• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 7

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
63
252
83
Chennai
நாணங்களும் எதற்காக? 7


“கேட்ச்”

வரும்போது தானே காரைச் செலுத்திய சிங்கபிரான் தூக்கிப் போட்ட கார் சாவியைப் பிடித்த கேசவ், மெல்லிய சிரிப்புடன் எல்லாப் பக்கமும் தலையை ஆட்ட, சிங்கபிரான் முறைத்தான்.

சின்மயி மனம் கலங்கி‌ அழுததைப் பார்த்தவனுக்கு,‌‌ என்னதான் அம்மா‌‌ பின்னால் இருந்தாலும் அவளைத் தனியே விடுவது போல் தோன்றவும் கேசவை டிரைவராக்கி‌விட்டான்.

“கேசவோட முன்னால உட்காருங்கோ‌ சித்தப்பா” என‌ அவரை அனுப்பியவன்,

“லாஸ்ட் சீட்டுக்குப் போ புல்புல்”

அவனைத் திரும்பிப் பார்த்த நாகமணியிடம் “என்ன?” என்றபடி தன்னோடே ஏறிப் பின்னே வந்து, அருகில் அமர்ந்தவனைப் பார்த்த‌ சின்மயி‌ எதுவும் பேசவில்லை. அவள் அழுததற்கு‌ இதைக் கூடச் செய்யா விட்டால் அது அவளது ச்சிங்கா அல்லவே?

கார் கிளம்பவும் “என்னாச்சு?” என்று கிசுகிசுத்த தங்கையிடம் பிறகு சொல்வதாகச் சொன்ன பாலாமணி, தூங்குவதான பாவனையில் கடந்த காலத்துக்குப் பயணித்தார்.

********************

பாலாமணியின் சொந்தத் தாய் மாமாதான் ராமசேது. திருவெறும்பூர் BHEL ல் அக்கவுண்டன்ட்டாக இருந்தான். பாட்டியின் உடல்நிலை, குருபலன், பையன் தனியா கஷ்டப் படறான் (அப்போதெல்லாம் BHEL கேன்டீன் சாப்பாடு ஓரளவு நன்றாகவே இருக்கும்!) போன்ற பல காரணங்களை அடுக்கி, பாலாமணி பிகாம் மூன்றாம் வருடம் முடிக்கும் முன்னரே அந்தத் தை மாதத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

நல்ல உத்தியோகம், கட்டுப்பாடான அலுவலக‌ நேரம், குவார்டர்ஸ், இளமை என இனிமையாகத் தொடங்கிய வாழ்க்கை, மூன்றாம் மாதமே பாலாமணி‌ கருத்தரிக்கவும் மேலும் இனித்தது.

பாலாமணிக்கு எட்டு மாதம் நடக்கையில், மற்றொரு மகிழ்வான நிகழ்வாக அவளுக்குத் தேசிய வங்கி‌ ஒன்றில் வேலை கிடைத்தது. தன் நிறைமாத‌ கர்ப்பத்தைக் காரணம் காட்டி வேலையில் சேர அவகாசம்‌ வாங்கினாள். சிங்கபிரானை பிரசவித்து ஐந்து மாதங்களுக்குப் பின் திருவெறும்பூர் கிளையிலேயே போஸ்டிங் கிடைத்தது.

பேரனை, மகள் வயிற்றுக் கொள்ளுப்பேரனைப் பார்த்த நிறைவோடு பாட்டி காடேகினார்.

வீட்டையும் குழந்தை சிங்கபிரானையும் பாலாமணியின் அம்மா பராமரிக்க, பாலாமணிக்கு தாய்மாமா என்ற சலுகையும் உரிமையும்… ராமசேதுவிற்கு மனைவி மீதான ஆசை … சீண்டலும் கேலியும், கடமையும் காதலுமாகச் சீராகச்‌சென்றது வாழ்க்கை.

யாரோ திட்டமிட்டது போல் சிங்கபிரானுக்கு முன்று வயது நெருங்குகையில் பாலாமணி‌ மீண்டும் கருத்தரித்தாள்.
முதல் முறை போல்‌ அல்லாது மசக்கை படுத்தியது. ஒரு நாள் அலுவலகம்‌ செல்வதும் இரண்டு நாள் டேக்கா கொடுப்பதுமாக நாள்கள் சென்றன.

ராமசேது தஞ்சையில் நடந்த‌ ஒரு சக ஊழியனின் திருமணத்திற்கு‌ அவனது‌ அபிமான பஜாஜ்‌ ஸ்கூட்டரில்‌ சென்றான். எப்போதும் விளையாட்டாக, பெருமையாக அதன் சீட்டைத் தட்டித் தடவி முத்தம் கொடுத்து ‘என் நீலவேணி’ (தேசிங்கு ராஜாவின் குதிரை பெயர்) என்று‌ சொல்லிச் சிரிப்புடன் பாலாமணியை‌ வெறுப்பேற்றும் ராமசேது திரும்பி வரும்‌ வழியில் வல்லம் அருகே வேகமாக வந்த‌ ஒரு வாழைத்தார் லோடு ஏற்றிய லாரி மோதியதில் அவ்விடத்திலேயே அவன் உயிர் பிரிந்தது.

