட் காட், இது வரைக்கும் எனக்குக் கல்யாணம் ஆகலை!’

தன் மனமாற்றத்தை உணர்ந்த சிங்கபிரானுக்கு முதலில் த்ரில்லிங்காக இருந்தது. சிறுவயது தோழி, சினேகிதியை விரும்பலாமா என்ற சஞ்சலங்கள் எதுவும் அவனுக்குள் எழவே இல்லை.

‘புல்புல்லை விட என்னைப் புரிந்துகொள்ள யாரால் முடியும்… என மெலிதான கர்வம் கூட.

என்ன, அன்றுபோலவே , தன்னிடம்‌ இயல்பாகப்‌ பேசுபவளிடம் பட்டெனத் தன் மனதைச் சொல்லத் தயங்கினான்.

எங்கே, இதைச் சொல்லி சின்மயியை சங்கடப்படுத்தி, தன்னிடம் மனம்‌ திறப்பவளின் நம்பிக்கையைக்‌ குலைத்து விடக்கூடாதென்ற எண்ணம் அவனுக்கு.

அதே சிங்கபிரான்தான்‌. அதே சின்மயிதான். அவளிடம்‌ எப்போதும் போல்தான் பேசுகிறான். அக்கறையும் புரிந்துணர்வும் கூட அப்படியேதான். நட்புக் கோட்டைத்‌ தாண்டி தான் உணர்ந்த‌ நெருக்கத்தைப் பகிரும் தருணத்திற்குக் காத்திருந்தான்.

புத்துணர்வாய் பரவும்‌ அதிகாலை காஃபியின் மணத்தைப் போல், நேசத்தின் நறுமணம் சிங்கபிரானின்‌ உள்முகமாகப் பாய்ந்து பரவியது.

********************

‘ஹாய் புல்புல், பேசலாமா, தூங்கணுமா?’

‘சொல்லு ச்சிங்கா!’

காத்திருந்ததைப் போல் அவன் அனுப்பிய‌ தகவலுக்கு உடனடி பதில் வர, சின்மயி‌ விழித்திருக்கிறாள் என்றதுமே டெக்ஸ்ட் செய்வதை நிறுத்தி‌விட்டு அழைத்தான்.

“சாப்ட்டியா புல்புல், என்ன டிஃபன்?”

“இட்லி. நீ?”

“இனிமேதான். ட்ரூப்‌போட‌ டின்னர்”

“என்ஜாய் ச்சிங்கா… உன் தொண்டை வலி பரவாயில்லையா, இன்னிக்கு கான்சர்ட் எப்டி போச்சு?”

“தொண்டை இப்ப மச்‌ பெட்டர். கான்சர்ட் வாஸ் குட். ரியல் குட்… வீடியோ அனுப்பறேன். நாளைக்கு நைட் இந்தியா வந்துடுவோம்”

“ம்…”

“வெள்ளிக்கிழமை ஈவினிங் மீட் பண்றோம். கீப் யுவர்செல்ஃப் ஃப்ரீ”

“ச்சிங்கா… க்ளீனிக்…”

“இந்த ஒரு தரம் மட்டும் குட்லி போட்றீ… ப்ளீஸ்”

“ம்…”

“ஸீ யூ புல்புல். குட்நைட்”

“லேண்ட்‌ ஆனதும் மெஸேஜ் பண்ணு”

“டன்”

சிங்கபிரான் கடந்த பத்து நாள்களாக தன் இசைக் குழுவுடன் துபாய், அபுதாபி சென்றிருக்கிறான். அங்கே இரண்டு நிகழ்ச்சிகள்.

அவனை மீண்டும்‌ சந்தித்து, பார்த்துப் பேசத் தொடங்கி நான்கு‌ மாதங்கள் ஓடி விட்டதை சின்மயியால் நம்ப முடியவில்லை.

இதுவரை நான்கு தடவை நேரில் சந்தித்து விட்டனர். முதல் முறையைத் தவிர அடுத்த மூன்று தரமும் சின்மயியின் வழமை பாதிக்காது, ஹாஸ்பிடல் வேலை முடிந்து க்ளீனிக் செல்லும் இடைவெளியில் வந்து அழைத்துச் செல்வான்.

அலுவலகம், ஒத்திகை, பேட்டிகள், இசை நிகழ்ச்சிகள் என‌ அவனது பரபரப்பான அலுவல்களுக்கு இடையிலும் தினமும் ஒரு முறையாவது அழைத்துப் பேசி விடுகிறான். முடியாது போனால், பிஸி அல்லது என்ன‌ செய்கிறான் என்ற தகவல் வந்துவிடும்.

