• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 9

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
65
296
83
Chennai
நாணங்களும் எதற்காக? 9


‘HAMSADHWANI’
Live Music Concert
by
NADHAM MUSICA
​

பெங்களூரில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களிலும் அந்தந்த மொழியில், சின்மயி வேலை பார்க்கும் மருத்துவமனை நடத்தும் ‘நாதம் மியூஸிகாவின்’ ‘ஹம்ஸத்வனி’ இசை நிகழ்ச்சிக்கான முழுப்பக்க விளம்பரங்கள், மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வெளியானது. விளம்பரம் வந்த வேகத்தில் புக் மை ஷோ போன்ற வலைதளங்களில் பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் உடனடியாக ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தன.

பெங்களூர் அரண்மனை வளாகத்தில்‌ உள்ள பரந்த புல்வெளியில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால், விழா ஏற்பாட்டாளர்கள் சில நூறு இடங்களையாவது அதிகரிக்கும் முயற்சியில் இருந்தனர்.

பொதுவாக‌ பாடல்களை, இடையிசையை தீர்மானித்து‌, ஒருங்கிணைத்த பின், ஆன்லைனிலும், வார இறுதிகளிலும்‌ விழா நெருங்குகையில்‌ தினமும் குழுவாக பயிற்சி செய்வர். இதில் வயலின் வாசிக்கும் இருவர் சென்னையில் இருந்தனர்.

உள்ளூரோ வெளியூரோ, வேறு‌ நாடோ… விழா‌ நடக்கும் அரங்கை, ஏற்பாடுகளை சிங்கபிரானும் அவனது‌ நண்பர்களும்‌ முன்னதாகவே நேரில் சென்று பார்வையிட்டு, அவசியமானால்‌ தேவையான‌வற்றை மாற்ற‌ அல்லது‌ சரி செய்யச் சொல்வர்.

சாதாரண கர்நாடக இசை நிகழ்ச்சிக்கும், கர்நாடக இசையை மேற்கத்திய ராக் இசையுடன் இணைத்துப் பாடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு பாடகருக்குப் பக்கவாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், தம்புரா, கூடுதலாக சில‌ நேரங்களில் கஞ்சிரா, கொன்னக்கோல் ஆகிய இசைக்கருவிகள் இருக்கும். முன்பே வடிவமைக்கப்பட்ட இசைக் கோர்வைகள், சாகித்தியங்கள் மற்றும் ராக லயங்களுடன் மரபும் பாரம்பரியமும் மாறாத நிகழ்வு அது.

கர்நாடக இசையை மேற்கத்திய ராக் வகை இசையுடன் கலந்து தருவதற்கு நிறைய டிரம்ஸ், எலக்ட்ரிக் கிடார்கள், கீபோர்ட் சின்த்தசைஸர்கள் என மெட்டாலிக் இசைக்கருவிகள் தவிர, வயலின்கள், மிருதங்கம், கடம், புல்லாங்குழல் போன்ற வழக்கமான இசைக் கருவிகளும் தேவைக்கேற்ப இடம்பெறும். சிலநேரம் உடுக்கை, உருமி கூட உண்டு.

பாரம்பரிய இசையோடு, சீரான அல்லது நிகழ்வுக்குரிய நவீன‌ உடைகளில் குழுவினரும், துடிப்பான , துள்ளலான சூழலும், மெட்டாலிக் ராக் இசையும் கலந்த உயர் சக்தி ஃப்யூஷன் இசைக் (High energy fusion music) கொண்டாட்டம் அது.

ஒருவர் மட்டுமே பாடினாலும், கோரஸ், ஹம்மிங், பின்னணிக் குரல்கள் என ஒரு டீம் ஒர்க் அது.

பாரம்பரிய கச்சேரியைப் போல் தாளம் போட்டுத் தலையாட்டுவதோடு நில்லாது, ஆடல், பாடல் (Headbanging & dancing) என ரசிகர்களும் திருவிழா போல் உற்சாகமாகப் பங்கேற்பர்.

நாதம் மியூஸிகா இசைக்குழுவினரின் அமெரிக்க/ கனடா இசை நிகழ்ச்சிகள் இந்த வருடம் செப்டம்பர் இறுதிக்குத் தள்ளிப்போனது சஞ்சய் தேசாயின் அதிர்ஷ்டம்தான்.

பதினைந்தாயிரம் ரசிகர்கள் வரை பங்கேற்கும் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய ஐம்பது நாள்கள் என்பது மிகக் குறுகிய காலம். சஞ்சய் தேசாய் தனக்கிருந்த ஆள், பண மற்றும் அதிகார பலத்தின் உதவியால் சக்கரத்தை வேகமாகச் சுழல‌வைத்தான்.

நிகழ்ச்சிக்கான இடம்‌, அனுமதி, மேடை, ‌ எந்த வித அசம்பாவிதமும்‌ இன்றி அனைவரும் வந்து‌ செல்ல பாதுகாப்பு வழிமுறைகள், கட்டணத்திற்குத் தகுந்த இருக்கைகள், வாகனங்களுக்கான தரிப்பிடம், குடிநீர், கழிவறை வசதிகள், தன்னார்வலர்கள் என எத்தனை முஸ்தீபுகள்!

அதேபோல் ஸ்டூடியோவிலிருந்து‌ பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த பேலஸ் கிரவுண்டில் இசைக்கருவிகள், மேடை, ஊஃபர்கள், ஆம்ப்ளிஃபையர்கள், மைக்குகள், தரமான ஒலி பெருக்கிகள், மிக்ஸிங் கன்ஸோல், ஃப்ளோர் மானிட்டர் என ஏற்பாட்டாளர்களின் தரப்பிலிருந்தும் இசைக்குழுவின் தரப்பிலிருந்தும் வந்து பொருத்தினர்.