கையில் மூன்று வயது சிங்கபிரான், வயிற்றில்‌ மூன்று‌ மாத ரவிசோமனுடன் பிறர் கண்படும் நிலையில்‌ இருந்த பாலாமணி புண்பட்டு‌ நின்றாள்.‌

மூன்று மாதங்களில் குவார்ட்டர்ஸை காலி செய்து வங்கி அருகிலேயே வாடகை வீட்டில் குடியேறினர். ரவி‌ பிறந்தான்.

அடுத்த வருடமே படித்து முடித்த பாலாமணியின் தங்கை நாகமணிக்குத் திருமண‌ ஏற்பாடு நடக்கவே, பாலாமணியின் பெற்றோர் அவர்கள்‌ ஊரான மன்னார்குடிக்கே‌‌ சென்று விட்டனர்.

சிறுவயதில் இரண்டு குழந்தைகளுடன் தனியே இருந்த‌ பாலாமணி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, நல்ல பள்ளி, சிங்கபிரானுக்கு‌ பாட்டுக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் என பலதும் சேர, வங்கியின் திருச்சி கிளைக்கு மாறுதல் கோரினாள்.‌

சிங்கபிரானுக்குப் பத்து வயதில் ஸ்ரீரங்கம் கிளையில் தலைமை கணக்கராக பிரமோஷனில் மாற்றல் கிடைத்தது. திருச்சியில் இருந்த‌ சிறந்த பள்ளியில் பிள்ளைகள் இருவருக்கும் இடமும்‌ கிடைத்தது.

பாலாமணியின் தந்தையின் நண்பர் ஒருவர் மூலம் ஸ்ரீரங்கத்தில் இருந்த பரசுராமின்‌ வீடு பற்றித் தெரிய வர, இவர்களுக்கும் பிடித்திருக்கவே‌ குடியேறினர்.

வீட்டிலேயே பாட்டு டீச்சர், அதுவும் கச்சேரி எல்லாம் செய்யும் கல்யாணி கிடைத்ததில் சிங்கபிரானுக்கு ‘எங்க பாட்டு டீச்சர்’ என ஏகப்பட்ட பெருமை.

குருகுலத்தில் போல் கல்யாணிக்குப் புடவை தோய்த்துக் கால் பிடித்து விடாத குறைதான். அவனது வகுப்பு நேரம் மட்டுமின்றி, யார் வந்து பாடும்போதும், கச்சேரிக்கென கல்யாணி சாதகம் செய்யும்போதும் கவனித்த‌ சிங்கபிரானின் ஆர்வமும் கேள்வி ஞானமும் கூடவே வளர்ந்தது.

கல்யாணி, சங்கீதத்தில் தன் மக்கள் பவானியும் ஹரியும் காட்டாத‌ ஆர்வத்தைக் காட்டிய‌ சிங்கபிரானுக்கு தனக்குத்‌ தெரிந்த வித்தையை பிரத்யேகமாகக் கற்றுத் தந்தாள். குரல் பிரியாத சிறுவன் என்பதால் மேடை பழகட்டும் எனத் தன்னோடு கச்சேரிகளுக்குப் பின்பாட்டாக அழைத்துச் சென்றாள்.

ரங்கநாதருக்கும் காட்டழகிய சிங்கருக்கும் நடுவே வீடு. இரண்டெட்டு நடந்தால் கோவில், கடை, காவேரி‌ என எல்லாமே கைக்கெட்டும் தொலைவில். பள்ளியிலிருந்து வந்த பின்னும், தொடர் விடுமுறைகளின்போதும் பாலாமணி வேலைக்குச் சென்றாலும் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சூழல். வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு‌ இடமும் சக வயதில் பிள்ளைகளும் இருக்க, பாலாமணிக்கும் அவரது பெற்றோர்களுக்கும் பரம திருப்தி.

சின்மயியின் தாத்தா, பாட்டியில் தொடங்கி, சக குடித்தனக்காரர்கள் வரை சகஜமான பேச்சும், அவசரத்திற்கு உதவிகளும்‌ அவ்வப்போது சின்னச் சின்ன சலசலப்பும் உரசல்களுமாய் இருந்த அந்த வீட்டின் ஒரே திருஷ்டி பரசுராம்தான்.

வேலை எதுவுமின்றி அநேகப் பொழுதுகள் வீட்டையே சுற்றி வருபவரின் மனதில், தான் பெரிய தார்மீக மற்றும் கலாச்சாரக் காவலர் என்ற‌ எண்ணம்.

சொந்த வீடு. சாப்பாட்டுக் கவலை பெற்றோரிடம். குழந்தைகளின் படிப்பு, இதர மேல் செலவுகள் சகோதரர்கள் மற்றும் மனைவியிடம். பிறகென்ன, ஊரை, குறிப்பாகப் பெண்களைக் குறை சொல்லும் கடமையைச் செவ்வனே செய்தார்.

தன் வீட்டுப் பெண்களையே மதிக்காதவர் அடுத்த வீட்டுப் பெண்களை மட்டும் சமமாகவா பார்ப்பார்?