அவனது தொனி
சின்மயி பதில் அளிக்கிறாளா, அவளாகவே அழைக்கிறாளா, அல்லது தன் அழைப்பிற்கு மறுமொழி தருவதோடு சரியா என்று ஆராயாது அத்தனை இயல்பாக, அவள் அவன்‌ அருகில் இருப்பது போல்‌தான் இருக்கும்.

சின்மயிக்கு சில நேரம் சிங்கபிரான் பேசுவது ‘தூக்கம் வரதா புல்புல், இங்கயே தாச்சிக்கறயா… டீச்சர்ட்ட சொல்லிட்டு வந்தயா?’ என தன்னிடம் அவன் ஐந்தாறு‌ வயதில் கேட்டதைப்‌ போலவே தோன்றும்.

காலம் அந்த நாள்களிலேயே‌ நின்றிருந்தால்… நீண்ட பெருமூச்சு எழ, சின்மயி மீண்டும் நினைவுகளை அசைபோடத் தொடங்கினாள்.

யாரும் அறியாமல் ஒரு நாள்‌ முழுவதும் சிங்கபிரானுடன் வெளியில்‌ சென்றதும், அவனுக்கும் சேர்த்து இவள் கொண்டு சென்ற புதினா பிரியாணி, மாதுளம்பழ ரெய்த்தாவை,

’உனக்கு சமைக்கத் தெரியுமா புல்புல், எனக்கு‌ எதுவும் ஆகாதுல்ல… நான் வந்தது வேற யாருக்கும் தெரியாது’ எனக் கேலி செய்தபடி உண்டவன்

“ரியலி‌ டிஃபரன்ட் அன்ட் நைஸ் புல்புல். இதுல நல்ல ரெஸ்ட்ரான்ட்ல வர ஃப்ளேவர் இருக்கே…”

“அது பிரியாணில‌ யூஸ் பண்ற கேவ்ரா‌ வாட்டர்‌ (Kewra water) தர மணம். நிஜமா உனக்குப் புடிச்சிருக்கா‌ ச்சிங்கா?”

“அஃப்கோர்ஸ் புடிச்சிருக்கு.. உங்கிட்ட நான் ஏன் புல்புல் பொய் சொல்லப் போறேன்?”

வேகமாகத் தலையசைத்து மறுத்தவள் “ஐயோ, நான் அப்டி சொல்லல ச்சிங்கா… அம்மா போனதுல இருந்து நான்தான் சமைக்கறேன். பவானி, ஹரி ஒயிஃப் எல்லாம் வந்தாலும். சமைக்கப்‌ போக மாட்டா”

“...”

“உப்பு‌ ஜாஸ்தி, காரம் கம்மின்னு குறை இருந்தா சொல்லுவாளே தவிர, நன்னா இருக்குன்னு யாருமே சொன்னதில்ல…”

இறுகிய தன் முஷ்டியைத்‌ தளர்த்திய சிங்கபிரான், பேச்சை மாற்றினான்.

“புதுசா நிறைய ட்ரை பண்றயோ புல்புல், அம்மா இன்னும்‌ அதே ட்ரெடிஷனல் குக்கிங்தான். நானும் அடிக்கடி ஊர் சுத்தறதால எதுவும்‌ சொல்ல‌ மாட்டேன். உப்புமாவை பார்த்தாதான் கொலைக்‌ காண்டாகும்”

சிரித்தவள்‌ ”ம்… தெரியும். உப்புமா வேண்டாம்னு வைகுண்ட ஏகாதசி‌க்கு விரதம் இருந்தவன்தானே நீ?”

உரத்துச் சிரித்தவன் “அதெல்லாம் கூட உனக்கு நினைவிருக்கா‌ புல்புல்?”

‘உன் சம்பந்தப்பட்ட எதையும் நான் மறந்ததே இல்லை ச்சிங்கா ‘ என்று சொல்ல‌ வந்ததைக் கடைசி நொடியில்‌ முழுங்கிப் புன்னகைத்த சின்மயி,

“ஆக்சுவலி, உப்புமா ஒன்னும் அத்தனை மோசமில்லை ச்சிங்கா. ஆனாலும் ஏனோ பாவம் அதுக்கான ஸ்டேட்டஸ் கிடைக்கலை”

“உப்புமா வக்கீல்” என்று‌ சொல்லிச் சிரித்தான் சிங்கபிரான்.