கேசவ் தலமையில்‌ இன்னும் இரண்டு சவுண்ட் இஞ்சினீயர்கள் ஒரு‌வாரத்திற்கு முன்பே களத்தில் இயங்கினர்.

சிங்கபிரான் ஹம்ஸத்வனி என்ற தலைப்புக்குப் (Theme) பொருத்தமான பாடல்கள், பாடப்போகும் வரிசை, அதுதவிர‌, ரசிகர்கள்‌கேட்கக் கூடும் என்பதால் இவர்கள் வெளியிட்டுள்ள ஆல்பங்கள், கவர் மற்றும் ட்ராக்குகளில் உள்ள பாடல்கள் என கலைஞர்களுடன் ஒத்திகையில் பிஸியாக இருந்தான்.

நண்பர்கள்‌ மூவரில்‌ யாரேனும் இருவர் அவ்வப்போது வந்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டுத்‌ தேவையான மாற்றங்களை சொல்லிச் சென்றனர்.

சிங்கபிரானுடன் கூடவே பயணித்த‌ சின்மயிக்கு ஏற்பாடுகளின்‌ விஸ்தீரணம் வியப்பையும் மலைப்பையும் தந்தது.

ஆம். சஞ்சய்‌ தேசாய் தனக்கும் நாதம் மியூஸிகா‌விற்கும் இடையே சின்மயியை தொடர்பாளராக நியமித்தான். சரியாகச் சொன்னால், சிங்கபிரான்‌ வெகு இயல்பாக, அதைச் செய்ய வைத்தான் எனலாம்.

அன்று தீவிரமான குரலில் ‘நீ எவனையும் பார்க்கக்கூடாது’ என்றவன், அடுத்த‌நொடியே தன் வழக்கம்போல் பேசிச் சிரித்து தன் அதிரடியில் திகைத்து, சமைந்திருந்த சின்மயியை இயல்புக்கு மீட்டான்.

பேச்சு வாக்கில் எப்போதோ ஒருமுறை சின்மயி “சூடா மார்கரீட்டா பிட்ஸா புடிக்கும் ச்சிங்கா. ஆனா என்னால முழுசா சாப்பிட முடியாது. தனியா போகவும் ஒரு மாதிரி இருக்கும். பங்களூர்‌ வந்த புதுசுல ஹரியோட போய் இருக்கேன்’ என்றதை நினைவில்‌ வைத்திருந்த சிங்கபிரான், நஞ்சன் கூட்டிலிருந்து பெங்களூர் வந்து JP நகர் பிட்ஸா பேக்கரியில் நிறுத்தி, மார்கரீட்டா‌ பீட்ஸாவும் ஸ்டஃப்ட் கார்லிக் பிரட்டும் ஐஸ் டீயும் காருக்கே‌ வரவழைத்தான்.

“நான் சொன்னா சொன்னதுதான் புல்புல்” என்றவன், பிடிவாதமாக சின்மயியை அவளது அபார்ட்மென்ட் வாயிலில்தான் இறக்கி விட்டுச் சென்றான்.

நேரம் சென்று, அன்றைய நாளை அசை போடப் போட சிங்கபிரானின் நேரடிப் பேச்சும் குரலின் தீவிரமும் கண்களின் பளபளப்பும் உள்ளிறங்கியதில், அவன் கையின் வெம்மையையும் அழுத்தத்தையும் இப்போதும் தன் தாடையில் உணர்ந்த சின்மயிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘இந்தச் ச்சிங்கா…‌ வர வர ஆளே சரி இல்ல…’

‘இங்க ஏதோ ஸ்வயம்வரத்துக்கு‌ ஆள் வந்து வரிசைல நிக்கறாப்போல பாத்தேன்னா‌ தெரியுமாவாம்…’

‘மாமா, அப்பாவெல்லாம் பேசினதுக்கு நான் என்ன செய்வேன்?’

‘நான் என்னமோ பார்க்க ஆசைப்பட்ட மாதிரி என்னை மெரட்றான்’

‘அப்படியே நான் ஒரு மாப்பிள்ளைய பார்த்தா ச்சிங்கா என்ன செய்வான்?’

‘அப்போ நீ மாப்பிள்ளைய பார்க்க ரெடியா சின்மயி?’

அதுவரை சிங்கபிரானின் பேச்சிலும் தோரணையிலும் உரிமைப் பார்வையிலும் சற்றே வன்மையான தொடுகையிலும் சுழன்றவளை உலுக்கியது அந்தக் கேள்வி.

முதலில் சின்மயி திருமணத்திற்குத் தயாரா என்ற கேள்விக்கு முன்னே வந்து நின்ற சிங்கபிரான்,
இதுவரை சலனமற்று இருந்தவளை மொத்தமாகக் குழப்பிக் குறுகுறுக்க வைத்திருந்தான்.

அம்மா, அப்பா, தான் வளர்ந்த சூழல், சாதாரண சிங்கபிரான்‌ செலிபிரிட்டி‌ சிங்கபிரானாகி நிற்பது என சின்மயியின் சிந்தை முழுதும் பலப்பல கூறுகளாக, கேள்விகளாக‌, சொல்லும் உணர்வுமாகப் பிரிந்து குடைந்தது.

அவளுக்கும் சிங்கபிரானுக்குமான பிள்ளைப் பிராயத்து நட்பிற்கு இடையே பணம், அந்தஸ்து, புகழ்‌ என எந்த வேறுபாடும் இல்லை. அங்கு எந்தக் கொடுக்கல் வாங்கலுக்கும் இடமில்லை.