ஒரு பெண் மேலதிகாரியை ஜீரணிக்க முடியாது வங்கி வேலையை விட்ட பரசுராமிற்கு, முப்பத்தியோரு வயதில் கணவனை இழந்து, இரண்டு பிள்ளைகளுடன், அதே போன்ற தேசிய வங்கி ஒன்றில்‌ ஆஃபீஸராக, தன்னம்பிக்கையோடு தனித்து இயங்கிய பாலாமணியைப் பிடிக்காததில்‌ வியப்பொன்றும் இல்லை.

அகந்தை, ஆணவம் தற்பெருமை, எல்லாம் தனக்குத் தெரிந்ததான பாவனையில் ‘நான் உன்னை விட உயர்ந்தவன்’ என்ற உயர்வு மனப்பான்மையைக் காட்டும் முகமூடி மனிதர்களிடம் உண்மையில் வெளிப்படுவதென்னவோ,
அவர்களின்‌ ஆழ்மனதின் போதாமையும் தாழ்வு மனப்பான்மையும்‌தான்.

பரசுராமிடம் இதன் சதவீதம் அதிகமாக இருக்கலாம். ஆனால் வெவ்வேறு அளவைகளில் இங்கு அவரைப் போல் எத்தனையோ பேர். கல்வியும் கூர்மையான புத்தியும் தெளிவான சிந்தனையும் மதிப்பான வேலையும்
சுய சம்பாத்தியமும் சரியான திட்டமிடலும் தன்னம்பிக்கை தந்த நிமிர்வும் கொண்ட பெண்களை ஏதாவதொரு வகையில் மட்டம் தட்டிப் பேசவும் அவதூறு சொல்லவும் காயப் படுத்தவும் இவர்கள் தயங்குவதே இல்லை.

‘புருஷன் ஆக்ஸிடென்ட்ல போனதுல கிடைச்ச பணம்… அவன் ஆஃபீஸ்ல வந்த பணம்… பேங்குல வேல.‌.. ஒருத்தருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல. வாழ்வுதான்…”

“செத்தாலுஞ் செத்தான், வீடு சுத்தமாச்சுன்ற கதையா தன் இஷ்டத்துக்கு கொஞ்சம் ஓவராதான் ஆடறா”

“பளிச் பளிச்னு புடவை கட்டிக்கிட்டு டக் டக்னு குதிரையாட்டமா போறா பாரு.‌ மனசுக்குள்ள பெரிய்ய இந்திரா காந்தின்னு நினைப்பு”

இப்படியெல்லாம் பேசியது யாரும் பகையோ பிற மனிதரோ அல்ல. பாலாமணியின் உறவுகளும் , ராமசேதுவின் இறப்புக்கு வந்து தோள் கொடுத்த அலுவலகத்தினரில் சிலரும் உதிர்த்த பொன்மொழிகள்தான் இவை. உதவி‌ என்று‌ போய்‌ நிற்காதபோதே எத்தனை பேச்சு!

தனக்கு வராத‌ பணம், ஒரு‌ விண்ணப்பம்‌‌ எழுதக் கூடத் தன்னிடம்‌ வந்து‌ நிற்காத அறிவு, தன்‌முடிவுகளைத் தானே எடுக்கும் திடம்… அதற்குத் துணை நின்று‌ வழிநடத்திய பெற்றோர்…

‘ஒரு‌ பெண்ணாக இருந்துகொண்டு நீ எப்படி‌ இதை இத்தனை சுலபமாக, தெளிவாகக் கடக்கலாம்… தன்னிறைவாக இருக்கலாம்?’ என்ற பொச்சரிப்பு.

கந்தல் புடவையும் கசங்கிய தலையுமாய் அழுது வடிந்து‌ கொண்டு அலுவலகம்‌ சென்றால் மட்டும் அவார்டா‌ கொடுக்கப் போகிறார்கள்? ‘அத்தனை‌‌ பணம்‌ வந்தும் அழுது வடியறா‌ பாரு’ என்று பேசப்போகும் வாய்தானே?

பாலாமணிக்கு மாத்திரம் இருபத்தி நாலு வயதில்‌ இரண்டு‌ குழந்தைகளுடன் இனிக்க‌‌ இனிக்க‌‌ நடத்திய‌ இல்லறம் இல்லாது போக வேண்டுமென வேண்டுதலா என்ன?

அல்லது புருஷன்‌ செத்து வரும் பணத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையா?

உண்மையில் அவனது சேமிப்பு, விபத்து, வங்கி, அலுவலகம், லால்குடியில் அவனது‌ பெயரில் இருந்த பூர்வீக வீடு மற்றும்‌ நிலபுலன்கள் என‌ ஒவ்வொன்றுக்கும் பெயர் மாற்ற, உரிமை கோர கையெழுத்து இடும்போதெல்லாம் மனது உறுத்தத்தான் செய்யும். வேறு வழி?

‘நீங்களே போன கையோட பணத்துக்கு பின்னால இருக்கேனேன்னு இருக்கு மாமா’ என்று எத்தனையோ நாள் அழுதிருக்கிறாள்.