“புல்புல், நீதான்‌ ஃபேஸ்புக், இன்ஸ்டானு எதுலயும் இல்ல… ஹரியும்‌ பவானியும் கூடவா இல்ல?”

“இருக்காளே… பவானி பாஸ்கர், பரசுராம் அரவிந்தன்னு அவா ரெண்டு பேரும் இல்லாத மீடியாவே கிடையாது”

“OMG! ஹரி பேரு அரவிந்தன்னே எனக்கு‌ ஞாபகம் வரலை. ஹரிஹரன், ஹரிஹரசுதன்னே தேடினேன். பவானி… ஐடியாவே இல்லை.
திருச்சி, ஸ்ரீரங்கத்துல பசங்கள்ட்ட கேட்டா, டீச்சர் பத்தி மட்டும்தான் தெரியும்னுட்டாங்க”

அப்படியே பேச்சு வாக்கில் சிங்கபிரான் கல்யாணி டீச்சர் பற்றிக் கேட்க, அவன்‌ கேள்விக்குக் காத்திருந்ததைப் போல் தான் அவனிடம்‌ மனம் விட்டு அழுததும்… பின், அந்த அத்துவானத்தில் இத்தனை வருடங்களில் இல்லாத அளவு இரண்டரை மணிநேர ஆழ்ந்த நிம்மதியான உறக்கமும்…

மாலையில் பெங்களூர் ட்ராஃபிக் ஜாமில் ஊர்ந்து இரவு உணவுக்கென அவன் அழைத்துச் சென்ற இடம் தாஜ் வெஸ்ட் என்ட்.

சிங்கபிரானின்‌ பிரபலம் கருதி சின்மயி ஓரளவு‌ இதை எதிர்பார்த்தாள்தான். அங்கு அவனிடம் வெளிப்பட்ட இலகுத் தன்மையை சமன் செய்தாள்தான். ஆனாலும் சங்கடமாக இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது அதைவிட‌ அவஸ்தையாக இருந்தது.

வந்து வரவேற்ற சூபர்வைஸரிடம் “ரெஸ்ட் ரூம்?”என்றவன், அவன் நகர்ந்ததும் “போ புல்புல்”

நாள் முழுதும்‌ குளிரிலும் மழையிலும் ஏசி காரிலும் இருந்ததில் அவளே கேட்டிருப்பாள்தான். ஆனால், அதை அவன் யோசித்துக் கேட்டுச்‌ சொன்ன விதம்!

சற்றே கூச்சத்துடன் தலையசைத்தவளிடம் “இதுல என்ன, மொதல்ல போய்ட்டு வா?”

“???”

கேள்வியாகப் பார்த்தவளிடம் “நானா, நீ‌ தூங்கும்போது அங்கயே…”

“கடவுளே!” என்றவள் அவன் மேலும் பேசும் முன் ஓடிவிட்டாள்.

அழைத்துச் சென்ற பெண் காட்டிய இருவருக்கான மேஜையில் ‘ரிஸர்வ்ட்’ பலகை இருந்தது.

‘ஏற்கனவே டேபிள் புக் பண்ணி இருக்கான்’

சின்மயி‌ அமர்ந்த பின் எதிரே அமர்ந்த சிங்கபிரான், அவளைப் புரிந்தவனாக “ரிலாக்ஸ் புல்புல். மத்த இடம்னா யாராவது ஃபோட்டோ, ஆட்டோகிராஃப்னு மாட்டிப்போம். வீட்டுக்கே போய் இருக்கலாம். ஆனா, நான் இன்னிக்கு யார் கூடவும் பேசற மூட்ல இல்ல. யார் கிட்டயும் உன்னைக் காட்ட‌வும் தோணலை. ஜஸ்ட் நீயும் நானும் போறும்னு தோணித்து. அதான்…”

“ ஏன் ச்சிங்கா, நீ சொன்னா சரிதான்”

“குட் கேர்ள். நீ மாறவே இல்ல புல்புல். என்ன, டாக்டர் ஆனதுல பேச்சுதான் குறைஞ்சு‌போச்சு”

“...”

வரவிருக்கும் துபாய் நிகழ்ச்சி, புது வருடத்திற்கு ரிலீஸ் செய்யப் போகும் ஆல்பம், அவளது படிப்பு, வேலை, என பேசியபடியே சூப், பனீர் டிக்கா, பாஸ்தாவை உண்டனர்.