இருவரும் சேர்ந்து புதிதாகப் போட்ட , ஊறியும் ஊறாத வடு மாங்காயை கதவிடுக்கில்‌ வைத்து நசுக்கித் தின்றதில் இருந்த நிறைவு, சிறிய கைகளுக்குள் அடக்கிய ஸ்ரீஜெயந்தி சீடை, முறுக்கை உள்ளங்கை வியர்வை பிசுபிசுக்கப் பகிர்ந்து உண்டதில் இருந்த மகிழ்ச்சி, பள்ளியில் கிடைத்ததை பத்திரப்படுத்திக் காகிதத்தோடு காக்காய் கடி கடித்துத் தந்த சாக்லேட் தந்ந சுவை நாலாயிரம்‌‌ ரூபாய் ஸ்டார் ஹோட்டல் டின்னரில் நிச்சயம் இல்லை.

நட்பு மட்டுமே என்றால் இருவரும் இப்போதும் அப்படியே. அவன் தரும் விலை‌ உயர்ந்த பரிசுகளை சின்மயி மறுக்கக்‌ காரணமும் அதுவே.

சிறுவயது முதலே, பெரிய வீட்டு உரிமையாளர்களின் கடைக்குட்டி. படித்த, பாரம்பரியமான பரிச்சயமான குடும்பம், அம்மா கல்யாணி ஒரு பாடகி/ இசை ஆசிரியை, நல்ல உத்யோகத்தில் இருந்த பெரியப்பா, சித்தப்பா…, வசதியான மேல் நடுத்தரக் குடும்பம். வெளியில் வரதராஜனின் பேத்தியாக அறியப்பட்டாலும், தன் வணங்கா முடி, உதவாக்கரை தந்தையால், தனிப்பட்ட குடும்பமாக தங்கள் நிலையை சின்மயி உணர்ந்தே இருந்தாள்.

பவானி, ஹரி மற்றும் சின்மயியின் வெளித் தோற்றமும் வசதிகளும் மொத்த குடும்பத்தின் கௌரவத்தைச் சொன்னதே தவிர, உரிமைப்பட்டது அல்ல என்று சிறு வயதிலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

உடைகளில், ஆசைப்பட்டதைக் கேட்பதில், கேட்டது கிடைப்பதில் இருந்த வித்தியாசத்தில், இருந்தும் இல்லாத அவர்கள் நிலை புரிந்தது.‌ கல்யாணி புரிய வைத்தாள்.

இந்த உள்நாட்டுக் குழப்பங்கள், பிரச்சனைகள் எது குறித்த கவலையும் இன்றி, எதையும் பேச, பகிர, சொல்ல சின்மயிக்கு இருந்த‌ ஒரே ஆசுவாஸம், ஆதர்ஸம் எல்லாமே சிங்கபிரான் மட்டுமே.

அவன் இல்லாத நாள்களில், முக்கியமாக அம்மாவை இழந்த சமயத்தில் அவனது அண்மைக்கு எத்தனை ஏங்கி இருக்கிறாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

தனக்கும் சிங்கபிரானுக்குமான இந்த உறவு நட்பின்‌ எல்லையைத் தாண்டி வேறு நிலைக்குச் சென்றால், இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் தங்களிடையே நீடிக்கும் அந்தக் கள்ளம் கபடமற்ற சிறுவயது நெருக்கமும் நட்பும் தொலைந்து விடுமோ என்ற பயத்தில் அவன் பேசியது குறித்து யோசிப்பதை நிறுத்தும் விசையைத் தேடிக் களைத்தாள்.

‘அவனும் ஏன் உன்னை மாதிரியே நினைக்கணும்?’

‘ஒருத்தனால இதை விட நேரடியா தன் மனசை எப்படிச் சொல்ல முடியும்’

சிங்கபிரானுக்கான தன் பதில், தன் உள் மனம் சொல்வது என்ன என்ற கலவரப் பகுதிக்குள் செல்ல விரும்பாத சின்மயி, சிங்கபிரான் அழைத்தால் அளவோடு பேசித் தன்னை பிஸியாகக் காட்டிக்கொள்ள…

பொறுமை இழந்த சிங்கபிரான், நிகழ்ச்சி பற்றிப் பேச நேரில் வருமாறு சஞ்சய் தேசாக்குத் தகவல் அனுப்ப, அவன் நன்றி மறவாது சின்மயியை அழைத்துக்கொண்டு ஸ்டூடியோவிற்கு வந்தான்.

*******************

ஸ்டூடியோவின் வரவேற்பறையில் நின்று அலைபேசிக்கொண்டிருந்த கிருஷ்ணன் மேனன் காரில் வந்து இறங்கிய சஞ்சய் தேசாயை, சிங்கபிரான் இருந்த அறைக்கு அழைத்துச் செல்ல, கை குலுக்கி வரவேற்றனர். உடன் வந்திருந்த பிரதீப் ராவ் பார்த்தாலே டாக்டராக இருந்தான்.

சிங்கபிரான் மேலாண்மை படித்த செயின்ட்.சேவியர்ஸில் சஞ்சய் சீனியர் என்றதுமே இருவரும் மிக நெருங்கி இருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சின்மயியைக் கண்ட பிரதீப்பின் கண்கள் விரியவும்,

“ஹாய் புல்புல்” என்ற சிங்கபிரான்‌, அதுதான் சரி, வழமை என்பது போல் சின்மயியின் கையைப் பற்றித் தன் அருகே அமர்த்திக்கொண்டான்.

தன்னைத் தொடரும் பிரதீப்பின் பார்வையும், இரண்டுமுறை ‘உன்னிடம் பேசவேண்டும் சின்மயி’ என்றதும் தெரிந்த சின்மயி, தங்கள்‌ நெருக்கத்தைக் காட்ட சிங்கபிரான் வேண்டும் என்றே செய்ததில் தன் படபடப்பை மறைத்துக்கொண்டாள்‌.