ராமசேதுவுடன் வெறும் ஐந்து வருடப் பழக்கம்‌ இல்லை. பிறந்தது‌ முதலே தெரிந்தவன். தாய் மாமா. வயதுக்கு வந்த நாளாய் அவனுடன்தான்‌‌ திருமணம் என்று‌ தெரிந்தாலும், தாலி கட்டிய‌ நொடி வரை மாமா‌ என்ற மரியாதையில் இருந்து விலகாதவன். அசட்டுப் பிசட்டென்று‌ எந்தப்‌பேச்சும் பேசாதவன். வேலைக்குச் செல்லும் மனைவிக்கு பாடகருக்கு இதமான பக்க வாத்தியம் போல் கேளாமலே உதவி‌ செய்பவன்.

அவனுக்குள் எத்தனையோ‌ ஆசைகள், கனவுகள்… போகவேண்டிய பயணங்கள், பார்க்க விரும்பிய இடங்கள்… எதிர்காலத் திட்டங்கள்… அவன் மட்டும் நினைத்தானா என்ன?

ராமசேதுவுக்கு இரண்டாவது குழந்தை பெண்ணாய் பிறக்க வேண்டுமென அத்தனை ஆசை.

“சேப்புல பச்சைக் கரை‌போட்ட பட்டுப் பாவாடை வாங்கணும்டி‌ பாலா”

“பணம்‌ சேர்த்து அந்தந்த‌ வயசுக்கான‌ நகை வாங்கிடணும்”

“குழந்தைக்கு அழகா, கச்சிதமா ‘பாப் கட்’ பண்ணி விடணும்டீ”

“அவ‌ ஆசைப்‌படறதை படிக்க‌வைக்கணும். நீ வேணா பாரு… எம்‌பொண்ணு‌ டாக்டர் ஆனா, நான்‌‌ வேலையை‌ விட்டுட்டு கம்பவுண்டர் ஆகி‌ டோக்கன் போடப்‌ போயிடுவேன். ஆடிட்டர்னா கவலையே இல்லை. கணக்கு வழக்கெல்லாம் நானே பார்த்துடுவேன்”

பாலாமணி “அப்ப எம்புள்ளைக்கு?”

“சிங்கம்டீ. அவனே எல்லாம் பாத்துப்பான்”

சொன்னதுபோல் ஐந்து வயது முதல் அத்தனை பொறுப்பாக அவனேதான் எல்லாம் பார்த்துக்கொண்டான். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையாமே!

பாலாமணிக்கு உயிர் பிரியும் நேரம் கணவன் என்ன நினைத்தானோ, யாரைக் காண ஏங்கினானோ என்ற கேள்வி வயிற்றைப் பிசையும். மூளையைப் பிராண்டும்.

ஒரு விதத்தில் மகளை அத்தனை தாங்கி இருக்கக் கூடிய கணவனின் ஆசைப்படி பெண் பிறக்காமல் இரண்டாவதும் ஆண் பிள்ளையாகப் பிறந்ததில் பாலாமணிக்குப்
பெரிய‌ ஆறுதல். தந்தையின் அன்பையே அறியாதவன் என்பதனாலேயே ரவிக்கு‌ கூடுதல் செல்லமும்‌ சலுகையும்.

சிங்கபிரான் மட்டுமென்ன? மூன்று‌ வயதில் பார்த்த தந்தை அவன் நினைவுகளில்‌ நிழலாய் நின்றாலே பெரிதுதான்.

அதனாலேயே தானாக வந்து‌ ஒட்டிக்கொண்ட‌ சின்மயியை பாலாமணிக்குப் பிடிக்கும்.

‘குட்டிக்கும் நாய்க்கும் குடி போனால் கொண்டாட்டம்’ என்பது போல், இவர்கள் பால் காய்ச்சி, குடியேறியபோது வாசலுக்கும் உள்ளுக்குமாக சின்மயி கூடவே அலைந்தாள்.

அவள் வாயைக் கிண்டி, வெடுக் வெடுக்கென பதில் சொல்வதைக் காண இவர்களுக்கு அத்தனை இஷ்டம்.

சின்மயிக்குப் பிடிக்கும் என்றே தேங்காய் தொகையல் அரைப்பார். கையில்‌ ஒரு தலை கிடைத்த சந்தோஷத்தில் நாலு கால், ஐந்து கால், ஆத்திக்கால், குதிரைவால் என நேரம் கிடைக்கும்போதெல்லாம் சின்மயிக்கு‌த் தலை பின்னி அழகு பார்ப்பார்.

இங்கு அவள் வந்து விளையாடி, விஷமம் செய்த தடமும் அதை சிங்கபிரான் சரி செய்து வைத்திருப்பதும் பாலாமணிக்குச் சிரிப்பை வரவழைக்கும்.

பின்னிருந்து இணைந்த‌ சிரிப்புச் சத்தம்‌ உரத்துக் கேட்கவும், சகோதரிகள்‌ இருவரும்‌ திரும்பிப் பார்க்க, சிங்கபிரானும் சின்மயியும் தங்கள் கை‌ முட்டிகளை மோதிக்கொண்டு (Fist bump) எதையோ பேசியபடி சிரிப்பைத்‌ தொடர்ந்தனர்.