“இன்னும் பூஸ்ட்தான் குடிக்கறியா புல்புல்?” என்ற சிங்கபிரான் ஒரு ஹாட் சாக்லேட் பாட் ஆர்டர் செய்ய, சின்மயிக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

அவளது அபார்ட்மென்ட்டிற்கு சிறிது முன்பே இறக்கி விடச் சொன்னதை அவன் ரசிக்கவில்லை.

“இத்தனைக்கு அப்புறமும் நீ ஏன் புல்புல் பயப்படற?”

“ம்ப்ச்… அப்பாவை உனக்குத் தெரியாதா, ச்சிங்கா? எதையாவது சொல்லி நோகடிச்சுடுவார்”

“ஐ நோ ஹிம் வெரி வெல். அதனாலதான் சொல்றேன், இல்லாத‌ ஆட்களுக்கும் சேர்த்து உன் மேல பாய்வார்னு எனக்குத் தெரியாதா?”

“...”

“கேட்க ஆள் இருந்தாதானே சொல்லத் தோணும். நீ அடங்கிப் போறதாலதான் உங்கப்பா உன்னை மேக்கரிக்கறார். திரும்பியே பார்க்காத உங்க அக்காவையும் அண்ணாவையும் ஏதாவது சொல்றாரா?”

“...”

“புடிக்காததை புடிக்கலைன்னு சொல்லு. வேண்டாம்னா நோ சொல்லு. அமைதியா இருந்து உன்னை நீயே அழுத்திக்காத புல்புல்”

“...”

தொண்டையை செருமிக் கொண்டவன் “பார்க்க அம்மா மாதிரி இருக்கறதால, டீச்சரைப் போலவே ரிஸீவிங் என்ட்ல நின்னு வாங்கிக் கட்டிக்க வேண்டிய அவசியமில்லை, புரியறதா?”

“...”

“மோர்ஓவர், நீ உங்க அம்மாக்கு பர்த்தி இல்ல”

“ச்சிங்கா!”

காரை ஓரம் கட்டி நிறுத்தியவன், சில நிமிட‌ அமைதிக்குப் பின்

“ஸாரி‌ புல்புல்… ரொம்ப பேசிட்டேனோ?”

“நீ வேற ஏன்டா?”

“சரி, இறங்கு. இப்ப ஓகே, இனிமே இப்டி ராத்திரில நட்ட நடு ரோட்ல இறக்கி விடமாட்டேன். நெக்ஸ்ட் டைம் உங்கப்பா‌ கேட்டா தைரியமா சிங்கபிரானை பார்க்கப் போனேன்னே சொல்ற, காட் இட்?”

“...”

இறங்கப் போனவளின் முழங்கையைப் பிடித்து அழுத்திய‌வன் “புல்புல்…”

“என்ன..?”

“நத்திங். பார்த்து போ”

சற்று நேரம் சென்று அழைத்து “நீ ஓகேவா‌ புல்புல், எதுவும் பிரச்சனை இல்லையே?” என விசாரித்தான்.

அன்றைய நாளின் ஒவ்வொரு நொடியும்‌, சிங்கபிரானின் ஒவ்வொரு வார்த்தையும்‌ அசைவும் சிரிப்பும்…

“இதென்ன ஹேர்‌ ஸ்டைல் ச்சிங்கா?”

“உனக்குத் தெரியாதா, ராக் பேண்ட் ஆரம்பிக்கறதுக்கு‌ முதல்‌ தகுதியே தாடியும்‌ ஜடாமுடியும்தான். மொட்டைன்னா‌ இன்னும் பெட்டர். நம்ம பேண்டுல ஆல் ஸ்டைல் அவெய்லபிள் மா. பார்க்கதானே போற”

சிரித்தவள் “பாலா மாமி ஒன்னும் சொல்லலையா?”

“அம்மாதானே, நிறைய சொல்லுவா. உன்னைப்‌ பார்த்தா கம்பிளைன்ட் பண்ண வாய்ப்பு ஜாஸ்தி”

அவனோடு பேசும் பொழுதுகளில் அவளது வழக்கம்போல் படபடவெனப் பேசி விடுவதும், பிறகு

‘என் மனசுல இருக்கறதை சொல்ல ஆள் கிடைச்சதுல ச்சிங்கா கிட்ட ரொம்ப ஃப்ரீயா பேசறேனோ?’

‘இத்தனை பொண்களோட பழகறவன் என்னையும் எடை போடுவானோ?’

எல்லாவற்றையும் மீறி மனதை நெருடுவதும்‌ நெகிழ்த்துவதும் அவன் கழுத்தில் தொங்கும் அந்தக் கூழாங்கல்தான். ஏனோ பாறாங்கல்லாய் கனக்கிறது.