இவர்களது நட்பு பற்றித் தெரிந்த சஞ்சய் தேசாய் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள, பிரதீப்பின் முகம் மாறியதில் கிருஷ்ணன்மேனன் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

குழந்தைகளுக்கான தனி மருத்துவ வளாகம், தொண்டு நிதி, தடுப்பூசி விழிப்புணர்வு என நிகழ்ச்சி‌க்கான ஏற்பாடுகள் குறித்த விவாதம் நீண்டது.

தங்கள் குழுவினரின் நிகழ்ச்சிக்கான இடம், ரசிகர்களின் எண்ணிக்கை, எந்த ஏற்பாடு யாருடையது, தங்களுக்கான கட்டணம், போக்குவரத்து என தேவைகளை விவரித்த மேனன், அவற்றைப் ப்ரின்ட் செய்து தயாராக இருந்த ஒரு பிரதியை நீட்டினான்.

“இது செக் லிஸ்ட்டானு. நிங்களுக்கு யூஸ்ஃபுல்லாயிட்டு இருக்கும்”

சின்மயி ‘இதுல நான் ஏன்டா நடுவுல?’ எனப் புரியாது அமர்ந்திருந்தாள்.

தேர்ந்த வியாபாரியான சஞ்சய் “நான், சின்மயி, பிரதீப் மூணு பேரையும் எப்ப வேணும்னாலும் நீங்க கான்டாக்ட் பண்ணலாம்” என சின்மயியைக் கோர்த்துவிட்டுச் சென்றான்.

அன்று முதல் தேவையோ இல்லையோ, சிங்கபிரான் வந்தால் கூடவே அவளையும் இழுத்துக்கொண்டே அலைகிறான்.

ஸ்டூடியோவிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரண்மனை திடலுக்கு செல்வதற்குள் எத்தனை ஏற்பாடுகள், சரிபார்த்தல், கவனங்கள், நுணுக்கங்கள்…

மறுநாள் மாலை நிகழ்ச்சி என்ற நிலையில் முந்தைய நாள் பின்மாலை நேரத்தில் அந்த வளாகத்திற்கு வந்த நாதம் ம்யூஸிகா குழுவினர் ஏற்பாடுகளை மேலும் துல்லியமாக்கினர் (Fine tuning).

“ஏ…யப்பா, எத்தனை‌ டீடெய்லிங். ‌பார்க்கவே பிரமிப்பா இருக்கு. வழங்கமான கச்சேரிக்கும் இதுக்கும் எவ்வளவு வித்தியாசம்… இல்ல, ச்சிங்கா!”

“ம்… உனக்கு நினைவு இருக்கான்னு தெரியல புல்புல்… கல்யாணி டீச்சர் கோவில்ல பாடும்போது கேட்கறதுக்கு காசு கிடையாது. ஓசில பாட்டைக் கேட்டுட்டு, பைரவிய இன்னும் விஸ்தாரமா பாடி இருக்கலாம்… ஒரு நவாவரணம் கூடப் பாடலை… க்ருதியை விட துக்கடாதான்‌ ஜாஸ்தின்னு வாய்ல‌ வந்தபடி கமெண்ட் வரும். இதுல‌ பணம் குடுத்துப் பாடச் சொன்ன மாதிரி நேயர் விருப்பம் வேற…”

“...”

“அதுக்கே அப்படீன்னா, இப்ப நாலாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம்னு குடுத்து டிக்கெட் வாங்கறவன், அவனுக்குத்‌ திருப்தியா இல்லைன்னா நாற்காலியத் தூக்கி அடிப்பான். ஆரம்பத்துல இருந்து கடைசி வரை கூட்டத்தைப் புடிச்சு வெச்சுக்கணும். பழைய சாதத்துக்கு கடுகு, இஞ்சி, கறிவேப்பிலைன்னு ஜஞ்சாளிப்பு பண்ற மாதிரி, சம்பிரதாயமான கீர்த்தனையா‌ இருந்தாலும், அதே ராகத்துல ஒரு‌ சினிமா பாட்டோ, நானே எழுதின நாலு வரியோ, இதை கனைக்ட் பண்றா மாதிரி அதிரடி ராக் மியூஸிக்கோட தரணும் “

“அமேஸிங் ச்சிங்கா!”

“ஆரம்பத்துல கள நிலவரம் புரியாம நிறைய விடுபட்டு, அடிவாங்கி இருக்கோம். இப்பவுமே, அதெப்படி‌ மரபை மதிக்காம காட்டுக் கூச்சலா‌ ம்யூஸிக் போடறான்னு பேசறவங்க உண்டுதான்”

“...”

“இங்க எல்லாமே பேக்கேஜிங்தான் புல்புல். அதே தாளம், அதே ராகம், அதே பாட்டுதான். டப்பாதான் வேற. நம்பள்ல‌ பலரும் உள்ள இருக்கற பொருளை விட, பிளாஸ்டிக் பாட்டில் ஃப்ரீயா கிடைச்சதை கொண்டாடற அல்ப சந்தோஷிகள்தானே?”

சின்மயி வாய்விட்டு‌ச் சிரித்தாள்.

“ஐஐடி ஹாஸ்டல்ல‌ நாங்க மூணு பேரும் நமக்குத் தெரிஞ்ச மியூஸிக்ல நாம வித்தியாசமா என்ன செய்யலாம்னு யோசிச்சபோது இந்த‌ ஐடியா வந்தது.‌ எங்களுக்கு முன்னாடியும் ப்ராஜக்ட் மிஸ்ரம், அகம் னு சிலர் இருக்கா.‌ யூ‌ நோ சம்திங்? பஜனைப் பாட்டுக்கு கூட இப்ப ராக் ம்யூஸிக் ட்ரூப் இருக்கு”

“!!”