சின்மயி‌ தன் இயல்புக்கு மீண்டு விட்டதை பாலாமணி புரிந்து‌ கொண்டார்.

ஆணும், பெண்ணும் கை கொடுப்பதோ, நட்பான அணைப்போ, சகஜமான தோள் தட்டலோ தவறென்பது நிச்சயம் அவர் எண்ணமில்லை.

இருவரின் பால்ய கால நட்பு அவர் அறியாததல்ல. இப்போது சிங்கபிரானின் நட்பு‌ மனதளவில் அதன் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டது. இன்னும் சின்மயி‌ பற்றித்‌ தெரியவில்லை.

ஆண், பெண் பேதமில்லா, களங்கமற்ற அவர்களது சிறுவயது சிநேகத்தையே வார்த்தைகளால் சிதைத்துச் சிதறடித்த‌ பரசுராமால், மீண்டும் இருவரும் காயப்பட்டு, பிரிந்து நிற்பதைப் பார்க்கும்‌ வலு அவரிடம் இல்லை. சிங்கபிரான் எப்படியோ… நிச்சயம் சின்மயி தாங்கமாட்டாள்.

சிந்தனையைக் கலைத்த சிங்கபிரானின் குரலில்‌ பாலாமணி மெதுவே திரும்பிப் பார்த்தார்.

‘மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே’

அவன் சீட்டில் பின்னே சாய்ந்து, கண்களை மூடியபடி பாட, சின்மயி அவன் புறமாகத் திரும்பி அமர்ந்து அவனையே பார்க்க, பாட்டில் அவனும் அவனில் அவளும் லயித்திருந்தனர்.

‘பெருமாளே, நல்ல‌ வழி காட்டு’

********************

நாகமணிக்கு ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும் வியப்பாகவும் நிம்மதியாகவும்‌ இருந்தது. அக்கா பாலாமணி ஸ்ரீரங்கத்தில் குடி இருந்த
ஒன்பது வருடங்களில் நாலைந்து முறை சின்மயியைப்‌ பார்த்திருக்கிறார்.‌

பிறகு‌ திடீரென‌ கல்வி ஆண்டின் நடுவே காரணம் சொல்லாது பாலாமணி வீடு மாறினார். கேட்டதற்கும் மழுப்பிவிட்டார்.

பாலாமணியைப் பொறுத்தவரை எத்தனை நெருங்கிய நட்பு அல்லது சொந்தமானாலும், பதின் பருவத்தின் விளிம்பில் இருந்த சிங்கபிரானின் மனவுளைச்சலை யாரிடமும் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பவில்லை.

நாளை அவனுக்கு வயதும் அனுபவமும் தரும் முதிர்ச்சியில் இது மட்டுமல்ல, எதுவும் கடந்து போகும். இன்று பூதாகாரமாய் பயப்படுத்துவது நாளை ஒன்றுமில்லாது போகலாம். ஆனால் பிறருக்கு அவர்கள் கேட்ட செய்தியும் அந்த நபர் மீதான கருத்தும் அங்கேயே நிலைத்து விடுகிறது.

இடம் சுட்டிப் பொருள் விளக்குவது போல் அந்தத் தவறு, நிகழ்வு வாழ்நாள் முழுவதும் பேசப்படும்.

பின் படிப்பை‌ முடித்த சிங்கபிரானுக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததும், பாலாமணியும் மாற்றல் வாங்கிக் கொண்டார்.‌‌ அவருக்கு ஐம்பது வயது முடியவும் மகன்கள் இருவரும் வேலையை விடச்சொல்லி‌ வற்புறுத்தவும் விருப்ப‌ ஓய்வு வாங்கிக்கொண்டார். வேலையை விட்டு நான்கு வருடங்களாகிறது. கையில் கணிசமான தொகை இருக்க, மாதம் பிறந்தால் அறுபதாயிரம் ரூபாய் பென்ஷன் வருகிறது.

சிங்கபிரான் பிடி கொடுக்காததில், ரவிக்கு வந்த வரனைத் திருமணம் செய்து வைத்துப் பேத்தியும் இருக்கிறாள். ரவியுடன் இரண்டு முறை கனடா, சிங்கபிரானுடன் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், பிரேஸில் என பாதி உலகத்தைப் பார்த்தாயிற்று.

பாலாமணிக்கு சிங்கபிரானின் கல்யாணக் கவலை ஒன்றுதான். இத்தனை நாளாக, கவ்யாணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டது போக, இப்போது கல்யாணத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கவலை.

‘மனுஷாளுக்கு கவலை இல்லைன்னா பகவானை நினைக்கத் தோணுமா? அதான் இப்டி…‌’

‘எல்லாம் சரியா நடந்தாலும். எப்ப என்ன‌ வருமோ, இதேபோல சௌகரியமா‌ நாள் போகணுமேன்னு கவலையா இருக்குடா சிங்கம்’ என்பவரைப் பார்க்க சிங்கபிரானுக்கு சிரிப்புதான்.