சிறு‌வயதுப் பொக்கிஷம், பசுமையான நினைவுகளின், தூய்மையான நட்பின்‌ அடையாளம்… அதுவரை சரிதான்.‌ ஆனால், அது இருக்கும் இடம்?

‘அவனுக்கு அத்தனை முக்கியமா நான்?’

‘ஏன், அவன் உனக்கு முக்கியமில்லையா?’

‘ச்சே, தொட்டுப் பார்க்காம‌ விட்டுட்டேன்’

சின்மயிக்கு கை குறுகுறுக்க மனம்‌ பரபரத்தது.

*********************

வெள்ளிக்கிழமை‌ விடுமுறை‌ கேட்ட சின்மயிக்கு விண்ணப்பத்தை‌ பூர்த்தி‌ செய்கையில்‌ நினைவு‌‌ வந்துவிட்டது. மார்ச் பதினேழு சிங்கபிரானுக்குப் பிறந்தநாள். அதான் வெள்ளிக்கிழமை பார்க்கணும்னு அத்தனை பிடிவாதமா‌ சொன்னானா?

அன்று காலை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட(!) ஒரு சி செக்ஷன் இருந்தது. இரட்டை வேறு. தாயின் வயது நாற்பது. IVF மூலம் கருவான ஹை ரிஸ்க் ப்ரெக்னன்ஸி.

கைனகாலஜிஸ்ட் “சர்ஜரி சமயத்துல நீ இருந்தே ஆகணும். அப்புறம் எங்க‌ வேணா போ” என்றிருந்தார்.

வெள்ளியன்று நேரம்‌ இருக்காது‌ என்பதால், முந்தைய நாள் மதியமே சென்று ஒரு டெனிம் குர்த்தாவும் வெள்ளியில் Treble Clef (𝄞) மியூஸிக் குறியீட்டோடு கூடிய கீ செயின் ஒன்றும் பரிசுத்தாளில் சுற்றி வாங்கி வந்தாள்.

வீட்டுக்கு எடுத்து வருகையில் முதலில் யோசித்தவள், அளவில் பெரிதாக இருக்கவும், எத்தனையைத்தான் மறைப்பது, ஒளிப்பது… எதற்காக மறைக்க வேண்டும்… தெரிந்தால் தெரியட்டும், என்று விட்டுவிட்டாள்.

பரசுராமின் அகந்தை சின்மயியிடம் எதையும் நேரடியாகக் கேட்க விடாது‌ தடுக்க, தானே எடுத்து என்னவென்று பார்க்கும்‌ சுவாதீனமும் உரிமையும் எப்போதோ தொலைந்திருக்க
யாருக்கு, என்ன, ஏன் வாங்கி வந்திருக்கிறாள் என்ற கேள்வி அவர் மண்டையைக் குடைந்தது.

அவளாக சொல்லப் போவதில்லை என்பது தெளிவு. இரவு முழுதும் உருட்டியவர் காலை‌ காஃபியின்போதே தொடங்கி‌ விட்டார்.


சின்மயி கிளம்பி கையில் கிஃப்ட்டுடன் வெளிப்பட்டதுமே,

“போன வாரம் ஹரி‌ பொண்ணுக்கு பொம்மை ரெண்டாயிரம் ரூபாய்…

‘ஓ, பார்பி விலையெல்லாம் விசாரிச்சிருக்கார் போலயே’

‘அதாவது குழந்தை.. போனாப் போறது. இது யாருக்கு? பணம் என்ன‌ மரத்துலயா காய்க்கறது? சம்பாதிச்சா… இஷ்டத்துக்கு செலவு பண்றதா?”

தன் காலை நேர அமைதியை இழக்க விரும்பாத சின்மயி பதில் பேசாது “இன்னிக்கு வர லேட் ஆகும்” என்றபடி வெளியேற, பரசுராம் ஆத்திரமானார்.

பொறுப்புகளைப் புறக்கணித்துப் பொய்த்துப் போன உறவுக்கு கணக்குக் கேட்கும் உரிமை ஏது?

இது புரிந்தால் அது பரசுராம் அல்லவே?