“...”

“உனக்குத் தெரியுமா புல்புல்… நாதம் மியூஸிகாவோட முதல் ப்ரோக்ராம் சென்னைலதான். **** சபால. அப்ப இத்தனை வசதி கிடையாது. நிறைய இன்ஸ்ட்ருமென்ட்ஸை வாடகைக்குதான் வாங்கினோம். மொத்தமே இருபத்தி மூணு பேர்தான் ஆடியன்ஸ்ல. ஆனா, மறுநாள், இந்து பேப்பர்ல, மயிலாப்பூர் டைம்ஸ்ல‌ பாராட்டி‌ சின்னதா ரெண்டு வரி வந்திருந்தது. அவ்வளவு சந்தோஷம் எங்களுக்கு. அங்க இருந்து இங்க வந்தது… ப்யூர் ப்ளெஸ்ஸிங்… ம்யூஸிக். தட்’ ஸ் இட். வாழ்க்கையை நமக்குக் கத்துக் கொடுக்கறதே அனுபவம்தான் புல்புல்”

**********************

நிகழ்ச்சிக்கு நான்கு நாள்களுக்கு முன் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலிகள், லேப் டெக்னீஷியன்கள், நிர்வாக மற்றும்‌ பராமரிப்பு ஊழியர்கள் என ஒருவர் விடாது, ஹம்ஸத்வனி நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் தலா இரண்டு வழங்கப்பட்டன.

“எல்லாரும் ஹாஸ்பிடல் ஐடி கார்டோட வந்தாதான் ஃப்ரீ என்ட்ரி. யாருக்காவது எக்ஸ்ட்ரா டிக்கெட்ஸ் வேணும்னா ரிஸப்ஷன்ல வாங்கிக்கலாம்” என்று அறிவித்தனர்.

கொடுத்த டிக்கெட்டுகளை பையில் வைத்த‌ சின்மயி அதை என்ன செயவதென யோசித்தபடி‌ சிங்கபிரானின் ஸ்டூடியோவிற்கு சென்றாள்.

நியாயமாக இதை ஹரி, பத்மினிக்குத் தந்துவிட்டு, தந்தைக்கு ஒரு டிக்கெட் வாங்கி இருக்க வேண்டும். எங்கே?

ஒருவேளை இது சிங்கபிரானின் நிகழ்ச்சி இல்லையெனில், நிச்சயம் சொல்லி இருப்பாள். ஹரியும் சிங்கபிரானும் ஒரு காலத்தில் இணைந்து புரண்டு விளையாடிய நண்பர்கள்தான். பரசுராம் ஊதிப் பெரிதாக்கி ஊரைக் கூட்டியதில், சிங்கபிரானின் குடும்பம் வீட்டைக் காலி செய்த பின், ஹரியோ, பவானியோ அவனைப் பற்றிப் பேசியதாகவே சின்மயிக்கு நினைவில்லை. அது அலட்சியமா அல்லது தந்தையைப் போன்றே அவர்களும்…

ஆட்டோவிவ் வந்ததால் இதே சிந்தனையாக இருந்த சின்மயி புறப்படத் தயாராக வாசலிலேயே நின்ற சிங்கபிரானின் மீது மோதினாள்.

“டாக்டர் மேடம், எதிர்க்க நான் நிக்கறது‌ கூடத் தெரியாதபடி எங்க சஞ்சாரம்?” என்றபடி அவளைப் பிடித்து நிறுத்தினான்.

“ஸா…ஸாரிடா”

“அது ஓகே, ஆனா எங்கேயோ கவனமா வண்டி ஓட்டினா என்னத்துக்கு ஆறது புல்புல்… அப்படி என்ன யோசனை?”

இவர்களுடன் வருவதாக இருந்த‌ விக்ரம் ஜோயல், பர்ஸனல் வேலை என அன்று முழுவதும் வரவே இல்லை.

பேலஸ் கிரவுண்டில் கேசவ் நின்றிருக்க, மெதுவாக மழை பெய்தது.

“ச்சிங்கா, ப்ரோக்ராம் சமயத்துல மழை வந்தா என்ன செய்யறது… அத்தனை பேரும் ஷெல்டரை தேடி ஓடினா குழப்பம் வராதா?”

சிரித்தவன் “ஏன் வராது, கண்டிப்பா வரும். இசை மழைல நனைஞ்சபடி ஏறி மிதிச்சுட்டு ஓடுவாங்க”

“ச்சிங்கா…!”

“டோன்ட் ஒர்ரி. புல்புல். கவர்மேன்ட் மெட் ஆஃபீஸ், பிரைவேட் வெதர் மேன்னு எல்லாரையும் கேட்டுதான் இடத்தை ஃபிக்ஸ் பண்ணி இருக்கோம்டா. பார்த்துக்கலாம். உம்மாச்சி காப்பாத்துவார்”

“பெருமாளே!”

“அவரேதான்!”

திடலின் நுழை வாயில் அருகே வலப்பக்கம் இருந்த காலி இடத்தில் ஸ்டால்கள் போட ஏற்பாடு செய்திருந்தனர்.

திரும்புகையில் வேடிக்கை பார்த்தபடி வந்த சின்மயி, நிகழ்ச்சி இந்த வாரம் என்பதால், தெருக்களில் ஆங்காங்கே இன்று புதிதாக விளம்பரப் பதாகைகள் வைத்திருந்ததைக் கண்டாள்.