நாகமணிக்குத் திருமணம் ஆனதில் இருந்தே ஓசூர் வாசம்தான். மாமனார், மாமியார், இரண்டு நாத்தனார், ஒரு மச்சினர் என கூட்டுக் குடும்பத்தில் இருந்தவருக்கு, மாமியார் போனவுடன் இப்போதுதான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. கேசவ்தான் ஒரு ஃப்ளாட் வாங்கி பெங்களூருக்கு அழைத்து வந்தான்.

சின்மயி வரப்போவதாக பாலாமணி சொன்னதும், அவள் இப்போது ஒரு மருத்துவர் என்பதும் தெரிய வர, கேசவிற்கு அவளைக் கேட்கலாமே என்ற‌ ஆசை அவருக்கு. அதிலும் காலையில் அவளை நேரில் பார்த்த பிறகு‌ முடிவே செய்துவிட்டார்.

இரண்டு வயசுக்குள்ளதான் வித்தியாசம். அவ அம்மாவைப் போலவே சுடராட்டம் இருக்காள். கச்சிதமான ஜோடிப்‌ பொருத்தம்.‌ ஜாதகமெல்லாம் கூடத் தேவையில்லை…’

படு வேகமாகத் திட்டமிட்டவர், அக்காவிடம்‌ கேட்கும் முன் சிறிது நிதானித்துக் கொண்டார். சிங்கபிரானை விட நாலு வயது சின்னவன் கேசவ். அக்கா பாலாமணியின் மன‌வருத்தம் தெரியுமாதலால், கேசவின்‌ கல்யாணம் குறித்து சட்டென்று பேசத் தயங்கினார்.

திரும்பி வந்து பேச எண்ணி இருக்க, உறங்கி எழுந்ததும் சின்மயியிடம் சிங்கபிரான் காட்டி‌ய நெருக்கமும் உரிமையும் நாகமணியைக் குழப்பியது.

அன்றிரவு, பாலாமணியே “சிங்கத்துக்கு சின்மயி மேல ஒரு அபிப்பிராயம் இருக்கு போல நாகம். அவ அப்பாவைப் பத்திதான் உனக்கே தெரியுமே…” என்றவர் கல்யாணியின் மறைவு‌ குறித்துச் சொன்னார்.

சின்மயியின் முன்கதைச் சுருக்கத்தைக் கேட்டதும், பெரும்பான்மையான அம்மாக்களைப் போன்றே‌ நாகமணியும் ‘இதெல்லாம் நமக்கு சரியா வராது. நல்ல வேளை அக்கா கிட்ட கேசவ் பத்திப் பேசலை’ என நிம்மதியானார்.

********************

“சொன்னா கேளு ச்சிங்கா. நானே ஆட்டோல போயிடுவேன்‌. திரும்பவும் எதுக்கு அலைச்சல். நாளைக்கே நீ வேற சிங்கப்பூர், மலேஷியா டூருக்கு கிளம்பணும்”

“ப்ச்.. பரவால்ல‌ புல்புல். மணி ஒம்போது. நான்…”

“நத்திங்‌ டூயிங். ஆமா, நீ‌ பேக் பண்ணிட்டியா ச்சிங்கா… நான் வேணா ஹெல்ப் பண்ணவா?”

“ஒன்னும் வேணாம். போடீ”

கேசவ் “ஏம்மா சின்மயி, அதே சிங்கப்பூர், மலேஷியாக்கு நானும்தானே போறேன். என்னைக் கேட்டியா நீ?”

சின்மயி ஒரு நொடி‌ திகைத்து பதிலைத் தேட, சிங்கபிரான் “ஏன், அவ என்ன மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் சர்வீஸா வெச்சிருக்கா?” என்றவன், அவளது மொபைலைத் திறந்து ரேபிடோ புக் செய்து ஏற்றி விட்டு வந்தான். அவர்களின் இயல்பான உரையாடலும் சிங்கபிரானின் சுவாதீனமான செய்கையும் கண்ட நாகமணிக்கு எதிலிருந்தோ தப்பித்த உணர்வு.

தவிர்க்க நினைத்தும் “ஏன்டா சிங்கம், வேலை பார்க்கற பொண்ணு… அவ தினமும் தனியா வெளில போகமலா இருக்கா?”

தன் அம்மாவை ஒருமுறை கூர்ந்து பார்த்த சிங்கபிரான், நாகமணியிடம் “இப்ப உனக்கு‌ என்ன‌ பிரச்சனை சித்தி?”

*********************

சிங்கபிரானுக்கு மதியம் சின்மயி கலங்கி நின்றதே மனதில் ஓடியது.

‘எத்தனை அழகான, சூட்டிகையான குழந்தை அவள்’

பாலாமணியின் அம்மா அங்கு வரும்போதெல்லாம் “சொட்ட வாளைக் குட்டியாட்டமா இந்தப் பொண்ணோட சமர்த்தும் சுறுதுறுப்பும்” என சிலாகிக்காமல்‌ சென்றதே இல்லை.