*********************

சிங்கபிரானின் வீடு பரபரப்பாக இருந்தது. பாலாமணிக்கு வழக்கமாக சமையலில் உதவுபவருடன் இன்னொரு பெண்ணும் இன்று வந்திருந்தார். ஏலம், நெய், முந்திரி , பால் என அக்காரவடிசலின் பிரத்யேக வாசனையும் பிஸி பேளா, உருளைக் கிழங்கு மசால், அவியல், கோஸ் பொரியல், ஆம வடை, சப்பாத்தி என தென்னிந்திய சமையலுக்கான தயாரிப்பின் டிபிகல் மணமும் வாசல் வரை விரவி இருந்தது.

வீடு சுத்தம் செய்யப்பட்டு, பெரிய, பெரிய பருத்திக் கம்பளங்களை விரித்திருந்தனர். சோஃபாக்களைத் தவிர தரையில்‌ அமரும்படி நான்கு மெத்தை மற்றும் குஷன்‌கள் அவற்றுக்குரிய உறைகளுடன் போட்டிருந்தனர்.

கேசவ் மிருதங்கம், கிடார், சிறிய அளவிலான சின்தசைஸர் கீ போர்ட், மைங்ரோஃபோன் எல்லாம் தயாராக வைத்தான்.

காஃபி‌க்கு டிகாக்ஷன் இறக்கி, தர்பூஸ் ஜூஸ், மினி இட்லி, வெங்காய சட்னி, பக்கோடா, ஸ்வீட் கார்ன் சுண்டல், பாப்கார்ன் என விருந்தினர்‌ வந்ததும் தருவதற்கான ஸ்னாக்ஸ் வகையறாக்களை சரி பார்த்த பாலாமணி, ஹாலுக்கு வர, தன்னைச் சுற்றி நடப்பதை உணராது ஊஞ்சலில் படுத்திருந்த மகனை இரண்டு மூன்று முறை அழைத்தும் பயனில்லாது போக, அருகில் வந்து நறுக்கென கையில் கிள்ளினார்.

வலியில் முகம் சுளித்தபடி‌ திடுக்கிட்டு எழுந்தவன்

“அவுச்… இந்த வயசுல போய்… ஏம்மா?”

“எங்கடா‌ யோசனை, கேசவ் பாவம், அவனே எல்லா வேலையும்‌ செய்யறான். நீ என்னடான்னா மல்லாக்கப் படுத்து மனக்கோட்டை கட்டற…”

கேசவ் “சிறப்பா‌ சொல்லிட்ட‌ பெரியம்மா…‌ஆமா, நீ‌ ஏன் சீரியலுக்கு டயலாக் எழுதக் கூடாது?”

சிங்கபிரான்‌ தொண்டையை செருமிக் கொண்டு‌ “...ம்மா…”

“இன்னிக்கு… நான் சொன்னேனே மா, சின்மயி வரப்போறா”

“ஊருக்குத் திரும்பி வந்ததுல இருந்து இதைத்தானே சொல்ற…”

“...”

மகனைக் கூர்ந்த‌ பாலாமணி “சின்மயி வரதுக்கென்ன, தங்கமான‌ குழந்தை. எனக்கு மட்டும் அவளைப் பார்க்க‌ கசக்குமான்ன?”

“...”

“என்ன, அந்த மனுஷனை நினைச்சாதான் பத்திண்டு வரது. மொதல்ல மனுஷனா அவன்?”

“...”

“எங்க, திரும்ப நீயும் காயப்பட்டு அவளுக்கும் பிரச்சனை ஆகிடுமோன்னு கவலையாவும் இருக்கு”

சிங்கபிரான் அசையாத பார்வையுடன் தோட்டத்தை வெறிக்க, அவன் தோளில் தட்டிய பாலாமணி,

“நீ சொன்ன கூடவே சுத்தற அந்த செவ்வாழை சின்மயிதானா?” என்று சிரித்தார்.

சிங்கபிரான் அவர் சுட்டிய இடம் புரியாது முழிக்க, கேசவ் “ஆத்தாடீ… பிக் மம்மி, நீ வேற லெவல் போ”

“போடா, எப்போதும் என்னையே கேலி பண்ணிண்டு… இவன் சின்மயியோட போறது, வரதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

கடுப்பான சிங்கபிரான் “அதென்னமா சுத்தறது, போறது, வரதுன்னு… நாங்க என்ன அடலஸன்ட் வயசுலயா இருக்கோம்?”

“...”

“நான்தான் வெளில போனா எவனாவது பார்த்து வைரல் பண்ணி உட்ருவானோன்னு பயத்தோடயே‌ போக வேண்டி இருக்குன்னா… இந்த‌ புல்புல்… ஒரு டாக்டர் மாதிரி இல்லாம இன்னுமே அவ அப்பாக்கு பயப்படறா…”

“அவ நல்ல பொண்ணு… அதான்…”

“அம்மாஆஆஆ!”