விசேஷமாக, இம்முறை அவற்றில் நாதம் மியூஸிகா என்ற பெயர் மட்டுமின்றி, விரிந்த நீள் முடி, தூக்கிப் போடப்பட்ட குடுமி, இரண்டின் கலவை என வெவ்வேறு ஸ்டைலில் கண்ணை மூடி, தலையை உயர்த்தி, கையில் மைக்குடன் சிங்கபிரான் பாடிக்கொண்டிருந்தான்.

“இறங்கு புல்புல்” என்றவன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

“இங்க‌ ஏன் ச்சிங்கா… மணி‌ ஆறது. க்ளீனிக்‌ போகணும்”

“பத்தே நிமிஷம். நானே உன்னைத்‌ துரத்தி விடறேன், போறுமா?”

“...”

வாயிலில் இரண்டு கதவுகள் இருந்தன. ஒன்றில் பயோமெட்ரிக் லாக்கும் இன்னொன்றில் கோத்ரெஜ் அல்ட்ராமேக்ஸ் ஹெவி ட்யூட்டி லாக்கரும் இருந்தது.

சிங்கபிரான் கதவைத் திறப்பதை கவனமின்றி வேடிக்கை பார்த்த சின்மயிக்கு, உள்ளே சென்றதும்தான், பாலாமணி‌ இல்லாததே உறைந்தது.

“ச்சிங்கா… மாமி…”

“அம்மா சித்தி, சித்தப்பாவோட குருவாயூர் போய் இருக்கா”

“...”

மாடியேறச் சென்றவன்,
“உட்கார் புல்புல், இதோ‌ வரேன். இல்ல, பேசாம நீயும் மேல வாயேன்”

சற்றே தயங்கியவள்‌ “…ல்ல…”

திரும்பி‌ வேகமாக அவளிடம் வந்த‌ சிங்கபிரான் “எங்கூடத் தனியா இருக்க பயமா இருக்கா புல்புல்… எம்மேல நம்பிக்கை இல்லையா?”

அவன் கேள்வியில் அதிர்ந்து பார்த்தவளின் தலை மறுப்பாக ஆடியது.

“ம்ப்ச்… உளறாதடா”

“அப்ப வா”

சென்னப்பட்னாவில் சின்மயி ஆசையாகப் பார்த்த மைசூர் சில்க் புடவையை கப்போர்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டியவன்,

“முதல் தரம் நான் பாடறதை நேர்ல பார்க்கப்‌ போற… கான்ஸர்ட்டுக்கு இதைக் கட்டிக்கோ புல்புல்”

“...”

“புல் புல்?”

“...”

தன் மனதில் ஓடுவதும் முப்பதாயிரம் ரூபாய் புடவையும்‌ முரண்பட்டதில் சின்மயி காத்த மௌனத்தைத் தாங்க இயலாத சிங்கபிரான்,

“நான் ஃபோர்ஸ் பண்ணலை புல்புல். ஜஸ்ட் ஒரு ஆசை… அவ்ளோதான். உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்…”

புடவையை வாங்கிக்கொண்ட சின்மயி “எதையாவது‌ சொல்லி என்னைத் தலையாட்ட வெச்சுடு”

“இன்னும் நிறைய‌ இருக்கு புல்புல்!”

அம்ரபாலி ஆர்க்கேடில் இறக்கி விட்டவன் “ப்ரோக்ராமுக்கு பாஸ் வேணுமா புல்புல்?”

“ஹாஸ்பிடல்லயே கிடைச்சது ச்சிங்கா”

“புல் புல்…”

“ஹரி கிட்ட சொல்லு‌ புல்புல். அவனுக்கும் எனக்கும் என்ன… என்னை விட ரெண்டு வயசு பெரியவன். ஆனாலும்,
எத்தனை விளையாடி இருக்கோம்… எத்தனை கிரிக்கெட் மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கோம். கோவில், காவேரின்னு கும்பலா சுத்தி இருக்கோம்…”

“...”

“உனக்கு தயக்கமா இருந்தா நம்பர் குடு. நானே பேசறேன். நம்ம ஃப்ரெண்ட்ஷிப்ல எந்த ரகசியமும் இல்லை‌ புல்புல்…” என்றவன், சிறிய இடைவெளிக்குப் பின்,

“ப்ரெண்ட்ஷிப் ரிலேஷன்ஷிப்பா ஆனாலும் அதேதான். நீ யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை‌ புல்புல்”

கண்கள் நீரில் பளபளத்து மினுங்க “தேங்க்ஸ் ச்சிங்கா” என்ற சின்மயி புன்னகையுடன் இறங்கிச்‌ சென்றாள். மனம் தெளிந்தாற்போல் இருந்தது.

மறுநாள்‌ காலை சீக்கிரமே புறப்பட்டு ஹரியிடம்‌ டிக்கெட்டுகளைத்‌ தர, பத்மினிக்கு அத்தனை மகிழ்ச்சி. பின்னே, ஒரு டிக்கெட் பத்தாயிரம் என்றால் சும்மாவா?

சின்மயியின் ‘ச்சிங்காவில்’ புருவம் உயர்த்திய மனைவியை கண்களாலேயே அடக்கினான் ஹரி.

“நம்ம சிங்கமாடீ சின்மயி… சிங்கபிரானேதானா …. ஆள் ஃபோட்டோல படு ஸ்டைலா இருக்கானா, அடையாளமே தெரியலை. பேரை நான் கவனிக்கலை” என்ற ஹரி சட்டென அமைதியானான்.

“ஹரி,..”

“இந்தப் பாட்டுக்காக அவனால‌ அம்மா கிட்ட எனக்கு எத்தனை திட்டு கிடைச்சிருக்கு தெரியுமா…அம்மா இருந்திருந்தா அவனோட‌ உயரம்‌ பார்த்து எத்தனை‌ சந்தோஷப் படுவா‌… இல்ல?”