துறுதுறுவென இருந்த நான்கு வயது சின்மயி தன் இஷ்டப்படி‌ வீடெங்கும்‌ சுற்றுவாள். சின்மயி‌ இருந்த பகுதியும் சிங்கபிரானின் வீடும் அந்தக் கூடத்தின் இரு பக்கத்திலும் எதிர் எதிரே இருந்தது.
அதில் சின்மயி‌ வெளியில் வந்தாலே நேரே சிங்கபிரானிடம்தான் வந்து நிற்பாள்.

சிங்கபிரானிடம்
முதன் முதலில் சின்மயி பேசியதே ஒரு ஸ்வாரஸ்யம். அவளுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியாது. ஆனால், சிங்கபிரானுக்கு அதை எப்போது நினைத்தாலும் திகைப்பும் சிரிப்பும்தான்.

திருச்சி பள்ளியில்‌ இடம் கிடைத்தும் இவர்களுக்கு‌ ஏற்ற(!) வீடு கிடைத்துக் குடி போனபோது தீபாவளிக்கு மூன்று நாள்‌களே இருந்தது.

வீடு மாற்ற விடுப்பு எடுத்திருந்த பாலாமணி, அதிகாலையில் முறுக்கு செய்தவள், வந்து மீதி பலகாரங்களைச்‌ செய்வதாகச் சொல்லி தீபாவளிக்கு முதல்நாள் அலுவலகம் சென்றிருந்தாள்.

நெய், ஏலக்காய், கடலைமாவு, முந்திரிப்பருப்பு, காயும் எண்ணெய், பெருங்காயம் என தீபாவளி மணத்தது.

அம்மாக்கள் அவரவர் வீட்டு அடுப்படியிலும் மற்றவர் கூடத்தில் மருதாணியிலும் ஐக்கியமாகி இருந்தனர். சின்மயியின் பாட்டியும் இன்னோரு மாமியும் வித்தியாசமின்றி எல்லாப் பெண்களுக்கும் மருதாணி வைத்துவிட்டனர்.

சிங்கபிரானும் ரவியும் திருவெறும்பூரில் போல் தனியாக இல்லாமல் பெட்டி பெட்டியாய் நிறைய பகுதிகள், மனிதர்களுடன் கலகலத்த வீட்டை வேடிக்கை பார்த்தபடி அவர்கள்‌ வீட்டு வாசலுக்கு அருகே அமர்ந்திருந்தனர்.

மெதுவே சிங்கபிரானின் அருகில் வந்து அமர்ந்த‌ சின்மயிக்கு அவன் பெயர் மனதில் பதியவில்லை போலும்.

“உம் பேர் என்ன?”

“சிங்கபிரான்”

ரவியைக் காட்டி‌ “இது?”

“ரவி”

“...ச்சிங்… ச்சிங்கா, இதை சயி (சரி) பண்ணி விடு” என மருதாணிக் கொப்பி அலண்டிருந்த விரலைக்‌காட்ட, சிறுவர்கள் இருவருக்குமே திகைப்புதான்.

பத்து வயது சிங்கபிரான் கூச்சத்துடன் அமைதியாக இருக்க, தன் வேலை ஆக வேண்டி இருந்ததில்‌, சின்மயி‌ “ம்…” என அதட்டலாக ஊக்கவும், மறுபேச்சு பேசாது சரி செய்தான்.

முதல் ஆளாக பாட்டியிடம் மருதாணியை இட்டுக்கொண்டவள், சரி செய்யக் கேட்காத‌ ஆளே அங்கு கிடையாது என்பது பிறகுதான் தெரிந்தது.

இதில் “உனக்கும் வேணுமா?” என்ற கேள்வி வேறு.

பவானி, ஹரி, அவர்களது பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவரும் இணையும் பிணையுமாக ஒத்த வயதில் இருக்க, வயதில் சின்னவளான சின்மயி‌ தனித்து நின்றாள். மற்ற குடித்தனக் காரர்கள் வீடுகளிலும் அவளை ஒத்த வயதில் யாருமில்லை.

ஏழு வயது ரவியுடன் விளையாட, அரை மணிக்குள் இருவருக்கும் சண்டை வந்து விடும்.

சிங்கபிரானுக்கு ஏனோ சின்மயியைப்‌ பார்த்த கணத்தில்‌ இருந்தே பிடித்துப் போனது. எல்லோரையும் போல்‌ ‘நீ என்ன பெரிய சிங்கமா?’ என்று கேட்காது, சிங்கம், புலி, கரடி எனக் கேலி‌செய்யாது, ச்சிங்கா, ச்சிங்கா என மழலை‌ அழைப்புடன் அவனைச் சுற்றிச்‌ சுற்றி வருவாள்.

அவனது பொருள்களை ரவி எடுத்தால் கத்துபவன், சின்மயி கலைத்தால், “ நோ குட்டீ” என்பதோடு சரி. ஒருமுறை பாலாமணி கேட்டதற்கு ”க்யூட்டா இருக்காம்மா” என்றான்.

வாய் ஓயாமல் சளசளப்பவளை‌ “நான் ஸ்டாப்பா பேசறடீ. உன்னை இனிமே புல்புல்னுதான் கூப்பிடப் போறேன்” என்றான்.