பாலாமணியும் கேசவும் ஹை ஃபைவ் கொடுத்துச் சிரித்தனர்.

“உன்னைக் கெடுக்கறதே இவன்தாம்மா” - சிங்கபிரான்.

“டென்ஷன் ஆகாதடா‌ சிங்கம். சின்மயியை நான் பார்த்துக்கறேன்”

“அம்மா…”

“ம்”

“...ம்மா…”

“என்னடா?”

“அம்மா, தயவு செஞ்சு அவ கிட்ட வேற மாதிரி எதுவும்‌ சொல்லி, கேட்டு வைக்காத. நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். ஒன்லி ஃப்ரெண்ட்ஸ். அவ்ளோதான்… புரியறதா?”

“அதுக்காடா‌ இத்தனை பீடிகை, டிஸ்கி எல்லாம்?”

“ம்ப்ச்… போம்மா”

********************

“வேலை முடிஞ்சுதா புல்புல், பிக் அப்‌ பண்ண‌ வரவா?”

“வேணாம் ச்சிங்கா, எங்க வரணும்னு‌ சொல்லு, நானே வந்துடறேன்”

“ம்…‌ ஆர் யூ ஷ்யூ?”

அவன் அனுப்பிய முகவரி ஜெயநகரிலேயே இருக்க, ஏரியாவை வைத்தே அது அவனது வீடு என்று புரிந்து கொண்டாள். சின்மயிக்கு பாலாமணி மாமியை சந்திப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. கிளறப்படும் நினைவுகள்‌தான் அவளது பயமே.

ஒரு பெருமூச்சுடன் வழியில் பாலாமணிக்கு விருப்பமான ஒரு பெங்கால் காட்டன் புடவையை வாங்கிக் கொண்டு அவனது வீட்டை அடைந்தாள்.

******************

சிங்கபிரானை அத்தனை எச்சரித்த பாலாமணி சின்மயியைக் கண்ட நொடியி்ல் அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு அப்டி என்னடீ உங்கம்மாக்கு?” என்றவர் உடனேயே,

“கல்யாணியும் பாவம், எத்தனை சொல்லுதான் பொறுப்போ… அவ அப்படிப் பண்ணி இருக்கலாம்… இப்படி செஞ்சிருக்கலாம்னு பேசறதுக்கு என்ன ஆயிரம் சொல்லலாம்…”

“...”

“சரி விடு சின்மயி, அழாத. இப்பயாவது பார்க்க முடிஞ்சுதே… எது வேணுமோ என்னைக் கேளு. என்னால முடிஞ்சதை கட்டாயம் செய்யறேன்”

சின்மயி தலையசைத்தாள். சிங்கபிரான் சிரிப்புடனும் கேசவ்‌ திறந்த வாயுடனும் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

“நீ டாக்டராமேடீ… இந்த மூட்டு வலிக்கு நல்லதா ஒரு மருந்து சொல்லேன்… தடவாத ஆயின்ட்மென்ட் கிடையாது”

சிங்கபிரான் “அவ பீடியாட்ரீஷியன் மா”

பாலாமணி “அதனால என்னடா, எம்பிபிஎஸ் படிச்சிருக்காதானே?” எனவும்,

வாய்விட்டுச் சிரித்த சின்மயி
“நான்‌ மருந்தை வாட்ஸ்ஆப் பண்றேன் மாமி” என்றாள்.

“புடவை சூப்பர். உனக்குப் புடவை கட்டிக்கத் தெரியுமோ?”

கேட்ட பாலாமணியை விட சின்மயியின் பதிலுக்கு ஆர்வமுடன் காத்திருந்தது… சாக்ஷாத் சிங்கபிரானே!

பாலாமணி “போய் ஃப்ரெஷ் பண்ணிக்கோ சின்மயி ” என, எழுந்தவளை சிங்கபிரான் தரதரவென மாடிக்கு இழுத்துச் சென்றான்‌.
அவர்களைக் கண்டு கொள்ளாது இயல்பாக உள்ளே‌ சென்ற‌ பாலாமணியை கேசவ் மரியாதை கலந்த வியப்புடன் பார்த்தான்.

அவரது‌ நம்பிக்கையும் அவர்களின் நட்பும் காண‌‌ அவனுக்குச் சிறிது‌ பொறாமையாக இருந்தது.