பத்மினி “அவரோட உன்னை ஒரு ரீல்ஸ்ல பார்த்த நினைவு சின்மயி… நீதானா அது?”

“இருக்கலாம். நான் பார்க்கலை”

ஹரி இருவரும் எங்கு, எப்போது மீண்டும் சந்தித்தனர் என விவரம் கேட்டான். ரவி, பாலாமணி பற்றி விசாரித்தான்.

சின்மயி “ச்சிங்காவே‌ உன்கிட்ட பேசறேன்னுதான் சொன்னான். இப்ப‌ ப்ரோக்ராம்ல பிஸியா‌ இருக்கான். ரெண்டு பேரும் வந்துடுங்கோ” என்றவள் “என் பட்டுகுட்டிக்கு ஃப்ரீ” என மருமகளைக்‌ கொஞ்சினாள்.

புறப்பட்டவளிடம் ஹரி “அப்பாக்கு தெரியுமா சின்மயி?”

உதட்டைப் பிதுக்கியவளுக்கும் அந்த சந்தேகம் இருந்தது.

**********************

க்ளீனிக் இருந்த ஷாப்பிங் சென்ட்டரில் ஒரு டெய்லரைப் பிடித்து அவசர அவசரமாக ரவிக்கை, புடவைக்கு ஃபால்ஸ்‌ தைத்து வாங்கினாள். பரவாயில்லை… அர்ஜன்ட்டாக தைத்தாலும் ஓரளவு கச்சிதமாகவே இருந்தது.

‘லேஸா இடுப்பு தெரியறதே… பிளவுஸ் கொஞ்சம் குட்டையா இருக்கோ?!’

இது வரை சின்மயியிடம் இருப்பதே மூன்று‌‌ செட் தோடுகளும் கழுத்தோடு‌ இருக்கும்‌ மூன்று பவுன் சங்கிலியும்தான்.

ஹாஸ்பிடலில் வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாத சம்பளம் வந்தவுடன் சிறிதாக ஒரு வைரம் வாங்கி, பத்மினியுடன் சென்று மூக்குக் குத்திக்கொண்டாள்.

ஃப்ரென்ச் பிரைட் பின்னலுடன், பொட்டு வைத்துக் கொண்டு, கண்ணாடியில் பார்த்தவளுக்கு சிரிப்பு.

‘பாடப் போறது அவன்… மேக் அப் எனக்கா?’

மொபைல், பர்ஸ், வீட்டுச் சாவி, சிறிய தண்ணீர் பாட்டிலை ஸ்லிங் பைக்குள் வைத்து மாட்டியபடி புறப்பட்டு காலணிக்குள் கால்களை நுழைத்து “நான் வரேன்” ஏன்று குரல் கொடுத்தாள்.

“அந்தப் பொறுக்கி பாடற பாட்டைக் கேட்கப் போறதா இருந்தா திரும்பி வரவேண்டாம். அப்படியே போயிடலாம்” என‌ உள்ளிருந்தே குரல் கொடுத்த பரசுராமிற்கு சின்மயி‌ அழுத்தமாகக் கதவை மூடிய சத்தம் மட்டுமே கேட்டது.

*************”****

சின்மயியைக் கண்டதுமே கேசவ் வந்து தன் பெற்றோர் மற்றும் பாலாமணியின் அருகில் அழைத்துச் சென்று அமர வைக்க, சின்மயி தயங்கினாள்.

அவளுக்கு வேலை என்று எதுவும் இல்லைதான். ஆனால், விஐபி வரிசையில் அமர்வது சரியா என்று யோசனையாக இருந்தது.

ஹரி வந்து சீட்டில் அமர்ந்து விட்டதாகத் தகவல் அனுப்பினான்.

கேசவ் “ நீ விவிவிஐபின்னு உனக்கு புரியறதா இல்லையா… உட்காரு சின்மயி” என்று சிரித்தான்

சின்மயியை அழைத்து ஏதோ சொல்ல எத்தனித்த சஞ்சய் தேசாய் , சிங்கபிரானின் தாய் என அறிமுகம் செய்யப்பட்ட பெண்மணி பூச்சரத்தை எடுத்து அவளிடம் நீட்டியதைக் கண்டு அமைதியாகச் சென்று விட்டான்.

*********************

‘ஹம்ஸத்வனி’ தொடங்கியது. மூன்று மணிநேர இசைப் பிரவாகம்.

அன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகரின் மீது பாடப்பட்ட பல பாடல்கள் ஹம்ஸத்வனி ராகத்திலேயே அமைந்திருப்பதால், சிங்கபிரான் அதையே அன்றைய கருப்பொருளாக வைத்திருந்தான்.

வாதாபி கணபதிம் பஜே, வாரண முகவா துணை வருவாய், கஜவதனா மாம் பாஹி, வினாயகா நின்னு, மூலாதார மூர்த்தி என வரிசையாக‌ ஹரித்ரா பிம்பத்தில் (மஞ்சள் பிள்ளையார்) எளிதாக வந்துவிடுபவனை
ஹம்ஸத்வனியில் ஆராதித்தான்.

நாதம் மியூஸிகாவின் குழுவினர் அனைவரும்‌ கரும்பச்சையில் உடை அணிந்திருந்தனர். சிங்கபிரான் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் நின்று பாட, ஏனையோர் ஆடியபடியே பாடி, அவர்களே தலையாட்டி ரசித்தபடி வாசித்தனர்.