சிங்கபிரான் கேலியாக வைத்தக் காரணப் பெயர், வெகு விரைவில் அவன் மட்டுமே அழைக்கும் அவளுக்கான செல்லப்‌ பெயராக ஆனது. சின்மயியே அப்படி ஆக்கி விட்டாள்.

சின்மயியின்‌ பெரியப்பா மகன் ஒருமுறை அவளை கிண்டலாக‌ எதையோ‌ சொல்லி “சிங்கம் சரியாதான்‌ பேர் வெச்சுருக்கான்” என்றதோடு, புல்புல் என‌ இரண்டோரு முறை கேலி போல் அழைத்தும் விட,

“ச்சிங்காதான் என்னை புல்புல்னு கூப்பிடலாம்” என ஐந்து வயது சின்மயி‌ இருபது வயதுப் பையனுடன் சரிக்கு சமமாகச்‌ சண்டைக்கு நின்றாள்.

அவளது பள்ளி கதைகளைக் கேட்பது தொடங்கி, சின்னச்‌சின்ன சொப்புகளில் அவள் பாவனையாக‌ சமைத்துத் தரும் உணவை உண்பது வரை அவளிடம் அவனுக்குப் பொறுமை இருந்தது.

அதே போல், சின்மயிக்குப் புரியுமா, புரியாதா என்ற‌ சிந்தனையின்றி தான் படிப்பது கதையோ, கட்டுரையோ, செய்தியோ, கணித சூத்திரங்களோ, பௌதிக விதிகளோ அவளிடம்‌ சொல்வதும் சில‌நேரம் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக் காட்டுவதுமாய் இருப்பான் சிங்கபிரான்.

அதைவிட, கேட்டவை எல்லாம் புரிந்ததான பாவனையோடு, சின்மயி “குட், வெரி குட்” என்று பாராட்ட வேறு‌ செய்வாள். அவன் வரைவதை, எழுதுவதை மணிக்கணக்காக அருகில் அமர்ந்து அசராது வேடிக்கை பார்ப்பாள்.

அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால், கல்யாணி மருந்தை சிங்கபிரானிடம் தந்துவிடுவார்.

கிரிக்கெட் விளையாடுகையில் இடையில் பேட் செய்ய அனுமதிப்பான். ரவியின் சின்ன சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொடுத்தான்.

அம்மா அலுவலகம் சென்றிருக்க, பள்ளியிலிருந்து வந்து தனக்கும் தம்பிக்கும் காஃபி கலந்து, இருப்பதை எடுத்து சாப்பிட்டு, காய்ந்த துணிகளை உள்ளே கொண்டு வந்து போடுபவனின் நிழல் போல் அலைவாள்.

“புல் புல்…” என முனகியவனுக்கு காவேரியில் போட்ட முழுக்கின் பயனாகத் தொண்டை கரகரத்து, உடல் சுட்டது.

******************

மறுநாள் மதியம் ஹாஸ்பிடலில் இருந்து புறப்படும் முன் சிங்கபிரானை அழைத்த சின்மயி, அவன்‌ காலை கட்‌ செய்து ‘காய்ச்சல், தொண்டை வலி’ எனத் தகவல் அனுப்பவும், மருந்துகளுடன் நேரில் போய்‌ நின்றாள்.

அம்மா, அப்பா‌ வந்து விட்டதில் கேசவ் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்க, அம்மாவும் பிள்ளையும் கணகணத்தனர்.

“எப்ப ச்சிங்கா ஃப்ளைட்?”

பத்து விரலைக் காட்டியவன், ‘பேக் பண்ணனும்’ என்று அபிநயித்து விட்டு மாடிக்குச் சென்றான்.

பாலாமணி “கொஞ்சம் ஹெல்ப் செய் சின்மயி. எப்படி ட்ராவல் பண்ணுவான்னு தெரியலை. கேசவ் இருக்கான். ட்ரூப்ல எல்லாரும் இருந்தாலும், வலியை இவன்தானே அனுபவிக்கணும்?”

சின்மயி மேலே செல்ல, கட்டில் முழுவதும் உடைகளைப் பரப்பி இருக்க, சிங்கபிரான் கண்களை மூடியபடி படுத்திருந்தான்.

“ச்சிங்கா…” என‌ வெந்நீரையும் மாத்திரைகளையும் நீட்டினாள்.

சிரமத்துடன் “எல்லாத்தையும் ஜஸ்ட் அந்த சூட்கேஸ்ல திணி புல்புல். ஏதாவது வேணும்னா வாங்கிக்கறேன்” என்றான். செய்தாள்.

“அந்த டிராவர்ல ஒரு டாய்லட்டரி பவுச்‌ இருக்கும் பாரு. செக் பண்ணி‌ அதையும் உள்ள போடு”

கப்போர்டில் இரண்டு டிராவர்‌கள் இருக்க, சின்மயி முதலில் தவறானதைத் திறந்துவிட, அங்கேயும் ஒரு பவுச் இருந்தது. செக் செய்யத்‌ திறந்தவளுக்குக் கண்ணைக் கட்டியது. அதில்…
 
  • Like
Reactions: sumathi mathi