சிவப்பு நிறத்தில்‌ கண்ணாடி வேலைப்பாடு செய்யப்பட்ட குர்த்தியும் வெண்ணிற கட் ஒர்க் சல்வாரும் அணிந்து, தலையை அவிழ்த்துப் பின்னிக் கொண்டு சின்மயி வெளியே‌ வந்தாள்.

பாலாமணி அவசரமாகப் பறித்து வரச்செய்து தொடுத்த செண்பகப் பூவைத் தந்தார். நமஸ்கரித்தாள்.

ஐந்து மணி போல் நாதம் மியூஸிகாவின் குழுவினர்‌ அனைவரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

பெண்கள்‌ எல்லோரும் தலையை விரித்துக்கொண்டு, விதவிதமான ஹேர்கட்டுடன் நாகரிகமாக இருக்க, ஆண்கள் அனைவரும் ஸ்டைல் என்ற பெயரில் மொட்டையும் தாடியும் பரட்டையுமாக‌ இருந்தனர். ஒருவன்… ட்ரம்மராம்… இரும்பிடர்தலையார் போல் இருந்தான்.

பாலாமணி “பார்த்தியா, எல்லாம் பொன்னியின் செல்வன்ல‌ வர‌ காளாமுகர்கள் மாதிரி…” எனவும் சின்மயி சிரிப்பை‌ அடக்க சிரமப்பட்டாள்.

ஆனால், அவர்கள்‌ எல்லோரும் தன்மையாகப் பேசினர். முதலில் வந்த விக்ரம் ஜோயல் நேரே வந்து “சின்மயி? நான் விக்ரம்” எனவும் வியந்தாள்.

அவள் வாங்கி வந்த‌ டெனிம் குர்த்தாவை‌ தயங்காது அப்போதே அணிந்து வந்த‌ சிங்கபிரான் சின்மயிக்கு‌ அவர்களை‌ அறிமுகம் செய்து‌ வைத்தான்.

பின் மிக மெலிதாக அவள்‌ தோளில் கை வைத்து “திஸ் ஈஸ் சின்மயி அண்ட்… ஃபார் மீ புல்புல்” என

“ஓ….” வென கோரஸாக சப்தம் எழுப்பினர். பிறகு‌ பேச்சு பாட்டாக, இசையாக மாறியது.

சிங்கபிரான்

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா…


என அ(இ)சைத்தவன், இடையிடை‌ ராக் இசைக்குப் பின்

மனவியாலகிஞ்ச ராடதே மர்மமெல்ல தெல்பேதனை மனஸா‌… என தியாகராஜருக்குத் தாவி, மீண்டும்

மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே…. என நிறைவு செய்ய…


இரு‌வேறு சங்கீதத்தை அற்புதமாக‌ இணைத்த நளினகாந்தி ராகம் மனதை வருடியது.

பக்க வாத்தியங்கள், குழுவிசையுடன் கேட்பது சின்மயிக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

கிருஷ்ணன் மேனன் “சின்மயி பாடுமோ?”

சின்மயி மறுக்கும் முன்பே, பாலாமணி‌ “கல்யாணி பொண்ணு பாடாமலா… பாடு‌ சின்மயி”

“ரொம்ப நாளாச்சு மாமி”

அவள் “அம்மா போனதுக்கு அப்புறம் நான் பாடறதை விடு, பாட்டு‌ கேட்கறது கூட இல்ல‌ ச்சிங்கா” என்றிருந்தவள் தவிப்பாக‌ சிங்கபிரானைப் பார்க்க…

பாலாமணி “பாடு சின்மயி… டென்ஷன் குறையும்” என்றார்.

ஒரு வாய் தண்ணீர் குடித்து தொண்டையை செருமிய சின்மயியிடம் கேசவ் சிறிய‌ மைக்ரோஃபோனை நீட்ட, தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள்.‌ பின்‌ கண்களை மூடியபடி பாடத் தொடங்கினாள். மிருதங்க சத்தம் கேட்டது.

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவி…

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகனைப் பாடிய‌ திருப்புகழ். பல்லை உடைக்கும் மிகக் கடினமான சொற்பதங்கள் கொண்டது. முதலில் வேகமாக, பின் அதிவேகமாகப் பாடினாள்.

“பெருமாஆஆஆ….‌ளே….” என்று முடித்துக் கண் திறந்தவளின் கண்கள் கசிந்திருக்க, மிருதங்கத்தில் தாளத்தை முடித்த சிங்கபிரான்‌ கண்களை‌ மூடித் திறந்தான்.
.
 
  • Like
Reactions: vijaya mahesh