Choir போல் இடையில்‌ கோரஸ் பாடினர். ஹம்மிங் செய்தனர். ட்ரம்ஸும் கிடாரும் அதிர்வதற்கேற்ப வண்ண விளக்குகள் நர்த்தனமாடின. சில பாடல்களில் மேடையில் குளிர் போல் புகை பரவியது.

இடையிசையாகப் பிளிறிய ராக் இசையில்‌ ஆண், பெண் பேதமின்றி கூட்டம் பித்துப் பிடித்தது போல் ஆடியது. ரசிகர்களின் நேயர் விருப்பங்களும், குழுவினரின் சிக்னேச்சரான பாடல்களும் பாடப்பட்டன. பல ரசிகர்கள் இணைந்து பாடினர்.

ஏராளமான இளைஞர்களும், நடுத்தர வயதினரும் வந்திருந்தனர்.

நாதம் மியூஸிகாவின் லோகோ, சில ஆல்பங்களின் கேப்ஷன், சிங்கபிரானின் படம் அச்சிட்ட டீ ஷர்ட்டுகள், கோப்பைகள், கீ செயின்ஸ், போஸ்டர்கள், இசைத்தட்டுகள் என குழுவின் நினைவுப் பொருள்கள் (Souvenir) விற்ற கடையில்‌ எக்கச்சக்க விற்பனை. அதில் கிடைத்த பணத்தை தடுப்பூசி விழிப்புணர்வுக்குத் தருவதாக கிருஷ்ணன் மேனன் மேடையிலேயே அறிவித்தான்.

சிங்கபிரானின் குரல், இசை ஆளுமை, ஸ்டேஜ் பிரஸன்ஸ் என இமை தட்டாது அவனையே பார்த்திருந்த சின்மயி‌ உணர்வுகளில் சிக்கித் தளும்பினாள்.

நிகழ்ச்சி முடிந்து, ஸ்பான்ஸர்கள் பேசும்பொழுதே சிங்கபிரான் காத்திருக்கச் சொல்லித் தகவல் அனுப்பினான். நேரம் இரவு பதினொன்றை நெருங்கியதால்

‘ஹரியோட போறேன். லேட் ஆனாலும்‌ கால் பண்ணு ச்சிங்கா. லைஃப் டைம்‌ எக்ஸ்பீரியன்ஸ் டா’ என ஏராளமான இதயங்களை அள்ளித் தந்துவிட்டுக் கிளம்பினாள்.

அபார்ட்மென்ட்டின் கீழேயே டிராப் செய்துவிட்டு ஹரி சென்றுவிட, ஏறும் தாழ்ப்பாளைப் போட்டுக்கொண்டு பரசுராம் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தில் சின்மயியிடம் சாவி இருந்தும் உள்ளே செல்ல முடியாது, நள்ளிரவு இரவு பன்னிரெண்டரை மணிக்கு வார்த்தைக்காக இல்லாமல்‌ நிஜத்திலேயே சின்மயி தெருவில் நின்றாள்.
 

Goms

Member
Apr 28, 2025
78
3
18
Chennai
Wow 😲 செம்ம 👌👌👌
சிங்கா அவன் கச்சேரிக்கு எப்படி பாடுபட்டானோ, நீங்க உங்க வார்த்தைகளில் அவ்வளவு அழகாக வடித்து தந்துட்டீங்க. பிரமாதம்.
சின்மயி, நல்லதாப் போச்சு. அப்படியே திரும்பி பார்க்காம போய் உன் பாட்டுக்காரனோட நாதமாய் கலந்திடு.
இது சிங்காவுக்கு தெரிஞ்சா, அவ அப்பாவுக்கு தனி கச்சேரி காசில்லாமயே கன்பார்ம் 😂
 
  • Like
Reactions: saradhavasan

kothaisuresh

Active member
Jun 19, 2024
158
16
28
Chennai
நல்ல அப்பன்😡😡😡😡, அப்படியே கிளம்பி சிங்கா வீட்டுக்கு போயிடு புல்புல், சோத்துக்கு சிங்கி அடிச்சா தெரியும்,
 
  • Like
Reactions: Goms

saradhavasan

Active member
Oct 3, 2024
92
17
28
சென்னை
ஒரு பொறுப்பற்ற அப்பனின் இந்த செயல் நிஜமாகவே மீன்டும் ஓர் அன்பான மகளையும் இழந்துவிட்ட என்பது உண்மை.
கடவுள தவறு செய்தவனுக்கு திருந்த வாய்ப்புகளை அள்ளி தருகிறார். ஆனால பரசுராம் போல் அகம்பாவிகள் மீண்டும் மீண்டும் தவறுகளைச் களையே செய்தால்..
ஒரு நூறு தவறுக்கு மேல் செய்த சிசுபால வதம் போல் இந்த சிங்கம் சீறினான் உண்டு..
தாய்யற்ற அனாதியான நிலைமையை பரிபூரணமாக சின்மயி உயர்ந்திருப்பதால். பாவம் சின்மயி
 
  • Love
Reactions: Goms

saroja

New member
Feb 22, 2026
20
8
3
Coimbatore
இந்த ஆள் எல்லாம் எந்த காலமும் திருந்த மாட்டான்

ஹம்ஸத்வனி அருமை
 

saradhavasan

Active member
Oct 3, 2024
92
17
28
சென்னை
பரசுராமர் இருக்கிற வாய்க்கும், அகம்பாவ கர்வத்துக்கும் சும்மா இல்லாம, கணவனை இழந்து இரு குழந்தைகளுக்கான உயிர் வாழ்ந்து ,தன்காலில், கெளரவமான வாழும் பாலாமணியை ஏதாவது வம்பு செஞ்சு நல்லா வாங்கிங்கிட்டானா? அதான் இந்த சிங்கமும்
ஒரு மார்க்கத்தின் பேசுறான்